Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
புவனா சந்திரசேகரன்

புவனா சந்திரசேகரன் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர், பாரதீய ஸ்டேட் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப் படிப்பில் கணிதப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர். 

திருமணம் ஆனதும் தில்லிக்குச் சென்ற இவர், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் அங்கே வாழ்ந்த பிறகு தற்போது மதுரைக்கே திரும்பி வந்துவிட்டார். வங்கி வேலை, அதற்குப் பிறகு கணித ஆசிரியர் என்று பல வருடங்களைக் கழித்த பின்னர் எழுதும் ஆசை மனதில் துளிர்த்ததால், எழுத்தாளராகக் காலடி எடுத்து வைத்தார். 

கடந்த நாலரை ஆண்டுகளாகக் கவிதைகள், சிறுகதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என்று பல்வேறு வடிவங்களில் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். 

ஸ்ரீ பதிப்பகத்தினரின் ஆதரவில் இவருடைய பனிரெண்டு புதினங்கள் அச்சில் வெளிவந்துள்ளன.
காதல், குடும்பம், ஆன்மீகம், சமூகம், வரலாற்றுப் புனைவு, சிறார் கதைகள் போன்ற கதைக் களங்கள் இவருக்குப் பிடித்தமானவை. இவை தவிர பல மின்னூல்களும், ஒரு கவிதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார். 

 பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார்.
சங்கமம் தளம் மற்றும் ஸ்ரீ பதிப்பகம் இணைந்து நடத்திய கதை சங்கமம் 2022 நாவல் போட்டியில் இவருடைய கதை முதல் பரிசு வென்றது. கண்மணி மெகா நாவல் போட்டியில்  பரிசு, பிரபா ராஜன் அறக்கட்டளை நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு, குவிகம் இலக்கிய இதழ் நடத்திய குறும் புதினம் போட்டியில் பரிசு போன்றவை இவருடைய சில குறிப்பிடத்தக்க வெற்றிகள். இவருடைய சிறுகதைகள் தினமலர் வாரமலர், பெண்மணி மாத இதழ், தினகரன் மகளிர் மலர் ஆகிய இதழ்களிலும், சில மின்னிதழ்களிலும் பிரசுரிக்கப் பட்டுள்ளன. பூஞ்சிட்டு என்ற பெயரில் வெளிவரும் சிறுவர் மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இவரும் ஒருவர். 

 இதுவரை மூன்று வரலாற்றுப் புதினங்கள் மற்றும் ஒரு சமூக நாவல் வானதி பதிப்பகத்தின் மூலம் வந்துள்ளன. நான்கு நூல்கள் பாரதி பதிப்பகத்தின் ஆதரவுடன் அச்சில் வந்துள்ளன. எட்டு நூல்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா மூலமாக வெளிவந்துள்ளன.

வாழ்வியல்
காலம்

 

காலமும் காலனும் யாருக்காகவும் இரக்கப்பட்டுவதில்லை‌.காலச் சக்கரம் நிற்காமல் சுழன்று கொண்டேயிருக்கிறது.

காலை 8 மணி

" என்னங்க குளிச்சாச்சா? ப்ரேக்ஃபாஸ்ட் டேபிளில் ரெடியா இருக்கு.சீக்கிரம் சாப்பிட வாங்க.ஆஃபிஸில் முக்கியமான மீட்டிங் இருக்குன்னீங்களே!".

" இதோ வந்துட்டேன்மா",

என்று வந்து அவசர அவசரமாகக் காலை உணவை முடித்து விட்டுக்
கிளம்பினான் அநிரன்.அன்பு மனைவி மாளவிகாவின் இதழில் அழுத்தமாக முத்தத்தைப் பதித்து விட்டு அந்த  இனிமையுடன் கிளம்பினான்.ஆறு மாத கர்ப்பிணியான அவளின் மேடிட்டிருந்த வயிற்றில் அடுத்த முத்தத்தைப் பதித்து
விட்டு வேகமாகக் கிளம்பினான்.

