Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு அத்தியாயம் 11&12

வகைகள் : தொடர்கள் / நீயே எந்தன் மகளாய்-தீபா செண்பகம் (முடிவுற்றது)

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


தொடர்கள்

அத்தியாயம் 11&12

11.கணினி விடு தூது  

கயல்விழியின் கணினி விடு தூதை, அனுப்பிய அடுத்த வினாடியே, உரியவரிடம் சேர்ப்பித்தது இன்றைய அறிவியல் உலகம்.

கரடு, முரடான தழும்புகளைப் பெற்றிருந்த முகத்துக்குச் சொந்தக்கார அந்த காவலன்  தனது டூட்டியை மெரினா கடற்கரையில் முடித்து, மாற்றுக் காவலர்களை நியமித்து விட்டு, ரிசர்வ் போலீஸார் தங்கியிருக்கும் குவாட்டர்ஸ்க்கு வந்து சேர்ந்து குளித்து உடை மாற்றி, ஒரு ஷார்ட்ஸ் டீசர்டோடு தனது படுக்கையில் விழுந்தான்.

காலை முதல் மெரினாவில் டூட்டி பார்த்ததில் மிகவும் களைத்திருந்தான். அவன் உடலால் களைத்திருந்தான் எனச் சொல்வதை விட, மனதால் களைத்திருந்தான் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அவன் எதை மறைக்க அஞ்ஞாதவாசம் இருக்கிறானோ, அதையே நினைவு படுத்துவது போல் இந்தத் தமிழகம் மட்டுமின்றித் தமிழினமே திரண்டு எழுந்துள்ளது.

எது ஒன்றை வேண்டவே வேண்டாம் என ஓடி ஒளிந்து, பெற்றவரையும், உடன் பிறந்தோரையும், ஏன் பரிசம் போட்டவளையுமே பிரிந்து தனிமையில் தண்டனை அனுபவிக்கிறானோ, அதே அவனுக்குக் கட்டாயக் கடமையாக ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அத்துமீறல்கள் நடக்காமல் பாதுகாக்க, விதி விதித்தது. ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு எனக் காணும் இடமெல்லாம் காளையின் படங்களும், சொற்களுமே எதிரொலித்தது.

தனது கைப்பேசியை உயிர்ப்பித்து, மெயில் வந்ததை ஆராய, மிரட்டலாக ஓர் கடிதம் வந்திருந்தது, அவன் அன்புக்குரியவளிடமிருந்து.

ஆம், இந்த அன்புக்கு உரியவளிடமிருந்து வந்திருந்த மெயிலை தான் வாசித்தான் உதவி ஆய்வாளர் சிஏ. செல்வன். வழக்கம் போல வரும் மெயில், அதுவும் இன்று சிறுவீட்டுப் பொங்கல் வைத்திருப்பாள். கட்டாயம் தன் நினைவில் மடல் வரைந்திருப்பாள், என எதிர் நோக்கியபடி கைப்பேசியை உயிர்ப்பித்து, கடிதத்தைப் பார்க்க, அந்த முரட்டுக் காவலனின் கண்களிலிருந்தும் கண்ணீர் சொரிந்தது.

"மாமா, இந்த மெயில் மூலமா, என் மனசில் இருக்கிறதெல்லாம் உன்னை வந்து அடையுதுங்கிற நம்பிக்கையில் தான் நான் உசிரோடவே இருக்கேன். என் நம்பிக்கை சரி தான்னு ஒரு சமிக்ஞை கொடு மாமா.

மூணு வருஷம் கழிச்சு இந்த வருஷம் பூஎருவாட்டில சூடம் ரொம்பத் தூரம் எரிஞ்சுக்கிட்டே போச்சு. ஓடைக்கு அத்தை மாமாவும், அது தான் உங்க அப்பாவும் வந்திருந்தார். என் வேண்டுதல் நிறைவேறும்கிற நம்பிக்கை வந்திருச்சு. இன்னைக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தேன் மாமா. என் கண்ணே, என் மேல பட்டுடுச்சு போல, மாமா அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லிப்புட்டாரு. என் உசிரே ஒரு நிமிசம் நிண்டுடுச்சு.

அப்படி என்ன சொன்னாருன்னு கேட்க மாட்டியா, சரி நானே சொல்றேன். நீ பரிசம் போட்ட செயினை, திருப்பிக் கேட்கிறாரு. என்னை, உனக்குப் பரிசம் போட்ட கட்டிலிருந்து விடுவிச்சு விடுறாறாம். எனக்கு வேற மாப்பிள்ளையைப் பார்த்துக் கல்யாணம் கட்டி வைக்கச் சொல்றாரு . ஏன்னா நீ உயிரோட இருப்பேன்னு நம்பிக்கை இல்லைனு சொல்றாரு. இதை டைப் பண்ண கூட என் கை நடுங்குது மாமா, அவருக்கு அவருக்குச் சொல்ல மனசு வந்துச்சு . அதைக் கேட்டவுடனே எனக்கு மயக்கமே வந்துடுச்சு. இல்லையினா, இந்தச் செயினை இன்னைக்கு வாங்கிட்டு போயிருப்பார்,

அது எப்படி உங்கப்பா, பரிசம் போட்டதை இல்லைனு சொல்லலாம். எங்க அத்தை, என்னை மருமகளாக்கிறேன்னு, வாக்கு கொடுத்து, நீ போட்டது. நாலு வருஷம் முன்ன என் பிறந்த நாளான, தை பூசத்து அன்னைக்கு, இந்தச் செயினை என் கழுத்தில போட்ட. இந்த வருஷம் தை பூசம் வரைக்கும் தான் உனக்கு டைம். அதுக்குள்ள நீ வரலைன்னா, அதே நாள்ல என் கழுத்தில், நீ கட்ட வேண்டிய மஞ்சள் கயிற்றுக்குப் பதிலா, வேற கயிறு ஏறும். இது என் அத்தை மேல சத்தியம்.

