உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
கற்பகத்தின் கண்ணீர்
விநாயகத்தின் மகள் வத்சலாவிற்கு அன்று திருமணம். பெரிய இடத்து கல்யாணம் என்றால் கேட்க வேண்டுமா? வாசலிலே அலங்காரமான பெரிய பந்தல், வகை வகையான கச்சேரிகள், மேளங்கள். வருவோரும் போவோருமாக ஜே ஜே என்று இருந்தது.
கல்யாண வீட்டை நோக்கி அழகிய பெரிய கார் ஒன்று வந்தது.வந்த கார் வாசல் புறமாக வராமல், வீட்டின் பின்புறத்தில் போய் நின்றது. ஏதோ வழி தெரியாமல் அப்படி போயிருக்க கூடும் என்று காருக்குள்ளே இருந்தவர்களின் முகபாவத்திலிருந்து தெரியவில்லை.அங்கு வந்ததை அதிகம் காட்டிக்கொள்ள விரும்பாதவர்கள் போல ஒருவித தயக்கம் அவர்களிடம் தென்பட்டது.
காருக்குள்ளே டிரைவரை தவிர சுமார் முப்பது, முப்பத்தைந்து வயது மதிப்பிடக்கூடிய ஒரு பெண்மணி மட்டும் இருந்தாள். அவள் உடம்பிலே காய்த்து தொங்கிய வைர நகைகளே அவள் ஒரு பெரிய இடத்தை சேர்ந்தவள் தான் என்பதை காட்டின. அந்த சீமாட்டி அங்கு நின்ற ஒரு வேலைக்காரியிடம் ஏதோ ரகசியமாய் சொன்னாள். சிறிது நேரத்தில் மணப்பெண் வத்சலாவே மணப்பெண் கோலத்துடனே அங்கு வந்துவிட்டாள்.
வந்தவள் காருக்குள்ளே பார்த்து “வாருங்கள் அத்தை” என்று அன்பும் ஆர்வமும் கலந்த குரலில் கூறிக்கொண்டே காருக்குள் ஏறி அந்த அம்மாவை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டாள். அத்தை என்று அழைக்கப்பட்ட அந்த பெண்மணி வத்சலாவை ஏதோ குழந்தையை தூக்குவதைப் போல் தூக்கி கட்டி அணைத்து கரை காணாத காதலுடன் முத்தமழைகளை பொழிந்து மூச்சு திணறடித்தாள்.
என்ன காரணத்தினாலோ இருவருடைய கண்களில் இருந்தும் கண்ணீர் ஏககாலத்தில் குபுகுபு என்று கொட்ட ஆரம்பித்தது அடக்கினார்கள் அடக்கினார்கள் அடக்க முடியவில்லை. ஆறாக வெள்ளமாக பெருகி ஓடியது உணர்ச்சி மிகுதியினால் இரண்டு பேருமே எதுவும் பேச முடியவில்லை பேச ஆரம்பித்தால் அழுகையாக மாறிவிடுமோ என்றே பேசாமல் இருந்தார்கள் இருவரும். இப்படி சிறிது நேரம் சென்ற பின் அந்த அம்மாள் தான் கொண்டு வந்திருந்த ஒரு சிறு வெல்வெட் பெட்டியை திறந்தாள் அதிலே சுமார் 10 பவுனில் செய்யப்பட்ட தங்கச் சங்கிலி ஒன்று பளபளத்தது அதை வத்சலாவின் கையிலே கொடுத்து “வத்சலா, இதை என் நான் அன்பின் அடையாளமாக வைத்துக்கொள்” என்று தழுதழுத்த குரலில் கூறினாள்.
இதே சமயத்தில் வீட்டிற்குள் ஏதோ வைதீகர் சடங்கு செய்ய மணப்பெண்ணை கூப்பிட்டார்கள் “பெண் எங்கே? எங்கே?” என்று பேச்சு கிளம்பியது. பெண்ணின் தந்தை விநாயகமே தேடிக் கொண்டு எப்படியோ வீட்டுக்கு பின்புறமே வந்துவிட்டார். காருக்குள் அவர் கண்ட காட்சி அவரை அப்படியே ஸ்தம்பிக்க வைத்து விட்டது. கோபத்தின் மிகுதியில் அவருடைய புருவங்கள் மேலேறின. “யார் அங்கே?” என்று அவருடைய குரல் வத்சலாவையும் அந்தப் பெண்மணியையும் திடுக்கிடச் செய்தது. இருவரும் அவசரமாக காரை விட்டு இறங்கினார்கள்.
