Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு குலக்கதை -இணைய நூல் விமர்சனம்

வகைகள் : களஞ்சியம்/ விமர்சனங்கள்

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


களஞ்சியம்

குலக்கதை -இணைய நூல் விமர்சனம்

 

நந்தினி சுகுமாரனின் குலக்கதை - இணைய நூல் விமர்சனம் 

 குலக்கதை 

இரண்டு பாகங்களாக இணையத்தில் எழுதப்பட்ட நூல்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில்  உற்பத்தியாகும், பல ஓடைகளும், சிற்றாறுகளும்,  காட்டாறுகளும் ஒன்று  சேர்ந்து வைகையாய்  உருப் பெற்று , வேகவதியாய் ஓடி, கண்மாயில் கலந்து நிற்கும்.

அதுபோலத் தான்,நந்தினி சுகுமாரனின் எழுத்தும், இந்த கதையும். தமிழ் மண்ணில் வேரூன்றிக் கிடக்கும் , குலதெய்வம், இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் வீட்டுத் தெய்வம் பற்றிய கதை  இந்த குலக்கதை. 

முற்பகுதியில், கதை ,காட்டாற்று வெள்ளமாக மஞ்சளாடைகாரி, சித்திரகலா பூங்கோதை, ஆகியனவாக  பிரவாகித்து, அங்கங்கே சில சம்பவங்கள் கோர்க்கப்பட்டு, பாலாம்பிகை,கிருஷ்ணம்மாள்,ராஜநாயகி, மரிக்கொழுந்து, செந்தில்நாதன், கரிகாலன், சங்கீதா கதாபாத்திரங்கள் வந்தபின், தெளிந்த நீரோடையாக வேகமெடுத்துப் பாய்கிறது.

குலகதையின் தெய்வங்கள் வாசகர் மனதில் குடிகொண்டு விடுகிறது. இனி மஞ்சள் உருண்டையை பார்க்கும்போதும், காமாட்சி விளக்கின் சுடரிலும் இந்த தெய்வங்கள் நம் நினைவில் வந்து போவார்கள்.

நம்மைப் போல் பிறந்த ஆன்மாக்கள், ஊருக்காக,தனது குலத்துக்காகத் தன்னையே பலி கொடுத்து , நோய்,நொடி , அடக்குமுறை ,இயற்கை பேரழிவுகளிலிருந்து  நம்மைக் காத்து மேல்நிலை அடைந்திருக்கும் . அந்த ஆன்மாவை வழிபட ஆரம்பித்து இருப்பர். சில தலைமுறை தாண்டும் போது, மனிதருள் ஏற்படும் குண இயல்பு மாறுபாடுகள், வழிபாட்டிலும் பிரதிபலித்து இருக்கும்.இவை  நன்மை தீமை இரண்டையும் கூட்டித் தரும். 

குழந்தையும்,தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பர். இங்குத் தெய்வமே குழந்தைதான்.கன்னிகை,கன்னியம்மாள் என்ற மஞ்சளாடைக்காரி.  அவளைத் தெய்வமாய் அடைந்து, அதன் அருமை தெரியாமல் தொலைத்து, கஷ்டங்களை அனுபவித்து, எத்தை தின்றால் பித்தம்தெளியும் என விடை அறியாது  நிற்கும் குலம், ஆற்றில் நீரோடு கரைந்த மஞ்சளாடைக்காரியை, அணைத்து , அரவணைத்து வழிபடும் மற்றொரு குலம். தாத்தாவாக எல்லை சாமியை உருவகப்படுத்தி, அவரை பெட்டியிலிருந்து கோவிலில் நிறுவும் குலம். 

இப்படியான மூன்று குலங்களின் தெய்வங்களையும், மனிதரையும் நிகழ்வுகளையும் ,முற்பிறப்பு, இப்பிறப்பு என அழகாக வடிவமைத்து, இதற்கு இது காரணமென அழகான பூமாலையாக, அதிரல் ,மருதம், கோர்த்துக் கொடுக்கப்பட்ட அருமையான புனைவு.

பலநூற்றாண்டுகள் கடந்து எப்படி மீண்டும் ஒன்றுகூடி வழிபடுகின்றனர், என்பதை சொல்லும் கதை.

மனித இயல்புகளை, படாடோபம் இல்லாமல், இயல்பாக எழுத்தாக்க இந்த ஆசிரியரால் மட்டுமே முடியும். நக்கல்,நய்யாண்டியோடு இயல்பான நடை.

சித்திரகலா, பூங்கோதை என முற்பிறப்பு கதை வருமிடங்களில் நற்றிணை, குறுந்தொகை என சங்க கால பாடல்கள் கதைக்கு பொருத்தமாய் அமைந்து, ஆசிரியரின் விளக்கங்களோடு கதைக்கு மெருகூட்டுகிறது.

முதல் பாகத்தையும்,இரண்டாம் பாகத்தையும் அழகாக வடிவமைத்து, சம்பவங்களில் இடைவெளி விட்டு, எதிர்பார்ப்பை தூண்டி, மீண்டும் சரியாக நிரப்பி, ஆரம்பம்,முடிவு  கதையை முடித்த விதமும் அருமை.

அகமும்,புறமும் , பக்தியும்,காதலும் முற்பிறப்பு,இப்பிறப்பும் சேர்ந்த அருமையான புனைவு. கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய கதை. 

இப்படி ஒரு கதை எழுதப்படும்போது ,அதில் உள்ள சவால்கள் எத்தனை , எல்லாம் சரியாக கொடுக்கவேண்டும் என்ற தவிப்பு எப்படியிருக்கும், என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. கதையை நிறைவாய் முடித்தமைக்கும் வாழ்த்துக்கள் நந்தினி சுகுமாரன்.

உங்கள் எழுத்து பயணத்தில் மற்றொமொரு மகுடம் சூடும் படைப்பு இந்த குலக்கதை. மேலும் நல்ல பல கதைகள்  படைக்க வாழ்த்துக்கள்.

இருவாச்சி தளத்தில், இணையத்தில் வரும் நல்ல கதைகளை அடையாளப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு பகுதியை வைத்துளோம். அதில் முதல்  விமர்சனமாக குலக்கதை அமைந்ததில் மகிழ்ச்சி.

தீபா செண்பகம் 

2 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!