தொடர் : 5
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
தேடல் – 6
மஹிந்தன் அலுவலகத்திற்கு இவள் வந்து சேர்வதற்கு முன்பே வந்திருந்தான். நேத்து செய்த வேலைகளைச் சற்று சரிபார்த்து வைக்க வேண்டியிருந்ததால் வேகமாக வந்துவிட்டான்.
கவிழையா கதவைத் திறந்ததும் அவளை நிமிர்ந்து பார்த்தவன் அவள் அழகில் ஒரு சிலநிமிடம் கண் இமைக்க மறந்தான். புடவை உடுத்தி அவளை முதல்முறை .பார்க்கிறான்.
கவிழையா மஹிந்தனை பார்த்ததும் “குட் மோர்னிங் பாஸ்” என்றவளிடம்.
புன்னகைத்துக்கொண்டே “குட் மார்னிங், யு லுக் வெரி ப்யூட்டிபுல் டுடே” என்றான்.
கவிழையாவிற்கு இன்று காலை அவளின் அம்மா அப்பாவை இவனால் வருந்தப்படவைக்கும் சூழ்நிலையில் நிறுத்துவிடோமே என்று அவன் மேல் மிகுந்த எரிச்சலில் இருந்தாள்.
இதில் அவன் அவளை மேலிருந்து கீழ்வரை கண்களால் ரசித்துப் புன்னகைத்துக்கொண்டே பேசியதும் கவிழையாவின் முகம் எரிச்சலை அப்படியே பிரதிபலித்தது.
அதன் பின் நேரம், வேலையின் காரணமாக வேகமாகச் சென்றுவிட்டது. வேலையில் மூழ்கியிருந்த மூவரும் மதியம் 2:3௦துக்குப் பின்பே மதியம் சாப்பிடவில்லை என்பதை உணர்ந்தான் மஹிந்தன்,
எனவே மூர்த்திக்கு போன் செய்து அவனுக்குத் தேவையான சாப்பாட்டை வரவழைக்கச் சொல்லிவிட்டு “நீங்கள் ரெண்டு பேரும் சாப்பிட்டு வாங்க...” என்றான்.
“சரி பாஸ்” என்ற உமா கவிழையாவை பார்த்து “இன்னைக்கும் நீ மதியச்சாப்பாட்டை வீட்டில் இருந்தே கொண்டுவந்துட்டயா...?” என்று கேட்டாள்.
“நான் எப்பவுமே வீட்டுச் சாப்பாடுதான் கொண்டு வருவேன். எனக்கு என் அம்மா சமையல்தான் பிடிக்கும். என்னைக்காவது ஒரு நாள் வெளியில் சாப்பிடலாம் தினமும் சாப்பிட்டால் வயிறு கெட்டுப்போயிடும்” என்று புன்னகையோடு உமாவிடம் கூறினாள்.
மஹிந்தன் கொஞ்சம் தள்ளிநின்றதில் சற்று இயல்பாக உமாவிடம் சிரித்துப் பேசிய கவிழையாவை உற்று கவனித்தவன் அவளின் பெண்மையின் அழகும் அவள் சிரித்துபேசிய விதத்தையும் கண்டவனுக்குக் கோபம் வந்தது.
ழையா தன்னிடம் மட்டும் இதுபோல் சிரித்துப் பேசாமல் உமாவிடம் மலர்ச்சியாகப் பேசியதை கண்டவனுக்கு மனம் பொருமியது.
தன்னுடைய டிஃபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு சிரித்துபேசியபடி உமாவுடன் வெளியே செல்லப் போனவளை “ழையா…” என்று அழைத்தான்.
அவன் கூப்பிட்டதும் கவி முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்தது அவளால் பசி தாங்க முடியாது.... இப்பொழுதே சாப்பிட நேரம் ஆகிவிட்டது என்ற கடுப்புடன் இருந்தவள் எரிச்சலுடன் ”சொல்லுங்க பாஸ்” என்றாள்.
உமா போகாமல் கவிழையாவிற்காக நிற்பதைப்பார்த்த மஹிந்தன் “நீங்க போய்ச் சாப்பிடுங்க உமா, கவிழையா என்னேடு சாப்பிடட்டும். சாப்பிடும் போது கிளையன்டிடம் அவள் எப்படிப் பேசுவாள்ன்றதை பேசச்சொல்லி கேட்டு ஏதேனும் கரெக்சன் இருந்தால் சரிசெய்யணும்” என்றான்.
அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே மூர்த்தி மஹிந்தனின் சாப்பாட்டுடன் வரவும் உமா கவிழையாவிடம் ஒரு தலையசைவுடன் வெளியேறிவிட்டாள்.
மஹிந்தன் மூர்த்தியைப் பார்த்து “சாப்பாட்டை ழையாவிடம் கொடுத்துட்டு நீ போ மூர்த்தி...” என்று சொல்லிவிட்டு
“ழையா வா” என்று கூறி அந்த அறையின் உள்ளிருந்த ரூமிற்குள் செல்ல கதவினருகில் போனவன் கவிழையா வராமல் அங்கேயே நிற்பதைப்பார்த்து “ஏன்... அங்கயே நிக்கிற?” என்று கேட்டான்.
“நாம இங்கயே சாப்பிடலாம் பாஸ்” என்று தன் கண்களில் பயத்துடன் கூறியவளை கண்ட மஹிந்தன்
“ஏன் என்கூடத் தனியா, அங்கே உட்கார்ந்து சாப்பிட பயமாகயிருக்குதா...? அப்படிப் பயம் உள்ளவள் முதல் நாள் வேலையில் சேரும்போது சொன்னது எல்லாம் வெறும் பந்தாவுக்காகவா...?” என்று கேட்டான்.
அவன் எதைச் சொல்கிறான் என்று யோசனையுடன் “நான் அப்படி என்ன பந்தாவுக்குச் சொன்னேன்...?” என்று கேட்டாள்.
மஹிந்தன் அன்று கவிழையா கூறியதுபோல் அழுவதுபோல் நடித்துக்கொண்டே “அத்துமீறி நீ என்கிட்ட நடக்க ட்ரைபண்ணினா ஒன்னு உன் உயிர் போகும்.... இல்ல என்னுயிர் போயிடும்....” என்று கவிழையாபோல் பேசிக்காண்பித்தான்.
அவன் தான் பேசியதுபோல் நடித்துக் காட்டியதை பார்த்து ரோஷத்துடன் “எனக்குப் பொய் சொல்லி பழக்கமில்ல... எனக்கு ஒன்றும் பயமில்ல” என்றுச்சொல்லி இருவருடைய சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு அவன் பின்னால் அந்த அறைக்குள் சென்றாள்.
மஹிந்தனின் அந்த அறைக்குள் கதிரைத் தவிர வேறு யாரையும் அழைத்துச் சென்றதில்லை. அன்று ஐஸ்வர்யா அவனிடம் கேட்காமல் அந்த அறைக்குள் வந்ததை அவனாள் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
ஐஸ்வர்யா அங்கு வந்ததால், அன்று இரவே அந்த அறையின் கதவில் தன்னுடைய கை விரல் பதித்தால் மட்டும் திறக்குமாறு மாற்றம் செய்துவிட்டான்.
உள்ளே வந்த கவிழையா அந்த அறைக்குள் தன் வீடு மொத்ததையுமே அடக்கிவிடலாம்போல என்று நினைத்துக்கொண்டு அங்கு இருந்த சாப்பாட்டு மேஜைக்கு மேல் இருவரின் சாப்பாட்டையும் வைத்தாள்.
அந்த அறையின் பிரம்மாண்டத்தைக் கண்டு மனதினுள், ‘வெளியில் இருந்து அந்தக் கதவைப் பார்க்கும் யாரும் இது போல அழகான பெரிய வீடு உள்ளே இருக்கும் என்று நினைத்துகூடப் பார்த்திருக்க மாட்டாங்கள்...,
பணம் இருந்தால் எதுவும் செய்ய முடியும் ஆனால் பணம் அறிவு அழகு எல்லாம் இருக்கும் இவனிடம் குணம் இல்லையே!’ என்று நினைத்துக்கொண்டே தன்னுடைய டிப்பன் பாக்சை திறந்து சாப்பிட ஆரம்பிக்கப் போனாள்.
மேஜையில், அவள் எதிரில் அமர்ந்தவன் “எனக்கு யார் சாப்பாடு எடுத்துவைப்பது?” என்று கேட்டான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அங்கிருந்த அலமாரியை காண்பித்து “பிளேட், பவுல் எல்லாம் அதில் இருக்கு” என்று சொன்னான்.
