Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு அத்தியாயம்-20 .

வகைகள் : தொடர்கள் / நீயே எந்தன் மகளாய்-தீபா செண்பகம் (முடிவுற்றது)

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


தொடர்கள்

அத்தியாயம்-20 .

20மீண்டு வந்த சிவகாமியின் செல்வன். 

க்ரூப்1 தேர்வில் தேர்வாகி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிக்குச் சேர்ந்த அன்புச்செல்வன் ஆறுமாத காலப் பயிற்சிக்குப் பிறகு, முதல் போஸ்டிங்காக அந்த வருட ஜல்லிக்கட்டு போட்டியை அலங்காநல்லூர், பாலமேடு, சிவகங்கை சுற்றுவட்டார பகுதிகளில் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி நீதிமன்ற வழிகாட்டுதலோடு நடத்தும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டான்.

அதற்கான அரசாங்க ஆணை வந்தது. அதைக் கையில் வாங்கியவனுக்கு, அழுவதா, சிரிப்பதா, தனக்கு மகிழ்ச்சியா, வருத்தமா என எதையுமே வரையறுக்க இயலவில்லை. தாயே மகளாகப் பிறந்தார் என்ற திருப்தி இருந்த போதும், அன்புவால் சட்டென ஊருக்குச் செல்ல முடியவில்லை. கைக்குழந்தையையும் வைத்துக் கொண்டு கயல்விழி தான், கணவனுக்காக அத்தனையும் பொறுத்துச் சென்னையில் தங்கியிருக்கிறாள் .

தீபாவளியைக் கணவனோடு கொண்டாட எனக் கயல்விழி, பிறந்த வீட்டுக்குச் சென்றவள் அடுத்த மூன்றாம் மாதத்திலேயே சின்னசாமி, அறிவு குடும்பத்தைச் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டாள். குடும்பமாக நான்கு நாள் பொழுதைப் போக்கிய பின் மாடு கன்றைப் பார்க்க வேண்டும் எனவும், கதிர் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்று அறிவு ஊருக்குக் கிளம்பிவிட, சின்னசாமி மட்டும், மருமகளுக்குத் துணையாகப் பேத்தியைப் பார்த்துக் கொண்டும், மகன் அருகில் இருக்கும் நிம்மதியோடும் சென்னையில் தங்கினார். அவரும் மார்கழி பிறக்கவும் ஊருக்குச் செல்ல,

கயல்விழிக்கு எட்டு மாத குழந்தையான சிவகாமியைச் சமாளிப்பதே பெரும்பாடாக இருந்தது. வேகமாகத் தவக்கவும், எழுந்து நிற்கவும் பழகியிருந்த சிட்டு, கீழே ஒரு பொருளை வைக்க விடுவதில்லை. ஆனாலும் கணவனிடமிருந்து மகளாகி வந்து சிவகாமியைப் பிரிக்க இயலாமல் தானே பார்த்துக் கொண்டாள்.

அன்று காலை முதல் ஆட்டம் காட்டிய மகளை அப்போது தான் வயிற்றுக்குக் கொடுத்து, ஒரு மணிநேரம் தாலாட்டு பாடி தொட்டிலை ஆட்டி ஒரு வழியாகத் தூங்க வைத்து, கதவைச் சாத்தி வைத்துவிட்டு வந்தமர்ந்தாள்.

இரவில் வீட்டுக்கு வந்த அன்பு, "சிவகாமி , அதுக்குள்ள தூங்கிடுச்சா?" என வினவவும், இவள் முறைத்தபடி "மெல்லமா பேசு மாமா, உன் சத்தம் கேட்டா, எந்திரிச்சு ஆட கிளம்பிடும். நான் இப்பத் தான் கஷ்டப்பட்டு ஆட்டி தூங்கவச்சிட்டு வந்திருக்கேன்." எனக் கடிந்துக் கொள்ளவும்.

