தொடர் : 1
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
குடகு மலை மீது “புலிமலை” என்று பொருள்படும் பாலிபெட்டா என்ற இடத்தில் உள்ள காபித் தோட்டத்தில் சில நாட்கள் நான் தங்கி இருந்தேன். அப்பொழுதுதான் அந்தப் புலி மலையில் ஒரு புலியிடம் போய் அகப்பட்டுக் கொண்டேன். எப்படியோ மீண்டு வந்தேன்.
ஆனால் அப்படி நான் என்னை மீட்டுக் கொண்டு வந்ததில் அன்றும், இன்றும், என்றும் நான் மகிழ்ச்சியடைந்ததே இல்லை. அந்தச் சம்பவத்தை நினைக்கும் பொழுதெல்லாம் என் உள்ளமானது அளவிட முடியாத சோகத்தையும், சொல்லில் அடங்காத துயரத்தையுமே அடைகிறது. ஆனாலும் அந்தச் சோகத்திற்கும், வேதனைக்கும், இடையிலும் மனதில் எங்கேயோ ஒரு மூலையில் ஒருவகை இன்பமும் எழத்தான் செய்கிறது. அந்த இன்ப வேதனையை எதிர்பார்த்து தான் இப்படி இதை எல்லோரிடமும் சொல்லிவிடத் துணிந்து விட்டேன்.
சென்னையில் தவிக்கின்ற வெயிலிலே கிடந்த எனக்கு, அந்த மலையில் எங்கும் நிழல் பரப்பி, நீண்டு வளர்ந்து நிரம்பியிருந்த மரங்களுக்கிடையில் வாழ்வது ஒரு குதூகலத்தை அளித்தது. கால் போன இடங்களுக்கு எல்லாம் போவேன். பயங்கரமான பாறை விளிம்புகளிலே நின்று பசுமை போர்த்த அந்தக் குன்றுகளின் அழகை அள்ளிப் பருகுவேன். நேரம் போவது தெரியாமல் நினைவிழந்து நிற்பேன்.
ஒரு நாள் நான் தங்கி இருந்த பங்களாவை விட்டுக் கிளம்பி வெளியே எங்கெல்லாமோ போனேன். போய்க்கொண்டே இருந்தேன். கடைசியில் ஒரு அருவி கரையில் வந்து நின்றேன். அந்த அருவியைப் பிடித்துக் கொண்டு இன்னும் மேலே போகப் போக, காடு அடர்ந்து இருண்டு கொண்டே போயிற்று. அந்த இருளில் தான் என்ன பயங்கரம், எவ்வளவு இனிமை.
அங்கே சுற்றிலும் நின்ற சரக்கொன்றை முதலிய காட்டு மரங்கள், மலர்களைக் கொத்துக் கொத்தாகக் கோர்த்து வைத்துக் கொண்டு நின்றன. ஏதோ மணவிழா நடக்கவிருக்கும் மனப்பந்தலைப் போல் காட்சி அளித்தது அந்த இடம். மணப்பெண் வரவேண்டியது தான் பாக்கி.
திடீரென்று பின்புறமாக புதருக்குள்ளே சரசரவென்று சப்தம் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன் ஒன்றையும் காணோம் என்றாலும் நான் வைத்திருந்த துப்பாக்கியை இறுகப் பற்றியது கை.
அப்பொழுதுதான் எனக்கு ஞாபகம் வந்தது பங்களா காவற்காரன் ‘அந்த அருவிக்கரைப் பக்கத்தில் ஒரு புலி திரிகிறது அங்கு போக வேண்டாம்’ என்று எச்சரித்து இருந்தான்.
சப்தம் வந்த புதரை நோக்கி துப்பாக்கியைக் குறி வைத்தேன். துப்பாக்கியின் குதிரை மீதும் விரலை வைத்து அழுத்தப் போனேன். அப்பொழுதுதான் எதிர்பாராத சம்பவம் நடந்து விட்டது. அந்தப் புதரை விலக்கிக் கொண்டு பயங்கரமான புலி எதுவும் அல்ல, அழகே உருவான இளம் பெண் ஒருத்தி வெளிப்பட்டாள்.
வந்தவள் வாயை மூடிக் கொண்டா வந்தாள்! கடகடவென்று சிரித்துக் கொண்டே வந்தாள். “ஏன்? என்னை புலி என்று நினைத்து விட்டாயா? என்னையே சுடு, தைரியமாய்ச்சுடு” என்ற மாதிரி ஏதோ ஒரு பாஷையில் பேசிக் கொண்டே வந்தாள்.