கவிழையா மனதிற்குள், “எருமைக்குக் கை கால் எல்லாம் நல்லாத்தானே வேலை செய்யுது! பிறகு ஏன் இவனுடைய சின்ன... சின்ன... வேலைக்குக் கூட மத்தவங்களை ஏவுறான்? எல்லாம் பணத் திமிர்”
என்று பொறுமிக்கொண்டே அவனுக்குப் பரிமாறத் தேவையானவற்றை எடுத்துவிட்டு திரும்பும் போது அவளுடைய டிஃபன்பாக்ஸ் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டவள் கோபமாக அவனைப் பார்த்து முறைத்தாள்.
அவள் முறைப்பதைப் பார்த்தவன், சாப்பாடு கொட்டியிருந்த இடத்தை அவனும் எட்டிப் பார்த்துவிட்டு “இது எப்படிக் கீழே விழுந்தது...?” என்று கேட்டான்.
அவள் சாப்பாடு பரிமாறப் பாத்திரம் எடுக்கத் திரும்பி இருக்கும் போது வேண்டும் என்றே அதைக் கீழே விழச்செய்தான் மஹிந்தன்.
கீழே கார்பெட் விரிப்பு இருந்ததால் அது விழும் போது சத்தம் எழவில்லை ஆனால் தனக்கு ஒன்றும் தெரியாததுபோல் அவளிடம் அவ்வாறு கேட்டான்.
அவன் அவ்வாறு கூறியதும், ‘தான் இவனைப்பற்றி நினைத்துக்கொண்டே டிஃபன்பாக்சை கீழே நழுவிவிழும்படி வைத்துவிட்டோமோ?’ என்று குழம்பிப் போனாள்.
“உனக்கும் சேர்த்து இன்னொரு பிளேட் எடுத்து வா ழையா, என்னுடைய சாப்பாடு இரண்டு பேருக்குத் தாராளமாக இருக்கும்” என்றான்.
“தேவையில்லை! நான் கேண்டியனில் சாப்பிட்டுக்கிறேன்” என்று கூறினாள்
“இனிமே நீ அங்குப் போய்ச் சாப்பிட நேரம் இல்லை, பட்டினியோடு கிளைன்டிடம் பேசி என்னை நஷ்டப்பட வைக்காதே” என்றவன் மேலும்
“உன்னைப் பார்க்கவைத்து நான் மட்டும் சாப்பிட்டால் எனக்கு வயிறு வலிக்கும். எதிர்த்துப் பேசாமல் உட்கார்ந்து என்கூடச் சாப்பிடுவது உனக்கும் நல்லது” என்று கடைசி வரியை கொஞ்சம் கடுமையுடன் கூறினான்.
முதலில் அவனுடைய சாப்பாட்டை நான் சாப்பிடுவதா..? என்று வீராப்புடன் மறுத்தவள் இனி கேன்டினில் சாப்பிட நேரம் இருக்காது என்று சொன்னதும் வீராப்பு சற்று மட்டுப்பட்டது,
மேலும் கடைசியாக அவன் சற்றுக் கடுமையாகப் பேசியதும் அவள் கை தானாகவே அவளுக்கு வேண்டிய சாப்பாட்டை எடுத்துவைத்து அவனுடன் சாப்பிட ஆரம்பித்தாள்.
மஹிந்தன் அவள் செயலை மனதிற்குள் ரசித்துப் பார்த்தான் நான் கடுமையாப் பேசுறதையே இவளால் தாங்கி கொள்ள முடியல அவளைப் போலவே அவள் மனதும் மிருதுவானதாக இருக்குதே என்று நினைத்தவனின் உள்ளம் அவளிடம் நெருக்கமாக இருக்க அவளின் மென்மையை அவன் கைகள் அப்பொழுதே உணரவேண்டும் என்ற பேராவல் கொண்டது.
அப்படிச்செய்தால் அவள் தன்னைவிட்டு இன்னும் விலகிப்போக முயற்சி செய்வாள் என்பதனை அறிவு கூற. எங்கே போய்விடப் போகிறாள் என்று மனதிற்குள் சொல்லி தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.
ஆனால் விழிகளில் அவளின் அழகை நிரப்பிக்கொண்டே அவள் சாப்பிடாமல் தட்டில் உள்ளதை கையில் வைத்துக்கொண்டு யோசனையுடன் இருப்பதைப் பார்த்தான்.
சாப்பிட உட்கார்ந்துவிட்டாள் ஆனால் மனதினுள் “இவன் கடுமையா பேசியதற்குப் பயந்து நாம் சாப்பிட ஆரம்பித்ததால் இவன் என்னைப்பற்றி ரொப்ப எளிதாக நினைச்சுடுவானோ...?”
