Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு கடந்த கால எச்சங்கள்.

வகைகள் : சிறுகதைகள்/ அனுபவம்

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


சிறுகதைகள்

கடந்த கால எச்சங்கள்.

  

நடப்பு 

"தேவி இந்த வருஷம் மே லீவுக்கு ராமசாமி மாமா வீட்டுக்கு போய்ட்டு வந்துருவோம்.  மாமா ரிடையர் ஆகிட்டா அப்பறம் அங்கே போக முடியாது." 

"சரி போவோம் நானும் வரேன்." .

அந்த நாளும் வந்திடாதோ, என ஏங்கி பல நாட்கள் 'வடிவேல்' பாணியில் 'ப்ளான்'  பண்ணி எங்கள் திட்டத்தை செயல் படுத்தினோம். ஆளுக்கு ஒரு ஊரில் குடியேறி இருந்தவர்கள், காவிரி அகன்று ஓடும் அந்தச் சிராப்பள்ளி நகருக்கு, அக்கா வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

பல வருடங்களுக்கு பிறகு, எங்கள் குழந்தை பருவம் கழிந்த, நாங்கள் பிறந்து வளர்ந்த குவாட்டர்ஸ் வீடுகளை காணும் ஆவலில், எனது மகன், மகளை மட்டும் அழைத்துக் கொண்டு நானும் என் தங்கை தேவியும் காட்டூர் பஸ் ஏறினோம். அந்த பேருந்தே ஏதோ ஓர் விட்ட குறை, தொட்ட குறை சொந்தம் போல், எங்களை நலம் விசாரிப்பது போல் தோன்றியது.

இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும், எங்கள் பிறந்த இடத்தின் சொர்கத்துக்குள் காலடி எடுத்து வைக்கும் முன் அவ்விடத்தின் இனிமை நினைவுகளை அக்காளும், தங்கையுமாய் அசைப் போட்டபடி பயணித்தோம்.

அது ஒரு சர்க்கரை ஆலை, அதனுள் அமைந்த குடியிருப்பு பகுதியில் தான் எங்களின் பாலபருவ சொர்க்கம் இருந்தது. வளரும் போதே பொருளாதார ஏற்றத் தாழ்வை ஒரு வேலி உணர வைத்தது, ஆம் குடியிருப்பை, அதிகாரிகள், தொழிலாளர்கள் என்ற பாகுபாடு செய்வித்து இரண்டாக பிரித்திருந்தார்கள். இன்று நினைக்கும் போது ஆபீஸர்களின் குடியிருப்பு ஒற்றை படுக்கையறை, அல்லது இரண்டு படுக்கையறைக் கொண்டாத இருந்திருக்கும் அவ்வளவே. ஆனால் அன்றை தினத்தில் அங்கு வசிக்கும் மக்களை, ஏதோ பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அதிகாரிகள் போல் எண்ண வைத்தது.

      காலணி பகுதியில்  ஒரு பல்பொருள் அங்காடி,  காய்கறிக்கடை, ஒரு கிளினிக் இவை வரிசையாகவும், இதைத் தாண்டிய பெரிய மைதானம், என நான் சிறு பிள்ளையில் நினைத்த ஓர் மைதானம், குடியிருப்பு வீடுகள்,

கிளப், ஒரு ஸ்கூல், பேக்டரி, சர்க்கரை விநாயகர் கோவில் எல்லாம் உள்ள ஒரு சிறிய (சிறு பிள்ளையில்  நான் பெரியதாக  நினைத்த) உலகம்.

  பஸ் ஸ்டாப்பில் இறங்கியவுடன் ஒரு பெரிய கேட் இருக்கும், பல்குனி ஆறு என காவியத்தில் வர்ணிக்கப்படும் புண்ணிய நதி, தற்போது அது பங்குனி வாய்க்கால் என்ற பெயரோடு சிறு ஓடையாக இருபது அடி அகலத்தில் அந்த கேட்டுக்கு முன்னே ஓடுகிறது. எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்களை, அங்கு வரை வந்து பேருந்தில் வழியனுப்பி வைத்துவிட்டு செல்வது வழக்கம். அந்த நேரம் இந்த வாய்க்காலுக்கு மேலே பாவிய பாலத்தின் தடுப்புச் சுவர் கட்டையில் அமர்ந்து அதன் நீரோட்டத்தை வேடிக்கை பார்ப்பது எங்கள் தனியாத ஆசையில் ஒன்று.

