தொடர் : 1
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
3 .கன்னிமயில் கயல்விழி
பாலமேடு மேலத் தெருவில் உள்ள "வேல்" இல்லம். வடிவேல்,கனகம்மாள் என்ற தம்பதியர் சிறப்பாகப் பல காலம் குடும்பம் நடத்திய வீடு. பழைய கம்பீரத்தோடு ஒரு வீடும், அருகிலேயே கண்ணைப் பறிக்கும் பளீர் ஊதா, மஞ்சள் என வண்ணங்கள் பூசப்பட்ட புதிய அழகோடு ஒரு வீடும் என அண்ணன் தம்பிகளைப் போல் இரண்டு இருந்தது.
முந்தைய வீட்டில் அண்ணன் கந்தவேல் ,பிந்தைய வீட்டில் தம்பி குமரவேலும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சின்னசாமியின் மனைவி சிவகாமியின் உடன் பிறந்தவர்கள் . சிவகாமி தனது மகள் கலைச்செல்வியை, பதினெட்டு வயது ஆன உடனேயே தனது தம்பிக்கு மணமுடித்துக் கொடுத்து, கடமையை முடித்திருந்தார்.
கந்தவேலுக்கு, கயல்விழி, கனிமொழி என்ற இரண்டு பெண்மக்களும், குமரவேலுக்குப் பள்ளிச் செல்லும் இரண்டு மகன்களும் உண்டு. தாயார் கனகம்மாள் இவர்களோடு தான் வசிக்கிறார்.
வாய்க்கால் கரையிலிருந்து, மகள் கலைச்செல்வியும், மருமகள் கயல்விழியுமாகச் சின்னச்சாமியோடு பேசியபடியே வீடு வரை நடந்து வந்தனர்.
"மாமா, இந்த வருஷமும் எங்க வராமல் போயிடுவீகளோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். நீங்க வந்த ராசி, பூஎருவாட்டி சூடமும் நல்லா எரிஞ்சுக்கிட்டே போனது. என் வேண்டுதல் நிறைவேறின மாதிரி தான். எனக்கு ரொம்பச் சந்தோஷம்." எனக் கயல் தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்க
"உன் வாக்கே பொன்னாகட்டும்மத்தா. நான் நினைச்சு வந்த காரியம் ஜெயமாகட்டும். ஆமாம் அதென்ன நீ மட்டும் வந்திருக்க, உன் தங்கச்சி கனிமொழி எங்க, அது காணும் பொங்கல் வைக்கலையா?" என விசாரித்தார்.
"நல்லா கேட்டீங்க போங்கப்பா. கயல் ஒருத்தி வைக்கிறதுக்கே அத்தை புலம்பிக்கிட்டு இருக்கு. இரண்டு பேரும் பொங்கல் வச்சாலுங்கன்னா பெரிய மாமா ஒரு வழியா ஆகிடுவார்." என்றாள் கலைச் செல்வி .
"உமா கவலைப் படுறதில என்னத்தா தப்பு இருக்கு. உங்கம்மா உனக்குப் பதினெட்டு வயசு எப்ப ஆகுமுண்டு, பார்த்துக்கே இருந்து தன் தம்பிக்குக் கட்டிக் கொடுக்கலையா. ஒரே வீட்டில இரண்டு பொண்ணுங்களும் கல்யாண வயசில நிண்டா, பெத்தவளுக்குக் கவலை ரொம்பத் தான் இருக்கும். அதை நினைச்சு தான் சின்ன மருமகள் பொங்கல் வைக்கிறது இல்லையோ என்னமோ." எனக் கனிமொழியின் சாமர்த்தியத்தைப் புகழ்ந்தார்.
"மாமா, கனிக்கு இதுல எல்லாம் எப்பவுமே இன்ட்ரெஸ்ட்டும் இல்லை, நம்பிக்கையும் இல்லை. அவ வேற தினுசு. இந்தா குமாரப்பாவோட சேர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் போயிருக்கா பாருங்க." எனக் கயல் சொல்லவும், போராட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டே வீட்டை அடைந்தனர்
இவர்கள் வீட்டை அடையவும், கலைச்செல்வியின் மகன்கள், ஐந்தாம், மூன்றாம் வகுப்பு படிக்கும் சரவண வேல், செந்தில் வேல் இரண்டு வேல்களும் வந்து தாத்தாவைக் கட்டிக் கொண்டனர்.
"அடேய் வாங்கடா, வாங்கடா!!!" என்றவர் தனது டிவிஎஸ் பிப்டி வாகனத்திலிருந்து தின்பண்டங்களை எடுத்துப் பேரன்களுக்குக் கொடுத்துவிட்டு, தூக்கிலிருந்த திரட்டுப் பாலை எடுத்து மருமகள் கயல் கையில் கொடுத்தார்.
"லட்சுமி கன்று போட்டுச்சே, அதோட சீம்பாலா மாமா?" என ஆவலாகக் கேட்டாள் கயல்.
"ஆமாம்மா, சின்னக் கன்றா வந்தது அது கூடக் கன்று ஈன்டுடுச்சு." என ஆரம்பித்தவரைக் கயல் ஒரு ஆட்சேபனை பார்வையிலேயே அவர் பேச்சை நிறுத்த வைத்தவள், " மாமா, இதே மாதிரி பேசினீங்கன்னு வைங்க, எங்கம்மா எசப் பாட்டை ஆரம்பிச்சிடும். உங்களுக்குப் புண்ணியமா போகுது பேசாமல் வாங்க." என்ற அன்புக் கட்டளையோடு மருமகள் அவரை வீட்டுக்குள் அழைத்து விட்டு , தன் கையிலிருந்த கூடையை வைக்கப் பின்கட்டுக்கு சென்றாள்.
