Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு விஷம்

வகைகள் : சிறுகதைகள்/ இரா. சிதம்பரம்

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


சிறுகதைகள்

விஷம்

விஷம்

அந்த நள்ளிரவில் யாரோ படபடவென்று கதவை அடித்தார்கள். நான் பரபரப்புடன் எழுந்து விளக்கை போட்டேன். என் நண்பன் டாக்டர் சந்திரன் கதவை திறந்தான். வெளியே வீட்டுக்காரர் வேதாச்சலம் முதலியார் நின்று கொண்டிருந்தார்.முதலியாரின் முகத்தை பார்க்கவே பயங்கரமாய் இருந்தது. என்ன விஷயம் என்று நாங்கள் கேட்பதற்குள் அவர் ஆரம்பித்தார் “ஐயா எனக்கு அவசரமாக ஒரு உதவி செய்ய வேண்டும் என் அருமை மகள் சாக கிடக்கிறாள். டாக்டர் சார் உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் ஏதாவது மருந்து கொடுத்து எப்படியாவது அவளைக் காப்பாற்றுங்கள்” என்று பரபரப்புடன் பேசினார்.

“அவள் உடம்பிற்கு என்ன?” என்று நாங்கள் இருவருமே ஏக காலத்தில் கேட்டோம்.

முதலியார் சொல்வதற்கு சற்று தயங்கினார். பின் “உங்களிடம் சொல்லாமல் என்ன அவள் விஷத்தை குடித்து விட்டாள், இல்லை அது கூட இல்லை நானே தான் அவளை பெற்று அருமையுடன் வளர்த்த இந்த பாவியே தான் விஷத்தைக் கலந்து அவளைக் குடிக்க வைத்து விட்டேன்” என்று மனிதர் தன்மையே மறந்து பேசினார்.

தாமதம் செய்யாமல் அறையில் கதவை பூட்டிக் கொண்டு நானும் சந்திரனும் அவரை பின் தொடர்ந்தோம்.

வேதாச்சல முதலியார் வியாபார வட்டாரங்களில் நல்ல வியாபகஸ்தர். கட்டிட காண்ட்ராக்டிலே நல்ல பணம் சேர்த்து வைத்திருந்தார். அல்லுச் செல்லு ஒன்றும் கிடையாது. ஒரே மகள். சுகவாச ஜீவனம். சென்னையிலே நாலு வீடுகள் இருந்தன. லிங்கிச்செட்டி தெருவில் அவர் வசித்த அவர் வீட்டின் மேல் மாடியில் தான் நானும் என் நண்பன் சந்திரனும் இருந்து வந்தோம்.

சந்திரன் டாக்டர் பரீட்சை பாஸ் செய்து விட்டு இப்பொழுதுதான் தொழிலை ஆரம்பித்து இருந்தான் வேதாச்சலம் முதலியாருடைய அந்த வீட்டின் மேல்மாடி முழுவதையும் வாடகைக்கு எடுத்திருந்தோம். அதில் ஒரு பகுதியில் அவனுடைய டிஸ்பென்சரி மற்றொரு பகுதியில் நானும் அவனும் வசித்தோம். ஹோட்டலில் சாப்பாடு. சந்திரன் ஆள் தான் வாட்டசாட்டமாய் இருப்பானே தவிர இன்னும் ஒரு கத்துக்குட்டி டாக்டர் தான்.

வேதாச்சலம் முதலியாரின் மகள் ரேவதி பல தடவைகளில் நான் பார்த்திருக்கிறேன். நல்ல பண்புமிக்கவளாகத்தான் தோன்றினாள். படித்து பட்டம் பெற்றவள் தான் என்றாலும் படாடோபம் கிடையாது நல்ல அழகி.

