Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு புதைந்த சிற்பம்

வகைகள் : சிறுகதைகள்/ இரா. சிதம்பரம்

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


சிறுகதைகள்

புதைந்த சிற்பம்

அன்று இரவு மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு நாதஸ்வர கச்சேரி இருக்கிறது என்று என் நண்பர் அழைத்தார். இருவரும் கிளம்பி கோவிலுக்கு முன் உள்ள வைகை ஆற்றை அடைந்தோம் நாதஸ்வர கச்சேரி ஆரம்பமாக இன்னும் சற்று நேரம் செல்லும் என்று தோன்றியதால் வைகை கரையின் சரிவில் மணலில் உட்கார்ந்தோம்.

நிர்மலமான நீல வானத்தில் ஆட்சி செலுத்தி கொண்டிருந்த பூர்ண சந்திரன் அதிலாவண்யமான அமுத கிரணங்களை அள்ளிச் சொறிந்து பூலோகத்தை ஸ்வனப்புரியாக ஆக்கிக் கொண்டிருந்தான். தவழ்ந்து வந்த தென்றல் மானாமதுரை மரிக்கொழுந்தின் நறுமணத்தை சுமந்து கொண்டு வந்து எங்களை இன்பப் போதையில் ஆழ்த்தியது.

நாங்கள் அமர்ந்திருந்ததற்கு அருகிலேயே கற்சிலை ஒன்று புதையுண்டு ஒரு பகுதி வெளியே தெரியும்படியாக கிடந்தது. இதற்கு முன் பல தடவைகளிலும் இந்தச் சிலையை கவனித்திருக்கிறேன். வெகு அற்புதமான சிற்பமாகத்தான் அது தோன்றியது.

அதை வெளி கிளப்பி முழு உருவத்தையும் பார்க்க வேண்டும் என்ற பலமான ஆசை எனக்கு அடிக்கடி ஏற்பட்டதுண்டு. ஆனால் அவகாசம் கிடைக்கவில்லை.

இவ்வளவு உயர்ந்த சிற்பம் வெளியே கிடக்க காரணம் என்ன? இதை சிருஷ்டித்த சிற்பி யார்? என்று என் சிந்தனை வட்டமிட்டது. அந்த மகான் தன் கனவை எல்லாம் என்ன ஆசையுடன் இக்கல்லில் வடித்து வைத்தானோ? அவன் சிருஷ்டியாகிய இது இப்படிப் புழுதியிலே புதைந்து மறைந்து கிடப்பது போல் அவனும் காலப் பழுதியின் அடியிலே எப்படி எங்கே மறைந்து போனானோ? எங்கே மறைந்தான்?. இந்த உலகத்தில் தோன்றிய, தோன்றும் எண்ணற்ற ஜீவ கோடி உயிரினமும் எந்த பரம ஒடுக்கத்தில் போய் ஒடுங்கி மறைந்திருக்கின்றனவோ? அங்கேதான் அந்த சிற்பியும் மறைந்திருப்பானோ?

இப்படி யோசனை செய்த நானே திடீரென்று “இச்சிலையை இப்பொழுதே புரட்டிப் பார்த்து விடுவோமா” எனறு நண்பரை கேட்டேன்.

“யாரும் இந்த சிலையை தொடக்கூடாது” என்று அழுத்தமான குரல் எங்கள் பின்பக்கமாக கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினோம் எங்கள் பக்கத்திலேயே ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

“ஏன் தொடக்கூடாது?” என்று கேட்டோம். பதில் சொல்லாமல் எங்கள் பக்கத்தில் உட்கார்ந்தார். அவருடைய தீட்சண்யமான கண்கள் தொலைவில் எதையோ ஊடுருவிக் கொண்டு எங்கு சூனியம் நிலவுகின்றதோ அங்கே பதிந்து இருந்தன.

“இந்தக் கோவிலில் திருப்பணி நடந்தது உங்களுக்கு தெரியுமா?” என்று திடீரென்று கேட்டார்.

