தொடர் : 5
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
அந்த நாளும் வந்திடாதோ என்பது போல், பொங்கலுக்கு அடுத்தப் பத்துத் தினத்தில், அக்கம் பக்கத்திலிருக்கும் சொந்த பந்தங்களுக்குச் சொல்லி, நூறு பேர் அளவில் கூட்டி வீட்டிலேயே தைப்பூசத்தன்று அன்புவுக்காக, கயல்விழியைப் பரிசம் போட்டனர். சிவகாமி, அகம் மகிழ்ந்து போனார்.
உமா மட்டுமே மகளிடம் சற்றே பாராமுகமாக நடந்து கொண்டாரே ஒழிய கந்தவேலிலிருந்து, எல்லாருக்குமே சந்தோஷம் தான். மகள் எங்கோ கண்காணாத இடத்தில் இருப்பதை விட, அவளுக்கும் மனதுக்குப் பிடித்த வாழ்க்கை, தன் அக்கா வீட்டில் சென்று வாழப் போகிறாள் என்பதில் திருப்தியடைந்தே இருந்தார்.
கயல்விழிக்குத் தாய்மாமன் முறைக்கு வந்து நின்ற , உமாவின் அண்ணண் பெருமாள் சாமி, தங்கையின் சார்பாக, சின்னச் சாமியிடம் , “அண்ணன்... கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, கயல்விழிக்கு நான் தாய்மாமன்னு சொன்னா, நீங்க அத்தை வீடு, சொந்தத்துக்குள்ள, அதுவும் பையனும், புள்ளையும் விரும்பிட்டாங்கன்னா, அதுக்கப்புறம் மாப்பிள்ளையோட தொழில், வசதி வாய்ப்பை பத்தி பேசறதில அர்த்தமே இல்லை. கந்தவேல் மாப்பிள்ளைக்கும், அன்பு அக்கா மகன், சின்னவருக்கு இன்னும் சொந்த மச்சினனும் கூட ,இரட்டை சொந்தம். அதுனால அவுங்க உங்க கிட்ட எதுவுமே கேட்க மாட்டாங்க. ஆனால் என் தங்கச்சி மனசில் குறையில்லாமல் சம்பந்தம் பண்ணனும்னு நினைக்கிது. அதுனால கயலை கட்டிக்கப் போற மாப்பிள்ளை அன்பு இப்ப ,என்ன தொழில் செய்யிறாரு , உத்தியோகம் இருக்கா, வருமானம் எப்படி, இல்லை அடுத்து என்ன பிளான் வச்சிருக்காருன்னு மட்டும் சொல்லிடீங்கன்னா , பெத்தவளுக்கு நிம்மதியா போகும்.” எனவுமே, ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கொள்ள , அன்பு எல்லாரையுமே முறைத்தான்
“மச்சான், இந்தப் பேச்சு சபையிலே வேண்டாம் தனியா கேட்டுக்குவோம்.“ எனக் கந்தவேல் முடிக்கப் பார்க்க,
“இந்தா, எங்க அண்ணன் மகனுக்குச் சம்பந்தம் பேசினோம், அது குடும்பச் சொத்து இருக்கிறது போக, கம்ப்யூட்டர் வேலை பார்த்து, மாசம் அம்பது, அறுவது ரூபாய் சம்பாதிக்கிது, அது மாதிரி சொன்னா தானே பரவாயில்லை. மாடு பிடிக்கப் போயி, சாமான் செட்டா கொண்டாந்தா குடும்பம் நடந்துடுமாக்கும்.” என உமா ஜாடை பேசவும், கந்தவேல் மனைவியை முறைத்தார்.
மகனைப் பற்றித் தெரிந்து சிவகாமி, சூழலைச் சமாளிக்கப் பார்த்தார். “ எங்கூட்டுல , விவசாயத்துக்கும், மாடு கண்ணுக்கும் குறைவில்லை, சொந்த வீடு தான். வர்ற மருமகளை நல்லா வச்சுக் குடும்பம் நடத்துற அளவுக்கு என் மகனுக்குச் சாமர்த்தியம் இருக்கு.” என்றார்.