"நான் வர்றதுக்குள்ள, என் மகளை எதுக்குடி தூங்க வச்ச?" என்றவன், உடை மாற்றி வர, இருவருமாகச் சாப்பிட்டு வந்து ஹாலில் அமர்ந்தனர். மனைவியிடம் பணி நியமன ஆணையைக் காட்டவும், அவள் கலகலவென வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்.

“அடியே, என்னடி லந்தா, எதுக்குச் சிரிக்கிறவ?" என முறைத்தான். "இல்லை, இல்லை சீரியஸ் மாமா..." எனச் சிரிப்பை அடக்கியவள், தண்ணீர் குடித்து அதை அடக்கவும், "என்னண்டாவது சொல்லிட்டு சிரிச்சுத் தொலை!" என்றான் எரிச்சலாக.

"இல்லை, உன்னை ஊருக்கு வரவழைக்கிறதுக்கு, வீட்டில எல்லாரும், விதவிதமா ட்ராமா போட்டுப் பார்த்தாக. ஆனால் நீ எதுக்குமே மசியலை. கடைசில அரசாங்கமே இப்படிச் சதி பண்ணி உனக்கு ஆணையிட்டிருக்கேன்னு நினைச்சேன்." என்றவள், அவன் உச் எனவும், 

"ஆனால் ஒன்னு மாமா, வேலை வேணுமுன்னா உங்க அம்மா வாங்கிக் கொடுத்திருக்கலாம். ஆனால் இந்தப் போஸ்டிங் ஆர்டர் எங்கம்மா தான் வாங்கிக் கொடுத்தது." எனப் பூடகமாகச் சொல்லவும்.

"ஏன்டி, உங்க குடும்பத்துக்கு, அம்புட்டு செல்வாக்கா என்ன. யாருக்கு, எம்புட்டு லஞ்சம் கொடுத்தீங்க?" என அவன் கோபமாகக் கேட்கவும்.

"ம்க்கூம், எங்களுக்குத் தெரிஞ்ச ஒரே ஆபீஸர் நீதான். நாங்க யாருக்கிட்ட போய்க் காசு கொடுக்கப் போறோம். ஆனால் எங்கம்மா லஞ்சம் கொடுத்திருக்கு. ஊரில் இருக்க மாரியாத்தா, காளியாத்தா, பிள்ளையார், முருகன், முனியாண்டி ஒருத்தரை விட்டு வைக்கலை. நம்ம சித்துப் பிறக்கவுமே, நீ ஊருக்கு வருவேன்னு எதிர் பார்த்துச்சு. வரலைங்கவும் இன்னும் இரண்டு சாமிக்கு எக்ஸ்ட்ராவா நேந்திருக்கு." என வேடிக்கையாகவே சொன்ன போதும், அவனை எல்லாரும் எவ்வளவு எதிர் பார்க்கிறார்கள் என்பதை எடுத்துச் சொன்னாள்.

ஷோபாவில் அவளருகே அமர்ந்திருந்தவன், அவள் மடியில் சாய்ந்து கொண்டு, "நான் என்ன ஃபீல் பண்றேன்டே எனக்குப் புரியலைடி?" என்றான்.

"இன்னும் எத்தனை வருஷத்துக்கு ஊருக்குள்ள போகாமலே இருப்ப மாமா. இன்னைக்கு இல்லைனாலும், நாளைக்குப் போய்த் தான் ஆகனும். நல்லதுக்கு வேணா போகாமல் இருக்கலாம், நாளைக்கே அப்பத்தாக்கு ஒன்னுன்னா, ஊருக்கு போகாம இருக்கமுடியுமா?" எனவும் சட்டென எழுந்து அவளை முறைத்தான்.

