தொடர் : 2
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
பகைமையிலும் பண்பு
நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு போர் முரசுகள் பாசறையில் இருந்து பயங்கரமாய் முழங்கின. அதன் பேரொலி ஜீலம் நதியின் ‘சலசல’ சப்தத்துடன் கலந்து. அமைதி தவழ்ந்த அந்த பஞ்சாபின் நாடு நகரங்களிலும், காடு கழனிகளிலும், பரவி “யுத்தம் வந்துவிட்டது, யுத்தம் வந்துவிட்டது” என்ற செய்தியை அறிவித்து எதிரொலித்தது. அதற்குப் பதிலளிப்பது போல் தூரத்தில் எங்கிருந்தோ ஆந்தை ஒன்று அலறியது.
புருஷோத்தமரின் வீரப்படை ஜீலம் நதிக்கரையில் திரண்டிருந்தது. எதிர்கரையில் அங்கே ஒரு சமுத்திரமே வந்துவிட்டதோ! என்று ஐயுரும்படியாக மஹா அலெக்சாண்டரின் மாபெரும் சைன்யம் வந்து இறங்கி இருந்தது. மூளவிருக்கும் யுத்தத்திலே எத்தனை எத்தனை உயிர்கள் மாளவிருக்கிறதோ என்று இரு படைகளுக்கும் இடையிலே ஜுலம் நதி ஓலமிட்டுக் கொண்டிருந்தது.
நீல வானத்திலே நிறைந்திருந்த தாராகணங்கள், இரு கரைகளிலும் இறங்கி இருந்த படைகளின் பலாபலத்தைப் பற்றி தங்களுக்கே உரியதும் புரிவதும் ஆகிய மௌன பாஷையிலே கண்சிமிட்டி ஏதேதோ கதைகள் அளந்து கொண்டிருந்தன.
நள்ளிரவையும், நடுங்கும் குளிரையும், பொருட்படுத்தாது கிரேக்க பாசறையில் இருந்து கிளம்பிய இரு வீரர்கள் ஜீலம் நதிக்கரையின் ஓரத்திலே சிறிது தூரம் சென்று கொண்டிருந்தார்கள். குறிப்பிட்ட இடத்தில் ஆற்றில் எதையோ கூர்ந்து கவனித்தார்கள். அங்கு ஒரு மரத்தடியின் இருண்ட நிழலிலே ஒரு படகு கட்டப்பட்டிருந்தது. படகின் கட்டை அவிழ்த்து வீரர்கள் இருவரும் அதில் ஏறி அமர்ந்து கொண்டார்கள் அவர்களில் ஒருவன் படகை தள்ளிக் கொண்டு போனான். அவர்கள் இருவருமே அநேகமாக சமிக்கையின் மூலம் பேசிக் கொண்டார்களே தவிர வாயைத் திறக்கவில்லை.
ஆற்றிலே வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. முதலில் அவர்கள் நினைத்தபடி படகைத் தள்ளுவது இலகுவாய்த் தோன்றவில்லை. ஆனால் வீரர்களின் முகத்தில் தெரிந்த கடமை உணர்ச்சியும், கலங்காத நெஞ்சு ஊக்கமும், அப்படி ஒன்றும் சளைத்து விடக் கூடியவர்களாகக் காட்டவில்லை. போகப்போக ஒவ்வொரு அங்குலத்திற்கும் போராடினார்கள்.
எப்படியோ ஆற்றின் முக்கால் பாகத்திற்கு மேல் தாண்டி விட்டார்கள். இன்னும் சில கஜ தூரமே இருந்தது கரையை அடைய திடீரென்று படகு திசை மாறி சுழன்றது எவ்வளவு முயன்றும் திருப்ப முடியவில்லை. படகு சுழலிலே அகப்பட்டுக் கொண்டது என்பதையும் அவர்கள் உடனே அறிந்து கொண்டார்கள்.
இனி படகைக் காப்பாற்றுவது தங்கள் சக்திக்கும் புறம்பானது என்றும் தெரிந்து விட்டது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள படகிலிலிருந்து உடனே குதித்து விடும்படி தள்ளி வந்தவனை எச்சரித்துவிட்டு மற்ற வீரன் வெள்ளத்தில் குதித்தான். படகியில் இருந்த மற்ற வீரனும் குதிப்பதற்குள் சுழலின் வேகம் படகைக் கவிழ்த்தது. கவிழ்ந்த படகு அந்த வீரனுடன் கீழே கீழே இன்னும் கீழே போயே போய்விட்டது.