என்று மனதில் அவனைப்பற்றி யோசனை செய்துகொண்டிருப்பவளின் கவனம் “ஏய் ழையா!” என்ற மஹிந்தனின் அழைப்பில் கலைந்து அவன் முகம் நோக்கியவள்,
“என்ன?” என்று ஒற்றை வார்த்தையில் கேள்வி எழுப்பினாள்.
“சீக்கிரம் சாப்பிடு, கிளைன்டிடம் எப்படி எக்ஸ்பிளைன் பண்ணலாம் என்று ஒரு குட்டி நோட்ஸ் நான் சொல்வதை எடுத்துக்கோ...” என்று பேசி பிசினெஸ் விசயத்தில் அவள் கவனத்தைத்திருப்பிச் சாப்பிட வைத்தான்.
அவள் சாப்பிட்டதும் அவளுடனான வேலையையும் அங்கிருந்தே முடித்துவிட்டு நேரம் பார்த்தான் அது 3;35 என்று காட்டவும் “ழையா அந்த ரெஸ்ட்ரூம் போய்க் கொஞ்சம் ரெப்ரஸ் ஆகிட்டு வா நாம் கிளம்புற நேரம் வந்துருச்சு” என்றான்.
அதற்கு மறுத்த கவிழையா “நான் வெளியில் உள்ள ஸ்டாப்ஸ் ரெஸ்ட்ரூமில் போய் ரெப்ரஸ் ஆகிட்டு வந்துடுறேன் பாஸ்” என்று கூறி வெளியேற கதவினை நோக்கிச் சென்றவளின் பின்னால் அவனும் வருவதைப் பார்த்தவள், இவன் எதுக்குப் பின்னாடியே வரான்?! என்று திரும்பிப் பார்த்தாள்...
மஹிந்தன் அவள் பார்த்ததும் சிரித்துக்கொண்டே “நீ எப்படிக் கதவை திறக்கனு பார்க்க வருகிறேன் பேபி” என்று குழைந்து பேசினான் .
அதற்கு ‘அவள் இவன் எதுக்கு இப்போ லூசு மாதிரி பேசுகிறான்...?’ என்று அவனை வித்தியாசமான பிறவியைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டு சென்று கதவின் லாக்கை கையில் பிடித்துத் திருகி திறக்க முயன்றாள். ஆனால் அக்கதவை அவளால் திறக்க முடியவில்லை.
அவள் திரும்பத் திறக்க முயற்சிசெய்யும் போது அவள் பின்னால் நெருங்கி நின்று அவள் கையின் மேல் தன் கையை வைத்து லாக்கில் இருந்த அவள்கையை எடுத்து தடவியவாறு “நான் கை வைத்தால் மட்டும் தான் அது திறக்கும் பேபி” என்று அவள் காதோரம் கூறினான்.
அவன் தன் பின்னால் நெருங்கி நின்றதுமே தன்னைச் சுதாரித்துக் கொண்டவள் அவன் தன் கைமேல் கையை வைக்கவும் அவன் கையை உதற முயன்றாள்.
ஆனால் பார்ப்பதற்குச் சாதாரணமாகப் பிடித்திருப்பதைப் போன்று இருக்கும் அவன் பிடி உண்மையில் ரொம்ப இறுக்கமாக இருந்தது, அவளால் தன் கையை உதற முயற்சி மட்டும் தான் செய்ய முடிந்தது.
அவளின் பின்னால் இருந்துகொண்டு தன் உதடுகள் அவளின் காதினருகில் கொண்டுசென்று பட்டும்படாமலும் “நான் கை வைத்தால் மட்டும் தான் அது திறக்கும் பேபி...” என்று கூறி அவளின் தோளின் மேல் தன் கையை வைத்து சற்று அவளைத் தள்ளி நிறுத்திக் கதவைத் திறந்து வைத்தான்.
மஹிந்தனின் அச்செயலால் கோபம் கொண்டு உதடுகள் நடுங்க கண்களால் உக்கிரமாகப் பார்த்தவள் “எது சொல்வதா இருந்தாலும் என்னையத் தொடாமல் பேசுங்க...” என்று குறைந்த ஒலியில் கர்ஜனை செய்தாள்.
அதற்கு மஹிந்தன் சிரித்துக்கொண்டே சத்தம் வராமல் உதடு மட்டும் அசைத்து போடீ...! என்று கூறி வாசலைக் காண்பித்தான்.