“மதினி, உங்க மகன் சாமர்த்தியத்தைப் பத்தின பேச்சோ, நீங்க உங்க மருமகளை எப்படி வச்சுக்குவீங்கற பேச்சோ, இங்க இல்லை. அடுத்து உங்க மகன் அப்பா தொழிலையே பார்க்கப்போறாரா, அண்ணனை மாதிரி வெளிநாடு போவாரா, இல்லை வேலை பார்க்கப் போறாரான்னு தான் கேள்வி!!“ எனப் பெருமாள் விவரம் கேட்கவும், அறிவு ஏதோ சொல்லப் போக, சின்னசாமி பெரிய மகனைத் தடுத்தார்.
“அவர் கேக்குறதுலையும் தப்பில்லைபா . இதே கயல்விழி நம்ம வீட்டுக்கு வராமல், அவர் வீட்டுக்குப் போனாலும், நாமளும், கந்தன் சார்பா இதை எல்லாம் கேட்கத்தானே செய்வோம்.“ என்றவர், அன்புவையே அதற்குப் பதில் சொல்லச் சொன்னார்.
முதலில் முறைத்தவன், அம்மா நயந்து பார்க்கவும் சமாதானம் ஆனான், குமரவேலும், “மாப்பிள்ளை, நீ உன் ஐடியாவை மட்டும் சொல்லு. அதை யாரும் ரைட்டு, தப்புண்டு பேச வேண்டிய அவசியமில்லை. நீ தகவலா சொன்னாப் போதும்.” எனச் சற்று எரிச்சலாகவே எடுத்துக் கொடுத்தான்.
“நாங்க அண்ணன், தம்பி இரண்டு பேரிலே ஒருத்தர் உள்ளூரிலிருந்தா, இன்னொருத்தர் வெளியூர் போவோம். நான் டி என்பி எஸ் சி, பரிட்சை, பேங்க் பரீட்சை எல்லாம் எழுதி இருக்கேன், ஸ்போர்ட்ஸ் கோட்டாலையே கிடைக்கும், எது முன்ன வருதோ அதுல போயிடுவேன். அது வரைக்கும் விவசாயம். மாடுண்டு தான் அலைவேன். பொண்ணு கொடுக்க இஷ்டமுண்டா குடுங்க. இல்லையிண்டா வேற பக்கம் செஞ்சுக்குங்க. நான் கிளம்புறேன். இம்புட்டு சங்கடப் பட்டுகிட்டு எல்லாம் பொண்ணு கொடுக்க வேண்டாம்.“ என அன்பு முறுக்கவும், கயல்விழி கலங்கித்தான் போனாள். உமா, 'இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை' என்பது போல் பார்த்தார். கந்தவேல் எதுவும் பேசும் முன்,
“மாப்பிள்ளை, இந்தக் குசும்பு தான உனக்கு ஆகாதுங்கிறது, உள்ளதை மட்டும் சொல்லு. எங்க மகள் உன்னைத் தேடி வந்திருச்சின்னு ரொம்பத் தான் முறுக்குவியோ. அதென்ன கடைசில ஒரு வார்த்தை விடுற!“ எனக் குமரவேல் எகிறவும்,
“மாமா, அவன் ஒரு வேலையில் உட்கார்ந்துகிட்டு கயலை பொண்ணு கேட்கலாமுன்னு இருந்திருப்பான். நம்ம அவசரத்துக்குச் சீக்கிரம் பரிசம் போட சொல்றோம், அப்புறம் அவன் சும்மா திரியிற மாதிரி கேட்டா, அவன் அப்படித்தான் பேசுவான்.” எனக் கலைச்செல்வி பதில் தர,
"அதுக்குன்னு பரிசம் போட வந்துட்டு, வேற பக்கம் பாருன்னு சொல்லுவான்." குமரவேலும், தங்களுக்குள் சண்டை போடுவது போல் பாவனைச் செய்து, மற்றவர்கள் பேசி பெரிய சண்டையாகாமல் காத்தனர்.
