தொடர் : 33
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
மதுரைக் கோட்டைக்குச் சென்று, வீர விளையாட்டு நடத்த அனுமதியும் பொன் முடிப்பும் பெற்றுத் திரும்பிய தங்கராசு தேவனைக் கழுவன் குடும்பமே பெருமையாகப் பார்த்தது.
“இளவரசரையே பார்த்தியா அப்பு. அவுகளே வறோமுண்டு சொன்னாகலா” சீயான் கருத்தையா விசாரிக்க,
“ஆமாம் சீயான், பாளையத்தையும், அப்புவையும் சொல்லவுமே இளவரசரே அடையாளம் கண்டுகிட்டார் அப்பு. தேனூருல பேட்டி கண்டதை சொல்றாரு” சிங்கத்திடம் பொற்கழஞ்சுகளை ஒப்படைத்து விட்டு தங்கம் சொல்லி வியக்க, சிங்கத்துக்கும் பெருமை தான். புண் சிரிப்போடு அமர்ந்திருந்தான், ஆனாலும் உள் மனதில் ஓர் நெருடல்.
‘நம்மளை நினைப்பு வச்சிக்கிற அளவுக்கு என்னா செஞ்சோம். அன்னைக்கு ஒரு நாள் தானே பேட்டிக் கண்டோம்’ யோசிக்க, அதற்கு விடையாய் பேச்சோடு பேச்சாக வீரன், “வேற யாரையெல்லாம் பார்த்த” வினவ,
“இளவரசரைப் பேட்டி கண்டுகிட்டு வாறேன், முத்தரையன் நிண்டாரு. எங்களுக்கு அழைப்பு இல்லையாண்டு, ஒரண்டை இழுத்தாரு” என்றான்.
“இந்தா வந்திருச்சில்ல முத்தின கத்திரிக்கா. அவரு நம்மளை மட்டும் கன்னம் வச்சு கருவறதுக்கு என்னா காரணம்” தாடகையைப் பார்த்தபடி சிங்கம் கேட்க,
“அவரு கோட்டையிலிருந்து நாச்சியார்களை தூக்கியாந்தம்ல அண்ணேன்” ரங்கம் அர்த்தமாகச் சொல்ல
“எலேய், அப்படியிண்டா எதுக்கு இத்தனை வருசம் காத்திருக்கனும். எட்டு புள்ளை பெத்த கிழவியைக் கொண்டு போய், அவன் என்ன செய்வான்” என கேட்கவும்
தாடகையும் வந்த வம்பை விடுவதாக இல்லை,”உனக்குத் தான் கண்ணுல கோளாறு. அவருக்குச் சரியா தெரியுதோ என்னமோ” என்றாள்.
“ஆத்தாடியாத்தி, கோட்டையில் இல்லாத அழகி.” பேச்சியம்மாள் நொடிக்க
“அப்படிண்டு தான, இரண்டு கல்யாணம் கட்டினதை மறைச்சு உன் மகன் என்னை தூக்கியாந்தாரு”
“கோட்டையில் இருந்து குதிச்சு உசிரை மாய்ச்சிக்குவியேண்டு கூட்டியாந்தான். என் மவன் மனசு பலாப்பழம்” வழக்கமான மாமியார் மருமகள் ஓட, தங்கராசுக்கு கண்கள் சொருகியது.
“உங்க சண்டையை அப்புறம் வச்சுக்குங்க.”சிங்கம் அமட்ட,
“உனக்கு போட்டியாளுண்டு ரோசம் வருதாக்கும்.” தாடகை கணவனிடம் பாய,
“அடியேய், அவன் என்னை விட மூப்பு. ஆடின ஆட்டத்துக்கு அந்த காலத்திலேயே கிழடு தட்டி தான் இருந்தான்.எப்பவும் அடங்காதது காசு ஆசை ஒன்னு தான். அதுக்காக என்னண்டாலும் செய்வாப்ல” சரியாக நூல் பிடித்த சித்தப்பனை தங்கராசு மனதில் மெச்சிக் கொண்டான்.