மேலும் அங்கு நின்று அவனைப் பார்க்கப் பிடிக்காமல் கோபத்துடன் வெளியே வந்தவள், உமாவின் “கவிழையா” என்ற அழைப்பில் அதேக்கோபத்துடன் திரும்பிப் பார்த்தாள்.
அவள் கோபமாகப் பார்ப்பதை பார்த்த உமா “எதுக்காக என்னைய கோபத்துடன் இப்படி முறைக்கிற கவி...?” என்று கேட்டாள்.
அவள் அவ்வாறு கேட்டதும் தன் கோபத்தை மறைத்து “அச்சோ எனக்கு உங்கள் மேல கோபம் எதுவுமேயில்லை” என்று சிரித்தபடி தன் கோபத்தை முயன்று அடக்கியபடி பேசினாள் கவிழையா.
“என் மேல் கோபம் இல்லாவிட்டால் அப்போ யார் மீது கோபம்...?” என்று கேட்டு மஹிந்தனின் மூடிய அறைகதவை திரும்பி பார்த்துவிட்டு “நம்ம பாஸ் மீது தான் கோபமா...?” என்று கேட்டாள் உமா.
அதற்குக் கவிழையா பதில் சொல்லாமல் “நான் ஹோட்டல் சோழாவிற்குக் கிளம்பனும் நேரமாச்சு நாளைக்கு நாம பேசலாம்...” என்று சொல்லிக்கொண்டே எடுத்துவைக்கவேண்டிய பைல்களை எடுத்து சரிபார்த்து முடிப்பதற்குள் மஹிந்தன் வெளியே வந்து “ழையா வா போகலாம்” என்று கூறி முன்னால் நடந்தான் அவளும் பைல்களுடன் பின்னால் சென்றாள்.
உமா அன்று மதியம் லஞ் சாப்பிடும் போது அஜயின் நண்பன் உமாவிடம் “என்ன நீங்கள் தனியாகச் சாப்பிடவந்திருக்கீங்க எம். டீ யின் நியூ செக்ரட்டரி….” என்றதில் அழுத்தம் கொடுத்து “உங்களுடன் சாப்பிட வரவில்லையா...?” என்று கேட்டான்.
“இன்னைக்கு நாலுமணிக்கு ஹோட்டல் சோழாவில் ஒரு முக்கியமான கிளையண்டை மீட் பண்ண தேவையானதை எம்.டீ கூட டிஸ்கஸ் செய்வதால் கவிழையா என்கூடச் சாப்பிடவரலை...” என்றாள்.
அவனுக்குத் தேவையான தகவலை பெற்றதும் “அப்படியா?” என்று கூறிக்கொண்டு அந்த விசயத்தை அஜய்யிடம் சொல்ல அவன் நம்பரை டயல்செய்தபடி அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான்.
அஜய்க்கு அந்த விஷயம் தெரிந்தவுடன் ஐஸ்வர்யாவை ஹோட்டல் சோழாவிற்கு ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொள்ள அப்பொழுதே கிளம்பி வரச்சொன்னான்.
ஹோட்டல் சோழாவிற்கு முன்கூட்டியே வந்து பார்ட்டி ஹாலின் வாசலில் நின்றுகொண்டிருந்த அஜய், ஐஸ்வர்யாவின் இடையைச் சுற்றி கைப்போட்டு நெருங்கி நின்று கொண்டிருந்தான்.
அப்பொழுது கவிழையாவுடன் மஹிந்தன் நுழைவதைப் பார்த்தவன் “ஐஸ்வர்யா உன்னுடைய பியான்ஷே வேற ஒருத்திக்கூட அங்கே போகிறார் பார்...!” என்று சொன்னான்.
ஐஸ்வர்யா பார்க்கும் போது மஹிந்தன் தன் தொலைபேசியில் பேசிக்கொண்டு வந்தான்.
அவனுடன் வந்த கவிழையாவை, அஜய் ஏற்பாடு செய்திருந்த ஆள் தன்னுடன் வருபவனிடம் ஏதோ கவிழையாவைப் பார்த்துச் சொல்லிக்கொண்டே அவளை நோக்கி இடிப்பதைப்போல் நெறுங்கிவந்தான்.
தற்செயலாகத் தன்னை மோத ஒருவன் வருவதைக் கவனித்த கவிழையா அவசரமாக விலகி தடுமாறி விழப்போனவளை மஹிந்தன் தாங்கி தன்னுடன் பிடித்துக்கொண்டு ஒரு காலால் இடிக்கவந்தவனை உதைத்துதள்ளி கோபமாக ஒரு விரலை நீட்டி யாரிடம் உன் வேலையைக் காண்பிக்கிற? என்று கடுமையாக எச்சரித்தான்.
