Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
சித. ராமநாதன்

இவர் சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிப் பணி நிறைவு பெற்றவர். 
  சிறுவயது முதலே புத்தக வாசிப்பு இவர் வசமானது. சிறுவர்களுக்கான புத்தகங்கள், வாரப்பத்திரிக்கைகள், பாக்கெட் நாவல் எனத் தொடர்ந்த வாசிப்பு பயணத்தில், எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புகள் பெரிய மாற்றத்தை தந்தது. 
அவரால் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களையும் தேடி  வாசிக்க ஆரம்பித்தார். 
பிரத்தியேக எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தேடி வாங்கி வாசிக்கும் பழக்கம் , எழுத்தாளர் லா சா ரா வை சந்தித்து உரையாடும் அளவில் வளர்த்தது. 
  
நல்ல எழுத்துக்களின் தாக்கம், கட்டாயம் ஒரு வாசகனையும் எழுதத் தூண்டும். அவ்விதமாகக் கதைக்கான முன்னுரை, விமர்சனங்கள் எழுதுவதிலும், வாழ்வியல் அனுபவங்களை சுவை பட நகைச்சுவையாய் பகிர்வதிலும்  வல்லவர். 
முகநூல், வாட்சப் புலனக்குழுக்களில் மட்டுமே தனது திறமையைக் காட்டி வந்த இவருக்கு, இருவாச்சி தளம் அமைத்துக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது. 

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்பார்கள், நமது தளத்தின் நூற்றாண்டு கண்ட எழுத்தாளர் ரா.சிதம்பரம் அவர்களின் மகன் இவர். முன்னவர் எழுத்தின் அதே சுவாரசியம், நகைச்சுவை, நையாண்டி இவர் எழுத்திலும் உண்டு. வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சித்திர கவிதை
தற்குறி'யாய்

பிறப்பிற்கு முன்னர் என்னவாக இருந்தோம் கேள்விக்குறிதான்..

இறந்த பின்னர் முற்றுப்புள்ளியா, கமா வா ;அதுவும் தெரியாது..

இடையில் வாழும் இந்த வாழ்க்கையிலும் ஏதும் அறியாத

'தற்குறி'யாய் தானே வாழ்கிறோம்.

சித்திர கவிதை
ஆடிப்போன நந்தி

அசையாத நந்தியும், ஆடிப்போனது

சிறுமியின் வேண்டுதல் கேட்டு..

அது வேண்டுதல் இல்லை மிரட்டல்!
நான் கேட்டது நடக்காவிட்டால்...

'நான் உன் பேச்சு காய் விட்டுவிடுவேன்'

என்பதை காதில் கேட்டதிலிருந்து! /Ram.

ஒருபக்க கதை
காமெடி குற்றவாளிகள்-1

'கூவம் ஆற்றில் சாக்கு மூட்டையில் பிணம்'
நாறிகொண்டிருந்தது.. கூவ ஆற்று நாற்றத்தையும் மீறி வந்தது...

போலீஸ்க்கு தகவல் பறக்க, போலீஸ் கூவத்தில் குதித்தது இல்லை களத்தில் குதித்தது,
போலீஸ் மூக்கை பொத்திக்கொண்டு மூட்டையை புரட்டி போட... அவ்வளவுதான் சோளிமுடிந்தது, அந்த சாக்கு மூட்டையில் பச்சை நிற மசியில்..'இசக்கி முத்து, தந்தை பெயர் நடேசன்.. பிறகு வீட்டு முகவரி..
பிறகு என்ன போலீஸ் வேர்க்கடலையை வாங்கி கொறித்து கொண்டே ஜீப்பில் ஏறி பக்கத்தில் உள்ள தண்டையார்பேட்டை சென்று..
வீட்டில் டிவியில் சீரியல் பார்த்து கொண்டிருந்த இசக்கிமுத்து வை அள்ளி கொண்டு சென்றார்கள்..
அவனும் அவன் கூட்டாளிகளும் கம்பி எண்ணிகொண்டிருக்கிறார்கள்..