என் அத்தையைக் காப்பாத்த முடியலைனு தான கண்காணாமல் போன, இப்ப நீ கண் காணாமல் இருக்கிறதுனாலையே, என்னையும் இழக்கப் போற. இதுக்கு அடுத்து எந்த மெயிலும் போட மாட்டேன். மெயிலும் பார்க்க மாட்டேன். பார்த்து பார்த்து என் கண்ணு ஏமாந்தது எல்லாம் போதும். என்னால நீ வராத, பதில் சொல்லாத ஏமாற்றத்தை தாங்கவே முடியலை.

இது எனக்கு இருபத்தஞ்சாவது பிறந்த நாள். அதுவே கடைசியா இருக்கனுமான்னு நீயே முடிவு பண்ணிக்க. நீ நேரில் வருவேங்கிற நம்பிக்கையில் உன்னையே எதிர்பார்த்துக் காத்திருக்கும், கயல்விழி அன்புச் செல்வன்." என எழுதியிருக்க, அதைப் பார்த்துக் கதறி விட்டான், அவளின் அன்பு என்ற காவலன் சிஏ செல்வன்.

அவசரமாகக் காலண்டரை புரட்டி தை பூசம் என்று வருகிறது எனப் பார்த்தான். இன்னும் பத்து நாட்கள் இருந்தது. ஈ மெயிலை மீண்டும், மீண்டும் வாசித்தவன் கண்களில் அதை மறைத்துக் கண்ணீர் பெருக்கெடுத்தது. " கயலு, விழி, கயல்விழி என் கவி, கண்ணழகி, என்னடி பொசுக்குண்டு இப்படி எழுதிபுட்ட. என்னால தான் இந்த உலகத்தில நிம்மதியா வாழ முடியலை, நீயாவது சந்தோசமா வாழாலாம்ல. அன்னைக்கே நீ உன் மாமன் மகனைக் கட்டியிருந்தாலும் நீயும் சந்தோசமா இருந்திருப்ப. இந்த அசம்பாவிதமெல்லாம் நடந்திருக்காது.” என வாய் விட்டுப் புலம்பியவனை, அவனது மனசாட்சி 'கயல்விழியை இன்னொருத்தனுக்கு விட்டு கொடுத்துட்டு, நீ சும்மா இருதிருப்பியா' எனக் கேட்டது.

அந்தப் போட்டாபோட்டி தானே, இன்று தானிருக்கும் நிலைக்குக் காரணம் என மனம் வருந்தியவன், பரிசம் போட்ட நான்கு வருடத்துக்கு முன்பான தை மாதத்துக்குப் பயணித்தான்.

கயல்விழிக்குப் பரிசம் போட்டு விட்டு, மிகவும் கர்வமாகவே கோதண்டத்தை ஓர் பார்வை பார்த்தான் அன்பு.

" டேய், ஜல்லிக்கட்டு மாட்டை வேணா நீ வளர்க்கலாம். ஆனால் அதை அடக்கிற வீரன் நானு. கயலுக்குப் பெரியமனுசியானப்ப, குச்சுக் கட்டுற உரிமையை வேணா, தாய் மாமன்கிற உரிமைக்கு உங்களுக்கு வந்திருக்கும். ஆனால் அவள் மனசில் மாளிகை கட்டியே உட்கார்ந்து இருக்கிறது நான் தான்..." என அன்பு பெருமை பீற்றிக் கொள்ளவும் அறிவும் எகத்தாளமாகச் சிரிக்க, கோதண்டத்துக்கு பற்றிக் கொண்டு வந்தது.

"டேய், காளையை அடக்குகிறது பெரிய விசயமில்லடா. அதை வளர்த்து பாரு அப்பத் தெரியும். வருஷம் பூரா, அதுக்கு எம்புட்டுச் செலவு செஞ்சு, ஊட்டம் கொடுத்து, நீச்சல் பழக்கி, மண்ணை முட்ட விட்டு ரோசமா, அரும்பாடுபட்டு வளர்க்கனும். இன்னைக்கு மாடுகள் இனப் பெருக்கமே, எங்களால தான் நடக்குது. பெரிசா காளையை ஒரு நிமிசம் வாடியில, நூறு பயலுவ மேல விழுந்து,அதை மிரள விட்டு அடக்கிட்டா பெரிய வீரமாடா. வளர்கிறது தான்டா வீரம். இது தெரியாமல் மாடு பிடிக்கிறவனை வீரன்னு சொல்றானுங்க. இம்புட்டு பேசிறியே, நீயே ஆதாயம் வேணும்முன்னு பசு மாட்டைத் தான வளர்க்கிற. காளை மாட்டை வளர்த்து காமிடா. நான் வந்து உன் மாட்டை அடக்குறேன். அப்பத் தெரியும் அதோட வலி" என ஆவேசமாகப் பேசவும் ,