என்னவோ கேள்விக்கு பதில் சொல்லத் தோன்றவில்லை. ஆனால் அவர் எங்கள் பதிலை எதிர்பாராமலேயே மள மளவென்று ஆரம்பித்தார். அனுப்பு வரிகள் ஓடிக்கொண்டிருந்த அவருடைய கலையான முகமும் அக்னி பந்தங்கள் போன்ற கண்களும் எங்களை ஆகார்ஷித்தன. அவர் பேசினார், எங்களால் பேச முடியவில்லை. கதையாகச் சொன்னார். அசையாமல் இருந்து கேட்டோம்.

இங்கு கோவில் கொண்டுள்ள அம்பாள் ஆனந்தவல்லியின் மகிமையை கேள்வியுற்ற மதுரை மன்னன் மேலும் கோவிலை விஸ்தரிக்க நினைத்து திருப்பணிக்கு வேண்டிய செல்வத்தை தானமாக வழங்கினான். ஏராளமான திறமையுள்ள சிற்பிகள் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் அம்பாளின் சிலையை சற்று பெரியதாக செய்வதற்கு மதுரை கோவிலில் சிற்பங்களை திறம்படச் செய்து கொடுத்திருந்த பூபதி என்ற ஒரு சிற்பியை மன்னவனே தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தான்.

பூபதிக்கு தனி குடிசை அவன் கற்பனை சிதறி விடாதபடடி, சிந்தனை சிதறி விடாதபடி தனியே மேடை போட்டிருந்தான். அந்திப்பொழுது ஆகும் வரை தொடர்ந்து கல், கல் என்ற ஓசை கேட்ட வண்ணமிருக்கும். தெய்வ சாந்நித்யம் பெறத்தக்க சிலைகளை சிருஷ்டிப்பதனால் ரொம்பவும் பக்தி சிறத்தையுடன் தெய்வப் பணியில் முனைந்திருந்தான். ஒவ்வொரு நாளும் வைகையில் நீராடி அம்பாள் சன்னதியில் வணங்கி விட்டே தன் வேலையை தொடங்குவான். வழக்கம்போல் அன்று பூபதி வைகையில் நீராடிக் கொண்டிருந்தான். அதே துறைக்கு பெண் ஒருத்தி இடையில் ஒரு மண் குடத்துடன் வந்தாள். வந்தவள் எதையும் யாரையும் கவனிக்கவில்லை. குடத்தை சுத்தமாக விளக்கினாள். அதில் நீரை நிரப்பினாள். அவிழ்ந்து தொங்கிய அளக பாரத்தை அலட்சியமாக அள்ளிச் சொருகினாள். குடத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டாள்.

சற்று நேரத்தில் நடந்து முடிந்து விட்ட இச்சிறு சம்பவம் பூபதியின் உள்ளத்தில் மின்னல் அலைவது போல் ஒருவித உணர்ச்சியை உண்டாக்கியது. குடத்தில் தண்ணீரை அள்ளியபோது தன் உள்ளத்தையும் அக்கள்ளி அள்ளிக் கொண்டு போய் விட்டாள் என்பதை உணர்ந்தான்.

அங்கு வந்து சென்ற பெண், கோவில் காரியஸ்தர் அம்பலவாணர் மகள் திலகவதி என்பதை பூபதி அன்றைய தினமே விசாரித்துத் தெரிந்து கொண்டான்.

மறுநாள் அதே துறைக்கு அதே பெண் அதே நேரத்தில் வந்தாள். முதல் நாள் போலவே எல்லாம் நடந்தது. அந்தக் கர்வம் பிடித்தவள் தன்னைக் கொஞ்சமும் சட்டை செய்யவில்லையே என்று பூபதியின் உள்ளம் வெம்பியது. பூபதியின் கவனம் வேறு பக்கம் திரும்பி இருந்த சமயம் “ஐயோ!” என்ற அலறும் குரல் கேட்டுத் திரும்பினான். அவள் கையில் இருந்த குடம் எப்படிக் கையை விட்டு நழுவியதோ நிச்சயமாகத் தெரியவில்லை. வெள்ளத்தால் இழுக்கப்பட்டு குடம் போய்க் கொண்டிருந்தது. ஆனாலும் அந்தப் பெண் முகத்தில் குறும்புத்தனத்தின் அறிகுறி தென்பட்டதே தவிர பதட்டமடைந்தவளாகத் தோன்றவில்லை. பூபதி இதைக் கவனித்தானோ இல்லையோ! மறுகணம் வெள்ளத்தில் பாய்ந்து குடத்தைக் கையில் எடுத்தான். ஆனால் வெள்ளத்தின் வேகம் அவனை புரட்டி மூழ்கடித்தது. இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திலகவதியின் முகத்தில் இருண்ட சாயல் படர்ந்து, அவள் பயத்தை வெளிப்படுத்தியது. இதற்குள் பூபதி வெள்ளத்தைச் சமாளித்து நீந்திக் கரை சேர்ந்தான்.