தண்ணீரில் குதித்த வீரன் சுழலிலே சிக்கித் தடுமாறினான், தத்தளித்தான். சுழலிலன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக, சுழலின் நடுவிற்கு அவனை இழுத்துக்கொண்டு இருந்தது. வீரனுடைய கையும் காலும் ஓய்ந்தது. கடைசி நேரத்தில் என்னென்ன நினைத்தானோ? கட்டி இருந்த மனக்கோட்டை தான் எத்தனையோ! அத்தனையும் பாழாகி இதோ அவனும் வெள்ளத்திலே மூழ்கி விட்டான்.
அதே சமயத்தில் எதிர்க் கரையிலிருந்து ஒரு மனிதன் தண்ணீருக்குள் குதித்தான். ஆனால் அவனுக்கு அந்த இடத்திலே சுழல் இருக்கிறது என்பதும், சுழலிலே எப்படி நீந்த வேண்டும் என்பதும் தெரிந்திருந்தன. சுழலுக்குள்ளே அகப்பட்டுக் கொள்ளாமல் மிக ஜாக்கிரதையாகவும், லாவகமாயும் நீந்தினான். நீண்ட நேரம் போராடி அமர்ந்து கொண்டிருந்த வீரனின் தலையைப் பற்றி இழுத்துக் கொண்டு கரை சேர்ந்தான்.
கிரேக்க வீரன் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் உணர்வை அடைந்தான். தன் நிலைமையையும் புரிந்து கொண்டான். தன்னைக் காப்பாற்றியவனை ஏறிட்டுப் பார்த்தான். அவன் உடையிலிருந்து, அவன் புருஷோத்தமரின் படையைச் சேர்ந்த பஞ்சாப் வீரன் என்பதையும் அறிந்து கொண்டான்.
பஞ்சாப் வீரன் “யாரய்யா நீ? எங்கிருந்து வருகிறாய்? இந்த நள்ளிரவிலே ஆற்றைக் கடக்க முயன்று உயிரை விட இருந்தாயே! யார் நீ?” என்று கேட்டான். அவன் குரலிலே அதிகாரமும் அதே சமயத்தில் பரிவும் கலந்திருந்தது.
கிரேக்க வீரன் பேசினான், “நண்பா! நான் உன்னிடத்தில் என்னைப் பற்றிய உண்மையை மறைக்க விரும்பவில்லை. நான் கிரேக்க சைன்யத்தின் ஒற்றர் படையைச் சேர்ந்தவன். எங்களது பிரம்மாண்டமான சைன்யத்தை எதிர்த்து நிற்கும் உங்கள் படை பலம் தான் என்ன என்பதை தெரிந்து வரும்படி எங்கள் அரசர் எங்களை அனுப்பினார். வந்த இடத்தில்தான் இப்படி ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டேன். நல்ல தருணத்தில் வந்து என் உயிரைக் காப்பாற்றினாய் உனக்கு என்ன வார்த்தை கொண்டு எப்படி நன்றி சொல்வது என்பது கூட எனக்குத் தெரியவில்லை.”
“வீரனே! நீ எனக்கு நன்றி செலுத்துவதற்கு முன் வெள்ளத்தைக் காட்டிலும் இப்பொழுது ஒரு பெரிய ஆபத்தில் ஆகப்பட்டு கொண்டதை அறிவாயா? நீ இப்பொழுது எதிரியின் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறாய் என்பதைத் தெரிந்து கொள்!”
“அதைப் பற்றி நான் பொருட்படுத்தவில்லை. இப்படி ஆற்றிலே விழுந்து, இறந்து யாரும் காணாத இடத்தில் அனாதை பிணமாகக் கிடந்து காக்கைக்கும், கழுகுக்கும் இரையாவதை விட உன் வாளுக்கு இரையாக நேர்ந்தால் அதை விருப்பமுடன் ஏற்றுக் கொள்வேன். அந்த வீர மரணத்தை மகிழ்ச்சியுடன் தழுவிக் கொள்வேன். உன் இஷ்டம் போல் செய்.”
