Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு அத்தியாயம் -21 final

வகைகள் : தொடர்கள் / நீயே எந்தன் மகளாய்-தீபா செண்பகம் (முடிவுற்றது)

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


தொடர்கள்

அத்தியாயம் -21 final

அத்தியாயம்-21.வாடிவாசல்- final  

அன்புச்செல்வன், துணைக்கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்று, ஜல்லிக்கட்டு கமிட்டி, வீரர்கள், காளைகள் பட்டியல், ஏற்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள் என அத்தனையும் பதினைந்து நாட்களாகச் சுற்றி அலைந்து நேரடியாக ஆராய்கிறான். கொண்டை வைத்த சைரன் வாகனத்தில், காக்கிச் சட்டையோடு, மிடுக்காகத் தங்கள் ஊர் மாடுபிடி வீரரைப் பார்க்கவும் ஊர் மக்களுக்குப் பெருமை தான்.

நன்கு பழகியவர்கள், "அன்பு" என அழைத்து விட்டுப் பின், பதவியைப் பார்த்துத் தயங்குவார்கள், "சொல்லுங்க அண்ணேன்..." எனத் தோள் மேல் கை போட்டு விசயத்தைக் கேட்டுக் கொள்வான். தான் இல்லாத ஐந்தாண்டுக் காலத்தில் சுள்ளான்களாக இருந்த சிறுவர்கள், இன்று பெரிய வீரனாகப் பெயர் எடுத்திருப்பதைப் பார்த்துப் பெருமைப் பட்டுக் கொண்டான்.

அரசாங்கத்தின் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான ஆயுள் காப்பீட்டையும் முறைப்படுத்திக் கொடுத்தான். கோட்டாட்சியர், தாசில்தார், மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவக் குழு , விழா கமிட்டியினர், சக காவலர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்தான்.

பொங்கல் தினத்தன்று சிவகாமியின் ஆசைப்படி, சாந்தி, கயல்விழி என அவரது இரண்டு மருமகள்களும் இராஜக்காள்பட்டி சிவகாமி இல்லத்தின் வாசலில் பொங்கல் வைத்தனர். மாட்டுப் பொங்கலுக்குத் தோட்டத்தில் பொங்கல் வைக்க, அன்பு அந்தப் பக்கம் கூட வரவில்லை. செவிடன் கூட வந்து அன்புவைப் பார்த்துக் கண்ணீர் விட்டு, தோட்டத்துக்கு அழைத்தான்.

"வரேன் ஆறுமுகம். வேலை நிறைய இருக்கு." எனச் சமாளித்து அனுப்பி விட்டான். சின்னசாமியும் மகனை கட்டாயப்படுத்தவில்லை. இவ்வளவு தூரம் அவன் தன்னைத் தேற்றிக் கொண்டு வந்ததே பெரிது என நினைத்தார். 

தனுஷ், கனிமொழி பொங்கலுக்கு தனுஷின் ஊரான மூடுவார்பட்டி சென்றிருந்தனர். கனி இப்பொழுது தான் மசக்கையின் ஆரம்பத்தில் இருந்தும், தாய்மாமன் வீட்டில் பொறுப்பான மருமகளாக, கோதண்டத்தின் மனைவியோடும், தனது மாமியாரோடும் இயல்பாகப் பொருந்தி தன்  கடமையைச் செய்து கொண்டிருந்தாள். 

இந்த வருட ஜல்லிக்கட்டு போட்டிக்கு, தனுஷ் அவனோடு அலங்காநல்லூரில் போராடிய நண்பர்களையும், மென் பொறியாளன் விஜய் மெரினாவில் போராடிய நண்பர்களையும், அதோடு தர்மா சக நண்பர்களையும் ஒருங்கிணைத்து அழைத்து வந்தார்கள். அன்புச்செல்வன் மேற்பார்வையில் அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடக்குமிடத்தில் கேலரியில் தனி இடம் ஒதுக்கப்பட்டு, விழா குழுவினரால் சால்வை அணிவித்து மரியாதையும் செய்யப்பட்டது. இரண்டு வருடங்கள் கழித்து, தங்களுக்குக் கிடைத்த இந்த மரியாதையில் போராளிகளுக்கு இருந்த மனக்குறை தீர்ந்தது.