 அந்த பிரசித்தப் பெற்ற வாய்க்காலைத் தாண்டிய கேட்டில் நேபாளி கூர்க்காக்கள் காவல் காக்க அமர்ந்திருப்பார்கள். நல்ல சிவந்த நிறமும் ஈடுதாடான உடல் வாகும், காக்கிச் சட்டையில் போலீஸ்காரர்களுக்கு சவால் விடும் மிடுக்கோடு நின்றிருப்பர். அவர்களைப் பார்க்கும் போதே ஒரு பயம் வரும். புதிதாக வரும் யாரையும், யார் எவர் யார் வீட்டுக்கு என விசாரித்த பின்பே உள்ளே செல்ல  அனுமதி கிடைக்கும். எங்கள் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால், அவர்கள் எங்கள் வீட்டுக்கு வரும் முன் எங்கள் அப்பாவுக்கு போனில் தகவல் சென்று விடும்.

     ஒவ்வொரு முறையும் என் பெரியப்பா, சித்தப்பா வரும் போது, வாட்ச்மேன் அவர்களை கேள்வி கேட்காமல் உள்ளே விடுவார், "தெரியும் சார் பாலு சார் அண்ணன்." என சரியாக அடையாளம் கண்டு கேட்காமல் அனுப்புவர், "எப்படி டா அவன் கரரெக்டா  சொல்லிடறான்?"  என ஒவ்வொரு முறையும் என் பெரியப்பா  ஆச்சரியமாய் கேட்பார். இதில் சிறப்பு என்னவென்றால், ஆறு மாதக் குழந்தை கூட அசப்பில் ஒரே மாதிரி இருக்கும் இவர்களை ஒருவரோ என குழப்பம் கொண்டு ஏமாறும். இவர்கள் உருவப் பொருத்தம் அப்படி. அந்தப் பெருமையைத் தான் பெரியப்பா அப்படி சிலாகித்துக் கொள்வார்.

   அந்த மரபுப்படி, எங்களுக்கே ஓர் அறிமுகம் தேவைப் படுகிறதே என மனது கனத்தாலும், இருபது வருடம் சும்மாவா என மனதை தேற்றிக் கொண்டு, நாங்களும் மாமாவின் பெயர் சொல்லி உள்ளே சென்றோம் .

   குடியிருப்பு  வீடுகளுக்கு செல்லும் வழியின்  இரு புறமும் பண்ணீர், புங்கை  குல்மோஹர் மரங்கள் நிறைந்த நிழல் பாதை. வலது புறம் பாக்டரியின் கழிவு நீர் சுத்திகரித்து செல்லும் நீர் பீச்சிகள் வெதுவெதுப்பான நீரை பீச்சிக்கொண்டு இருக்கும், இடது புறம் வாய்க்காலை ஒட்டிய பகுதி மரங்கள் நிறைந்து இருக்கும். கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப் பட்டு வாய்காலில் பாயும்.

  அந்தப் பாதையில் சென்றால் நேரே ஒரு பாதையும், வலது புறம் ஓர் பாதை பிரியும். வலது பிரியும் பாதையில் பத்தடி தூரத்தில் ஒரு  மைதானம் வரும் அதன் பிறகு செடிக்கு பாத்திக் கட்டியதுபோல் வரிசைக்கு பத்து என 40 வீடுகளும், பக்கவாட்டில் 2வரிசை 20 வீடுகளும் இருக்கும். இந்த வீடுகள் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட வரிசை  வீடுகள்.

நினைவுகள் 

    மனம் இருந்தால் குருவிக்கூட்டில் மான்கள் வாழலாம், என்பது போல் இருக்கும் அங்கு எங்கள் வாழ்க்கை. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் 3,4 பிள்ளைகள், ஒரு தாத்தா, பாட்டி என குடும்பங்கள் நிறைந்து வாழ்ந்தன அங்கே. வரிசையாய் உள்ள எல்லா வீடுகளிலும் உள்ளவர் அனைவரும், அத்தை,மாமா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என முறை வைத்தே அழைக்கப்பட்டனர் .

80 களில் வாழ்ந்த அந்த 100 குடும்பங்களை கொண்ட காலணி, குதூகலம் நிறைந்த உயிரோட்டமுள்ள ஒரு கூட்டுமுறை வாழ்வு போல் இருந்தது. அந்த குடியிருப்புகளை தாண்டி ஒரு சிறு பள்ளிக்கூடம், ஒரு க்ளப் இவை உண்டு.

