தொடர் : 2
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
மும்பை விமான நிலையம், பரபரப்பான அந்த மாலைப் பொழுதில் பெங்களூரிலிருந்து தரையிறங்கிய விமானத்தில் வந்து இறங்கினாள் நம் பெண்ணரசி, ஜானகி தேவி. மும்பை மண்ணை மிதிக்கும் போதே, தன் அன்னையை,அவர் பிறந்த வீட்டு உறவுகளுடன் எவ்வாறு சேர்த்து வைப்பது எனும் சிந்தனையில் வந்தாள். ப்ராஜக்ட் அவளுக்கு இரண்டாம் பட்சமே. அமைதியான மலையில் வாழ்ந்தவள் ,இந்த இயந்திர கதி ஊரைப் பார்த்துத் திகைத்து நின்றாள்.
ஜீன்ஸ் பேண்ட் ,காட்டன் டாப்ஸ், தூக்கி போட்ட குதிரைவால், ஹைஹீல்ஸ் சகிதம் சின்ன ஹேண்ட் பேக் இடது கையில் மாட்டிய படி, உள்ளங்கையில் மொபைல் பிடித்து,லக்கேஜ் ட்ராலியை தள்ளியபடி ,பக்கத்தில் தன் அத்தை மகள் அமிர்தாவுடன் இணைந்து வாயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.
ஜானகி,தன் தாய்,தந்தையரின் சரி பாதி கலவை. தாய் போல் கூர் மூக்கு , உதடு, உடல்வாகு. தகப்பனை போல் சிரிக்கும் கண்கள், வட்ட முகம் கருமையான முடி, மற்றும் முக அமைப்பு,சந்தனம் நிறம். புருவங்கள் திருத்தப்பட்டு வேல் விழியால்,முதல் முறை பார்ப்போர் திரும்பிப் பார்க்க வைக்கும் காந்த சக்தி உடையவள்.
தங்களை அழைத்துச் செல்ல வண்டி ஏற்பாடு செய்வதாக மயூரி சொல்லி இருந்தாள், ஆனால் காலை முதல் தன் தோழி உண்மையை மறைத்த கோபத்தில் இவளிடம் பேசவே இல்லை
"ஜானி, நாம தங்கும் இடம் தெரியும் தானே, டாக்சி புக் பண்ணலாமா?" எனக் கேட்டாள் அமிர்தா. "பொறுடி, மயூரி அதெல்லாம் கட்டாயம் ஏற்பாடு பண்ணியிருப்பா வெளியே யாராவது பெயர் பலகையோடு நிப்பாங்க." என்றாள் ஜானகி .
அவர்கள் பார்வையாளர் பகுதியைப் பார்வையால் அலசிக் கொண்டே வந்தனர். "ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டேன், அரை மணி நேரத்தில் வந்துவிடுவேன்.சாரி பார் தி இன்கன்வீனியன்ஸ்!" என ராஜ்வீரிடமிருந்து ஜானகிக்கு மெசேஜ் வந்தது.
வெயிடிங் அறையில் இருந்த இருக்கையில் அமர்ந்தனர். மாலை வெயில் இன்னும் அடங்கவில்லை. ஒரு காபி குடிக்கலாம் என்றாள் அமிர்தா, பக்கத்தில் ஐஸ்கிரீம் கடையைப் பார்க்கவும், ஜானகி ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்றாள் இருவருக்கும் வாக்குவாதம் நடக்க, வழக்கம் போல் ஜானகி சொல்லியது தான் நடந்தது.
அமிர்தாவிடம் லக்கேஜை கொடுத்து விட்டு ஐஸ்கிரீம் கடை நோக்கிச் சென்றாள் ஜானகி. தனக்கு ஒரு பட்டர்ஸ்காட்ச் கோன்,அமிர்தாவுக்கு ஸ்ட்ராபெரி கோன் ஐஸ் வாங்கிக்கொண்டு, கையில் மொபைல், சில்லறை ரூபாய், ஹேண்ட் பேக் என அனைத்தையும் வைத்துச் சர்க்கஸ் செய்து கொண்டிருந்தாள். கவனம் கையிலிருந்ததால் பாதையில் கவனம் இல்லை.
இவை அனைத்தையும் பிடித்தவாறு ,ஒரு திருப்பத்தில் கோன் உருகிவிடும் அவசரத்தில் வந்தவள், எதிரே மொபைலில் பேசியவாறு வந்த இளைஞனைப் பார்க்காமல், அவன் மீதே மோதி விழப்போனாள்.
