Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு மனசு-34. இறுதி அத்தியாயம்

வகைகள் : தொடர்கள் / மனசு தடுமாறும்-1

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


தொடர்கள்

மனசு-34. இறுதி அத்தியாயம்

 

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில், சித்திரை திருவிழா முடிந்து, சேகரன் குடும்பத்தின் அழைப்பின் பேரில் வந்திருந்த கூட்டம் தான் இருந்தது.

போன வருடம், கீர்த்திவாசன் தன்னை இழிவாகப் பேசினான் என்று கோபப்பட்டவன், இன்று அதற்குப் பதில் சொல்வது போல் இந்த நிகழ்வை அங்கு ஏற்பாடு செய்திருந்தான். ஆம், ‘மிராசு ஊரறிய என்னை இரண்டாம் தாரம்னு சொல்லிக்க தயாரா’ என்ற சங்கரியின் கேள்விக்கும் இன்று செயலால் பதில் சொல்ல இருக்கிறான். 

சங்கரியோடு இணைவதில் சுந்தரனுக்கு இருந்த தயக்கத்தை, பாலா அன்றைய  இரவில் தகர்த்து இருந்தாள்.“அத்தான், சங்கரியை உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்ச நாளிலிருந்து, கௌமாரிகிட்ட  என்னோட பிரார்த்தனை, நீங்க முழு மனசோட அவளை உங்க மனைவியா ஏத்துக்கணும்கிறது தான். முந்தியே, பீஷ்மரையும், ராமனையும் வச்சு சொன்னேனே, அவங்களை உதாரண புருஷர்களாக வச்சுக்கலாம், வாழ்க்கை நம்ம சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி, நேர்மையா வாழ்ந்தா போதும். நீங்க மனசில் எந்த சஞ்சலமும் இல்லாமல் அவளோட வாழ்க்கையை தொடங்குங்க. எனக்கு என் மகள் சுந்தரி வேணும்”  எனப் பச்சைக் கொடி காட்டியவள், செய்த ஏற்பாடு தான், கௌமாரியம்மன் கோவிலில் வைத்து, மீண்டும் சுந்தரன், சங்கரிக்குத் தாலி கட்டுவது. 

அக்காள், தங்கை ஒரே போல் சிங்காரித்து, மனோரஞ்சிதம் மலர் சூடி அய்யாவுவோடு சுந்தரன் அருகில் நின்றனர். 

அய்யாவுக்கு இரண்டாம் பிறந்த நாள், பட்டு சொக்காய், குட்டி வேட்டி , அங்கவஸ்திரம் எனப் பாலா மகனை அலங்கரித்திருக்க,  பரிவட்டம் கட்டி 

அம்மன் கழுத்திலிருந்த மாலையைப் போட்டு, பொட்டும் வைக்கவும், சொக்கநாத ராஜசேகரன் என்ற அய்யாவு இளவரசனாகக் காட்சி தந்தான். 

கெளமாரி புன்சிரிப்போடு அருள் புரிய, பெரியவர்கள் ஆசிகளோடு, அம்மன் திருவுரு முன் பாலாவுக்கு முதல் மாலையைப் போட்டவன் , சங்கரிக்கு மனதார மாலையை  போட்டு, மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலியையம்  கட்ட, அவள் முகமும் ,தன் நாயகனுடன் இணைந்ததில் மகிழ்ச்சியில் மிளிர்ந்தது. 

கல்யாணி, குணசேகரன், அமிர்தா மட்டுமின்றி , லெட்சுமி அம்மாளும், வந்திருந்து மனம்கனிந்த வாழ்த்துக்களைச் சொன்னார்கள். ஞானம் சேவுகன் அவன் பெண் மக்கள், மரக்காயன் குடும்பம், பிஜு, தயாளனும் மனைவியோடு இந்த மறுமணத்துக்கு வந்திருந்தனர்

போற்றுவார் போற்றலும் , தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனின் சோதரிக்கே என கௌமாரி மேல் பாரத்தைப் போட்டு, நல்ல நிகழ்வை நடத்திக் காட்டினர். 