“எந்த பாளையம், யாரு காவலுண்டு அறிஞ்சு வச்சிருப்பாக. நம்மளூடே அவுகளுக்காக வேவு பார்க்கிற ஆளும் இருக்கும். பொதுவா நம்பகிட்ட இருந்து தான் கப்பம் வாங்குவாக. நமக்கு கொடுத்திருகாகண்டா, ஆதாயம் இல்லாம இருக்காது. யோசிக்கனும்டா மவனே.
காசை கொடுத்திருக்காக விழாவைத் தடபுடலா ஏற்பாடு பண்ணிடுவோம்” எனவும் அவரவர் வேலையைப் பிரித்துக் கொண்டு கிளம்பினர்.
தங்கராசு மனதில் தாமினை பற்றிய கவலை இருந்தது. காட்டு மாளிகையிலிருந்து சட்டென மறைந்த காரணம் என்ன?”
அண்ணன் மகனின் முகத்தைப் பார்த்த சிங்க ராசு”வேற எதுவும் சொல்லனுமா”
”இல்லைங்க அப்பு” என்ற தங்கராசு
தூரத்தில் வேங்கடவன் நடந்து சென்றதைப் பார்த்த அவனிடம் செல்ல உத்தேசிக்க,
“கை கொடு மவனே, அறைக்கு போகனும்”
“கால் குணமாகும் முன்ன அலட்டிக்காதிங்க அப்பு” என்றபடியே உடன் சென்றான்.
“நல்லா சொல்லு. மருதனை பழக்குறோமுண்டு மலையடிவாரம் போறது. பாளையக்காரர் மீனாட்சி கோவிலுக்கு வருவார். அங்க வச்சாவது கண்டுகிட்டு வாறமுண்டு, நொண்டிக் காலை வச்சுக்கிட்டு சுத்திக்கிட்டே இருக்கிறது”தடாகை திட்ட
“நொண்டி காலுண்டுல்லாம் சொல்லாதீங்க. விழாவுக்குள்ள அப்பு ராச நடையே நடக்கும். மதுரை கோட்டையிலிருந்து தைலம் வாங்கியாந்து இருக்கேன். அதை தேச்சு விடுங்க” தங்கராசு சொல்ல
“பாசக்கார பயடா” அவன் கன்னத்தில் தட்டியவன்,
“உன்னை முத்தம் கொஞ்சனுமுண்டு கூடத் தான் ஆசையா இருக்கு. ஆம்பளைக்கு ஆம்பளை முத்தம் குடுத்துகிறாய்ங்கண்டு, உன் சின்னம்மாகாரி வேற பேர் கட்டி விட்டுறுவா” சிங்கம் அசராமல் சொல்ல,
“அசிங்கம் புடிச்ச மனுசா. தங்கத்துக்குக் கல்யாணம் கட்டனும். வாயை வச்சுகிட்டு சும்மா இரு. தங்கம் நீ நாலு அடி தள்ளியே நில்லு” தாடகை சொல்லி விட்டு வெளியேற
“அடியேய்” என்றவன்,
“இவளுக்குக் கொழுப்பை பார்த்தியா. உன் பேர் கெட்டுப் போகக் கூடாதாம். அப்ப எம் பேர் கெட்டுப் போகலாமா. என்ன நினைச்சுக்கிட்டு இருக்கா இவ” என்று பாய மகன் சிரித்துக் கொண்டான்.
“நாலந்தாரம் கட்ட மாட்டேண்டு தகிரியம். இருடி உன்னை பார்த்துக்குறேன்” கருவ
“அப்பு விடுங்க” என்றான் தங்கம்.
தங்கராசுவை அமர்த்தி, கோட்டையின் மற்ற விசயங்களைக் கேட்டு அறிந்து கொண்டான். “அப்போ மகாராசா முடியாமல் இருக்காரு. அவருக்கு வாரிசு இல்லை. இளவரசர் ராசாவா ஆவாருண்டு அரையன் அவரை சுத்துராப்ல” தன் அனுமானத்தைச் சொன்னவன்,
“மவனே, எனக்கென்னமோ அரையன் மகாராசா சித்தினி நாயக்கர் குடும்பத்து மேல கண்ணு வச்சு தான், நம்ம பாளைத்துக்கு வர துடிக்கிறாப்லையிண்டு தோனுது”
“என்னப்பு சொல்றீங்க.” தங்கராசுக்கு தூக்கிப் போட்டது, சமாதானமாக “அவுககிட்ட அம்புட்டு செல்வம் இருந்தா காஞ்சியிலிருந்து, இங்க எதுக்கு வரனும்” தானே ஒரு காரணத்தைக் கண்டு பிடித்துச் சொல்ல…
“இது தங்கராசு இல்லையே, விசயத்தை முழுசா சொல்றதுக்குள்ள குறுக்கப் புகுந்து பேசுற. என்ன விஷயம்” எனவும்.