சின்னச்சாமி மகளோடு பெரிய மச்சினன் வீட்டுக் கூடத்திலேயே அமர்ந்தார். அவர் கயல் விழி சொன்னதை வைத்து மகளைப் பார்க்கவும், "அவள் உள்ளதை தான்பா சொல்றா. காலையில கன்னிப் பொங்கல் வைக்கையிலேயே உமா அத்தை ஆரம்பிச்சிடுச்சு. அதுக்குத் தான் அறிவுகிட்டச் சொல்லி உங்களை வரவழைச்சேன்." என ரகசியமாகச் சொன்னாள் கலைச்செல்வி.
அதே நேரம் உள்ளிருந்து கூடத்துக்கு ,"அண்ணேன், வாங்கண்ணேன். நாங்களே உங்களைப் பார்க்க வரலாமின்னு இருந்தோம்." என வரவேற்றார் கயல்விழி அம்மா உமா.
" நானும் பேசி முடிச்சிடனுமுண்டு தான்மா வந்தேன். மாப்பிள்ளை எங்க?" என வினவினார் சின்னச்சாமி
" வயக்காடு வரைக்கும் போனாங்க அண்ணேன். இந்தா வர்ற நேரம் தான், போன் அடிச்சிட்டு வாரேன்." என்றவர், "கயலு மாமாக்கு காபிக் கொண்டா." என அழைக்கும் போதே, கயல் விழி இரண்டு தட்டுகளில் ஒன்றில் தான் வைத்த பொங்கலையும் மற்றதில் காரப் பணியாரமுமாகக் கொண்டு வந்தாள்.
கயலுக்குப் பின்னாடியே மெல்ல வந்த அவளது அப்பத்தா,கனகம்மாள் "வாங்கய்யா." என மருமகனை வரவேற்று விட்டு, மருமகனுக்கு நேராக நிற்காமல் மறைவாகச் சென்று , அவர் பேச்சுக் காதில் விழும் இடத்தில் அமர்ந்து கொண்டார்.
சின்னச்சாமி, மருமகள் கொண்டு வந்ததை ருசிப் பார்த்தவர், " உங்க அத்தை கைப்பக்குவம் அப்படியே இருக்குது ஆத்தா..." எனப் பாராட்டியவர், மகளை நோக்கி, "செல்வி, சின்ன மாப்பிள்ளையும் வரச் சொல்லுமா. முக்கியமான விசயம் பேசனும்." என்றார்.
அதே நேரம் பால் கொண்டு செல்லும் வண்டியை விடுத்து, பைக்கில் வந்து இறங்கிய அறிவு, அவன் மனைவி சாந்தி, மகன் கதிர் ஆகியோரைப் பார்க்கவுமே, ஏதோ முக்கியமான பேச்சு வார்த்தை என யூகித்த கயல்விழி, அது தங்கள் சம்பந்தமானது என்பதையும் இவர்கள் என்ன பேசினாலும், தன் முடிவிலிருந்து மாறக் கூடாது என மனதில் உறுதிக் கொண்டாள்.
"வாங்க மாமா, வாங்க அக்கா..." என வரவேற்றவள், ஐந்து வயதான கதிரையும் அழைத்துக் கொஞ்சினாள். கலைச்செல்வியும், தம்பியையும், அவர் மனைவியையும் வரவேற்றவள், " இன்னைக்கு எப்படி வீட்டை விட்டுட்டு வந்துட்ட?" எனத் தம்பி மனைவியைக் கேலி பேசினாள்.
"பட்டம்மா அக்கா இருக்கு. அதை வச்சிட்டு தான் வந்தேன். சம்சாரி வீடு அப்படியே போட்டுட்டு வர முடியுமா. தோட்டத்துக்கும் மாத்து ஆள் ஏற்பாடு பண்ணிட்டு தான வரணும். வீட்டில் இம்புட்டு ஆளுங்களை வச்சுக்கிட்டு நீங்களே வரமாட்டேங்கிறீங்க?" என்றாள் சாந்தி.
"பொம்பளைகளுக்கு ஓயாத வேலை இருந்துக்கிட்டு தான இருக்கு. தோட்டத்துக்கு எதுக்கு மாத்து ஆளு. ஏன் உங்க செவிடன் என்ன ஆனான்?" எனப் பண்ணைக்காரனைப் பற்றி விசாரிக்கவும், "நேத்து மாட்டுப் பொங்கல் முடிச்சிட்டு ஊருக்கு போயிருக்காப்ல. மூணூ நாள் செண்டு தான் வருவாரு." என்றாள் சாந்தி.
"அடேங்கப்பா அத்தனை நாள் லீவாக்கும்." எனக் கயல் பேச்சில் கலந்து கொள்ளவும்,
"அட நீ ஒருத்தி, அப்படிச் சொல்லிட்டுத் தான் போவாப்ல. நாளைக்கு வந்து நிக்கலையிண்டா என்னான்னு கேளு." எனச் சிரித்தாள் சாந்தி. செவிடன் என்பது, அவனின் புனை பெயர், நான்கு வருடமாக அவர்களிடம் வேலை பார்க்கிறான்.
"இப்படிப் பண்ணைக்காரன் கிடைக்கவும் கொடுத்து வச்சிருக்கனுமே. எல்லாம் சிவகாமியம்மா கருணை தான்." என்றாள் கயல்விழி.
"அதைச் சொல்லு..." எனக் கலைச் செல்வியும் ஆமோதிக்க, “அவனாவது அன்னைக்கு நேரத்துக்கு வந்திருந்தா அம்மாளை காப்பாத்தி இருப்பான். அந்த குற்ற உணர்ச்சியிலே செவிடன் அங்கேயே கிடக்கிறான், என் கூடப் பிறந்தவன் எங்கிட்டு திரியிறான்னே தெரியலை?“ என கலைச்செல்வி குறை படவும், “மதினி, அதுக்கு மனசில எம்புட்டு சங்கடமோ, எல்லாரும் முகம் திரும்புனீங்க, அது என்ன செய்யும் பாவம்!!!“ என சாந்தி கொழுந்தனுக்கு வக்காலத்து வாங்கவும்.