விழுந்தவன் எழுந்து நிற்பதற்குள் அங்கே நான்கு பேருடன் விரைந்து வந்த கதிர், விழுந்தவனின் சட்டை காலரை பின்னிருந்து பிடித்துத் தூக்கியபடி மஹிந்தனை பார்த்து “நான் இவனை நம் இடத்திற்குப் போய் விசாரிக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினான்.
மஹிந்தன் தன்னை விழாமல் பிடித்ததும் அவனிடம் இருந்து விலக முயன்ற கவிழையாவை முறைத்த மஹிந்தன் கோபமாகத் தன் வாயில் ஒரு விரல் வைத்து “இஸ்…” என்று சத்தம் கொடுத்து அவளை அடக்கினான்.
அவன் தன்னை விழாமல் காத்த இதம் மறைந்து, அவன் தன்னைப் பிடித்துக் கோபமாக முறைத்து அடக்கி, விடாமல் பிடித்துக் கொண்டு இருந்ததில் கலவரம் ஆனாள் .
அந்த நேரம் கதிர் உடன் வந்த நான்கு பேரில் இருவர் முகம் பார்த்த அவளுக்கு ‘அவங்களை எங்கேயோ பார்த்திருக்கிறோமே....’ என்று யோசனையானவள் தன் தெருவை காவல் காப்பதுபோல் சுற்றி வருபவர்கள் அவர்கள் என்பதை உணர்ந்தாள்.
மஹிந்தன் தன் பாதுகாவலுக்கு வந்த கதிரிடம் “நீ போனில் சொன்னது போல் இவன் அஜய்கு தெரிந்தவன் மட்டும்தானா அல்லது ஐஸ்வர்யாவிற்கும் பழக்கமானவனா...?” என்று கேட்டான் .
ஐஸ்வர்யா என்ற பெயரை கேட்டதும் கவிழையாவிற்கு, ‘நான் மஹிந்தனின் பியான்ஷி’’ என்று தன்னிடம் புன்னகையுடன் கைநீட்டிய ஐஸ்வர்யாவின் முகம் நினைவு வந்தது .
அதனால் இன்னொருத்திக்கு நிச்சயமானவன் தன் கையைப் பற்றி இருப்பதை ஜீரணிக்க முடியாமல் தொடந்து தன் கையை விடுவிக்க முயற்சிசெய்து கொண்டே மஹிந்தனுடன் மீட்டிங் ஹாலை அடைந்தாள்.
வாசலில் அவள் கையை விட்டவன் கவிழையாவை பார்த்து “என்னை நீ திரும்பத் திரும்பக் கோபப்படுத்துற பேபி. யூ ஆர் மைன்! டிரை டூ அண்டர்ஸ்டேன்ட்” என்று கூறி ஒரு நிமிடம் தன் கண்களை மூடி கோபத்தினைக் கட்டுப்படுத்தியவன் “உள்ளே கிளையண்ட் வெயிட் பண்ணிகிட்டு இருக்காங்க சோ! ரிலாக்ஸ் பேபி” என்று கூறி அவளுடன் உள்ளே சென்றான்.
கவிழையாவிற்கு அச்சூழ்நிலை மூச்சு முட்டுவதுபோல் இருந்தது. அவனுடன் உள்ளே நுழைந்தவள் குறைந்த குரலில்
“நான் ரெஸ்ட்ரூம் போகணும்” என்று மஹிந்தனிடம் கூறியதும் அவன் அது இருந்த பக்கம் கைக் காட்டினான்.
கவிழையாவிற்கு ரெஸ்ட்ரூம் உள் வந்ததும் அழுகையை அடக்க முடியவில்லை ஆனால் அப்பொழுது அழுவதற்கும், யோசிப்பதற்கும் நேரம் இல்லை எனவே தன்முகத்தில் தண்ணீர் விட்டு அலம்பி சிறிது அமைதிப்படுத்திக்கொண்டு வெளியில் வந்தாள்.
பார்ட்டி ஹாலில் இருந்த ஐஸ்வர்யாவிற்கு அஜய் மதுபானத்துடன் போதை அதிகரிக்கும் வஸ்த்துவை அவள் அறியாமல் கலந்து கொடுத்தான்.