நான் அயர்ந்து போனேன். பக்கத்தில் இருந்த பாறை ஒன்றின் மேல் போய் உட்கார்ந்தேன். நான் எதிர்பார்க்கவே இல்லை, அந்தப் பெண்ணும் என் அருகில், என் காலடியில் வெகு உரிமையுடனும், நீண்ட நாள் பழகியவள் போலவும், வந்து உட்கார்ந்து கொண்டாள். அப்படி அவள் என் அருகிலே உட்கார்ந்ததை நான் ஆட்சேபிக்கவில்லை. காரணம், அவளை நான் வெறுக்கவில்லை. உண்மையில் அவள் அருகில் இருப்பதை என் மனம் விரும்பிற்று என்று தான் சொல்ல வேண்டும்.
“நீ எங்கிருந்து வந்தாய்” என்றேன் சிரித்தாள். “உன் வீடு எங்கே?” என்றேன் அதற்கும் சிரித்தாள். “உன் பெயர் என்ன?” என்றேன், ஏதோ சொல்லிவிட்டு சிரித்தாள். அவள் சொன்னது மோகினி என்ற மாதிரி காதில் பட்டது.
சிரிப்பதை நிறுத்திவிட்டு அவள் என்னையே கூர்ந்து கவனித்தாள். நானும் அவளையே பார்த்தேன். “மோகினி” என்று அவளுக்கு நான் இட்ட பெயர் மிக மிகப் பொருத்தமாகத் தோன்றியது.
வளர்ந்து கிடந்த குழல் கற்றையை அசிரத்தையயுடனும், அலட்சியமாகவும் அள்ளிச் செருகியிருந்தாள். அந்த முடிச்சிக்குத் தப்பிய முன் மயிர்கள் சில, அவள் கண்களிலே கொஞ்சி விளையாடின. கபடமற்ற உள்ளம் என்பதை எடுத்துக்காட்டும் களங்கமற்ற முகம். அவள் கண்களிலே தான் என்ன மருட்சி! பருவம் அவள் அவயங்கள் ஒவ்வொன்றிலும் தன் முத்திரையைப் பதித்திருந்தது. அவள் அணிந்திருந்த அந்தச் சாதாரண ஆடைக்குள்ளே அடைபடாமல் அவள் அழகும், இளமையின் பூரிப்பும், பொங்கி வழிந்து கொண்டிருந்தன. பொதுவாக அந்த இடத்திலே ஒரு வனதேவதையோ, மனமோகினியோ போல் விளங்கினாள் அவள்.
இப்படி இந்தக் காட்டிலே வளரும் பெண்ணுக்கு எப்படித்தான் இவ்வளவு அழகு அமைந்தது என்று எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. சற்று முன்பெல்லாம் மரகத போர்வை போத்திய அந்த மலையின் அழகைப் பார்த்துப் பார்த்து ரசித்தேன். அருவியை ரசித்தேன், அருகில் நின்ற மலர் நிறைந்த மரங்களைக் கண்டு ரசித்தேன். அவைகள் எல்லாம் அப்பொழுது என் கண்களுக்கு கவர்ச்சியற்ற, ஜடப்பொருளாகவே தென்பட்டன, அந்தப் பொருட்கள் யாவும் தங்கள் அழகை எல்லாம் திரட்டி இந்த மோகினியிடம் ஒப்படைத்து விட்டனவோ!
எங்கள் இருவருக்கும் இடையிலே பாஷை இல்லை. அவள் ஏதேதோ பேசினாள். என் காதுகள் அவள் பேசியதைக் கேட்கவில்லை. ஆனால், என் கண்கள் அவளை விட்டு அகல மறுத்துவிட்டன.
எத்தனை நேரம் இப்படி இருந்தோமோ தெரியாது. எங்கும் இருள் சூழ்ந்து விட்டது. “இங்கு புலி சிறுத்தை முதலிய துஷ்ட மிருகங்கள் வரக்கூடும். இங்கிருந்து போய் விடுவோம்” என்ற மாதிரி ஏதோ சொன்னாள். அந்த இடத்தை விட்டு கிளம்பினேன். அவளும் என்னைப் பின்தொடர்ந்தாள். சற்று தூரம் சென்ற பிறகு அங்கு சில குடிசைகள் தென்பட்டன. அங்கேதான் அவள் வீடு இருப்பதாக கூறினாள். “நான் அங்கே வரலாமா” என்று கேட்டேன் “கூடாது” என்று மறுத்துவிட்டாள். பின்னும் என்னைத் தொடர்ந்து பங்களா அருகில் என்னைக் கொண்டு வந்து விட்டுவிட்டு இருளில் ஓடி மறைந்து விட்டாள்.