ஆத்தி என அரண்டவன், ”அதெல்லாம் ஒண்ணும் இல்லை அப்பு. பயண களைப்பு. செத்த தூங்கி எந்திரிக்கனும்”
“அது சரி தான். உன் குடிலுக்குக் கிளம்பு” உத்தரவு கொடுக்கவும்.
“ஏதோ சொல்ல வந்தீங்களே” மகனை முறைத்தவன் பார்வையில் ‘இப்போ தூக்கம் வரலையா’ வினா தொக்கி நிற்க.
“பரவாயில்லை சொல்லுங்க” என அமர்ந்து விட்டான்.
“சித்தினி நாயக்கருக்கு ஒரு தங்கச்சி இருக்குது.”அடுத்த அதிர்ச்சி, ‘வீட்டிக்குள்ள இருந்தே எல்லாத்தையும் ஆராய்சிருவாப்ல” அடுத்தும் அப்புவின் வாயிலிருந்தே வரட்டும் என மகன் காத்திருக்க
“எனக்கு எப்படி தெரியுமுண்டு பார்க்கிறியா. சின்னம்மா சொன்னா. அழகான பொண்ணுங்களை கண்டா தான் அரையனுக்கு மூக்கில் வேர்த்திடுமே. அந்த பொண்ணை தூக்கிட்டு போய் இளவரசருக்கு காணிக்கை யாக்கலாமுண்டு திட்டம் போட்டுருப்பான்” எனவும்
“அப்பு” என உருமலோடு எழுந்து நின்ற தங்கராசு தேவன், “ எங்க தைரியமிருந்தால் வந்து கையை வைக்க சொல்லுங்க. அப்புறம் தெரியும் இந்த கழுவன் யாருண்டு” விறைத்தபடி எழுந்து நின்று மீசை முறுக்க,
“அந்த பொண்ணைச் சொன்னா, உனக்கு என்னத்துக்கு இமம்புட்டு நரம்பு பொடைக்கிது” எனவும் சுயம் உணர்ந்தவனாக,
“இல்லை அப்பு நம்ம பாளையத்துக்குள்ள வந்து ஒரு பொண்ணை தூக்க விட்டுருவோமா” சமதானம் சொல்ல
“அதெப்படி விடுவோம். வளரி ஒன்னு பத்தாது. ஆனாலும் விழா நடக்கும் தண்டி சூதானமா இருக்கனும். கேள்வி படுற விசயமெல்லாம் ஒன்னும் சரியில்லை” சிங்கம் பூடகமாகவே சொல்ல, தங்கராசுவுக்கு இருப்புக் கொள்ள வில்லை. “வறேன் அப்பு” தன் குடிலுக்கு எதிர்புறம், வேங்கடவன் சென்ற திசையில் செல்ல, உள்ளே வந்த தாடகை, “அதை ஏன் இந்த பாடு படுத்துற” எனவும்,
“அப்புறம் எங்கிட்ட மறைச்சிருக்கான். ஒரு பொம்பளையை பிடிச்சிருச்சிண்டா எம்புட்டு தடங்கள் வந்தாலும் தூக்கி வர்றவன் தான் கழுவன்” மீசையை முறுக்க,
“ரொம்பத் தான்” என்றாள் தாடகை.
வேங்கடவன் சென்ற திசையில் பின் தொடர தங்கராசுவுக்கு அவர் அகப்படவில்லை, “அதுக்குள்ள எங்க போனாரு” தங்கம் யோசிக்க
“யாரை தேடுறீங்க அண்ணேன்”என சாமியும், பதுமமும் எதிர் வந்தனர்.