நன்றியறிதலும்,மகிழ்ச்சியும் பொங்க திலகவதி பூபதியிடமிருந்து குடத்தை வாங்கினாள்.

திலகவதி “தங்களுக்கு ரொம்பவும் சிரமம் கொடுத்து விட்டேன்.”

பூபதி “அப்படி ஒன்றும் அதிகச் சிரமம் இல்லையே!”

திலகவதி “வெள்ளத்தில் நீங்கள் மூழ்கியவுடன் பயந்தே போனேன்.”

பூபதி “என்னிடத்தில் தங்களுக்கு அவ்வளவு கருணை ஏற்பட்டு விட்டதா!”

திலகவதி “நான் உங்களுக்காக ஒன்றும் பயப்படவில்லை. என் குடம் போய்விடுமே என்று தான் பயந்தேன்.”

பூபதி “கையில் அகப்பட்டுக் கொண்டதை சாமானியமாய் நழுவ விடுவேனா?”

திலகவதி “தங்கள் உதவியை என்றும் மறக்க மாட்டேன். மறக்க முடியாது. வருகிறேன்.”

பூபதி “மீண்டும் வருவீர்களா?”

திலகவதி “இல்லை, போகிறேன்.”

மறுநாளும் இருவரும் அதே இடத்தில் சந்தித்தார்கள். பூபதிக்கு எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. திலகவதியே பேசத் தொடங்கினாள்

திலகவதி “நேற்று எனக்கு உதவி செய்தது இன்னார் என்று என் தந்தையிடம் சொல்லத் தெரியாமல் விழித்தேன். இன்று தெரிந்து கொள்ளலாமா?”

பூபதி “நேற்று என்னை முழுவதும் அறிந்து கொண்டிருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்? நான் இங்கு கோவில் திருப்பணி செய்யும் சிற்பிகளில் ஒருவன்.”

திலகவதி “ஓஹோ! கல்லையே உடைத்து வலுப்பெற்ற கைகளுக்கு வெள்ளத்தில் நீந்துவது கஷ்டம் இல்லை தானே!”

பூபதி “அம்பாளின் கிருபை மட்டும் இருந்தால், இங்கு கோவில் கொண்டுள்ள அம்பாளை குறிப்பிடுகிறேன். எந்த வெள்ளத்தையும் நீந்திக் கரை சேர என்னால் இயலும்.”

திலகவதி “வேகவதியாகிய வைகையிலே நான் இறங்கப் பயப்படுவதுண்டு. ஆனால் நீங்கள் இருக்கும் பொழுது இந்தத் துறையில் பயம் இல்லாமல் இறங்கலாம் போலிருக்கிறது.”

பூபதி “தைரியமா இறங்கலாம் கொஞ்சமும் சந்தேகம் வேண்டாம்.”

திலகவதி “தாங்கள் சிற்பி என்றதும் ஞாபகம் வருகிறது இங்கு மதுரையிலிருந்து வந்துள்ள சிற்பி யாரோ ஒருவர், அழகிய சிற்பங்கள் அமைப்பதில் மகாவல்லவராமே?”