போகி முதலே அன்புச்செல்வன் வேலையில் மும்மரமாகத் தான் இருந்தான். பணியில் சேர்ந்து பயிற்சி முடித்து முதல் பணியே உலகமே உற்று நோக்கும் ஜல்லிக்கட்டு போட்டி. அதிலும் தனுஷ் தயாரித்த அந்த வீடியோவானது புது டிஎஸ்பி மீது, புதுப் பொலிவுடன் வெளிச்சத்தைப் பாய்ச்சியிருந்தது.

யூடியுப் சேனல்களும், மீம்ஸ்களும் சமூக வலைத்தளத்தில், " ஆமாம், இந்தப் புது டிஎஸ்பி யே, மாடுபிடி வீரனாமே, அடங்காத காளையே அவரே இறங்கி அடக்குவாரோ?" என நக்கல் நையாண்டியோடு விமர்சித்தன.

மாட்டுப் பொங்கல் அன்று அலங்காநல்லூர் வாடி வாசலில் ஜல்லிக்கட்டு போட்டி, ஆரம்பிக்க. பாதுகாப்புக் காவலர்கள், மருத்துவச் சேவகர்கள் , ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் எல்லாம் தயார் நிலையிலிருந்தது.

தாரை தப்பட்டை முழங்கியது. மந்திரிகள், எம் எல் ஏ , எம்பிக்கள் வெளிநாட்டவர், ஊடகம், மாடுபிடி வீரர்கள், மாடுகள் அவற்றின் உரிமையாளர்கள், விழாகமிட்டியினர் எனக் கூட்டம் கூடியிருக்க, "மாடுகளைத் துன்புறுத்த மாட்டோம்." என உறுதி மொழி எடுத்தனர். பின்னர் மந்திரி கொடியசைத்து வைக்க, வர்ணனையாளர் வர்ணனையோடு முனியாண்டி கோவில் காளை வாடியிலிருந்து சீறிப் பாய்ந்து வெளியே வந்தது.

"முனியாண்டி கோயில் காளை வருதப்பா. அதை யாரும் பிடிக்கக் கூடாது" என முதல் வர்ணனையைத் தொடங்கியவர்கள், " ஏய் இந்தக் காளையைத் தொட்டுப்பாரு. ஆகா அப்படி, காளையிண்ட இது காளையப்பா.  இரண்டு பேர் பாயாத ஒருத்தன் பிடி. ஒருத்தன் பிடி. மாடு பிடி மாடப்பா. மாட்டைப் பிடிச்சவன், பரிசு பொருளை வாங்கிக்க." என வர்ணனை சென்று கொண்டிருந்தது.

அடுத்தச் சுற்றில் வேல்ஸ் க்ரூப், ஒரு சிலர் மட்டுமே பழைய ஆட்கள். குமரவேல் சத்தமில்லாமல் மற்றொரு படையை உருவாக்கி இருந்தார். அவர்கள் களமிறங்கச் சீறிப் பாய்ந்தன காளைகள், சிதறி ஓடிய வீரர்களுக்கு மத்தியில் நின்று விளையாடிய வீரர்களும், மாடுகளும் பாராட்டுப் பெற்றன. வழக்கம் போல் காளையர், கன்னியரை மடக்க இதனை ஒரு யுத்தியாகப் பயன் படுத்தினர். காயம்பட்டவர்களுக்கான சிகிச்சையும் உடனுக்குடன் வழங்கப்பட்டது. 

முன்பு எப்போதையும் விட விளம்பரதாரர்களும், மாடுகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. அதன் விளைவாக பரிசு பொருட்களும் குவிந்தன. படித்தவர்கள், வெற்றிகரமாக தொழில் புரிபவர்கள், கவுன்சிலர் முதல் மந்திரி வரை பெருமைக்காக ஜல்லிக்கட்டு காளையை வளர்க்க ஆரம்பித்திருந்தனர். இவை யாவும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பயன்கள் தான். அதன் பிறகான விழிப்புணர்வில் ஒரு மாடு வளர்த்தவர்கள் கூட, மூன்று, ஐந்து என வளர்க்க ஆரம்பித்தனர்.