‘இதெல்லாம் எத்தனை நாளைக்கு’ என்ற ஊரார் பேச்சுக்களைப் புறம் தள்ளி, அன்றைய  இரவில், பாண்டியன் விரைவுவண்டியில்,  சுந்தரன் சங்கரியை அவளின் நேர்காணலுக்காக, சென்னைக்கு  அழைத்துச் சென்றான். 

சேவுகன் யோசனையாக முதல்நிலை ஏசி கோச்சில், இவர்களுக்குத் தனியாக கூபேயை பதிந்து கொடுத்திருந்தான். இருவர்  மட்டும் இருந்த தனிமை, சங்கரி, சுந்தரன் நாயகியாக புது மாங்கல்யம் , மனோரஞ்சிதம், மல்லிகை சேர்த்து அணிந்து அவளது ட்ரேட் மார்க் மோகன புன்னகையில் எதிர் இருக்கையில் அமர்ந்திருக்க, சுந்தரனுக்கு தான் மூச்சு விட சிரமமாக இருந்தது. இரண்டு முறை வெளியே சென்று பாலாவிடம் பேசிவிட்டு வந்தான். 

“அம்பிகை, உன் தங்கச்சி மோகினியாட்டம் உட்கார்ந்திருக்காமா, எனக்குப் பயந்து வருது” எனவும், “இப்போ போனை வைக்கிறீங்களா இல்லையா. எல்லாரும் அலைச்சல் அலுப்புல தூங்கிட்டு இருக்கோம். உங்களுக்கு தூக்கம் வரலைனா, அவளைப் பாட சொல்லுங்க நல்லா பாடுவா” என எரிச்சலாக போனை வைக்க, இங்கு டிக்கெட் பரிசோதகர் வந்து சென்றிருந்தார். 

சுந்தரன் படபடப்பாக வந்து அமர, “இப்ப எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க. இங்கேயேவா குடும்பம் நடத்த போறோம். சும்மா பேசிட்டு இருங்க மாமா” என அவள் முறைக்க, 

 “பாலா இல்லாத தனிமையில் உன்கிட்ட விழுந்துடுவேன்னு, மரக்காயன் சொன்னானா, அது தான் டென்ஷன் “ உளறிக் கொட்ட, சங்கரி சுவாரஸ்யமாக தன் மிராசை ரசித்து வந்தாள். 

தடதடவென ஓடும் ரயிலையும், மாமன் மனதையும் ஒப்பிட்டு பார்த்த சங்கரி, அவன் தன்னை ஏற்ற தருணத்தை  நினைத்துப் பார்த்தாள். 

சிகிச்சையில்  பாலா அரை மயக்கத்தில்  புலம்பும் போது, மருத்துவர் புவனா அவளுக்கு நம்பிக்கை தரும் விதமாக,  "பாலா உன் நம்பிக்கை வலிமையானது. அது நிச்சயம் நடக்கும். உனக்காக உயிரையே கொடுக்க ரெடியா இருக்க சுந்தரனும், சங்கரியும் , இதையும் செய்வாங்க. ஆனால் அதுக்கு  நீ ஆரோக்கியமாக எந்திரிச்சு வரணும். " என்ற நம்பிக்கை தந்து மற்ற இருவருக்கும் அதே நம்பிக்கையை தருமாறு சொல்லாமல் சொல்லி சென்றார். 

சங்கரி இல்லாத நேரத்தில் சுந்தரனும், சுந்தரன் இல்லாத நேரத்தில் சங்கரனும் பாலாவுக்கு அவள் ஆழ்மனதில் பதியும் படியான  அந்த நம்பிக்கையை தந்தனர். 

" அம்பிகை, உனக்காக என் உயிரையே தருவேன், என்னை நான் மாத்திக்க மாட்டேனா.  உன் தங்கச்சியும் வந்துட்டாளே, நீ நினைச்சபடி நம்ம வீடு பிள்ளைகளால் நிறையும் , நீ நல்லபடியா  எந்திரிச்சு வாம்மா. நீ இல்லாமல் நாங்க யாருமே " சுந்தரன் தந்த வாக்குறுதியை மறைந்து நின்று கேட்டாள்.  