பகல் 11 மணி

ஸெல்ஃபோன் விடாமல் அடிக்க வேலைகளை முடித்து விட்டு அப்போது தான் உட்கார்ந்த மாளவிகா 
ஃபோனை எடுத்தாள்.

" ஹலோ மிஸஸ்.மாளவிகா தானே பேசறது? உங்கள் கணவருக்கு ஆக்ஸிடென்ட் ஆகி ஜி.ஹெச்சில் அட்மிட் ஆகியிருக்கிறார்.சீக்கிரமாகக் கிளம்பி வாங்க",

என்று மற்ற விவரங்கள் எதுவுமே சொல்லாமல் ஃபோனை வைத்து விட்டார் அந்த முகம் தெரியாத மனிதர்.

காதல் திருமணம் என்பதால். இரண்டு பக்கப் பெற்றோரும் இன்னமும் முறைப்பிலேயே இருக்கிறார்கள்.உதவிக்காக ஆஃபிஸ் நண்பருக்கு ஃபோன் செய்து விட்டுக் கையில் கொஞ்சம் பணத்துடன் கிளம்பினாள் மாளவிகா.

பகல் 3 மணி

ஜி.ஹெச்.சில் தலைமை மருத்துவரின் அறை.மாளவிகா கவலையுடன் அவர் எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.ஆஃபிஸ் நண்பர் மாளவிகாவின் அருகில் நின்று கொண்டிருந்தார்.

" மேடம்.வெரி ஸாரி.உங்களுடைய கணவருக்குத் தலையில் பலத்த அடி.அவரைக் காப்பாற்ற எவ்வளவோ முயற்சிகள் செய்தோம்.ஒன்றும் பலனளிக்கவில்லை.இப்போது அவருக்கு மூளைச்சாவு ஆகி விட்டது.இப்போது நீங்கள் ஒரு முக்கியமான முடிவைத் துணிச்சலாக எடுக்க வேண்டும்.நீங்கள் ஓகே சொன்னால் உங்களுடைய கணவரின் ஆர்கன்களை தானம் செய்யலாம்.ஆர்கன்ஸுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஐந்து நோயாளிகள் பயனடைவார்கள்.நீங்கள் நன்றாக யோசித்து முடிவெடுங்கள்",

தலையில் கை வைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்த மாளவிகா  நிமிர்ந்து பார்த்தார்.

" இதில் யோசிக்க டயம் தேவையில்லை டாக்டர்.நான் முழு சம்மதம் தருகிறேன்.
எந்த பேப்பரில் கையெழுத்துப் போட வேண்டும் என்று சொல்லுங்கள்",

கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேசிய மாளவிகாவை ஆச்சர்யத்துடன் பார்த்தார் அந்த டாக்டர்.

இரவு 8 மணி

கணவனின் உடலோடு வீட்டுக்கு வந்தாள் மாளவிகா.அடுத்த நாள் காலையில் அநிரனுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய அலுவலக நண்பர்கள் உதவி செய்து கொண்டிருந்தார்கள்.

அவளைப் பார்க்கப் புதிதாக ஐந்து பேர் வந்து கைகளைக் கூப்பிக் கண்ணீருடன் நன்றி கூறினார்கள்.அவர்களுடைய குழந்தைகளுக்குத் தான் அநிரனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப் பட்டிருந்தன.

" அம்மா நீ தான் எங்களுக்கு இனி தெய்வம்.எங்கள் குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறாய்.
உனக்கு எவ்வளவு பண உதவி வேணுமோ தயங்காமல் கேளும்மா",

என்ற அவர்களைக் கை கூப்பித் தடுத்து நிறுத்தினாள் மாளவிகா..