“வத்சலா உள்ளே போ” என்ற விநாயகத்தின் குரல் நெருப்புப் பொறி சிந்தியது போல் இருந்தது. வத்சலா பயந்துக் கொண்டே உள்ளே நழுவினாள்.
“அது என்ன பெட்டி? இப்படி கொடு” என்று இன்னும் ஒரு அதட்டலோடு வத்சலாவின் கையில் இருந்த நகை பெட்டியை பிடுங்கினார் விநாயகம். தன் தந்தை இவ்வளவு கடுமையாக என்றும் தன்னுடன் பேசியதை அறியாத வத்சலா கண்ணை கசக்கி கொண்டே உள்ளே போனாள்.
விநாயகத்தின் பார்வை இப்பொழுது அந்த பெண்மணி மீது திரும்பியது அவள் ஏதோ கொலை குற்றம் செய்து விட்டு விநாயகத்தை ஏறிட்டு பார்க்க கூட பயந்து தலையை குனிந்து கொண்டு நின்றாள் இவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் உள்ள அவள் விநாயகத்தை கண்டு ஏன் இப்படி நடுங்க வேண்டும்? அப்படி என்ன தவறு செய்துவிட்டாள் அவள்?
மிதமிஞ்சிப் போன தன் கோபத்தை அடக்கி கொண்டு விநாயகம் பேசினார். “கற்பகம் ஏன் நீ இங்கு வந்தாய் நான் தான் உன்னை அன்றோடு மறந்து விட்டேனே உன்னால் எனக்கு ஏற்பட்ட களங்கத்தையும் காலம் விழுங்கி விட்டது என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த மாசு இன்னும் மறைந்துவிடவில்லை இதோ இருக்கிறேன் என்று காட்ட வந்தாய் போல்,இன்று இந்த சந்தர்ப்பத்தில் இங்கு வந்து என் மானத்தை வாங்குகிறாயே”
கற்பகம் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினாள், “அண்ணா தாங்கள் என்னை விரும்ப மாட்டீர்கள் விஷமென வெறுத்து தள்ளி விடுவீர்கள் என்று தெரிந்தும் தான் அண்ணா வந்தேன். எனக்கு எத்தனை அவமானம் கிடைப்பதாயிருந்தாலும் ஏற்றுக் கொள்ள துணிந்து தான் அண்ணா வந்திருக்கிறேன்.”
“கற்பகம் நான் நினைத்தபடி நடந்திருந்தால், நான் ஏன் உன்னை வெறுத்து தள்ளுகிறேன். வேண்டாம் என்று நினைக்கிறேன் இன்று இங்கு வந்திருக்கும் அத்தனை பேரையும் விட உனக்கும் உன் கணவனுக்கும் முதலிடம் கொடுத்திருக்க மாட்டேனா! இப்பொழுது கொல்லை புறத்தில் வந்து நீ ஒரு குற்றவாளியை போல் நிற்க வேண்டியதில்லையே. என் வாசல் புறமே உன்னை வரவேற்று இருக்கும். சரி இனி அதையெல்லாம் பேசி பிரயோஜனமும் இல்லை பேச இது நேரமும் இல்லை.நீ போய் விடு கற்பகம் போய் விடு“ என்று விநாயகம் துரிதப்படுத்தினார்.
“அண்ணா வத்சலாவின் மீது நான் வைத்திருந்த அன்பும் வாத்சல்யமும் எத்தகையது என்பதை தாங்கள் அறியாததில்லையே ஏன் நான் ஒரு காலத்தில் உன் மீது உடன்பிறந்தவன் என என் உயிரையே வைத்திருக்கவில்லையா? எந்த காரணத்தை கொண்டாவது இந்த பரிசை வத்சலாவிற்காக ஏற்றுக்கொள்ளுங்கள் அண்ணா” என்று அவள் கெஞ்சினாள்.
அடங்கிக் கிடந்த விநாயகத்தின் கோபம் அத்து மீறியது, ”கற்பகம் இனி உனக்கு பட்டவர்த்தனமாய் சொன்னால் தான் புரியும் போலிருக்கிறது! பாவக்கறை படிந்த பணத்தினால் வாங்கிய அந்த பரிசை நான் ஒருநாளும் ஏற்றுக்கொள்ளவே முடியாது! நீயே வைத்துக்கொள்” என்று விநாயகம் அந்த நகைப்பெட்டி ஆத்திரமாக காருக்குள் வீசி எறிந்தார்.
