தொடர் : 4
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
தேடல் – 5
அவள் வெளியில் போக நுழைவாசலுக்குப் பக்கத்தில் வருவதற்குள் அங்கு வாசலில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது.
அவள் அந்த வளாகத்தின் படிக்கட்டுகளில் இறங்கும்போது அக்காரின் டிரைவர் கவிழைவை எதிர்கொண்டு பணிவாக “மேடம் எம்.டி ஸார் கம்பெனிக்காரில் உங்களை இறக்கிவிடச் சொன்னாங்கள்” என்றுச்சொல்லி காரின் கதவைத் திறந்துவைத்து “ப்ளீஸ் ஏறுங்க மேடம்” என்று சொன்னான்.
கடுப்பானவள் “எனக்குக் கார் தேவையில்லைன்னு உங்க எம்.டீ கிட்ட போய்ச் சொல்லுங்க” என்றுகூறியபடி அக்காரை கடக்க முயன்றவளின் முன் ஓடிவந்து
“ப்ளீஸ் மேடம் உங்களை நான் காரில் கூட்டிட்டுப் போகாட்ட என்வேலைப் போயிரும் மேடம்” என்று அவன் கெஞ்சி கூறினான்.
சுத்தியிருக்கிற எல்லோரும் திரும்பி கவனிப்பதைப் பார்த்தவள் மேலும் அவனோடு வாதாடி எல்லோர் முன்பும் காட்சிப்பொருளாக வேண்டாம் என்று நினைத்து அக்காரின் பின்கதவை திறந்து ஏறிக்கொண்டாள்.
கார் அவளின் வீட்டின் முன் வந்து நின்றதைக் கூடக் கவி உணரவில்லை, அவள் இறங்காமல் உட்கார்ந்துகொண்டு இருப்பதைப் பார்த்த டிரைவர் இறங்கிவந்து, காரின் கதவை திறந்துவைத்துக்கொண்டு “மேடம் உங்க வீடு வந்துருச்சு” என்று சொல்லவும் சுதாரித்துக் கொண்டு இறங்கினாள் ...
அவள் இறங்கி வீட்டிற்குள் செல்லும் முன் “நாளைக்குக் காலைல ஒன்பது மணிக்கு உங்களை ஆபீசுக்குக் கூட்டிட்டுப்போகக் கார் எடுத்துட்டு வந்துருவேன் மேடம்” என்று கூறி நன்றி தெரிவித்த டிரைவர் காருடன் புறப்பட்டுச் சென்றான்.
வீட்டு வாசலில் கார் நிற்பதை ஜன்னல் மூலம் பார்த்த பார்வதி, யார் நம்ம வீட்டுக்குக் காரில் வருறாங்க? என்று பார்க்க கதவைத் திறப்பதற்குள் கார் சென்றுவிடக் கவிழையாவைப் பார்த்து “என்னடி காரில் வந்து இறங்குற? யாருடைய கார் அது?” என்று விசாரித்துக் கொண்டே உள்ளே செல்லத் திரும்பி நடந்தாள்.
அதற்குள் தன்னைச் சுதாரித்துத் தன் முகத்தைச் சிரித்ததுபோல் வைத்துக்கொண்டு “அம்மா எனக்குக் கம்பெனியில் கார் அலாட் பண்ணிக் கொடுத்திருக்காங்க” என்றாள்.
“அது எப்படி உனக்குக் கார் தருவாங்க?” என்று சந்தேகமாகக் கேட்கவும் “அம்மா என்னுடைய சம்பளம் எவ்வளவு தெரியுமா...?”
“முப்பதாயிரம் கொடுப்பாங்கனு காம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆனதுமே சொல்லிவிட்டாங்க தானே...” என்ற பார்வதியிடம் கவிழையா மறுப்பாகத் தலை அசைத்து
“அதைப்போல் மூன்றுமடங்கு அதிகம் என் சம்பளம்” என்று கூறினாள்.
ஆச்சரியத்துடன் “எப்படிக் கவி...!?” என்றதும், கவிழையா முதலில் தான் சென்றது முதல் கையெழுத்துப்போடும் வரை நடந்ததை மட்டும் தன் அம்மாவிடம் கூறினாள். கையெழுத்துப் போட்டபின் பின் நடந்த அத்தனையும் கூறாமல் மறைத்துவிட்டாள், இப்போதைக்கு மற்ற எதையும் சொல்லவேண்டாம் என்று நினைத்தாள்....