"அட, நெருப்புன்னா வாய் வெந்தா போகும். ஒரு பேச்சுக்குச் சொல்றது தான்." என்றவள், "வேலைக்குச் சேர்ந்து முதல் ஆர்டரா , உனக்குப் பிடிச்ச ஜல்லிக்கட்டுக்கு, அதை நடத்திற ஆபீஸரா போட்டிருக்காங்க. எந்த வாடில நிண்டு மாடை அடக்கினியோ, அது எல்லாத்தையும் நடத்திக் காட்டுற பொறுப்பு. எங்களுக்கெல்லாம், எம்புட்டு பெருமையா இருக்கும் யோசிச்சியா. போலீஸ்னா பயப்படுற நானே, உன்னைக் காக்கி உடுப்பில் பார்க்க ஆசையா இருக்கேன். என்னா மாமா நீ?" எனக் குறை பட்டவள்,

"இதே அத்தை இருந்திருந்தா நீயே எம்புட்டு கர்வமா, தோரணையா ஊருக்குள்ள திரியிவ. அதே மாதிரி வா. அது தான் அத்தையே உன் மகளா வந்திருச்சில்ல, இன்னும் என்ன தயக்கம், பிடிவாதம்." என வாதாடியவள் அவனைத் தங்கள் ஊருக்குள் காக்கிச்சட்டையோடு, யாரையெல்லாம் அதிகாரம் செய்யலாம் எனப் பட்டியலிட்டு, யார் என்ன சொல்லுவார்கள் என அவர்களைப் போலவே சொல்லிக் காட்ட, அன்பு வழக்கமான ட்ரேட் மார்க் புன்னகையோடு ஹாஹாவெனச் சிரிக்க, அறையில் வேகமாகக் காலை ஆட்டும் கொலுசு சத்தம் கேட்டது.

"இப்படித் தான் சிரிப்பியா, உன் மகள் எந்திரிச்சிட்டா பாரு. இனி சிவராத்திரி தான்!" எனப் புலம்பியபடியே கயல்விழி எழுந்து ஓட, "எந்திரிச்சா, எந்திரிச்சிட்டு போகுது. நானும் என் மகளுமா கொஞ்சிக்கிறோம். நீ வேணா படுத்துத் தூங்கு." என்றபடி அவனும் பின்னாடியே அறைக்குள் செல்ல, அதற்குள் காலை உதைத்து உதைத்தே தொட்டியிலிருந்து பாதி இறங்கியிருந்தது சிவகாமி சித்து.

"சித்துக் குட்டி, என்னடி பண்ற, விழுந்திடாத. அம்மா வந்துட்டேன்." என அவள் தூக்கவும், "ஆத்தா, சிவகாமி!!!" என வந்த தகப்பனைப் பார்த்து, பொக்கை வாய் தெரியச் சிரித்து மகிழ்ந்து "அம்பெய்..." எனச் சத்தம் கொடுத்தது. அவனும் அள்ளி அணைத்துக் கொண்டான்.

"சிவகாமி, அப்பா சத்தம் கேட்கவும் எந்திருச்சிட்டாங்களா, என் ராசாத்தி, எனச் செல்லக்குட்டி, என வெல்லக்கட்டி , அப்பா சத்தம் கேட்கவும் எந்திரிச்சிட்டீங்களாடா , நாம விளையாடலாமா, புடிச்சா!!!" என மகளிடம் கொஞ்சி, கண் பொத்தி, திறந்து விளையாட, அதுவும் தகப்பனோடு அகமகிழ்ந்து போனது.

 "இதெல்லாம் சரி, அப்பாவும் மகளும் ஊருக்கு வாரீங்களா இல்லையா?" என கயல் கேட்கவும், "அம்பேய் ஊக்கு!" எனக் கதவைக் காட்டியது. "சிவகாமி என்னடி சொல்லுது?" என்றான். 

"அன்பு ஊருக்கு போகலாம்னு சொல்லுது, என் மாமியா!" என அவள் சேர்த்து சொல்லவும், அவள் மறுமுறை துணிமணி எல்லாம் பேக் பண்ணவா என கேட்டபோது சரி எனத் தலை ஆட்டினான். 