கற்பகத்தின் குரல் கம்மியது, “அண்ணா…’
“அப்படி அண்ணா என்று என்னை அழைக்க வேண்டாம் என்று முன்னமே சொல்லி இருக்கிறேன். மேலும் ஏதேதோ பேசி என் கோபத்தை கிளறாதே கோபம் மிகுதியானால் நான் மனிதன் அல்ல மிருகம்! என்ன செய்வேன் என்பது எனக்கே தெரியாது. இனி எதுவும் உன்னுடன் பேச நான் தயராய் இல்லை. நீ போய்விடு கற்பகம், இங்கே நில்லாதே!” என்று ஆவேசமாக பேசினார் விநாயகம்.
கற்பகத்தின் கண்கள் நீரை தாரைத் தாரையாக கொட்டின. அப்படியே தலை குனிந்தவளாய் காரில் ஏறிக் கொண்டாள் கார் போய்விட்டது.
விநாயகம் இதுவரை மனதை கல்லாக்கி கொண்டு தான் பேசினார். ஆனால் கற்பகத்தின் கண்களிலே வடிந்த அந்த நீர் பெருக்கு அவரையும் நிலைகுலையச் செய்தது. அவர் கண்களிலும் நீர் கசிய ஆரம்பித்தது கண்ணீரை துடைத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார் விநாயகம் அவருடைய நினைவு பதினைந்து வருஷங்களுக்கு முன் நடந்த அந்த சில சம்பவங்களுக்கு தாவியது.
அம்மையநாயக்கனூர் ஆலாலசுந்தரம் பிள்ளை என்றால் அந்த வட்டாரத்திற்கே பெரிய மனிதர். ஏராளமான நில புலன்களும் தோட்டம் துறவுகளும் உடையவர். அவ்வளவு சுகபோகத்தையும் விட்டுவிட்டு விடை பெற்றுக் கொள்ளும் நிலையிலே மரணப் படுக்கையிலே கிடந்தார். அவருடைய மகன் விநாயகம் கண்கலங்கியவராய் பக்கத்திலே நின்றார்.
ஆலாலசுந்தரம் பிள்ளையின் ஆவி இன்னும் பிரியவில்லை கடைசியாக எதையோ மகனிடம் சொல்ல நினைக்கிறார். அதை சொல்லத்தான் அவர் ஆவியின்னும் உடலிலே ஒட்டிக்கொண்டு இருப்பதை போல் தோன்றியது. சொல்வதற்கு நாவு எழும்பவில்லை தம் தலையணை பக்கம் கையை காட்டினார். குறிப்பை அறிந்த விநாயகம் தலையணைக்குள் கையை விட்டுப் பார்த்தார் அதற்குள் ஒரு கடிதம் இருந்தது. ஆனால் சுந்தரம் பிள்ளைகளாலே எழுதப்பட்டிருந்த அந்த கடிதம் வருமாறு
“என் அன்பிற்குரிய அருமை மகன் விநாயகத்திற்கு,
உனக்கு இத்தனை பெரிய சொத்தையும் செல்வத்தையும் வைத்துவிட்டு போகும் நான் ஒரு கசப்பான கடமையை நிறைவேற்றும் படியான ஒரு கஷ்டமான பொறுப்பையும் உன் மீது சுமத்தி விட்டுப் போகிறேன். “இதை செய்” என்றால் செய்து விடக் கூடிய உத்தமபுத்திரன் ஆகிய உன்னிடத்திலும் விஷயத்தின் வேறுபாட்டை உத்திசித்து என் விருப்பத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.
“நம் தந்தை கௌரவமும் கண்ணியமும் மிக்கவர். ஒழுங்கான வாழ்க்கை நெறி என்றும் ஒருபொழுதும் பிறழாதவர் என்றெல்லாம் என்னை பற்றி நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன். ஆனாலும் நானும் வாழ்க்கையில் தவறு செய்தவன் தான். இனி சுற்றி வளைத்து பேசுவானேன் உனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். ஆனால் அவள் ஒரு தாசியின் மகள் மதுரையிலே மாசி வீதியிலே தாயுடன் வசிக்கிறாள்.