“சும்மா அவனுக்கு வக்காலத்து வாங்காத, ஆகாத வேலையா செஞ்சு, இவளையும் நட்டாத்துல நிறுத்திட்டு போயிருக்கான்.“ என தம்பியை வழக்கம் போல் திட்டவும் ,கயல்விழிக்கு மனம் பொறுக்காமல் கண்ணீர் வடித்தாள் . கனகம்மாள் தான், மருமகளும் பேத்தியான கலைச்செல்வியை அடக்கினார்.
அடுத்தடுத்து, கந்த வேல், குமரவேல் என அண்ணனும் தம்பியும் வந்து சேர்ந்தனர். குமரவேலோடு கல்லூரி இறுதியாண்டு படிக்கும் கயல்விழி தங்கை கனிமொழியும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு அங்கிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அலங்காநல்லூர் சென்று வந்தாள்.
"வாங்க மாமா, மாப்பிள்ளை வாயா, வாம்மா சாந்தி..." என முறையாக வரவேற்றனர். எல்லாருமாகக் கூடத்தில் அமர சிறிது நேரம் ஜல்லிக்கட்டுப் போராட்டம் பற்றியே பேச்சு ஓடியது.
"நாளைக்குப் போராட்டம் இன்னும் பெரிய லெவல்ல போகப் போகுது மாப்பிள்ளை. காலேஜ் பசங்களும் களத்தில் குதிச்சிட்டாய்ங்கே. நம்ம அலங்காநல்லூர் போராட்டம் டீவில லைவ் ரிலே ஆகுது. தமுக்கத்தில கூட்டம் அள்ளுதாம். காலேஜ் பயலுக ரயில் மறியல் எல்லாம் ப்ளான் பண்றாய்ங்கே. போராட்டம் செமையா போகுது." என ஆர்வமாகப் பேசினான் குமரவேல் கலைச் செல்வியின் கணவன்.
"மாமா, கம்ப்யூட்டர் இன்ஜினியர் தனுஷ் மாமாவே, போராட்டத்தில் இறங்கியிருக்காரு. மாட்டுப் பண்ணை வச்சிருக்கிறவர் நீங்களும் வந்து போராட்டத்தில் கலந்துக்குங்க." என அறிவை போராட்டத்துக்கு அழைக்கவும்,
"வரலாம் தான், அப்புறம் மாடு கன்றை யார் பார்த்துக்குவா. அதுகளையும் நாம தான பார்க்கனும், செவிடனும் இல்லை." என அறிவு பேச்சில் இழுக்கவும்,
"இந்நேரம் அன்பு மாமா இருந்திருந்தா, அது தான் எல்லாருக்கும் முன்ன நிண்டுருக்கும். இன்னைக்கு அவுக கூட்டாளிங்க எத்தனை பேர் கேட்டாய்ங்கேத் தெரியுமா?" எனக் கனிமொழி அன்பு இல்லாததை வருத்தமாகச் சொன்னாள்.
"அவனுக்கென்ன, மைனர் கணக்கா திரிஞ்சான். நம்ம அப்படியா குடும்பஸ்தன், வீட்டுப் பொறுப்பையும் பார்க்கனுமுல்ல. நேரத்தை ஒழிச்சுகிட்டு நாளைக்கு வர பார்க்குறேன்." என்றான் அறிவு. குரலைச் செருமிக் கொண்டார் சின்னச்சாமி .
"என்னங்க மாமா. ஏதோ பேசனமுன்னு சொன்னீங்கலாம். அன்பு இருக்க இடம் தெரிஞ்சிடுச்சா. காண்டேக்ட் பண்ணாப்லையா?" என ஆர்வமாகக் கேட்டார் கந்தவேல். உமாவும் சின்னச்சாமி என்ன சொல்லப் போகிறார் என ஆர்வமாகவே பார்த்திருந்தார்.
எல்லாரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்தவர் பார்வை கயல்விழி மீது வந்து நின்றது. அவள் முகத்தையைச் சில கணங்கள் ஊண்டிப் பார்த்தவர்,
"நம்ம கயல் அப்படியே சாயல்ல என் சிவகாமி தான். சின்னதில இருந்ததையும் விடவும், இந்த மூணு வருசத்தில ரொம்பவுமே மாற்றம். நான் சிவகாமியைக் கல்யாணம் கட்டையில எப்படி இருந்துச்சோ அது மாதிரி தான் கயல் இப்ப இருக்கு." என நெகிழ்ந்தவர்,
"சிவகாமியை பிடிக்காதவுக யாருமே இருக்க மாட்டாக. அம்புட்டு பதிவிசு, லட்சுமி கடாட்சமா, மஞ்சள் பூசி, பொட்டு வச்சு அப்படி இருக்கும்." என மனைவியின் நினைவுகளில் ஓரிரு நிமிடங்கள் தொலைந்தார். அவரைப் போலவே அங்கிருந்த அத்தனை பேருக்கும் சிவகாமி நெருக்கமானவர் தானே, எல்லார் கண்களிலும் குளம் கட்டியது.
சட்டெனத் தன்னை மீட்டுக் கொண்டவர், "சிவகாமியைக் கோயில்ல வச்சு பார்த்தப்பவே, ஒரு காலத்திலையும் அதைக் கண் கலங்க விடக் கூடாதுண்டு முடிவு பண்ணேன். அதுனால தான், என் அப்பன், ஆத்தா போகவுமே, சாதிசனத்தை விட்டுட்டு உசிலம்பட்டியிலிருந்து குடும்பத்தோட இங்க குடி வந்தேன்." என நிறுத்தியவர். "இப்ப எதுக்கு இதையெல்லாம் சொல்றேண்டு பார்க்கிறீகளா?" என வினவியவர், வேறு யாரும் பேச இயலாத நிலையிலிருக்கவும், தானே தொடர்ந்தார்.
