தொடர் : 7
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூன்றாம் நாள், அலங்காநல்லூரில் போராட்டக்காரர்களைக் கலைந்து போகச் சொல்லி காவல்துறை உத்தரவு போட்டது. உள்ளூர்க்காரர்களைத் தவிர வேறு யாருக்கும் அங்கு அனுமதி இல்லை என மறுக்கப்பட்டது . மதுரையிலிருந்து அலங்காநல்லூர் வரும் பாதையை அடைக்கின்றனர். ஆனாலும் விடாமல் அங்குக் கூட்டம் கூடக் காவல்துறை வெளியூர்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது. போராட்டக்காரர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி காவல்துறை வாகனங்களில் ஏற்ற, போராட்டம் வலுவடைந்தது. ஏற்கனவே முகநூல் லைவ் மூலம் விசயம் தமிழகம் முழுவதும் தெரிய, மெரினாவில் இளைஞர்கள் கோஷத்தில் ஈடுபட்டுச் சாலையில் இறங்குகின்றனர்.
அலங்காநல்லூரில் உள்ளூர் மக்கள், தங்கள் ஊருக்காக, மக்களுக்காக, மண்ணுக்காகப் போராடிய இளைஞர்களை விடுவிக்கச் சொல்லி போராட்டத்தில் குதிக்கின்றனர். எல்லாத் தமிழ் ஊடகங்களும் மெல்ல ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நோக்கித் திரும்புகின்றன. ஆனால் ஊடகாரர்கள் படக்கருவிகளை உடைக்க, ஒரு கூட்டம் முயல ரசாபாசமாகிறது.
காலையில் சில உணவு பொட்டலங்களைக் கட்டிக் கொண்டு, கயல்விழி, கனிமொழி அக்காளும், தங்கையுமாகச் சித்தப்பா குமரவேலுடன் பைக்கில் அலங்காநல்லூர் கிளம்பினர். உமா முதலில் மறுத்தவரும் கூட, இதனால் கயலுக்கு ஏதாவது விமோசனம் வரட்டும் என அனுப்பி வைத்தார்.
முதல்நாள் கனிமொழி சொன்னது போல், அன்புவை பற்றிய காணொளி தயாரித்துத் தனுஷ் மூலமாகவே வெளியிட்டு இணையத்தில் பகிரலாம் என்று தான் வந்தனர். குமரவேல், மகள்கள் இருவரையும் கயல் சினேகிதி வீட்டுக்கு முன் நிறுத்தி விட்டு, ஊர்க்காரர்களைப் பார்க்கப் போக, கனிமொழி, "அக்கா, நீ உன் ப்ரெண்டு வீட்டுக்குள்ள போ. நான் தனுஷ் மாமாவை கூட்டிட்டு வரேன்." எனவும், கயல் விழி யோசனையாகப் பார்க்க. " நீ இரு. நான் வரேன். நமக்குக் காரியம் ஆகனும்னா. நாம தான் போகனும்" என்றாள்.
" இந்த அன்பு மாமா ப்ரெண்ட்ஸ், நேத்தே உன்னைக் கேட்டுச்சுங்க. பேசிட்டு இரு. நான் வரேன்" எனக் கனிமொழி தனுஷ் இருக்குமிடம் தேடிப் போகவும், அன்புவின் ஜல்லிக்கட்டு கூட்டாளிகளான ஜெகன், ரவி, சிவா, மாடன் ஆகியோர் கயல்விழியைப் பார்க்க வந்தனர்.