உன் தங்கை கற்பகம் சேற்றிலே முளைத்துவிட்ட செந்தாமரை அந்த மென்மலரை அதைச் சுற்றிலும் உள்ள சேற்றிலே மீண்டும் விழுந்து விட விட்டு விடாதே. வாழ்க்கையில் இதுவரை துன்பத்தின் நிழல் கூட அவள் மீது படிய விடாமல் நான் கவனித்து வந்துவிட்டேன். அவளும் வளர்ந்து விட்டாள் இனி அண்ணாவாகிய உன்னுடைய அன்பிலும் அரவணைப்பிலும் தான் உலகமறியாத அந்த பேதைப் பெண் கொடி வளர வேண்டும். எனக்கு பின் எந்த காரணத்தினாலும் எந்த சந்தர்ப்பத்திலும் அவள் கவலையடைதல் கூடாது. அவள் கண்களிலே என்றும் நீர் வடிய விட்டு விடாதே. இப்படி என் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உன்னிடம் இருந்து வாக்குறுதி கிடைத்தால் தான் நான் நிம்மதியாக என் கண்களை மூட முடியும். மனப்பூர்வமாக வாக்குறுதி தருவாயா? உன் அருமை தந்தை”
கடிதத்தை படித்து முடித்த விநாயகர் தன் தந்தையின் மெலிந்த கரத்தை மெதுவாக எடுத்து அதன் மேலே தன் கையை வைத்து உறுதி கொடுத்தார் ஆலாலசுந்தரம் பிள்ளையின் முகத்திலே இதுவரை இருண்டு படிந்திருந்த சஞ்சல ரேகைகள் விலகின சாந்தம் தவழ்ந்தது அப்படியே தன் மகனின் கையை மார்போடு அணைத்து கொண்டே கண்களை மூடினார் அவர்.
விநாயகம் தன் தந்தையின் அந்திமச் சடங்குகளை முடித்துவிட்டு முதல் வேலையாக மதுரைக்குப் போனார். குறிப்பிட்ட விலாசத்தில் கற்பகத்தையும் அவள் தாயையும் கண்டார். கற்பகம் ஆலாலசுந்தரம் பிள்ளையின் உருவ சாயலை அப்படியே கொண்டிருந்ததோடு இளமையும் எழிலும் பூரித்து பொங்கும் லாவண்யம் மிக்கவளாய் இருந்தாள். விநாயகத்தை அண்ணா! அண்ணா! என்று அருமையோடு அழைப்பதும் சதாநேரமும் அவரிடத்தில் வந்து ஏதாவது கொஞ்சி கொஞ்சிப் பேசி கேள்விகள் கேட்பதும் விநாயகத்திற்கு ரொம்பவும் பிடித்து விட்டது. சகோதரியின் பாசம் இத்தகையது என்பதை இதுவரை அறியாத விநாயகத்தின் உள்ளத்திலே ஒரு புதுவித அன்பு ஊற்றெடுத்தது.
அவளை தன்னுடனே அழைத்துப் போகவும் விநாயகம் விருப்பம் கொண்டார் அப்பொழுது தான் தாய் வந்து குறிப்பிட்டாள். “அப்பா, மகனே! உன் சகோதரி எப்படியும் உன்னிடத்தில் வந்து இருக்க வேண்டியவள் தான் இந்த உலகத்திலேயே அவளுக்கு உற்றார் உறவினரும் உன்னைத் தவிர வேறு யாரு இருக்கிறார்கள்? இருந்தாலும் இப்பொழுதே அவளை விட்டு பிரிந்திருக்க எனக்கு மனக்கஷ்டமாய் இருக்கிறது. நானும் வந்து உங்கள் வீட்டில் இருப்பது என்பது இயலாத காரியம் உங்கள் குடும்பத்தின் கௌரவமும் கண்ணியமும் எவ்வளவு உயர்ந்த நிலையில் உள்ளது என்பதை நானும் அறிவேன். எப்படி இருந்தாலும் நான் ஒரு தாசி அங்கு வந்து இருப்பது அவ்வளவு உசிதமாகாது. யோசித்துக் கொள் விநாயகம்” என்று இதமாக பேசினாள்.
விநாயகத்திற்கும் அவள் சொன்னது பொருத்தமாக தான் பட்டது ஆகவே கற்பகத்தை அவள் தாயிடம் தற்காலிகமாக விட்டு வைத்தார்.