ஐஸ்வர்யாவிடம் அஜய் கூறினான் “மஹிந்தனுக்கு அவனுடைய செகரற்றி மேல் உள்ள அக்கறையைப் பார் அவன் உன்னுடன் நேரம் செலவழிக்க விரும்பமாட்டான் ஏன்னா அவனுக்கு உன் மேல் ஆசையில்லை அவனின் செக்கரற்றி கவிழையா மேல் தான் ஆசை” என்று கூறினான்.
அதற்கு ஐஸ்வர்யா “அந்த மிடில்கிளாஸ் பெண்ணிடம் அப்படியென்ன இருக்கு...? அவளிடம் போய் அப்படி இழைகிறானே...? அஜய். நீ சொல் நான் பெஸ்டா? அல்லது அவள் பெஸ்டா?” என்று கேட்டாள்.
அதற்கு அஜய் அவளுடன் நெருக்கமாக அமர்ந்து, “ஸ்வீட்டி, நீதான் பெஸ்ட்” என்று கூறிச்சிரித்தான்.
அந்தநேரம் மீட்டிங்ஹாலில் கிளைண்டிடம் பேச்சுவார்த்தையில் இருந்த மஹிந்தனுக்கு வந்த போன் வெளிச்சத்தைப் பார்த்தவன் கதிர் என்ற பெயரைப்பார்த்து அவர்களிடம்
“ஒன் மினிட்” என்று கூறி “மை செக்ரட்டரி வில் எக்ஸ்பிளைன் பர்தர் டீடெல்ஸ் வித் யூ.” என்றான்.
அவன் விட்டுச்சென்ற இடத்தில் இருந்து கவிழையா மீதி பேச்சுவார்த்தையை மேற்கொண்டாள்.
சற்று தள்ளி நின்று கொண்டு கவிழையா பேசுவதைக் கவனித்துக்கொண்டே தன் போனை அட்டென் பண்ணி “சொல் கதிர்...” என்றான்.
கதிர் சொன்னதைகேட்ட மஹிந்தன் சிறு குரலில் கதிரிடம் “ஐஸ்வர்யாவை வீட்டிற்கு அனுப்பிவை கதிர். என்னால் இப்பொழுது அங்க வர முடியாது. டீலிங் முடிந்தபின்னால் தான் என்னால் வெளியில் வர முடியும்” என்று சொல்லி போனை வைத்துவிட்டுப் பிசினஸ் டீலிங்கில் கலந்து கொண்டான்.
பார்ட்டி ஹாலில் ஐஸ்வர்யாவின் முன் நின்றிருந்த கதிரைப் பார்த்து அவள் கோபத்துடன் “நீ யார் என் ஃப்ரெண்ட் மீது கைவைக்க...?” என்று போதையுடன் கூறினாள் ஐஸ்வர்யா.
அதற்குக் கதிர் “மேடம் மஹிந்தன் ஸார் உங்களை வீட்டில் விடச் சொல்லியதால் தான், நான் வந்தேன்” என்றான்.
அதற்கு ஐஸ்வர்யா, “என்ன உங்க பாஸ்க்கு திடீர்ன்னு என் மேல் அக்கறை...?” என்று குழறியபடி கூறி “நோ ஐ காண்ட் அக்செப்ட் யுவர் சர்வீஸ். அஜய் வா போகலாம்” என்று அழைத்தாள் ஐஸ்வர்யா அவளின் இடையில் கைகொடுத்து அனைத்ததுபோல் கூட்டிச்சென்ற அஜயை தடுக்க வழியில்லாமல் நின்றான் கதிர்.
மீட்டிங் ஹாலில் பிசினஸ் டீலிங்கை வெற்றிகரமாக முடித்ததில் மஹிந்தனின் மனநிலை சந்தோஷமாக இருந்தது. அந்த அக்ரிமெண்ட் அவனது பிசினஸ் உலகில் ஒரு பெரிய அந்தஸ்த்தை பெற்றுத்தரும் என்பதினால் அவன் அதில் அதிகமாகக் கவனத்தைக் காண்பித்தான்.
கவிழையாவை என்றைக்கு அவனுடயவள் என்று முடிவெடுத்தானோ, அன்றுதான் அந்த டீலிங் பற்றிய முதல் செய்தி அவனுக்குக் கிடைத்தது.
ஐஸ்வர்யா உடன் அவனுக்குச் செய்த நிச்சயதார்தத்தன்று மிகவும் மனஉளைச்சலில் இருந்தவனுக்குக் கதிர், கவிழையா பற்றிக் கூறியபோது ழையா அவளுடையவள் என்று மஹிந்தன் முடிவெடுத்ததும் அவன் போனில் இந்த டீலிங் பற்றிய முதல் அறிவிப்பு அவனுக்குக் கிடைத்தது.