வேல்ஸ் க்ருப்ஸ் சார்பில் கலந்து கொண்டிருந்தவர்கள், குமரவேலோடு கயல்விழியைப் பார்க்கவுமே உணர்ச்சி வசப்பட்டுத் தான் போனார்கள். அவர்களில் மற்ற ஆட்கள் குமரவேலோடு ஏதோ ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
கயலைத் தேடி வந்தவர்களில், "தங்கச்சி, இந்தத் தடவை எங்கிருந்தாலும் அன்பு நம்ம ஊருக்கு ஓடி வருவான் பாரு." என மாடனும்
"ஆமாம்மா, சும்மா இருக்கவனெல்லாம் ஜல்லிக்கட்டுக்கு போராடுறானுங்க, அதைப் பத்தியே பேசுறானுங்க. நம்மாளு மாடுபிடி ஹீரோ, அவன் குரல் கொடுக்காமல் இருப்பானா. எங்கேயாவது கலந்துக்கிட்டு தான் இருப்பான். அவனால, விட்டுட்டு இருக்க முடியாது கட்டாயம் வந்துருவான்." எனச் சிவா சொல்லவும்
"எனக்கென்னமோ, இதுல எல்லாம் கலந்துக்காதுன்னு தான் அண்ணேன் தோணுது. அத்தைக்கு நடந்தது தான் உங்களுக்குத் தெரியுமே. அதுக்கப்புறம் மனுசரையே வெறுத்திட்டு போயிடுச்சு. மாட்டையா நினைக்கப் போகுது. எனக்கு நம்பிக்கையே இல்லை. கனி சொன்னாலேன்னு வந்தேன்." எனக் கயல்விழி நம்பிக்கையின்றிப் பேசவும். மற்றவர்களைக் கண் காட்டி அனுப்பி விட்ட ஜெகன்,போராட்ட சத்தம் அதிகமாகவும், தான் மட்டும் கயல்விழியை ஓரமாக அழைத்துச் சென்று பேசினான்.
"நம்பிக்கையை விடாத கயலு. அவன் வரலைனா என்ன, நாம அவனைத் தேடி சென்னைக்குப் போவோம்." என ஜெகன் அவளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகச் சொல்லவும்.
"மாமா, சென்னையில தான் இருக்குன்னு உனக்கு உறுதியா தெரியுமான்ணேன்?" என ஒரு நம்பிக்கை துளிர்க்க நேராக ஜெகன் முகத்தைப் பார்த்து உண்மை அறியும் விதமாகக் கேட்டாள்.
"கயலு, நான் கன்பார்மா தெரியவும் சொல்லலாம்னு இருந்தேன். நேத்து நைட் பேசினான் மா. எங்க என்னன்னு விவரம் கேட்டா சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டான். இன்னும் குத்தம், தண்டனைனு, ஏதேதோ பேசுறான். உன்னைத் தான் ரொம்பக் கேட்டான்." எனவும்
"எத்தனை மணிக்கு அண்ணேன் பேசிச்சு?" என ஆராயும் விதமாகக் கேட்டாள். "நைட் பதினோரு மணி இருக்கும் மா. சரி நம்பர் இருக்கே, அதை வச்சு ட்ரேஸ் பண்ணிடுவோம்னு நினைச்சேன். ஆனால் திரும்பி போட்டா, சென்னையில் இருக்கப் பிசிஓ ன்னு சொல்லிட்டாங்க." என அவன் சொல்லவும், தனது மெயிலைப் பார்த்தபிறகே பேசியிருக்கிறான் என்பதைப் பூரணமாக நம்பிய கயல்-விழிகள் கலங்கி கண்ணீர் முத்துக்கள் சிதறின. தன்னைச் சமாளித்துக் கொண்டவள்,
"ரொம்பத் தாங்க்ஸ் அண்ணேன். நேத்து, அன்பு மாமா உசிரோடு இருக்குமான்னு தெரியலைனு, அவுங்க அப்பா சந்தேகப் பட்டார். மாமா உசிரோட இருக்கிறதை சொல்லிட்டிங்க. திரும்பப் பேசினா நான் உசிர் வாழுறதுக்கு ஒரு காரணத்தைச் சொல்லச் சொல்லுங்க.". என அவள் கண்ணீரைத் துடைக்கவும்.