அன்றைய ஜல்லிக்கட்டு போட்டி முடியும் தறுவாயை எட்டியது. அன்புச்செல்வன் பொறுப்பேற்ற முதல் பணியும் செவ்வனே முடிந்தது என நினைத்த வேளையில் கடைசியாக ஒரு மாடு இறங்கியது.

" இது தான் கடைசி மாடப்பா, இந்த மாட்டுக்குப் பின்னாடி நிறைய வரலாறு இருக்கு. முடிஞ்சா பிடிச்சுப் பாரு. இல்லையினா வேடிக்கைப் பாரு. அதைச் சீண்டுனீங்க, சிக்கினீங்க. இது முடுவார்பட்டி கோதண்டம் வளர்க்கும் அசுரன் காளையப்பா" எனவுமே, அன்புச் செல்வனுக்கு மேலெல்லாம் சிலிர்த்தது. " இதுக்கு எவன்டா பர்மிஷன் குடுத்தது?" என வெகுண்டு பார்க்கவும், "டி எஸ் பி சார், நீங்க வளர்த்த காளையாம்ல, அது தான் ஸ்பெஷல் அனுமதி கொடுத்தேன்." எனத் தாசில்தார் பெறுமையாக பதிலளிக்கவும், அவரை எதுவும் சொல்ல முடியாமல் வாடியைப் பார்த்தான் அன்பு.

அசுரன் நல்ல சுத்து மாடாகக் களத்தில் நின்று ஆடியது. ஐந்து வருடத்தில் இன்னும் வளர்ந்து திடகாத்திரமாய் இருந்தது. அதன் கண்களில் முன்பிருந்தே ஆக்ரோஷம் இல்லை. வந்து தொட்டுப் பாருடா, என அசட்டையாகவே நின்றது. ஆனால் அதிரடியாக ஆடியது. அதற்கே வீரர்கள் தாங்கவில்லை. தன் மேல் ஏற வந்த வீரனை உதிர்த்து விட்டு, சீறிக் கொண்டு திரும்பி அவனை நோக்கி முன்னேறவும், வீரன் பின்னாடியே நகர்ந்து பம்மினான். முடிந்தது அசுரன் அவனை கொம்பால் கெந்தி தூக்கப் போகிறது என போட்டி  ஆபத்தாகப் போவதை உணர்ந்த அன்பு மேலே நின்றவன், தொப்பி, பேஜ்களைக் கழட்டி சககாவலரிடம் தந்து விட்டு, மேலிருந்து குதித்து அசுரன் முன் வந்து நின்றான். காளையின் கவனம் காக்கிச்சட்டைக்காரன் மேல் திரும்பியது. கூட்டத்தில் கைதட்டும், விசிலும் பறந்தது. குமரவேல் தனது சகாக்கலை பார்த்துச் சிரித்துக் கொண்டான். அன்புவின் நண்பர்களும் பெருமையாக பார்த்தவர்கள் ," இது தான்டா அன்பு...". "அன்பு விடாத." என கோஷமிட்டு உற்சாகப்படுத்தினர். 

அன்புவின் முகம் இறுகி கோபத்தில் கனன்றது. இரத்த வெள்ளத்திலிருந்த அம்மா கண் முன் வந்தார். அசுரன் காளையைப் பக்கவாட்டில் பிடிக்கவே மற்றவர் அஞ்ச, அன்பு நேரே சென்று கொம்பைப் பிடித்தான். முதலில் சிலிர்த்து தலையை ஆட்டி, கால்களை உதைத்துத் தவ்வியது மாடு, அது தவ்வும் போதே தானும் தயாராக இருந்தவன் , பிடிவாதமாக அதன் கொம்புகளைப் பிடித்து நின்ற அன்பு ,அசுரனை பின்னுக்குத் தள்ள, அவனது ஸ்பரிசத்தையும் வாசத்தையும் உணர்ந்த மாடு, தன் முன்னாள் எஜமானனை கண்டுக் கொண்டது. சில நிமிடங்களிலேயே, அன்புவுக்கு வளைந்து கொடுத்து மண்டியிட்டது மாடு. அதன் கண்களில் ஒரு சிநேகம் தெரிந்தது. 