பங்களாவிற்குள் நான் போனதும் அவள் காட்டிய அந்தக் குடிசையில் வாழுபவர்கள் தேன் குறும்பர்கள் என்ற மலை ஜாதியர் என்பதை முதலில் தெரிந்து கொண்டேன். என் மனது அன்று நடந்த சம்பவங்களை அசைபோட ஆரம்பித்தது.
எனக்கே ஆச்சர்யம்! மிகவும் வெட்கமாகவும் கூட இருந்தது. என்னுடைய மனம் எப்படி இந்தக் காட்டுமிராண்டிப் பெண்ணிடம் இவ்வளவு சீக்கிரம் ஓடிவிட்டது என்பது எனக்கே புரியவில்லை அப்படி அவளிடம் என்ன அழகைக் கண்டேன்! எத்தகைய அழகுதான் அவளிடம் இல்லை? உலகத்தின் நாகரிகத்தின் உச்சியிலே நிற்கும் அழகியிடம் கூட, இவளிடமுள்ள இத்தகைய கவர்ச்சி இருப்பதாக எனக்கு படவில்லையே!
“சார் தபால்” என்று சமையல்காரப் பையன் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். ஆகாயத்தில் பறந்த என் சிந்தனைச் சுடர் சடக்கென கீழே இறங்கியது.
என் மனைவி கடிதம் எழுதியிருந்தாள் “அங்கே மலை மீது குளிர் அதிகமாக இருக்கும் ஸ்வெட்டர் போடாமல் வெளியே போகாதீர்கள். உடம்பை ஜாக்கிரதையாக கவனித்துக் கொள்ளுங்கள். இன்னும் ஒரு விஷயம் தன்னை மறந்து எங்கேயாவது தனிமையில் நெடுந்தூரம் போய் விடாதீர்கள். நீங்கள் இருக்கும் இடத்திற்கே புலிமலை என்று பெயர் இருக்கிறது. புலி முதலிய துஷ்டமிருகங்கள் இருக்கப் போகின்றன ஜாக்கிரதை” என்று எழுதி இருந்தாள், எச்சரித்தாள்.
புலியிடம் அகப்பட்டுக் கொள்வேனோ என்று என் மனைவி பயந்து எழுதியிருக்கிறாள். ஆனால் நான் இப்படி ஒரு பெண் புலியின் பிடியில் சிக்கிக் கொண்டேன் என்பதை என் பேதை மனைவி அறிவாளா! என் மோகினியை பெண் புலி என்றா சொன்னேன்? இல்லை அவள் பெண் மான். அதுவும் இல்லை அவள் மயில். இது என்ன அவளை மிருகங்களோடும், பறவைகளோடும் ஒப்பிடுகிறேன்! அவள், அவள்தான், என் மோகினிக்குச் சமம் மோகினியேதான்.
சமையல்காரப் பையன் யாரிடமோ என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான். என் காதிலும் அது விழுந்தது.
அம்மாவிடமிருந்து கடிதம் வந்திருக்கிறாப் போலிருக்கிறது. அதிலிருந்து ஐயா, அம்மா ஞாபகமாகவே உட்கார்ந்திருக்கிறார். இன்று சரியாகவே சாப்பிடவில்லை என்றான்.
அவன் சொன்னது என்னவோ உண்மைதான். ஆனால் அவன், நான் எந்த அம்மாள் ஞாபகத்தில் இருக்கிறேன் என்று என்ன கண்டான்.
படுக்கையில் படுத்தேன். என் கண் இமைகள் மூடிய உடனே மோகினி என் முன் வந்து களி நடனம் புரிந்தாள்.
இரவெல்லாம் என்னென்னவோ கனவுகள் காட்டுக்குள்ளே எங்கேயோ போகிறேன். புலி ஒன்று பாய்ந்து வந்தது. துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினேன். கீழே விழுந்த புலியை அருகில் போய்ப் பார்த்தேன் அது புலி அல்ல, என் மோகினி. பதைபதைத்துத் தூக்கப் போனேன். கலகலவென்று சிரித்துக்கொண்டே எழுந்தாள். நான் ஆச்சரியத்துடன் நின்று கொண்டிருக்கும் பொழுதே அவளே என் கையைப் பற்றினாள் அங்கிருந்து எங்கெல்லாமோ போனோம்.