அந்த ரேவதியை பற்றி இன்னும் ஒரு செய்தியும் எங்கள் காதுகளுக்கு எட்டி இருந்தது. அவளுடன் காலேஜில் படித்த ஒரு இளைஞனை அவள் காதலித்ததாகவும் அநேகமாக கல்யாணமே நடைபெறப் போவதாகவும் பேச்சா இருந்தது. திடீரென்று அந்த பையன் வேறு யாரையும் மனம் செய்து கொண்டான் என்று தகவல் எட்டியது அந்த காரணத்தால் தான் இந்த பெண் இப்படி விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொள்ள துணிந்து விட்டாளோ என்ன பேதமை இது?

ரேவதி படுத்திருந்த அறைக்குள் எங்களை அழைத்துச் சென்றார் வேதாச்சல முதலியார். படுக்கையில் கிடந்தாள் ரேவதி. பெண்களின் அழகு அவர்கள் தூக்க மயக்கத்தில் இருக்கும் போது தான் அதிகமாக சோபிக்கும் என்று யாரோ எங்கேயோ சொல்லியிருப்பது என் ஞாபகத்திற்கு வந்தது. தூக்க கலக்கத்தின் காரணமாகவோ அல்லது அவள் உடலுக்குள் புகுந்திருந்த அந்த கொடிய விஷத்தினால் ஏற்பட்ட மயக்கத்தின் காரணமாகவோ துவண்டு குழைந்து கிடந்த அவள் உடம்பில் ஒவ்வொரு அவயத்திலும் அழகு மிதந்து திகழ்ந்து கொண்டிருந்தது.

இத்தனை எழில் மிக்க அந்த சௌந்தர்ய வதியின் வாழ்வு இவ்விதமாகவா வியத்தமாக வீணாக போய்விட வேண்டும்? பஞ்ச பூதங்களாகிய வர்ண கலவை கொண்டு படைப்பு தெய்வம் உலகப் படுதாவிலே தீட்டி வைத்த சிறந்த வண்ண ஓவியமும் இன்னும் ஒரு நொடியில் கால தேவன் என்னும் அந்த கலை உள்ளமற்ற கல் நெஞ்சன் கையில் பட்டு கசங்கி உருக்குலைந்து விழவே தான் போகிறதோ!

ரேவதியை படுக்கையில் இருந்து தூக்கி உட்கார வைத்தார் முதலியார். எழுந்து உட்கார்ந்த ரேவதி முதலில் தயக்கம் நிறைந்த விழிகளால் தன் தந்தையை பார்த்தாள். சந்திரனை சற்றே கூர்ந்து நோக்கினாள். பிறகு தொலைவில் தூரத்தில் சூனியத்தில் அவளது பார்வை சிறிது நேரம் நிலைத்து நின்றது. நீண்ட ஒரு பெருமூச்சுக்குப் பிறகு “அப்பா எதற்காக இவர்களை எல்லாம் இந்த அகாலத்தில் போய் சிரமப்பட்டு அழைத்து வந்திருக்கிறீர்கள் நமது துன்பம் நம்மோடே இருக்கட்டுமே” என்று சோகம் கலந்த ஈன ஸ்வரத்தில் பேச முடியாமல் பேசினாள்.

“அம்மா ரேவதி அப்படியெல்லாம் எதுவும் சொல்லாதே. இதோ டாக்டர் வந்திருக்கிறார். உடனே ஏதாவது ஊசி போட்டுக் கொள். தாமதிக்காதே பேசவோ விவாதிக்கவோ இது நேரமில்லை” என்று துரிதப்படுத்தினார் முதலியார்.

“அப்பா என் வாழ்நாளிலேயே முதல் தடவையாகவும் கடைசி தடவையாகவும் உங்கள் வார்த்தையை இன்று மீறத்தான் போகிறேன். நான் மருந்து குடிக்கவும் முடியாது. ஊசி போட்டுக் கொள்ளவும் மாட்டேன். நான் வேண்டுமென்று விரும்பித்தானே மரணத்தை வரவழைத்துக் கொண்டேன். பின் எதற்கு இந்த சிகிச்சை எல்லாம்” என்று உறுதியோடு பேசினாள். அவள் முகத்திலே படர்ந்து இருந்த அந்த உறுதிப்பாட்டை யாராலும் மாற்ற முடியாது போல் தான் தோன்றியது.

