Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு 30. பத்மாசினி

வகைகள் : தொடர்கள் / பத்மாசினி

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


தொடர்கள்

30. பத்மாசினி

 

திடியன் மலையடிவார சோலைக்கு வல்லபர் வரவுமே அவர் பொறுப்பில் பெருமாளை ஒப்படைத்து விட்டு பெண்கள் மூவரும் கிளம்பினர். வல்லபரோடு வானவனும், துரைராசுவும் மட்டுமே இருந்தனர். 

வல்லபர்,”அரசே, இனி தாங்கள் சிலையைத் தேடும் பணியைத் தொடர வேண்டாம்” எனவும் வானவருக்கு அதிர்ச்சி. 

“தேடாமல் எப்படிக் கண்டு பிடித்து பிரதிஷ்டை செய்ய முடியும் சுவாமி” என வினவ, 

“இங்கிருக்கும் பெருமாள் உங்கள் தேடலிலா கிடைத்தார்?” பதிலாகவும் வினாவை எழுப்ப,

“மருதமரம் மட்டுமே எங்கள் கண்ணில் தட்டுப்பட்டது. கண்டுபிடித்தது என் இளவல் தான்” என்றார். 

“அவர் மட்டுமாக கண்டுபிடிக்க இயலாது. அரசனும், அரசியும் வந்தால் மட்டுமே, பெருமாளும் தாயார் சமேதராக வெளிப்படுவார்” 

“விளக்கிச் சொல்லுங்கள் சுவாமி. எல்லாம் மாயமாக இருக்கிறது” வானவன் வேண்டுகோள் விடுக்க , நகை முகத்தோடே பத்மாசினி, திருமலை வாசன் பூர்வ ஜென்ம கதையைச் சொன்னார். 

“நான் சிறுவயசா இருக்கும் போது , ஒரு ராசாவும், ராணியும் இந்த காட்டுல உலாவுறதை  பார்த்துருக்கேன். கனவா , நினைவாண்டு தெரியலை. இவுக தானா” துரைராசு கேட்க, 

“இருக்கலாம். அவர்கள் இந்த பெருமாள் சிலைகளைக் காக்க, பிரதிஷ்டை செய்ய வரம் வாங்கி வந்தவர்கள். பூர்வ ஜென்மத்தில் அவர்களுக்கு உதவி செய்தவர்களும் சேர்ந்து பிறப்பெடுக்கும் பொழுது, பிரதிஷ்டை சாத்தியம். நம் எல்லோரும் பூர்வ ஜென்மம் முதலே, இதனோடு பிணைக்கப் பட்டவர்கள் தான்” என்ற வல்லபர், 

பத்மாசினி,திருமலை வாசன், கழுவன் குடும்பம் பற்றியும் சொல்ல, “இந்த சிலைகளை பிரதிஷ்டை செய்தது?” என யோசித்த வானவன், வேங்கடவன் மயங்கி இருந்ததையும், தங்கராசு தேவன் உடலில் பெருமாள் சிலையின் அச்சு இருந்ததை தாமினி குறிப்பிட்டுச் சொன்னதும் நினைவு வர, “வேங்கடவன், தங்கராசு தவிர பத்மாசினி யார்?”எனக் கேட்டார்.  

“உங்கள் அனுமானம் சரி. பூர்வ ஜென்மத்தில்திருமலை வாசராக இருந்தது உங்கள் இளவல்,  பத்மாசினியாக இருந்தவர், இந்த ஜென்மத்தில் பெரிய கழுவன் குடி, சிம்ம ராசு தேவன் மகள் செம்பதுமமாக அவதரித்து உள்ளார்” எனவும், 

“என் அண்ணன் மகள் பதுவா?” வியந்த துரை ராசு , “இருக்கும், இருக்கும் நாகமலை அடிவாரத்தில், சுருட்டு கருப்பனை வாலை சுருட்டி ஓட வைத்தவள் ஆச்சே” எனச் சிலாகித்தவர், “அம்மா, எங்க வம்சத்தில் பிறந்தது நாங்க செஞ்ச பாக்கியம்” என்றார். 