"நான் ஆரம்பிக்கும் போதே, கயலு அப்படியே அவுங்க அத்தை சாயலுண்டு சொன்னேன்ல, எப்படிச் சிவகாமி சங்கடப் படுறதைப் பார்க்க முடியாதோ, அதே மாதிரி கயல் கஷ்டப்படுறதையும் என்னால பார்க்க முடியலை. அதுனால ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்." என அவர் சொல்லவுமே அவரை எல்லாரும் உற்று நோக்க
"மாமா, இல்லை நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம். இன்னைக்குப் பூ எருவாட்டி எனக்கு நல்ல சகுனத்தைக் காட்டிக் குடுத்திருக்கு. நீங்க எதாவது அச்சாணியமா சொல்லீடாதீங்க." எனப் பதறினாள் கயல்விழி.
"பூவாட்டிக் கொடுத்த நல்ல சகுனத்துக்கு ஏத்த விசயமாத் தான் நான் சொல்லப் போறேன்." எனத் தன் குரலில் கடுமையைக் கூட்டியவர்
"ஒரு அப்பன், தன் மகனுக்காக எத்தனை வருஷமுண்டாலும் காத்திருக்கலாம். ஆனால் கன்னிப் பொண்ணு காலகாலத்தில கல்யாணம் காட்சிண்டு செட்டில் ஆகனும். அது தான் எல்லாருக்கும் நல்லது." என்றவர்,
பெரிய மச்சினனனைப் பார்த்து, "கந்தா... நான் உன் மகளுக்கு நல்லதைத் தான் செய்வேண்டு நம்புனேனா, நான் சொல்ல வரதை நல்ல விதமா எடுத்துக்க." என்ற முஸ்தீபுகளோடு ஆரம்பித்தவர், பிரம்ம அஸ்திரமாக அதைச் சொல்லியே விட்டார்.
"என் சின்ன மகன், இந்த ஊரை விட்டுப் போயி மூன்றரை வருசத்துக்கு மேல ஆகுது. இதுவரைக்கும் ஒரு தாக்கல் தகவல் இல்லை. அவனுக்குப் பரிசம் போட்டோமுண்ட ஒரே காரணத்துக்காகக் கயல் வாழ்க்கை பாதிக்கக் கூடாது. நான் தான சம்பந்தம் பேசினேன், நானே அந்தப் பந்தத்திலிருந்து உங்களை விடிவிச்சு விடுறேன். நீ கயலுக்கு வேறப் பக்கம் மாப்பிள்ளை பார்த்துக்க." என்றார்.
மற்றவர் எதுவும் பேச இயலாமல் மௌனம் காக்க, கயல்விழி கண்ணில் நீர் பெருக, "நீங்க எப்படி மாமா அப்படிச் சொல்லுவீங்க. அப்படியெல்லாம் உங்க நோக்கத்துக்கு என் மனசை மாத்திக்க முடியாது. அன்பு மாமா, இந்தச் செயினை என் கழுத்தில போட்டப்பவே, நான் அதுக்குப் பாதிப் பொண்டாட்டி ஆயிட்டேன். இனி இதைத் திருப்பிக் கேக்குற உரிமை, என் மாமாவைத் தவிர வேற யாருக்குமே கிடையாது." என அவள் கரகரத்த குரலோடு சொல்லவும்.
"ஆத்தா கயலு சொல்றதைப் புரிஞ்சுக்க, உனக்கு அப்புறம் உன் தங்கச்சி வேற இருக்கு. குடும்பச் சூழலை அனுசரிச்சு நடந்துக்க." என்றார் சின்னச்சாமி.
"கனிக்கு வேணுமுன்னா, முன்னாடி கல்யாணத்தை முடிங்க. நான் இப்படியே இருந்துக்குறேன்." என்றாள் கயல்.
"இந்தா மாமா சொல்றாகல்ல, பதிலுக்குப் பதில் பேசாத. அவுக நல்லது கெட்டது எல்லாம் பார்த்தவுக. அவுங்க சொல் பேச்சு கேட்டு நடந்துக்க." என்றார் உமா.
இந்நேரம் அண்ணன் மகனுக்கு கல்யாணம் செய்து வைத்திருந்தாலும் அமெரிக்கா சென்று வந்திருப்பாள். புள்ளைக் குட்டி என்று ஆகியிருக்கும். ஊரில் இல்லாத மாட்டை அடக்கிறவனை கட்டுறேன் என பரிசம் போட்டு, நாத்தனாரும் செத்து, அவர் மகனும் மாயமானது தான் மிச்சம் என மனதில் நொந்துக் கொண்டார் உமா.
"உனக்கு எப்படா, என்னை ஓட்டிவிடுவோம்னு இருக்கும். இந்த வீட்டில இருந்தா தானே பிரச்சனை." என கயல் அம்மாவிடம் பாய்ந்தவள், மாமாவிடம் திரும்பி, "என்னை நம்ப வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க மாமா. அங்க உங்க மருமகளா வந்து இருந்துக்குறேன்." எனக் கேட்கவும். உணர்ச்சி வயப்பட்டுப் போன சின்னசாமி.