" பணத்தாசை காண்பித்து என் கணவரின் உடல் உறுப்புகளை விற்ற
பாவத்தை என் மேல் போட வேண்டாம். முடிந்தால் நீங்கள் யாராவது எனது தகுதிக்கேற்ற வேலை வாங்கித் தர முடியுமா? எனது குழந்தைக்காக நான் உயிர் வாழ வேண்டும்",

என்று சொன்ன அந்த வீரப் பெண்ணை பிரமிப்புடன் பார்த்தார்கள்.

" கண்டிப்பாக ஏற்பாடு செய்கிறோம்மா",

என்று சொல்லி நகர்ந்தார்கள்.

காலத்தை வென்ற அந்தப் பெண்
மனித நேயத்தில் உயர்ந்து நின்றாள்.

புவனா சந்திரசேகரன்.

வாழ்வியல்
பார்வைகள் பலவிதம்

பார்வைகள் பலவிதம்


வியாழக்கிழமை மாலை நேரம். ஷீரடி சாயிபாபா கோயில் வாசல். நிறையப் பிச்சைக்கார்கள் கையில் அலுமினியத் தட்டுடன் பிச்சைக்காகக் கையேந்தி நின்றார்கள். வியாழக்கிழமை என்பதால் நல்ல கூட்டம் அங்கு.

பார்வை 1

தங்கள் அருகில் புதிதாக வந்த அந்த வயதான பிச்சைக்காரனைக் கோபத்துடன் பார்த்தான் கொஞ்சம்
வயதில் சிறியவன்.

"எங்கேயிருந்தோ வந்து இன்னைக்கு நம்ப பக்கத்தில் வந்து உக்காந்துருச்சே இந்தக் கெழம்! போச்சு போச்சு வருமானமெல்லாம் போச்சு! ",
என்று மனதிற்குள் புலம்பினான் அந்த சக பிச்சைக்காரன்.

பார்வை 2

கோயிலில் தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்து பிச்சைக்காரர்களுக்கு வரிசையாகக் காசுகளைப் போட்டாள்
மாயா. வாராவாரம் வியாழக்கிழமை தவறாமல் வருவாள் குழந்தைப் பேறுக்காக வேண்டிக் கொள்ள மாயா வருகிறாள். புதிய பிச்சைக்காரர் மேல் பார்வை படிந்தது.

"ஐயோ பாவம், வயதான காலத்தில் இப்படிப் பிச்சையெடுக்கிறாரே? பிள்ளை இல்லை போல இருக்கு",

என்று நினைத்துக் கொண்டே நடந்தாள்.

பார்வை 3

அவசர அவசரமாகக் கோயிலில் தரிசனம் முடித்து விட்டு க் கிளம்பினான் தசரதன். வெளியில் பிச்சைக்காரர்களுக்கு அளவாகக் காசுகளைப் போட்டு நடக்கும் போது அவரைப் பார்த்தான்.

"கையையும் காலையும் பாத்தா நல்லாத் தெம்பாத் தானே இருக்காரு இவரு. எங்கேயாவது போய் வயசுக்கு ஏத்த வேலை செஞ்சு பொழைக்கலாமே? ஏன் தான் இந்த வயசில் வந்து பிச்சை எடுக்கறாரோ?",

என்று புலம்பிக் கொண்டே நடந்தான் தசரதன். அவனுக்குத் தான் தெரியும் நடுத்தர வர்க்கத்தில் குடும்பத்தின் தேவைகளைத் தீர்க்க எவ்வளவு உழைத்தாலும் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறுவதன் கஷ்டம்.

பார்வை 4

முதியவருக்குத் தட்டில் காசைப் போட்டு நடக்க ஆரம்பித்தார்கள் அந்த வயதான தம்பதி.