“எனக்குக் கருத்தில் வரவில்லையே” வானவன் கவலைப்பட, 

“உங்கள் இளவல் கருத்தில் பட்டு விட்டார். கவலை வேண்டாம்” எனப் பரிகசித்த வல்லபர்,  

“இங்குச் சிலைகளைப் பிரதிஷ்டை செய்தவர்கள் அவர்கள் தான்.” அந்த விவரமும் சொன்னார். 

“தம்புடு உங்களைப் பார்க்கக் கிளம்பி வந்தானே” வானவன் வினவ, 

“சந்தித்தோம், வாசவராகவே சந்தித்தேன். பெரிய கழுவன் குடி சென்றிருக்கிறார். தம் இணையை மனையாளாக்கிக் கொள்ள, அவர் பெற்றவரிடம் பெண் கேட்டு விட்டார்” 

“ஆத்தாடி, அண்ணன் ஆராய்ஞ்சுடுவாரே” துரைராசு அதிர்ந்தார். 

“ தெரியட்டும் கழுவரே. நான் நேரடியாகவே சென்று கூட தம்புடுக்காக பெண் கேட்கிறேன். என் குலத்தின் தாயை  நாங்கள் முறையாய் அழைத்துக் கொள்வோம் “ என்றவர் , “சிம்ம ராசு தேவர் என்ன சொன்னார்” எனக் கேட்க, 

“மாட்டை அடக்கி காட்டினால் , மகளைக் கல்யாணம் கட்டி வைப்பதாக, வாசவரையும் தன்னுடனே பெரிய கழுவன் குடிக்கு அழைத்துச் சென்று விட்டார்” என்றார். 

“அப்போ அண்ணன் ஒரு முடிவோட தான் இருக்கார்” என்ற துரை, அவர்களிடமிருந்து விடை பெற, மற்ற இருவருமாகப் பேசிக் கொண்டிருந்தனர். 

“சுவாமி, பெருமாள் சிலையோடு எங்கள் பரம்பரை பொக்கிஷமும் இருப்பதாகக் குறிப்பு இருந்ததே” என வானவன் அதனைப் பற்றிய விவரம் கேட்க  

“ வீர நரசிம்மயாதவராயராக  தாங்கள் அனுப்பி வைத்த பொக்கிஷம் தான். சிலைகள் கூடவே புதைத்து வைத்தோம். சமயம் வரும் பொழுது உங்கள் இளவல் அதன் விவரத்தைச் சொல்வார்” என்றார்.  

“இங்குத் தெய்வ காரியத்தை நிறைவேற்றி பொக்கிஷத்தின்  ஒரு பகுதியைக் கொடுத்து தகுந்தவர்களிடம் கோவில் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டால், மீதி உள்ள செல்வதை  வைத்து காஞ்சிக்கு வடக்கில் சிதறி உள்ள படைகளையும், மக்களையும் ஒன்று சேர்த்து நம் ராஜ்ஜியத்தை மீட்டு விடலாம்” வானவன் கணக்குப் போட, வல்லபர் சிரித்துக் கொண்டார். 

தனது இல்லத்துக்கு வந்த துரை ராசுக்கு ஒரே யோசனை. அவர் மனைவி செல்விக்கு  விஷயம் எதுவும் தெரியாது. ஆகவே தங்கை வள்ளியிடம் ஆலோசனை செய்தார். 

“இளவரசரை , அண்ணன் பெரிய குடிக்கு கூட்டிகிட்டு  போயிருக்காறாம்”  விவரம் சொன்னவர், “அண்ணன் , நம்மளைத் தப்பா நினைப்பாரா” கேட்க, 

“விஷயம் வெளியே வரும் போது பார்த்துக்கலாம் அண்ணன். இப்போவே வெசன படாதீங்க” எனத் தேற்றியவள், “பதுவை, தன் தம்பிக்குக் கல்யாணம் கட்டி வைக்கணுமுன்னு மதினி நினைச்சுகிட்டு இருக்கு. அதை மட்டும் சமாளிச்சுக்க” எனவும், 

“அவுக இளவரசியாம் ல, பத்மாசினி தாயி.எல்லாம் தெரிஞ்ச நம்மளே குறுக்கப் போகலாமா” துரை பயபக்தியோடு சொல்ல, 

“அது அண்ணன் மகள் தான்.இம்புட்டு பயப்பட அவசியமில்லை” என்றாள்.