பூபதி “உலகம் அப்படி நினைகிறதே தவிர,அவருக்கு தான் இதுவரை செய்த சிற்பம் எதுவும் அத்தனை அழகாகவே தோன்றவில்லையாம். சாமுத்திரிகா லட்சணத்தின் படி அமைந்த உண்மையான அழகு எப்படி என்பதை இப்பொழுது தான் உணர்கிறாராம். அழகுத் தெய்வத்தின் ஸ்வரூபத்தை இன்று தான் நேருக்கு நேர் கண்கூடாகக் காண்கிறாராம்.”

திலகவதி “ஏதோ பிரமாதமாகச் சொன்னார்களே என்று தான் கேட்டேன். யாரையும் ஒரு தடவை பார்த்தால் அப்படியே தத்ரூபமாய்ச் சிலையாகச் செய்யக் கூடியவர் என்று சொன்னார்களே.”

பூபதி “ஆம் அது உண்மைதான் உதாரணமாக உங்களை ஒரு தடவை பார்த்து விட்டாரானால் தன் வாழ்க்கையில் என்றும் மறந்து விடாமல சிலையிலே சிருஷ்டித்து விடக்கூடியவர் தான். ஆனால் கல்லிலே சிலை வடிப்பாரே தவிர தங்க விக்ரகம் செய்து பழக்கமில்லை.”

திலகவதி “தங்க விக்ரகம் எதற்கு?”

பூபதி “கவனித்துப் பார்த்தால் தங்க விக்ரகம் கூட அத்தனை உயர்வு இல்லை தான்.”

திலகவதி “ஆஹா…! நேரம் போனதே தெரியவில்லை வருகிறேன். இல்லை போகிறேன்.”

பூபதிக்கும் திலகவதிக்கும் இப்படியாக ஏற்பட்ட பரிச்சயம் காதலாக பரிணமித்து விட பல நாட்கள் செல்லவில்லை. இருவருக்கும் இவ்வுலகமே திடீரென்று இன்பமயமாக மாறியது. முன்பு சாதாரணமாக தோன்றிய மலர்களில் எல்லாம் புது மணமும், புது வனப்பும் எங்கிருந்தோ வந்து விட்டன. புத்தம் புது மலர்களை மாலையாக தொடுத்து கோவிலுக்கு அனுப்புவதில் திருப்தி அடைந்து வந்த திலகவதி, அம்மலர்களை எல்லாம் தன் கூந்தலில் சூட்டிக் கொள்ள ஆரம்பித்தாள். பூபதி தனக்களிக்கப்பட்ட வேலையை அடியோடு மறந்து திலகவதியுடன் இன்பகரமாய்ப் பொழுது போக்கிக் கொண்டிருந்தான்.

இதற்கிடையில் மதுரையிலிருந்து மன்னனே இங்கு விஜயம் செய்து, கோவில் திருப்பணி எம்மட்டில்லிருக்கிறது என்பதை நேரில் கவனித்தான். பூபதிக்கு இடப்பட்டிருந்த வேலையைத் தவிர மற்ற வேலைகள் யாவும் பூர்த்தி அடைந்திருந்தன. பூபதியின் பொறுப்பற்ற நடத்தை மன்னனுக்கு அளவற்ற கோபத்தை உண்டாக்கியது. ஆனாலும் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை பூபதிக்கு அளித்தான். கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்து விட்டபடியால் இன்னும் பதினைந்து தினத்திற்குள் அம்பாளின் சிலையை பூர்த்தி செய்து தரவேண்டும் என்றும் மறுபடியும் ராஜாங்கக் கட்டளையை மீறினால் பூபதி தன் எஞ்சிய வாழ்நாட்களைச் சிறையிலேயே கழிக்க நேரிடும் என்றும் கடுமையாய் எச்சரித்து அரசன் மதுரை திரும்பினான்.