ஆனால் அப்பொழுது முதலியார் போட்டாரே பார்க்கலாம் ஒரு அணுகுண்டை,”இதோ பார் ரேவதி நான் சொல்கிறபடி நீ உடனே வைத்தியம் செய்து கொள்ளவில்லை என்றால் நீ எந்த விஷயத்தை குடித்து இருக்கிறாயோ, அந்த விஷத்தில் இன்னும் ஒரு பொட்டலம் இதோ வைத்திருக்கிறேன். இதை இங்கேயே கலக்கி உன் முன்னிலையிலேயே நான் குடித்து விடுகிறேன். நான் மட்டும் சாக பயந்தவன் என்று நினைக்கிறாயா” என்று ஆத்திரத்துடன் கோபத்துடனும் பேசினார்.

ரேவதி அப்படியே அசந்து போனாள் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை கண்களிலே கண்ணீர் மல்க “சரி அப்பா! உங்கள் இஷ்டம் நான் ஊசி போட்டுக் கொள்ளத் தானே வேண்டும். இந்தாருங்கள் டாக்டர்” என்று தன் கையை டாக்டர் சந்திரனிடம் நீட்டினாள்.

சந்திரன் விரைவிலேயே ரேவதியை பரிசோதித்துப் பார்த்துவிட்டு வேதாச்சலம் முதலியார் வைத்திருந்த அந்த விஷப்பொடியையும் வாங்கிப் பார்த்தான். ”அடேயப்பா மிகக் கொடிய விஷயமாயிற்றே இது. இதை குடித்துவிட்டு இதுவரை பிழைத்து இருப்பதே ஆச்சரியம்தான். சரி இதற்கு சரியான மாற்று மருந்து கொடுக்க வேண்டும். வேறு மருந்து கொண்டு வருகிறேன்” என்று அவன் மேல்மாடிக்கு போக கிளம்பினான்.

அவனை ஊசி போடுவதற்கான மற்ற வேலைகளை கவனிக்க சொல்லிவிட்டு ஒரே தாவலில் நானே மாடிக்கு போய் அவன் குறிப்பிட்ட மருந்தை எடுத்து வந்து கொடுத்தேன். உடனே ஊசியை போட்டான் உள்ளே மருந்தும் கொடுத்தான் அந்த மருந்தையே இரண்டு மணிக்கு ஒரு தரம் கொடுக்கும்படி முதலியாரிடம் கலந்து கொடுத்துவிட்டு அவனும் நானும் அந்த அறையை விட்டு வெளியே வந்து ஹாலில் உட்கார்ந்தோம்.

ஆனால் இத்தனைக்கும் இடையில் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது முதலியார் தானே அந்த விஷயத்தை கலந்து தன் மகளுக்கு கொடுத்து விட்டதாக சொன்னார்.ஆனால் ரேவதியோ அவளே விரும்பித்தான் விஷத்தை குடித்து விட்டதாக கூறினாள். இதில் எது உண்மை இவர்கள் ஏன் இப்படி பேச வேண்டும் இதையெல்லாம் அறிந்து கொள்ளாமல் அங்கிருந்து போக எனக்கு இஷ்டமே இல்லை. என் நோக்கத்தை அறிந்து கொண்டவர் போல முதலியார் எங்களை உட்கார வைத்து அத்தனை விவரத்தையும் சொன்னார்.

