தொடர் : 1
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
ராகினி தனக்கு முன் நின்ற தன் பிரதி பிம்பம் தன் சகோதரனின் மகள் என்பதை அறிந்து கொண்டார், ஆனாலும் இவள் யாருடைய மகள் இங்கே எப்படி வந்தாள் என்பதில் அவருக்குக் குழப்பம் இருந்தது, அவை யாவையும் தாண்டி, இவள் என் பிறந்தகத்தைச் சேர்ந்தவள் என்பதில் மகிழ்ந்து பூரித்து இருந்தார்.
தன்னைக் கண்டதும் மகிழ்ந்து உச்சி முகர்ந்த பெண்மணியின் தழுவலில் தனதான ஒரு உணர்வை உணர்ந்தாள் மயூரி, இவர் ஏதோ தனக்கு வேண்டியவர் என உணர்ந்தவள், அவருடைய முழு அறிமுகத்தை எதிர்நோக்கி நின்றாள்.
அப்போது அமுதன் தங்கள் வீட்டின் அங்கத்தினர்களை அவளுக்கு அறிமுகம் செய்தான், பாட்டி சிவகாமி , தாய் ,தந்தையர், சிவகுரு நாதன் - ஸ்வர்ண ராகினி, சித்தப்பா - சிறிய தாயார் சண்முகநாதன் - தெய்வா, அவர்கள் மகன் சிவபாலன்.
தாத்தா சிவபரங்கிரி அவர்கள் அங்கே வந்து தன் துணைவியார் பக்கம் அமரவும், அவரை எங்கள் எஸ்.எஸ்.கார்டன்ஸ் ஸ்தாபகர், எஸ்.எஸ்.கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் அப்பாவின் உழைப்பு, எஸ்.எஸ்.ரிசார்ட்ஸ் சித்தப்பா, எஸ்.எஸ். இன்டர்நேஷனல் ஸ்கூல் அம்மா, எங்க வீடு மொத்தமும் எங்க தெய்வா அம்மாவின் கட்டுப்பாடு என அறிமுகம் செய்தான்.
தாத்தா, பாட்டி கால்களைத் தொட்டு வணங்கினாள் மயூரி, "மகராசியா இரு." என வாழ்த்த மற்ற இரு தம்பதியும் அதே ஆசிகளைச் சொன்னார்கள். ஆனாலும் அவள் மனதில் ஒரு நெருடல் இருந்தது.
ராகினியை நோக்கி, "நான் உங்கள் முழு அறிமுகத்தையும் தெரிந்துக் கொள்ளலாமா, ஏதோ இன்னும் சில விஷயங்கள் தெரிய வேண்டியுள்ளது." என ஆங்கிலத்தில் வினவி ராகினியின் முழுப் பரிச்சயத்தையும் கேட்டாள்.
ராகினியும் சிறிதும் அசராமல், சிறு புன்னகையுடன்,
"நான் திருமதி ஸ்வர்ண ராகினி சிவகுரு நாதன், சிவ குக அமுதன், ஜானகி தேவியின் அம்மா, வீரேந்தர் சிங் ரத்தோட், மயூரா தேவி ரத்தோடின் மகள்." எனத் தனது அறிமுகத்தை முடித்தார்.
இதைக் கேட்டு அதிர்ந்த மயூரி, "ஆப் மேரி புவாஷா ஹை!" எனத் தன் தந்தை வழி அத்தையை வினவினாள், நீ உன் முழு அறிமுகம் சொல் நான் நம்முடைய உறவை சொல்கிறேன் என்றார் ராகினி.
"நான் ஸ்வர்ண மயூரி ரத்தோட், அமரேந்திர சிங் ரத்தோட், பூனம் சிங் ரத்தோட் மகள்." என்றாள். தனது தம்பி மகள் என மகிழ்ந்து, ஆவலாய் அவளிடம், "ஆம் நான் உன் புவாஷா, நீ என் பதிஜி!" என்றார்.
பிறந்தது முதல் தான் காணாத தன் அத்தையை கண்ட நெகிழ்ச்சி இருந்த போதும், தன் பாட்டி மற்றும் அப்பா, பெரியப்பா மார்களின் மனதை வருத்தியவர் என்ற உண்மை அவள் உணர ஒரு கணம் கண் மூடி திறந்து அவள் தன் கரங்களைக் குவித்து வணங்கி, தனக்கு இந்த வீட்டில் ஒன்றும் வேலை இல்லை, திரும்புகிறேன் என ஹிந்தியில் உரைத்து வாசலை நோக்கித் திரும்பினாள்.