"பங்காளி, எதுக்கு இம்புட்டு பொங்குறவன். நீ காளை மாடு வளர்க்கிறது, பெரிய விசயம் தான் ஒத்துக்குறோம். அதுக்காக எங்க வீரத்தை குறைச்சு சொல்லாத. உன் மாடு அடிபணியுதுண்டா உன் ட்ரைனிங் பத்தாதுண்டு அர்த்தம். அதையும் விட, மனுசனா மாடோ, பிறப்புலையே வீரம், ஒரு கெத்து இருக்கனுமுண்டா. இதே, மருது, கொம்பன், ராவணேண்டு மாடுங்க வருது, எவனாவது வாடியில எதுத்து நிண்டு பார்த்துருக்கியா. அது அதுக்குப் பிறவி கெத்து, நீ உன் மாடை அடக்குநோமுண்டு சும்மா வாய் பேச்சு பேசாத." என அன்பு அவனுக்குப் பதில் தந்தான்.

"அப்படின்னா சவால். நான் ஒரு காளையைத் தரேன். நீ அதை வளர்த்துக் காட்டு. அப்ப நான் ஒத்துக்குறேன்." எனச் சவால் விட்டான் கோதண்டம்.

"ஹே, ஹேய்" எனச் சிரித்த அன்பு, "என்கிட்ட சவால் எல்லாம் விடாத, அப்புறம் அதிலையும் இறங்கிடுவேன். நமக்குள்ள இருக்கப் போட்டி, காளைகளுக்குள்ளேயும் வந்திடும்." என அன்பு பதில் சவால் விட்டான்.

"சும்மா, வாய்ச் சொல் வீரனா இருக்காத, உண்மையான மாடுபிடி வீரனா , காளை மாட்டை வளர்த்துக் காமிடா." எனக் கோதண்டம் வாய் வழியாக வலிய வந்து சேர்ந்தான் எமன்.

அன்பு, கோதண்டத்திடம் சவால் போட்டபடி , அவனிடம் இல்லாமல் ஒரு புலிக்குளம் காளையை வாங்கி வந்தான். அதுவும் அடுத்த வருட ஜல்லிக்கட்டில் அது பங்குபெற வேண்டும் என மூன்று வயது மாடு அசுரனை வாங்கி வர, மிகவும் ரோசமான அந்தக் காளை அதோடு அழைத்து வந்த பண்ணைக்காரன் ஆறுமுகம் என்ற நரம்பு தளர்ந்த செவிடனைத் தவிர வேறு யாரையும் நெருங்க விட வில்லை. அதனை வீட்டில் வளர்க்காமல் தங்கள் வயல் வெளியிலேயே செலவழித்து ஒரு செட்டை போட்டான். 

அன்பு குடும்பத்து தோட்டம், ஐந்து ஏக்கர் பரப்பளவில், மாந்தோட்டம், கொய்யா, நாவல் மரம், நெல்வயல் அது போக காய்கறிகளையும் பயிர் செய்தனர். அதற்கு பாய்ச்சுவதற்கு என ஒரு பம்ப் செட்டும் இருந்தது. சற்றே மெட்டு பாங்கான இடத்தில் இருக்கும் இவர்கள் தோட்டமே, அமைதியாக பொழுதை போக்கவும், செழுமையானதாகவும் இருந்தது. பாலமேடு மாம்பழம் என்பது இந்த பகுதியில் பிரசித்தி பெற்றது. 

அந்த தோப்பில் தான் அசுரன் காளையின் பயிற்சியும் நடக்கும்.  இந்த தோட்டத்தின் ஆரம்ப பகுதியில் சீட் இறக்கி, 3 ஷெட் போட்டிருந்தார்கள்.  ஒரு ஷெட்டின்  ஓரத்தில் தான் மாட்டுக் கொட்டமும் பண்ணைக்காரன் தங்குவதற்கு ஒரு சிறிய அறையும் இருந்தது. மற்றொரு ஷெட்டில் கயிற்றுக் கட்டில் போட்டு, இவர்கள் ஓய்வெடுக்கவும், அசுரன் காளைக்கு மட்டும் தனி செட்டும் இருந்தது. 

அதற்கு ஊட்டம் கொடுக்கவெனப் பருத்திக் கொட்டை, புண்ணாக்கு , கானப் பயறு, பேரிட்சை என விதவிதமாக நாள் ஒன்றுக்கு இருநூறு ரூபாய்க்குச் செலவு செய்தான். கொஞ்சம், கொஞ்சமாகப் பழகியதில், அன்புவுக்கு மட்டும் பழக்கப்பட்டு இருந்தது. செவிடனும், அன்புவுமாகவே அந்தக் காளையை வளர்த்தனர். ஆனால் அன்பு அதனைச் சீண்டிக் கொண்டே ,ரோசத்தோடு வளர்த்தான் . விடுமுறை நாட்களில் அவனது கூட்டாளிகள், ஜெகன், சிவா, கதிர், ராசு, மாடசாமி என ஒரு கூட்டமே வந்து விட, அசுரனா, அவர்களா என ஒத்திகை நடக்கும்.