“வேங்கடவர் எங்கே” என கேட்க,
“சித்தினியோட இப்ப தான் பறந்தார்.”சாமி சொல்ல
“ஏதேனும் ஆபத்தா”தங்கம் பதட்டம் அடைய
“இரவைக்குக் கட்டாயம் வந்துடுவார். ஆத்தா வீட்டில் தான் தங்கியிருக்கார்”
“அது தெரியும். இப்போ எதுக்கு போனார். அவர் தங்கைக்கு எதுவும் ஆபத்தோ” மனம் போன படி சிந்தித்து கவலைப்பட
“அதெல்லாம் இல்லை. எழுமலை மீனாட்சி கோவிலுக்கு வந்தாங்களே” பதுமம் சொல்லவும்,
“எப்போது, என்ன, ஏதென” தங்கராசு நச்சரிக்க, “சித்தினி நாயக்கர் வந்து தகவல் சொல்லுவார். நீ கொஞ்ச நேரம் தூங்கி எந்திரி” பதுமம் சிரித்தபடி சொன்னாள்.
தங்கராசு வேறு எங்கோ செல்லப் போனவனை, “உங்களுக்கு என்ன தெரியனும். நான் விசாரிச்சுட்டு வர்றேன்” சாமி சொல்ல,
நான்கு நாள் தூக்கங் கெட்டது, தங்கராசுவுக்கு கீழே கொண்டு தள்ளியது.
“அண்ணன்” என்றவர்கள் வழுக்கட்டாயமாக அவன் குதிரையைக் குடிலுக்குத் திருப்ப, நான்கு நாள் அலைச்சலில் சோர்ந்து கண் மயங்க, மேனி நெருப்பாகச் சுட்டது.
குதிரையிலேயே தங்கராசு மயங்குவதைப் பார்த்த சாமி சுதாரித்து அண்ணனை பிடித்துக் கொள்ள, தொட்டுப் பார்த்த செம்பதுமம் வழியில் விசாரித்தவரிடம் வைத்தியரை அனுப்பச் சொன்னாள்.
அண்ணனும் தங்கையுமாக மூத்தவனைப் பிடித்து இறக்கி அவன் குடிலில் படுக்க வைத்தனர். நான்கு நாள் இரவு பகல் பாராத அலைச்சலில் முற்றுமாகச் சோர்ந்து இருந்தான்.
உடல் சோர்வை விட தாமனியைக் காணவில்லை, தன் ராசி தான் அவளுக்கும் ஏதோ நேர்ந்திருக்கிறது என்ற நினைவே அவனை மயக்கத்தில் தள்ளி இருந்தது. நினைவே கனவாக மாறி, அதிலும் புலம்பினான்.
“இளவரசி, இதுக்கு தான் உங்களை விலக்கியே வைத்திருந்தேன்” மனதில் உள்ளதை எல்லாம் புலம்ப, சுற்றி அமர்ந்து கழுவன் குடும்பமும், சம்பந்தப் பட்டவளுமே கேட்டுக் கொண்டிருந்தனர். விஷயம் அறிந்து அரண்டது பூங்குயில் தான். மாயாண்டி குடும்பத்துக்குப் பதில் சொல்லியாக வேண்டுமே.
முன்னதாக சிங்கராசு தேவன், முன்தினம் தாடகையையும், பெண் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு எழுமலை பாளையத்தின் பிரசித்தி பெற்ற , கழுவன் குடிக்கு அருகில் உள்ள, மேலதிருமாணிக்கம் சுந்தரேஸ்வரர், மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றான். திங்கள் கிழமை, சோமவாரம் எனப் பாளையக்காரர் சுந்தரேசரைத் தரிசிக்க வருவார்.
பதுமத்துக்கு இந்த கோவிலுக்குள் வரவுமே, பத்மாசினியாக பூர்வ ஜென்ம நினைவு வந்தது. அப்போதே இந்த கோவில் கட்டப்பட்டு இருந்தது. ஆந்திர தேசத்திலிருந்து வந்த ஆதி மூர்த்தி என்ற அந்தணர் இங்குத் தெய்வ கைங்கரியம் செய்து கொண்டிருந்தார்.