அதன் பின் கவிழையா அவனுடைய ஆபீசில் செக்ரட்டறியாகச் சைன் போட்ட அன்று அவன் எதிர்பார்த்த பிசினஸ் டீலிங்கில் முன்னேற்றம் ஏற்பட்டது.
அவள் கொடுத்த ஆலோசனையின் அடிப்படையில் மேற்கொண்ட ஒப்பந்தம் இன்று வெற்றியை அவனுக்கு அளித்தது. ஏனோ அவள் தன்னுடன் இருப்பது உற்சாகத்தையும் அதிர்ஷ்டத்தையும் அவனுக்குத் தருவதாக அவன் நினைத்தான்.
மஹிந்தனுக்கு, கவிழையா அவனுக்குக் கிடைத்த பொக்கிஷமாக மனதிற்குப் பட்டது . மற்றொருவரின் நிழல் கூட அவளை நெருங்க விட அவன் தயாராக இல்லை. அப்படிப்பட்டவளின் மேல் ஒருவன் இடிக்க வந்ததை அவனாள் மன்னிக்க முடியவில்லை. ஆனால் அவன் ஒன்றை அறியவில்லை, தன்னுடைய செயல் அவளுக்கு எவ்வளவு துன்பத்தைகொடுக்கும் என்பதை அவன் யோசிக்கவில்லை.
தான் கல்யாணம் செய்யப்போகும் ஐஸ்வர்யாவிற்கு எவனோ ஒருவன் முத்தமிட்டதைப் பார்க்கும் போது அவனைக் கொல்லவேண்டும் என்ற வெறி அவனுக்குக் கிளம்பியிருக்க வேண்டும். ஆனால் அதில் அவன் கோபம் கொள்ளலாமல் இருந்தது அவள் மேல் அவனுக்கு இருந்த பற்றில்லாத தன்மையை மஹிந்தன் உணர்ந்து. அக்கல்யாணத்தை நிறுத்த முயற்சிசெய்திருக்க வேண்டும்.
அதன் பின் கவிழையாவிடம் தனக்கு அவளின் மீது உள்ள ஈடுபாட்டை நல்லமுறையில் எடுத்துச்சொல்லி அவளின் மனதில் இடம் பிடித்திருக்க வேண்டும். இதெல்லாம் செய்யாமல் எளியவர்களை வலியவர்கள் அடக்கி ஆள்வதைப்போலத் தடாலடியாக அவளைத் தனது வாழ்வில் இணைத்து அவளின் மனதை காயப்படுத்த திட்டமிட்டான் மஹிந்தன்.
மீட்டிங் ஹாலை விட்டு வெளியே வந்த மஹிந்தனுக்குக் கவிழையாவுடன் தன் மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. எனவே ழையா என்ற அழைப்புடன் அவள் கைகோர்க்கும் நோக்குடன் நெருங்கினான் மஹிந்தன்.
அதனைப் பார்த்த கவிழையா, ஒரு ஸ்டெப் தள்ளி நின்று கொண்டு “இதுபோல என்னைத் தொட்டு பேசுவதைக் கையைப் பிடிக்கவருவதை நிறுத்திக்கோங்க திருப்பியும் இதுமாதிரி செஞ்சா என் அடியால் உன் கன்னம் பழுத்துடும்” என்றாள்.
அவள் அவ்வாறு கூறியதைக் கேட்ட மஹிந்தன் கொஞ்சம் சத்தமாகவே சிரித்தான். பின்பு “உன்னால் முடியும் விஷயத்தை மட்டும் பேசணும் பேபி” என்று கூறினான் .
பின்பு முகத்தில் கொஞ்சம் கடுமையுடன் “ழையா நான் இன்னைக்கு ஹேப்பியான மூடில் இருக்கிறேன், ஆதலால் நீ பேசியதை நான் பொறுத்துப்போறேன் .என் கூடப் பேசும் போது வார்த்தைகளை அடக்கி பேச கத்துக்கோ” என்றான்.
மேலும், “யூ ஆர் மைன் என்பதனை நீ அக்செப்ட் செய்ய உனக்கு ஒரு மாதம் டைம் தருகிறேன் . அதற்குள்ள என்னைய ஏற்றுக்கொள்ள உன்னைத் தயார் படுத்திக்கோ” என்றான்.
very intereting story