அதற்கு பின், பாலா உடல்நிலை தேறியது. ஆனாலும் சுந்தரனுக்கு நேரடியாக சங்கரியை கேட்பதில் தயக்கமிருக்க விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடும் நாடகத்தை நிகழ்த்தினான். 

சங்கரி, சுந்தரனின் எண்ணப்போக்கை உணர்ந்தும், தன் நேசத்துக்குரிய அக்கா, மாமா உயிராகிய மகனையும்  விட முடியாது,  பாலாவும் தனித்து இந்த குடும்பத்தை கொண்டு செலுத்த முடியாது என உணர்ந்து விவாகரத்து பத்திரத்தை கிழித்தாள். 

அதோடு சந்திரன் தன் அக்கா அமிர்தாவின் கண்மண் தெரியாத பாசத்தால் தான் சீரழிந்தான். அய்யாவுவிடமும் நிச்சயமாக பாலா கடுமை காட்ட மாட்டாள். தன் மகன் சந்திரன் போல் வளர்ந்து விடுவானோ என்ற பயமும் அவளை அங்கே பிடித்து வைத்தது . 

அன்றைய தினமே ,மரக்காயன் சங்கரியை போனில் அழைத்தவன், "உன் விசயத்தில் அவன் பார்வை நிறைய மாறியிருக்குமா.  மிராசு உன் நேசத்தில  தலைக் குப்புற விழுந்துட்டான். ஆனாலும் மீசையில மண் ஒட்டாத மாதிரி கெத்தா தான் இருப்பான்." நண்பனுக்காக வக்காலத்து வாங்க, 

"அண்ணா, நான் திரும்பி வந்தப்ப அவரோட முதல் ரியாக்க்ஷன்லையே நான் புரிஞ்சுக்கிட்டேன். அக்கா, மாமாவுக்கிடையில இருக்க ஆத்மார்த்தமான நேசம் இருக்குமான்னு தெரியாது. நிச்சயம் நல்ல மனைவியா இருப்பேன்" எனவும், 

"நிச்சயம் இருப்பமா . பெருங்கருணையாளன் உங்க குடும்பத்தை நல்லா வைக்கட்டும் " வாழ்த்துக்கூறி போனை வைத்தார். 

அடுத்த நாள் பாலா, சங்கரியிடம்  சுந்தரனுக்கு மதிய உணவை கொடுத்து ,"மனசை திறந்து உன் மாமாட்ட பேசிட்டு வா" வயலுக்கு அனுப்பி விட்டாள். 

வண்டு துரத்திய நாள் போல் சாப்பாடு பரிமாற இருவருக்குமே பழைய நினைவு. "அம்மாடி , என் கூட உன் வாழ்க்கையை பிணைச்சுகிறது அவ்வளவு சுலபமான விசயமில்லை. நிறைய விமர்சனங்களை எதிர் கொள்ள வேண்டியது இருக்கும்." எனவும், 

" நான் ரெடி" அவள் வேகமாகச் சொல்ல, அவன் ஓர் சிரிப்பில், " இருமா பேசி முடிச்சுக்குறேன்" என்றான். 

மிராசு, நான் அலையிறேன்னு நினைச்சுக்க போறாருடி'  அவள் மனசாட்சி இடித்துரைக்க, பதட்டமாக  தலையை குனிந்தாள்.

" தப்பா எடுத்துக்க மாட்டேன் பயப்படாதே” என்றான். 

‘சத்தமா சொல்லிட்டோமோ’ ஆச்சரியமாக பார்த்தாள். அவள் விழியில் விழுந்தவன், தன்னை மீட்டு, " அடுத்து காட்டும் பளிங்கு போல், நாச்சியார் மனசு அப்பட்டமா முகத்தில தெரியுது " அடுத்த குண்டையும் வீசியவன், முக்கியமான விசயத்துக்கு வந்தான். 