அவள் சொன்னதைக்கேட்ட பார்வதி, “உன்னால் இவ்வளவு பெரிய பொறுப்பைச் செய்ய முடியுமா கவி...?” என்று யோசனையுடன் கேட்டாள்....
“அதெல்லாம் நான் பார்த்துடுவேன்ம்மா... நீங்க எனக்குக் கொஞ்சம் காபி போட்டுக் கொடுங்க்குறீங்களா தலை வலிக்கிறது, நான் குடிச்சுட்டுக் கொஞ்சநேரம் படுக்கணும்” என்று கூறினாள்.
இன்னும் கொஞ்ச நேரம் தன் அம்மாவிடம் பேசினால் உண்மையை உலரிவிடுவோம் என்று உணர்ந்து தனது அறைக்குள் சென்று குளியலறைக்குள் தாழ்பாள் போட்டு ‘கடவுளே... என்னைய இந்தச் சூழ்நிலையில் இருந்து காப்பாற்று’ என்று கூறி சத்தம் வராமல் புலம்பி தீர்த்தாள்.
பின் தனது குழப்பம் முகத்தில் தெரியாமலிருக்க முகத்தினை நன்கு நீர் அடித்துக் கழுவி வேறு உடை மாற்றிவந்தவள் தன் படுக்கையில் விழுந்தாள் .
மறுநாள் காலை கவிழையா ஏன்தான் விடிகிறதோ, என்ற நினைப்புடனே எழுந்து ஆபீஸ் கிளம்பினாள்.
தான் உடுத்துற டிரஸ் முதல் பேசும் வார்த்தைவரை கண்ணியமாக இருப்பதில் கவனமாக இருக்கும் தன்னைப்பார்த்து அவன் எப்படி இந்தவார்த்தையைக் கேட்கலாம்...? என்று நினைத்து இரவு முழுவதும் அவளுக்குத் தூக்கமே வரவில்லை. மேலும் இவ்வாறு தன்னைக் கேட்டவனிடம் வேலைபார்க்கும் சூழ்நிலையில் இருப்பதை நினைத்து உருவான மன அழுத்தம் உருவானது.
அப்பாவிடம் கூறி பணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லலாமா....? என்று நினைக்கையில் ஒரு ஐந்துலட்சம் என்றாள் தன் தந்தையால் ஏற்பாடு செய்துக்கொடுக்க முடியும்.... ஐம்பதுலட்சம் கண்டிப்பாகத் தன் அப்பாவால் முடியாது என்று உணர்ந்தவளால் கேட்பதற்கும் தைரியம் வரவில்லை.
சாப்பாட்டு அறைக்குள் வந்தவளை பார்த்த பார்வதி, “என்ன கவி, உன் முகம் டல்லாக இருக்கு” என்று கேட்டவரிடம் “கொஞ்சம் ஜலதோஷம் பிடிச்சிருக்கும்மா அதனால்தான்” என்று கூறி சமாளித்தவள் சாப்பிட்டுவிட்டு தன் டிஃபன்பாக்சை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள்....
கார் வாசலில் காத்துக்கொண்டு இருந்தது. காரில் அவள் ஏறிச்செல்லும்வரை வாசலில் நின்று மகளுக்குக் கை அசைத்து உள்ளே வந்த பார்வதி ஈஸ்வரனிடம்..,
“கவி நேத்து ஆபீஸ் போயிட்டு வந்ததில் இருந்து ஏதோ தெளிவில்லாமல் இருப்பதுபோல் தெரியுதுங்க, ஏதோ பிரச்சனை அவளுக்கு இருக்கிறமாதிரி தோணுது, இன்னைக்கு நைட் அவகிட்ட நீங்க பேசிப் பாருங்க” என்று கலக்கத்துடன் கூறினாள் .
“நீ ஒன்று பயப்படாதே பாரு, நான் என்னென்னு இன்னைக்கு நைட் கவியிடம் விசாரிக்கிறேன்” என்று கூறியவர் யோசனையுடன் தன் அலுவலகம் புறப்பட்டுச் சென்றார்.