“இது பயமில்லை ஆத்தா, மருவாதி. அம்புட்டு வைராக்கியமாக பொம்பளை, நம்ப வம்சத்தில் வந்து பிறந்திருக்கு இல்ல. நதி மூலம் தெரியுமுன்ன சரி,   உசந்ததுன்னு தெரிஞ்ச பிறகு, அதுக்கு தக்கண மருவாதி கொடுக்கணும்” 

“மருவாத குடுகுறோமுண்டு, எங்கப்பன் குத்துக்குள்ள இல்லையிண்ட மாதிரி உன் மகளைக் காட்டி குடுத்துறாதே” எனவும், அதுவும் சரிதான்என  தலையை ஆட்டிக் கொண்டார். 

திடியன் மலையடிவாரத்தில் கூடாரத்தில் தங்குவதை விட, காட்டு மாளிகை வசதி என அலமேலுவை அழைத்துக் கொண்டு, தாமினியும், சிவப்பியும் தங்கள் ஆட்களோடு  சென்று விட,  வானவனுக்கும் உணவு கொடுக்கும் பணி வள்ளியுடையது ஆகியது. 

பெரிய கழுவன் குடியில் சித்தபண்டூரிலிருந்து வந்து இறங்கிய சிங்க ராசு தேவன்,ஏதோ அசம்பாவிதம் உள்ளது எனகுடியிருப்பை  சோதனையிட  மகன்களுக்குக் கட்டளையிட அவர்களும் நாலாபுறமும் சென்று வந்தார்கள். 

பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்ததே தவிர வேறு ஆட்களைக் காணவில்லை. மீண்டும் மாருதம் தாக்கியதோ, வேறு ஏதேனும் அசம்பாவிதமோ பெரிய அப்பத்தா வெள்ளையம்மாளை  காண சாமி ஓட, அவர் சாவகாசமாக வெற்றிலையை உரலில் இடித்து, வாயில் அதக்கிக் கொண்டிருந்தார். 

“அப்பு, அப்பத்தா சாவகாசமா வெத்திலை இடிச்சுக்கிட்டு இருக்காக” எனக் குரல் கொடுக்க, சிங்கம் கீழே இறங்கி இருந்தான். 

அவர்கள் வந்த திசைக்கு மறு  புறம் இருந்து நான்கு பேர் , “ஆத்தா , எங்களை மன்னிச்சு விட்டுடு” என கத்திக் கொண்டே ஓடிக்கொண்டிருக்கக்  கையில் மாட்டை அடிக்கும் சாட்டையைக் கொண்டு குதிரையில் விரட்டிக் கொண்டிருந்தார் ராக்காயி. அவர் சென்ற வழி புயல் கடந்த தடமாக மர கிளைகள் ஒடிந்து, சாமான்கள் உருண்டு ரணகளமாகி இருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பயந்தே, கழுவன் குடி பெண்கள் அவரவர் வீட்டுக்குள் முடங்கி இருக்க, ஆண்கள் சிறுவர்கள் ராக்காயியை பின் தொடர முடியாமல் மூச்சு வாங்கி வந்தனர். 

அவர்கள் பின்னோடு தேட சென்ற வேங்கடவன் சிரித்த படி வர, மற்ற இரண்டு திசைகளிலும் சென்றிருந்த, தங்கமும், முத்துவும் ஆளுக்கு ஒருவனைத் தூக்கி வந்தனர். 

ராக்காயி விரட்டி வந்தவர்கள் சிங்கத்தைப் பார்க்கவும், “அய்யா சாமி எங்களை காப்பாத்துங்க” அவன் காலில் விழ , 

“டேய் எந்திரிச்சு ஒடுங்கடா” ராக்காயி கண்ணை உருட்டிக் கொண்டு மிரட்டிக் கொண்டிருந்தார். 

“அடியே கூறு கெட்டவளே. யாரு இவனுங்க” சிங்கம் கேட்க, பதில் சொல்லாமல் அதே முறைப்பு. 

“இந்தா மலை இறங்கு” எரிச்சலாக மொழிய, கோதை, “ஆத்தி, என்னத்தை பண்ணி வச்சிருக்குன்னு  தெரியலையே” என அக்காவிடம் செல்ல, 

சிங்கத்திடம் வந்த தாடகை, “ காரணம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டாங்க. அக்கா யார் இவுங்க” விசாரிக்க, செம்பதுமமும் இறங்கி இருந்தாள். 

