Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு கடவுளைப் புரிந்தவர் வாழ்வது சுலபமா..!?

வகைகள் : கட்டுரைகள்/ பொது

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


கட்டுரைகள்

கடவுளைப் புரிந்தவர் வாழ்வது சுலபமா..!?

கடவுள் தன்மையைப் புரிந்து கொண்டால் வாழ்வது சுலபமா !?


உயிரைக் காப்பாற்றுகிற மருத்துவரே தன்னால் முடிந்தவரை முயற்சி செய்த பிறகு நம் கையில் ஆவது ஒன்றுமில்லை இனி எல்லாம் அவன் செயல் என்று மேலே கையுயர்த்தி காண்பித்து விட்டு செல்லும் சூழலை நம்மில் பலர் சந்தித்திருக்கிறோம். அதன் பின்னர் நல்லது நடந்து விடுகையில் அது மனித செயல்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு விசயமாக பார்ப்பதையும் ஓரிரு நிகழ்வுகள் நினைவுறுத்துகின்றன. இதனைப் பொதுமைப்படுத்தி நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்றும் அதனைத் தொழுதால் முடியாத விசயங்களும் முடித்துக் காட்டப்படும் என்றும் ஒரு செய்தி ஆழமாக மக்கள் மனதில் வேரூன்றச் செய்யப்பட்டு விட்டது. நிகழ்தகவில் அரிதான விசயங்களை இவ்வாறு பொதுமைப்படுத்தி விடுவதால் உண்டாகும் நம்பிக்கை பெரும்பாலான சமையங்களில் பொய்த்துப் போகும்போது மக்களுக்கு தங்களது புரிதலில் மாற்றம் தேவை என்பதை விட தம் மீதே காழ்ப்பும் வாழ்வின் மேல் அவநம்பிக்கையும் தோன்றி விடுகிறது. இதற்கு காரணம், நடைமுறை வாழ்வு குறித்தான புரிதலை மக்கள் அடையாமல் அல்லது அது மக்களை அடைய விடாமல் வெறும் நம்பிக்கையின் பேரில் வாழ்க்கையை நகர்த்த வைப்பதின் விளைவாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அப்படியானால் நம்பிக்கையே கூடாது என்கிறீர்களா என்ற கேள்வி உடனே எழுகிறது. நாம் வாழும் இந்த வாழ்வு அறிவியல் முறைப்படி சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது நடைபெறுகிற எந்தவொரு மனித செயல்பாடும் அறிவியலுக்கு புறம்பானதாகவோ அல்லது அறிவியலுக்கு சம்பந்தமில்லாததாகவோ இருப்பதில்லை. மேலும் சமீப கால மனித வளர்ச்சி யாவும் அறிவியல் தந்த கொடையே (தீமைகளும் உண்டென்று மறுக்க முடியாத போதும்). இதில் புதிதாக ஏற்படுகிற அதீத நம்பிக்கை என்று எது வந்து சேர்ந்து கொண்டாலும் அதையும் ஆராய்ச்சி செய்து அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து முயற்சிகளும் இங்கே முன்பை விடத் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதெல்லாம் புரிகிறது சரி ஆனால் மிகச் சரியாக எங்கிருந்து பிரச்சினை தொடங்குகிறது என்பதுதான் புரியவில்லை என்கிறீர்களா. அப்படியானால் மீண்டும் வாழ்க்கை குறித்து கொஞ்சம் விளக்கம் சொல்லிவிட்டு ஆரம்பிக்க வேண்டியதுதான்.

தர்க்கம் தத்துவத்தின் படி இந்த மனித வாழ்வென்பது பதில்களைத் தேடிக் கொண்டிருக்கிற கேள்விகளால் ஆனது. ஆன்மீக விளக்கங்களின் படி வாழ்க்கை என்பது ஒரு மாயை. அறிவியலின் படி இந்த வாழ்வென்பது உடலில் உயிர் உள்ளவரை என்பதாக புரிய வைக்கப்பட்டிருக்கிறது. இவைகளைத் தாண்டிய விளக்கங்களும் சாத்தியமானது தான் என்றாலும் இப்போதைக்கு பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொண்டவை என்ற வகையில் இந்த விளக்கங்கள் உண்மைக்கு அருகில் இருப்பதாக கொள்ளலாம். ஆனால் இங்கு முக்கியமாக நமது நாட்டில் ஆன்மீகப் புரிதல் என்பது மதநம்பிக்கை அல்லது கடவுள் நம்பிக்கை என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. அதனால் தான் கடவுள் இருக்கிறார் இல்லை என்ற தர்க்கம் தொடர்ந்து நீடிக்கிறது. அந்த நம்பிக்கை வழியாக செய்யப்படுகிற அனைத்து வித மோசடிகளையும் அறிவுடையோர் புரிந்து வைத்துள்ளார்கள் என்பதே சற்றே ஆறுதலான விசயம். சரி நாம் நம் விசயத்திற்கு வருவோம். ஆக தன்னை உணர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கை ஒரு மாயை என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்பதான ஆன்மீகப் புரிதல் தான் தர்க்க அறிவு சார்ந்த உயர்ந்த சிந்தனையாக இங்கே பார்க்கப்படுகிறது. ஏன் அப்படி என்றால், ஆன்மீக விளக்கங்களின் படி எதுவுமில்லாததிலிருந்தே இங்கு அனைத்தும் தோன்றுவதாலும் தன்னை உணரும் அந்த நிலை அப்படியான எதுவுமற்ற நிலையே என்பதாலும் அந்த நிலையில் இருந்து செய்யப்படும் எந்த ஒரு செயலும் இந்த உலகம் முழுமை பெற்று உண்டானதைப் போல முழுமையானதாகவே இருக்கும் என்று சர்வ நிச்சயமாக நம்பப்படுகிறது. அதனால் தான் உலகம் முழுக்க மேன்மையான அறிவு பெற்றவர்கள் என்று சொல்லப்படுகிற அனைவரும் இந்த நிலையை அடைவதையே வாழ்வின் இலக்காக கொண்டு செயல்படுகிறார்கள். இதை சிந்தனையை மேம்படுத்த அறிவியல் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன என்பது கூடுதல் தகவல். சரி சரி இன்னும் விசயத்திற்கு வரவில்லை என்று தானே சொல்கிறீர்கள். இதோ அதையும் சொல்லி விடுவோம். 