பூபதி தன் சிற்பப் பணியை மீண்டும் தொடங்கினான். அன்று ஆரம்பிக்கும் முன்பு அம்பாள் சன்னதியில் போய் தான் ஆரம்பித்த வேலையை முடிக்கத் தகுந்த திட சித்தத்தை அளிக்க வேண்டி சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினான். எழுந்து மூலஸ்தானத்தை நோக்கினான். ‘இது என்ன ஆச்சரியம்! யார் அங்கு நிற்கிறது! ஆம் திலகவதியல்லவா இங்கு நிற்கிறாள்? இவள் எதற்காக இப்பொழுது இங்கே வந்தாள்?’ பூபதி கண்ணை கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தான். இல்லை, இல்லை எப்பொழுதும் உள்ள அம்பாளின் சிறிய விக்கிரகமே தூண்டாமணி விளக்கின் ஒளியில் ஸ்வட்சமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. தன் மனப் பிரமையே இப்படி உருப்பெற்று இருக்கிறது என்று தெரிந்து மீண்டும் வணங்கி விட்டுப் போய் தன் வேலையைத் தொடங்கினான்.

பூபதியின் கவனத்தை இப்பொழுது வேறு எதுவும் கவரவில்லை. இரவு பகல் இடைவிடாமல் அவன் சிற்றுளி வேலை செய்தது. திலகவதியைக் கூட மறந்து விட்டான் என்று தோன்றியது. பூபதிக்கு இந்த மட்டில் புத்தி திரும்பியதைப் பற்றி இதர சிற்பிகளும் பேசி மகிழ்ச்சி அடைந்தார்கள்.

திலகவதியும் பூபதியை அணுகவில்லை. தான் போனால் பூபதியின் வேலை தடைபட்டு விடும் என்று அறிந்திருந்தாள். தவணை கொடுக்கப்பட்டிருந்த பதினைந்து தினங்களையும் பல்லைக் கடித்துக் கொண்டு போக்கினாள். பூபதிக்கு கொடுக்கப்பட்டிருந்த தவணை நாட்கள் எப்பொழுது முடியும் என்று திலகவதி எதிர்பார்த்துக் கொண்டிருந்ததற்கு வேறு காரணமும் இருந்தது. திலகவதியின் தந்தையாகிய அம்பலவாணர், தன் மகளுக்கும் பூபதிக்கும் ஏற்பட்டுள்ள பரிசுத்தமான காதலைத் தெரிந்துகொண்டு, பூபதிக்குத் தன் மகளை மனம் செய்து கொடுக்கத் தன் சம்மதத்தைத் தெரிவித்திருந்தார். ஆகையால் பூபதி இச்சிலையை முடித்துக் கொடுத்துவிட்டால் தாங்கள் நடத்தவிருக்கும் இன்ப வாழ்க்கையை தடை படுத்தக் கூடியது வேறெதுவுமில்லையாதலால், குறிப்பிட்ட நாள் முடிந்ததும், பூபதி சிலையைப் பூர்த்தி செய்து விட்டானா என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் திலகவதி அவன் குடிசைக்குள் விரைந்தாள்.

பூபதியின் குடிசையில் ஒரு சிலை பூர்த்தி பெற்று பூரணப் பொலிவுடன் நின்றது. சந்தோஷ மிகுதியுடன் சிலையை கூர்ந்து கவனித்த திலகவதி அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள். ஆச்சரியத்தினால் அல்ல,அளவு கடந்த பயத்தினால்! பயப்படுவதற்கு என்ன இருந்தது? வெறும் கற்சிலை தானே நின்றது. ஆம்! சிலை தான் யாருடைய சிலை? சொல், மனம், கடந்த சுயம் பிரகாசப் பொருளாய் ஆதி அந்த மற்றவனாய், அண்டபகிரண்டங்களையும், அதில் அடங்கிய எண்ணற்ற ஜீவ பேதங்களையும் தன் வயிற்றிலே வைத்துக் காக்கும் பராசக்தியாய் விளங்கும் ஜகன்மாதாவாகிய அம்பாளுடைய சிலைக்குப் பதிலாக அற்ப ஆயுள் படைத்த ஒரு மானிடப் பெண்ணின் சிலை நின்று கொண்டிருந்தது. ஆம்! திலகவதியின் உருவத்தையே இவ்வளவு அரும்பாடு பட்டு கல்லிலே வடித்திருந்தான் பூபதி. இது எத்தகைய பயங்கரப் பலனை அளிக்கப்போகிறதோ என்று தான் திலகவதி பயந்து ஸ்தம்பித்து நின்றாள்.

