தொடர் : 4
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
துறவு
அப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. கட்டுக் கட்டுகளாக இருந்த ரூபாய் நோட்டுகளைத் தூக்கி நெருப்பிலே எரிந்து விட்டார் அந்த மனிதர். அரசாங்கம் ஆகாது என்று தள்ளிவிட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அல்ல, நல்ல புத்தம் புதிய ரூபாய் நோட்டுக் கத்தைகள் முதலில் இந்தச் சம்பவம் எங்கே நடந்தது என்பதைச் சொல்லியிருக்கவேண்டும்.
வடக்கே இமயபர்வதத்தின் அடியில் ஆசிரமம் அமைத்து இருந்துவரும் நித்யானந்த சுவாமிகள், தமிழ்நாட்டின் பல பாகங்களிலும் சுற்றுப்பயணம் செய்து சமய சம்பந்தமான பிரசங்கங்கள் நிகழ்த்தி வந்தார். ஆழ்ந்த கருத்துக்களை அடிகள் எடுத்துச் சொல்லி, படித்தவர், பாமரர் யாவருடைய மனத்திலும் பதிய வைத்துவிட்டு தக்க முறையில் அவர் கையாண்ட அமுதொழுகும் தமிழின் இனிமை, ஜனங்களை அவர் பால் இழுத்தது. ஒவ்வொரு ஊரிலும் நான் முந்தி, நீ முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு சுவாமிகளை வரவேற்றார்கள்.
ஆஸ்திகப் பெருமக்களின் அத்தகைய அழைப்பு ஒன்றின் பேரிலே தான் சுவாமிகள் அந்த ஊருக்கு விஜயம் செய்து, அவ்வூர் பெரிய மடத்தில் நமது சிஷ்யர் குழுவுடன் தங்கி இருந்தார். அன்று அவர் நடத்திய பூஜைக்காக வளர்த்த ஓம குண்டலத்தில் தான் அப்படி ஒருவர் பணத்தைப் பணம் என்று கருதாமல் தூக்கி எறிந்து விட்டார்.
அதிர்ச்சி தரத்தக்க அந்தச் சம்பவம் நடந்தேறியதும் ஜனங்கள் பலவாறாக அதைப்பற்றி பேசினர்.
“இது பெரிய அக்கிரமம் சட்டப்படி இவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் நாட்டு நடப்பிலே சட்டத்தை லாவகமாக் கற்றுக்கொண்ட ஒரு விவகாரப்புலி. நெருப்பிலே எறியப்பட்ட பணம் பதினாராயிரம் இருக்கும் என்றார் ஒருவர்.
“இல்லை இருபதினாயிரம்” என்றார் இன்னொருவர்.
இந்தச் செய்தி எங்கெல்லாம் எட்டியதோ அந்த ஊரின் தூரத்திற்குத் தகுந்தபடி பணமும் ஐம்பதினாயிரம், அறுபதினாயிரம் என்று பெருகி இலட்சத்தையும், லட்சத்திசொச்சத்தையும் தொட்டி விட்டது.
பணம் நெருப்பிலே எறியப்பட்ட உடனே அங்கு நிலவி இருந்த அமைதி கலைந்துவிட்டது. சூழ்ந்து நின்ற அத்தனை பேரிடத்திலும் ஒருவித பரபரப்பு தென்பட்டது. அங்கு ஆசனமிட்டு அமர்ந்து யோகசமாதியிலே ஆழ்ந்திருந்த நித்தியானந்த சுவாமிகளும் கூட இதற்கு விதிவிலக்காக முடியவில்லை. ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்கம் பக்குவம் பெற்றிருந்த சுவாமிகளின் உள்ளத்திலும் கூட எதிர்பாராத இந்தச் சம்பவம் ஒருவித அதிர்ச்சியை ஆச்சரியத்தை உண்டு பண்ணி விட்டதாகத்தான் தோன்றியது. அவர் புருவத்தின் நெளிப்பிலே இது புலப்பட்டது.
பணம் இதோ நெருப்பில் துச்சமாகத் தூக்கி எறிந்து, எரிந்து போன இப்பணம் மனிதனுடைய வாழ்வை எப்படி எல்லாம் மாற்றி அமைத்து விடக்கூடிய மகா வல்லமை உடையது என்னும் விஷயமும் பூர்வாசிரமத்தில் தனக்குத் தெரிந்த அத்தகைய சம்பவம் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது.