இந்த ஆரம்பப்பள்ளியில்  மாணவர் சேர்க்கைக்கான தகுதி அந்த சிறுவனோ, சிறுமியோ கையை தலையை சுற்றி அடுத்த காதைத் தொட வேண்டும் என்பதே.

சிறுமியாக இருக்கும் போது, என் தாத்தா என்னை அழைத்துக் கொண்டு வாக்கிங் செல்வார். எதிரே வரும் பெரிய டீச்சரிடம், "என் பேத்தியை உங்க பள்ளிக்கூடத்தில் சேர்த்து கொள்ளுங்கள்." என்பார், பெரிய டீச்சர் என் கையை தலை சுற்றி காதை தொடச் சொல்வார். கொஞ்சம் எட்டாமல் இருக்கும் என் கை, "கொஞ்சம் நாள் ஆகட்டும் ஐயா!" என பதில் சொல்லி எங்களை கடப்பார்கள். "என்ன ஐயா பேத்தியோடு வாக்கிங்கா?" என எதிர் வருவோர் எல்லாம் தக்கபடி விசாரித்தே நகர்வர்.

வீட்டில் இருக்கும் என் அப்பாயியிடம் பள்ளிக்கு கிளம்பும் முன் தலை வார, எனக்கும் பக்கத்து வீட்டு ராஜி அக்காவுக்கும் எப்போதும் போட்டி நடக்கும், பூனைக்குட்டி போல் குடுமி வைத்துள்ள  உள்ள நான், ஜடையை மடித்துக் கட்டினாலே  இடுப்பு வரை தொங்கும் அந்த அக்காவிடம் போட்டி போடுவேன். காய் நறுக்கிக் கொண்டோ, மோர் கடைந்துக் கொண்டோ உட்கார்ந்திருக்கும் என் அப்பாயியிடம், "அம்மா என்ன செயகிறீர்கள்?" என்கிற விசாரிப்போடு உரையாடல் நடந்து கொண்டிருக்கும். பார்ப்பவர் பாசமாய் விசாரிக்கும் இந்த விசாரிப்புக்குத் தான் இன்றைய பெரியவர்கள் ஏங்குகின்றனர் என்பது இப்போது புரிகிறது.

"ஒரு டம்ளர் சீனி,  வேணி அம்மா கிட்ட வாங்கியது. திருப்பி குடுத்துட்டு வா." என அம்மா ஓசி வாங்கியதை திருப்பித்தரச் சொல்லி அனுப்புவதும், சாப்பிடும் போது வெஞ்ஞனமாக வைத்தக் காய் பிடிக்க வில்லை எனில், குமாரத்தை வீட்டு ஊறுகாய் தேடி ஓடுவதும் எங்கள் வழக்கம். அம்மா பிழிந்து வடகத்தை காக்கா கொத்தாமல் பாதுகாப்பது எங்கள் பொழுதுபோக்கில் சேர்த்தி. காக்கைக்கு பதில் நாங்கள் கொத்துவோம் அது வேற கதை.

    மாலை 5 மணி சங்கு ஊதும் போது சரியாக எங்கிருந்தாலும் எங்கள் அப்பா வரும் நேரம் வீட்டில் ஆஜராகி விடுவோம் நாங்கள். மதியம் சாப்பாடு, அப்பா, தாத்தாவுடன் சேர்ந்து தரையில் அமர்ந்தே சாப்பிடுவோம். சாப்பிட்டு முடித்தவுடன் என் அப்பா 20 நிமிட ஓய்வில் ஒரு குட்டித் தூக்கம் போடுவார்கள்.  அப்போது அப்பா  கால் மிதித்து விடுவது என்னுடைய தலையாய கடமை.

   மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும், சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை என்பது போல், வெயில் வீணாக போகாமல் காலணி முழுவதும் சுற்றித் தீருவோம். பம்பரம், குண்டு, கிளித்தாண்டு, புளியம் முத்து செதுக்கல், பாண்டி விளையாட்டு, பல்லாங்குழி, தாயம், கல் விளையாட்டு, உப்பு, நாடு பிடித்தல், மரம் ஏறுதல், கண்ணாம் மூச்சி என நேரத்திற்கு தகுந்தாற் போல் ஏதோ ஒரு விளையாட்டு விளையாடுவோம்.