அது மண்டியிடவும் அன்புவுக்கே செய்வதறியாது அதைப் பிடித்தபடி நின்றான் "ஏன்டா அம்மாவை முட்டின?" என அதனிடம் மாட்டுப் பாசையில் பேச, அதுவும் தெரியாமல் செய்தது விட்டேன் என்பது போல் அவனை நாவால் நக்கியது. ஊடக படக்கருவிகள் படம் பிடிக்க,

வர்ணனையாளர், " எத்தனை வருஷமானாலும், நம்ம வளர்த்த பய, நம்ம பய தானபா. இந்த அசுரன் பய, என்னாமா, அது ஓனர்கிட்ட கொஞ்சுறான். ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, நம்ம டிஎஸ்பி சார் தான் , இந்த வாடியில மாடுபிடி சாம்பியன். அவர் வளர்த்த காளை இது. அவுக அம்மாவைக் குத்தின பிறகும் கூட , மாட்டை வெறுக்காமல், பங்காளி கிட்டக் கொடுத்து வளர்க்கச் சொன்னாகப்பா. இது தான் இந்த மண்ணோட பெருமை..." என விழா குழு அன்புவை சிலாகிக்கக் கோதண்டம் அன்பு முன் வடக்கயிற்றோடு வந்து நின்றான். கூட்டம் ஆரவாரம் செய்ய, அன்புவின் நண்பர்கள், ஜெகன்,சிவா, மாடன் ஆகியோர் பதவி மறந்து நண்பனைக் கொண்டாடினார்கள். 

விழா குழுவினர் யார் அதிகபட்ச மாடுகளைப் பிடித்தார்கள் எனக் கணக்கிட்டுக் கொண்டிருக்க, அசுரனை வடத்தில் கட்டி அன்புவின் கையில் கொடுத்தான் கோதண்டம்.

"அன்பு, இது நீ வளர்த்த அசுரன் இல்லை. நான் வளர்த்த அசுரன். என்னை மாதிரி கொஞ்சம் மந்தமா மாத்திட்டேன். நான் மட்டும் அன்னைக்குச் சவால் விடலையின்னா சிவகாமி பெரியம்மாவுக்கு அப்படி ஆகியிருக்காது. என்னை மன்னிச்சிருப்பா!!!" என மன்னிப்புக் கேட்டான். 

"நீ சொன்னாலும், எனக்கு எங்க போச்சு புத்தி. இந்த ஐந்தறிவு ஜீவனுக்கும் என்ன தெரியும். நான் வளர்த்தப்ப எகிறினது, உன்கிட்ட கட்டுப்பாடோட இருக்கே. நீ அசுரனை கூட்டிட்டு போ கோதண்டம். நான் அப்புறம் உன்னைப் பார்க்கிறேன்." என அசுரனை கோதண்டத்தோடு அனுப்பி விட்டான் அன்பு.

போட்டி முடிந்து, பரிசுகள் அறிவிக்கப்பட்டது. உயரதிகாரிகளை வைத்தே பரிசினை தந்தவர்கள், அன்புவிடமும் மூன்றாவது வந்தவனுக்குப் பரிசளிக்கச் சொல்ல, அன்புவிடமிருந்து பரிசை வாங்கிய வீரன்.

"சார், நீங்களும் என்னை மாதிரி மாடுபிடி வீரன்னு சொன்னாங்க. எங்களுக்கெல்லாம் ஒரே பெருமை சார். மாடு புடிச்சு என்னடா செய்வீங்கன்னு கேட்டாங்கன்னா, முந்தி பதில் சொல்லாத தெரியாது. இனிமே அன்புச்செல்வன் டி எஸ் பி மாதிரி போலீஸ் ஆவோமுன்னு சொல்வோம் சார். நீங்க தான் சார் என் ரோல் மாடல். உங்க வீடியோ பார்த்தேன் சார். அம்புட்டு கஷ்டத்துக்கு அப்புறமும் இந்த இடத்தில நிக்கிறீங்களே சார். நானும் காலேஜ் ல படிக்கிறேன். உங்களை மாதிரியே கவர்மெண்ட் பரிட்சை எழுதி அதிகாரி ஆகனும் சார்." என முகமறியா வீரன் தன் ஆசையைச் சொல்லவும். அன்புவுக்கு மெய் சிலிர்த்தது. 