மனம் கமழும் நறுமலர்களைச் சுமந்து நின்ற இன்பத் தருக்களிடையே அமைந்த சுந்தரத் தடாகத்திலே தங்கத் தோணியிலே ஏறி விளையாடினோம். வட்ட மதியிலே அமர்ந்து வானக்கடலிலே வளைய வளைய வந்தோம், காலை விடியும் வரை கைகோர்த்துச் சுற்றி வந்தோம்.
காலைக் காப்பியுடன் சமையல்கார பையன் என்னை எழுப்பினான். “என்ன சார், இப்படி முகம் வெளுத்துப் போய்விட்டது” என்று கேட்டான்.
நேற்று இரவு வெளியிலே உலவப் போனபொழுது என்னை ஒரு பிசாசு பிடித்துக் கொண்டது என்றேன்.
“ஆமாம் சார்! இந்த மலையிலே அந்தப் பக்கம் பிசாசுகள் அதிகம்” என்று பயம் கலந்த குரலில் பேசினான் பையன். ஒருவேளை நேற்று நான் பார்த்ததும் கூட ஒரு பிசாசுதானோ!
அன்று என் மனம் எதிலுமே பதியவில்லை. மாலைப் பொழுது எப்பொழுது வரும் என்று காத்துக் கிடந்தேன். இரண்டாம் வேளைக்கு வெங்காய வடை செய்து கொண்டு வந்து வைத்தான் சமையல்கார பையன். காப்பியை மட்டும் குடித்தேன். வடையை கட்டிக் கொடுக்கும் படி சொன்னேன்.
“யாருக்கு சார் வடை” என்றான் பையன்.
“காட்டிலே ஒரு புலி இருக்கிறது அதற்குக் கொடுக்க” என்றேன்.
“புலி கூட வெங்காய வடை சாப்பிடுகிறதா!” என்றான்.
“இல்லையப்பா வெங்காய வடையைக் கண்டவுடன் அந்த புலி பயந்து ஓடி விடாதா? அதற்குத்தான்” என்றேன்.
சீக்கிரமே அந்த அருவிக் கரையை அடைந்தேன். என் மோகினி என்னைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தாள். நான் வருவதைத் தெரிந்து கொண்டு வேறு பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.
நான் அருகில் போய் “கோபமா” என்று கேட்டேன்.
“ஆமாம்” என்று தலையை ஆட்டினாள். அவளாலே அடக்க முடியவில்லை. சிரித்து விட்டாள்.
நான் வைத்திருந்த வெங்காய வடையை அவளிடம் கொடுத்தேன். அவளும் ஏதோ தொன்னையில் வைத்து நீட்டினாள். வாங்கிப் பார்த்தேன் நல்ல சுத்தமான குடகுத்தேன். மிக மிகச் சுவையாக இருந்தது காரணம் அவள் கைபட்டதாலோ என்னவோ.
வடையைத் தேனில் தோயத்து அவளிடம் நீட்டினேன். என்னை முதலில் சாப்பிடும்படி கெஞ்சினாள் தேன் துவைத்த வடையில் ஒரு பகுதியைக் கடித்தேன். மீதி இருந்ததை வெடுக்கென்று பறித்து போட்டுக் கொண்டாள். பிறகு கையை கழுவி விட்டு வந்து என் அருகில் இன்னும் நெருங்கி உட்கார்ந்தாள்.
முன் தினத்தை விட அவள் உடைகளிலே சற்று அலங்காரங்கள் அதிகமாக காணப்பட்டன. கழுத்திலே சில சங்கு மாலைகள் தொங்கின. தலையிலே செண்பக மலரைச் சூடி இருந்தாள். அதன் மென்மையான மனம் ஒரு வெறியை இன்னதென்று விவரிக்க இயலாத இன்ப போதையை எழுப்பிக் கொண்டிருந்தது.
அவள் முகத்தைப் பார்த்தேன் நேற்றுதான் பார்த்துப் பழகிய புதிய முகமாகவே தென்படவில்லை. எனக்கு அறிவு தெரிந்த நாள் முதலாக அவள் என்னுடனே இணைபிரியாதிருந்திருக்கிறாள். எனக்குத் துன்பம் நேர்ந்த போதெல்லாம் என் இதய யாழியில் இன்னிசையை எழுப்பியவள் அவள் தான். என் வாழ்க்கைப் பாதையில் இருள் கவிந்த போதெல்லாம் அந்த இருளகற்றிய இன்ப ஜோதியும் அவள்தான். எனக்கு அவள் புதியவளே இல்லை என்றும் மாறாத என் அன்பிற்குரியவள் அவளே தான்.