“குரங்கு பயலுக. வேவு பார்க்க வந்திருக்கானுங்க. நொண்டி கருப்பன் ஆளுங்க. சிங்கம் காலை முடக்குனவனுங்க.” குதிரையின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து அதன் கால்களால்  கீழ் இருப்பவன்  நெஞ்சில் மிதிக்கப் போக, 

“அப்பு, எங்களை மன்னிச்சுக்கிடுங்க. உங்க கூட்டத்தில் சேரத் தான் வந்தோம்” எனக் கையெடுத்துக் கும்பிட, சிங்கம் கால்களைத் தூக்கிநிற்கும்  குதிரையின் கழுத்து பகுதியைத் தடவிக் கொடுத்து, “அடங்கு. நான் விசாரிச்சுக்குறேன்” எனவும், குதிரை அமைதியானது. 

“இவைங்களை  விசாரிங்கடா” கீழே கிடந்தவர்களைக் காட்டி சொல்ல, தங்கமும், முத்துவுமாக அள்ளி சென்றனர். 

குதிரைமேலிருந்தவள் சிங்கத்தை முறைத்தபடி இருக்க, கோதை பேச்சு அவள் அக்காளின் காதில் எட்டவில்லை. 

“இவனுங்களை பிடிக்கத் தான், ஊரையே இரண்டு பண்ணி வச்சியாடி” பேச்சியம்மாள் நொடிக்க,

“ஆத்தே அடை வச்சிருந்த கோழியை காணோம்” என வேலாயி மிஞ்சியதைத் தேடிச் செல்ல, சுற்று வட்ட கழுவன் குடி பெண்கள், பேச்சியிடம் மருமகள் ஆட்டத்தை அவலறியாமல் சொல்ல வந்தனர். 

ராக்கு இன்னமும் குதிரை மேல் அமர்ந்து முறைத்திருக்க, 

“அடியேய் மலை இறங்குண்டு சொன்னேன்ல” சிங்கம் மிரட்ட , பதில் முறைப்பு மட்டுமே. 

“அட கிறுக்கிக் கொல்ல போறேன் பாரு” விரலைக் காட்ட, 

“அவுக இறங்குவாக. ராசநடை நடக்கிற மாமன் இப்படி இருக்கியேண்டு விசனத்தில அவனுங்களை அடிச்சு துரத்தி இருக்காக. உன் மேல எம்புட்டு பிரியம் பாரு” தாடகை சொல்ல, “ம்க்கும்” கோதை நொடிக்க, சிங்கம் மீசையை முறுக்கிய படி சிரித்துக் கொண்டான். 

“ஆத்தா, இறங்கு” செம்பதுமமும், சாமியும் அழைக்க, “என் ராசா” என சாமியைக் கன்னம் வழித்துக் கொஞ்ச, விவரம் புரிந்தவர்கள் நமுட்டு சிரிப்பு சிரிக்க, “ஆத்தா, உன் ராசா அங்க நிக்கிறார், நான் இல்லை ” சாமி அவசரமாகச் சொன்னான். 

“அது சரி, அவன் சிங்கமுண்டா, என்னை யாருண்டு நினைச்சுகிட்டு இருக்கா?” இடுப்பில் கை வைத்து சிங்கம் கேட்க, 

“சிங்கத்துக்கு சீயாண்டு . உன் தாடியும், மீசையும்” என முனங்கி விட்டு தாடகை உள்ளே செல்ல, “அடியேய், வரவர எவளுக்கும் பயமில்லாமல் போச்சு. இதுக்காகவாவது பழைய நடை நடக்குறேன் பாரு ” என்ற படியே பெண்  சிங்கம் பின்  சென்றது ஆண் சிங்கம் . ராக்காயியை பார்த்த ரதி தேவி சத்தமின்றி தன் ஜாகைக்கு சென்று விட்டாள். 