ஆனாலும் அடிக்கடி மதுரைக்கு வந்து விநாயகம் அவர்கள் நலங்களை கவனித்துக் கொள்வதுடன் வேண்டிய பண உதவியும் செய்து வந்தார். அப்படி வரும் பொழுதெல்லாம் தன்மகள் ஐந்து வயது குழந்தை வத்சலாவையும் உடன் அழைத்து வருவார்.அப்பொழுதுதான் வத்சலாவும் கற்பகமும் அவ்வளவு அன்யோன்யமாக பழகிக் கொண்டார்கள்.
வழக்கம்போல் ஒரு நாள் விநாயகம் அந்த வீட்டிற்கு போனபோது ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் அவருக்கு காத்திருந்தது கதவு அடைத்து அதில் ஒரு பெரிய பூட்டாக போட்டு பூட்டி இருந்தது.
அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அங்கிருந்து அவர்கள் கிளம்பி போய் பத்து தினங்களாகி விட்டன என்று தெரிய வந்தது. ஆனால் எங்கே போனார்கள் என்ன ஆனார்கள் என்ற விவரம் எதுவும் தெரிய வில்லை.
இன்னும் சில நாட்கள் தீர விசாரித்ததில் சென்னையில் இருக்கிறார் என்ற புலன் கிடைத்தது. விநாயகம் சென்னைக்கும் சென்றார். தேடி அலைந்து கற்பகமும் அவள் தாயும் இருந்த இடத்தையே கண்டுபிடித்து விட்டார், ஆனால் அவர்கள் இப்பொழுது இருந்தது சாதாரண வீடல்ல சகல ஆடம்பரங்களுடனும் வசதிகளுடனும் அமைந்து அழகிய பங்களா. இவை எல்லாம் இவர்களுக்கு எப்படி கிடைத்தது என்று விநாயகத்திற்கு மனதில் சந்தேகம் எட்டியது.
கற்பகம் வந்து “வாருங்கள் அண்ணா” என்றாள். ஆனால் எப்பொழுதும் போல் ஆர்வத்துடன் அவள் ஓடிவந்து பேசவில்லை. தயங்கிக் கொண்டே வந்து தலை குனிந்து நின்றாள், அவள் தாய் அதுவும் வரவில்லை கற்பகத்தை ஏறிட்டுப் பார்த்தார் விநாயகம். அவள் உடம்பிலே எங்கு பார்த்தாலும் வைர நகைகள் ஜொலித்தன. விலை உயர்ந்த பகட்டான ஆடைகள் அணிந்து இருந்தாள். விநாயகத்திற்கு விஷயங்கள் விளங்க நேரமாகவில்லை.
யாரோஒரு செல்வந்தனுடைய அந்தரங்க நாயகியாக அல்லது அபிமான ஸ்திரீயாக கற்பகம் ஆகி இருந்தாள் அல்லது ஆக்கப்பட்டு இருந்தாள். பணம் பொருள் நகை பங்களா எல்லாம் அவன் அதற்காக கொடுத்த விலை!
விநாயகம் என்ன நினைத்திருந்தார்? தன் தந்தைக்கு அளித்த வாக்குறுதிபடி அவளை அவள் வந்த பரத்தையர் குலத்தின் பாதையிலே போக விடாமல் பாதுகாத்து தன் உறவினர் ஒருவனுக்கு மனம் முடித்து வைத்து தன் சொத்தில் ஒரு பகுதியையும் கூட கொடுப்பது என திட்டமிட்டு இருந்தார். அவர் திட்டத்தை எல்லாம் தாயும் மகளும் சேர்ந்து தவிடு பொடி ஆக்கிவிட்டார்கள் சமூகத்தின் முன்னிலையில் அவரை தலைகுனிய செய்துவிட்டார்கள்
இதையெல்லாம் நினைத்த உடனே கோபத்திலும் ஆத்திரத்திலும் விநாயகத்தின் நெற்றி சுருங்கியது. தன் தந்தையாருக்கு எத்தகைய கடமையை செய்வதாக வாக்குறுதி கொடுத்திருந்தாரோ அதை நிறைவேற்றுவதற்கெல்லாம் இல்லாமல் போய்விட்டது. “சேற்றிலே முளைத்த செந்தாமரை மீண்டும் வந்து சேற்றிலே விழுந்து விட்டது” என்று எண்ணமிட்டவராய் , எதுவும் அதிகமாக சொல்லாமல் “வருகிறேன்” என்று மட்டும் கூறிவிட்டு கிளம்பினார்.