அவனை ஜெயிலில் தள்ளும் போது போலீஸ் ஒருவர் சொன்னது..'நீ ரொம்ப நல்லவன் டா! எங்களுக்கு எந்த சிரமும் வைக்காமல் அட்ரஸ் சோடு போட்ட பாரு அதை நினைத்து ரொம்ப பெருமை படுகிறேன் 'என்று பாராட்டியுள்ளார்

சித்திர கவிதை
வேண்டுதல்

பகலெல்லாம் வேண்டுதலை

காதில் வாங்கிய நந்தி...
இரவெல்லாம் அசை போட்டது..

'மனிதர்களுக்குத்தான் இவ்வளவு ஆசைகளா'என்று!!

சித்திர கவிதை
அம்மா

தன்னை காப்பாற்றுபவனை..
கடவுள் என்கிறது இந்து மதம்,

ஆண்டவர் என்கிறது கிருஸ்த்துவ மதம்,

இறைவன் என்கிறது இஸ்லாம்...
குழந்தைகள் மட்டுமே சரியாக சொல்கிறது,

அழகாக சொல்கிறது "அம்மா"என்று

சித்திர கவிதை
மூங்கில் இலை மேலே

மூங்கில் இலை மேலே, மூங்கில் இலைமேலே,

தூங்கும் பனிநீரே, தூங்கும் பனிநீரே...

தூங்கும் பனி நீரை

தலாட்டும் வெண்ணிலவே

கதம்பம்
எதையோ தேடி

கனவெல்லாம் காதற்ற ஊசி

ஒன்றை தேடித்தேடியே

இரவு கழிகிறது...

விழித்த பின்னும்

இனிக்காத கரும்பை

இனிக்கும் என்று நினைத்தே..

சுமந்து திரிந்தே பகலும் கழிகிறது..

எதையோ தேடி எதையோ சுமந்து..

இது என்னமாதிரி வாழ்க்கை?

கதம்பம்
நகைப்புக்குறிய விசயம் எது?..

விக்கிரமாதித்தன் தோளில் கிடந்த வேதாளம்

எள்ளி நகையாடியது...
மதி நுட்பம் நிறைந்த மன்னா! என அழைத்து

ஒரு கதையை கூறி முடித்து..
ஒரு கேள்வி கேட்டது மன்னா!

இந்த உலகத்தில் மிகவும் நகைப்புக்குறிய விசயம் எது?..

இதற்கு சரியான பதில் தெரிந்தும் நீ மௌனம் சாதித்தால்

உன் தலை சுக்கு நூறாக தெறித்து விடும் என்று எச்சரித்தது..

விக்கிரமாதித்தன் பதில்:  இந்த உலகில், வயதானவர், நடுத்தர வாயதுடையோர், இளைஞர், பாலகன், குழந்தை, பிறந்த சிசு என, தினம் தினம் இறப்பதை பார்த்த பின்னரும், தான் மட்டும் இந்த உலகில் காலம், காலமாய் இருக்க போகிறோம் என்பது போல் அகங்காரத்துடன் திரிகிறார்களே, அந்த ஆணவம் தான் மிகப் பெரிய நகைச்சுவை என்கிறான்.

இந்த பதிலை கேட்டதும், மீண்டும் வேதாளம் புளிய மரத்திற்கு தாவியது.

சித்திர கவிதை
கள்ளமில்லா சிரிப்பு

'கள்ளமில்லாத சிரிப்பு'தான் 
ஆனாலும்

கொள்ளை கொண்டு தானே

போகிறது மனதை.

சித்திர கவிதை
பூத்து சிரிக்கிறது

அடுத்தவன் முகம் பார்க்க பிடிக்காமல்

சுவர் எழுப்பிகொண்டிருக்கும்

நம்மை பார்த்து....

சுவர் இடுக்கில்

வேர்விட்டு, துளிர்த்து...
பூத்து சிரிக்கிறது

இயற்கை./Ram

சித்திர கவிதை
மைல் கல்

ஊருக்கு வெளியே....

மைல் கல்லில் வந்தமர்ந்தேன் 'தாகத்துடன் '...

தூரத்தில் தெரிந்த ஓடையை நோக்கி கால்கள் விரைந்தன... 
அது.... ஆசைகளை மனதில் புதைத்து, அடக்கமானவர்களின் கல்லறை (சுடுகாடு )..

அதன் மீதுதான் தெளிவான 'கானல் நீர் 'ஓடிக்கொண்டிருந்தது...

வாழ்க்கையின் அர்த்தத்தை சொல்லியபடி..... /by... Ram

சித்திர கவிதை
வெற்றுவெளி

'வெற்றுவாசலில் 'ஒரு புள்ளி வைத்து அதிலிருந்து..