"கயலு, எதாவது தப்பான முடிவு எல்லாம் எடுக்காதம்மா. அவன் வந்துருவான். நான் கண்டுபிடிச்சு கூட்டியாறேன். உனக்கு ஞாபகம் இருக்கா, அன்னைக்குச் சிங்கபுணரிக்கு நான் தான் கூட்டிட்டுப் போய் அவனோட சேர்த்து விட்டேன். அதே மாதிரி சேர்த்து வைக்க ஒரு சான்ஸ் கொடு . உன் கூடப் பிறந்தவனா நினைச்சுக்க." என அவன் மன்றாடிக் கேட்கவும், தலையை மட்டும் ஆட்டி விட்டு அவள் தோழியின் வீட்டுக்குள் சென்று விட்டாள். ஆனால் இது மட்டும் போதாது. கனி மொழியிடமும் பூடகமாகச் சொல்லி எச்சரித்து வைத்தான் ஜெகன்.
கயல்விழி தனது சினேகிதியைப் பார்க்கச் சென்றவளுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜல்லிக்கட்டில் அன்பு கலந்து கொண்டதும், தான் வந்து நின்று பதைப்போடு பார்த்ததும் தான் நினைவில் வந்தது. திரண்ட கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சினேகிதியைப் பார்க்கச் செல்ல, அவளுக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்தது. அவள் வெகு நாள் கழித்துச் சந்தித்த தோழியிடம் தன கதையைச் சொல்லிக் கதைத்துக் கொண்டிருந்தாள்.
தனது மகளை, தன் வீட்டில் எப்படிக் கொண்டாடுகிறார்கள் எனச் சொன்னவள், “என் புருசனோட அப்பத்தா கிழவி, நான் கல்யாணம் ஆகிப் போகவும் மண்டையைப் போட்டிச்சுடி, சரி காசுக்கார கிழவி, வருஷம் திரும்பறதுக்குள்ள, என் மகள் பிறக்கவும், அதுவே வந்து பிறந்துச்சுன்னு அவுங்களுக்கு நம்பிக்கை. சரி நம்மளையும் நல்லா கவனிச்சுக்கிறாங்களேன்னு, அந்தக் கிழவி பேரையே வச்சுட்டேன் “ எனக் கதைத்தவள்,
“அன்பு அண்ணனும், உன் கழுத்திலே காலாகாலத்தில தாலியைக் கட்டி பிள்ளையைப் பெத்துருந்தா, உங்க அத்தையே வாவது வந்து பிறந்திருப்பாக. அண்ணனும் இப்படி மனசை விட்டுட்டுக் கண்காணாமல் திரியாது.” என ஒரு புதுக் கோணத்தைச் சொல்லவும், கயல்விழியின் கண்ணில் ஓர் நம்பிக்கை வந்தது.
“நிஜமாவே செத்தவங்க அப்படி வருவங்களாடி?“ எனக் கயல் சந்தேகம் கேட்கவும், “அப்படித் தான் சொல்லுதுங்க, எனக்கு மட்டும் என்னா தெரியும். ஆனால் இது, என் மகள் குத்தி வைக்க , பொக்க வாயை வச்சுக்கிட்டு சிரிக்கும் போது , அந்தக் கிழவியாட்டமே இருக்கும்டி. எனக்குக் கூட இவைங்கே சொல்லையில, அது ஆவி தான் வந்துருச்சோண்டு பயமா இருக்கும். அப்புறம் நம்ம வயித்தில வளர்ந்து பிள்ளை தானேன்னு தகிரியம் ஆயிடுவேன்.” என அவள் கண்ணை உருட்டி முழித்து நகைச்சுவையாகச் சொல்ல, கயல்விழியும் தன்னை மறந்து சிரித்தாள்.
அவள் சிரிப்பு தோழியின் நகைச்சுவை பேச்சுக்கு மட்டுமல்ல, சிவகாமி அத்தையே தனக்கு மகளாக வந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையிலும் தான். கயல் அவளோடு பேசிக் கொண்டிருந்த போது வெளியே பெரிய சத்தம் கேட்டது.