"ஆத்தா, உன்னை என் மருமகளா, என் வீட்டுக்கு கூட்டிட்டு போறதை விட, எனக்கு என்ன பெரிய சந்தோஷம் இருந்திடப் போகுது. ஆனால் என் மகன் உசிரோட இருக்கானா இல்லையாண்டே தெரியாமல் நான் எப்படி உன்னைக் கூட்டிட்டுப் போவேன்." என்றவர், சில நேரங்களில் சில வார்த்தைகளை உதிர்த்தால் தான் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில், "அவன் அம்மா போன சோகத்தில அவனும் முடிவைத் தேடிக்கிட்டு இருந்திருந்தான்னா?" என அவர் சொல்லும் போதே,
"இல்லை, அப்படிச் சொல்லாதீங்க, என் மாமா உசிரோடாத தான் இருக்கும்." என வீறிடக் கயல்விழிக்கு அந்த நினைப்பே கூடக் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. நிற்க முடியாமல் மெல்ல மயங்கிச் சரிய, அருகேயிருந்த குமரவேல் அண்ணன் மகளைத் தாங்கிக் கொண்டான்.
"செல்வி, தண்ணீர் எடுத்துட்டு வா." எனக் குமரவேல் கத்தவும், அவள் செம்பிலிருந்த தண்ணீரை அவள் முகத்தில் தெளிக்க, "கயலு, கயலு..." என ஆளாளுக்குப் பதறினர். ஐந்து நிமிட இடைவெளிக்குப் பிறகு அவள் மயக்கம் தெளிய, கலைச்செல்வியும், சாந்தியுமாகக் கைத்தாங்கலாக அவளது அறைக்கு அழைத்துச் செல்ல, கனிமொழி வேகமாகச் சென்று அக்காவின் படுக்கையைத் தட்டிப் போட்டாள். அதில் படுக்க வைத்துப் பெண்கள் அவளுக்கு மயக்கம் தெளிய வைத்தனர்.
சின்னச்சாமி, முகம் வாடிப் போனவராக, மிகுந்த கவலையோடு அமர்ந்திருக்க, கந்த வேல், "இந்த விசயத்தைப் பத்தி இப்ப எதுவும் பேச வேண்டாம் மாமா." எனக் கவலைப் படிந்த முகத்தோடு சொன்னார்.
"இப்ப இல்லையிண்டா எப்ப பேசுறது கந்தா. நீ எப்ப பேசினாலும் கயல் இப்படித் தான் செய்யும். அதுக்காக இப்படியே வச்சுக்குவியா." என எடுத்துச் சொல்ல, உமாவும் வந்து சின்னச்சாமி பேச்சுக்கு ஆமாம் போட்டார்.
கனகம்மாள் உள்ளிருந்தே, மருமகனின் பேச்சுக்கு ஆட்சேபனை சொல்லும் விதமாக, “ கந்தா... கயல்விழியை, வேற கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கணுமுன்னு , என் பேரனைப் பத்தி அச்சாணியமா இனிமே வார்த்தையை விட வேண்டாமுன்னு உன் மாமாகிட்டச் சொல்லு, எம்புட்டு பெரிய வார்த்தையைச் சொல்லிபுட்டாக. அப்படியா என் பேரன், கோழையா இருந்தான். அவன் பாசக்காரன். அவன் அம்மா மேல வச்ச பாசத்தில் தான், பித்துப் புடிச்சு போயிட்டான்.” எனக் கண்ணீர் வடித்தார் .
“எனக்கு மட்டும் அவனைப் பத்தி அப்படிச் சொல்லனுமுண்டு ஆசையா என்ன, மனசை ரணமாகிட்டு தான் சொன்னேன். மூணு மாசத்துல கயல் மனசை மாத்தி கல்யாணம் பண்ற வேலையைப் பாருங்க.” என விடாப்பிடியாக நின்றார் சின்னச்சாமி .
"மாமா, நீங்க புரிஞ்சு தான் பேசுறீங்களா. நீங்க ஒரு வார்த்தை சொன்னதுக்கே மயக்கம் போடுற புள்ளை, மைண்டை மாத்திறது எல்லாம் அவ்வளவு சுளுவான வேலையில்லை. அது ஒன்னு கிடக்க ஒன்னு செஞ்சுகிடுச்சுன்னா, என்னா செய்யறது. தூக்கிக் குடுத்தது எல்லாம் பத்தாதாக்கும். நான் மறுபடியும் அவனைத் தேடுறதுக்கு ஏற்பாடு பண்றேன்." என்றான் குமார்.
கனிமொழி, ஆண்கள் பேசிக் கொண்டிருக்கும் இடத்துக்கு வந்தவள், "சித்தப்பா, இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை, நமக்குச் சாதகமா அன்பு மாமாவை தேடுறதுக்கும் பயன்படுத்திக்குவோம். தனுஷ் மாமாட்ட கேட்டா கூட உதவி செய்வார்." என அவள் யோசனை சொல்லவும்,
"ஏத்தா, போலீஸ்கிட்ட பிராது கொடுத்தாலும் கண்டுபிடிச்சு கொடுப்பாங்க. கம்யூட்டர்ல வேலை பார்க்கிற பையன் என்ன செய்யும்." என சின்னச்சாமி கேட்கவும்,
"மாமா, இப்ப ஜல்லிக்கட்டு போராட்டம் இப்ப நடக்குறதே, இந்த சோசியல் மீடியா மூலமாத் தான். அது மூலமாதான் எல்லாரும் ஒன்னு கூடியிருக்காங்க. இவங்க எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சவங்களா இருக்கனும்னு கூட இல்லை. மாமா போட்டோ போட்டு போன் நம்பர் போட்டாளே, யாராவது தகவல் தந்திருவாங்க." என கனி மொழி விளக்கவும்,
"கனி, அப்படி போட்டோ போட்டு தேடுறதா இருந்தா, முந்தியே செஞ்சிருப்போமே. அவனுக்கும் ஒரு அசிங்கம் வரக் கூடாதுன்னு தான நினைச்சோம்." என குமரவேல் சொல்லவும்.