மோதிய வேகத்தில் இருவர் கைகளிலும் இருந்த பொருட்கள் சிதற, அவன் ,இவள் தோள்பட்டையை இடித்து, ஓர் சுற்று சுற்றி இருவர் கைகளும் தன்னிச்சையாக பற்றி விழப்போன, அவளை இடை வளைத்து அணைத்துத் தாங்கியது அவன் வலிமையான கரம்.
தான் விழப்போவதை உணர்ந்து கண் மூடி அடிப்படப் போவதை அவள் நினைத்திருக்க, யாரோ ஒருவரின் அணைப்பிலிருந்தாள். வாயில் பட்டர்ஸ்காட்ச் ருசி தெரிய, குழப்பத்துடன் மெல்ல அவள் கண் திறந்து பார்க்க அவளை அணைத்திருந்த வாலிபன் முகம் முழுவதும் ஐஸ்கிரீம் அபிஷேகம் ஆகி இருந்தது. அவன் முகத்தில் கொட்டிய மீதி இவள் வாயில் விழுந்திருந்தது.
அதிர்ச்சியில் இருவரும் சிலை போல் இருக்க, சுற்றியிருந்த மக்கள் வேடிக்கை பார்த்தனர். அவன் முதலில் சமாளித்து அவளை நேராக நிறுத்தி அவள் கண்களைப் பார்த்து முறைத்து,”வாட் தே ஹெல்!!!“ என அவன் உறுமலும் "சாரி." என்ற இவளின் கதறலும் ஒரு சேர வந்தது
தூரத்தில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமிர்தா அதிர்ந்து ஓடி வந்தாள். வேகமாக வந்தவள் ஜானகியின் ஹேண்ட் பேகை கண்டெடுத்து,அதிலிருந்து வெட் டிஸ்யூக்களை எடுத்து ,தோழிக்காக பல சாரிகள் சொல்லி அவனிடம் நீட்டினாள். அதை வாங்கித் தன் முகத்தைச் சுத்தம் செய்தான் அந்த இளைஞன். கண்கள் மட்டும் ஜானகியிடம் அனல் கக்கிக் கொண்டிருந்தது.
இதற்கெல்லாம் பயந்தவளா என்ன நம் நாயகி, சோகமாக முகத்தை வைத்து வடிவேலு பாணியில்(வட போச்சே!) ஐஸ்கிரீம் போச்சே! என்றாள். இந்த களேபரத்தில் தன் தோழியின் ஹியூமர் சென்ஸை நினைத்து வந்த சிரிப்பை மறைத்து அவளைப் பார்த்து முறைத்தாள்.
எதிரில் நின்ற வாலிபன் இந்தப் பிடி சாபம் எனத் தரும் துர்வாச முனிவர் போல் நின்று கொண்டிருந்தான். அமிர்தாவின் முக மாறுதல் மற்றும் ஜானகியின் ஆட்டிடிடூயுடில் இருந்து அவள் ஏதோ கேலி செய்கிறார்கள் என அறிந்து கோபத்தோடு நின்றான்.
தன் முன்னே முறைத்து நின்றவனை ஏறெடுத்துப் பார்த்தாள் ஜானகி. ஆறடி உயரம், உடற்பயிற்சியால் செதுக்கப்பட்ட உடல், செவ்வக வடிவ முகம், அடர்த்தியான புருவம், துளைக்கும் கண்கள் அழுத்தமான உதடுகள், மீசை,தாடி இல்லாமல் மழிக்கப்பட்ட கன்னங்கள் என அக்மார்க் நார்த் இண்டியன். ஆனால் சாயல் அறிந்ததாக இருந்தது, இதற்கு முன் எங்கோ பார்த்த நினைவு யோசனையோடு பார்த்து நின்றாள்.
அவளின் ஆராய்ச்சி பார்வையைப் பார்த்து அடக்கப்பட்ட கோபத்துடன், "ஹோகய்"(ஆச்சா)என்றான்.
அப்போதுதான் அவனைப் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பது போல் தான் பார்ப்பது அறிந்து தன் பார்வையை மாற்றினாள். “கண்ணை மூடிக்கொண்டு வருவாயா, மூளையென்ற ஒன்னு இருக்கா இல்லையா???” என ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி மாற்றி வசை பாட ஜானகி தன் பொறுமையை இழந்து கொண்டிருந்தாள். அமிர்தா தான் இவளும் ஆரம்பித்தால் எப்படிச் சமாளிப்போம் எனப் பயந்து நின்றாள்.
சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், ஒரு நாளில் சராசரியாக 940 விமானச் சேவைகள் இருக்குமாம்.பயன்பாட்டாளர், பயணிகளின் எண்ணிக்கை லட்சங்களில் இருக்குமாம். விமானங்களுக்கு 3டெர்மினல்ஸ், பயணிகளுக்கு 2 டெர்மினல்ஸ் நுழை வாயில் என இருக்குமாம்.
எல்லா நாடுகளிலிருந்தும், இந்த மும்பை மாநகருக்கு வந்திறங்கியவர்கள் எல்லாம் ஒழுங்காகச் சென்று கொண்டிருக்க இந்த ஜானகி மட்டும் எப்படித் தான் வம்பை விலைக்கு வாங்குவாளோ? என நொந்தபடி, சிதறிக் கிடந்த இருவரின் அலைபேசிகளையும் சேகரித்துக் கொண்டு இருந்தாள் அமிர்தா.
எதிரே நின்ற வளர்ந்தவன், ஜானகியைக் கோபமான சொற்களால் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தான், ஜானகி இடையில் குறுக்கிட்டுப் பேச முயல ,அவன் விட்டால் தானே. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள், முடியாமல் ,
தன் கையை அவனுக்கு நேரே உயர்த்தி, "ஸ்டாப் இட், என்ன விட்டா போய்க் கிட்டே இருக்கீங்க. பஹூத் ஹோகயா, ஔர் ஏக் சப்த நஹி!" என ஹிந்தி, இங்கிலீஷ் இரண்டிலும் குரல் உயர்த்தி கட்டளை இட்டாள்.
"தப்பு இரண்டு பக்கமும் இருக்கு மறந்துடாதீங்க, நீங்க சத்தமா பேசிட்டா எல்லாம் சரி ஆகிடுமா?" என்ற அவள் குரலில் ஏதோ ஒன்று இருக்க, தன்னை இந்தச் சின்னப் பெண் அடக்குகிறாள் என்ற கோபம், வியப்பு எல்லாம் சேர்ந்து முறைத்து நின்றான். அதற்குள் ஏர்போர்ட் அதிகாரி ஒருவர் கட்டளையின் பேரில் பணியாளர்கள் வந்து அந்த இடத்தைச் சுத்தப்படுத்தினர்.
அமிர்தா சிதறிய அவன் மொபைலை ஒன்றிணைத்து ஒரு மன்னிப்பைக் கண்களில் இறைஞ்சி ,சமாதானமாய் மொபைலை அவன் முன் நீட்டினாள்.உங்களுக்காக விட்டுச் செல்கிறேன் என அமிர்தாவிடம் சமாதானமாகவும், ஜானகியுடன் முறைப்புடன், "உன்னைத் திருப்பி என் வாழ்வில் சந்திக்கக் கூடாது என வேண்டிக்கிறேன்." எனக் கோபத்தை உமிழ்ந்து அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
இந்த இடம் வாஸ்து சரியில்லை என்பது போல்,வளர்ந்தவன் மேல் இருந்த கோபம் குறையாமல் ,அவன் போன திசையை வெறித்து நின்ற தன் தோழியை கையைப் பிடித்து அழைத்த சென்றாள் அமிர்தா.
தங்கள் லக்கேஜ் அனாதையாகக் கிடக்க அதனை எடுத்து வைத்துக்கொண்டு ஜானகியைச் சமாதானம் செய்து கொண்டு இருந்தாள் அமிர்தா.
அமிர்தாவின் அலைப்பேசி ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகங்கள்.(அவள் வாணி ஜெயராம் ரசிகை)என இசைக்க ,அவள் அழைப்பை ஏற்றுப் பதில் கூறினாள்.
ராஜ்வீர் தான் அழைத்தான், அவர்களைச் சஹாரா நுழைவாயில் பகுதிக்கு வெளியே வரச்சொன்னான். அமிர்தா உர்ர்...என முகத்தை வைத்துக் கொண்டிருந்த ஜானகியை, சில சேட்டைகள் செய்து சிரிக்க வைத்து வெளியே அழைத்துச் சென்றாள். வாயில் பகுதிக்கு வரும்போது, ஜானகி தன்னைச் சமன் படுத்தி, புதிய சொந்தமான ராஜ்வீரை மிகுந்த ஆவலுடன் எதிர் கொண்டாள்.