அவளின் இந்தச் செயலில் அதிர்ந்து மனம் துடித்து நின்றார் ராகினி, அத்தை மருமகள் இருவரின் சம்பாஷணைகளையும் நிமிர்வையும் பார்த்து அதிசயித்து நின்றனர் மற்றவர். அமுதன் அவள் வழியில் மறைத்து நின்று, "அது எப்படி நீ போவாய்?" என முறைத்து நிற்க, அவனைத் தன் பார்வையால் சுட்டு வாசலை நோக்கி முன்னேறினாள்.
பாட்டியும், தெய்வாவும் ராகினியின் நிலையை எண்ணி, அவளை எப்படியாகினும் இங்கே நிறுத்த வேண்டும் எனப் பிரயத்தனப் பட்டனர். பாட்டியும் தேவாவும் மட்டுமே ஹிந்தியில் பேசத் தெரியாதவர்கள். அதிலும் தெய்வா நேரில் பேசும் போது புரிந்துக் கொள்வார். திருப்பி பேச வராது. எனவே மயூரியுடன் மற்றவர் ஹிந்தியில் உரையாடினார்.
சிவகுரு நாதன் தன் மனைவியின் நிலை உணர்ந்து, தன் குரலை செருமி, "எதுவாயினும் பேசி ஓர் முடிவு எடுக்கலாம், முதலில் நீண்ட பிரயாணம் இளைப்பாறம்மா!" எனச் சொன்னார்.
அவர் குரலில் திரும்பியவள், "என்னைச் சமாதானம் செயற்வங்க, முன்னமே என் குடும்பத்தை ஏன் சமாதானம் செய்யல்லை, இன்றும் என் தாதிஷா இவங்களுக்காகக் கண்ணீர் சிந்துறாங்க . நாள் கிழமைகளில் முழுச் சந்தோசம்கிறதே இல்லை, ஏதோ ஒரு குறையோட எங்கள் வீட்டுப் பெரியவங்க மன வருத்தத்தில் தான் இருக்காங்க. எங்கள் முன் சந்தோசமா இருந்தாலும் மறைவில் வருந்துவாங்க ." என்றாள்.
அவள் பேச்சைக் கேட்ட ராகினி தாரை தாரையாக கண்ணீர் வடிக்க, அதனைக் கண்ட அமுதன், "இனி ஒரு வார்த்தை பேசாதே, என் அம்மாவைப் புண்படுத்த உனக்கு உரிமை இல்லை." என்றான்.
அதற்குள் ஜானகியிடம் அலைபேசி வாயிலாக அனைத்தையும் பகிர்ந்த சிவபாலன், அவள் சொன்னபடி, தன் மொபைலை மயூரியிடம் நீட்டி
"ஜானகி பேசனுமாம்." எனச் சொல்ல, அவனை ஒரு பார்வை பார்த்து ஜானகியையும் புறக்கணித்தாள். அவள் தன் லக்கேஜ் வேண்டும் என அமுதனிடம் பிடிவாதம் பிடிக்க, அனைவரும் செய்வதறியாது நின்றனர்.
நிசப்தமான அந்தச் சூழலில் தாத்தா சிவபரங்கிரி அவளின் அருகில் வந்தார், "அம்மா நீ ஒரு பக்கம் பார்த்ததை வச்சு கோபபடுற, உன் அத்தையின் தரப்பும் இருக்கும் தானே, அதை எப்போது கேட்ப?" என வினவினார்.
"உன் தாதிஷா வருத்த பட்டால் அப்படியே இருக்கட்டும்னு விட்டுவியா, அதை சரி பண்ண என்ன செய்யப் போற?" என அவளை யோசிக்கத் தூண்டினார்.
அவள் குழப்பமாய் நோக்க, "எல்லாம் சரி நீ எதுக்கு இங்கே வந்த, உன் படிப்பிற்காகத் தானே? இப்போ பின் வாங்கினால் என்ன செய்றது, எனக்குத் தெரிஞ்சு, உன் பரம்பரை முன் வைத்த காலை பின் வைக்கிறவங்க இல்லை, உறவையும், வியாபாரத்தையும் வைத்துக் குழப்புறவங்களும் இல்லை. நீ வந்த காரியத்தை முடிக்க வேண்டாமா, நாளை உன் தொழிலிலும் இதைத் தான் செய்வியா?" என வினவ, புருவ முடிச்சுகளுடன் இதனைக் கேட்டுக் கொண்டிருந்தவள், பெரியவரின் வார்த்தைகளை ஆலோசிக்க ஆரம்பித்தாள்.