காவல்துறை போராட்டக்காரர்களைக் கைதி செய்யும் நடவடிக்கையில் இறங்கி மீதி ஆட்களையும் கைது செய்ய, வேண்டுமென்றே ஒரு கூட்டம் அவர்கள் மீது கல்லை விட்டு எரிந்தது . அது போராட்டக்காரர்களைக் கைது செய்யும், காவலர்களைக் குறி வைப்பதாக மேற்பார்வைக்குத் தெரிந்தாலும், அவர்களுடைய இலக்கு போராட்டக்காரர்களாகவே இருந்தனர்.
ஏனெனில் ஒரு குழுவைக் காவல் துறை கைது செய்தால், மற்றொரு குழு எங்கெங்கு இருந்தோ புற்றீசல் போல வைத்துக் கொண்டிருந்தனர். அலங்காநல்லூர் மக்களுக்கே பரிச்சயமில்லாத வழித் தடத்தில் எல்லாம் கூகுள் மேப்ஸ் வழிகாட்டலுடன் வந்து சேர்ந்தனர். அவர்களையும் சேர்த்து மிரட்ட சில சக்திகள் இந்த முயற்சியைச் செய்தனர். அந்தத் தாக்குதலிலிருந்து தப்பித்துக் கனிமொழி, தனுஷ் உள்ளிட்ட சிலரை அவர்களது உபகரணங்களோடு கயல்விழி தோழி வீட்டுக்கு அழைத்து வந்தாள்.
குமரவேல் இது போன்ற பிரச்சனைகளில் களத்தில் முன் நிற்பவன், உள்ளூர் ஆள், கம்யூனிச சித்தாந்தம் கொண்டவனாகையால் கல் எறியும் கலகக்காரர்கள் யாரெனப் பார்த்து, தனது வேல்ஸ் க்ரூப்ஸ் பசங்களையும், மற்ற ஜல்லிக்கட்டு வீரர்களையும் வைத்தே அவர்களை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தார்.
தனுஷின் டீம், அந்த வீட்டுக்குள் இருந்தபடியே, வெளியே நடப்பவைகளை லைவ் செய்து பேச, பேச முகநூலில் இளைஞர்கள் வெகுண்டனர். இரண்டு மூன்று பதிவுகளைச் செய்த தனுஷ், அப்போது தான் கயல்விழியைப் பார்த்தான்.
கயல்விழியைச் சிறுவயதில் பார்த்தது தான். நான்கு வருடம் முன்பு, அவனது அப்பா பெருமாள் சாமி, தங்கை மகளை மணந்து கொள்ளச் சொல்லிக் கேட்டபோதும், டிகிரி படித்த பெண் என்பதால் எங்கு வந்தாலும் சமாளித்துக் கொள்வாள் என்பதைக் கணக்குச் செய்து, சம்மதம் தெரிவித்தான். ஆனால் அடுத்த நாளே அன்பு கயலைப் பற்றித் தெரியவரவும் , அவனுக்குப் பெரிய பாதிப்பு இல்லை. மூன்று மாதத்தில் யூ எஸ் சென்றவனுக்குச் சிவகாமி இறந்தது, கயல்விழி திருமணம் நின்றது எல்லாம் செவி வழி செய்தியாக மட்டுமே தெரியும்.
ஆனால் அவளை நேரடியாகப் பார்க்கவும், அவள் அன்புவை எவ்வளவு நேசித்திருப்பாள் என்பது புரிய வந்தது. பசலை நோய் கண்ட பாவையாக உடல் சிறுத்து நேற்றைய மாமாவின் அறிவிப்புக்குப் பிறகு ஆள் ஒரேடியாக ஓய்ந்து போயிருந்தாள். ஆனால் மற்றவர் அறியாத ஒன்று, அவள் மெயிலில் அன்புக்கு எழுதிய விசயம். அந்த முடிவை எடுத்த பிறகு, மிகவும் இறுக்கமாகவே இருந்தாள்.
கயல்விழி, தனுசைப் பார்க்கவும், சங்கடமாக உணர உள்ளே ஓடி விட்டாள். ஹாலில் அமர்ந்திருந்தவர்களுக்கு, கயலின் சினேகிதி வீட்டினர் உதவி செய்தனர். தனுஷ், கனியிடம், "உன் அக்கா, ஏன் இப்படி ஆயிட்டா. அன்புவைத் தேட நீங்க எல்லாம் முயற்சியே பண்ணலையா?" எனக் கேட்டான்.