ராக்காயியை இறக்கி, கோதை, செம்பதுமம், சாமி ஆகியோர் விவரம் கேட்க, “இரண்டு நாளா இங்குட்டே சுத்துனானுங்க. அது தான் நான் சுத்த விட்டேன்” என்றவள், செம்பதுமத்தை , “ வந்துட்டியா வா ஆத்தா” எனக் கொஞ்சியவர், வேங்கடவன் வணக்கம் சொல்லவும், “கும்புடுறேன் எசமான்” என்றவள், “உங்க மாளிகை தயாரா இருக்கு” எனக் கைப்பிடியாக அழைத்துச் சென்றாள்.  பத்மைக்கு கண் காட்டி விட்டு அவன் செல்ல, பதுமத்துக்கு இப்போதும் பயம் தான். மனதுக்குள் மனம் கவர்ந்தவனோடு சேரவேண்டும் எனக் குல தெய்வத்தை வேண்டிக் கொண்டிருந்தாள். 

வேங்கடவனை தன்  குடிலுக்கு அழைத்துச் சென்ற ராக்காயி, “உங்க பொருள்” எனப் பழங்காலத்து வாளையும், குறுங்கத்தி பாதுகை, தலைப்பாகை எனத் திருமலை வாசனுடையதைக் கொடுக்க, வாங்கி பார்த்தவன், 

“தங்கள் மகளை அழைத்து வாருங்கள் தாயே” என்றான். 

“ சாமத்துல பதுமம்  தேடி வரும். ஒரு திங்கள் இரண்டு பெரும் சேர்ந்து யார் கண்ணுலையும் பட்டுடாதீங்க. சந்திக்கிற நேரம் மந்திர கட்டு போட்டுடலாம். 

“ஆளுங்க உங்களைத் தேடித் தான் “திரியிறாங்க” என்றும் சொல்ல, 

“விஷயம் தெரிந்தால், அதற்கேற்ப முடிவெடுத்துக் கொள்வோம்” என்றான். 

கழுவன் குடி சீராகிக் கொண்டிருந்தது, “இரண்டு நாள் போயிட்டு வர்றதுக்குள்ள, இவ ஆடுற ஆட்டம் தாங்க முடியலை”பேச்சி புலம்ப, 

“ஒத்தை மனுசியா நிண்டு, இத்தனை பயலுகளை ஆட்டி வச்சிருக்கு, அதுக்கு மெச்சிக்குவியா” கருத்தையா மருமகள் பக்கம் பேச, 

“கூழன் கிட்டச் சொல்லியிருந்தாலும் போதும். இவை ராஜ்ஜியம் தனி தான்.சித்தினி நாயக்கரையும் கூட்டிகிட்டு போயிட்டா” சந்தனக்காப்பு வச்ச பெயரே, கழுவன்  குடும்பத்தில் வேங்கடவன்  பட்ட பெயரானது. 

சிங்கராசு தேவன், சயனத்தில் சாய்ந்தபடி கையை தலைக்குப் பின்னால் கட்டி கண்ணை மூடி யோசித்திருக்க, வட்டில் தேங்காய் எண்ணெய்யை எடுத்து வந்த தாடகை  அவனருகில் வந்து அமர்ந்து, “என்ன யோசனை” என்றபடியே அவன் சிகையைக் கோதினாள். 

சட்டென அவள் கை பிடித்து இழுத்தவன், “இந்த தாடிக்கும்,மீசைக்கும் என்னடி. அம்புட்டு கிழவனாவ தெரியுறேன்” அவள் முகத்தில் தேய்க்க, 

“ம்ப்ச், கிழட்டுச் சிங்கம்,  இதைத் தான் யோசிச்சுகிட்டு  இருந்தியா”அவன் முகத்தைத் தள்ளி விட்டு, சிகையை முரட்டுத் தனமாகப் பற்றிய தாடகை கேட்க, 

“அடியேய், கிழட்டுச் சிங்கமுண்டா சொன்ன” என்றவன், அவள் மீது பாய்ந்து தன் வேகத்தை அவளிடம் காட்ட, தாடியும், மீசையும் தாடகையின் மேனியெங்கும் தண்டனையைக் கொடுத்தது. 

அவளும் அடங்குபவளா என்ன, சிங்கத்தை ஆட்டி படைப்பவள் ஆயிற்றே,  ராக்குவின் நினைப்பை வைத்தே, சிரிப்பு பொங்கியது. அதை ரசித்தவன், அந்த அதரத்துக்கும் பலமான தண்டனையை வழக்க, “ம்ம்”மனையாள் அவன் குடுமியைப் பிடித்திருந்தாள். 