"சுந்தரன் மனைவியா, இத்தனை நாள் வீட்டுக்குள்ள , உன் அக்காவோட அரவணைப்பில் இருந்த, யாருடைய பேச்சும் உன் வரை வந்தது இல்லை. 

இனிமேல், அரசாங்க அதிகாரியா இருப்ப. போற வர்ற பக்கம் உன்னை, புறம் பேசுவாங்க. ஒரு மனுசனோட நேர்மையில் கை வைக்க முடியாத போது அவன் கேரக்டரை விமர்சனம் செய்வாங்க. நம்ம வாழ்க்கையில், அதுக்கு  நிறைய வாய்ப்புகள் இருக்கு." என வரிசை படுத்த, 

" தோள் கொடுக்க நீங்க இருப்பீங்களே” என்றாள். 

“நிச்சயமா, ஆனா நான் இல்லாத நேரம், நீயா தான் சந்திக்கணும்” எனவும், அவளும் ஒத்துக் கொண்டாள். 

தாம்பத்தியத்தை பற்றிய விசயத்தை பேச மாட்டாமல் அவன் தயங்க, "பாலாக்கா ஆசையை நிறைவேத்த, உங்களை மயக்கி பிளையை பெத்துக்க வேண்டியது என் பொறுப்பு " விஷமமாக சிரித்தாள். 

" ஆத்தா, என்னை விடு தாயே. நான் அதைப் பத்தியே பேசலை.” என்றவன், “அன்னைக்கு , நான் அப்படி பேசி இருக்க கூடாது. “ என அவளிடம் மன்னிப்பு கேட்கும் முன் அவன் வாயை பொத்தியவள், “உங்களுக்கு உரிமை இருக்கு , நான் தான் பொறுமையா இல்லாமல் போயிட்டேன்” வருந்தினாள். 

 “இல்லைமா, தவறை உணர்ந்து அய்யாவு பிறந்த நாள் அன்னைக்கு பேச தான் வந்தேன், உன்னை காயப்படுத்திடுவேனோன்னு  உன் அக்காவுக்கு பயம்” அந்த நாளை சொன்னான். 

“நீ போனப்போ, என் வாழ்க்கையோட ஒரு பாகம் போன மாதிரி  இருந்தது.” என ஆரம்பித்து, மடை திறந்த வெள்ளமாக அவன் உணர்வுகளை கொட்ட, தன்னை ஒரு நெஞ்சம் இவ்வளவு தேடியிருக்கிறதே என்பதிலேயே அவளுக்குள் ஓர் நிறைவு. 

இப்போதும் எதிர் இருக்கையில் தலை குனிந்தபடி, மனம் தடுமாறி அமர்ந்திருக்கும், மிராசை  ரசித்தபடி தான் இருந்தாள். 

“எனக்கு, எப்பவுமே உங்களை பிடிக்கும் மாமா. சந்திரனை பத்தியும்  உங்ககிட்ட தான் முழுசா சொல்லியிருக்கேன். இப்போ என் மனசில சலனமே இல்லை. முழுசா நீங்க தான் இருக்கீங்க. நீங்க எனக்கு வேற கல்யாணம்னு சொல்லும் போதும் கூட, அது நடக்காதுனு என் ஆழ் மனசு சொல்லுச்சு. நீங்க என்னை ஏத்துக்கமா போயிருந்தாலும் வேற கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேன். 

 உங்களையே தான் நினைச்சுகிட்டு இருந்திருப்பேன்” என்றவள் வார்த்தைகள் அவன் காதில் எதிரொலிக்க,  அவளை ஏறெடுத்து பார்த்தான். 

அவள் பார்வையை சந்தித்தவன் "அம்மாடி , கண்ணை மூடி தூங்குவேன். நாளைக்கு இன்டர்வியூ நல்லபடியா செய்யனும்ல " அறிவுறுத்த. 

" கூட்டுறவு துறையில தான் போஸ்டிங். உங்களோட நேரடி அனுபவத்தை சொல்லுங்களேன். அதை வச்சு பிக்கப் பண்ணிக்குவேன்" அவள் உரையாடலை துவக்க, அவன் நிறைய பேசினான். அவன் விஷய ஞானத்தில் அவளுக்கு பிரமிப்பு வந்தது, பேச்சு இயல்பாய்  ஸ்வீட் நத்திங்காகவும் வளர்ந்தது. 