“ஆனால் வீரனே! நீ நினைக்கிற படி உன் ஒருவனை இரையாகக் கொடுப்பதால் மட்டும் என் வாளின் ரத்த தாகம் அடங்கிவிடாது. அதை நான் விரும்பவும் இல்லை. நீ இத்துடன் திரும்பி விடுவதென்றால் உன்னை உன் பாசறைக்கு போகவும் அனுமதிக்கிறேன். ஆனால் இதற்கு மேலும் உனக்கிடப்பட்ட கடமையை நிறைவேற்ற எங்கள் படைபலத்தின் ரகசியத்தை அறிய நீ எங்கள் பாசறையை நெருங்கினால் நானும் என் கடமையை நிறைவேற்ற வேண்டியது வரும்.”
“நண்பா! நான் எதிரியின் படையைச் சேர்ந்தவன். வேவு பார்க்க வந்த குற்றத்தையும் ஒப்புக் கொள்கிறேன். கைது செய்து என்னை அழைத்துப் போ, கூட வருகிறேன். கொடுக்கும் எத்தகைய தண்டனையும் ஏற்றுக்கொள்கிறேன். தயங்காதே, உன் கடமையைச் செய்.”
பஞ்சாப் வீரன் லேசாக நகைத்து விட்டு பேசினான். “கிரேக்க வீரனே! நீ இப்படி விபத்திலே சிக்கிக் கொள்ளாமல் இந்த கரையிலே காலடி வைத்திருந்தாயனால் என் வாள் உன்னை வரவேற்றிருக்கும் அல்லது கைது செய்து கொண்டு போகவும் தயங்கி இருக்க மாட்டேன். ஆனால் நீ இப்படி ஒரு ஆபத்தில் அகப்பட்டுக் கொண்ட பொழுது உன்னை எதிரி என்று எண்ணாமல் உனக்கு உதவி செய்வது என் கடமை என்றே கருதுகிறேன். சந்தர்ப்பத்தால் என்னிடம் அடைக்கலப் பொருளாக நீ அகப்பட்டுக் கொண்டாய் உனக்கு எவ்விதத்திலும் என்னால் தீங்கு ஏற்படவே ஏற்படாது. வேறு படகு தருகிறேன். அதில் திரும்பிப் போய்விடு, நான் உன்னை கைது செய்ய மாட்டேன்.”
“நண்பா! உன் பெருந்தன்மை மிக மிகப் போற்றுதலுக்குறரியதுதான். ஆனாலும் அகப்பட்டுக் கொண்ட எதிரியை திருப்பி அனுப்பி விட்டாய் என்பதற்காக உங்கள் அரசரின் கடுமையான தண்டனைக்கு நீ ஆளாகலாம் யோசித்து முடிவு செய்.”
“எங்கள் அரசரின் நீதியும் நேர்மையும் எத்தகையது என்பது எனக்குத் தெரியும் உனக்கு அதைப் பற்றி கவலை வேண்டாம்.”
கிரேக்க வீரன் நன்றி கலந்த குரலில் பேசினான். “நண்பா! நீ எனக்குச் செய்திருக்கும் உதவியை என்றும் மறக்க முடியாது இன்னும் ஒரே ஒரு கோரிக்கை எனக்கு. எங்கள் மன்னர் அலெக்ஸாண்டரிடத்தில் மிகுந்த செல்வாக்குண்டு, நீ எங்கள் பாசறைக்கு வந்தாயானால் எங்கள் மன்னரிடம் சொல்லி நல்ல பரிசுகள் வழங்கச் செய்கிறேன்.”
“நண்பா! நீ உணர்ச்சி மிகுதியால் பேசுகிறாய், என் பிறந்த நாட்டின் சுதந்திரத்திற்கே ஆபத்து ஏற்பட்டு மக்கள் அனைவரும் வாழ்வதா, சாவதா என்ற போராட்டத்தில் குதித்திருக்கும் போது நான் மட்டும் என் சுயநலத்தைக் கருதி எதிரி அரசனிடத்திலே போய்ப் பரிசுகள் பெற்று மகிழ வேண்டும் என்று சொல்கிறாயா?”
“சரி, உன் சுயநலத்திற்காக வர வேண்டாம். நாட்டின் நலத்திற்காகவாவது இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டால் என்ன?”