“இதுக்கே, நாளைக்கு செறைக்கணும்டி” என்றவன், வன்மையாய் அவளைப் பாடாய்ப் படுத்தியே  ஓய்ந்தான். 

புயலுக்குப் பின் அமைதி போல், சமத்தாகச்  சிகையை அவளிடம்  ஒப்படைக்க, துளி, துளியாய் எண்ணெய்யைக் கையில் தொட்டு அவன் சிகைக்குள் செலுத்தி, தலைக்கு அழுத்தம் கொடுத்து, மன அழுத்தத்தைப் போக்க முயன்றாள் தாடகை. அவனின் வேகத்தை வைத்தே, சிந்தனை ஓட்டத்தையும் கணித்து விடுவாள்.

“எத்தனை நாளுக்குடி இப்படி, என் கோட்டையிலே எவனவனோ வர்றான். என்னென்னமோ நடக்குது. நேரா காணாமல் எந்த முடிவுக்கும் வர முடியலை” புலம்ப, அவன் மன உளைச்சலை அறிந்தவளாக, 

“மத்தவுகளையும் நம்பு. உன் தம்பியோ, தங்கமோ,முத்துவோ உனக்கு விரோதமா எதுவும் செய்ய மாட்டாங்க” எனத் தேற்றினாள். 

“அவனுங்களை சொல்லலைடி. ஆணை படுத்தா குதிரை மட்டம். இந்தா பத்து பேருக்கு உள்ள வர தகிரியம் வந்துடுச்சு பாரு” 

“அதைச் சரி பண்ண என்ன  என்ன செய்யலாமுண்டு யோசி ” மதியூக மந்திரியாகி தாடகை சில யோசனைகள்  சொல்ல, சிங்கமும் யோசிக்க ஆரம்பித்தான். 

ராக்காயி போட்ட மந்திர கட்டு, மூன்றாம் சாமத்தில் செம்பதுமத்தை, பத்மாசினியாக வாசவர் நோக்கி அழைத்து  வந்தது.வேங்கடவன் ராக்காயி வீட்டு திண்ணையில் கட்டாந்தரையில் படுத்திருக்க, பத்மைக்கு பார்க்கப்  பொறுக்கவில்லை.

மெல்ல அவன் தலைமாட்டில் வந்தமர்ந்து  அவன் கைக்குப் பதிலாக  தன் மடியைக் கொடுக்க, சௌகரியமாக படுத்துக் கொண்டவன், “பத்மை” என அவள் இடுப்பைச் சுற்றி வளைக்க, “ம்ம்” என எச்சரித்தாள்.  அண்ணாந்து  அவள் முகத்தைப் பார்க்க, அவளின் குனிந்த முகம் பேரழகாய் தெரிய, “பத்மை” தன்னை மறந்து அவள் கழுத்தை வளைத்து, முத்தமிட்டுக் கொண்டான்.

“வாசவரே,தெய்வ காரியம். சுத்தம் முக்கியம்” என்று சொல்ல, எழுந்து  அமர்ந்தவர், “நீ தாங்கி இருக்கும் உடல் கன்னிப்பெண்ணுக்குரியது என்பதை மறந்தவனல்ல” என முகம் திருப்ப, 

“ கோபமா” வாசவரை நெருங்கி அவர் தோளில் சாய, “தெய்வ காரியம் . சுத்தம் முக்கியம்.இடைவெளி விட்டு உட்கார் பத்மை” வேண்டுமென்றே  கடுமை காட்டினார். 

“அப்படியே ஆகட்டும்” என அவன் முன் வந்து அமர்ந்தவள், நேருக்கு நேர் முகம் பார்க்கக் கோபமெல்லாம் பறந்தது “பிரமிப்பாக உள்ளது வாசவரே” என்று சொல்ல. 

“ஆம் தேவி, உன் தவத்தின் பயன். பெருமாளைச் சேவித்து வந்து விடுவோமா?” எனக் கேட்க, “வாருங்கள்” என வாசி மலையை நோக்கிச் சென்றனர். 

மருத மரத்தடியில் நின்று சில மந்திரங்களைச் சொல்லி வழிபட்டனர். இருபத்தி ஒரு நாட்கள் வழிபட்டு, மண்ணில் இருப்பவரை வெளிக்கொணர உத்தேசித்தனர். 