கந்தவேல், “மாப்பிள்ளை... உன் மேல நம்பிக்கை இல்லாமலா என மகள் உன்னைத் தேடி வந்துச்சு, சம்பந்தம் பேசும் போது, இதெல்லாம் ஒரு சம்பிரதாயத்துக்குக் கேக்குறது தான். நீ கோவப் படாத." என அன்புவை சமாளித்தார் .
மச்சினன், தன் மகனிடம் பேசவும், சின்னச்சாமி மருமகளிடம் “என்னாத்தா, என் மகன் இப்போதைக்கு வெட்டி ஆபீஸரா தான் இருக்கான், உனக்குக் கட்டிக்கச் சம்மதமா, என்ன சொல்ற, இல்லையினா அவனுக்கு வேலை கிடைக்கவும் உடன் பரிசம் போட்டுக் கல்யாணத்தை வச்சுக்குவோம்.“ என நேரடியாகக் கேட்கவும். "சின்னப் பொண்ணைக் கேட்டீங்கன்னா என்ன சொல்லும், சும்மா பரிசத்தைப் போடுவோம், சபையிலே வச்சிகிட்டு இந்தப் பேச்சு என்னத்துக்கு?" எனச் சிவகாமி பதட்டமாக, அவர் அம்மாவும் ஆமோதித்தார்.
"அட இரு சிவகாமி, உன் மருமகள் ஒரு வேகத்துல நம்ம மகனைத் தான் கட்டிக்குவேன்னு சொல்லிடுச்சு, இவன் மாடு புடிக்கிறேண்டு வடக் கயிறோட விளையாட்டு பயலாவே திரிஞ்சா, நாளைக்கு அதுக்கு என்ன மரியாதை இருக்கும். அது மனசில என்ன இருக்குண்டும் சொல்லட்டும்..." என்றார் சின்னசாமி.
“உங்க மகன் வேலைக்கே போகலையினாலும், நான் டீச்சர் வேலை பார்த்து, குடும்பத்தை நடத்திக்குவேன், நீங்க பரிசத்தைப் போடுங்க மாமா...” எனத் தலை குனிந்தபடி கயல்விழி, மெல்லிய குரலில் சொல்லவும், ஹாஹாவெனச் சிரித்தவர், "அப்படிச் சொல்லு, நீயும் லேசுப்பட்டவ இல்லைனு தெரியுது. சின்னவனைச் சமாளிக்க இப்படி ஆள் தான் வேணும்." என அவர் புன்னகையோடு உற்சாகமாகப் பேச, அன்பு அவளை முறைத்தான்.
“அப்புறம் என்னப்பா, எங்க மகளுக்கே பிரச்சனை இல்லையாம், எது வந்தாலும் எங்க மகள் சமாளிச்சுக்கும். மாப்பிள்ளை நீ கொடுத்து வச்சவன் தான் போ. வருஷம் பூரா, ஜல்லிக்கட்டு எங்க நடக்குதுன்ன, சிலிர்த்துக் கிட்டே அலையலாம்.“ எனக் குமரவேல் மருமகனைக் கேலியாகவும், அவனது வீரத்தை மெச்சுதலாகவும் சொல்ல.