"அதுக்குத் தான்பா இந்த வழி. இதில அன்பு மாமாவை பெருமையாவே காட்டலாம். நாளைக்கிலிருந்து, மாடுபிடி வீரனை எல்லாம் பேட்டி எடுக்கலாம்னு பேசிட்டு இருந்தாங்க. அதில அன்பு மாமாவை பத்தியும் பேசுவோம். அதுக்குத் தான் தனுஷ் மாமாட்ட உதவி கேட்கலாம்." என்றாள் கயல்.
"ஏண்டி, புரிஞ்சு தான் பேசுறியா. அந்த புள்ளையைத் தான் கட்டிக்க மாட்டோமுன்னு உன் அக்கா, சாதிச்சு நின்டா. இப்ப பரிசம் போட்டவனை கண்டுபிடிச்சு குடுன்னு, அதுகிட்டையே கேட்கச் சொல்றியா கூறுகெட்டவளே..." என உமா மகளை திட்டவும்.
"தனுஷ் மாமா, அப்படியெல்லாம் ஒன்னும் யோசிக்கலை. என்கிட்ட கயலை பத்தியும், அன்பு மாமாவை பத்தியும் நல்லா மாதிரியா தான் கேட்டுக்கிட்டு இருந்துச்சு." என அம்மாவின் கருத்தை எதிர்த்தாள் கனி.
"கனி சொல்றது நல்ல ஐடியாவா இருக்கு. நான் அன்புப் பரிசு வாங்கின போட்டோ, கப்பு எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன். ஸ்டுடியோகாரனைக் கூப்பிட்டே வீடியோ ரெடி பண்ணுவோம். கனி நீ சொன்னதை அந்த விசாரிச்சு வை.வேணுகிறதை செஞ்சுடுவோம்." என அறிவும் இன்று பெயருக்கேற்ற யோசனைகளை அள்ளி வழங்கினான்.
"எதையாவது செய்ங்க, அவளுக்கு நல்ல வழி பொறந்தா சரி தான். இப்படி கன்னியாவே பொங்கல் வச்சுக்கிட்டே இருந்திருவாளோன்னு பயமா இருக்கு." உமா கண்ணை துடைக்கவும், கந்த வேலுக்குமே ஒரு பெரு மூச்சு வந்தது.
சின்னச்சாமி பெரிய மச்சினனைத் தனியாக அழைத்துப் பேசியவர், "எதுக்கும் கயல் மேல ஒரு கண்ணை வச்சுக்கப்பா. இத்தனை நாள் மானம் மருவாதிண்டு, பார்த்து சின்னவனைப் பத்தி பத்திரிக்கையில் கொடுக்காமலிருந்தோம். இனி அதையும் செஞ்சு பார்க்க வேண்டியது தான்." என்றார்.
"நீங்க கவலைப் படாதீங்க மாமா, உங்க மருமக அப்படி எல்லாம் எதுவும் செஞ்சுக்காது. நான் இராத்திரி பேசிடுறேன். என்ன ஒண்ணு கொஞ்சம் மூடை மாத்தி விடனும். நீங்க பத்திரமா போயிட்டு வாங்க." என்றார் கந்தவேல்.
சின்னச்சாமி, பெரிய மச்சினன் வீட்டிலிருந்து மகள் வீட்டுக்கு வந்தவர், "ஆத்தா, அப்பா பேசினதில் எதுவும் தப்பிருக்கா?" என அபிப்ராயம் கேட்டு நின்றார்.
"நிச்சயமா இல்லைபா. நம்ம மகனுக்காக அந்தப் பிள்ளையைக் காக்க வைக்கனும்னு நினைக்காம, அது வாழ்க்கை நல்லா இருக்கனுமின்னு நினைக்கிறீங்களே. இந்த மனசு எல்லாருக்கும் வராதுப்பா. நீங்க கவலைப் படாம போங்க. நான் பார்த்துக்குறேன்." என்றாள் கலைச்செல்வி.
கலைச்செல்வி எப்போதுமே மிகவும் உணர்ச்சி வயப்படாமல், யதார்த்தமாக இருப்பவள். சிறுவயதில் தாய்மாமனையே திருமணம் முடித்து, இத்தனை வருடங்களில் இரண்டு பிள்ளைகள் பெற்று, அகஸ்மார்த்தமாக அம்மாவை இழந்ததில், தடுமாறி நின்ற பிறந்த வீட்டுக்கும் தாயாக மாறி தாங்கி நின்றவள். இன்றும் அப்பாவுக்கே அவர் செய்கை சரியே என்று ஆசுவாசத்தையும் தந்தாள்.
அலங்காநல்லூரிலும், மெரினாவிலும் இரண்டாவது நாள் போராட்டமும் வெற்றிகரமாக, இரவு பகல் பாராது நடந்துக் கொண்டிருக்க, தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் நகரின் முக்கிய மைதானங்களில் கூட ஆரம்பித்தனர். நாளை பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து, பள்ளி கல்லூரிகள் திறக்க உள்ளது. அதன் பிறகு மாணவர்கள் கூட்டம் பெருமளவு குறைந்துவிடும் என அரசும், காவல்துறையும் கணக்குப் போட்டது. ஆனால் எல்லா கணக்குகளையும் மெரினா புரட்சி தவிடுபொடியாக்கி கொண்டிருந்தது.
மெரினா கடற்கரையில் போராட்டகாரர்களின் கூட்டத்தை கலைந்து போகச் செய்ய மின் விளக்குகளை அணைக்க, மேலிடத்து உத்திரவு வந்தது. அப்படிச் செய்தால், பெண்கள் பாதுகாப்பு காரணம் கருதி வீட்டுக்கு சென்று விடுவார்கள், என கருதி வீதி விளக்குகளை அரசு அணைக்க, ஒவ்வொரு இளைஞனின் கையிலிருந்தும் மின்மினிகள் போல் மெல்ல வெளிச்சம் புறப்பட்டு, மெரினா புரட்சியின் அடையாளச் சின்னமாக, ஒரே நேரத்தில் ஐம்பதாயிரம் பேர் வரையான மக்கள் தங்கள் செல்போன் டார்ச் மூலய் ஒளி ஊட்ட, வானின் நட்சத்திரங்கள் தரை இறங்கியதோ என ஐயப்படும் அளவு டார்ச்சுகள் ஒளிர்ந்தன.