ஆனால் அசுரன் மிகவும் சீற்றத்தோடு இருப்பதால் மூக்கனாங் கயிற்றில் கட்டியே வைத்திருந்தனர். பயிற்சியின் போதும் கூட, நீண்ட கயிற்றில் கட்டி வைப்பார்கள்.

“மாப்பிள்ளை , இந்த அசுரன் பழகுற பழக்கத்தை பார்த்தா, ஜல்லிக்கட்டுல சேர்த்துக்கவே மாட்டாங்கே போலிருக்கே, ரொம்ப ஆக்ரோஷமா இருக்குன்னு ரிஜெக்ட் பண்ணி புடுவாய்ங்கே. முந்தி காலத்துல, ஒரு கோயில் காளைக்கு , மக்கள் உசுருக்கு ஆபத்துன்னு சூட்டிங் ஆர்டரே குடுத்துருக்காய்களாம் , அதுனால இதை கொஞ்சம் மட்டுபடுத்தி வளர்க்கனும்டா.“ என ஜெகன் யோசனை சொன்னான். 

“ஆமாண்டா அன்பு, அப்புறம் போட்டில கலந்துக்க நம்பர் கிடைக்காது.“ என கதிரும், 

“சும்மாவே கோதண்டம் எதுடா சாக்குன்னு பார்க்குறான் , கமிட்டி மெம்பரை எல்லாம் கையில போட்டு வச்சிருக்கான். அசுரனுக்கு கலந்துக்க விடாமல் ஆப்பு வச்சுருவான் பார்த்துக்க!“ என சிவா என்பவன் எச்சரித்தான். 

“சரிடா, நாமளும் அதை, நாலு இடத்துக்கு கூட்டிட்டு போகணுமே, நமக்கே அடங்கலையிண்டா என்ன செய்யிறது, ஆனால் எப்படிண்டு தான் தெரியலை!” என அன்பு யோசிக்கவும், 

நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டவர்கள், “செவிடன் கிட்ட சொல்லு பார்த்துகுவாப்ள, நீ மட்டும் கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட்ட.“ என சொல்லிவிட்டு அவர்கள் கேலி கிண்டலோடு வண்டியில் ஏற அன்பு ஓர் புன்னகையோடு, “பிச்சுப்புடுவேன் ஓடுங்கடா.“ என சிறு கற்களை தூக்கி அவர்கள் மேல் எறிய, அவர்கள் பறந்தனர். 

அன்புவுக்கு , பரிசும் போட்டவளை பார்க்க வேண்டும் என ஆசை வந்தது, போனை எடுத்தவன் ,”எங்கடி இருக்க?” என அழைப்பு  விடுத்தான். 

“உன் இஷ்டத்துக்கு அப்படி எல்லாம் வரமுடியாது.“ என்று விட்டு அவள் போனை வைக்க, “குரவைக்குட்டிக்கு, நம்மளை பார்த்து பயம் விட்டுப் போச்சு. இரு வச்சுகிறேன்.” என மீசையை தடவினான். 

12. எங்கே அன்பு 

அன்பு, கயல்விழிக்குப் பரிசம் போட்டு மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. அவள் பிஎஸ் சி கணிதம் படித்தவள். பிஎட் பரிட்சை முடிந்த பிறகே திருமணம் என அன்பு உறுதியாகச் சொல்லி விட்டான். அதனால் ஜூன் மாதத்தில் திருமணம் என நிச்சயித்து இருந்தார்கள்.

கயல்விழி பரிட்சை தேதி அறிவித்தவுடன் அதனைத் தெரிவிக்க அத்தை வீட்டுக்குத் தான் தனது ஸ்கூட்டியில் பறந்தாள். 

இராஜக்காபட்டியில், சிவகாமி இல்லத்தில் வண்டியை நிறுத்தியவள், வீடு முகப்பில் திறந்து கிடக்க யாரையுமே காணவில்லை, "அத்தை" என அழைத்தவாறே அவள் ஒவ்வொரு அறையாகப் பார்த்தவள், சற்று தயங்கியே அன்புவின் அறையை எட்டிப் பார்த்தாள். 

ஆனால் நல்ல வேளை அவன் இல்லை, ஆனால் பக்கவாட்டிலிருந்து " வாத்தா. மருமகளே, இங்க வரதுக்கு உங்க அப்பத்தா அனுமதி குடுத்துட்டாகளா?" என ஓர் சிரிப்போடு கேட்டபடி சின்னச்சாமி உள்ளே வர, "ஏன் மாமா, நான் இங்க வரக் கூடாதா?" என்றவளின் குரலில் வாட்டம் இருந்தது.

"அடியாத்தி, உன் வரவை எப்ப, எப்பன்னு பார்த்திட்டு இருக்கேன். என்னைய போய் இப்படிக் கேட்டுபுட்டியே ஆத்தா..." எனவும், வாடிய அவள் முகம் மலர்ந்து, "பரிட்சை தேதி சொல்லிட்டாங்க மாமா. அதைச் சொல்லத் தான் வந்தேன்." என அவள் வெட்கப் படவும்.