வட்டங்களாய், கோடுகளாய்,கொடிகளாய் பூக்களாய் விரிந்து,

பரந்து கோலம் உருவாகியது.. 
ஏதுமற்ற 'வெற்றுவெளியில் '

ஒரு புள்ளியிலிருந்து சிதறி(BIGBANG) அணுக்களாய், பால்வீதியாய்,

நட்சத்திரங்களாய்(சூரியன்) கோள்களாய் விரிந்து,

பரந்து உருவானது பிரபஞ்சகோலம்!!!

இந்த கோலத்தில் பூமியின் இருப்பு எங்கே? என்றேன்..

அள்ளியிறைத்த கோலமாவின் ஒற்றை துகள்தான் பூமியாம் !!!
என்னுடைய இருப்பு எங்கே என்று நினைத்தேன் 'சிரிப்பு 'வந்தது

சித்திர கவிதை
கேள் தோழா !கேள்!

கல் புரட்ட இயந்திரங்கள் வந்த பிறகு...

இது என்ன (மனிதர்கள் )கல் புரட்டல்

நகைத்த படி நகர்ந்தேன்..... 
அங்கிருந்த செங்கொடி

செந் நாக்காய் பட, படத்து சொன்னது...

கேள் தோழா !கேள்!

அது வெறும் கல் புரட்டல் இல்லை....

அடிமை தனத்தை புரட்டி போடு,

சோம்பலை புரட்டி போடு,  

மூட நம்பிக்கையை புரட்டி போடு,

தீண்டாமையை புரட்டி போடு,

ஆதிக்கவெறியை புரட்டி போடு....... என்று

செங்கொடி சொல்ல, சொல்ல..

தூரத்தில் கடல் அலை உண்மை, உண்மை என்று

தரையில் ஓங்கி அடித்து சத்தியம் செய்தது..

சித்திர கவிதை
பாசாங்கு

அங்கும், இங்கும் தாவும்

மனம் எனும் குரங்கு

தனக்குள்ளே 'அசையாத 'ஒன்றை

பார்க்கும் போது

தானும் சில கணங்கள்

அசைவற்று (அமைதியாக)இருக்கிறது..

ஆனால் அதுவும் 'பாசாங்கு 'தான்

சித்திர கவிதை
சீறி எழுந்த அலை..

சீறி எழுந்த அலை..
மனதில் தோன்றிய வார்த்தைகள்...

வெண்மயில் தோகை விரித்து ஆடுகிறது,
பெண்ணின் முந்தானை காற்றில் பறக்கிறது,
ஐந்து தலை நாகம் படமெடுத்து ஆடுகிறது..

தரையில் துள்ளி விழுந்த அலையின்

ஒரு துளி உதட்டில் பட்டு உப்புக் கரித்தது..

'யாதார்த்தம் 'என்னவோ

உப்புக்கரிக்கத் தானே செய்கிறது.

சித்திர கவிதை
'தேடல்'

'தேடல்'உள்ள உயிர்களுக்கே

தினமும் பசியிருக்கும்..

தேடல் என்பது உள்ளவரை

வாழ்வில் ருசியிருக்கும்.

சித்திர கவிதை
புன்சிரிப்பூ

#5 புன்சிரிப்பூ

தன் பிஞ்சு கையால் முழம்போட்டு

 நான்கு முழம் என்றாள்.. 

என் கையால் அளந்து மூன்றுதான் என்றேன்.. 

அந்த குட்டி தேவதை பதிலாய் தந்தாள் 

ஒரு அழகான புன்சிரிப்பூ

சித்திர கவிதை
மதி

 

#4 மதி

இது என்ன ஏற்று'மதி'யா.. 

இல்லை இறக்கு 'மதி'யா..

முழுமதி கேட்டால் 

பிறை மதி அல்லவா வருகிறது.

சித்திர கவிதை
சிலந்தி வலை

#3. 

ஆசைகளை அறுத்தெறி' என்றார் புத்தர்.. 