கவிழையாவிற்கு வேலையின் அடிப்படையில் இருந்து கற்றுத்தர ஆரம்பித்த உமாவின் திறமையைக் கண்டு முதலில் பயந்து தன்னால் இந்த வேலையைச் செய்யமுடியுமா...? என்ற சந்தேகம் வந்தது.
அதனை உணர்ந்த உமா, ஆதரவாகக் கவிழையாவின் கையைப் பிடித்து “நான் இந்த வேலைக்கு வந்து நான்குவருசம் ஆகிருச்சு. .நான் படித்தது செக்ரட்டரி வேலைக்கான படிப்புன்னாலும் முதலில் நானும் உன்னைப் போலதான் இருந்தேன். போகப்போக எல்லாம் புரிபடும்” என்று கூறினாள்.
கவிழையாவிற்கும் தன் மனச்சுமையைக் குறைக்க இவ்வேலையில் கவனத்தைச் செலுத்த முடிவு செய்து வெற்றியும் கண்டாள் மஹிந்தன் வரும் வரை.
மஹிந்தன் அன்று மதியம் இரண்டு மணிக்கு தன் அலுவலகம் வந்தவன் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டான்.
அன்று காலை அவன் மிகவும் எதிர்பார்த்த கிளையன்டிடம் இருந்து மிகப் பெரிய ஆடர் கிடைக்கப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளத் திட்டம் தயாரித்து வரும்படியும் நாளை அதற்கான உடன்படிக்கை மேற்கொள்ளவும் அழைப்பு வந்திருந்தது.
எனவே மஹிந்தன் அதற்கான முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான ஆயத்தங்களை மேற்கொள்ள ஆரம்பித்தான். அங்குக் கவிழையா என்று ஒருத்தி இருப்பதையே மஹிந்தனும் உமாவும் மறந்ததுபோல் இருந்தது அவன் செயல்கள் .
அவனுக்கு இதுபோல் வேலைசெய்யும் போது அடிக்கடி குடிக்கத் தண்ணீர் மற்றும் ஜூஸ் தேவைப்படும். அந்தநேரத்தில் மட்டும் “ழையா தண்ணீர்...” என்றும் “ழையா ஜூஸ்...” என்றுகேட்டு வாங்கிக் குடிப்பான் .
கவிழையாவோ முதலில் ‘ழையா’ என்று யாரையோ கூப்பிடுகிறான் என்ற பாவனையில் அசையாமல் இருந்தாள். மஹிந்தன் கூப்பிடுவதைக் காதில் வாங்காமல் இருப்பதைக் கண்டு கோபமாக அவன் பக்கத்தில் வைத்திருந்த பேப்பர்வெயிட்டரை தூக்கி விட்டெறிந்தான் அது தூள்தூளாகத் தரையில் மோதிச் சிதறியது.
அதனால் அவள் உட்கார்ந்த சேரைவிட்டு எழுந்து நின்று தன் கண்களில் பயத்தினைக் காண்பித்து.... வார்த்தை வராமல் இருந்தவளின் நடுங்கிய தோற்றம் பார்த்தவன், அவள் கண்களின் பயத்தினைக் கண்டு தன் கோபத்தினை மட்டுப்படுத்தி உமாவைப் பார்த்தான்.
அவளும் அதிர்ந்திருந்தாலும், அவன் தன்னைப் பார்த்தவும் வாய் தானாக “எஸ் பாஸ்...” என்று கூறியவள் பெல் அடித்து வரவழைத்த ப்யூனிடம் தரையில் கிடந்த சிதறல்களை உடனே சுத்தம் செய்யுமாறு கூறினாள்.
அவன் ஐந்து நிமிடத்திற்குள் சுத்தம் செய்து போன இடைவெளியில் தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கவிழையாவைப் பார்த்து “என்ன தைரியமிருந்தா... நான் கூப்பிட்டும் என்னென்னு கேக்காமல் இருப்ப...” என்றுகேட்டான் .
அதற்குக் கவிழையா தன் நடுக்கத்தை மறைத்து “என் பெயர் ழையா கிடையாது கவிழையா” என்று கூறினாள்.