“மாம்ஸ், என்ன நாங்க கஞ்சிக்குக் கஷ்ட படுற மாதிரி பில்டப் விடுறீங்க, எங்க அக்காவுக்கு எம்புட்டு சீர் செஞ்சோம், எல்லாம் மறந்து போச்சாக்கும்?" என்றான் மூத்தவன் அறிவு
"அது தான் மாப்பிள்ளை, உங்க அக்காளுக்கே எல்லாத்தையும் குடித்திடுறீங்களே, உங்கள் நிலைமை எப்படியோன்னோ, பொண்ணோட தாய் மாமா கவலைப் படுறாரு. சரி தான மச்சான்." எனக் கந்தவேல், அண்ணன் மச்சினனை வம்புக்கு இழுக்கவும்,
"உங்களுக்கு நிறைக்க சீர் செய்யறோம்னு, நீங்களே ஒத்துக்கிட்டா சரி தான். என் தங்கச்சிக்கும் அதே தான் பயமோ என்னமோ, ஏன்னா சின்னச்சாமி அண்ணேன், தனக்கும் மிஞ்சாமல் தூக்கிக் கொடுக்கிறவர் இல்லை." எனத் தான் சம்பந்தம் செய்திருக்கும் வீட்டில் சக சம்பந்தியை உயர்த்திப் பேசவும், அன்பு கொஞ்சம் அமைதிப் பட்டான்.
“மாப்பிள்ளை, என் மகளுக்குன்னு சேர்த்து வச்சதை குறைவில்லாமல் செஞ்சுடுவோம்யா. வேற என்ன வேணும்னாலும் சொல்லுங்க, செய்கிறதுக்குத் தயாரா இருக்கேன்.” என் பெண்ணைப் பெற்றவராகக் கந்தவேல் சரணடைய,
“கந்தா,என் மருமகளை மட்டும் கொடு போதும். கட்டின சீலையோட அனுப்பினாலும் நான் சந்தோசமா கூப்புட்டுக்குவேன்.“ என்றார் சிவகாமி.
“உமா, உன் மகள் கண்ணு முன்னாடியே தானே இருக்கப் போகுது, இப்ப பரிசம் போடலாமில்லை.” எனக் கயலின் தாய் மாமன் பெருமாளே முன் நின்று நடத்தி வைத்தார். கோதண்டம் தான் தொலைவிலிருந்து முறைத்துக் கொண்டே நின்றான். தனுஷ் வர கூட இல்லை, அவனது அம்மாவுக்கும் இதில் பெரிய வருத்தமில்லை, மகனுக்கு இன்னும் பெரிய இடத்தில், புளியம் கொம்பாகச் சம்பந்தத்தைப் பிடித்துக் கொள்ளலாம் எனக் கணக்கு வைத்திருந்தார்.
பெரியவர்கள் முறையாகப் பேச, கந்தவேலும், சின்னசாமியும், உமாவும், சிவகாமியும் மாற்றிச் சந்தனம் தடவி சம்பந்தம் கலந்து கொண்டனர். அதே போல் தாய் மாமன் முறைக்கு அன்புவின் தாய்மாமனாகக் குமரவேல் கலைச்செல்வி ஜோடியும், கயல்விழி தாய் மாமன் பெருமாள் சாமி மனைவியோடும் சம்பந்தம் கலந்து கொண்டனர்.
கயல்விழியை அழைத்துச் சேலை வைத்துக் கொடுக்க, அவள் உடுத்தி வந்த பிறகு, தாய்மாமன் மாலை போட, சிவகாமி மருமகளுக்குப் பூ வைத்து விட்டார்.
அன்புவும், கயல்விழியும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். தங்க மீன் போலவும், அதுவே ஆங்கிலக் கேப்பிடல் எழுத்து A போலவும் , அன்பு கயல் இருவரும் ஒன்று என்பது போல் வடிவமைக்கப்பட்ட டாலர் கோர்க்கப்பட்ட ஐந்து பவுன் செயினைக் கயல்விழிக்குப் பரிசமாகப் போட்டான் அன்பு . மாமன் மகளை, மனையாளாகத் தன் வாழ்வில் துணை வர அனைவர் முன்பும் அச்சாரம் தந்தான்.
கனகம்மாள் மற்றொரு சம்பந்தமும் தங்கள் குடும்பத்துக்குள்ளே நிகழ்வதில், பேரனும், பேத்தியும் மணம் செய்து கொள்வதில் மனத் திருப்தியோடு ஆசீர்வாதம் செய்தார்.