பெரிதாகச் சிரித்தவர், " கல்யாண தேதிக்கு முன்னாடியே பரீட்சை முடுஞ்சிடுதில்ல." என அவர் கேட்கவும்,  "ஆமாம் மாமா..." எனத் தேதியைச் சொன்னாள் , "பரவாயில்லை, டீச்சரமா ஆயிட்டேன்டா. அன்புவையும் மிரட்டி உட்கார வச்சிடுவா, பிரம்பை எடுத்துக்க, இல்லையிண்டா ஏச்சுப் புடுவான்." என மருமகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். 

"போங்க மாமா, உங்க மகன் தான் வாத்தியராடமா , என்னை மிரட்டிகிட்டே இருக்கு. நானே சிங்கத்து குகைக்குள்ளே போற மாதிரி பயந்து, பயந்து தான் வந்தேன், உங்க மகன் வீட்டில இல்லைல!!!" எனத் தன விழிகளை உருட்டி மெல்லக் கேட்கவும், பலமாகச் சிரித்தவர்,

"சிங்கத்து குகையா, இதை நான் நம்பமாட்டேன், அவனுக்குப் பயப்படுறவ தான். சிங்கபுணரி வரைக்கும் அவனைத் தேடி போனியாக்கும்." என அவளைக் கேலி செய்தவர். 

"நிஜமாத்தான் ஆத்தா, நான் சொல்றதை கேட்டுக்க, நீயிண்டா பய, கவுந்து தான் போறான், முந்தியில முடிஞ்சு வச்சுக்க. என்னடா, மாமா இப்படிச் சொல்றாரெண்டு பார்க்காத, வீட்டுக்கு அடங்காத காளையை இப்படித் தான் அடக்கணும்." என்றவர், அவள் கண்கள் தன் அத்தையைத் தேடவும். "பின்னாடி, கதிரை குளிக்க வச்சிட்டு இருக்கா" என்றார். கயல் விழி பின்னால் செல்ல, புழக்கடையில் ஆறுமாத குழந்தையான கதிருக்கு குளிக்க ஊற்றிக் கொண்டிருந்தார்.

"அத்தை..." என இவள் வரவும், சாந்தியும் திரும்பி "வா கயலு..." என அழைத்து விட்டுத் தண்ணீர் மோந்து ஊற்ற, சிவகாமி ஓர் தலையசைவோடு, கத்திக் கதறிக் கொண்டிருந்த பேரனை, " ஆச்சு, ஆச்சு அம்புட்டு தான் என் சாமி." எனக் காலில் வைத்து சாந்தி தண்ணீர் ஊற்ற, ஊற்றச் சிவகாமி, கை காலை அமுக்கி குளித்து விடுவதை, கயல் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள்

சிவகாமி, தலைக்கு மூன்று சுற்று, சுற்றி கடைசித் தண்ணீரை, கையில் எடுத்து, முகத்தில் அடிக்க, மூச்சு முட்டி அழுதான் கதிர்.

"அத்தை." எனக் கயல் பதறவும், " துடுக்கத் தண்ணீர் தெளிச்சா தான், புள்ளைங்க பயமில்லாமல் இருக்கும்." என்றபடி பேரனைச் சாந்திக் கையில் தூக்கிக் கொடுத்து,  "தலையை மட்டும் நல்லா துவட்டி விட்டுட்டு பாலைக் குடு. அப்புறமா மேக்கப் பண்ணிக்கலாம்." என அனுப்பி விட்டவர், மனை பலகையிலிருந்து எழ முயற்சிக்க, கயல்விழி கை கொடுத்துத் தூக்கி விட்டாள்.

"வாடியம்மா, திடீருன்னு அத்தை ஞாபகம் வந்துச்சா, இல்லை, அத்தை மகன் ஞாபகம் வந்துச்சா?" என்ற கேலியோடு அவர் எழுந்து, வாளி மற்றவற்றை எடுத்து வைக்க, கயலும் உதவி கொண்டே , "அத்தையும், அத்தை மகனையும் மறந்தா தான நினைக்க!" எனவும். சிவகாமி சிரித்தவர், " நல்லா தான் பேசி பழகிட்ட போ. ஆனால் என் மகன் முன்னாடி மட்டும் பேசச் சொன்னா, நாக்கு மேலன்னத்தில போய் ஒட்டிக்குது." என வம்பிழுக்கவும்.

"ஆமாம் போங்க, உங்க மகன், பேச்சும், நடத்தையும் அப்படி. பொழுதிக்கும் மிரட்டிக்கிட்டே இருந்தா???" எனப் புகார் வாசித்தவள், வண்டிச் சத்தம் கேட்கவும் அவன் வருகிறானோ எனப் பயந்து வாசலைப் பார்த்தாள். ஆனால் அறிவு தான் வந்தான்.