பள்ளிக்கூடம் ஆண்டு விழா எனில் நடனம், நாடகம் ஏதாவது ஒன்றில் பங்கேற்று கட்டாயம் மேடை ஏறுவோம். விளையாட்டு போட்டியில் பரிசு வருமோ, இல்லையோ ரன்னிங் ரேஸில் கடைசி வந்தாலும், ஸ்கிப்பிங்கில்   முதலில் தடுக்கி விழுந்தாலும், பாட்டிலில் தண்ணீர் நிரப்பு வதில், கையிலேயே தண்ணீர் எல்லாம் வழிந்தோடினாலும், அதைப்பற்றி கவலை இல்லாமல் கலந்து கொள்வோம். அந்த மகிழ்வை இன்று எங்குத் தேடினாலும் கிடைக்காது.

  பள்ளிக்கூடத்தை அடுத்து ஒரு கிளப் இருக்கும், பகல் பொழுதில் ஒன்று, இரண்டாவது பள்ளி  வகுப்புகள் அதில் நடை பெறும். மாலையில் அதே இடம் பொழுது போக்கு இடமாக மாறி விடும். ஒரு வண்ணத் தொலைக்கட்சிப் பெட்டி அங்கே இருக்கும், அதில் தான் dd யில், 13 வார நாடகங்கள், ஒளியும் ஒலியும், திரைப்படம் எல்லாம் பார்ப்போம்.  ஒரே டிவியில்  மொத்த காலணியும் சேர்ந்து  வெள்ளிக்கிழமை இரவில் டெக்கில் புது படம் எடுத்துப்  போடுவார்கள், போர்வை சகிதம் இடம் பிடித்து முந்திச் சென்று பார்ப்போம். இப்போது 24 மணி நேரமும் ஏதாவது ஒரு படம் எல்லா தொலைக்காட்சிகளிலும் ஓடினாலும் அன்று பார்த்த சுவரசியத்திற்கு ஈடாகாது.

     பள்ளிக்கூடம் தாண்டி ஒரு கருவேல மரம் நிறைந்த பகுதி இருக்கும், அதில் மரத்துக்கு அடியில் கூட்டி சுத்தப் படுத்தி ரகசிய இடம் எல்லாம் வைத்திருப்போம்.

பக்கத்து வீட்டு புளியமரம் இருக்கும் அதில் பிஞ்சு விடும் நேரம் எங்களுக்கு வேட்டைதான். எங்கள் வீட்டு மாடிக்கு படி எல்லாம் கிடையாது, கான்க்ரீட் ஓடு நடுவில் குவிந்து, இரு புறம் சரிந்த ஒட்டு வீடு போல் தான் இருக்கும். அதில் வீட்டுக்கு பின்புறம் போடப்பட்ட கொட்டகையின்  தென்னம் தட்டியில் காலை வைத்து லாவகமாக ஏறி விடுவோம், ஓட்டு மேலே ஏறி, புளியம் பூ, பிஞ்சுகளை சாப்பிடுவோம், அந்த ஓட்டு மேலே ஏறுவது எந்த ஒரு சாகசத்திற்கும் குறைந்தது இல்லை தட்டியில் உள்ள சிலாம்பு குத்தும், சுளுக்கி எறும்பு கடிக்கும். இந்த சோதனைகளுக்கு நடுவே தான் சாதனையாக ஓட்டு மேல் ஏறுவோம்.

இந்த வேலை எல்லாம் அம்மா மதியம் தூங்கும் போது தான் அரங்கேற்றுவோம். ஒருமுறை எங்கள் தம்பி சிறுவனாக இருந்தவன் எங்களை தொடர்ந்து எப்படியோ, எங்கள் முயற்சியும் சேர்ந்து மேலே ஏறிவிட்டான், ஏற்றிவிட்டோம். பின்னர் சிறிது நேரம் சென்று இறங்கும் போது இருந்தது வேடிக்கை, அவனுக்கு உயரத்தைப் பார்த்து பயம் வந்து விட்டது. பின்னர் பலர் கூடி, நெட்டை குமார் அண்ணன் உதவியுடன் பல கலவரங்களுக்கு பின் கீழே இறங்கினோம்.

    இப்படியான எங்களுடைய பல வருட மலரும் நினைவுகளை நினைத்தபடி காலணிக்குள் சென்ற எங்களுக்கு அங்கே இருந்த மாற்றங்கள் தந்தது பேரதிர்ச்சி .