காலையில் சென்னை வந்து , ஓர் அறையெடுத்து தங்கினர்.சுந்தரனுடன் சென்ற தைரியத்தில் சிறப்பாக நேர்காணலை முடித்து வந்தவள் , ‘மாமா, முதல் போஸ்டிங். ட்ரைனிங்ன்னு  வேற ஊர்ல போடுவாங்க போல “ என அவள் தயங்கியபடியே சொல்ல, 

“தமிழ் நாட்டுக்குள்ள தானே போடுவாங்க. எங்க போட்டாலும் போயிக்கலாம்.  ஆறு மாசம் தான், நம்ம ஊர் பக்கமே வாங்கிக்கலாம். சந்திரன் பொண்டாட்டி, சுந்தரன் பொண்டாட்டி இதெல்லாம் தாண்டி, உனக்குன்னு ஒரு அடையாளம் இருக்குன்னு சொன்னேன்ல. அது இது தான் அம்மாடி” என்றான்.  

அருகில் அமர்ந்து அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டவள், “உங்களோட இந்த அனுசரணை தான் மாமா, உங்களை நேசிக்க காரணமே” என நெகிழ, 

“அரை டிக்கெட்டா இருந்தவ, இன்னைக்கு அரசாங்க அதிகாரி. பாலா இருக்க, சுந்தரன் பொண்டாட்டியா இப்படி உரிமையை தலை சாஞ்சு இருக்க பாரு. உலகத்தில எதுவேனாலும் நடக்கும்” என ஆச்சரிய பட்டான். 

“உங்களுக்கு அக்காவை இழுக்காமல் பேசவே தெரியாதா. இதென்னமோ நீங்க ஓவர் டிபெண்டிங் ஆடுற மாதிரி தான் இருக்கு.” அவள் கோபிக்க, சுந்தரனுக்கு அவளை சமாதானப்படுத்த தைரியம் வரவில்லை. 

சங்கரிக்கு வருவாய் ஆய்வாளர் பதவி கிடைத்தது, அதுவும் பெண் என்பதற்கு முன்னுரிமை கொடுத்து தேனி மாவட்டத்தில் கிடைத்தது. ஆனால் ஊர் ஊராக பயணிக்க வேண்டியது இருந்தது. பக்க பலமாக சுந்தரன் நின்றான்.

கூடலூரில் சங்கரி குடியேற, வாரம் இரண்டு நாள் சுந்தரன் சங்கரியோடு தங்கி, தன் தொழிலை பார்த்தான்.  தனி குடித்தனம், அவன் சுவைக்கு சமைத்து, ருசித்து,  அலுவலகம் கிளம்ப, அவன் கொண்டு வந்து விடுவான். நாட்கள் இயல்பாய் கடந்தன. 

இதை கவனித்த சில விஷமிகள்,” மீதி நாள் வேணும்னா நாம போவோமா” என பேச, சங்கரி, சுந்தரன்  சொன்ன விமர்சனம்  என  புறம் தள்ள பார்த்தாள். ஆனாலும், போனில் பேசும் போதே அவள் குரல் அவனுக்கு தெரிந்து விட, அடுத்து ஒரு மணி நேரத்தில் அவள் முன் இருந்தான். 

யாருன்னு சொல்லு”  என்றவன், பேசியவன் வீட்டுக்கே  சங்கரியை அழைத்து சென்று, அவன் மனைவி முன்பே வைத்து அடித்து கிழித்து விட்டு  வந்தான். 

“உங்க கோபத்தை பார்த்திருக்கேன், ஆனா இப்படி அடிதடியில் இறங்குவீங்கன்னு நினைக்கலை” அவள் ஆச்சரிய பட,  

“என் பொண்டாட்டியை சொன்னா, கோபம் வராதா.” என்றவனின் பேச்சில் முகம் சிவந்தவள், அவனோடே ஒண்டிக்கு கொள்ள, 

“அம்மாடி, இப்படி எல்லாம் வெக்க படுவியா” வேண்டுமென்றே அதிசயித்தான். 