அதன் பிறகு கயல்விழி பம்பரமாகச் சுழன்று, ஊருக்கு டமாரமும் அடித்து விட்டாள். தங்கைக்குப் போன் செய்து சொல்லவும், "நானும் ஊருக்கு போகலாம்னு தான் அக்கா பார்க்கிறேன், இங்க எனக்குத் தலையே தூக்க முடியலை." எனக் கனிமொழி விசேஷ செய்தியை சொல்லவும், அடுத்த நாளே சென்று தங்கையைப் பார்த்து வந்தாள். அவர்கள் வண்டி முன்னே கிளம்ப , இவர்கள் வண்டி பத்து நாள் கழித்துக் கிளம்பியது.

அன்புச்செல்வன், ஒருவழியாக மனம் தேறி , டிசம்பர் கடைசியில், மதுரை எஸ்பி அலுவலகத்தில் கையொப்பமிட்டு தனது பணியைத் துவக்கியவன், நேராக மனைவி மகளோடு இராஜக்காள்பட்டியை நோக்கி காரை செலுத்தினான். விடிந்தால் புதுவருடம், சிவகாமி இல்லம் இவர்கள் வரவை ஆவலோடு எதிர் பார்த்திருந்தது. சின்னச்சாமி, அறிவு , சாந்தி அவர்களது மகன் கதிர் மட்டுமின்றி, குமர வேல் குடும்பமும் அங்கு ஆஜராகி இருக்க, 

அலங்காநல்லூர் வரவுமே அன்புவுக்கு உணர்வு பெருக்குத் தாங்கவில்லை. அதற்கு மேல் காரை செலுத்தவும் முடியாதோ எனத் தோன்றும் நேரம், உயிர் நண்பர்கள் அங்கே பிரத்தட்சயமாக, மீதி தொலைவை ஜெகன் ஓட்டி வர , இரண்டு பக்கமும் எஸ்கார்டு போல், அவனது நண்பர்கள் இரு சக்கர வாகனத்தில் வீடு வரை வந்தனர்.

அன்பு எவ்வளவு சமாளித்துப் பார்த்தும், கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை, அன்று டிராக்டரில் துள்ள, துடிக்க அம்மாவை  தூக்கிப் போட்டுச் சென்றதே நினைவில் வந்து கண்ணீர் விட, கயலிடமிருந்து, அன்புவிடம் தாவிய சித்துப் பாப்பா, அவனது இரு கன்னத்திலும் "அவ்வ்!" என முத்தமிட்டது. அதிலேயே சமநிலைக்கு வந்தவன், " ஆத்தா சிவகாமி, அழுவாதன்னு சொல்றீங்களா. அழுகலை டா. அழுகலை." எனக் கொஞ்சி முடிப்பதற்குள், சிவகாமி இல்லம் வந்திருந்தது.

"அன்பு வாடா. கயலு வாம்மா... எங்கச் சிவகாமி வந்துட்டாகளா?" எனச் சின்னச்சாமி பேத்தியை கை நீட்டி அழைக்க, அது மாட்டேன் என அப்பாவோடே ஒட்டிக் கொண்டது.

"ஆத்தி உங்க அப்பாவாக்கும், நான் உங்க அப்பனுக்கே அப்பன், தாத்தா விட்டுட்டு வந்து பத்து நாள் தான ஆச்சு, அதுக்குள்ள மறந்துட்டியா, எங்கிட்ட வாடா சிட்டு..." என அழைத்தார்.

 

சாந்தியும், கலையுமாக அன்பு, கயல் சிவகாமியை நிற்க வைத்து ஆராத்திச் சுற்றினர். "சிவகாமியம்மா, சிவகாமி இல்லத்துக்குள்ள வாங்க." எனக் கலை அழைக்க, "இப்ப தான் வீட்டுக்கு மகாலெட்சுமியே வந்திருக்கு." என்றாள் சாந்தி.

குமரவேலும், அறிவுச் செல்வனும் அன்புவை அணைத்து வரவேற்றவர்கள், "இப்பவாவது மனசு வந்து வந்தியே!" என்றனர்.