நாங்கள் கேள்விப்பட்டிருந்த படி ரேவதிக்கும் ராகவன் என்ற அவளுடன் படித்த ஒரு வாலிபனுக்கும் காதல் ஏற்பட்டு இருந்தது உண்மை தான். ராகவன் ஒரு பெரிய சர்க்கார் உத்தியோகஸ்தரின் மகன். ராகவனும் ரேவதியும் மணம் செய்து கொள்வதற்கு இரு தரப்பிலும் சம்மதம் கிடைத்துவிட்டது கல்யாணத்திற்கு நாள் குறிப்பிட வேண்டியதுதான் பாக்கி. இந்த நிலையில் வேதாச்சலம் முதலியாரின் பூர்வாசரம் வாழ்க்கையை பற்றிய வரலாறு ஒன்று வெளியானது.

வேதாசல முதலியாரும் ஆரம்ப காலத்தில் சர்க்கார் உபயோகம் பார்த்தவர் தான் அப்பொழுது இவர் மீது லஞ்ச கேஸ் ஒன்று தொடரப்பட்டு அது நிரூபிக்கப்பட்டு விட்டது. அவர் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதுடன் சிறிது காலம் சிறையிலும் இருக்க வேண்டி இருந்தது அதற்கு பிறகு தான் முதலியார் தம் சொந்த ஊராகிய திருநெல்வேலி ஜில்லாவை விட்டு கிளம்பி சென்னைக்கு வந்தார். வந்த இடத்தில் கொஞ்ச நாட்களிலேயே பணம் சேர்ந்து விட்டது பெரிய மனிதராகவும் ஆகிவிட்டார் அந்த பழைய சம்பவம் அனேகமாக மறைந்து மறந்து போன விஷயமாகவே நினைத்து கொண்டு இருந்தார் முதலியார். அது திடீரென இந்த சமயத்தில் வந்து முளைத்தது.

ராகவனின் தந்தை இத்தகைய இடத்தில் சம்பந்தம் வைத்துக்கொள்ள இஷ்டப்படவில்லை தன் தந்தையின் பேச்சை தட்ட முடியாத ராகவன் அவர் குறிப்பிட்ட வேறு ஒரு பெண்ணையே மணந்து கொண்டான்.

முதலியார் மனம் உடைந்து போய் வீட்டிற்குள்ளே அடைந்து கிடந்தார். தம் மகளின் வாழ்விற்கு குந்தகம் ஏற்படுவதற்கு அவரே காரணமாகி விட்டார் மேலும் அவர் பழகிய வட்டாரங்களிலும் அவருக்கு இருந்த அந்தஸ்து குறைந்து விட்டது இதனாலெல்லாம் அதற்கு மேலும் உயிர் வாழ பிடிக்காமல் தன் உயிரை முடித்துக் கொள்ள முடிவு செய்துவிட்டார்.

அன்று இரவு எல்லோரும் படுத்த பிறகு முதலில் யார் தாம் என்று மகளுக்கு சுருக்கமாக ஒரு கடிதம் எழுதினார்.

“எனது அருமை மகள் ரேவதி, உன் வாழ்க்கையில் மாறாத துன்ப நிழல் படிவதற்கு காரணமாகி விட்ட எனக்கு இந்த உலகத்தின் முகத்திலே விழிக்கவே வெட்கமாய் இருக்கிறது. நானே பாலில் விஷத்தை கலந்து குடித்து விட்டேன். உன்னை யார் துணையும் இன்றி தனித்து விட்டு செல்கிறேன் என்பது ஒன்றே என் வருத்தம். நீ படித்தவள் பணம் இருக்கிறது எப்படியும் பிழைத்துக் கொள்வாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது உன் தந்தை”

கடிதத்தை மடித்துவிட்டு பாலிலே விஷத்தை கலக்கும் போது வீட்டு வெளி கதவை தட்டும் சத்தம் கேட்டது. அப்படியே டம்ளரை வைத்து விட்டு வெளியே வந்தார். வந்தவரை விசாரித்து அனுப்பி பின் மீண்டும் தம் அறைக்குள் வந்தார் முதலியார். ஆனால் ஆச்சரியம் பால் பாத்திரம் காலியாய் இருந்தது அவர் ரேவதிக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தின் கீழே வேறு என்னவோ எழுதி இருந்தது. அதை ரேவதியின் கையெழுத்து தான்.