எங்களுக்கிடையிலே பேசிக்கொள்ள எதுவும் பாஷை இல்லை என்றா சொன்னேன். இல்லை இப்பொழுது ஒரு பாஷை ஏற்பட்டு விட்டது. ஆனால், அதில் பேச்சு இல்லை, வார்த்தைகள் இல்லை, பேசாத பேச்சு. வாய் பேசவில்லை, ஆனால் அவள் கண்கள் பேசின. நாவு அசையவில்லை, ஆனால் அவள் புருவங்கள் அசைந்தன. அந்த மௌன பாஷையிலே எழுத்தாலும் எழுதிக் காட்ட முடியாத சொல்லாலும் சொல்லிட முடியாத எல்லா விஷயங்களையும் சொல்லித் தீர்த்து விட்டாள்
அந்த இடத்தை விட்டுக் கிளம்பினோம். இன்றும் அழகான இடங்களுக்கு எல்லாம் என்னை அழைத்துச் சென்றாள். மலைமுகட்டின் மேலே ஓரிடத்தில் நின்று பார்த்தேன். கீழே அதல பாதாளமான காட்சி இன்னும் நன்றாகப் பார்க்க, பாறையின் ஓரமாக நகர்ந்தேன். என் பின்னால் நின்ற மோகினி சட்டென்று என் கையைப் பற்றி என்னை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.
“இந்தப் பள்ளத்திலே விழுந்தால் என்ன ஆவது” என்று என்னை கோபமாகப் பார்த்தாள். இவள் யார்? என் உயிரின் மீது இவளுக்கு ஏன் இத்தகைய அக்கறை. அடி பேதைப் பெண்ணே!
இப்படி எல்லாம் இவள் என்னிடம் காட்டும் இந்த அன்பிற்கு என்ன பெயரிட்டு அழைப்பது அன்பா, மரியாதையா, பக்தியா, இல்லை கா…த…ல்தானா! எதுவாய் இருந்தாலும் நான் அதற்கு அருகதையற்றவன் என்று மனம் வேதனை அடைந்தது.
இப்படி எத்தனையோ நாள், எத்தனையோ தடவை மீண்டும் அந்த அறிவிக்கரையிலே இருவரும் சந்தித்தோம். பேசினோம். இந்த இன்பம் என்றென்றைக்கும் நீடித்துவிடக்கூடாதா! என்றெல்லாம் இன்பக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்தேன்.
தந்தி வந்தது “உடனே சென்னைக்குப் புறப்பட்டு வரவும்” என்று. என் பிரம்மை கலைந்தது. என் நிலைமையையும் அப்புறம்தான் உணர ஆரம்பித்தேன். புறப்பட்டுத்தான் போக வேண்டுமா அப்படியானால் என் மோகினி என்ன ஆவது?
அன்று மோகினியைச் சந்தித்தேன். என் முக வாட்டத்தைத் தெரிந்து கொண்டு ஆயிரம் கேள்விகள் கேட்டுத் துளைத்தாள். கடைசியில் நான் போகப் போகிறேன் என்பதையும் சொல்லிவிட்டேன்.
அன்றுதான் முதல் தடவையாக அளவு கடந்த சோகத்தின் நிழல் அவள் முகத்திலே இருண்டு படிந்ததைப் பார்த்தேன். “போகத்தான் போகிறாயா” என்ற மாதிரி ஆச்சரியமும் ஆதங்கமும் நிறைந்த குரலில் கேட்டாள். அந்த கேள்வியில் “மோசம் செய்ய மாட்டாய் என்று உன்னை நம்பினேனே! அட வஞ்சகனே!” என்ற வார்த்தைகளும் சேர்ந்து இருப்பதைப் போல எனக்குப்பட்டது.
என் பக்கத்திலே கிடந்த துப்பாக்கியை எடுத்தாள். என் கையிலே அதைக் கொடுத்து அவளைச் சுட்டு விடும்படி மன்றாடினாள். நான் மௌனமாய் மரமாய் உட்கார்ந்திருந்தேன்
என் மடிமேல் விழுந்து ஆறாக, வெள்ளமாகக் கண்ணீரை வடித்தாள். வெகு நேரம் அசைவற்றுக் கிடந்தாள்.