பார்த்திபனூர் பத்மனாபபிள்ளை பரம்பரையாகப் பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். எனினும் இப்பொழுது கொஞ்சம் கஷ்ட நிலைமையிலேயே இருந்தார். பத்து வருடங்களுக்கு முன்பு கூட பத்மனாபப் பிள்ளையின் கையில் ஏராளமாக பணம் புரண்டது. உதவி என்று வந்தவர்களுக்கு ஒரு பொழுதும் இல்லை என்று சொன்னதில்லை. தர்மம் என்று வந்தவர்களுக்கு புண்ணியவான் எண்ணிக் கொடுத்ததில்லை, அள்ளித் தான் கொடுத்தார்.
வரவர நாளடைவில் பத்மனாபபிள்ளையின் கை வறண்டது.தொட்டது எதுவும் துலங்கவில்லை. அப்படியும் இப்படியுமாக எப்படியோ கடனாளியாகிவிட்டார். அவர் சொத்தையும் விழுங்கி மேலும் பத்தாயிரம் கடன் ஆகிவிட்டதாக பேசிக்கொள்ளப்பட்டது. கடன் கொடுத்த காசுக்கடை ஆறுமுகம் செட்டியார் கண்டிப்பாகக் கேட்காவிட்டாலும் பத்மனாபபிள்ளையை கண்ட போது ஞாபகப்படுத்தத் தவறியதில்லை.
இந்தக் கடன் தொல்லையிலிருந்து மீள வழி தெரியாமல் தவித்தார் பத்மநனாபபிள்ளை. அவரிடம் பணம் இருந்தபோது யார் யாருக்கோ கொடுத்து உதவினார். அவருக்கு இப்பொழுது கூட ஞாபகம் வந்தது. சுமார் பத்து வருடங்களுக்கு முன் இங்கே பிழைக்க வழியில்லாமல் மலேசியாவிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த சின்னக் காசிம் ராவுத்தர் பத்மநனாபபிள்ளையிடம் ஏதாவது பண உதவி கோரினார்.அப்பொழுது பத்மனாபபிள்ளை அவர் கையில் ஆயிரம் ரூபாயை கொடுத்து இதை வைத்து வியாபாரம் செய்யுங்கள். உங்களுக்கு நல்ல ஊதியம் கிடைத்து கொடுக்கக்கூடிய நிலைமை ஏற்பட்ட பிறகு கொடுக்கலாம். என்று பெரிய மனதுடன் ஆசீர்வதித்தும் அனுப்பினார். பெரிய சலாம் போட்டு வாங்கிக் கொண்டு போனார் ராவுத்தர். போனவர் போனவர் தான் பத்து வருடமாக ஒரு தகவலும் இல்லை.
பத்மநனாபபிள்ளைக்கு கடன் கொடுத்த ஆறுமுகம் செட்டியார் வழக்குத் தொடர்ந்தார். அதை காட்டிலும் வழக்குத் தொடரும்படி தூண்டப்பட்டார். பத்மநனாபபிள்ளையின் கௌரவத்தை உத்தேசித்து அவரை கோர்ட்டுக்கு இழுக்க ஆறுமுகம் செட்டியார் தயங்கினார். ஆனால், எத்தகைய உத்தமர்களுக்கும் இன்னல் உண்டாக்குவதில் சிலருக்கு அக்கறை வந்துவிடுமே. அப்படி பத்மநாப பிள்ளையின் மீது அக்கறை கொண்ட சிலர், ஆறுமுகம் செட்டியாரைத் தூண்டி வழக்கு தொடரச் செய்தார்கள். வழக்கிலே வாதாட ஒன்றும் இல்லை தன் சொத்து அனைத்தும் போக பாக்கி வந்த பத்தாயிரம் கடனுக்கு சிறைக்குள்ளே தள்ளப்பட்டார் பத்மனாபபிள்ளை.
சிறை சென்ற பத்மனாபபிள்ளை சில நாள் வரையில் மனம் ஒடிந்து கிடந்தார். நாளடைவில் சிறையில் தனிமையிலும் ஒரு நிம்மதி, ஒரு இனிமை, இருப்பதை உணர்ந்தார். புண்பட்டுப் போன அவர் உள்ளம் பண்பற்று வர ஆரம்பித்தது.
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்
என்று எப்பொழுதோ படித்த திருமூலரின் திருமந்திரத்திற்குப் பொருள் விளங்க ஆரம்பித்தது.