போங்க” என அவனுள் புதைந்து கொள்ள, ஆசையாக அணைத்துக் கொண்டான். 

மனம் கனிந்து மலர்வது தானே தாம்பத்தியம், இங்கும் படிப்படியான நேசம் வளர்ந்து , பேதம் அகன்று அவர்களுக்குள் இனிய தாம்பத்யமும் நிகழ்ந்தது. 

சங்கரி வார விடுமுறையில் கூழையனூர் வந்து விடுவாள். பாலா அவர்களுக்கான தனிமையை ஏற்படுத்தி தர முனைய, “ம்கூம், உங்களோடையும், அய்யாவுவோடையும் இருக்க தான் வந்தேன்” என சுந்தரனை சுத்தலில் விட்டாள்.

அன்பை  பகிர்வதிலும்  பாலாவுக்கு சங்கடம் தரும் விதத்தில் இல்லாமல் தங்கள் எல்லைக்குள் இருந்து கொண்டார்கள். 

“எப்ப தான் நல்ல செய்தி சொல்லுவ, உனக்கு திறமை பத்தலடி”  பாலா குறைபட’ அக்காவை கட்டியணைத்துக் முத்தமிட்டாள். 

“என்னை எதுக்குடி, கட்டிகிற , உன் மாமாவை கட்டிக்கிட்டு இருந்தேனா, பிள்ளையாவது வந்திருக்கும்”  சிடுசிடுக்க, நாள் தள்ளி இருக்கும் விஷத்தை சொன்னாள். புவனாவிடம் அழைத்து சென்று உறுதி செய்தனர். 

பாலா விழா எடுக்காத குறையாக , இனிமே வேலைக்கு போக வேண்டாம் என அன்பு கட்டளையிட, சுந்தரன், “போயிட்டு வரட்டுமா, அது அவளோட அடையாளம்” என ஆதரிக்க, பாலாவும் சங்கரியோடு பெட்டியை கட்டினாள். 

அய்யாவுக்கு மூன்றரை வயது இருக்கும் போது , அம்மாவு  சுந்தரியும். ஆறரை வயது இருக்கும் போது அப்பாவு, சோமசேகரனும் பிறந்தார்கள். 

சுந்தரன் நாயகிகளையும் , பிள்ளைகளையும் அன்பால் அரவணைத்தான். பாலா ஆசைப்பட்ட கனவு இல்லம், சங்கரி மூலம் நிறைவேற. சங்கரியின் வளர்ச்சிக்கு தூணாக சுந்தரன் நின்றான். முப்பரிமாணம் கொண்ட இவர்களின் அன்பால் சேகரன் இல்லம் கட்டமைக்கப்பட்டது. 

அய்யாவுவின் ஏழாவது பிறந்தநாள் சேகரன் இல்லத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

வெள்ளை வேட்டி , மைனர் சட்டையில் கூலிங் கிளாஸ் அணிந்து  அய்யாவு, பந்தாவாக போஸ்  கொடுக்க, “டேய் அடங்குடா, வேண்டாம் . அந்த ட்ரவுசர் சட்டியை எடுத்து போடு” என அப்போது தான் அலுவல் முடிந்து சங்கரி அதட்டினாள்.

“பாலாம்மா எடுத்துக் கொடுத்தது, இன்னைக்கு பூரா அய்யா, இதில தான் இருப்பேன்“ என ஸ்டெயிலாக கண்ணாடியை கழட்டி சுழற்றி மாட்ட,  

“சங்கரிமா, உனக்கு ஏன் பொறாமை, அண்ணா அழகா இருக்காங்க. நீயும் போய் டிரஸ் மாத்திட்டு வா, இது தான் இன்னைக்கு டிரஸ் கோட்”அவனில் பாதி வயது சுந்தரி, பின் கொசுவம் வைத்த கண்டாங்கி சேலையை மினி சைசில் அணிந்து கொண்டு அதட்டியது. 