இப்போது உள்ளது போல் ஆண்ட்ராய்டு போன்கள் அந்த சமயம் புழக்கத்தில் இல்லை, எனவே ஒரு டிஜிட்டல் கேமராவை எடுத்துக் கொண்டு எங்கள் நினைவுகளை பதிவு செய்து கொள்ள சென்றோம்.

    நான் சொன்ன அந்த மைதானம் இப்போது உரு மாறி யூகலிப்டஸ் காடாக இருந்தது. பாக்டரியில் இருந்து வரும் காற்று மாசுபாடை தவிர்க்க யுக்கலிப்டஸ் வளர்த்திருக்கிறார்கள் .

  அதனை கடந்து எங்கள் மாமா வீட்டிற்கு செல்ல, எங்கள் தோழிகளும் எங்களைப்போலவே உரு மாற்றம் பெற்று சுட்டி பசங்களுக்கு தாயாகவும் ஆகி இருந்தார்கள் . ஒவ்வொரு விடுமுறைக்கும் இவர்கள் இங்கே வந்து விடுவது வழக்கமாம். ஒருவருக்கு ஒருவர் மகிழ்ந்து கூடி விசாரித்து மனம் நிறைந்தோம். எல்லாமே மாறிடுச்சுடி என என் தோழி சொல்ல, அதன் பின் உண்டு முடித்து எங்கள் பழைய பெரும் உலகத்தை வலம் வர ஆரம்பித்தோம்.

கடந்த கால எச்சங்கள். 

உயிர்ப்புள்ள ஓவியமாக திகழ்ந்த எங்கள் காலணி எலும்பு கூடு போல் இருந்தது. எங்கே வீட்டுக்கு வீடு குழந்தைகளும், கும்மாளமும் நிறைந்து இருந்ததோ அவை வெறுமைப் பட்டு வெறிச்சோடி இருந்தன. நாங்கள் சுதந்திரமாய் சுற்றிய இடங்கள் பல கம்பி வேலிக்குள்  அபாயகரமான கட்டுமானம் ஆகி சிறை இருந்தன.

ஆட்கள் நிறைந்த வசிப்பிடம், ஆள் அரவமற்ற இடமாக இருந்தது. சில வீடுகளில் வேற்று மொழி  காண்ட்ராக்ட் வேலையாட்கள் முரட்டு சிங்கிள் ஆக தங்கி இருந்தனர்.

      எது வந்தாலும் நாங்கள் இருக்கிறோம் என்ற நடுத்தர வர்க்க சுற்றம் இல்லை, மேல் தட்டு படாடோபம் நிறைந்த ஆஃபீஸ்ர் குடும்பங்கள் இல்லை, ஊரையே சுற்றி காவல் செய்த, நேபாளி கூர்காக்கள் இல்லை, எங்கிருந்தோ குறைந்த பட்ச கூலிக்கு ஆட்களை கொணர்ந்து ஆலையை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு 20 வருட இடைவெளியில் இப்படி இங்கே வசித்த குடும்பங்கள் இதனில் இருந்து பணி ஓய்வு, வேலை இழப்பு, சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை என ஏதோ ஒரு காரணத்திற்காக இவ்விடம் விட்டு குடி பெயர்ந்து இருக்க, எஞ்சிய ஓரிரு குடும்பங்கள் மட்டுமே அங்கிருந்தன.

நாங்கள் வசித்த வீடு, எங்கள் பள்ளி, இந்த மரம், அந்த செடி என ஏதோ சிலவற்றோடு டிஜிட்டல் கேமராவில் பதிவு செய்து கொண்டு, மாற்றங்களுடன் உருக்குலைந்த எங்கள் காலனியை பிரிந்து அடுத்த நாள் கனத்த மனதோடு கிளம்பினோம்.

கேமராவில் பதிந்த பிம்பங்களை, கணினியில் மாற்றி சேமிக்கும் நேரம் ஏதோ பிழை காரணமாக நாங்கள் எடுத்த நிழற்படங்கள் அழிந்து போயின. கடந்த காலத்தின் இந்த எச்சங்கள் எங்கள் மலரும் நினைவுகளான குழந்தைப் பருவ உயிரோவியத்தை   சிதைக்காமல் இருக்கவே கணினி பிழை செய்தது போலும்.

 

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!