“என்னால் ஏற்பட்ட துன்பத்தை என் உயிரைப் போக்கியே துடைத்துக் கொள்கிறேன். நீங்கள் விஷம் கலந்து வைத்திருந்த பாலை நானே குடித்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் - ரேவதி”

முதலியார் அறையை விட்டு வெளியே போன அதே நேரத்தில் கதவு தட்டிய சப்தம் கேட்டு ரேவதியும் எழுந்திருக்கிறாள். தன் தந்தையின் அறையில் விளக்கு எரிவதை பார்த்துவிட்டு அங்கே வந்திருக்கிறாள் பிறகு தான் அப்படி நடந்து கொண்டிருக்கிறாள்

அவ்வளவுதான்! முதலியார் அலறி அடித்துக் கொண்டு ரேவதி படுத்திருந்த அறைக்குள் ஓடி வந்து அவளை கட்டிக்கொண்டு கதறி இருக்கிறார் மேலே வந்து எங்களையும் அழைத்துப் போய் இருக்கிறார்.

இவ்வளவு விவரங்களையும் முதலியார் எங்களிடம் சொல்லிவிட்டு இதையெல்லாம் தயவு செய்து வெளியிலே யாரிடமும் சொல்லி விடாதீர்கள் என்று திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டார்.

மறுநாளும் சந்திரன் போய் ரேவதிக்கு மருந்து கொடுத்து விட்டு வந்தான். ஆபத்து குறைந்துவிட்டது என்றாலும் அவள் இன்னும் பலவீனமான நிலையிலேயே படுத்திருந்தாள்.

எனக்கு அன்று மாலையே வெளியூர் போகவேண்டிய அவசர வேலை இருந்ததால் நான் போய்விட்டேன் போன இடத்தில் பத்து நாட்களுக்கு மேல் தங்க வேண்டியது ஏற்பட்டு விட்டது தங்கிவிட்டேன். அங்கு இருக்கும்போது ரேவதி என்ன ஆனால் என்ற எண்ணம் ஏற்பட்டு கொண்டே தான் இருந்தது.

கடைசியில் நான் பயந்தபடி தான் நடந்து விட்டது. திடீரென எனக்கு ஒரு அவசர தந்தி வந்து இருந்தது. சந்திரன் தான் கொடுத்திருந்தான். “நிலைமை மிகவும் ஆபத்தாகி விட்டது உடனே புறப்பட்டு வா” என்று கொடுத்திருந்தான்.

என் வேலைகளை எல்லாம் அப்படியே போட்டுவிட்டு அவசரமாக அன்றே சென்னைக்கு ஓடி வந்தேன்.

நான் வீட்டை நெருங்கும் பொழுதே வாசலில் வேதாச்சலம் முதலியார் நின்று கொண்டிருந்தார். மனிதர் முகத்தில் ஈயாடவே இல்லை. என்னை கண்டதும் என்னுடன் பேச விரும்பாதவர் போல் உள்ளே போய்விட்டார்.

என்னவோ விபரீதம் நடந்து விட்டது என்று எனக்கு நிச்சயமாய் தெரிந்தது மாடிக்கு அவசரமாய் ஓடினேன் அங்கு டிஸ்பென்சரையும் கூட திறக்காமல் சந்திரன் அறையின் ஒரு மூலையில் இடிந்து போய் உட்கார்ந்து இருந்தான் என்னை கண்டதும் கொஞ்சம் தெம்பு ஏற்பட்டவன் போல் காணப்பட்டவன் எழுந்து வந்து “எவ்வளவு முயன்றும் முடியவில்லை மிக ஆபத்தான நிலைமையில் இருக்கிறாள்” என்றான்.