போராட்டகாரர்கள், எல்லா நேரமும் உயிர்போடும், உணர்வு பெருக்கோடும் இருந்தனர். காவலர்கள் கூட சோர்ந்து தெரிந்தனர், ஆனால் இளைஞர்கள் சோர்வே அடைய வில்லை. இதன் சூட்சமம் அரசுக்கே அடுத்த நாள் தான் புரிந்தது. ஏனெனில் இளைஞர்கள் பேட்ச், பேட்சாக புதிது, புதிதாக மாறிக் கொண்டே இருந்தனர். காலை, மாலை, இரவு என யாரும் போராட்ட நேரத்தை பங்கிட்டுக் கொடுக்காமலேயே அவரவர் நேரத்துக்கு, தங்கள் அலுவல் பணியோடு இந்த அறப்பணியையும் செய்தனர்.
காவலர் சி.ஏ.செல்வன், இருந்த அந்த ரிசர்வ் போலீஸ் படை மட்டும், அங்கேயே முக்கால்வாசி நேரம் டேரா அடித்திருந்தனர். இரவு நேரங்களில் கடலை ஒட்டி ரோந்து பணி மேற் கொள்பவர்கள், பெண்களுக்கு அசம்பாவிதம் நேர்ந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். ஏர்தழுவும் காளை மாட்டு சிலையின் கீழே வந்து நின்ற அந்த காவலன், அதனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றான்.
இந்த ஏறுதழுவளுக்கும், இந்த மண்ணுக்கும் தான் எவ்வளவு ஆழ்ந்த சம்பந்தம். நல்லது கெட்டது, இரண்டும் இதில் உள்ளதே. ஏதோ ஒரு அமைப்பினர் எதிர்பதாகச் சொன்னார்களே. அவர்கள் கூற்றுபடி, எத்தனை மனிதர்களை இந்த மாடு காவு வாங்கி உள்ளது. எத்தனை மனிதர்கள் இந்த வாயில்லாத ஜீவன் மேல் பாய்ந்து இருக்கிறார்கள். இதில் எது சரி, எது தவறு என அவன் தன் மனதில் பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருந்தவன்.
"இல்லை, இந்த மாடு தான் பொல்லாதது. ஒன்றுமறியாத அப்பாவிகளையும் கொம்பால் குத்தி, கூறு போடும். இந்த இளைஞர்களுக்கு என்னத் தெரியும். இவ்வளவு வாய்கிழிய பேசுறவய்ங்க மத்தியில் ஓர் காளை மாடு வந்தால், இந்த வீரமெல்லாம் என்னவாகும்." என அசட்டையாக ஓர் இளக்காரச் சிரிப்பை உதிர்த்தான் அந்த காவலன்.
"என்ன ப்ரோ, யாரை நினைச்சு, இந்த இளக்காரம்." என்றபடி, ப்ரெஸ்ஸாக வந்து நின்று கேள்வி எழுப்பிய அந்த இளைஞன் விஜயை காவலன் ஊன்றிப் பார்த்தான். ஏனெனில் குளித்து, வேறு உடை உடுத்தி சென்ட் அடித்து ப்ரெஸ்ஸாக வந்திருந்தவன், செல்வனுக்கும் ஓர் சப்பாத்தி பொட்டலத்தை நீட்டினான்.
செல்வன் பார்த்துக் கொண்டே நிற்கவும், "வாங்கிக்கங்க ப்ரோ, உங்களுக்கும், எங்களுக்கும் காக்கிச்சட்டையும், கோஷம் போடுறதும் தான் வித்தியாசம். மற்றபடி நீங்களும் எங்களை நல்லா தான் பார்த்துக்கிறீங்க." என விஜய் புன்னகைத்தபடி சப்பாத்தி பார்சலை நீட்டவும்,
"நோ தாங்க்ஸ். எங்களுக்கு அரசாங்கம் தந்துடும். தேவை பட்டவங்களுக்கு கொடுங்க." என்றவன். "முடிஞ்சவரை, லேடீஸை நைட் வீட்டுக்கு அனுப்பிடுங்க. அவுங்களுக்கும் சேப்டி. உங்களுக்கும் டென்சன் ஃப்ரீ!" என ஆலோசனை காவலன் தரவும்,
"நாங்களும், அதை தான் வலியுறுத்துறோம். ஆனால் பாருங்க, சம உரிமை பேசுற பெண்கள், அதை ஒத்துக்க மாட்டாங்க." என சிரித்துக் கொண்டே சொன்ன விஜய், காவலனோடு பேசிக் கொண்டே ரோந்து பணியும் செய்தான்.
அவனுடைய மொபைல் ஒலி எழுப்பவும், அதை ஏற்றவன், "டேய் மச்சான்.. அலங்காநல்லூர் நிலவரம் என்ன?" என பேச ஆரம்பிக்கவும், அந்த காவலன் அதிர்ந்து உன்னிப்பாக அவன் பேச்சை கேட்கலானான். நிறைய விசயங்களை பேசிக் கொண்டார்கள். அவன் பேசி முடித்து வைக்கவும், செல்வன், விஜயிடம் பூடகமாக நாளை அலங்காநல்லூரில் போராட்டக்காரர்களை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லவும், விஜய் நண்பனுக்கு மீண்டும் அழைத்தவன், "மச்சான். நாளைக்கு போலீஸ் அரஸ்ட் இருந்தாலும், இருக்குமாம். அப்படி எதாவது இருந்தா தைரியமா இருங்க, பேஸ்புக் லைவ் ஓட்டி விடு, வைரல் ஆகட்டும்." என இவன் இங்கிருந்து யோசனை சொல்லி போனை வைத்தான்.