அகண்ட பிரபஞ்சத்தின் பொருள்களிலும் கலந்து கடந்து நிற்கும் மெய்ப்பொருளின் தன்மையை உணர ஆரம்பித்தார். மனிதன் தன் வாழ்நாளில் அடைய வேண்டிய செல்வம் பொன்னும் பொருளும் அல்ல. அவை எத்தனை நிறைந்திருந்தாலும் மனம் என்னவோ நிறையவில்லை. செல்வம் என்பது சிந்தையின் நிறைவு என்ற அந்தக் குறைவில்லாத நிறைவைப் பெறுவதிலேயே அவருடைய முயற்சி திரும்பியது. அத்தகைய நிறைவை அழிக்க வல்ல ஆண்டவனின் பக்தியாகிய பெருஞ்செல்வத்தின் கொள்கலமாகத் தன்னை மாற்றிக் கொண்டார், மாறிவிட்டார்.
இந்த நிலைமையில் அவர் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானம் தாங்காது மனமுடைந்து அவர் மனைவி இறந்து விட்டாள், என்ற செய்தி கூட அவரை அவ்வளவாகப் பாதித்துவிடவில்லை. உலகத்தோடு தன்னைப் பிணைத்த கடைசிப் பந்தமும் கழன்று விட்டதாகவே கருதினார். விரக்தி வைராக்கியம் பூரணத்துவம் பெற்றது.
தண்டனைக்காலம் முடிந்து பத்மனாபபிள்ளை விடுதலை அடைந்தார். அவருடைய வைராக்கியத்தைச் சோதிக்கக் கூடிய சம்பவம் ஒன்று சிறை வாயிலேயே ஏற்பட்டு விட்டது.
பத்மனாபப்பிள்ளையின் பண உதவி பெற்று மலேசியாவிற்கு போயிருந்த சின்னக் காசிம் ராவுத்தர் திரும்பி வந்திருந்தார். ஆனால் அவர் இப்பொழுது லட்சாதிபதியாகிவிட்டார். பத்மனாபபிள்ளை கொடுத்த ஒரே ஆயிரம் ரூபாயை வைத்து ஆரம்பித்த வியாபாரம் அப்படி பெருகிவிட்டது. தனக்கு உதவி செய்த தருமத் தயாளுவாகிய பத்மனாபபிள்ளை கடனுக்காக சிறை சென்று விட்டார் என்ற செய்தி கேட்டு ராவுத்தர் வருந்திச் சிறைவாயிலேயே வந்து காத்து நின்றார்.
பத்மனாபபிள்ளையின் காலடியிலே பதினாராயாரம் ரூபாயை வைத்து அதை ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சினார். நீங்கள் கொடுத்து உதவிய பணம் தான் என்னை இன்று லட்சாதிபதி ஆக்கியிருக்கிறது. தங்களுக்கு கஷ்டம் நேர்ந்த காலத்திலே உதவ முடியாமல் போய்விட்டது. தயவு செய்து இப்பொழுது இதையாவது ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மனம் உருகக் கேட்டுக் கொண்டார்.
பத்மனாபபிள்ளை எவ்வளவு மறுத்துச் சொல்லியும் முடியவில்லை. உலகத்தில் உள்ள ஆசைகளை வென்று விட்டோம் என்று நினைத்திருந்த பத்மனாபபிள்ளைக்கு இது ஒரு புதிய பிரச்சினையை உண்டு பண்ணியது. யோசித்து அதற்கும் ஒரு வழிகண்டார். இரண்டு தினங்களில் அதே பணம் காசுக்கடை ஆறுமுகம் செட்டியாரின் கதவை வந்து தட்டியது அடியில் கண்ட குறிப்புடன்.
ஐயா தங்களுக்கு பாக்கி கொடுக்க வேண்டிய பதினாராயிரத்திற்கு நான் சிறை சென்றேன். எனினும் தங்களுக்கு பணம் செல்லானதாக என் மனம் ஒப்பவில்லை. ஆகையால் இத்துடன் உள்ள பதினாராயிரத்தையும் தயவுசெய்து ஏற்றுக்கொள்ள கோருகிறேன். பத்மனாபன்.
“இதோ இவர் தான் பணத்தை நெருப்பிலே எறிந்தவர்” என்ற சிஷ்யர்களின் வார்த்தைகள் நித்தியானந்த சுவாமிகளின் நினைவுச் சுழலை நிறுத்திவிட்டது. தன்முன் கைகட்டி நின்ற அம்மனிதரைப் பார்த்த சுவாமிகளின் கண்கள் அகல விரிந்தன. ஆச்சரிய மிகுதியில் “ஆஹா! தாங்கள் பார்த்திபனூர் ஆறுமுகம் செட்டியார் அல்லவா” என்று உரக்க கத்தி விட்டார்.