அன்பு எல்லோருக்கும் முன் பொறுப்பான நாயகனாக, அவளுக்குச் சங்கிலியை அணிவித்தவன், அனைவரும் நிச்சயதார்த்த விருந்து சாப்பிட்ட இடைவெளியில், அக்காள் வீட்டுக்குள் குறுகிய அறையில் நெல் குளுமைகளுக்கு ஊடே அவளைச் சிறையெடுத்து, "கயலு, விழி, கயல்விழி, என் கவி , கண்ணழகி, ஏண்டி டீச்சர் வேலை பார்த்துண்டாலும் எனக்குக் கஞ்சி ஊத்துவியா, என்னை என்ன கையாலாகாதவேண்டு நினைச்சியா?” என மிரட்டவும்
“விடு மாமா, நீ மட்டும் வேற மாப்பிள்ளை பார்த்துக்கன்னு சொல்ற.” என வாய்க்குள்ளேயே முணங்கினாள்.
“உங்கம்மா, என்ன வேலை, வேலையிண்டு கேட்ட கோபம் வராதா. அப்படியாடி உன்னைப் பட்டினி போட்டுடுவோம்.” எனக் கோபப்பட, “நானா கேட்டேன், என்கிட்டே ஏறுற, அது சரி அது என்ன போலீஸ் வேலையின்னு சொல்ற, அந்த வேலையெல்லாம் வேண்டாம்.” எனச் சிணுங்கினாள்.
“ஏன்டி, போலீஸ்னா பயமா?“ என அவள் நெற்றியில் முட்டி, அவளின் நெற்றிச் சுட்டியில், குனிந்து வாகாக நின்றபடி ஓர் இதழொற்றலைத் தர, அவன் அதரம் பட்டதிலும், மீசை குறுகுறுப்பிலும், மொத்தமாகத் தாக்கப்பட்டு, பேசிக்கொண்டிருந்ததை மறந்து விதிர் விதிர்த்துப் போனாள். கை, கால்கள் தந்தியடிக்க, அவனை நிமிர்ந்து பார்க்காமலே, "ஒன்னும் இல்லை, என்னை விடு மாமா, நான் போகனும்." என்றாள்.
அதுவரை ஓர் இடைவெளி விட்டு நின்றவன், " அடியே, கண்ணழகி, எங்கடிப் போவ. அன்னைக்கு மட்டும் சிங்கபுணரி வரைக்கும் தேடி வந்த. இப்ப என்னடி புதுசா வெட்கம்???" என அவளை நன்றாக உரசவும். இங்கும், அங்கும் நெளிந்தவள், "வேணாம் மாமா, கல்யாணத்துக்கு அப்புறம் வச்சுக்க, அம்மா வையும்." எனத் தலை குனிந்தபடி வாய்க்குள்ளேயே முணுமுணுக்க.
"ஹாங், ஹாங், ஹாங் கேக்கலை." என மேலும் உரசி நின்றான். "வேணாம் மாமா..." என அவன் நெஞ்சில் கை வைத்து அவள் தள்ளப் பார்க்க, கருங்கல் சிற்பத்தை, கைப்புல் அசைக்க இயலுமா. ஒரு இஞ்ச் கூட அவனை அசைக்க இயலவில்லை. அவன் உடல் குலுங்க அவளைப் பார்த்துச் சிரித்தவன்,
தாடி மழித்து, வாசமாக மணத்தவனின் செதுக்கிய சிலை போலிருந்த தன் கன்னத்தைக் காட்டி, "ஒரு தேன்மிட்டாய் கொடு, போயிடுறேன்." எனக் கண்ணடித்தான்.