“உன்னால் முடியாது என்பதை முதலிலேயே சொல்லியிருந்தால் அவர்கள் வேறு டாக்டரை கொண்டு பார்த்திருப்பார்கள் அல்லவா” என்று கேட்டேன் என்னை அறியாமலேயே என் குரலில் கடுமை கலந்திருந்தது.

“அவள் மிகக் கொடிய விஷத்தை குடித்து விட்டாளே என்று நானும் சுத்தமான குழாய் தண்ணீரை மட்டுமே மருந்து,மருந்து என்று கொடுத்தேன் அப்படியும் குணமடையவில்லை நான் என்ன செய்வது” என்று சொல்லிவிட்டு சிரித்தான் சந்திரன்.

அவனுடைய பேச்சும் சிரிப்பும் அப்போதைய சந்தர்ப்பத்திற்கு பொருத்தம் இல்லாது இருக்கிறதே என்று சந்திரனை வெறித்துப் பார்த்தபடியே “நீ என்ன பேசுகிறாய்” என்று இன்னும் கோபமாக கேட்டேன்.

“அட நீ ஒரு பைத்தியக்காரன் அவள் விஷத்தை குடித்து இருந்தால் தானே நான் மருந்தை கொடுப்பதற்கு. அத்தனையும் பச்சை பொய், பகல் வேஷம் நான் பார்த்ததில் போய்விட்டது என்று நீ என் பிரார்த்தனை வாங்குகிறாயே. முதலில் இப்படி உட்கார் சொல்கிறேன்” என்று என் தோளை பிடித்து கீழே உட்கார வைத்துவிட்டு விவரமாய் சொன்னான் சந்திரன்.

அன்று நீ மருந்து எடுப்பதற்காக மாடிக்கு வந்துவிட்ட அதே சமயத்தில் கொஞ்சம் வெந்நீர் வேண்டுமென்று தன் தந்தையை அங்கிருந்து போக செய்து விட்டு ரேவதி என்னிடம் உண்மையை கூறிவிட்டாள். “டாக்டர் சார் நான் உண்மையில் விஷத்தை குடிக்கவில்லை. விஷம் கலந்த பால் இன்னும் இதோ இருக்கிறது இதை உங்கள் முன்னிலையிலே முதலில் கொட்டி விடுகிறேன்” என்று எழுந்து ஜன்னல் வழியாக வெளியே பாலை கொட்டி விட்டு வந்து மேலும் சொன்னாள், “நான் விஷத்தை குடிக்கவில்லை என்றாலும் என் தந்தையின் தற்போதைய மனநிலையை மாற்றி அவருடைய கவனத்தை வேறு வழியில் இழுப்பதற்காகவே, இப்படி நான் விஷத்தை குடித்துவிட்டதைப் போல் நடிக்கிறேன். நீங்களும் தயவுசெய்து டாக்டராக நடித்தால் மட்டும் போதும் எதுவும் மருந்து கொடுத்து என்னை கொன்று விடாதீர்கள். இந்த ரகசியம் தங்களுக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கட்டும்” என்று கெஞ்சி கேட்டுக் கொண்டாள் என்றான்.

“அடப்பாவிகளா நீங்கள் ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து அடித்த கூத்து தானா இது. ஊரையே பைத்தியமாக்கி விட்டீர்களே. அன்று அவள் விஷத்தை குடித்துவிட்டு சகா கிடக்கிறாளே, ஐயோ பாவம் என்று அவளுக்காக நான் எத்தனை வருத்தப்பட்டு விட்டேன்” என்றேன்.

சந்திரன் சொன்னான்,”அதற்கு ரேவதி என்ன சொல்கிறாள் தெரியுமா? அப்படி விஷத்தை குடித்துவிட்டு சாக என்ன அவசியம் ஏற்பட்டுவிட்டது வாழ்க்கை வாழ்வதற்கே என்றபடி சந்தோஷமாய் வாழ வாழ்க்கை பாதையை வகுத்துக் கொள்ள எனக்கு தெரியும். முடியும் என்றெல்லாம் அவள் தன்னம்பிக்கையோடு பேசுகிறாளே” என்றான்.