“அண்ணா…” என்று கற்பகம் அருகினில் வந்தாள். விநாயகத்தின் கோபம் வெளிப்பட்டு விட்டது “கற்பகம்! இனிமேல் என்னை அப்படி ‘அண்ணா’ என்று அழைக்காதே! அதற்குள்ள அருகதையையும் யோக்கியதையையும் நீ இழந்து விட்டாய். உன்னை ஒரு தாசியின் மகள் என்று தான் இதுவரை எண்ணியிருந்தேன். ஆனால் நீயும் ஒரு தாசி தான் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டாய்” என்று சொல்லிக் கொண்டே விநாயகம் வெளியேறினார்.
கற்பகம் ஓடிவந்து விநாயகத்தின் காலை பிடித்தாள்.”சீ தொடாதே!” என்று காலை உதறிக் கொண்டு வெளியேறினார் விநாயகம்.
அன்று அவளை உதறித் தள்ளியதோடு அவளைப் பற்றிய எண்ணத்தையும் தன் எண்ணத்திலிருந்து உதறி எறிந்து விட்டார் இன்று 15 வருடங்களுக்கு பிறகு எதிரிலே வந்து நின்று மீண்டும் அவர் மன அமைதியை இழக்க செய்துவிட்டாள். அவள் எப்படியோ, தன் முன்னாலே வந்து கண்ணீர் விடுகிறாள். அதை பார்த்த உடனே விநாயகத்தின் கண்களும் அவரை மீறி கண்ணீரைக் கொட்டுகின்றன. காலப்போக்கில் இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன.
கற்பகத்தை பற்றி நினைப்பதையே கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டார் விநாயகம் ஏதோ அலுவலாக மதுரை சென்ற விநாயகம் தற்செயலாக கற்பகம் இருந்த வீட்டின் வழியாக போக நேர்ந்தது. வீடு திறந்து இருந்தது ‘உள்ளே இருக்கிறது யார் பார்க்கலாம்’ என்று ஏதோ ஒரு எண்ணம் தூண்ட உள்ளே நுழைந்தார் அவர்.
வீட்டில் உள்ள ஒரு மூலையில் பாயில் எழும்பும் தோலுமாக இல்லை வெறும் எலும்பு கூடாக என்று கூட சொல்லும் படி ஒரு உருவத்தை கண்ணுற்ற விநாயகம் அவர் கண்களையே நம்ப முடியாமல் நின்றார் தன்னையும் மீறிய ஒரு உணர்ச்சியில் “கற்பகம்” என்று கத்தி விட்டார்.
கண்களை மூடி இருந்த கற்பகம் கஷ்டப்பட்டு திறந்து பார்த்தாள். ஒளி இழந்திருந்து அவள் கண்களிலும் உயிர் வந்தது. முகத்தில் ஒரு தெளிவும் தெம்பும் ஏற்பட்டன. “அண்ணா! இந்த துர்பாக்கியவதியையும் இன்னும் நினைவில் வைத்திருக்கின்றீர்களா” என்று சொல்லிக்கொண்டே கண்ணீரை வடித்தாள். விநாயகம் அவளுக்கு ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினார்.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கற்பகம் தழுதழுத்த குரலில் தன் சோகக் கதையை சொன்னாள். “அண்ணா என் அறியா பருவத்திலேயே பணத்தையும் பொருளையும் பகட்டான வாழ்க்கையும் சதமாக நினைத்து என் தாய் விரித்த வலையில் நான் விழுந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் இழக்க நேர்ந்தது.
அந்த வாழ்வு முதலிருந்தே எனக்கு பிடிக்கவில்லை என் தாய் இறந்த பிறகு வாழ்க்கை மிகவும் கசக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நிலைமையில் வத்சலாவின் கல்யாணம் என்று கேள்வியுற்று என் புண்பட்ட உள்ளத்திற்கு ஆறுதல் தேடிகொள்ள ஓடி வந்தேன் அப்பொழுது எனக்கு கிடைத்த அந்த வரவேற்பு என் சிந்தனையை இன்னும் தூண்டியது. சில நாட்களில் அந்த வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டேன்.