"போ, மாமா..." என அவள் சிணுங்க, "அன்னைக்குத் தேடி வந்து கொடுத்த?" எனக் கண்களில் நகைப்பைக் காட்ட, அவன் விடமாட்டான் எனப் புரிந்து, சுற்றும், முற்றும் பார்த்து விட்டு, "நீ அங்குட்டுத் திரும்பு." என மெல்ல மொழிந்தவளுக்கு வசதியாக நகை முகத்தை மட்டும் திருப்ப, அவன் தோளைப் பற்றி எக்கி நுனிக் காலில் நின்று அவன் கன்னத்தில் ஓர் இதழொற்றலைத் தர, "ஆகா, தித்திக்குதுடி!!!" என அவளை இடையோடு தூக்கி ஒரு கையால் அணைத்துக் கொண்டான். அவன் உயரத்துக்கு உயர்ந்திருந்தவள், தன் கயல்விழிகளால் அவன் காதல் ததும்பும் அன்பு முகத்தைக் களவாடி தன்னுள் பிடித்து வைத்துக் கொண்டவள், இமைக்க மறந்து அவனைப் பார்த்தபடி இருக்க, தனக்குச் சாதகமாய்ச் சூழலைப் பயன்படுத்தும் அந்த மாடு பிடி வீரன், காளையாய் சிலிர்த்து, சாதுவாய் மயங்கி நின்ற மாமன் மகளை முழுதாக ஆக்கிரமித்தான். துவண்ட கொடியென அவன் மீதே துவண்டு தொங்கியவள் அவனுள் அடிமையென அடங்கிப் போனாள்.
"கயலு, எங்க இருக்க?" எனக் கேட்டபடி வந்த, கலைச் செல்வியின் குரலில் இருவரும் மீண்டனர். இம்முறை அவன் மயங்கி நிற்க, சட்டெனத் தன்னை மீட்டுக் கொண்ட கயல் விழியால், பரிசம் போட்ட அத்தை மகனை, அவள் மேல் மையலாகி நின்ற மாடுபிடி வீரனை, அரை நொடியில் அவசரமாக நெஞ்சில் கை வைத்துத் தள்ளி விட்டு ஓடினாள்.
அவள் மறைந்த பின்னும், அந்த நிமிடங்களை அவன் கண் மூடி நின்று அனுபவித்துக் கொண்டிருக்க, எதிரே கயல் விழி தன் கேள்விக்குப் பதிலளிக்காமல் ஓடுவதை யோசனையாகவே பார்த்து வந்த கலைச்செல்விக்கு, விடை உள்ளே நின்ற தம்பியைப் பார்த்ததும் புரிந்தது.
"டேய், நல்லவனே, இங்க என்னடா பண்ற. கல்யாணம் வரைக்கும் வாலை சுருட்டிக் கிட்டு பேசாம இருக்கனும்." என மிரட்டவும், இயல்புக்கு வந்தவன், ஓர் சிரிப்பை உதிர்த்து விட்டு "அக்கா, நீயும், மாமனும் செய்யாததையா நாங்கச் செய்யப் போறோம். இதெல்லாம் கண்டுக்காதக்கா..." என அவன் அக்காவின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சவும்.
"டேய், எருமை அடி வச்சேன்னா தெரியுமா. என்ன பேச்சு பேசுற???" என மிரட்டினாள். “ஹேய், உனக்குப் பாடி கார்டா வந்து மாமனுக்குச் சிக்னல் கொடுத்தவனே நான் தான். ஒரு பரோட்டா, பிரியாணிலையே என்னைக் கவிழ்த்திட்டு, அது வேலையை முடிச்சுகிச்சு.” என அவன் கேலி பேசவும்.
“போடா எருமை, சத்தமா சொல்லித் தொலையாத, கிழவி காதில விழுந்துச்சு, என்னை உண்டு இல்லையான்னு ஆக்கிடும்.” என அக்காளும் தம்பியுமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க. “என்னடா இன்னைக்குப் பாச மலர்கள் ரொம்பக் குழையிறீங்க???“ என் குமரவேல் வரவும்,
“நீ, எனக்குப் பிரியாணி வாங்கிக் குடுத்துட்டு, உன் அக்கா மகளைக் கரெக்ட் பண்ணக் கதையைத் தான் பேசுறோம்.” எனக் கேலி செய்து விட்டு அன்பு அவ்விடம் விட்டு அகல, “நிஜமாவாடி செல்வி” என மூத்த ஜோடிகள் மலரும் நினைவில் இறங்கினர்.