“ரேவதி யாரோ காதலித்ததால் அவன் கைவிட்டு விட்டான் என்பதற்காக மனம் உடைந்து போயிருக்கிறாள் என்பதெல்லாம் கூட நடிப்பு தானா.”

“அதுதான் அவள் சொல்கிறாளே, நான் அவரை விரும்பியது என்னவோ உண்மைதான். எங்களுக்குள் பரஸ்பரம் அன்பும் இருக்கத்தான் செய்தது ஆனால் என்றோ என் தந்தை செய்து விட்ட தவறுக்காக என்னை புறக்கணித்துவிட்ட அவரை காதலர் என்று எப்படி சொல்ல முடியும்? காதல் என்ற தெய்வீகமான பதத்திற்கு பொருள் தெரியாதவர்கள் தான் அப்படி நினைக்கக் கூடும்” என்கிறாள் என்றான்.

“அதெல்லாம் சரிதான் ரேவதி இதையெல்லாம் உன்னிடம் சொல்லி வேண்டிய அவசியம் என்ன வந்தது”

“ஒருவேளை காதல் என்ற தெய்வீகமான பதத்திற்கு பொருள் தெரிந்து கொள்வதற்காக இருக்கும்” என்று சொல்லி விட்டு அமர்த்தலாக சிரித்துக் கொண்டே “இந்த கடிதத்தை படி எல்லாம் தெரியும்” என்று என் கையில் ஒரு கடிதத்தை கொடுத்தான் அதை ரேவதி தான் எழுதியிருந்தாள்.

“அன்புள்ள டாக்டர், நம் நாடகம் ஒரு ஆபத்தான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தங்களுக்கு எச்சரிக்க விரும்புகிறேன் என் நாடியை பிடித்து பார்க்கிறேன் என்று என் தந்தை அருகில் இருப்பதையும் மறந்து, என் கையை பிடித்தபடியே கால் மணி அரை மணி என்று உட்கார்ந்து விடுகிறீர்களே.கையை விட்டு விடும்படி நான் சமிக்கை செய்தால் பிடி இன்னமும் இருகுகிறதே தவிர தளர்வதாக இல்லை. என் நாடி பிடித்து என் ரத்த ஓட்டத்தை அளந்து அறிவதை காட்டிலும் என் மன ஓட்டத்தை இதற்குள் நீங்கள் தெரிந்து புரிந்து கொண்டிருந்தால் அதுவே போதும்.என் அன்பிற்குரிய டாக்டர் அதுவே போதும்.”

“அன்று என் தந்தை கலந்து வைத்த விஷம் என் கைக்கு வந்த போது அப்படியே குடித்து உயிரைப் போக்கிக் கொள்ளலாமா என்ற அளவுக்கு என் மன குழப்பம் இருக்கத்தான் செய்தது. யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் என் தந்தை அங்கு வந்து விட்டார் பின்பு நீங்களும் வந்தீர்கள். உங்களைப் பார்த்த பிறகு விஷத்தை குடிக்காமல் இருந்தது எவ்வளவு நல்லதாய் போயிற்று என்ற எண்ணம் எப்படியோ என் உள்ளத்திலே எழுந்தது. அத்துடன் இன்னும் வாழ வேண்டும் என்று ஆசையும், வாழ முடியும், என்ற நம்பிக்கையும் கூட என் இதயத்திலே இடம் பெற்றன.”

உண்மையில் விஷத்தை குடிக்கவில்லை என்ற என் ரகசியத்தை உங்களிடம் மட்டும் டாக்டர் என்ற முறையில் இல்லை வேறு ஏதோ ஒரு காரணத்தால் சொன்னேன். நான் விஷத்தை குடிக்கவில்லை என்று சொன்ன மாத்திரத்தில் உங்கள் முகம் மலர்ந்ததைக் கண்டு அப்போதே என் மீது உங்களுக்கு அத்தனை அக்கறையும் அன்பும் ஏற்பட்டு இருக்கிறது என்பது தெரிந்து ஆனந்தம் எய்தினேன்.”