என்னதான் கலைத்தாலும் 

மீண்டும், மீண்டும் வலை பின்னுகிறது மனசு -

ஒரு சிலந்தி பூச்சியை ப் போல

 

சித்திர கவிதை
காலைப்பொழுது

#2 காலைப்பொழுது

குளத்தில் நீர் தளும்பும் ஓசையும், 

படியேறும் கால் கொலுசின் சிணுங்கலும், 

காற்றிலாடும் அரச இலைகளின் சல சலப்பும்.. 

ஒரு சேர இசைக்க…

காலைப்பொழுது அழகானது.



 

சித்திர கவிதை
முத்தாய்ப்பு

#1 முத்தாய்ப்பு 

 

எட்டு கால் கொண்டு 

எட்டி, எட்டி வலை பின்னி

 இரைக்கு காத்திருந்தால்...

'முத்தாய்ப்பாய்'  

முத்து, முத்து பனித்துளிகள்.


 

ஒருபக்க கதை
கொசு குர(ற)ல்

இரவு முழுதும் (வித்தியாசமான )திருக்குறள் போட்டி நடந்தது...
யாரோ காதில் வந்து 'ஹம்மிங் 'செய்து இது என்ன குறள் என்றார்கள்
பின்னர் முதுகில் எழுத்தாணியால் கீறி, கீறி...இது என்ன குறள் என்றார்கள் -

சட்டென்று தூக்கம் கலைய.. அது வரை முதுகில் மேய்ந்து கொண்டிருந்த 'கொசுக்கள் '   ஒரே கோரஷாக ஒரு குறளை சொல்லி பறந்து சென்றன...
 அந்த குறள்...
 "ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும் கண் ணோடிப் பொறுத்து ஆற்றும் பண்பே தலை "
அதன் பொருள் :தம்மை வருத்தும் தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் உடையவராக, அவரது குற்றத்தையும் பொறுத்து நடக்கும் பண்பே சிறந்தது ஆகும்.  

ஒருபக்க கதை
வேணுவும், சீனுவும்

வேணுவும், சீனுவும் நண்பர்கள், பிசினஸ் பார்ட்னர்கள்.
அவர்கள் தொழில் நல்ல முறையில் நகர்ந்து கொண்டிருந்தபோதுதான், சீனு எல்லா பணத்தையும் சுருட்டிக்கொண்டு வெளிநாடு தப்பி விடுகிறான். பல வருடங்கள் கழித்து மீண்டும் இங்கு வருகிறான்.
இப்போது அவன் பெரிய திரைப்பட இயக்குனர், அவன் தயாரிப்பில் அனைத்தும் வெற்றி படங்கள்.

தற்போது சீனு எடுக்கும் இந்த சினிமா சூட்டிங், சென்னையில் ஒரு பெரிய மனநல மருத்துவமனை வளாகத்தில் நடை பெறுவதாக கதை.

அதற்காக அந்த மருத்துவமனையில் தனிமையான ஒரு இடத்தில் அமர்ந்து, அடுத்த காட்சி படம் எடுப்பது சம்பந்தமாக ஆழ்ந்த யோசனையில் இருக்கிறான்.

அப்போது தன் முதுகுக்கு பின்னால் யாரோ நிற்பது போல் உணர்கிறான்.
சட்டென்று திரும்பி பார்க்க.. அங்கு ஒரு மனநோயாளி..அவன் முகம் தெளிவாக தெரியாத அளவிற்கு அடர்ந்த முடிகள்..
அவன் கைகள் சீனுவின் கழுத்தை நெறிக்கும் பாவனையில் அவனை நோக்கி வருகிறது...
அந்த ஆக்ரோஷமான முகத்தை அருகில் பார்க்க, அவனுக்கு மின்னல் வெட்டியது போல் புரிந்து விடுகிறது அது வேறுயாருமல்ல, அவனால் ஏமாற்றப்பட்ட வேணுதான் இப்போது மனநோயாளியாக!!

திரைப்பட இயக்குனரான அந்த சீனு, இப்போது அவனிடம் வசமாக மாட்டிக்கொண்டதை நொடிபொழுதில் உணர..
உதவிக்கு யாரையும் கூப்பிட கூட அருகில் யாரும் இல்லை.
வேணுவிடமிருந்து உயிர் பிழைக்க ஓட்டமெடுக்கிறான்.
அருகில் இருந்த அந்த ஏழுமாடி  கட்டிடத்தில் ஏற.. பின்னாடியே வேணுவும் மாடிப்படியேறி துரத்தி வருகிறான்..
ஏழாவது மாடி கடைசி, அங்கு பால்கனி போன்ற ஒரு வளைவில் கம்பியை பிடித்தபடி, உடல் நடுங்க, வியர்த்து கொட்ட, முகத்தில் மரண பயத்துடன் நிற்கிறான்.