என்னை ஆதரித்த அந்த கனவான் கொடுத்த பொருள் எதையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டு இங்கு வந்தேன். நம் தந்தையார் வாங்கி வைத்து விட்டு போன இந்த வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டேன் என் காலட்சேபம் இன்றுவரை நடைபெறுகிறது.”
“அண்ணா! நீங்கள் இருக்கும் இடத்திற்கு வரலாம் என்று எத்தனையோ தடவை நான் எண்ணியதுண்டு ஆனால் இந்த பாவாத்மா அங்கு வருவதாலே உங்கள் கௌரவத்திற்கு களங்கம் ஏற்படக்கூடும் என்று பயந்தே தான் அண்ணா என் ஆவலை எல்லாம் என் உள்ளத்திலே அடைத்து வைத்ததோடு இந்த வீட்டிற்குள்ளே நானும் அடைத்து கொண்டே கிடந்தேன். ஆனாலும் இந்தப் பாவியினுடைய ஆவி இந்த கூட்டை விட்டு பிரிவதற்குள் என்றாவது உங்களை கண்டு உங்கள் காலடியில் விழுந்து கதறி என் ஆசை தீர அழுது கண்ணீர் விட வேண்டும் என்பதுதான் என் கடைசி ஆசை அண்ணா“ என்று கூறினாள்.
உணர்ச்சிவசப்பட்டு உட்கார்ந்திருந்த விநாயகம் பேசினார், ”கற்பகம் அப்படியெல்லாம் அலட்டி கொள்ளாதே அம்மா, என்று உன் தவறை உணர்ந்து திருத்திக் கொண்டாயோ அன்றே அதற்கு பிராயசித்தம் ஏற்பட்டுவிட்டது. மேலும் அன்று முதல் நீ என் அருமை தங்கையாக ஆருயிர் சகோதரியாக ஆகிவிட்டாய் கற்பகம்!”
“நம் தந்தையாரிடத்தில் உன்னை எந்த காரணத்தினாலும் எதற்காகவும் கண்கலங்க விடுவதில்லை என வாக்குறுதி கொடுத்திருந்தேன். ஆனால் அதற்கு நேர் மாறாகவே எல்லாம் நடந்து விட்டன நான் உன்னை காணும் பொழுதெல்லாம் கண்ணீரும் கம்பளையுமாகவே உன்னை காண வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.
கற்பகம் இனி இந்த நிமிஷம் முதல் உன் கண்களிலே நீரை வடிய விட மாட்டேன் உன்னை என்னுடனே அழைத்துச் சென்று நானே உன் அருகில் இருந்து கண்ணை இமைக் காப்பதை போல உயிரை உடல் பார்ப்பது போல காப்பேன்”
விநாயகம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அளவு கடந்த ஆனந்த பெருக்கால் கற்பகம் விம்மி விம்மி அழுதாள். கண்ணீரை தாரைதாரையாக உதிர்த்தாள். தன் சக்தி எல்லாம் திரட்டிக்கொண்டு எப்படியோ எழுந்து “உங்களுடைய உத்தமமான அத்தகைய அன்பை எல்லாம் அறியாது என் வாழ்க்கையை பாழ்படுத்திக் கொண்டேனே அண்ணா! இந்த பாவியையும் மன்னித்து விட்டீர்களா” என்று சொல்லிக் கொண்டே விநாயகத்தின் பாதங்களில் சுருண்டு விழுந்தால் விநாயகம் பரபரப்புடன் குனிந்து தூக்கினார்.
அவர் கையில் கற்பகத்தின் உயிரற்ற வெறும் கட்டை தான் சிக்கியிருந்தது.
செண்பகச் சோலையின் ஓசை சித்திரம் - செவி கொடுங்கள் மனதை நிறைப்போம்
கற்பகம் காதல் திருமணம் செய்து கொண்டார் என்று தான் ஆரம்பத்தில் நினைக்க வைத்தது. இது எதிர்பாராத திருப்பம்.
சிறுகதை இலக்கணத்தோடு எழுதப்பட்ட கதைகள்.
எல்லா கதைகளிலும், முடிவில் ஒரு திருப்பம் இருக்கும். ரசனையோடு கூடிய படைப்புகளாகவும் இருக்கும். நேரம் கிடைக்கும் போது வாசித்து பாருங்கள்.
கருத்திட்டமைக்கு நன்றி.