‘உங்க பாலாம்மா கொடுக்கிற செல்லம், என்னையவே மிரட்டுறீங்க” செல்லமாக கோபிக்க  

“நீ எங்க செல்ல அம்மா இல்ல, ப்ளீஸ் ” என அய்யாவு , சங்கரிமாவை, கொஞ்சி முத்தமிட, சுந்தரியும்  மறுகன்னத்தில்  முத்தமிட்டது. இருவரையும் அணைத்துக் கொண்டவள், பேக்கிலிருந்து ஆளுக்கு ஒரு பரிசை எடுத்து நீட்ட,”சீக்கிரம் ரெடியாகிட்டு வாங்க மா” பரிசை பிரித்து பார்க்க ஓடினர். 

தன் அறையை நோக்கி சென்றவள்  கையில் பின் கொசுவும் வைத்த சேலையிலிருந்த பாலா வழக்கம் போல் சேலையை திணிக்க, “அக்கா, இந்த சேலை கட்டு எனக்கு தெரியாது” என்றாள் . 

 “உன் மிராசை கூப்பிடு, அவர் கட்டி விடுவார்” பாலா  வேண்டுமென்றே சுந்தரனை அனுப்பி விட, “அம்மாடி, உனக்கு என்னமோ உதவி பண்ணும்னு உன் அக்கா சொன்னாளே“ என வந்தான். 

“சேலை கட்டி விடணும், வர்றிங்களா”  இடுப்பில் கை வைத்து நின்று சங்கரி கேட்க, அவள் கன்னத்தில் சத்தமின்றி முத்தமிட்டான், 

“நீங்க தான், உங்க புள்ளைங்களுக்கும், இப்படி ஐஸ் வைக்க  பழக்கி விட்டுருக்கீங்க” குறை பட, 

“ டபுள்ஸ் வச்சிருக்கவுங்க, வேற எப்படி சமாளிக்கிறது”  கண் சிமிட்டிய  சுந்தரன், சத்தமாக “என்னை விடு தாயே, நீயாச்சு, உன் அக்காவாச்சு” என சாமர்த்தியமாக கூடத்துக்கு சென்றான். 

பாலா முகத்தில் நகைப்புடன் வந்தவள், “ உன் மிராசை, நல்லா தாண்டி தேத்தி வச்சிருக்க, என்கிட்டையே நடிச்சிட்டு போறாரு பார்” குறை பட,  

‘இப்போ என்ன சேலையா கட்டி விட்டுட்டாரு, எப்பவுமே , அவர் உங்க அழகன் தான்”  அவளும் பதிலுக்கு நொடிக்க, “அதில உனக்கு குறையோ”  சக்களத்தி சண்டை ஓடியது. 

“என் பிள்ளைங்க கூட தேவலாம்டி, ஏழு கழுததை வயசாச்சு, நீ தான் என்னை ரொம்ப படுத்துற, திரும்பு”  சேலையை கட்டி, தலை சீவி, மனோரஞ்சிதம் பூவையும் வைத்து விட்டு, “சுந்தரி எங்கேன்னு இருக்க, ஆனாலும் என் மகள் தான் ரொம்ப அழகு “ என்று விட்டு பாலா செல்ல, 

“தேவை தான்” என தன்னை கண்ணாடியில் பார்த்து கொண்டு சங்கரியும் கூடத்துக்கு வர, சுந்தரன் கண்களுக்கு தான் விருந்து. 

பாலாவின்  கையிலிருந்த ஆறு மாத அப்பாவு முதல், அய்யாவு, சுந்தரன், தாத்தா வரை  வேட்டி சட்டை கூலிங் கிளாஸ் கெட்டப்பில் கலக்க, கல்யாணி அம்மாள் அமிர்தா, பாலா, சங்கரி, குட்டி சுந்தரி வரை  பெண்கள்  கண்டாங்கி சேலையில் இருந்தனர்.  

போட்டோகிராபர் தயாராக இருந்தார். சங்கரியை பார்க்கவும், அப்பாவு அவளிடம் தாவ, “போட்டோ எடுக்கவும், போவோம்” என மகனை கொஞ்ச அவனும் அண்ணனை போல் உம்மா கொடுத்தான். 