அதற்கு மஹிந்தன் “நான் அப்படித்தான் கூப்பிடுவேன். நீ திரும்ப இதுபோல் நடந்து என்னைக் கோபப்பட வைக்கிறது உனக்கு நல்லதில்ல...” என்று கூறியவனின் கண்களில் கண்ட கோபத்தில் கவியின் தலை தானாகச் சரி என்று அசைந்தது.
மஹிந்தன் கவிழையாவை அவனுக்கு ஸ்பெஷலானவள் என்பதையும் அவள் அவனுடையவள் என்பதையும் எல்லோரையும் உணரச்செய்ய நினைத்தான். எனவே அவனுடைய கார் ஒன்றில் அவனுடைய டிரைவரை கொண்டு கவிழையாவை ஆபீஸ் கூட்டிவரவும் வீட்டில் விடவும் ஏற்பாடு செய்திருந்தான்....
அக்கார் தங்கள் எம்.டி உடையது என்றும் அதை ஓட்டும் டிரைவர் தங்கள் எம்.டியின் விசுவாசி என்பதையும் அங்கு வேலைபார்க்கும் பெரும்பான்மையானவர்கள் அறிந்த விஷயம். மேலும் அதனால் அங்குள்ள பணியாளர்கள் யாரும் கவிழையாவிடம் ஒரு மரியாதையுடன் ஒதுங்கி இருந்தனர்.
முதல்நாளில் அவளிடம் சாதாரணமாகப் பேசிய பிரசாத் ,ராம் போன்றவர்கள் மறுநாள் அவளை எதிரில் பார்த்து மரியாதையாகக் காலை வணக்கம் செய்து ஒதுங்கிச் சென்றனர். இந்தவிபரங்கள் எதுவும் கவிழையா அறியவில்லை.
அதற்குப்பின் மஹிந்தனின் ழையா தண்ணீர், ழையா ஜூஸ் போன்ற வார்த்தைகளுக்கு அவள் கட்டுப்பட்டு நடந்தபோதும் அவனின் அப்பெயர் சுருக்கம் கவிழையாவிற்கு எரிச்சலை கொடுத்தது.
நேரம் செல்லச்செல்ல அவனின் தொழில் அறிவைக் கண்டவளுக்குச் சிறிது மரியாதை அவன்மேல் வந்தது.
டெக்னிக்கலாகச் சில ஆலோசனைகளைக் கவிழையா அவர்களின் உரையாடல்களைக் கவனித்ததின் அடிப்படையில் தானாகவே முன்வந்து ஆர்வத்துடன் சொன்னாள்.
அவள் கல்லூரியில் பயிலும் போது ஒரு ப்ரொஜெக்ட் செய்து அதனைச் சமர்பிக்கும் நாள் வந்தபோது வந்த கடுமையான வயிற்றுபோக்கால் அவளால் அதைச் சமர்பிக்க முடியாமல் போனது.
தற்போதைய மஹிந்தனின் தொழில் திட்டத்திற்கு அவள் செய்த ப்ரொஜெக்ட் பொருந்திவருவதைக் கண்ட கவிழையா ஆர்வத்தில் அதைப் பற்றிய தன்னுடைய புரிதலை கூறினாள். அவள் கூறியதைக்கேட்டு யோசனையுடன் புருவம் உயர்த்திய மஹிந்தன் சில சந்தேகங்களைக் கேட்டான்.
அதற்குக் கவிழையாவின் விளக்கத்தைப் பார்த்தவன் “குட்” என்று அவளைப் பாராட்டியவன் அதன் பின் அவளையும் தங்கள் வேலையில் அவள் அறியாமல் இணைத்துக் கொண்டான். அதன்பிறகு அவன் பருக ஜூஸ் தயாரிப்பதை உமா மேற்கொண்டாள்.
அவர்கள் திட்டம் தயாரித்து முடிக்க ஐந்தரை மணியாகிவிட்டது. அப்பொழுது கவிழையாவின் தொலைபேசி சத்தமிட்டது அதனை எடுத்துப் பார்த்தவள் காதில்கொடுத்து “இதோ கிளம்பிட்டேன்ம்மா கொஞ்சம் வேலை அதிகம் அதனால் தான்” என்று சொல்லிவிட்டு மணியைப்பார்த்தவள் 5:5௦ ஆனதை பார்த்துக் கிளம்புவதற்கு ஆயத்தமானாள்.