இப்போது அவன் அருகில் வேணு, அவனை தள்ளிவிடும் பாவனையில் கிட்டே நெருங்குகிறான்..

அவ்வளவுதான் நம் கதை முடிந்தது என்று சீனுவும் மரணபயத்தில் நடுங்க...
அவன் அருகில் வந்த வேணு தன் கைகளால் சீனுவின் முதுகில் தொட்டு விட்டு "ஜுட் " என்னை பிடி பார்க்கலாம் என்று கத்தியபடி, மாடிப்படிகளில் இறங்கி ஓடிக்கொண்டிருந்தான்!!

ஒருபக்க கதை
சுடாதே.. சுடாதே.

அந்த மனநல மருத்துவரை பார்க்க ஒரு மனநோயாளி வருகிறான்.
டாக்டர் எதிரில் இருக்கும் சேரில் அமர..

டாக்டர் :உங்களுக்கு என்ன பிரச்சனை சொல்லுங்க என்கிறார்.
பேஷண்ட் எதுவும் சொல்லாமல் டாக்டரை முறைத்து பார்த்தபடி இருக்க..
மீண்டும் டாக்டர் கேட்க அதற்கும் பதில் சொல்லவில்லை, டாக்டர் பொறுமை இழந்து கோபமாக கத்து கிறார் 'நீ எதுவும் சொல்ல வேணாம், எழுந்து போ! என்கிறார்.

அதன் பிறகுதான் அந்த பேஷண்ட் பேச ஆரம்பிகிறான்.. என் பிரச்சனையே இதுதான் டாக்டர்! யார் எது சொன்னாலும் அதற்கு எதிரா செய்கிறேன் என்கிறான்..

டாக்டர் :இந்த பிரச்சனை எவ்வளவு நாளா இருக்குன்னு சொல்லுங்க... இல்லை என் கிட்ட சொல்லாதீங்க..
இல்லை சொல்லுவேன் என்று சொல்கிறான்....
டாக்டர் : நைட் தூங்காதீங்க கொட்ட, கொட்ட முழிச்சுகிட்டு இருங்க..
'தூங்குவேன் என்கிறான்'
 பிறகு டாக்டர் அவன் அருகில் வந்து ஸ்டெதாஸ்கோப்பை மார்பில் வைத்து மூச்சை இழுத்து பிடித்து தம் கட்டுங்க என்று சொல்ல..
அவன் வேகமாக மூஸ், மூஸ் என்று மூச்சு விட.. செக் பண்ணுகிறார்.
கையை நீட்டாதீங்க என்று டாக்டர் சொல்ல, அவன் கையை நீட்டுகிறான் நாடி துடிப்பையும் 'செக்'பண்ணுகிறார்.

டாக்டர் :நான் எழுதி கொடுக்கும் இந்த மாத்திரையை மூணு வேளையும் போடவே போடாதீங்க..
அவன் :இல்லை, நான் கண்டிப்பா போடுவேன் என சொல்லி சட்டை பையில் வாங்கி வைத்து கொள்கிறான்.
டாக்டர் :நீங்கள் எனக்கு 'பீஸ்'ஐம்பது ரூபாய் தரவேணாம் என்று சொல்ல...
இல்லை.. நான் தருவேன் என்று பணத்தை தருகிறான்..

டாக்டர் அவன் கொடுத்த ரூபாயை மேஜை ட்ராயரில் வைக்கும் போதுதான் அவர் தற்காப்பு க்காக வைத்திருந்த துப்பாக்கி கீழே விழுந்து ஒரு அரை வட்டம் அடித்து நோயாளியின் காலடியில் கிடக்க..
அவன் குனிந்து எடுத்து.. டாக்டர்!இந்த துப்பாக்கி எங்கே வாங்குனீர்கள்? நல்லா இருக்கே!!.. இது சுடுமா என கேட்டு டாக்டரை நோக்கி திருப்ப..