“அன்று நான் விஷத்தை குடிக்கவில்லை என்பது என்னவோ உண்மைதான் ஆனால் அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாய் பரவக்கூடியதும் மிக மிக பயங்கரமானதும் ஆபத்தும் ஆனதுமான ஒரு கொடிய விஷம் என் உடலிலே புகுந்து விட்டது. வைத்தியத்திற்கு என்று தாங்கள் வந்து என் கரம் பற்றிய அன்று தான் அப்பொழுது தான் அந்த விஷம் என் உடலிலே உள்ளத்திலே புகுந்து விட்டது. அது முதல் வினாடிக்கு வினாடி அதன் வேகம் வளர்ந்து வேதனையும் மிகுந்து கொண்டே வருகிறது.”

“இந்த தீராத நோயை தீர்த்துக் கொள்ள என் வாழ்நாள் எல்லாம் நிரந்தரமாய் உங்களிடமே வந்து உங்கள் கைப்படவே சிகிச்சை பெற்றுக் கொள்வதை தவிர வேறு வழியே இல்லை. அதற்கு விருப்பம் இருப்பின் ஆம் என்று சொல்லி நாம் நடிக்கும் இந்த நாடகத்தை முடித்து வையுங்கள் இல்லையேல் என்னையே முடித்து விடுங்கள் - ரேவதி”

கடிதத்தை படித்து முடித்துவிட்டு சந்திரனை பார்த்தேன். ரேவதியின் உடலுக்குள்ளே புகுந்திருக்கும் அந்த ஆபத்தான பயங்கரமான கொடிய விஷம் சந்திரன் உடலுக்குள்ளும் புகுந்து விட்டது என்பது அவன் நெற்றியில் எழுதி ஒட்டி இருந்தது. அவன் தந்தி கொடுத்து இருந்தபடி என் நிலைமையும் மிகவும் ஆபத்தாகி விட்டது என்பதை தெரிந்து கொண்டேன்.

அப்புறம் காரியங்கள் எல்லாம் மளமளவென நடந்தேறின. மறுநாளைக்கு மறுநாளே ரேவதி படுக்கையை உதறிவிட்டு எழுந்து உட்கார்ந்தாள். வேதாச்சலம் முதலியாரிடம் விஷயத்தை பிரஸ்தாபித்தேன் அவர் உடனே சம்மதித்து விட்டார் சந்திரனின் பெற்றோர்களின் சம்மதமும் கிடைத்தது.

மாதம் ஒன்று சென்று முதலியார் வீட்டிற்கு போனேன். சந்திரனும் ரேவதியும் குதூகலமாய் வரவேற்று அன்போடு பேசினார்கள். ரேவதி காபி கொண்டு வந்து வைத்தாள்.

“என்ன ரேவதி இந்த காபியில் விஷம் எதுவும் கலந்து விடவில்லையே பார்த்து விட்டாயா” என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.

“அப்படியே விஷத்தை குடித்து விட்டால் தான் என்ன? உங்கள் டாக்டர் நண்பர் பக்கத்திலேயே இருக்கிறார். குழாய் தண்ணீரும் வேறு வேண்டியது இருக்கிறது. அப்புறம் என்ன பயம்” என்று சொல்லிவிட்டு ரேவதி விழுந்து விழுந்து சிரித்தாள். நானும் சந்திரனும் சேர்ந்து சிரித்தோம்.

நல்ல நாடகம். நல்ல விஷம்.

link. விஷம்- ஆடியோ வடிவில். செண்பகச் சோலையின் ஓசை சித்திரம் - செவி கொடுங்கள் மனதை நிறைப்போம்

previous post

சதி

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!