“நாட்டின் நலனுக்காக, நாட்டின் சுதந்திரத்தைக் காப்பாற்ற இதோ ஆயிரம் ஆயிரம் வீரர்கள் தங்கள் இரத்தத்தைச் சிந்த,சித்தமாய் வந்து குவிந்து நிற்கும் பொழுது நான் எதிரியிடம் யாசித்து என் நாட்டை காப்பாற்ற வேண்டுமா, சொல்!”
“நண்பா! உன் வீரமும் உறுதியும் மிகவும் பாராட்டிற்குரியவை. உன்னைப் போன்ற சுத்த வீரர்கள் தன் படையில் இருக்கிறார்கள் என்ற தைரியத்தினால் தான் புருஷோத்தம மன்னன் இத்தனை பெரிய எங்களுடைய சைன்யத்தை எதிர்த்து நிற்கிறார் என்று நினைக்கிறேன். எனது உயிர்த் தோழனாகிவிட்ட உன்னிடத்தில் என்னைப் பற்றிய இன்னும் ஒரே ஒரு விஷயத்தையும் மறைக்காமல் சொல்லிவிடுகிறேன். நான் அலெக்சாண்டர் மன்னரின் சைன்யத்தில் உள்ள ஒற்றர் படையை சேர்ந்த ஒருவன் என்றா என்னைச் சொல்லிக் கொண்டேன்? இல்லை நானே தான் அந்த அலெக்சாண்டர்!”
அளவிட முடியாத ஆச்சரியத்தால் பஞ்சாப் வீரன் ஸ்தம்பித்துப் பதுமையாகிவிடவில்லை. அவன் புருவங்கள் கூட ஏறி இறங்கவில்லை. சாதாரணமாகவே பேசினான். “மன்னரே! தாங்கள் அலெக்சாண்டர் மன்னன் தான் என்பதையும் நான் ஏற்கனவே அறிவேன். எங்கள் ஒற்றன் ஒருவன் உங்களுக்கு முன் படகிலே இந்த ஆற்றைக் கடந்து நீங்கள் படகில் வந்து கொண்டிருப்பதாக கூறினான். இந்த இடத்தில் காவல் பொறுப்பு என்னைச் சேர்ந்ததால் தங்களை வரவேற்கத் தயாராக காத்து நின்றேன். தாங்கள் மன்னர் என்பதை மறைத்து பேசியதால் நானும் தெரிந்து கொண்டதாக காட்டிக் கொள்ளவில்லை”.
“உங்கள் ஒற்றர் படை அவ்வளவு திறமை வாய்ந்ததா? திறமை இருக்கிறதோ இல்லையோ, கடமையை உணர்ந்து இருக்கிறார்கள்.“
“நண்பனே! என் உயிரை காப்பாற்றி, நீ எனக்குச் செய்த பேருதவிக்கு நான் எப்படியும் கைமாறு செய்ய விரும்புகிறேன். உன்னை என்னுடனே என் நாட்டிற்கு அழைத்துச் சென்று என் உயிருக்கு உயிரான தோழனாக உன்னை என் அருகிலே வைத்துக் கொள்வேன். வருகிறாயா,சம்மதமா?”
“உலகமெல்லாம் புகழ் பரவிய பெரிய சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாகிய தங்களின் நட்பு இந்த ஏழை வீரனுக்கு கிடைப்பது என்றால், அது நான் செய்த மிகப்பெரிய பாக்கியம்தான். ஆனால் மன்னரே, தங்களுடன் வருவதற்கில்லை. சந்தர்ப்பம் சரியாக இல்லை. மேலும் எங்கள் அரசரும் அதற்கு சம்மதிக்க வேண்டும்.”
“உங்கள் அரசரைச் சந்திக்க முடிந்தால் அவசியம் உன்னை என்னுடன் அனுப்பும்படி கூறுவேன் ஆனால் அவரை எங்கே, எப்படி சந்திப்பது என்பது தான் தெரியவில்லை.”
“தங்களை யுத்த களத்தில் சந்திப்பதாக எங்கள் அரசர் உங்களுக்கு செய்தி அனுப்பி இருந்தாரே?”
“ஆம். துரதிஷ்டவசமாக சம்பவங்கள் அப்படி அமைந்துவிட்டன. சரி எப்படியும் முயன்று பார்க்கிறேன் உன் பெயர் என்ன?“
“அமர சிம்மன்”
சிறிது நேரத்தில் ஜீலம் நதியில் சுழலின் குறுக்கீடு இல்லாத பத்திரமான வழியில் படகு ஒன்று போய்க்கொண்டிருந்தது. அதில் ஆழ்ந்த சிந்தனை தேங்கிய முகத்தினனாய் மன்னர் அலெக்ஸாண்டர் அமர்ந்திருந்தார்.