டாக்டர் பதறி போய்!  சுடாதே!சுடாதே!!என்று பதற...
"டுமீல்" 

ஒருபக்க கதை
மலையகத்தில் ஒரு மன்னிப்பு

'அனிதா' பலமுறை முயற்சி செய்தும் அவளாள் அந்த கிடார் லிருந்து லயத்துடன் கூடிய இசையை வாசிக்க முடியவில்லை..

அவளின் மீயூசிக் மாஸ்டரிடம் தன் கவலையை சொல்கிறாள், அவர் அதற்கு.. ஒரு அமைதியான மலை பாங்கான இடத்திற்கு சென்று, மனம் அந்த சூழ்நிலையில் லயித்து வாசிக்க சொல்கிறார்..

ஊட்டியில் உள்ள ஒரு மலை கிராமத்திற்கு சென்று அந்த அழகும், அமைதியும் நிறைந்த அந்த இடத்தில் அமர்ந்து தன் கிடார் கையில் எடுத்த போதுதான் அந்த மலைவாசி குழந்தை ஒன்று ஆவலுடன் அந்த கிடாரை தொட வரும் போது அந்த கைகளை தட்டி விடுகிறாள்..

அவளின் செய்கை அவள் மன சாட்சியை உறுத்தியது..
அங்கிருந்த சர்ச் க்கு சென்று, தான் செய்த தவறுக்கு மனம் வருந்தி பிரார்த்தனை செய்கிறாள்.. அவள் கண்முன் அந்த பிஞ்சு விரல்களை தட்டி விட்ட காட்சியே மீண்டும், மீண்டும் வந்தது...

பின்னர் சர்ச் ஐ விட்டு வெளியே வந்து, அங்கு விளையாடி கொண்டிருந்த அந்த சிறுமியை அருகில் அழைத்து தன் மடியில் அமர்த்தி அணைத்தபடி அந்த பிஞ்சு விரல்களை தன் கையால் பிடித்து கிடாரை வாசிக்க...
மனதை உருக்கும் இசை காற்றில் பரவியது, பூக்கள் தலை யாட்டின, மலையில் ஊர்ந்து சென்ற மேகங்கள் இசைக்கு ஏற்றவாறு தவழ்ந்தன.. அவள் கண்களிலிருந்து கண்ணீர் கிடாரில் விழுந்து தெறித்தது..

அன்பும், இசையும் ஒரே லயத்தில் பரவியதை உணர்ந்தாள்.

கதம்பம்
அப்பவே எழுத்தாளராக வேண்டியது

9th படிக்கும் போதே ராணி முத்து புத்தகத்தில் கதை எழுதியுள்ளேன்...

அந்த கால கட்டத்தில் ராணிமுத்து நல்ல பேமஸ்.. அதில் கதை போட்டி அறிவித்து 200 ரூபாய் பரிசு என்று இருந்தது.
உடனே நானும் அவனும் (அவனும் நம்ம சொந்தக்காரன்தான்)
களத்தில் குதித்தோம், பரிசு 200 ரூபாயில் ஆளுக்கு நூறு ரூபாய் பங்கு..
ரமணி சித்தியிடம் நிறைய ராணி முத்து புத்தகம் இருந்தது அதில் பழைய புத்தகம் ஒன்றை ஆட்டையை போட்டு வந்து..
ஒரு வரி விடாமல் எழுதினோம், மூன்று நாட்கள் இருவரும் சேர்ந்து எழுதி, A4 பேப்பரில்15 பேப்பர்கள்!!.. ஒரு வழியாக எழுதி ராணிமுத்து பத்திரிகைக்கும் அனுப்பிவிட்டோம்.

பத்து நாட்கள் கழித்து திரும்பி வந்தது..
அதில் ஆசிரியர் பதில்.. "தூ "என்ற ஒரே எழுத்துதான்

அவன் எங்களை அப்படி துப்பியதற்கு முக்கிய காரணம் நாங்கள் இடை, இடையே வரும் விளம்பரங்களையும் விட வில்லை அதையும் எழுதி விட்டோம்..
அதிலதான் அவன் ரொம்ப கடுப்பாகி விட்டான்..
'உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பது லைபாய் மட்டுமே'

'உங்கள் பற்கள் முத்து போல் பிரகாசிக்க கோபால் பல் பொடி'
போன்ற விளம்பரங்கள்..

எப்படியோ எங்கள் கதை எழுதும் ஆர்வத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டான் அந்த படுபாவி.

WhatsApp

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!