அவள் யோசிப்பைப் பார்த்து, "தெளிவான பிள்ளையாகத்தான் தெரியற வந்த காரியத்தைச் செய், அதோடு உன் சினேகிதத்துக்கும் மதிப்பு கொடுக்கனும் தானே, ஜானகிட்ட அத்தை மகள்ன்னா பழகின?" எனக் கேட்க,கொஞ்சம் யோசித்து, "அப்போது நான் வெளியே தங்கிக் கொள்கிறேன், ஒன்லி ப்ரொபஷனல் ரிலேஷன் இருக்கட்டும்." என்றாள்.
இது என்னடா மறுபடியும் முருங்கை மரம் ஏறுகிறது என நினைத்த அப்பத்தா , "ஏம்மா எங்கப் பேத்தி வயசு ஸ்நேகிதப் புள்ளையை, வெளியே எப்படித் தங்க விடுவோம், அதெல்லாம் முடியாது, ஏ மருது! பாப்பாவோட பொட்டியை விருந்தாடி ரூம்ல வையி." எனத் தமிழில் பொரிந்துத் தள்ளிய சிவகாமி அப்பத்தா, வேலையாளுக்கு கட்டளையிட , சரிம்மா என மருதன் பெட்டியை தூக்கிச் சென்றான்.
"ஏத்தா மருமக்கமாரு, வீடு வேலை எல்லாம் அப்படியே கிடக்கு, என்ன வேடிக்கை பார்க்குறீங்க, போங்கத்தா, வராமல் வந்த புள்ளைக்கு வாய்க்கு ருசியா செய்யச் சொல்லுங்க." என அவர்களையும் விரட்டியவர்,
"ஏப்பா அமுதா நீ என்ன இப்படி நிக்க, விருந்தாடியை இப்படித்தான் நிக்க வைக்கிறதா, அந்தப் புள்ளைய கூட்டிகிட்டு போய் ரூம்பக் காமி, பாலா நீயும் கூடப் போ!" என அனைவரையும் ஏவி, கூட்டத்தைக் கலைத்து ,மயூரிக்கு பேசும் வாய்ப்பும் தராமல், பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.
அமுதன் முன்னே செல்ல,மயூரி யோசனையோடு தன் அத்தையைப் பார்த்துக் கொண்டே மாடிப்படி ஏறினாள். பின்னால் சென்ற சிவபாலன், மயூரி அறியாமல் தன் அப்பத்தாவுக்கு ஒரு ஹைபை கொடுக்க, அவரும் சத்தமில்லாமல் சைகை செய்தார். தன் மனைவியின் சாதுரியத்தை மெச்சி மூத்த சிவம் பார்வை பார்க்க, மருமகள் மாமியாருக்கு கண்களால் நன்றி கூறினார்.
இப்போதைக்குக் கொதித்த உலையை மூடி வைத்துள்ளார் சிவகாமி அப்பத்தா, இன்னும் என்ன என்ன பொங்கும் எனப் பார்ப்போம்.
ஜானகி தேவி, நம் கதையின் நாயகி அவளின் ஆட்டுவித்தலில் நடந்ததே இந்தக் கதை ஓட்டம், இவள் சிவகுரு நாதன் ராகினியின் செல்ல மகள்.
சண்முகம், தெய்வாவிற்கும் இவளே மகள் ஆதலால் இந்த வீட்டின் இளவரசி.
அப்பத்தா சிவகாமிக்கு, தாத்தா சிவபரங்கிரிக்கும் எல்லாம் அவள் தான்.
அவளது சுறுசுறுப்பு, குறும்புத்தனம், பாசம், அழகு, அதிகாரம், அறிவு எல்லாவற்றுக்கும் இவர்கள் அடிமை, சொல்லப் போனால் இவர்களது வளர்ப்பே இன்று அவளது அனைத்து துணிச்சலுக்கும் காரணம்.