அப்பொழுது மஹிந்தன் “நாளைக்கு இந்த ப்ரொஜெக்டில் சைன் பண்ண ஹோட்டல் சோழாவிற்குப் போகணும் அதற்கு ஏற்றார்போல் ட்ரெஸ் பண்ணிட்டு வா ழையா” என்றான்.
அதனைக் கேட்ட கவிழையா “நானா?” என்று கேட்டாள். அதற்கு
“நீயேதான். இக்கொட்டேசனை பற்றிய டீடைல்ஸ் எக்ஸ்பிளைன் பண்ண தேவையான பேப்பர்ஸை என்னிடம் எடுத்துக்கொடுத்து அசிஸ்ட் பண்ண சொல்ல என்கூட அங்கு நீ இருக்கணும். மதியம் மூன்று மணிக்கு அங்க போகணும். நம்ம வேலை முடிந்து நீ வீட்டிற்குச்செல்ல நைட் ஆகிடும்” என்று கூறினான்.
அதற்குக் கவிழையா, “நைட்டு வெளியில... அதுவும் ஹோட்டலுக்கு எல்லாம் போக என் வீட்டில் விட மாட்டாங்க பாஸ்...” என்றாள்.
உடனே மஹிந்தன் “நீ இன்னும் ஸ்கூலிற்குப் போகும் பிள்ளை இல்ல ழையா இந்த மஹிந்தனின்.. என்று கூறி ஒரு நிமிடம் மௌனமாகி அவளை மேலிருந்து கீழ்வரை தன் கண்களால் ரசித்துவிட்டு செக்ரட்டரி” என்று கூறினான்.
அவ்வளவு நேரம் சற்றுச் சாதாரணமாகப் பேசிக்கோண்டு இருந்தவள் அவனுடைய அந்த ஒரு நிமிட மௌனத்திலும் பார்வையிலும் இவன் மனதில் என்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறான் என்ற கோபமும் எச்சரிக்கையும் கொண்டு திரும்பவும் அவனுடன் விறைப்பாகப் பேச ஆரம்பித்தாள்.
“நான் உங்கள் செக்ரட்டரி மட்டும் தான்” என்று கூறி கோபத்தைச் சிறிது கட்டுப்படுத்தி அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டு தன் பேக்கை எடுத்துக்கொண்டு வெளியேற போனவளைத் தடுத்து “கொஞ்சம் நில்லு ழையா” என்றவன்.
தன்னுடைய ப்ரீப்கேஸை உமாவை எடுத்துக்கொண்டு வரச்சொல்லிவிட்டு கவிழையாவைப் பார்த்து “வா போலாம்...” என்று கூறி ஒரு அடி எடுத்து வைத்தவன் அவள் வராமல் அங்கேயே நிற்பதைப்பார்த்து திரும்பி என்ன? என்று கேட்டான்.
“நீங்க என்கூட ஏன் வருறீங்க பாஸ்?” என்று கேட்டாள். அதில் எரிச்சலானவன் “வாடீ! இப்படி நீ அலம்பல் பண்ணிக்கிட்டே நின்றால் கையைப் பிடிச்சு இழுத்துக்கிட்டுதான் போவேன்” என்றான்.
அவனுடைய பேச்சினைக் கேட்ட ழையாவுக்கு அழுகையும், ஆத்திரமும் வந்தது, அவன் அவ்வாறு செய்தால் தனது மானம் தான் போகும் என்பதை அறிந்து வேறு வழியில்லாமல் அவன் பின்னால் சென்றாள்.
மஹிந்தன் காரின் பின் கதவை கவிழையா ஏறுவதற்குத் தோதாகத் திறந்துகொண்டு அவளைப் பார்த்தான். கவிழையா ஏறாமல் காரை சுற்றி வந்து மறுபுறம் இருந்த கதவைத் திறந்து ஏறிக்கொண்டாள்.