 அடுத்த நாள் சிங்கம் தலைமையில் வாள் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. தங்கத்தின் ஏற்பாட்டின் படி, பதுமம்  பெண் பிள்ளைகளுக்கும் கம்பு சுற்றவும், வேல் வீசவும் பழக்கி விட்டுக் கொண்டிருக்க , சிங்கம் கர்வமாகப் பார்த்துக்  கொண்டிருந்தான்.  ஆடல் பாடலை விட, இது போன்ற வீர விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். அதனாலேயே தனக்கு ஈடு கொடுக்கும் தாடகை மேல் அவ்வளவு பிரியம்.

“ஏன் அப்பு. கால காலத்தில் கல்யாணம் கட்டிக் கொடுக்க வேண்டிய பொட்ட பிள்ளைகளுக்கு , கம்பு சுத்த சொல்லி கொடுக்குறியே , இதெல்லாம் நல்லவா இருக்கு. செல்லம்மாவை பரிசம் போட வர சொல்லலாம்ல “ பேச்சி மெல்ல பேச்செடுத்தார். 

“என்ன ஆத்தா சொல்ற, வேல்கம்பு தான் பொட்ட பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு .மாயன் குடும்பத்துக்கும் சொல்லி விடத் தான் போறேன். மாட்டை அடக்குறவனுக்கு தான், என் மகள்.  எந்த மாற்றமும் இல்லை” என்று விட மகனிடம் அடுத்துப் பேச முடியாது என அறிந்து கொண்டவர், மருமகளிடம் சென்றார். 

“இது என்னடி காலக்கொடுமையா இருக்கு. நாயக்கருக்குத் தான் பதுவு கட்டி குடுக்குறதுண்டு புருசனும்  பொண்டாட்டியும் முடிவோட இருக்கீங்களா.” வினவ, 

“உங்க மகன் இரண்டு வருஷமா காளையை வளர்த்து வர்றாரு. அதை அடக்குற வீரன் யாருண்டு பார்க்க வேண்டாமா. என் மகளும் வீரத்தில் குறைஞ்சவ இல்லையே” தாடகை பெருமையாகச் சொல்ல, 

“ பொண்ணை கட்டி குடுத்துருக்கோமே, அந்த குடும்பத்துக்கு என்ன பதில் சொல்ல” வேலாயி மகளையும் , நாத்தனார் குடும்பத்தையும்  நினைத்துக் கேட்டார். 

“அவுக மகனும் கலந்துக்கட்டும் அக்கா” எனத் தாடகையே முன்னைக்கு மகளின் வீரத்தைப்  பார்க்கவும் மனம் மாறி இருந்தாள் . 

கோதை,“பதுமம், இல்லையிண்டா பவளம், சித்திரை, குமுதமுண்டு பொண்ணுங்களுக்கா பஞ்சம். மதினியை சமாளிச்சுக்கலாம். நீங்க விசனப் படாமல் இருங்க” என்றாள் . 

வேலாயி வீரன் மகள் பூங்குயிலுக்கு பிரசவக்காலம் நெருங்க , தாயின் மனம் அடித்துக் கொண்டது. “ஏதாவது  சாக்கு வச்சாவது மகளை இங்கு அழைத்துக் கொள்ள வேலாயி திட்டமிட்டார். 

 ரங்கராசு தேவனும், தங்கமும் கழுவன் குடியில் பிடி பட்டவர்களைத் தனி இடத்துக்குக் கூட்டிச் சென்று விசாரித்தனர். ஒற்றர்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் பாசறையில் வைப்பதும் ஆபத்து. கூறிய மூளையை உபயோகித்துத் தப்பி விடுவார்கள் அதனாலேயே , தனித் தனி இடத்தில் வைத்து விசாரித்தனர். 

பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்த பின்னும் , “சுருட்டு கருப்பன் எசமான், உங்க எசமானோட சமாதானமா போக ஆசை  படுறாரு. நம்ம  சேர்ந்து நிண்டமுண்டா, பாளையகாரவுகளே ஒதுங்கித் தான் போகணும். நம்பச் சேர்ந்து மறவர் பாளையமா நிண்டுக்கலாம்  ” என்ற செய்தியையும் சொல்லி விட, 

சிங்கமும் “வர சொல்லு பார்க்கலாம்”  என்றிருந்தான். 

 

2 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!