" பாவம், நம்பளை மாதிரி பொறுப்பான பிள்ளைங்க இல்லை போலிருக்கு. வயதான காலத்தில இப்படிப் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆண்டவன் தள்ளிட்டான்.
இதுக்குத் தான் அந்தக் காலத்தில் இருந்தே நாமும் சிக்கனமாக் குடும்பம் நடத்திக் குழந்தைகளையும் நல்லாப் படிக்க வச்சோம். நம்ப குழந்தைகளும் நல்லாப் படிச்சு முன்னுக்கு வந்து நம்மையும் வயசான காலத்துல நல்லாப் பாத்துக்கறாங்க. அப்படி அவங்க நம்மை முதியோர் இல்லத்தில் விட்டாலும் நம்ம கையில் பணபலம் இருக்கு. பயப்படத் தேவையில்லை",

என்று பேசிக் கொண்டே நடந்து சென்று ஆட்டோவில் ஏறினார்கள்.

விதவிதமான பார்வைகள் அங்கு கிடைத்தன. பிச்சைக்காரர்களாக ஒருவேளை உணவிற்குப் போராடினாலும் கிடைத்ததை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் அன்பான பார்வை, ஒருவருக்கொருவர் நலம் கேட்டு விசாரிக்கும் பரிவான பார்வை, பொறாமையுடன் பார்க்கும் பார்வை, தனது இடத்தை மற்றவன் பறித்து விடுவானோ என்ற எச்சரிக்கைப் பார்வை எல்லாமே மாலை வரை கிடைத்தது அந்தப் புதிய பிச்சைக்காரருக்கு. விதவிதமான மனிதர்கள்! பணத்தை அலட்சியமாகத் தூக்கிப் போடுவோர், அருகில் வந்து கருணையோடு போடுவோர் என்று
பிச்சை போடுபவர்களிலும் பல ரகம்.
மாலை இருட்ட ஆரம்பித்ததும் தனக்குக் கிடைத்த பணத்தை அங்கிருந்தவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார் அவர். அருகில் சிறிது தூரத்தில் ஒரு வீட்டின் எதிரே நிறுத்தப் பட்டிருந்த சொகுசுக் காரில் ஏறினார் அந்தப் பிச்சைக்காரப் பெரியவர்.
வேறு யாருமில்லை அவர். வளர்ந்து வரும் நடிகர். தனது புதிய படத்தில் பிச்சைக்கார வேடத்தில் நடிப்பதால் அந்த அனுபவத்தைக் கண்டுணர ஒரு நாள் பிச்சைக்கார வேடம் போட்டு
வெற்றிகரமாக நிறைவேற்றினார் எதிலும் பெர்ஃபெக்ஷனைத் தேடும் அந்த நடிகர்.

காட்சி ஒன்றே ஆனாலும் பார்வைகள் பலவிதமாகப் பார்ப்பவர்களின் மனநிலையையும் குணத்தையும் வைத்து அமைகிறது. உண்மை உள்ளுக்குள் ஒளிந்து நிற்கிறது.

புவனா சந்திரசேகரன்.

ஒருபக்க கதை
ஒதுக்குப்புற வீட்டின் இரகசியம்

அடியே பேச்சி. இங்கன வா"

" என்ன இசக்கிக்கா? என்ன ஆச்சு திடீர்னு?"

" இல்லைடி எனக்கொரு சந்தேகம்.மனசு கெடந்து அடிச்சுக்குது. எங்க வீட்டுக் கிழம் ரெண்டு நாளா இருட்ட ஆரம்பிச்சதும் எங்கேயோ கெளம்பிப் போவுது. வெள்ளையும் சொள்ளையுமா உடுத்திக்கிட்டு மேல ஜவ்வாதுல்லாம் போட்டுக்கிட்டு அது போற ஷோக்கு இருக்கே எனக்குப் புரியவேயில்லை. ஒம் புருஷன் வீட்டில இருந்தாச் செத்தக் கூப்பிடு. கொஞ்சம் எங்க வீட்டுப் பெருசு எங்கே போகுதுன்னு பாக்கச் சொல்லறேன்".