ஆக தன்னை உணர்ந்து கொண்ட நிலையாக சொல்லப்படுகிற அந்த கடவுள் தன்மையைப் புரிந்து கொண்டால் என்ன நன்மை ஏற்பட்டு விடும் !?. ஏன் அதனை இத்தனை சிலாகிக்கிறார்கள் !?. உண்மையில் அதை அடைவது தான் வாழ்வின் சிறந்த செயலா அப்படியான அந்த நிலையை சுலபமாக அடைந்து விட முடியுமா எல்லோருக்கும் அது சாத்தியமா போன்ற கேள்விகள் பல இருக்கின்றன. இவைகளையெல்லாம் கடந்து தான் நமது கேள்விக்கு நாம் விடை காண வேண்டும். காலங்காலமாக தொடர்ந்து கடுமையான முயற்சி செய்து தியானம் செய்து அடையக் கூடிய ஒரு விசயமாகவே இதைப் பார்ப்பதும் அது இந்த மானுடத்திற்கு ஒரு எட்டாக்கனி என்பது போல் தொடர்ந்து காட்டப்பட்டு வந்தது உண்மையே. காரணம், பொதுவாக பெரும்பாலான மக்களுக்கு அறிவு சென்று சேர்ந்திராத நிலையில் அப்போது வளர்ச்சியடைந்திருந்த அந்த அறிவுக்கு எட்டியதைச் சொன்னவர்கள் சொன்னதையே, அவர்களை விட பலமடங்கு பொதுவெளியில் பெரும்பாலான மக்கள் தமது அறிவில் வளர்ந்தவர்களாக இருக்கிற இந்த காலத்திலும் சொல்வதால், அது ஏதோ பெரும் முயற்சி செய்து அடைய வேண்டிய நிலை என்ற தேவையில்லாத கருத்தாக்கம் ஏற்பட்டு நிலைபெற்று விட்டது. உண்மையில் அன்று பேசப்பட்ட அந்த நிலையை விட இன்றைய மனிதர்களின் புரிதல் வெகுவாக உயர்ந்திருக்கிறது. அவர்கள் சொன்ன அந்த அறிவு தான் மிகச் சிறந்த அறிவு என்று புரிந்து கொண்டிருக்கிற இன்றைய மக்களுக்கு, அவர்களை விட பல மடங்கு உயரத்தில் இருக்கிற தமது இந்த அறிவு தான் அன்று அவர்கள் சொன்ன தன்னை அறிந்து கொள்ளும் ஆன்மீக நிலை அல்லது கடவுள் தன்மை என்பது புரியவில்லை அல்லது புரிந்து கொள்வதிலிருந்து ஏதோ ஒரு வகையில் தடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உறுதியாக சொல்லலாம். அறிவியலின் கூற்றுப்படி ஆழ்ந்த நுண்ணிய அறிவுதான் ஞானம் கைவரப்பெற்ற கவனம் நிறைந்த அந்த நிலை. ஆகவே இன்றைய கால மனிதன் ஏற்கனவே அந்த கவனம் குவிந்த ஞான நிலையில் தான் இருக்கிறான். அது ஏதோ அடைய முடியாத நிலை என்று சொல்லப்பட்டதால் அது இது தான் என்று அறிந்து கொள்ள முடியாத குழப்ப நிலையில் இருந்தான். இப்போது அது என்னவென்றத் தெளிவு கிடைத்து விட்டபடியால் நுண்ணிய அறிவாக இருக்கிற அந்த ஞான நிலை அல்லது கடவுள் தன்மையைப் புரிந்து கொண்டால் வாழ்க்கை இன்னும் சுலபமாகும் தானே நண்பர்களே.

நன்றியுடன் 

உங்கள் நண்பன் 
நடராஜன் பெருமாள்

1 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!