அவள் செய்வதைப் பார்த்தவன் உதடுகள் புன்னகையில் விரிந்தது. உமாவிடம் தன் ப்ரீப்கேஸை வாங்கியவன் காரில் அவள் அருகில் உட்காந்தவுடன் கார் கவிழையாவின் வீட்டை நோக்கிச் சென்றது...
மஹிந்தனின் பியான்ஷி ஐஸ்வர்யாவிடம் அஜய் தன் போனில் கவிழையா மஹிந்தனுடன் காரில் ஏறும் வீடியோ பதிவைக் காண்பித்தான்.
பார் உன்னுடைய பியான்ஷே வேறு ஒருத்தியோட வாழ்கையை அனுபவிக்கிறான், நீதான் முன்னாடி மாதிரி என்கூட டைம் ஸ்பென் பண்ண மாட்டேன்கிற....” என்றான்.
அவன் காட்டிய புகைப்படத்தை உற்றுப் பார்த்தாள் ஐஸ்வர்யா. அதில் கவிழையா முகத்தில் கோபமும் எரிச்சலும் அப்பட்டமாகத் தெரிய கார் கதவைத் திறந்து ஏறுவதும் மறுபுறத்தின் கதவை திறந்துகொண்டு குறும்புச் சிரிப்புடன் மஹிந்தன் ஏறும் காட்சியைக் கண்டாள்.
அவள் வாய் தானாக மஹிந்தனை பார்த்து நான் இந்த மிடில் கிளாஸ் பெண்ணைவிட எந்தவிதத்திலும் குறைந்து போகலை... இவளை உன்னிடம் இருந்து விரட்ட செண்டிமெண்ட் வார்த்தை போதும் எனக்கு...” என்று வாய்விட்டுச் சொன்னவள்,
“அஜய் நாளைக்கு உன்கூட என்னைய வெளியே வரச்சொல்லிக் கேட்டிருந்தயே டைம் பிளேஸ் இரண்டும் எனக்கு மெசேஜ்ல அனுப்பு” என்று கூறிவிட்டு அந்த க்ளப் விட்டு வெளியேறினாள்
அஜய்க்கு ஐஸ்வர்யா மேல் ஒரு கண் உண்டு இன்னும் அவளை முழுவதுமாக அவன் நெருங்கவில்லை. ஹக், லிப்கிஸ் மட்டுமே அவள் அனுமதித்திருந்தாள்
அவளைக் கவர்ச்சியான உடையில் கண்டு அவள் அழகை மொத்தமாக இன்னும் அனுபவித்து முடிப்பதற்குள் அவள் கல்யாணம் என்ற பெயரில் அவனைத் தவிர்ப்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
அவளின் கல்யாணத்திற்குள் எப்படியும் அவளை மொத்தமாக நெருங்கும் சந்தர்ப்பத்துக்குக் கொக்குபோலக் காத்திருந்தான்.
எனவே மஹிந்தனின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அவனின் நண்பன் மூலம் இதுபோன்ற மஹிந்தனின் செயல்களை உளவுபார்த்து சொல்ல ஏற்பாடு செய்திருந்தான்.
அதனை ஐஸ்வர்யாவிடம் கூறி அவளைத் தன்னுடன் நெருங்கி பழகவைப்பதுக்கும் அவளின் பொறாமையைத் தூண்டிவிட்டுக் கொண்டு அதில் குளிர்காயவும் விரும்பினான்.
அவள் போனதும் தன்னுடைய நண்பனிடம், எப்படியும் அவள கல்யாணத்திற்குள் நான் அடைஞ்சுடனும் என்றான்.
அதற்கு அவன் “நீ நினைச்சா முடிக்காமல் விடமாட்ட என்பது எனக்குத் தெரியும் அஜய்” என்று கூறியதும், அஜய் வில்லன் சிரிப்புச் சிரித்தான்.
மறுநாள் கவிழையா நீலவான கலரில் அடர் ஊதாநிற பார்டர் உள்ள காட்டன் புடவையை உடுத்தி அடர் ஊதாக்கல் தோடும் அதற்குப் பொறுத்தமான பென்டனுடன் கூடிய செயின் அணிந்து அவளின் இடுப்புவரை உள்ள கூந்தலை கிளிப்பினுள் அடக்கி அவள் கண்களுக்குச் சிறிது மையிட்டு ஊதநிற பொட்டிட்டு வந்தாள்.