"அத்தையை இழந்த வருத்தத்திலையும், கோபத்திலையும் முதலில் யாருமே தேடலை. சரி கொஞ்ச நாள்ல அன்பு மாமா, வந்திடும், வந்திடுமின்னு பார்த்திட்டே இருந்தோம். எல்லாரும் அத்தை போன சோகத்துலையே இருந்தவுக, அக்காவைப் பார்க்கவும் தான் அன்பு மாமா தேடனும்னு தேட ஆரம்பிச்சாங்க. அத்தை இறந்தன்னைக்கு அதுக்கு ஏதோ வேலைக்கு ஆர்டர் வந்துச்சாம், அதில சேர்ந்திருக்குமுன்னு போயி பார்த்தா அங்கையும் இல்லை, பேப்பர்ல போடவும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க . ஆனால் மாமா, வரும், வருமுன்னு காத்திருக்கோம், அந்தக் காத்திருப்பே மூணு வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு." என்றவள், "அதுக்குத் தான் உங்கள்ட்ட ஹெல்ப் கேட்கலாம்னு வந்தோம். இங்கையே பிரச்சினையா கிடக்கு." என வருந்தினாள்.
"கொஞ்சம் நேரம் தான், அடுத்தச் செட் பசங்க வந்திட்டு இருக்காங்க. அதுக்கப்புறம் அன்பு விசயத்தைப் பார்ப்போம்" என மடிக்கணினியில் தனுஷ் தன் வேலையைப் பார்க்க,
அன்புவின் கூட்டாளி சிவா ஓடி வந்தவன், " உங்க குமரவேல் சித்தப்பாவுக்கு அடிபட்டிருக்கு. போராட்டத்தைக் கலைக்கனுமுன்னு வந்த கலகாரங்களோட சண்டை போட்டார். கால்ல நல்ல அடி" எனச் சொல்லவும், உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த கயலும், கனியும் வெளியே ஓட, தனுஷ் அவசரமாகத் தனது உடைமைகளைப் பேக் பண்ணிக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தான்.
போலீஸ் கண்களிலிருந்தும் மறைத்து மற்றொரு வீதியில் ஒரு வீட்டில் அமர்ந்திருந்தார். சட்டையெல்லாம் இரத்தமாகப் பார்க்கவும், இருவரும் "குமாரப்பா" எனக் கதறி விட்டனர்.
" ஒன்னுமில்லடா. சத்தம் போட்டு ஊரைக் கூட்டாதீங்க. கூட்டத்தில கல்லெறிஞ்சு கலகம் பண்ணவைங்களைத் துரத்திட்டு வந்தேன். கத்தியால கீச்சிட்டு போயிட்டானுங்க. அழுகாதீங்க கழுதைகளா." என்றவன் , அன்புவின் மற்றொரு நண்பன் ஒரு மருத்துவரை கூட்டி வந்து அங்கேயே ரகசியமாக வைத்தியம் பார்த்தனர். தனுஷும் தனது காரோடு வந்து சேர்ந்தவன், அன்புவின் நண்பர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, கயல், கனி குமரவேல் மூவரையும் அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றான்.
மெரினாவில், அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டதின் எதிரொலியாகப் பீச் ரோட்டில் இருபுறமும் இளைஞர்கள் கூடி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். பொங்கல் விடுமுறை முடியவும், கல்லூரி அலுவலகம் சென்று விடுவார்கள் என அரசு கணக்கிட்டதுக்கு விபரீதமாக, கல்லூரியிலிருந்து மொத்தமாக வண்டிகளில் சென்னை மாநகரமே மெரினாவை நோக்கிப் படையெடுக்க, பீச் ரோடு ஸ்தம்பித்தது.