“பேசாம போ மாமா, அன்பு பய அவன் தப்பிக்கிறதுக்கு நம்மளை லந்த குடுத்துட்டுப் போறான். நீ அது புரியாம வந்து இளிச்சுட்டு நிக்கிற. அவன் கயலு இருக்க இடத்துக்குத் தான் போவான். போய்ப் புடிச்சு நிறுத்து இல்லையினா. உமாத்தை ஜாடை பேசியே கொல்லும்.” என அவள் தம்பி பின் செல்ல மாமனை வற்புறுத்த, " ஏய், விடுடி. அது தான் பரிசம் போட்டுட்டான்ல, குசாலா இருந்துட்டு போகட்டும்." என மனைவியை நிறுத்தி மச்சினனுக்கு இடம் கொடுத்தான்.
"அவனைக் கெடுக்கிறதே நீ தான் மாமா. மாடு பிடிக்கிறதாகட்டும், கயலை மயக்கிறதாகட்டும் எல்லா விசயமும் உன்னைப் பார்த்துத் தான் கத்துக்கிறான்." எனத் தம்பியின் நடத்தைக்குத் தன் கணவனைக் குறை சொல்ல "அதுனால என்ன, நம்மளை மாதிரியே சந்தோசமா இருந்துட்டு போகட்டும்." எனக் குமரவேல் மருமகன் அங்கே உமாவின் அண்ணன் மகனிடம் வம்பிழுத்து மற்றொரு தீராத துயரத்தை விலைக்கு வாங்கிக் கொண்டிருப்பதை அறியாமல் மனைவியிடம் தாங்கிப் பேசிக் கொண்டிருந்தான்.
அன்று அவ்வளவு மகிழ்ச்சி இரண்டு குடும்பத்திலும் நிறைந்து இருந்தது. அதே நினைவில் மகிழ்ந்திருந்த கயல் விழி, இன்றும் அன்றைய மகிழ்வை நினைத்து மனசு தேறுவாள் . அன்று அன்பு போட்ட தங்கச் சங்கிலியானது இன்றும் அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அநேகமான கேள்விகள் எழும் போதும், யாராவது அபசகுனமாக ஏதாவது சொன்னாலும் அதை விடாமல் நெஞ்சோடு சேர்த்துக் கைகளில் பிடித்துக் கொண்டு அவன் வரவுக்காக , தவமிருப்பாள்.
இதோ இன்றும், நான்கு வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட அந்தச் சங்கிலியைக் கழுத்திலிருந்து கைகளில் ஏந்தியபடி பார்த்துக் கொண்டிருந்த கயல்விழி, "மாமா, நாலு வருஷம் முன்னாடியே ,என் கண்ணில கண்ணீர் வரக்கூடாதுன்னு உன் பொண்டாட்டின்னு சொல்லி உரிமையா பரிசம் போட்டியே மாமா. இன்னைக்கு உங்கப்பா, அது இல்லைன்னு சொல்லிட்டுப் போறாரு. அத்தையோ, நீயோ இரண்டு பேரில ஒருத்தர் இருந்திருந்தாலும் இந்த மாமா, இப்படிப் பேசியிருப்பாரா. எங்கிருந்தாலும், உடனே வா மாமா..." என மனதிலேயே அழைப்பு விடுத்த கயல்விழி, அதே விசயத்தை, தனது மடிக்கணினியை உயிர்ப்பித்து, அதில் அவனுடைய மெயில் ஐடிக்கு ஒரு கடிதத்தையும் அனுப்பினாள். ஆனால் இந்த முறை, அவளது மின் ஓலை, அவனுக்கு ஓர் எச்சரிக்கையையும் சுமந்து சென்றது.