பாசறைகளின் பரபரப்பான சூழ்நிலையிலிருந்து சற்று ஒதுங்கிய உயரமான இடத்தில் அமைந்த ஒரு அழகிய பெரிய கூடாரம். அதன் உச்சியிலே கம்பீரமாகப் பறந்த கிரேக்க நாட்டு பட்டுக் கொடி வானத்தை எட்டித் தொட்டு கொண்டிருந்தது. கூடாரத்தின் உள்ளே கிரேக்க நாட்டுச் சிற்பிகள் அற்புத சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்த அழகிய ஆசனமொன்றில் மன்னன் மகா அலெக்ஸாண்டர் கம்பீரமாக அமர்ந்திருந்தான். அவன் அருகிலே சரியாசனத்தில் வீர புருஷோத்தமனும் வீற்றிருந்தான். மன்னன் இருவரும் மனம் விட்டுப் பேசி அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.
அலெக்சாண்டர் பேசினான். “புருஷோத்தமரே! யுத்தத்திலே தங்களிடம் கைப்பற்றிய பொருட்கள் அத்தனையும் திருப்பிக் கொடுத்து விட்டேன். இப்பொழுது தங்கள் நண்பன் என்ற முறையில் ஒரே ஒரு பொருளைத் தங்களிடம் யாசிக்கிறேன் தயவு செய்து கொடுக்க வேண்டும்.”
“மன்னர் மன்னரே, யாசிப்பது என்ன நட்புரிமையுடன் கட்டளையிடுங்கள், கொடுக்க காத்திருக்கிறேன்.”
“இல்லை நண்பரே, கெஞ்சித்தான் கேட்கிறேன். நான் தங்களிடம் கேட்பது வேறு ஒரு பொருள் எதுவுமில்லை. தங்கள் படையைச் சேர்ந்த ஒரே ஒரு வீரனைத்தான் அனுப்பும்படி கூறுகிறேன். அதற்குக் காரணத்தைச் சொல்கிறேன். முதலில் சுமார் ஒரு வாரத்திற்கு முன் வேவு பார்ப்பதற்காக நானே இந்த ஜீலம் நதியை கடக்க முயன்றேன். இந்த நாட்டிலே பொதுமக்களும் போர் வீரர்களும் தான் நாட்டுப்பற்றும் ராஜ விசுவாசமும் உடையவர்கள் என்று நினைத்தேன். ஆனால் உணர்ச்சியற்ற வெறும் ஜடப் பொருளாகிய இந்த ஜீலம் நதி கூட இந்த நாட்டின் பகைவன் என்ற முறையிலே என்னிடம் பகைமை பாராட்டி, என் படகை மூழ்கடித்தது. சுழலில் அகப்பட்டுத் தவித்த என்னை அமரசிம்மன் காப்பாற்றினான். பிறகு வலிய வந்து அகப்பட்டு கொண்ட எதிரியாகிய என்னை திருப்பி அனுப்பி விட்டான் அந்தச் சம்பவம் தங்களுக்கு தெரியுமா? அந்த வீரனை என்ன செய்தீர்கள்? எப்படி நடத்தினீர்கள்?”
“எப்படி நடத்துவது? எதிரி என்றாலும் ஒரு ஆபத்தில் அகப்பட்டுக் கொண்ட பொழுது தான் நம் வஞ்சத்தை தீர்த்துக் கொள்வது, அந்த வீரன் அவன் கடமையைச் சரிவர செய்ததற்கு என் பாராட்டுதலைப் பெற்றான்”.
“ஆஹா! பகைவனிடத்திலும் கூட தங்கள் பண்பாடு குறையாது நடந்து கொள்ளும் இந்த நாட்டு மக்களே ஒரு தனி ரகமாய்த் தான் இருக்கிறார்கள். புருஷோத்தமரே! இப்பொழுது சொல்லுங்கள் என் உயிரைக் காப்பாற்றிய அந்த வீரனை, என் உயிருக்கு உயிரான தோழனாகக் கருதி என்னுடன் அழைத்துப் போக விரும்புகிறேன். அதில் தங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லையே.”