அண்ணன்கள் இருவர் தம்பி ஒருவன் என மூவருடனும், மல்லுக்கட்டி நின்று அவள் காரியத்தைச் சாதித்துக் கொள்வாள். வீட்டில் ஒரே பெண் ஆதலால் செல்லம் ஒருபுறம் இருந்தாலும், அன்னையைப் போல் எதிலும் தைரியமாகச் செயல்படுவாள், தெய்வாவின் வளர்ப்பு என்பதால் பெண்மைக்கு உரிய எல்லையைத் தாண்டவும் அவளுக்கு அதிகாரம் கொடுக்கப் படவில்லை. படிப்பில் படு சுட்டி,ஆனால் அதில் தேர்ச்சி பெறுவதும் கோட்டை விடுவதும் அவள் விருப்பமே, யாரும் கட்டாயப் படுத்தி எதையும் செய்ய வைக்க முடியாது.
இவர்கள் ஊருக்கு அருகில் உள்ள நத்தம் பகுதியில் ஒரு பெரிய விவசாயக் குடுப்பத்தில் முருகானந்தம் என்பவருக்கு வாக்கப்பட்டவர் இவள் அத்தை சுந்தரவள்ளி அவர்கள் இரு மகன்களும் விவசாயம் தான் தொழில்.அவர்கள் இருவரும் தன் மாமன் மகள்களை விடப் பத்து வருடம் மூத்தவர்கள், அதனால் அவர்களுக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் உண்டு.
அத்தை வீட்டில் இவள் வயதுக்குத் தோதாக ஒரு பெண் உண்டு, சுந்தரவள்ளிக்குப் பல வருடங்கள் கழித்துப் பிறந்த பெண் குழந்தை, அமிர்தவள்ளி அவள் தான் நம் ஜானகிக்குத் துணை, தோழி எல்லாமும்.
இருவருக்கும் இடையே எந்த வேறுபாடும், ஒளிவு மறைவும் இருக்காது, நாள் சென்று பிறந்த பிள்ளை என்பதால் அவளுக்கும் செல்லம் அதிகம், அவளும் தன் மாமான்கள் வீட்டில் ஜானகியுடன் தான் வளர்ந்தாள், இருவரும் பள்ளிப் படிப்பு முதல் இன்று வரை ஒன்றாகவே படிக்கின்றனர்.
இந்தப் பெண் மக்கள் இருவரும் அவள் தாயின் பள்ளியிலேயே பள்ளிப் படிப்பை முடித்தனர், இங்கேயே இருந்தால் வெளி உலகம் தெரியாது என இளங்கலை படிப்பைச் சென்னையில் இருக்கும் ஓர் புகழ் பெற்ற கல்லூரியில் சேர்த்து விட்டனர்.
விடுதி சாப்பாடு இவர்களுக்கு ஆகாது என இவர்கள், தாத்தா அப்பத்தா இவர்களின் சென்னை வீட்டில் வைத்து தாமும் துணைக்கு இருந்து படிக்க வைத்தார்கள். இவர்களுக்குப் பாய்ச்சிய நீர் தம்பிக்கும் கிடைத்தது,
அவன் தற்போது மூன்றாம் ஆண்டுச் சென்னையில் படிக்கிறான், அதே வீட்டில் இங்கிருந்த சில நண்பர்களும் சேர்த்து அந்த வீட்டில் தங்கிப் படிக்கிறான் பேத்திகள் படிப்பை முடித்தவுடன், பெரியவர்கள் இருவரும் தங்கள் வீட்டுக்குத் திரும்பி விட்டனர்.
இளங்கலை BBA படித்தவர்கள், சென்னைக்கு அடுத்து பெங்களூரு செல்வதாக அறிவிக்கவும், தாத்தாவும், அப்பத்தாவும் தாங்களும் வருவதாகச் சொல்ல, பேத்திகள் இருவரும் சத்தியாகிரகம் செய்து அவர்களை நிறுத்தினார்கள். "ஏய் செல்லக்குட்டி, ஏண்டாமா எங்களைக் கழட்டி விடுற ,ஏதாவது திட்டம் போடுறியா?" எனக் கேட்ட தாத்தாவை, உங்களுக்குத் தெரியாமல் ஏதாவது செய்வேனா என ஐஸ் வைத்துச் சமாளித்தாள்.
பெங்களூரூவில் இருக்கும் போது MBA ,வகுப்பில் அறிமுகமானவள் தான் மயூரி, முதல் பார்வையிலேயே அவள் தன் தாயைப் போல் இருக்கிறாள் எனப் பாசம் வைத்தவள் அவளோடு பழகினாள்.