பூபதி “திலகவதி! என்ன மௌனமாய் நிற்கின்றாயே! ஒரு வேடிக்கையைக் கேள், நீ என் குடிசையில் நுழைந்ததை நான் கவனிக்கவில்லை ஆதலால் நீ இங்கு நிற்பதைப் பார்த்துவிட்டு என் சிலை தான் உயிர் பெற்று விட்டதோ என்று நினைத்தேன்.”

திலகவதி “உங்கள் விளையாட்டு ஒருபுறம் இருக்கட்டும். இது என்ன அபச்சாரம்? தெய்வத்திற்கு வேண்டிய உங்கள் கலையை இப்படி துஷ்பிரயோகம் செய்திருக்கிறீர்களே!”

பூபதி “திலகவதி! இங்கு கோவில் கொண்டுள்ள தெய்வத்திற்குத் தான் சிலை செய்ய ஆரம்பித்தேன். ஆனால் என் கைகள் என் உள்ளத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மற்றொரு தெய்வத்தின் உருவத்தை அமைத்து விட்டன. திலகவதி! இன்னும் கேள். உன்னை படைத்த பிரம்மன், தங்க விக்ரகம் ஒன்றை கடைந்தெடுத்து, அதில் அசாதாரண அழகுடன் உயிரையும், உணர்வையும் ஊற்றி இருப்பான். தன் படைப்பிலே தலைசிறந்த ஒரு பெண் என்று உன்னை பார்த்து பார்த்து பெருமை அடைந்து கொண்டிருப்பான். ஆனாலும் நன்முகம் படைத்த திலகவதி காலப்போக்கில் தன் யௌவனம் குன்றி அழகை இழுந்துவிடக் கூடியவள்தான். இதோ பார், நான் படைத்துள்ள திலகவதி, கல்லிலே உருவானவள்தான், ஆனாலும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு இதே பூரணப் பொலிவுடன் யௌவனமாய், பனி படர்ந்த ஹிமாலயம் இவ்வுலகில் தலை நிமிர்ந்து நிற்கும் வரையிலும் என் காதற்கிளியும் முகம் மலர்ந்து நின்று கொண்டிருப்பாள்.”

திலகவதி “ராஜாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள உங்கள் கடமையைச் செய்ய தவறியதற்கு எத்தகைய தண்டனை கிடைக்கப் போகிறதோ என்பதை மறந்து ஏதேதோ பேசுகிறீர்கள்.”

பூபதி “திலகவதி! இனி எந்தத் தண்டனையையும் நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன். நான் எடுக்கவிருக்கும் எத்தனை எத்தனையோ ஜென்மங்களிலும் ஈடு இணையற்ற இன்பமூட்டக்கூடிய இவ்வற்றாத அமுத கலசத்தை, யாராலும் விலை மதிக்க முடியாத இந்த மாணிக்க குவியலை, இம்மாநிதியை தேடி வைத்து விட்ட நான் தண்டனையை ஏற்றுக் கொள்ள தயங்குவேனா!”

திலகவதி “நீங்கள் தண்டனையை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அதற்கு முன் ஒரு வரம் எனக்கு கொடுங்கள். அழியாத அமர சிற்பத்தை நிர்மாணித்த அதே கைகளினால் அன்றொரு நாள் என் குடத்தை வெள்ளத்திலிருந்து மீட்ட அதே திருக்கைகளினால் இவ்வைகையாற்று வெள்ளத்தில் ஆழமான பகுதியில் என்னை அமிழ்து விட்டுப் போங்கள். இந்த வரம் மட்டும் மறக்காமல் கொடுக்க வேண்டும். கெஞ்சி கேட்கிறேன்.”

இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே திலகவதியின் கரிய பெரிய கண்கள் கலங்கி, நீர் துளிகள் வழிந்தோடின.

பூபதி ஏதோ சமாதானம் சொல்ல வாய் எடுத்தான். அதே சமயத்தில் தன் குடிசைக்குள் திபு திபு என்று ஆட்கள் நுழைவதைப் பார்த்து பேச்சை நிறுத்தினான்.