கலைச் செல்வி, "நீ வரவும் தான்டா, இந்த வீடே நிறைஞ்சிருக்கு." எனக் கண் கலங்க, அக்காவின் கைப்பிடியிலேயே வந்து படமாக இருந்த அம்மாவைப் பார்த்து வணங்கி நின்றான். கயல்விழி மகளை வாங்கியிருந்தவள், புகைப்படத்தைக் காட்டி, " அப்பத்தாவை கும்பிட்டுக்க' எனவும், நிமிர்ந்து பார்த்து விட்டு, "அம்பேய்..." என்றது.

"இது என்னடா சொல்லுது?" எனச் சின்னச்சாமி கேட்கவும், "அன்பேய்." ன்னு என் பேரைச் சொல்லுதாம்" எனச் சிரித்தான்.

"அடியாத்தி, என் மருமகள், அப்பா ன்னு ல்லாம் கூப்பிட மாட்டாங்களா, அன்பேய் தானாக்கும்." என மருமகளைக் கொஞ்சினார் கலை
 

"என்னாது மருமகளா, பேத்தின்னு சொல்லு." எனக் குமரவேல் சண்டைக்கு வரவும், "அதெல்லாம் முடியாது, என் தம்பி புள்ளைகளுக்கு நான் அத்தை தான்." என முழங்கினாள் கலை.

"குமாரப்பா, என் மகளுக்கு அத்தை வேணாமா, எனக்குச் சிவகாமி அத்தை மாதிரி, என் சித்துவுக்கு இது கலை அத்தை." என்ற கயல்விழி மகளுக்கு "அத்தை சொல்லு, அத்தை..." என மகளுக்குச் சொல்லிக் கொடுக்கவும். "இது அப்பனுக்குத் தான் நல்ல அக்காவா நடத்துக்கலை, இந்தச் சிவகாமிக்காவது நல்ல அத்தையா நடந்துக்குறேன்." எனக் கலைச் செல்வி கண்கலங்கவும்,

"அக்கா, சும்மா எதாவது பேசாத. நீ காரணம் இல்லைனு சொல்லிட்டேன். நீ இல்லாமல் தான், அப்பாவும், அறிவும் இப்படி நிக்கிறாங்களாக்கும். இனிமே இதைப் பத்தியே பேசக் கூடாது." என அன்புக் கட்டளையிடவும் அக்காவும் அடிபணிந்தாள்.

சாந்தி, "இன்னைக்கு எல்லாருமா, வட்டமா உட்கார்ந்து சாப்பிடுவோம். அத்தை இருக்கும் போது சேர்ந்து சாப்பிட்டது." என ஹாலில் சாப்பாட்டை எடுத்து வைக்கவும், கயல்விழியும் வீட்டு மருமகளாக உதவினாள். அறிவுச்செல்வன் தங்கள் தோட்டத்திலிருந்து பறித்து வந்திருந்த மாங்காயை அறுத்து, உப்பு மிளகாய் போடி தூவி, தம்பியிடம் நீட்டவும், அதை வாங்கி , "ரொம்ப நாள் ஆச்சு." என ருசித்தவன், "இதை எடுக்கத் தான் அம்மா அன்னைக்கு மாந்தோப்புப் போயிருக்கும்." எனச் சொல்லி வருந்தவும், "அன்பு, என் சிவகாமி திரும்பி வந்துடுச்சு, இனிமே யாரும் பழசை பேசக்கூடாது " எனச் சின்னசாமி கட்டளை இட்டார். பெரிய சிவகாமி இல்லாத குறையைத் தவிர , சின்னச் சிவகாமியின் வரவில் வீடே மகிழ்ந்திருந்தது.

கயல்விழி மூன்று மாதம், பாலமேடு வந்து இருந்த போதும் கூட, காலை மாலை சின்னச்சாமி தான் அங்கே போவாரே ஒழிய, மருமகளை வீட்டுக்கு வரச் சொல்லி வற்புறுத்தவில்லை. "அவள், வரவேண்டிய நேரத்துக்கு சரியா வந்திருவாம்மா." என்று விட்டார். அதனால் கயல்விழியும், சித்திரை நிலா சிவகாமியும், அன்புச் செல்வனோடு இன்று தான் முறையாகச் சிவகாமி இல்லத்துக்குள் அடியெடுத்து வைத்தனர். இரண்டாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டு இனிதாகப் பிறந்தது.