பெரியவர்கள், அமிர்தா சேரில் அமர்ந்திருக்க, அவர்கள் மடியில் பிள்ளைகள். சுந்தரன் இருபுறமும் மனைவியரோடு  போஸ் கொடுத்தான். சற்று நேரத்தில் அவர்கள் படையே வர, சேகரன் இல்லம் அன்பால் நிறைந்து .  

சுந்தரன், பாலா, சங்கரி மனைவியரோடும் , நன்மக்களோடும், பெரியவர்கள் ஆசியோடு நல்லறம் சிறக்க, காதலோடு இல்லறம் நடத்தட்டும்! 

பிறகு சந்திப்போம்!



 

7 கருத்துகள்
  • MarliMalkhan 03-Jul-2024

    Super ma

  • Ugina 03-Jul-2024

    Nice

  • Nandhini 04-Jul-2024

    Thanks for happy ending

  • Subasini sugumaram 24-Aug-2024

    மனசு தடுமாறும்...

     

    அழகான தலைப்பு...

     

    நிஜம் தான் மனசு தடுமாறும்.. தடம் மாறும்...

     

    சென்சிடிவ் ஆன கதை கரு... அதை எதார்த்தம் மீறாமல் அழகான எழுத்து நடையில் எங்கேயும்.. என்னடா என்ற எண்ணம் வராமல் எப்படி அம்பிகையின் அழகனுக்கு... அம்மாடியின் மிராசு ஆகிறார் என்று படிக்க தூண்டியது கதை...

     

    பொதுவாகவே உங்க கிராமிய மணம் நிறைந்த மேல் எனக்கு இருக்கும் காதல் மேலும் கூடியது இந்த கதையில்.

     

    மிராசுதார் சங்கரியின் மேல் உண்டாகும் பாசம் அது கணவனாக மாறும் சூழல் எல்லாம் அழகு...

     

    அடுத்த பாகம் படிக்க ஆரம்பிக்கனும்...

     

    வாழ்த்துக்கள் டியர்... அருமையான கதை....

  • Selvi karkuvel 16-Sep-2024

    Super madam

  • தீபாஸ் 25-Nov-2024

    கதையோட்டம் அருமையா இருந்தது சிஸ். முழு கதையும் வாசிச்சு முடிச்சிட்டேன். சந்தர்பமும் சூழ்நிலையும் மனிதனின் வாழ்வை நிர்ணயிகிறது. சங்கரியின் அனாதாரவான நிலை. அவளின் அன்பு காட்டிய பாலாவின் மீதான நன்றிகடன் இரண்டும் சுந்தரின் மீதான அவளின் பற்றுக்கு அடித்தளம் இட்டதை படிபடியாக கதையோட்டத்தில் கொண்டுவந்து கதைக்கான வெற்றி. சுந்தரின் கொள்கை, அதை தகர்க்கும் படியான சூழல் கொடுத்த தடுமாற்றம் (பாவம் ஒரு ஆள் எம்புட்டு நாள் தான்....) அதைக் கடக்கும் நொடிகள் எல்லாவற்றிலும் கதைக்கான உங்களின் தர்மத்தை சரியாக செய்தி இருக்கீங்க. கதை ஓட்டம் என்னை கட்டிபோட்டது என்பது உண்மை. வாழ்த்துகள் சிஸ். இன்னும் இன்னும் நிறைய படைப்புகளை எதிர்பார்க்கிறேன்.

    • தீபா செண்பகம் 26-Nov-2024

      மிக்க நன்றி சிஸ். கதையோட்டத்தை எழுத்தாளர் பார்வையில் அருமையாக தொகுத்து சொல்லியிருக்கீங்க. மிக்க நன்றி. அப்படியே நேரம் கிடைக்கும் போது சொக்கனையும் வாசிச்சிருங்க. கிண்டில்ல இருக்கு. அது என்டடைனர் . கதை முழுசா முடிஞ்சுடும். 

      நன்றி சிஸ்

ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!