சிவகாமி சிரித்தவர், " ஏன்டி இம்புட்டுப் பயம், பயந்தேனா, அவனைக் கட்டிக்கிட்டு எப்படிக் குடும்பம் நடத்துவ?" எனக் கேட்டார். "போங்கத்தை..." எனச் சிவந்தாள் கயல். அறிவு உள்ளே வந்தவன், " என்ன பாலமேட்டுக்காரம்மா காத்து இங்குட்டு அடிக்குது. அதுவும் வண்டியில பறந்து வந்திருக்க. ஆனால் நீ எதிர்பார்த்த ஆள் இங்க இல்லையே!" எனக் கேலி பேசவும்.

"போங்க மாமா, நான் ஒன்னும் உங்க தம்பியைப் பார்க்க வரலை. உங்க எல்லாரையும் பார்க்க வந்தேன்." எனப் பரிட்சை தேதிகளைப் பற்றிய விவரத்தை மீண்டும் சொல்லவும். "அப்ப கன்ஃபார்ம்டு!!!" என்றான் அறிவு. "அத்தை..." என அவள் சிணுங்கவும்,

"அட சும்மா இருடா புள்ளையை இரண்டு பேரும் சீண்டிக்கிட்டே இருக்கீங்க." என மகனைக் கடிந்தவர், "அப்ப, பரிட்சையை முடிச்சிட்டு நிம்மதியா கல்யாணம் கட்டிக்க." என மருமகளைக் கொஞ்சினார் சிவகாமி.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து கிளம்பியவளிடம், "அன்பு தோட்டத்தில இருக்கான். போற வழியில் கொடுத்துட்டு போயிடுறியா?" என டிபன் கேரியரைக் கொடுக்கவும், அவள் தயங்க.

"ஓவரா, நடிக்காத ஆத்தா. நாங்க யாருக்கிட்டையும் சொல்ல மாட்டோம். நீயே விசயத்தைச் சொல்லிட்டு போ." என அறிவு சொல்லவும், அத்தை மாமாவிடம் செல்லம் கொஞ்சி விட்டு, சாந்தியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.

மாடுகள் அனைத்துமே, தோட்டத்தில் தான் இருந்தது. கயல்விழி அங்குச் சென்று, ஓட்டு வீட்டில் சாப்பாட்டை வைத்து விட்டு அன்புவைத் தேட, செவிடன், "சின்னம்மாவா, ஐயா, கண்மாய்க்கு, அசுரனை நீச்சல் போட கூட்டிப் போயிருக்காரு" என விவரம் சொன்னான்.

"சாப்பாடு இங்க இருக்கட்டும், நான் போய்க் கூட்டிட்டு வாரேன்." எனக் கத்தியும், சைகையிலும் சொல்லிப் புரிய வைத்தவள், ஒற்றை ரோட்டில் கண்மாய்க் கரை நோக்கிச் சென்றாள்.

அன்பு, காலையிலேயே அசுரன் காளைக்கு மண்ணைக் கொம்பால் குத்தி எடுக்கப் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தான். "அசுரா, இந்தா,இந்தா..." என அதன் முன்னும், பின்னும் ஓட, அது ஆக்ரோஷமாக மண்ணைக் குத்தி அவனோடு மல்லுக்கு நின்றது. மணிக் கணக்கில் அதிலேயே இருவரும் களைத்து விட, கண்மாய்க்குக் குளிக்கச் சென்றனர்.

மாட்டை இறக்கி விட்டு நீச்சல் பழக்கி, அதன் மேல் தண்ணீர் அள்ளி தெளித்து, மண் வைத்துத் தேய்த்து என எல்லாச் சவரஷ்டனைகளையும் செய்து தானும் நீராடினான். பின்னர் உடையை மாட்டிக் கொண்டு, அசுரனின் வடக்கயிற்றையும் பிடித்து அழைத்துக் கொண்டு, கண்மாய்க் கரையில் வரும் போது தான் எதிரே கயல்விழி வந்தாள்.

அவளைப் பார்க்கவுமே, அன்புவுக்கு மனம் துள்ளியது, "அடியே, கயலு, விழி என் கவி, கண்ணழகி வாராலே. எத்தனை நாளாச்சு!" என மகிழ்ந்தவன் அவளை நோக்கி வேக நடை போட, கயலும் அவனை நோக்கியே வந்தால், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததில் மெய் மறந்து முன்னே வர, அசுரனும் ஈரடி பாய்ந்து விட்டான். மாமனையே பார்த்திருந்தவள், பின்னால் வந்து அசுரனைக் கவனிக்கத் தவற, அது ஏறிக் கொண்டு வந்ததில் வண்டியைப் பக்கவாட்டில் புதருக்குள் விட்டு, அவள் சமதளத்தில் கிடந்தாள்.

"கவி!!!" எனக் கத்தியவன், அவசரமாக அசுரனை ஒரு பக்கம் கட்டி விட்டே இவளிடம் ஓடி வந்தான்.

தன்னை முதலில் கவனிக்க வில்லை என அவள் கோபமாக அடிக்க, "அடியே, என்னடி???" என்றவனை, "என்னை விட, உனக்கு மாடு தான் முக்கியமா போச்சுல்ல?" எனச் சண்டைக்கு வர, அதிலேயே அவளுக்கு அடி ஒன்றுமில்லை எனப் புரிந்து கொண்டவன், "இரு வாரேன்." என அவள் வண்டியையும் புதரிலிருந்து எடுத்துப் பாதையில் நிறுத்தினான்.