அவளைப் பார்த்த பார்வதிக்கு தன்மகளின் அழகை கண்டு இன்று வந்தவுடன் திருஷ்டி சுத்தணும் என்று நினைத்துக்கொண்டாள்.
நேற்று ஈஸ்வரன் தன் மகள் வேலையின் காரணமாகச் சோர்வாக இருப்பதைப் பார்த்தவர் நாளை மகளிடம் அவள் பணியிடத்தில் ஏதேனும் சிரமம் அல்லது பிரச்சனை உள்ளதாவென விசாரிக்க நினைத்திருந்தார்.
காலை அமர்ந்து சாப்பிடும் போது தயங்கி தன் பெற்றோரிடம் சோழா ஹோட்டலுக்குச் செக்ரட்டரி என்ற முறையில் எம்.டி யுடன் செல்ல வேண்டியதையும் வருவதற்கு நைட் ஆகிவிடும் என்பதையும் கூறினாள்...
அவள் கூறியதை கேட்ட பார்வதி “இதுபோல ஹோட்டலுக்குப் போகவேண்டியிருந்தால் நீ ஒன்றும் அந்த வேலைக்கே போக வேண்டாம்” என்று கறார் குரலில் சொல்லிவிட்டாள்
அதனைக்கேட்ட ஈஸ்வரன் “நீ இந்த வேலையில சேர்ந்ததில் இருந்து உன் முகம் தெளிவில்லாமயே இருக்குது கவி.... அதனால உன் அம்மா சொல்றதைப்போல நீ இந்தவேலைக்குப் போகவேண்டாம்...” என்றார்.
அதற்குக் கவிழையா “என்னப்பா நீங்களும் இப்படிச் சொல்றீங்க....? எம்.டி கொட்டேசன் தயாரிக்கும்போது செக்ரட்டரின்ற முறையில் நான் தான் அவருக்கு அசிஸ்ட் பண்ணினேன். அங்கு இக்கொட்டேசன் பற்றிய டீடெய்ல்ஸ் எம்.டி.க்கு அடுத்து எனக்குத்தான் தெரியும்..... இது என்னுடைய வேலை.... நான் போகலைன்னா ஏற்படுற நஷ்டத்திர்க்கு நான் தான் பொறுப்பேற்கணும்.....” என்றாள்.
கவி அவ்வாறு கூரியதைகேட்டு ஈஸ்வரன், “என்ன கவி சொல்ற?” என்று கேட்டதும். அப்பா நான் வேலையில சேரும் போது போட்ட காண்ட்ராக்டில் இன்னும் மூன்று வருசம் அங்க வொர்க் பண்ணுறதா சைன் பண்ணியிருக்கேன்....” என்றாள்
அதன்பிறகு ஒரு நிமிட மௌனமாகி பின் கூறினாள், நானு இப்போ இதைச் சொல்றது உங்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாய் இருக்கலாம்.... நான் வேலை பார்க்குற இடத்தில் முக்கியப் பொறுப்பில இருக்கேன்.....
இதில கம்பெனி இரகசியத்தைப் பாதுகாப்பதும் என்னுடைய முக்கியப் பங்கு இருக்குது.... ஆதனால திடீர்ன்னு நானாய் என் வேலைப் பொறுப்பில் இருந்து விலகிக்க முடியாது... அப்படி நானாக விலகி வேலையை விட்டு நின்றுவிட்டால் ஐம்பது இலட்சம் நஷ்ட்டஈடு கொடுக்கனுமென எழுதியதை கவனிக்காம சைன் பண்ணிட்டேன்” என்றாள்.
“என்னது ஐம்பது லட்சமா?” என்று அதிர்ந்து கேட்டனர், அவளது பெற்றோர்
உடனே பார்வதி “நீ காண்ட்ராக்டில கையெழுத்து போடுறப்போ அதைப் படிக்காமலேயா சைன் பண்ண...? என்று கேட்டார் .