"அடியாத்தி , இசக்கிக்கா , நானும் இதே சமாச்சாரத்தை யாருட்ட சொல்லலாம்னு யோசிச்சேன். நீயும் அதையே சொல்லறியேக்கா. பெரிய ரோதனையாப் போச்சே இந்தப் பெருசுங்களோட".

" அடியே மாரி, பொன்னம்மா, முத்தாயி, இருளாயி எல்லாரும் இங்குட்டு வாங்கடீ",

என்று இசக்கி பெருங்குரலில் கூவி அழைக்க , அந்தச் சிறிய கிராமத்தில் அந்தத் தெருவில் இருந்த அத்தனை கிழவிகளும் அங்கு கூடித் தங்கள் கணவன்மார்களின் நடவடிக்கைகள் பற்றி விவாதித்தார்கள்.

இரண்டு நாட்களாக எல்லாக் கிழவர்களும் பிரமாதமாக உடை உடுத்திக் கொண்டு கிளம்பி ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்த அந்தத் தனி வீட்டுக்குப் போவதைப் பற்றிக் கோபத்துடன் பேசி விவாதித்தார்கள். அடுத்த நாள் அவர்கள் எல்லோருமே கிளம்பிக் கிழவர்களின் பின்னால் அவர்களுக்குப் பின்னாலேயே அவர்களுக்குத் தெரியாமல் போய்க்  கையும் களவுமாய் அவர்கள் செய்யும் திருட்டுத்தனத்தைக் கண்டுபிடிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அன்று இரவு யாருக்கும் தூக்கமே வரவில்லை.அடுத்த நாள் சாயந்திர நேரம்.

கிழவர்கள் ஷோக்காகக் கிளம்பி வழக்கம் போல ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த
அந்த வீட்டை நோக்கி நடை போடக் கிழவிகள் ஒளிந்து ஒளிந்து பின்னாலேயே சென்றார்கள்.

அந்த வீட்டின் உள்ளே இருந்து ஒரே சிரிப்பு சத்தம். கலகலப்பும் கும்மாளமும் காற்றில்.

இளம் பெண் ஒருத்தியின் குரலும் இனிமையாக நடு நடுவில் கேட்டது. திகைப்புடன் கிழவிகள் அந்த வீட்டுக் கதவைத் தள்ளக் கதவு சட்டென்று திறந்து கொண்டது.

" வாங்க வாங்க பாட்டிகளா. உங்களுக்காகத் தான் காத்துக் கிட்டு இருந்தேன். ஒழுங்காக் கூப்பிட்டா வர மாட்டீங்கன்னு தான் இப்படி வர வைச்சேன். வந்து உக்காருங்க.பாடத்தை ஆரம்பிக்கலாம்",

என்று அவர்களை வரவேற்றாள் அந்த ஊருக்குப் புதிதாக வந்திருந்த கிராம சேவகி. முதியோர் கல்விக்காகத் திட்டம் போட்டு எப்படியாவது அவர்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்து விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இரவில் பள்ளி ஆரம்பித்துத் தாத்தாக்களை முதலில் பள்ளியில்  வெற்றிகரமாகச் சேர்த்து விட்டாள். பாட்டிகள் அவ்வளவு எளிதாக வரமாட்டார்கள் என்று இரகசியமாகத்
திட்டம் போட்டுத் தாத்தாக்களின் மேல் சந்தேகப்பட வைத்து அவர்களையும் அங்கே வரவழைத்து விட்டாள்.

அத்தனை பைர் கையிலயும் சிலேட்டு, பலப்பம் கொடுத்து அ,ஆ ,இ,ஈ
என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கிறாள்.

கிழவிகளும் வேறு வழியில்லாமல் சிலேட்டில் எழுத முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் . திருதிருவென்று முழித்துக் கொண்டு அசட்டுச் சிரிப்புடன் உட்கார்ந்திருக்கும் கிழவிகளைப் பார்த்துக் கிழவர்கள் வெற்றிச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

புவனா சந்திரசேகரன்

WhatsApp

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!