"அலங்காநல்லூரில் கைது செய்தவர்களை விடுதலைச் செய்" என்ற குரலே ஓங்கி ஒலித்தது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கடற்கரையை நோக்கி வர, சாலை போக்குவரத்திலும் நெருக்கடி வந்தது. முதல் நாளில் எல்லாம், போராட்டத்தை ஓரமாக நின்று போக்குவரத்துக்கு ஒத்துழைத்த இளைஞர்கள், இன்று வேண்டுமென்றே ஒத்துழையாமையைக் கையில் எடுத்தனர். காவல்துறையைக் கண்டித்தும், அரசை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன
இரவில் மாத்திரை உதவியோடு நித்திரை கொண்ட அன்புச் செல்வன், காலையில் அவசரமாக எழுந்து பணிக்கு ஓடிவந்தான். இன்று கூட்டத்தைக் கட்டுப்படுத்த, கொஞ்சம் காவல்துறை யுக்தியைப் பயன்படுத்த வேண்டியது இருந்தது.
சாலைகளில் நின்றவர்களை, ஓங்கி ஒலித்த சத்தத்தோடு காவல்துறை கட்டுப்படுத்த, இளம் இரத்தத்தினர் கொதித்தனர். சரியாக அன்பு நின்ற இடத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் சைரன் அலறிக் கொண்டு வர, இங்கங்கும் இளைஞர்கள் ஒதுங்க நினைத்ததே, அதைச் செயல்படுத்த இயலாமல் போனது.
ஆம்புலன்ஸில் முன் சீட்டில் அமர்ந்திருந்த, ஆடவர் கண்ணீர் மல்க, " சார், எங்கம்மா சார், உள்ள சீரியஸா இருக்காங்க. தயவு செஞ்சு. ட்ராபிக்கை கிளியர் பண்ணி விடுங்க" எனக் கண்ணீர் மல்க கை கூப்பவும், அன்புச் செல்வன் உணர்ச்சி வசப்பட்டவனாக, ஆக்குரோசமாக அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தி ஆம்புலன்ஸ் க்கு செல்ல வழி விட, இளைஞர்களும் ஒத்துழைத்தனர்.
ஆனால் ஆம்புலன்ஸில் இருந்த மகன் கதறியது, அவனது சிந்தையை விட்டு அகலாமல் அவனைப் போட்டு அழுத்த, தன்னைச் சமாளிக்க மிகவும் சிரமப்பட்டான். அவனோடே இருக்கும் சக காவலன் தர்மா ," செல்வா, இந்தப்பக்கம் வா." என ஒதுக்குப்புறமாக இழுத்துச் சென்றான்.
அதற்குள் மேலதிகாரிகளிடமிருந்து அழைப்பு வர, முதல் நாள் இவர்களோடு பேசிக் கொண்டிருந்த விஜய் என்ற இளைஞன் அருகில் வர, தடுமாறி நின்ற சக காவலனை அவனிடம் ஒப்படைத்து, " தம்பி, இவரைத் தனியா கூட்டிட்டு போ. கொஞ்சம் சமாளிக்கவும் அனுப்பி வை." எனத் தீவிரமான முகத்தோடு சொல்லவும், சற்று முன் அன்பு, ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததைப் பார்த்திருந்தவன், பிரச்சனையின் தீவிரம் உணர்ந்து அன்புச் செல்வனை ஒரு மறைவிற்கு அழைத்துச் சென்றான்.
முகம் வேர்த்து விறுவிறுக்க, "தண்ணீர்." எனச் சைகை காட்டிய அன்புவுக்குத் தன் பேகிலிருந்து அவசரமாகப் பாட்டிலைத் திறந்து கொடுத்து, " என்ன ப்ரோ ஆச்சு?" எனப் பதறவும். கையைப் பொறு எனச் சைகை செய்தவன், பாக்கெட்டிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டு, அப்படியே சாய்ந்து அமர்ந்தான். கண் முன்னே ஆம்புலன்ஸில் கிடந்த அம்மாவும், அந்தச் சைரன் சத்தமும் அவனை நிலைகுலையச் செய்தது. மாத்திரையின் தாக்கம் அவனில் பதட்டம் குறைந்து அமைதி வந்தது. சிறிது நேரத்தில் காவலன் ஆசுவாசமடைந்து, தண்ணீர் ஊற்றி முகத்தைக் கழுவி கொண்டு எழுந்தான்.