காலையில் மனைவி மகளைத் தனது ஆஸ்தான இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு பாலமேடு சென்றவன், தனது அம்மாச்சியிடம் ஆசி வாங்கினான். "அன்பு, நான் கண்ணை மூடுறதுக்குள்ளையாவது, நீ ஊருக்கு வந்து மனுஷ மக்களோட சேரணுமுன்னு சாமியை வேண்டிகிட்டேன் டா." எனப் பேரனின் முகத்தை வருடவும், "ஏன் அம்மாச்சி, அம்மா ஆயுசும் சேர்ந்து நீ நூறு வருசத்துக்கு நல்லா இருப்ப." என அவர் கையைப் பிடித்துக் கொண்டான் அன்பு.

கந்தவேல் உமாவும், மருமகன் ஊருக்கு வந்ததில் மகிழ்ந்து மதியத்துக்குத் தடபுடலாக விருந்து வைத்தனர். கனிமொழி மசக்கையில் அவதிப் பட்டுக் கொண்டு அம்மா வீட்டில் இருக்க, தனுசும், மாமியார் வீட்டிலிருந்தபடியே தன வேலையைத் தொடர்ந்தான்.


 

கனிமொழி சாப்பிடுவதற்குச் சாப்பிட அடம் பிடிக்க, "கயல், ஆரம்ப ஆரம்பத்தில் என்னையும் பார்த்து, தன்னையும் பார்த்துக்கிட்டா " என அன்பு மனைவியைப் பெருமையாகப் பேச. கனிமொழி "உங்க பொண்டாட்டி மாதிரி யாருமே கிடையாது போதுமா?" எனக் கோபித்தவள், "மாமா, இங்கே நான் வாந்தியா எடுத்து அவஸ்தை படுறேன் , நீ பாட்டுக்கு கம்புட்டர்ல உட்கார்ந்திருக்க?" எனத் தனுஷை வம்பிழுக்கவும், ஹா ஹா வெனச் சிரித்த அன்பு, "அதுக்காகத் தம்பியுமா வாந்தி எடுக்க முடியும்?" எனச் சிரிக்கவும், சித்துக் குட்டியும் சிரித்தது. "இங்க பாரு என் மகளுக்குக் கூடாது தெரியுது!!!" எனவும்,

"அண்ணன் , வேண்டாம்னேன் விடு, உனக்கும் சேர்த்து என்னை வச்சு செய்வா." எனத் தனுஷ் அன்புவிடம் சரண்டர் ஆகவும் சிரித்துக் கொண்டு அக்கா வீட்டுக்குச் சென்றான். சரவணன், செந்தில் என்ற அக்கா மகன்கள் இருவரும் சிவகாமியைக் கொஞ்சி , விளையாடினர். சிறுவர்களைப் பார்க்கவும் அதுவும் சேர்ந்து விளையாடியது.

கலைச்செல்வி, கயல்விழி ஒரு நாள் தங்களை எல்லாம் கேள்வி கேட்டு , அன்புவைப் பற்றிச் சிந்திக்கச் சொன்னதைச் சொன்னவர், "நிஜாமாவே கயலு உனக்காகப் பிறந்தவள் தான் தம்பி, போன ஜென்மத்துப் புண்ணியம் தான், இப்படி ஒரு மகராசி உனக்குப் பொண்டாட்டியா வாச்சிருக்கா!" எனப் பெருமையாகப் பேசவும் , அவனும் ஒத்துக் கொண்டான்.

"போகுது போங்க , இப்பவாவது புருஞ்சுதே?" என்ற கயல் விழி குமாரப்பவோடு சேர்ந்து அக்கா , தம்பி இருவரையும் கேலி செய்தாள் . அவர்களும் கூட்டணி போட்டு இவர்களைக் கேலி செய்ய, பழைய நாட்கள் திரும்பின.

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!