" உன்னைக் கொல்லப் போறேன் பாரு." என அவள் மண்ணையும், சிறு கற்களையும் எடுத்து அவன் மீது வீச, "ஏய் இருடி வாரேன்." எனச் சிரித்தபடி வந்து அவளுக்குக் கை கொடுத்தான்.

' போ, நானே எந்திரிச்சுக்குவேன்." எனச் சிணுங்கியபடி அவள் எழ முயல, சுடிதார் எல்லாம் மண்ணாக, சேறு அப்பியிருந்தது. கால் மடங்கி மீண்டும் அதிலேயே விழ, அவன் ஹாஹாவெனச் சிரித்தபடி அவளைக் கைகளில் ஏந்தினான்.

"ஒன்னும் வேணாம், என்னை இறக்கி விடு. உன் மாட்டையே கட்டிக்கிட்டு அழு." எனக் கயல், கயல் போலவே துள்ளவும், அவளை இறங்கவிடாமல் சுலபமாகத் தூக்கிச் சென்றவன், கண்மாயின் தண்ணீர் இருந்த புறம் சென்று மேட்டில் உட்கார வைத்தவன், அவள் கால்களைப் பிடித்து ஆராய, சங்கடமாக "ஐயோ விடு மாமா..." என்றாள்.

"இல்லடி, எந்திரிக்கும் போது விழுந்தேயில்ல, கால் சுளுக்கி இருக்காண்டு பார்ப்போம்." என அவள் சுடிதார் பேண்டுக்கு மேலேயே காலைப் பிடித்து அசைத்துப் பார்க்க. ஆ வெனக் கத்தினாள்.

" லேசா தான்டி சுளுக்கியிருக்கு. என்னைப் பிடிச்சுகிட்டு தண்ணீல இறங்கு." என அவன் சொல்லவும்.

"வேண்டாம், நான் மண்ணோடவே இருந்துக்குறேன். நீ ஏதாவது வில்லங்கமா செய்வ!" என வேறு எங்கோ பார்த்துச் சொன்னாள் .

"அடியே, பரிசம் போட்ட பாதிப் பொண்டாட்டி, கல்யாணத்தன்னைக்கு நொண்டக் கூடாதேண்டு உனக்கு நல்லது செய்யப் போனா, என்னையவே சந்தேகப் படுறவ. எனக்கு ஐடியாவே இல்லை. நீதான் எடுத்துக் குடுத்துருக்க. இனிமே விடுறதா இல்லடி..." என அவளை வலுக்கட்டாயமாகத் தண்ணீருக்குள் இறக்கியவன், 

அவளைக் கை வளைவிலேயே வைத்துக் கொண்டு, மற்றொரு கையால் நீரை அள்ளி ஊற்றியவன், " ம்கூம் , இது சரிப்பட்டு வராது." எனச் சுற்றி முற்றிப் பார்த்து விட்டு, அவளோடு உள்ளே இறங்கியவன், அவள் மறுத்துச் சொன்ன மறு மொழிகளைப் புறம் தள்ளி, அவளைப் புதுமலராக மாற்றினான். 

பிடிமானத்துக்கு அவனைப் பிடித்துக் கொண்டவள் மனம் அவன் அண்மையை வேண்ட, புத்தி அயலாருக்காகப் பயந்தது. அவள் சங்கடம் உணர்ந்தவன், "அவ்வளவு தான்டி, மண்ணோட வீட்டுக்குப் போக முடியாதில்ல . அதுக்குத் தான், மாமன் தான சங்கடப்படாத." என ஆழ்ந்த குரலில் சொன்னவன் , மடமடவென, சேறை கழுவி, மேலே தூக்கி வந்து, முன்பே சூதானமாகத் தனியே எடுத்து வைத்திருந்த ஷாலை போர்த்தி விட்டு, அவளது வண்டியிலேயே வைத்து தன் இடத்துக்குக் கூட்டி வந்தான்.

"மாமா... உன் காளையை விட்டுட்டு வந்துட்ட?" என அவள் அக்கறையாக விசாரிக்கவும், " என்னையும், செவிடனையும் தவிர யாராலையும் அதை நெருங்க முடியாது. செவிடனை அனுப்பிக் கூப்புட்டுகலாம்." என்றவன், அதே போல் தங்கள் தோட்டத்துக்கு வந்து, கயல் ஈர உடையோடு இருந்ததால் சங்கடப்படுவாள் எனச் செவிடனை அனுப்பி விட்டான்.

சித்திரை மாதம் வெயிலில் அவள் சுடிதார் வரும் வழியிலேயே பாதிக் காய்ந்திருந்தது. " ஆமாம் என்னாடி இம்புட்டு தகிரியமா என்னைத் தேடி வந்திருக்க, நான் கூப்பிட்டப்ப மாட்டேண்டு சொன்ன." என்றான். அன்பு 

"பரிட்சை தேதி சொல்லிட்டாங்க." எனத் தான் வந்த விசயத்தைச் சொல்லவும்.