ஐந்து தலை நாகம் ஒன்று அந்த கோவிலில் இருப்பதாகவும், அந்தணரின் வருமையைப் போக்க மாணிக்கக் கல் கக்குவதாகவும் பேச்சு இருந்தது. சிவ கைங்கரியம் செய்த அவரை பார்க்கவும் தனது தந்தை வீர சிம்மர் நினைவு வந்தது. பெருமாள் சிலைகளை மறைத்து வைப்பதற்காக இடம் தேடி வந்த போது, சுந்தரேஸ்வரர் மீனாட்சி சந்நிதியில் அவர்களுக்கு உத்தரவு கிடைத்தது.
ஊரை விட்டு காலி செய்யும் குடும்பத்தினர் தங்கள் குலதெய்வத்துக்கான ஆடை ஆபரணங்களைப் பெட்டியில் வைத்து, அந்த நாகத்தின் கண்காணிப்பில் விட்டுச் செல்லும் பழக்கமும் இருந்தது. ஏனெனில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கற்றளியாக்கப் பட்டிருந்த பூர்வ கோவில். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் முற்பட்டது.
சிங்கத்தை மணமுடித்த வந்தபோது மனம் ஒட்டாமல் இருந்த தாடகை நாச்சி மனம் மாறியதற்கு இந்த கோவிலின் சானித்தியமும் ஒரு காரணம். மீனாட்சி அம்மையைத் தரிசிக்க, தனது தாயின் மடியில் இருப்பது போன்ற உணர்வு வந்திருந்தது.
எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்பும் குல தெய்வத்துக்குக் காணிக்கை முடிந்து வைத்து விட்டு, கணவனை இழுத்துக் கொண்டு வருவாள். சிங்கத்திடம் பக்தி இல்லையென்றாலும் மனைவிக்காக வருவான்.
கோவிலுக்குள் வரவுமே, அம்மா, மகள் அவரவர் நினைவில் கரைந்தவர்கள், சிம்ம ராசு தேவன் அழைப்பில் கலைந்தனர்.
“பாளையக்காரர் வரலையாம். சட்டுபுட்டுனு கிளம்புங்க. வீட்டுக்குப் போகலாம்” எனவும்
“உன் காரியம் ஆகலைங்கவும் கிளம்ப சொல்லுவியே. செத்த இரு. பிள்ளைகள் சாமி கும்பிடட்டும்” என்றவள்
“பதுவு சல்லிக் கட்டு நல்லபடியா நடக்கனுமுண்டு மனசில் நினைச்சு. இந்த விளக்கை ஏத்து” என்றாள்.
“சரிமா” மோன நிலையில் செல்ல, மற்ற பிள்ளைகளும் அக்காவுக்கு உதவின. விஸ்தாரமான கோவிலில் இறைவனை வணங்கி விட்டு மகிழ்ச்சியாகவே சுற்றித் திரிந்தனர்.
அந்தி சாயும் முன் கிளம்பலாம் என்றாலும் தாமதப்படுத்தும் மனைவியை வம்பிழுத்துக் கொண்டு மற்றொரு நுழைவாயில் மண்டபத்தில் சிங்கம் அமர்ந்திருக்க பிரசாதமாகப் படைத்திருந்த பொறி உருண்டை, தேங்காய், வாழைப் பழத்தைக் கணவனுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள் தாடகை. நேரம் கோவிலுக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்க, நுழைவாயிலில் கோவில் திண்ணையில் அமர்ந்திருந்த போது ,காலில் அடிபட்டதையும் மறந்து சிங்கம் குதித்து வெளியே ஓடினான்.
அங்கே ஓர் இளம் பெண் முக்காடிட்ட படி ஓடி வர, நான்கு ஆட்கள் துரத்தி வந்தனர். தன் காவல் கோட்டையில் தன் கண் முன்னே ஒரு பெண்ணை துரத்தி வருவதைச் சிங்கத்தால் பொறுக்க முடியவில்லை. இடுப்பில் தயாராக வைத்திருந்த இரண்டு வளரிகளை வீசி நால்வரையும் கீழே சாய்ந்திருக்க, அந்த பெண் சிங்கத்தைத் தாண்டி வெளியே கணவனுக்குத் துணையாகக் களம் இறங்க தயாராக இருந்த தாடைகையிடம் தஞ்சம் அடைந்திருந்தாள் .