“ஆம் தங்களைச் சிறையிலே அடைத்து தங்களுக்கு அபராதம் விதித்த அதே பாவிதான்” என்று ஆறுமுகம் செட்டியார் சுவாமிகளின் பாதத்தில் அடியற்ற மரம் போல் விழுந்தார்.
சுவாமிகள் அவரைத் தூக்கி நிறுத்தினார். “தாங்கள் என்னைச் சிறையில் அடைத்ததை அபச்சாரம் என்று நான் கருதவில்லை. உபகாரமாகவே நினைக்கின்றேன். நான் சிறை சென்றிராவிடாவிட்டால் பந்த பாசங்களில் கிடந்து உழலும் பழைய பத்மனாபபிள்ளையாக தானே இருந்திருப்பேன். இன்று பக்தி பெருஞ்செல்வத்தினால் பெற்றுள்ள பேரானந்தப் பெரும் பேற்றை பெற்றிருக்க முடியுமா? என்று அன்பு தோய்ந்த குரலில் பேசினார்.
மனம் கனிந்து நின்ற ஆறுமுகம் செட்டியார் மேலும் கூறினார், “யாரோ சொல்லிய துர்போதனையைக் கேட்டு தங்கள் மீது வழக்குத் தொடர்ந்து தங்களை சிறைக்கும் அனுப்பிவிட்டோமே என்று மனம் நிம்மதி இல்லாமல் தவித்தேன். இந்த நிலைமையில் தங்களிடமிருந்து பணம் பதினாராயிரம் ரூபாய் வந்ததும் என் உள்ளத்தை மிகவும் சுட்டது. தங்கள் பெருந்தன்மைக்கு முன் நான் மிக மிக அர்ப்பனாகவே ஆகிவிட்டேன். மீண்டும் இந்த பணத்தை உங்களிடம் சேர்ப்பிக்க இத்தனை வருடங்களாக எங்கெல்லாமோ தேடி அலைந்தேன் கடைசியில் இந்த ஊரில் இந்தக் கோலத்தில் இரண்டு தினங்களுக்கு முன் தங்களை கண்டு கொண்டேன்.
நான் நேரில் வந்தால் ஒருவேளை மறுந்துவிடுவிர்களோ என்று நினைத்து நான் கொடுத்ததாகவும் இல்லாமல் வேறு யாரோ கொடுப்பது போல் இந்த பதினாராயிரத்தையும் ஆசிரம நிர்வாகத்திற்கு நன்கொடையாக ஏற்றுக் கொள்ளும்படி தங்களிடம் கேட்கும்படி ஆட்களை அனுப்பி இருந்தேன். ஆனால் சுவாமிகள் யாரிடமிருந்தும் எத்தகைய பண உதவியும் பெறுவது வழக்கமில்லை என்று கண்டிப்பாக மறுத்து விட்டார்கள். ஆகையால் வேறு வழி இல்லாமல் அந்தப் பணத்தை தங்கள் முன்னிலையிலே இப்படி நெருப்பிலே எறிந்தேன். என் உள்ளத்தைச் சுட்டதை இன்று சுட்டு எரித்துவிட்டேன். இத்தனை வருடங்களாக இருந்த என் மனச்சுமையையும் இன்றுதான் மடிந்தது தங்களுக்கு இழைத்துவிட்ட துன்பங்களுக்கு என்னை மன்னிக்க வேண்டும்” என்று மீண்டும் சுவாமிகளின் பாதத்தில் விழுந்தார். சுவாமிகள் அவரை தடுத்து நிறுத்தி அப்படியே ஆலிங்கனம் செய்து கொண்டார்.
நெருப்பிலே விழுந்த பணம் எரிந்து கருகி துகள்களாகி காற்றிலே மிதந்து மறைந்தது. நித்தியானந்த சுவாமிகளின் திருமேனி தீண்டப்பட்டதால் அவரிடமிருந்து ஞானாக்கினி ஆறுமுகம் செட்டியாரின் ஞான இருளைச் சுட்டெரித்து அடியோடு போக்கியது. அவர் உள்ளத்திலும் உண்மை ஒளி உண்டாக்கியது.
வாரம் ஒன்று சென்று நித்தியானந்த சுவாமிகளின் பரிவாரங்கள் வேறு ஊருக்கு புறப்பட்டன. அதில் ஆறுமுகம் செட்டியாரும் இருந்தார். ஆனால் அவரை இப்பொழுது அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. காரணம் அவர் காவி உடை அணிந்திருந்தார்.