"இதே நம்பிக்கையோடவே முயற்சி செய் தம்பி. கட்டாயம் அதிகாரி ஆயிடுவ. நம்மளை மாதிரி வீரர்கள் நம்ம சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் செய்யறதுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. நீ நாட்டுக்கு செய். நாடு உன்னை பார்த்துக்கும்." என வாழ்த்தி அனுப்பினான் அன்புச் செல்வன்.

அந்த இளைஞன் , தனது விருப்பத்தைத் தான் சொன்னான். ஆனால், அன்புச் செல்வன் மனதில் தானும் ஒருவனுக்கு ரோல் மாடலாக இருக்கிறோம் என்பதே பெருமையாக இருந்தது. இவர்களைப் போன்றோருக்காகத் தான் சரியான வழியில் பயணிக்க வேண்டும் என மனதில் உறுதி கொண்டான்.

மறுநாள் காணும் பொங்கலன்று, அன்புவின் தோட்டத்தில் தடபுடலாக விருந்து தயாராகிக் கொண்டிருந்தது. வேல் சகோதரர்களும், சின்னச்சாமியும் அன்பு ஊருக்குத் திரும்பியதையும், அதிகாரியாகப் பதவி ஏற்றதையும் அவன் கல்யாண விருந்தையும் சேர்த்து, உறவினருக்கும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு, அன்புவை கண்டு பிடிக்க உதவியவர்களுக்கும் விருந்து கொடுத்தனர்.

ஆனால் யாருக்காக விருந்து கொடுத்தார்களோ, அவன் தான் நிற்க நேரமின்றிப் பாலமேடு ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். தனுஷ், விஜய், தர்மா எனச் சகலையும், நண்பர்களுமாகக் கட்டம் கட்டி, அன்புவை மதியம் அவனது தோட்டத்துக்கு அழைத்து வந்தனர்.

"டேய், வேணாம்டா. அங்க வந்தா, நான் எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னே தெரியாது. சீன் ஆகிடும்." எனப் பதறவும்.

"ஒன்னும் ஆகாது. மத்ததைச் சமாளிச்ச மாதிரியே இதையும் சமாளிச்சிடலாம்." என வலுக்கட்டாயமாக அழைத்து வந்தனர்.

அறிவு, இங்கும், அங்கும் ஓடி விருந்தை கவனித்துத் திரிய, "எதுக்குடா இவ்வளவு வேலையை இழுத்துக்கிட்ட?" என அண்ணனை, அன்பு கரிசனையாக கடிந்து கொள்ள.

"முந்தி நீ சொன்னது தான்டா. இரண்டு பேரில் ஒருத்தர் இங்க வீட்டைப் பார்த்திட்டு இருப்போம் , இன்னொருத்தர் வெளியே வேலை பார்ப்போம்னு சொன்னேல்ல.  நான் வீட்டைப் பார்க்கிறேன். நீ நாட்டைப் பார்." என்றவன். " நீ பத்து கரவை மாடு வச்சிருந்தியா, இப்ப எத்தனை கரவை மாடு நிக்கிதுண்டு பாரு. உள்ள போ, உனக்கு ஒரு சர்ப்ரைஸ்" எனவும். அன்பு ஓர் அலைப்புறுதலோடே உள்ளே செல்ல, அங்கே அவன் கண்ட காட்சியில் ஸ்தம்பித்து நின்றான்.

கோதண்டம், அவர்கள் அப்பா பெருமாள் சாமி ஆகியோர் அசுரனை அங்கே அழைத்து வந்திருக்க, அதனுடைய பழைய ஷெட்டில் அதைக் கட்டியிருந்தனர். அருகில் கந்தவேல், குமரவேல்  சின்னச்சாமி ஆகியோர் சித்திரை நிலா சிவகாமியை வைத்துக் கொண்டு நின்றனர்.

சின்னச்சாமி சித்துக் குட்டியை அசுரனைத் தடவச் சொல்லிக் கொண்டிருக்க, இவன் பதறி ஓடினான். "அப்பா, மாடு முட்டிடப் போகுதப்பா!!!" என வேகமாகச் சொல்லவும். 