கூச்சல் கேட்கவும் எச்சரிக்கை அடைந்த செம்பதுமம், செம்பவளத்திடம் தங்கைகளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, வாளோடு வெளியே வர, வளரியால் தாக்கப்பட்டு எழுந்து ஓட முயன்றவர்களை செம்பதுமம் வாள் கொண்டு தடுத்து நிறுத்த, வேறு வழியின்றி அவளோடு அவர்கள் சமர் புரிந்தனர்.
சிங்கம் ஒரு வித சங்கேத ஒலி எழுப்ப, அடுத்த சில நிமிடங்களில் ஒரு காவலர் அங்கு ,வர, சில நிமிட இடைவெளியில் மேலும் மூன்று காவல்காரர்கள் ஓடி வந்திருந்தனர். சிம்ம தேவன் கட்டமைத்த காவல் சங்கிலி அவ்வளவு வலிமையானது.
அதையும் மீறி இந்த பெண்ணை துரத்தி வந்தது யார்? என்ற கேள்வி எழுந்தது.
சிங்கத் தேவன் முன்னிலையில் காவல்காரர்கள் அவர்களை மிதிக்க செம்பதுமம் அப்பாவின் அருகில் வந்து நின்று கொண்டாள்.
தாடகை இளம் பெண்ணை கோவிலுக்கு உள்ளே அழைத்துச் சென்று, தண்ணீர் கொடுத்து முக்காட்டை விலக்கிய போது தான் நாகமலை அடிவாரத்தில் பார்த்த தாமினி தேவி என்பது புரிந்தது.
“இவுகளை நம்ம நாகமலை அடிவாரத்தில் பார்த்திருக்கோம்.” ஆளாளுக்கு நினைவு கூர்ந்து, “சித்தினி நாயக்கர் தங்கை” என்பதை உறுதி செய்ய, சிங்கமும், செம் பதுமமும் கூட உள்ளே வந்திருந்தனர்.
“ யாரு ஆத்தா நீயி. அவனுங்க யாரு” சிங்கம் வினவ, செம்பதுமம் தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டே நின்றாள்.
“நான் தாமினி தேவி. வானவர், வேங்கடவர் என இரண்டு அண்ணையா இருக்காங்க. காஞ்சியிலிருந்து சேத்ராடணம் போக வந்தோம்” என்றவள், காட்டு மாளிகையில் தங்கியிருந்ததையும்
மூத்தவர் திருமண சம்பந்தமாகப் பேசத் தன்னை அழைத்ததாகவும், மனதில் ஒருவரைக் கணவராக வரித்து விட்டதால் வேறு யாரையும் மணக்க முடியாது என்றும்.
அண்ணையா திருமணத்தைப் பேசி உறுதி செய்திருந்தால் என்னால் மீறவும் முடியாது. அதனால் அண்ணையாவை சந்திப்பதைத் தவிர்த்து ஓடி வந்தேன் என்றாள்.
“ஒன்னு தகிரியமா உங்க அண்ணனை எதிர்த்து நிற்கனும். இல்லையிண்டா மனசில நினைச்சவனை வரச்சொல்லி அவன் கூட போகனும்."
" ரண்டும் இல்லாமல் இது என்ன சிறுபிள்ளைத் தனம்” சிங்கமும், தாடகையும் மாற்றி மாற்றிக் கேட்டனர்.
“அப்படி எந்த பேடி பயலை மனசில நினைச்ச. இந்த நேரத்தில் கூட நிற்காமல் எங்க போயிருக்கான்” எனக் காட்டமாகச் சிங்கம் கேட்க, தாமினிக்கும் கோபம் வந்தது.
“என்னவரை தகாத சொல் சொல்லிப் பழிக்க உங்களுக்கு உரிமை இல்லை. அவர் இந்த பாளையத்துக்காக முக்கியமான வேலையாக வெளியூர் சென்றிருக்கிறார். அதற்குள் அண்ணையாவை மீறிய பழி வேண்டாமே என்று தான் கழுவன் குடியை நோக்கி போயிட்டு இருக்கேன். “ எனவும்
“சின்ன அண்ணையாவை பார்க்கவா” செம்பதுமம் கேட்க,
“இல்லை, சின்னவரும் பெரிய அண்ணையா சொல்லைத் தட்ட மாட்டார். என் புகுந்த வீட்டினரிடம் அடைக்கலம் தேடி வந்தேன்* அவள் சொல்ல
“அப்படி எந்த கழுவன் குடி வீரன் உம் மனசில இடம் பிடிச்சது” சிங்க ராசு வியப்போடு கேட்டான்.