அவர்களுக்கு விடுதி பிடிக்காமல் போக, ஜானகி,அமிர்தா ,மயூரி அவள் தோழி மஞ்சரி என நால்வரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தங்கினர். பல கட்ட ஆலோசனைக்குப் பின்,இரு வீட்டினரும் அவர்கள் வசதி, பாதுகாப்பு என அத்தனையும் உறுதி செய்த பின்பு அவர்களுக்குச் சமையல், வேலைகளுக்கு ஆள் ஏற்பாடு செய்து அங்கே தங்க வைத்திருந்தனர். கடைசிப் பருவம் ப்ராஜெக்ட் செய்ய வேண்டிய தருணத்தில், அவரவர் அப்பாக்களின் நிறுவனத்தில் செய்யாமல், மாற்றிச் செய்வோம் என ஜானகி யோசனை சொல்ல, அதுவும் சரியென புதுச் சூழல் மனிதர்கள் புது அனுபவங்களுக்காக இதனைச் சரி என்றனர்.
இதில் மயூரியின் பாடு அவள் அண்ணனிடம் அனுமதி வாங்கும் முன் பரிதவித்துப் போனாள்.அவ்வளவு கேள்வி,சந்தேகம் என எல்லாம் கேட்டு,ஜானகி,அமிர்தாவுடனும் போனில் பேசி விசாரணை நடத்தி, மயூரி பாதுகாப்புக்குத் தான் பொறுப்பு ஜானகியும், அவள் அண்ணன் அமுதனும், மயூரியின் அண்ணனிடம் பேசிய பின்னே, ஜானகியும் அவனிடம் வேலை செய்யச் செல்வதனால் அனைவரையும் பாடாய்ப் படுத்தி அரை மனதுடன் சரி என்றான்.
இதில் மயூரியை பார்த்தவுடன் ஓர் பாசம் வந்தாலும், ப்ராஜெக்ட் சமயம் வரும் முன் ஒரு மாதம் முன்னால் தான் அவள் தன் உறவு என்பது தெரிய வந்தது.
மயூரியுடன் பேசிப் பார்த்ததில் அவள் குடும்ப வரலாறும், தன் அன்னை மேல் அவர்கள் வைத்திருந்த வெறுப்பும் தெரிய வர, வெறுப்புக்கும், அன்பிற்கும் நூல் அளவே இடைவெளி, என்ற தாரக மந்திரத்தைப் பிடித்துக் கொண்டு, இதில் இரண்டு புறமும் இன்னும் சில இளைய தலைமுறை உறுப்பினர்களைச் சேர்த்து, "ராகினி -ராத்தோட்!" இணைப்பு மிஷனில் இறங்கினாள்.
இதற்கு ஆர் ஆர் மிஷன் எனப் பெயர் கூட வைத்து விட்டாள். இதில் பிரதான உறுப்பினர்கள் ஜானகி, அமிர்தா,அமுதன், சிவபாலன், மயூரி வீட்டில் மஞ்சரி, மற்றும் அவளின் இளைய அண்ணன் ராஜ்வீர்.
இதில் ராஜ்வீரும், அமுதனும் ,லண்டனில் ஒன்றாகப் பிசினெஸ் கோர்ஸ் முடித்தவர்கள், அவர்கள் சந்திப்பில் சில உண்மைகள் தெரியவர, மயூரியையம் ஜானகியையும் ஒரே வகுப்பில் சேர்த்தவர்களும் அவர்கள் தான். அண்ணன்களின் ரகசியம் ஜானகிக்குத் தெரிந்த பின்னே, மிஷன் உருவாகி வேகம் எடுத்தது,இவர்களுக்கு வாட்ஸ் அப் குரூப் கூட உண்டு.அந்த மிஷனின் ஒரு பகுதி மயூரி ,அதனைச் செயல்படுத்த அமுதன்,பாலன்,மஞ்சரி, அவள் அடுத்தச் சில நாட்களில் மயூரியுடன் இணைவாள் .
அடுத்தப் பகுதி ரத்தோட் சாம்ராஜ்யத்தில் ஜானகியின் தடாலடி என்ட்ரி.
தீபா மேம் எப்படி இருக்கீங்க; அருமையான ஆரம்பம்; வாழ்த்துக்கள்
மிக்க நன்றி. உங்கள் கமெண்ட் காணவில்லை என தேடினேன். இந்த கதை தொடர்ந்து தினமும் வரும்.