"இருப்பா. எல்லாம் நம்ம வளர்கிற விதத்தில தான் இருக்கு." என்றவர், பேத்தியை இறுக்கப் பற்றிக் கொண்டு, கோதண்டம் மாட்டின் துடுப்பைக் கெட்டியாகப் பிடித்திருந்த அசுரனின் நெற்றியை, அந்தப் பிஞ்சுக் கரங்களால் தடவச் செய்தார். இளங்கன்று பயமறியாது, இங்குச் சித்துக் குட்டியும் உற்சாகமாக, "அம்பெய்..." எனக் குரல் கொடுக்க, கயல்விழி அங்கே வந்தவள், கணவனின் கையைக் கோர்த்தபடி அமைதியாக இருக்கச் சொன்னாள். சித்து குட்டி தாத்தாவின் கைகளிலிருந்து மாட்டின் நெற்றியை தடவியது, உற்சாகமாகி, அப்பாவிடம் தாவி, மாட்டைக் காட்டி மகிழ்ந்தது. அவனையும் தொட்டுப் பார்க்கச் சொன்னது. "அப்பாவும் தொடனுமா. எல்லாம் உங்க உத்தரவு தான்." என்றவனும் உணர்வு மிகுதியில் மகளைப் பற்றிக் கொண்டு அசுரனையும் தடவிக் கொடுத்தான்.

பெருமாள் சாமி, "ஏன் தம்பி, என் மருமகளுக்குப் பரிசம் போடும் போது கூட, நீ இவ்வளவு பெரிய உத்தியோகத்துக்குப் பரிட்சை எழுதி இருக்கேன்னு சொல்லவே இல்லையே?" என ஐந்து வருடத்துக்கு முன்பான கதையைக் கேட்டார்.

"என்னை, எனக்காகவே ஏத்துக்கனும்னு நினைச்சேன் சித்தப்பா." என அன்பு சொல்லவும்.

"என் மருமகள், உன்னை உனக்காகவே தான்பா கட்டிக்கிச்சு. டீச்சர் வேலை பார்த்தாவது, உன்னைக் காப்பாத்துறேன்னு சொல்லலை." எனச் சின்னசாமியும் மருமகளைப் புகழ்ந்தார்.

"ஆமாம்மா, இப்பவும் என்னை வீட்டில உட்கார வச்சிட்டு, அவள் வெளிய கிளம்பறதில தான் தயாரா இருக்கா." என அன்புச் சொல்லவும்.

"யாரு, உன்னை. அந்தக் காத்தைக் கூட அடைச்சு வச்சிடலாம், ஆனால் உன்னைப் பிடிச்சு வைக்க முடியாது!" என்றாள் கயல்விழி.

"காத்து, கருப்பு அண்ட முடியாத என் தம்பியைத் தான் நீ அண்டிட்டியே." எனக் கலைச் செல்வியும் பேச்சில் இணைய,

"அதுனால தான் உன் தம்பியை இங்க இழுத்துட்டு வந்திருக்கு என் மகள். இல்லையின்னா இன்னும் நெருப்பு கோழி மாதிரி தலையை மறைச்சிட்டு உட்ககார்ந்து இருப்பான்." என்றான் குமரவேல்.

"குமராப்பா, என் புருஷனை வஞ்சாலும், காளைமாடு, எருமைனு தான் வையனுமாம், எங்க அத்தை சொல்லியிருக்காங்க." என கயல்விழி கேலி பேசவும், அன்பு அவளை முறைக்கவும் ,சின்னசாமி, " ஆமாத்தா, உன்கிட்டையும் சொல்லியிருக்காளா?" என வியக்க, "அத்தை வாயை திறந்தாலே மகன் புராணம் தானே!" என கயல்விழியின் பதிலில், "எல்லாத்துக்கும் தயார் பண்ணிட்டு தான் போயிருக்கா!" என மனைவியின் நினைவில் தொலைந்தார். 

செவிடன் வேலையாக இருந்தவன், அன்புவைப் பார்க்கவும் ஓடி வந்தான். " ஐயா, நம்ம கறவை மாடு எல்லாம் வந்து பாருங்க" என அழைக்கவும்.

"முதல்ல சாப்பிட்டு வரட்டும், கயலு புருஷன் வந்து தான் சாப்பிடுவோமுன்னு, கனி மாப்பிள்ளைல இருந்து, அம்புட்டு பேரும் காத்திருக்காக." என உமா சத்தம் கொடுத்தார். 