“கழுவர் தங்கராசு தேவர்” மரியாதை பன்மையில் அவள் சொல்ல செம்பதுமத்தை தவிரக் கழுவன் குடும்பமே அதிர்ந்தது.
“தங்கராசையா சொல்ற, அது பொம்பளை பிள்ளைகளைத் திரும்பியும் பார்க்காதே” தாடகை அதிசயமாகக் கேட்க
“அதெல்லாம் இல்லை, அவர் என்னை மூன்று முறை தொட்டு தூக்கியிரூக்கார்.” என விவரம் சொன்னாள்.
சிங்கம்,”அது காவல்காரன் வேலை” என்றார்.
“ஓஹோ பசியாறி விட்டு, என் சேலை தலைப்பில் முகம் துடைத்தாரே. அது எந்த உரிமை. இதுற்கு மேலும் சொல்வேன். சிறு பிள்ளைகள் இருப்பதால் இத்தோடு நிறுத்திக் கொண்டேன்” என்றாள்.
“அடியேய் கேட்டுக்கிட்டியா, பய உம் புருஷனை விட வேகமா இருக்கான்” என்ற சிங்கம்
“நீ சொல்றதுக்கு ருசு எங்கே” கேட்க, தாமினிக்கு அதிர்ச்சி எனில் தாடகை,”கூறுகெட்ட மனுசன்” எனத் திட்டப்
பதுமம் “அப்பாரு, போதும் விடுங்க. நம்மளோட குடிக்கு கூட்டிட்டு போகலாம் “ எனப் பரிந்துரைத்தாள்.
“சரி தான். ஆனால் கூட பிறந்தவர் தேடுவாரா இல்லையா” நியாயமாகக் கேட்க
“என் தோழி சிவப்பி மூலமாகச் செய்தி அனுப்பி விட்டேன்” என்றாள்.
“இந்த ஆளுங்க யார், எதுக்கு பின் தொடர்ந்து வர்றாங்க” வினவ
”ரகசியமாகத் தான் கிளம்பி வந்தேன். எங்களை பின் தொடர்ந்து இருப்பார் போலும். தனியாக வரவும் கடத்த முயன்றனர். நான் போக்கு காட்டி ஓடி வந்து விட்டேன்” என்ற சொல்ல
“சற்று நேரத்தில் யாரெனத் தெரிந்துவிடும்”என்றவர்,
“ தங்கராசு வரும் வரை உன் பாதுகாப்பு என் பொறுப்பு. வந்த பிறகு அவன் முடிவெடுப்பான்” என்றும் சொல்ல அவள் ஒத்துக் கொண்டாள்.
தனது ஆள் ஒருவனை அனுப்பி தாமினி பாதுகாப்பாக இருப்பதாக வானவனுக்குத் தகவல் சொல்லி வர சொன்னான்.
“என்னவர் வரும் வரை சிக்க அண்ணையாவிடமும் சொல்ல வேண்டாம். தர்ம சங்கடமான நிலையாகி விடும்” தாமினி வேண்டுகோள் விடுக்க, சிங்கம் அப்படியே ஆகட்டும் என்று விட்டான்.
அதனால் பதுமமும் வேங்கடவனைச் சந்தித்த போது சொல்ல வில்லை.
சின்ன கழுவன் குடியில் தங்கையின் செயலால் வானவர் மிகவும் வேதனை உற்றிருந்தார். இளவலுக்கு அழைப்பு விட, வேங்கடவனும் கிளம்பிச் சென்றிருக்கிறார்.
இரண்டாம் சிலை பிரதிஷ்டை வரை தங்கராசு தேவன் தங்கள் விசயத்தைத் தள்ளிப் போட நினைக்க, தாமினியின் பயம் இந்த சூழலில் நிறுத்திருந்தது.
அடுத்து என்ன பொறுத்திருந்து பார்ப்போம்.
வாழ்த்துகள்...