“அம்மா திடீர்ன்னு செக்ரட்டரி போஸ்ட்டிற்கு என்னைச் செலக்ட் செய்திருப்பதாகச் சொன்னதும் எனக்கு ஏற்பட்ட குழப்பத்தில நான் ஒப்பந்தத்தைச் சரியாகக் கவனிக்காம சைன் பண்ணிட்டேன்... அதுக்குப் பிறகுதான் அதில் இருந்த விஷயம் எனக்குத் தெரிந்தது....” என்றாள் .
அதனால் தான் இத்தனை நாளாய் குழப்பிட்டே இருந்தேன். மத்தபடி எனக்கு வேலையில் எந்தப் பிரச்சனையும் இல்லை....” என்றாள்.
ஈஸ்வரனுக்கு, மகள் தன்னிடம் மேலும் எதையோ மறைப்பதாக மனதிற்குப் பட்டது. இருந்தாலும் இப்பொழுது அவரும் அலுவலகம் புறப்படும் அவசரத்தில் இருந்ததால் பிறகு கேட்டுக்கொள்ளலாம் என விட்டுவிட்டார்.
உடனே பார்வதி “நீ இன்னைக்கு ஹோட்டல் சோழாவுக்குச் சாயந்திரம் கண்டிப்பா போகணுமா கவி...?” என்றார்.
பதில்சொல்ல முடியாமல் மகள் திணறுவதைப் பார்த்த ஈஸ்வரன் “அதுதான் அவள் நிலைமையைச் சொல்லிட்டாளே....” என்றவர்
“பார்த்துக் கவனமாகப் போய்ட்டு வா கவி அங்கு உனக்கு எதுவும் மனதிற்குப் பிடிக்கவில்லைன்னா உடனே எனக்குப் போன் செய்துடு” என்றார்.
“சரிப்பா..” என்றவள். அம்மா கொடுத்த டிஃப்பனை வாங்கிகொண்டு வெளியில் வருவதற்குள் கார் அவளுக்காகக் காத்திருந்தது.
காரில் அவள் ஏறுவதற்குள் பார்வதி ட்ரைவரிடம், “தம்பி நைட் கொஞ்சம் சீக்கிரம் என் மகளைக் கூப்பிட்டு வந்துடுங்க அவள் வீட்டிற்கு வரும் வரை எனக்கு நிம்மதியாக இருக்காது...” என்றாள். அதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பொதுவாக அவன் தலையை அசைத்தான்...
கார் கிளம்பியதும், “டிரைவர் அண்ணா அம்மாவிற்கு என்னைய தனியாக வெளியிடங்களுக்கு அனுப்பிப் பழக்கம் இல்லாததால் பயந்து அப்படி உங்களிடம் சொல்லிட்டாங்க.... நீங்க அதைப் பெரிசா நினைச்சுக்க வேண்டாம்” என்றாள்.
மஹிந்தனே அவளுக்குக் கார் கதவை திறந்துவிடும் அளவில் தன் முதலாளிக்கு முக்கியமானவள் தன்னை அண்ணா என்று அழைப்பதை பார்த்து மகிழ்ச்சியடைந்தவன், “என்பெயர் மூர்த்திம்மா..., என்னைய பேர் சொல்லியே நீங்க கூப்பிடலாம்...” என்றான்.
அதற்குக் கவி “நீங்க என்னைய விடப் பெரியவங்க தானே..?, பிறகு எப்படி உங்களை நான் பேர் சொல்லிக் கூப்பிட முடியும்...?” என்றாள்.
அதற்குப் பின் அமைதியாக அலுவலகம் வந்ததும் எதிர்பட்டவர்கள் அவளுக்கு மரியாதையுடன் வணக்கம் வைத்ததைப் பார்க்கும் போதுதான் பதிலுக்கு வணக்கம் சொல்லி யோசித்தாள் கவிழையா.
தான் முதல் நாள் பார்த்தபோது மற்றவர்கள் தன்னை நட்புடன் பார்த்ததிற்கும் இப்பொழுது தன்னைப் பார்த்து மரியாதையாக நடந்துகொள்வதற்கும் உள்ள வித்தியாசத்தையும் பார்த்தவள் அது தன் செக்ரட்டரி பதவிக்கு வந்த மரியாதையா? அல்லது வேறெதுக்குமா...? என யோசிக்க ஆரம்பித்தாள்.
superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr semaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
நன்றி ப்பா