கோதண்டம், "அத்தை ஒரு அஞ்சு நிமிஷம்" என்றவன், அன்புவை ஆறுமுகம் சொன்ன கறவை மாடுகள் இருக்குமிடம் அழைத்துச் சென்று, பத்து மாடுகளை அடையாளம் காட்டி, "இது எல்லாமே அசுரனோட வித்துத் தான் அன்பு. பெரியம்மாவைக் குத்தின ஒரு தப்பைத் தவிர, அதுனால நம்மளுக்கு ஆதாயம் தான் அதிகம்" என எடுத்துச் சொல்லவும், அன்புவுக்கு தான் காளை வளர்ப்பதும் ஓர் கலை. யாரையும் அண்ட விடாத அசுரனாக வளர்ப்பதை விட, கொஞ்சம் போக்கு காட்டி பிடிபடும் சூரனாக இருந்தாளே போதும் என நினைத்தான். அதையே வார்த்தைகளாக கோதண்டத்தை பாராட்டவும் செய்தான். 

"உண்மையில உனக்குத் தான் பெரிய மனசு கோதண், எவ்வளவு பெரிய விசயத்தை இவ்வளவு எளிமையா செஞ்சிட்டு இருக்க. நீ தான் உண்மையான வீரன்..." எனச் சொல்லி, அன்பு , கோதண்டத்துக்கு ஒரு போலீஷ் சல்யூட் அடிக்க, அவனும் கண் கலங்கியபடி பதில் சல்யூட் அடித்தான். பெற்றவர்கள் நெகிழ்ச்சியாகப் பார்த்திருந்தனர்.

பந்தி பரிமாறும் இடத்திலிருந்த, கயல்விழி, கனி மொழி சத்தம் பெரிதாகக் கேட்டது. " வரனும், வரனும் அன்பு மாமா வரனும்." எனக் கரண்டிகளை வைத்து மேஜையில் தட்டி ஒலி எழுப்ப, மற்றவ ஜல்லிக்கட்டு போராளிகளும்  மேஜையில் தட்டி பின் பாட்டுப் பாடினார்கள். அதைக் கேட்ட அன்பு அங்கு விரைந்தான்.

"ஏய், இப்ப என்ன போராட்டம்?" எனச் சிரித்துக் கொண்டே கேட்கவும், 

"உனக்காகத் தான் எல்லாரும் வெயிட்டிங் மாமா. சீக்கிரம் வா." என கயல்விழியின் அழைப்பில் அவளருகே அமரப் போனான். 

" இருங்க ப்ரோ, அண்ணியோட அப்புறம் ஜோடிப் போட்டு உட்காரலாம். இங்க வந்து நினைவு பரிசை வாங்கிக்கிங்க" என அழைத்த விஜய்,

"இந்த வருட ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்திக் காட்டிய, முன்னாள் மாடுபிடி வீரன், மெரினாபுரட்சியை காவல் காத்த சூரன், டி எஸ்பி யாக பதவியேற்றிருக்கும் தீரன், திரு அன்புச் செல்வன் அவர்களுக்கு, ஜல்லிக்கட்டு போராளிகளைக் கவுரவித்தமைக்காகவும், பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்த சக போராளிக்கு ஓர் அன்பளிப்பு." என வசனம் பேசிய விஜய், காளைமாட்டை அடக்கும் மாடுபிடி வீரனின் சிலையை தனுஷ், மற்றும் சகாக்கலோடு சேர்ந்து  அன்புவுக்குப் பரிசாகத் தந்தான்.

"வாழ்த்துக்கள் ப்ரோ." என மற்றவர்கள் பாராட்ட

 "ஆனால், மெரினால  நான் ஜல்லிக்கட்டு காக போராடவே இல்லையே டூட்டி தான பார்த்தேன்" என்றான் அன்பு.

"இல்லை ப்ரோ, நீங்க கொடுத்த நிறைய யோசனைகள், எங்களுக்கு உபயோகமா இருந்தது." என ஆரம்பிக்கவும்.. மற்றவர்களும் ஒன்றோடு சொல்ல பேச்சு நீண்டது.