" நன்றி தம்பி. இந்த உதவியை எப்பவும் மறக்க மாட்டேன். உனக்கு என்ன வேணும்னாலும் என்னைக் கேளு." என அவன் மொபைலை வாங்கித் தன் நம்பரைப் பதிந்து கொடுத்து , நிமிடத்தில் மிடுக்கான போலீஸ்காரனாக மாறினான் சி ஏ செல்வன்.
மென் பொறியாளன் விஜய், அந்தக் காவலன் செல்வனை ஆச்சரியமாகப் பார்த்தவன், " ப்ரோ, கொஞ்ச நேரத்தில உங்ககிட்ட எத்தனை மாற்றம். இது சரியில்லையே ப்ரோ. உங்கள் பிட்னெஸ் சமநிலையிலேயே இல்லையே." என அக்கறையாகக் கேட்கவும்.
"ஏய், நான் நல்லா தான் இருக்கேன். நீ ஒரண்டை இழுத்துவிடாத." எனவுமே, ஆச்சரியமாகப் பார்த்தவன், "ஒரண்டையா, மதுரைக்காரரா நீங்க?" என ஆர்வமாகக் கேட்டான் விஜய்.
"இங்கபாரு. எனக்குச் சமயத்துக்கு உதவி பண்ணியிருக்க. அதுக்கு நன்றி. பதிலுக்கு நானும் உனக்குச் செய்வேன். அத்தோட நிறுத்து. சும்மா என்னைப் பற்றி ஆராயற வேலை எல்லாம் வேண்டாம்." எனக் கடுமையாக எச்சரித்தான்.
ஆனால் விஜய் அவன் மிரட்டலை எல்லாம் பொருட்படுத்தாமல் , "ப்ரோ, உங்க பிபி, அவ்வளவு ஏறி இறங்குது. நீங்க இந்த வேலைக்குப் பிட்டே கிடையாது. தேவையில்லாமல் உங்க உயிரோட விளையாடாதீங்க." என அக்கறையாக எடுத்துச் சொல்லவும்.
"டேய் என்ன, இதை வீடியோ எடுத்து வச்சிருக்கியா. பேஸ்புக் ல போட்டு ட்ரெண்டிங் ஆக்குவியா. ஆக்கிக்க. அது தான உங்களுக்குத் தெரியும்." என அன்புச் செல்வன் சட்டெனப் பொங்கவும். “கூல் ப்ரோ, கூல், எதுக்கு இவ்வளவு டென்ஷன்?“ என்றவன்
"ஒரே ஊர்க்காரர், உங்களுக்காக எவ்வளவு ஃபீல் பண்ணி பேசுறேன். நீங்க இப்படிப் பேசுறீங்க. முதல்ல உங்க ஹெல்த்தை பாருங்க." என அக்கறையாக வலியுறுத்தவும், அவனை எரித்து விடுவது போல் ஒரு பார்வை பார்த்து விட்டுக் கூட்டத்தை நோக்கி நடந்தான் அன்புச் செல்வன்.
விஜய், "மிஸ்டீரியஸ்." என அன்புவை பார்த்துக் கொண்டே பின் தொடர்ந்தவன், தன் குழு இருக்குமிடம் சென்றான்.
அன்புவின் மனம் , ஆம்புலன்ஸில் சென்ற அந்தத் தாய் பிழைத்தாரா என அதைச் சுற்றியே வலம் வந்தது. "அன்பு, அம்மா உன்னை விட்டு எங்கையும் போகமாட்டேன். உங்கிட்ட திரும்பி வந்துடுவேன்." என்ற சிவகாமியின் குரல் அவன் காதுகளில் எதிரொலிக்க, தன்னைச் சமாளிக்க இயலாதவனாக அரை நாள் விடுப்பெடுத்து தன் அறைக்கு வந்து சேர்ந்தான். நினைவுகள் ரணமாக அவனைத் தாக்கியது.