"குட், ஒழுங்கா படிச்சு டீச்சராகிற வேலையைப் பாரு. எனக்கு வேற கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாத மாதிரி, வேலை கிடைச்சும் ஆர்டர் கைக்கு வந்த பாடு இல்லை. மாமனுக்கு நீ டீச்சராகித் தான் கஞ்சி ஊத்தனும். அதுவும் நான் நல்லா திம்பேன். அந்தளவு சம்பாதிச்சிடுவேயில்லை." என அவன் ஏற்ற இறக்கத்தோடு கேட்கவும்.

"நான் பட்டினியா கிடந்தாவது, உன் வயிற்றை நிறைச்சுடுறேன் மாமா" என அவளும் அதே பாணியில் சொல்லவும். "அடிங்க, என் குரவைக் குட்டி. கையும் காலும் முளைக்கும் முன்ன பேச்சைப் பாரு!" என அவன் கையை ஓங்கவும், " அடிச்சிடாத மாமா, கொலை கேஷாயிடும்." என ஓங்கிய கைகளுக்கு நடுவே சென்று அவனைக் கட்டிக் கொண்டாள். 

அவ்வளவு தான் அன்பு , "என் கயல் கண்ணழகி, உன்னைப் போய் அடிப்பேனாடி. நீ தான் என்னைக் கொண்டுகிட்டு இருக்க." எனக் குழைந்தான்.

அவன் குரல் மாற்றத்திலேயே அவனிடமிருந்து விலகியவள், சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டே, "என் மாமா, மாடு வந்த அதிர்ச்சியில், நான் விழுந்து கிடக்கேன். என்னை விட்டுட்டு, உன் மாடைப் போய்க் கட்டிப் போடுற. என்னை விட உன் மாடு தான் உனக்கு உசத்தியா." என அவள் ஆதங்கமாகக் கேட்கவும்.

"நீதான்டி உசத்தி. அதுனால தான் அது வந்து உன் மேல பாஞ்சிறக் கூடாதேண்டு, முதல்ல அதைக் கட்டிப் போட்டேன" என விளக்கம் தந்தான்.

"அவ்வளவு ஆபத்தானதை எதுக்கு மாமா வளர்க்கிற . எனக்குப் பயமா இருக்கு மாமா." என அவள் சங்கடப்படவும் , அவளை முறைத்தவன், " உன் மாமன் மகன் என்னைப் பார்த்து சவால் விடுறான். அதைக் கேட்டு சும்மா இருக்கச் சொல்றியா. காளையை  கூட்டமா சேர்ந்து அடக்குறோமாம். அதைத் தான் பெரிய வீரமுண்டுச் சொல்லி, உன்னை மயக்கி கட்டுறேண்டு சொல்றான்." என அவன் கோபமாகப் பேசவும் .

"அது சொன்னா நிசமாயிடுமா. நீ மாட்டை, அடக்கினாலும், அடக்கலைனாலும், வளர்த்தாலும், வளர்க்கலைனாலும், எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. சின்னதிலிருந்து உன்னைப் பிடிக்கும். நீ இல்லைனா, நானும் இல்லை. அதைப் புரிஞ்சுக்க. சும்மா மாடு வளர்க்கிறேன் **** வளர்க்கிறேன்னு கடுப்பை கிளப்பிட்டு இருக்க." என அவள் சிடுசிடுக்கவும். அவளை வாய்பிளந்து பார்த்தவன்,

"சாது மிரண்டா காடு கொள்ளாதும்பாய்ங்களே, அது நீதான்டி. பூனை மாதிரி பதுமையா இருக்கவ, புலி மாதிரில பாயிற. திடீருண்டு ஒரு அசட்டுத் தைரியம் எங்கிருந்து வருதுன்னே தெரியலை, பெரிய வார்த்தையெல்லாம் பேசுற." என அவள் இயல்பை ஆராய்ந்த அன்புச் செல்வன், அவளை நிதானமாகத் தான் கையாள வேண்டும் என முடிவெடுத்தான். 

அவளைப் பற்றி ஆராய்ந்தவன், அவள் சொல்லின் பொருளை ஆராய்ந்திருந்தாள், பெரிய இழப்பைத் தவிர்த்து இருக்கலாம். விதி யாரை விட்டது. இனிமேலாவது புத்தியோடு பிழைக்கட்டும், பழைய நினைவுகளிலிருந்து வெளி வந்த அன்புச்செல்வன் , பதினோரு மணியை நெருங்கியிருந்த வேளையிலும் , பரவாயில்லை என , வெளியே சென்று பிசிஓ விலிருந்து யாருக்கோ போன் அடித்தான்.

"பழசை எல்லாம் மறந்துட்டு, நீ வாடா மாப்பிள்ளை..." என எதிர் முனை குரல் அழைக்க, "அந்தத் தைரியம் எனக்கு இந்த ஜென்மத்தில் வராதுடா. என்னை விட்டுருங்க." என போனை வைத்து விட்டு அறைக்கு வந்து சேர்ந்தான்.  கண்ணீரோடு படுத்தவன், நெஞ்சை அடைப்பது போல் ஒரு சோகம் மனதைக் கவ்வவும், அவசரமாக ஒரு தூக்க மாத்திரையைப் போட்டுக் கொண்டு படுத்தான்.

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!