சற்று நேரம் கழித்து என் மடியிலே கிடந்தவள் எழுந்து உட்கார்ந்தாள். இப்பொழுது அவள் முகத்தைப் பார்த்தேன். கவலை இல்லை, கண்ணீர் இல்லை, ஏதோ ஒரு திட்டமான முடிவுக்கு வந்தவள் போல் தோன்றினாள். “நீ போகத்தான் வேண்டுமா” என்று மீண்டும் கேட்டாள், அவள் முகத்திலே அளவுகடந்த கோபக்குறி இருந்தது. அவள் இப்பொழுது என் மனதைக் கவர்ந்த மோகினியாகவே என் கண்களுக்குத் தென்படவில்லை. பெண் புலி ஒன்று என் எதிரே நின்று சீறுவது போல் தோன்றியது.
திடீரென்று ஒரு பயங்கர உறுமல் சத்தம் என் பின்புறமாக கேட்டது. திரும்பிப் பார்த்தேன். புதருக்குப் பக்கத்திலே புலி ஒன்று நிஜப்புலியேதான் நின்றது. வாலை சுழற்றிக்கொண்டு, கண்ணிலே நெருப்பை உமிழ்ந்தபடி நின்றது. என் மீது பாயத் தயாராகி விட்டது. நான் அவசரமாகத் துப்பாக்கியை எடுத்தேன். சுடுவதற்குள் புலி என்மீது பாய்ந்து விட்டது.
புலியினுடைய ஒரு அறையில் நான் கீழே விழுந்திருப்பேன். ஆனால் அப்பொழுதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்து விட்டது. எனக்குப் பின்னால் நின்ற மோகினி என்னைப் புலியினின்றும் காப்பாற்ற வீல் என்ற அலறலுடன் எனக்கும் புலிக்கும் இடையிலே வந்து விழுந்தாள். புலியினுடைய பாய்ச்சலில் மோகினி அகப்பட்டு கொண்டாள்.
இப்பொழுது சுடுவதற்கு எனக்கு அவகாசம் கிடைத்து விட்டது. புலியையும், மோகினியையும் பிரித்துப் பார்க்க முடியாமல் சுடுவதற்குச் சற்று தயங்கினேன். பின் மனதைத் திடப்படுத்திக் கொண்டு சுட்டேன். ஒன்று, இரண்டு முறைகள், புலி செத்து கீழே விழுந்தது. மோகினியும் விழுந்தாள் ஓடிப்போய் அவளைத் தூக்கினேன். அவள் உடம்பிலிருந்தும் உதிரம் கொட்டிக் கொண்டிருந்தது. எனது துப்பாக்கிக் குண்டு தான் அவள் உடம்பிலேயும் பாய்ந்து விட்டது.
அவள் என் மீது காட்டிய அன்பிற்கும் அளவு கடந்த பிரேமைக்கும் நான் அளித்த பரிசு அதுதானா? ஆம்! அவள் எனக்குரியவள். அவளை நான் அடைய முடியவில்லை என்றால் யாரும் அவளை அடையக்கூடாது. அதற்காக என் கையாலே சுட்டேன், கொன்றேன். இப்படியெல்லாம் என் வெறி கொண்டுவிட்ட மனதிலே எண்ணங்கள் ஓடித் திரும்பின.
சற்று நேரத்திலே சிரிப்பு அடங்கியது, அவள் உடம்பிலேயிருந்து உயிர் அணுவாகப் பிரிந்து கொண்டிருந்தது. என் நெஞ்சத்தைக் கல்லாக்கிக் கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தேன் நான்.
மண்வெட்டி கொண்டு வந்து ஆழமாகக் குழி தோண்டினேன். அதிலே இறந்து கிடந்த புலியைத் தூக்கிப் போட்டேன். அந்த மெத்தென்ற படுக்கையிலே மோகினியைப் படுக்க வைத்தேன். மண்ணைத் தள்ளினேன். அவளுக்கும் எனக்கும் பிடித்தமான செண்பகமலரை மேலே தூவினேன். அந்தச் சமாதி மீது நான் எழுதிய வார்த்தை “பெண் புலி”.
பெண்புலி -ஆடியோ வடிவில்- செண்பக சோலையின் ஓசை சித்திரம். செவி கொடுங்கள்- மனதை நிறைப்போம்