"டேய் விடுங்கடா, எனக்கும் என் புள்ளைக்கும் பசிக்குது." என்றாள் கனிமொழி. "ஆமாம்!!!" எனக் கயல்விழியும் அதை ஆமோதித்துச் சொல்ல உமா தான் மற்றவர் அரியாமல் கயலை ஒரு பார்வை பார்த்து விட்டு மருமகனை முறைத்தார். 

"டேய், இதோட நிறுத்திக்க. என் பொண்டாட்டி கொலைபசில இருக்கா. அப்புறம் கொலையாகிப் போகும்." என விஜயை மிரட்டிய தனுஷ் கனி மொழி அருகில் சென்று அமர, " சாப்பிடலாம் ரைட்." என அவனும் தனது இடத்தில் சென்று அமர்ந்தான். 

கலைச் செல்லி, " இந்தா உன் மகள் கொஞ்ச நேரம் உன்னை விட்டுட்டு இருக்க மாட்டேங்கிறா. அம்பேய், அம்பேயாம். நல்ல அம்பு..." என தம்பியிடம் நீட்டவும், 

"குடும்பமே அப்படித் தான், ஒருத்தரை ஒருத்தர் சுத்திக்கிட்டே திரிவாக. அடுத்து வர்றதையாவது நம்ம கை பத்திக்கனும்." என உமா பூடகமாகப் பேச அன்புச் செல்வன் சத்தமில்லாமல், மகளைத் தூக்கிக் கொண்டு தனுஷ் மற்றும் கயலுக்கு நடுவில் சென்று அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க, "என்ன ப்ரோ. இதுலையுமா போட்டிக்கு வருவீங்க?" எனத் தனுஷ் குறைபட அன்பு திருட்டு முழி முழிக்க, "அம்பேய்..." என முத்தமிட்டது சிவகாமி. 

சிவகாமி சித்துவைக்கக் காட்டி, "இது சிவகாமி பெரியம்மா. அப்ப அடுத்தது யாரு?" எனத் தனுஷ் ரகசியமாகக் கேட்கவும், "அது சிவகாமி வெர்சன் 2. O " என்றான் 

விருந்தினர் திரும்பி விட, அசுரனையும் கறவை மாடுகளையுமே  பார்த்து நின்ற அன்புவிடம், "கிளம்பலாமா மாமா?" என்ற கயலை கை வளைவில் அணைத்துக் கொண்ட அன்பு   

" கயலு. விழி. என் கயல்விழி. கவி. கண்ணழகி... எனக்கு ஒரு சந்தேகம்டி!" என்றான். 

"என்னா மாமா?" என அவன் முகம் பார்க்க, "இந்த அசுரன் பய மட்டும், எத்தனை புள்ளை பெத்திருக்கான். அதை பாராட்டுறவைங்கே, நம்ம விசேசம்னு சொன்னா மட்டும் எதுக்கு முறைக்குதுங்க. உங்க அம்மா ரொம்ப கேவலமா பார்க்கிது சொல்லி வை!" எனவும், கலகலவென நகைத்த, கயல்விழி, "காளையோட வேலை, கன்டை கொடுத்ததோட நிண்டுடும் மாமா. கஷ்டபட்டு பெக்கிறது பசு மாடு தானே." என்றவள், 

"கேப் விடாமல் அடிச்சா. எங்கம்மா எப்படி பிரசவம் பார்க்கும். ஆனாலும் நீ கன்ட்ரோலா இருந்திருக்கனும்." என கயல் பழைய பழியை திரும்ப போடவும். 

அன்பு கையெடுத்து கும்பிட்டவன், "அம்மா தாயே, இத்தோட சோலியை முடிச்சுக்குவோம். இனி நானே கன்ட்ரோலா இருந்துக்கிறேன்." என இருவருமாக நகைக்கும் போதே, அவன் போன் சிணுங்கியது. 

"அன்பேய், வீட்டுக்கு சீக்கிரம் வா. உன் மகள் கூப்பிடுது." என்றார் சின்னசாமி.

"இந்த ஜென்மத்தில மகளா வந்த, என் அம்மா சிவகாமி  என்னை ரொம்ப  ஆட்டி படைக்குதுடி." என்றபடி மகளின் ஆணைக்கினங்கி மனைவியோடு வீட்டுக்கு விரைந்தான் சிவகாமியின் அன்பு. 

முற்றும்.

2 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!