“அந்த வீரனுக்கு அவ்வளவு பெரிய பாக்கியம் கிடைக்கவிருக்கிறதா?“
“புருஷோத்தமரே! அது மட்டும் இல்லை என் திக்விஜயம் முடிந்து என் நாடு திரும்பி, அங்குள்ள அனைவருக்கும் நான் அடைந்த அமோக வெற்றிகளைச் சொல்வேன். அள்ளிக் கொண்டு போகும் அளவற்ற செல்வங்களைக் காண்பித்து அவர்களை ஆச்சரியத்திலே ஆழ்த்துவேன். அதையெல்லாம் காட்டிலும் இன்னும் அதிகப் பெருமையுடனே நான் அழைத்துச் செல்லும் என் நண்பனை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவேன். அவன் தீரச் செயலையும், நேர்மையான நடத்தையும் பற்றிக் கூறி என் நாட்டு மக்களை திகைக்க வைப்பேன். தயவு செய்து அந்த வீரனை என்னுடனே அனுப்புங்கள். தங்களுடைய அதிவீரத்தினால் ஆகர்ஷிக்க பெற்றே தங்கள் நட்பை நான் நாடினேன். எனினும் தங்கள் அனுமதியுடன் அந்த வீரனையும் என்னுடன் அழைத்துப் போலாம் என்ற ஆசையும் என் உள்ளத்தின் ஆழத்திலே இருந்ததுண்டு” என்று நீண்ட பேச்சுப் பேசி நிறுத்தினான் அலெக்சாண்டர்.
“மன்னர் மன்னரே! இத்தகைய மாபெரும் அதிர்ஷ்டம் அவனுக்குக் காத்திருந்தும் அந்த வீரன் தங்களுடன் வருவதற்கு இயலாமல் இருக்கிறது. அவனை இந்த நாட்டு மக்களும் அனுப்பச் சம்மதியார்கள். மேலும் அவன் இந்த நாட்டிற்கு இன்னும் செய்ய வேண்டிய கடமையும் அவனைத் தடுத்து நிறுத்துகிறது.”
“நண்பரே! ஒரு ஒப்பற்ற வீரனே அனுப்பி விட வேண்டுமே என்று நினைக்கிறீர்களா? அவனுக்குப் பதிலாக தோல்வி என்பதே கண்டறியாத சண்ட மாருதத்தையொத்த என் குதிரைப்படையின் ஒரு பகுதியை வேண்டுமானாலும் தருகிறேன்”
“யுத்த வீரன் என்ற முறையிலே அவனுடைய சேவை இந்த நாட்டிற்கு அவ்வளவு தேவை என்று சொல்லவில்லை. அவனிலும் சிறந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் என் படையில் இருக்கிறார்கள். ஆனால்…”
“பின் எந்த முறையில் அந்த வீரன் இங்கு தேவைப்படுகிறான்?”
இந்த நாட்டு அரசன் என்ற முறையிலே.”
“அப்படியானால்!... அப்படியானால்!...”
“ஆம் தங்கள் முன் இதோ இருக்கும் இந்த புருஷோத்தமன் தான் தங்களை வெள்ளத்திலிருந்து மீட்டது தாங்களே ஆற்றைக் கடந்து வருகிறீர்கள் என்று ஒற்றன் மூலம் கேள்விப்பட்டு, ஒரு அரசரை அரசர் தான் வரவேற்க வேண்டும் என்று நானே எதிர்க் கரையில் வந்து தங்களுக்காக அன்று காத்து நின்றேன்”
அளவிட முடியாத ஆச்சரியத்தினால் அலெக்சாந்தர் மன்னனின் கண்கள் அகல விரிந்தன. உணர்ச்சி மிகுதியினால் ஊனுறுக, உடலுறுக, உள்ளமெல்லாம் உருக எழுந்து போய் புருஷோத்தமரை அப்படியே ஆர்வத்துடன் கட்டித் தழுவிக் கொண்டான். இருவரையும் பிரிக்க முடியாதபடி இணைத்த ஜீலம் நதி அமைதியாய் ஓடிக்கொண்டிருந்தது.
பகைமையிலும் பண்பு - ஆடியோ வடிவில் செண்பக சோலையின் ஓசை சித்திரம். செவி கொடுங்கள்- மனதை நிறைப்போம்