உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
பாட்டும் நானே... 'பாவமும்' நானே...!!"
சினிமாப் பாடல் வரிகளை சரியா கவனிக்காம, தப்பு தப்பா புரிஞ்சுக்கிட்டு பாடித்திரிந்த அனுபவம் நம்ம எல்லோருக்குமே இருக்கும். உண்மையான வரியை உணர்ந்த பின்பு, அப்பாடல் மீதான நம் பார்வையே மாறிப்போய், ஒவ்வொரு முறையும் அப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நம் நினைவலைகள் பின்னோக்கிச் செல்லும் தானே?!
அப்படியொரு சுவையான அனுபவம் எனக்கும் ஏற்பட்டதுண்டு..!
'ஒரு பாதி கனவு நீயடா... மறு பாதி கனவு நானடா..' என்று ஒரு மொக்க(?!) சாங் வரும். ட்ராவல்ல அந்தப் பாட்டு வர்றப்போலாம் ஸ்கிப் பண்ணிடுவேன்.
ரொம்ப நாளைக்கப்புறம் பஸ்ல போறப்போ அந்தப் பாட்டைப் போட்டான் என் ஆஸ்தான டிரைவன்!
முதல் சீட்லயே உட்கார்ந்திருந்த நானு, 'Fwd' பட்டனை அழுத்தணும்ங்குற முடிவோட, என் செருப்பை மாட்டிக்கிட்டு எந்திரிக்கும் போது... பக்கத்துல(?!) உக்கார்ந்திருந்த சுடிதார், அந்தப் பாட்டை ரசிக்கும் தொணியில் 'ஹம்' பண்ண ஆரம்பிச்சா. நமக்குத்தான் வயசுப்புள்ளைங்களப் பார்த்தாலே இரக்க குணம் பீறிட்டு வந்திடுமே...
பாட்ட மாத்த எழுந்த நானு... அவ ரசிக்குறதைப் பார்த்ததும், 'வால்யூமை உயர்த்தி'.. "அருமையான பாட்டுப்பா.." ன்னுட்டு அவ பக்கத்துல இன்னும் ரெண்டு இஞ்ச் நெருக்கமா உட்கார்ந்ததை, கண்ணாடி வழியா கவனிச்சுக் கண்ணடிச்ச டிரைவரின் பின்மண்டையில தட்டி, "மச்சீ... பாட்டைக் கேட்டுக்கிட்டே தூங்கிடாதேடா.., முன்னாடிப் பார்த்து கவனமா ஓட்டு" என ஓவராக்டிங்கை அடக்கிவிட்டு அமர்ந்தேன்.
அப்புறமென்ன..., அவ பாட.. நான் வாயசைக்க... அவ தலையசைக்க நான் பாட.... நல்லபடியா போய்க்கிட்டிருந்த இந்த எடத்துல தான் ஒரு ட்விஸ்ட்டு...
எனக்கும் வரிகள் தெரியும்'னு நம்மாளுக்கு காமிக்க நினைச்சு, எட்டுக்கட்டையில கஜலைப் புடிச்சு, ஹை பிட்ச்ல குரலை உயர்த்தி, "ஒரு பாதி கனவு நானடா.." ன்னு பாடினேன்(?!).
உடனே, பட்சி புருவத்தை உயர்த்தி மொறைச்சதும் கப்புனு நிப்பாட்டிட்டு... அடுத்த வரியைக் கேட்டேன்.... அது, "..மறு பாதி 'கதவு' நீயடா..." ன்னுச்சு...
அதுக்கப்புறமும் வாயத் தொறந்திருப்பேன்னு நினைக்குறீங்க..?! ம்ஹூம்...
இப்ப என் டிரைவர் மாப்ள ஸ்டெயரிங்குலேர்ந்து ரெண்டு கையையும் எடுத்து காலரைத் தூக்கிவிட்டுக்கிட்டே.., "ஒரு பாதி கதவு நீயடி.., மறு பாதி கதவு நானடி..." ன்னு சத்தமா பாடினான் பாருங்க...,
எனக்கு ரொம்ப அவமானமாப் போச்சு கொமாரூ....
அப்படியே.... எழுந்துப்போயி, கடைசி படிக்கட்டுக்கும் அப்பால இருக்குற ஆறு பேரு சீட்ல குப்புறப் படுத்து குலுங்கி குலுங்கி அழுதேன்...
இதனால் அறிவிக்கப் படுவது யாதெனில்.., நீங்கள் உச்சரிக்க வேண்டிய சொல் "கனவு" அல்ல... "கதவு!!"
என் ஃபேவரிட் லிஸ்ட்டில் தவறாமல் இடம்பிடிக்கும் அருமையான சிலேடை வரிகளை எனக்கு உணர்த்திய அந்தச் சுடிதாருக்கு ஒரு நன்றி கூடச் சொல்லாத ஏக்கம் இன்னமுமிருக்கு...