அவர்கள் வேறு யாருமில்லை, அரசனால் அனுப்பப்பட்டவர்களே. அரசன் கட்டளைப்படி அம்பாளின் விக்ரகம் பூர்த்தி அடையாமல் இருந்தால் பூபதியைக் கைது செய்து மதுரைக்குக் கொண்டு போனார்கள். ஏற்கனவே அரசன் எச்சரித்திருந்தபடியே ஆயுள் தண்டனை அடைந்த பூபதி சிறையில் தள்ளப்பட்டான்.

திலகவதியின் சிலையை கோவிலுக்குள் வைத்திருப்பது தெய்வ நிந்தனை என்று கருதி வெளியே வீசிவிட்டார்கள்.

தமிழ்நாட்டின் தலைசிறந்த சிற்பி ஒருவனை சிறையில் அடைக்க நேர்ந்ததை குறித்துச் சிறந்த கலா ரசிகனாகிய மன்னன் மன அமைதி இழந்து தவித்தான். அதன் காரணமாக அரசனின் பிறந்த தின விழாவையொட்டி விடுதலை பெற்ற கைதிகளில் பூபதியிம் ஒருவனாயிருந்தான்.

சிறையிலிருந்து விடுதலை பெற்ற பூபதி, வில்லிலிருந்து கிளம்பிய அம்பை போல் விரைந்து இங்கு வந்தான். ஆனால் அவனுக்குப் பேரிடி போன்ற செய்தி காத்திருந்தது. பூபதி ஆயுள் தண்டனை பெற்றதால் இனி திரும்ப மாட்டான் என்று மனமுடைந்த திலகவதி வைகை ஆற்று வெள்ளத்துடன் ஒரு நாள் போய்விட்டாள் என்ற செய்தியைத் தான் கேட்க முடிந்தது.

இதுவரை கதை கேட்டு வந்த நான் என் மௌனத்தைக் கலைத்து, “அடடா அவர்கள் வாழ்வு இப்படியா பாழ்பட்டுப் போகவேண்டும்?“ என்று அனுதாபமாய்க் கேட்டேன்.

கதை சொன்னவர் மீண்டும் “எந்த பைத்தியக்காரன் சொன்னவன் அவர்கள் வாழ்க்கை பாழ்பட்டது என்று? ஆம் இந்த பைத்தியக்கார உலகம் அப்படி நினைக்கிறது. இன்று பௌர்ணமியல்லவா? இங்கே இருந்து கவனித்துக் கொண்டிரு. இந்தச் சந்திரன் உச்சியை அடைந்ததும் பூபதி இங்கு வந்து இச்சிலையைத் தொடுவான். உடனே துயில் நீங்கி எழுவது போல் திலகவதியும் எழுந்து இருவரும் கைகோர்த்த வண்ணமாய்க் காற்றிலே ஏறி விண்ணையும் தாண்டி அங்கு பட்டப் பகல் போல நிலவு பொழியும் வட்ட மதியில் போய் அமர்ந்து கொள்வார்கள். அச்சந்திரனையே தங்கள் வெள்ளிப் படகாகக் கொண்டு வானக் கடலில் மிதந்து விளையாடுவார்கள்” என்று சொல்லி நிறுத்தினார்.

இத்தகைய அற்புத சிற்பத்தை இப்பொழுதே பார்த்து விடுகிறேன் என்று எழுந்தேன். முதுகில் “பளார்” என்று ஒரு அடி விழுந்தது திடுக்கிட்டுக் கண் விழித்தேன்.

“நாதஸ்வரக் கச்சேரி கேட்க வந்து நாம் இருவரும் நன்றாக தூங்கி விட்டோமே” என்று என் நண்பன் என்னை எழுப்பினார்.

சொப்பனவஸ்தையிலிருந்த என் உணர்வு பழைய நிலையை அடைந்தது.

கோவில் வாசல் பக்கம் பார்த்தேன். புஷ்பப் பல்லலுக்கு வீதியை வலம் வந்து முடியும் கட்டத்திலிருந்தது.

audio link. புதைந்த சிற்பம் - ஆடியோ வடிவில் 

 

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!