பார்கிங் ஏரியாவிற்கு வந்து தோழிகள் தேட, ராஜ்வீர் வாட்ட சாட்டமாக , ஜீன்ஸ்,டீசர்ட், கூலர்ஸ் என ஹிந்தி படக் கதாநாயகன் போல் நின்றிருந்தான். அவன் அருகில் அவனை விடக் குட்டையாக,பால் வண்ணம், குட்டை முடி , செல்லுலாய்ட் பொம்மை போல், அவன் தோளில் தொங்கிக் கொண்டு, அவனைப் பிரிய மனம் இல்லாமல் அவனோடு நின்றாள் ஒரு பெண்.
பக்கத்தில் சென்ற பின், தோழிகள் இருவரும் மஞ்சரி என அழைக்க , அவன் தோளை விடுத்து, "ஹாய் ஜானி, அம்ரூ!" என இவர்களைக் கட்டிக் கொண்டாள். ராஜ்வீரும் இவர்களைப் பார்த்து புன்னகைத்து, "இந்த மும்பை மாநகருக்கு அழகிய தேவதைகளை வரவேற்கிறேன்." என ஒரு தழுவலை கொடுத்தான், இவர்கள் கலாச்சாரத்தில் அதிர்ந்தாலும், சமாளித்துப் பதிலுக்குப் புன்னகைத்தனர்.
ஜானகிக்கு தன் தாய் வழி மாமன் மகனைப் பார்த்ததில் உணர்ச்சி வயப்பட்டு நின்றாள். "ஹாய் சில் யா, உன்னை பார்த்ததில் ரொம்ப சந்தோசம்." என அவள் கைகளைப் பிடித்தான். அமிர்தா, "கைசே ஹை பாய்." என நலம் விசாரித்தாள். Fine சோட்டி ( தங்கை)எனத் தன் சகோதர முறையைக் கொண்டாடினான்.
மஞ்சரிக்கு நேரம் ஆனது, அவள் இன்று சென்னை சென்று, காலையில் மதுரை சென்று விடுவாள், சிவ பாலன் அவளை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு. மஞ்சரி, மயூரியோடு செல்வதாக இருந்தது அவள் அம்மா பம்மி அழைத்ததால் அவள் பெரியப்பா மகள் நிச்சய விழாவிற்கு வந்து செல்கிறாள். நான்கு நாட்கள் முன் மும்பை வந்தவள் இன்று திரும்புகிறாள். ராஜ்வீரும், மஞ்சரியும் பால்ய விவாகம் ஆனவர்கள். ராஜ்வீர் அண்ணன் ரகுவீருக்குத் திருமணம் முடித்த பின் இவர்களுக்குச் செய்யலாம் எனப் பெரியவர்கள் பேசி உள்ளனர்.
மஞ்சரி மீண்டும் ஒரு முறை மூவரையும் தழுவி ,"நான் உன் ஆளைப் பார்த்துக்கோ, நீ என் புருசனைப் பார்த்துக்கோ!" என அமிர்தாவிடம் கண் சிமிட்டி சொல்லவும், “மஞ்சி, நீ கவலைப் படாமல் போயிட்டு வா, நான் ராஜை பார்த்துக்கறேன்” என்றாள் ஜானகி.
“நோ! நீ பார்த்துக்க வேணாம் தாயே, அதுக்காகத் தான் அம்ரூ கிட்டச் சொன்னேன், அவள் ராக்கி கட்டி, அவளுடைய ராஜ் பய்யாவை நல்லா பார்த்துக்குவா, உன் கூட சௌத்தன் ஜக்கடா (சக்காளத்தி சண்டை) எல்லாம் போட முடியாது.” என்றவள் ,”ஜானி, ஒரு ஹெல்ப், நீ வேணா படே பய்யா , ராஜோட அண்ணனை கரெக்ட் பண்ணேன், என் ரூட்டாவது கிளியர் ஆகும்.” என வேண்டுகோள் விடுக்க,
“போடி, நான் என் மாதாஜிக்காகத் தான் மும்பைக்கே வந்தேன், மீசை இல்லாதவனை கட்டிக்கிட்டு, ரொட்டி தின்னு எல்லாம் என்னால காலத்தை ஓட்ட முடியாது. அதுனால உன் ராஜும் பாதுகாப்பா இருப்பான், போயிட்டுவா!“ என மஞ்சரியை அனுப்பி வைத்தாள் ஜானகி தேவி.
ஆனால் வலிய விதியின் முன் ஜானகி தேவி மட்டும் தப்பிக்க முடியுமா என்ன. ராத்தோட் களின் மாளிகையில் இவர்களது வரவேற்பு எப்படி இருக்கும், அம்மாவின் சொந்தங்களை ஜானகி எப்படி எதிர் கொள்வாள், பொறுத்திருந்துப் பார்ப்போம்.
மகிழ்ச்சி