காவலன் லேசாக சிரித்துக் கொண்டவன், " ஒரு கைது நடவடிக்கை இருந்தா தான், அந்த மக்கள் இன்னும் தீவிரமா போராடுவாங்க." என்றான். "ப்ரோ, என்ன எங்க ஊர்காரங்களோடவே இருந்த மாதிரி சொல்றீங்க. நீங்க எந்த ஊரு?" என கேள்வி எழுப்பினான் விஜய். அதற்கு பதில் சொல்ல அவசியமில்லை என்பது போல், சத்தம் வந்த திசையை நோக்கி நகர்ந்தான். அங்கே இரண்டு குடிமகன்கள் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்க, பெண்கள் இருந்த பகுதியிலிருந்து அவர்களை அப்புறப் படுத்தினான்.
பாலமேடு
வேல் இல்லத்தில் கயல்விழி, தனது படுக்கையில் படுத்திருந்தவள், மயக்கம் தெளிந்து விழித்திருந்தாள். 'இந்த வருஷம் பூஎருவாட்டி எவ்வளவு நல்லா எரிஞ்சது. இது எவ்வளவு ஒரு நல்ல சகுனம். நான் அவ்வளவு சந்தோஷமா இருந்தேன். இந்த மாமாக்கு அது பொறுக்காதே. அத்தை, நீங்களே போய் மாமா மனசை மாத்தி விடுங்க. அதெப்படி மாமா அப்படிச் சொல்லுவார். நீங்க இருந்திருந்தா, மாமாவுக்கு இப்படி பேச வாய் வந்திருக்குமா.' என யோசித்தவள்,
"நான் ஒரு கிறுக்கி. நீங்க இருந்திருந்தா, நான் உங்கள் உரிமை பட்ட மருமகளா நம்ம வீட்டில் இருந்திருப்பேன். நீங்களும் என்னை ஆசையா வச்சுகுவீங்க. உங்க மகன் தான் என்னை மிரட்டிக்கிட்டே இருந்திருப்பார்." என ஓர் வெட்கத்தோடு கயல் வாய்விட்டு சொல்லவும்,
"அதெல்லாம் வெளிப்பார்வைக்கு தான்டியம்மா என் மகன் வீராப்பா தெரியிவான். உள்ள பலாபழம் மாதிரி அம்புட்டு மெதுவு. உனக்குத் தெரியாததா என்ன. வீட்டுக்கு வந்து பாரு. உனக்குன்ன சேர்த்து வச்ச பட்டுச் சீலையே, ஒரு பீரோ நிறைய இருக்கு." என்றார் சிவகாமி.
"போங்கத்தை, உங்க மகன் கொண்டு வர்ற பட்டுச் சீலை யாருக்கு வேணும். உங்க மகனை சீக்கிரம் வரச் சொல்லுங்க. எங்க அம்மாகிட்ட எத்தனை நாள் பேச்சு வாங்குவேன். வந்து தாலிக் கட்டி கூட்டிட்டுப் போகச் சொல்லுங்க." என அவள் நொடிக்கவும்,
"வந்திருவான்டி. என் மகன் சீக்கிரம் வந்திருவான். பரிசம் போட்டவன், மஞ்சள் தாலி கட்டாமலா போயிடுவான். ஜல்லிக்கட்டு மாட்டை அடக்க, அவனை விட்டா எந்த வீரன் இருக்கான். கட்டாயம் வருவான்." என்ற குரலில் கண் விழித்த கயல் விழி, "அத்தை. அத்தை..." என அரற்றினாள்.
அவள் அருகிலேயே மற்றொரு கட்டிலில் படுத்திருந்த அவளது அப்பத்தா கனகம்மாள், "கயலு. என்னடா கனா கண்டியா. அத்தையா வந்தா. சிவகாமியா வந்தா?" என கண் கலங்கியபடி வந்து பேத்தியின் முகத்தை வருடவும், "அப்பத்தா..." என்றபடி அவரைக் கட்டிக் கொண்ட கயல்விழி, " நிஜமாவே அத்தை வரலையா. இது கனவா" என அழுதவள், "அன்பு மாமா, வரும்னு சொன்னாங்களே, மாமா வந்திரும்ல அப்பத்தா?" என அவரைக் கட்டிக் கொண்டு அழுதாள் கயல்விழி.
"என் ராசாத்தி, உன் அத்தையே வந்து சொல்லியிருக்காளே.கட்டாயம் என் பேரன் வந்திருவான். யார் பேச்சை தட்டினாலும், அவுங்க அம்மா பேச்சை தட்ட மாட்டான். அவள் பேச்சு தான அவனுக்கு வேத வாக்கு. வந்திருவான்." என ஆறுதல் சொன்னார் அப்பத்தா.
அழுது ஓய்ந்து, அப்பத்தாவை படுக்க வைத்தவள், தனது படுக்கை விரிப்புக்கு அடியிலிருந்து போட்டோவை எடுத்துப் பார்த்தாள். அன்புவும், அவளும் சேர்ந்து பரிசம் போட்ட அன்று எடுத்துக் கொண்ட புகைப்படம், மற்றும் வெள்ளியில் கைக்கடக்கமான சகலமும் தரும் காமதேனு, கற்பக விருட்ச மரம் அமைந்த சிலை அதனை எடுத்துப் பார்த்தவள்,
“மாமா, இதை வச்சுக்கிட்டா நினைச்சதெல்லாம் கிடக்குமுன்னு சொன்னியே, உன்னையே நினைச்சுகிட்டு இருக்கேன், கிட்ட இருந்த நீயே எட்ட போயிட்டியே.“ என உருகியவள் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.