தொடர் : 3
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
ராஜ்வீர், ஜானகி, அமிர்தா மூவரிடமும் சொல்லிக் கொண்டு விடை பெற்றாள் மஞ்சரி. தோழிகளின் லகேஜை டிக்கியில் ஏற்றி விட்டு ,அவர்களுக்காகப் பின் கதவைத் திறந்து “ப்ளீஸ் கெட் இன்!” என நாடக பாணியில் சொன்னான் ராஜ். அவன் ட்ராமாவைப் பார்த்து நகைத்த படி ஏறி அமர்ந்தனர்.
(இனி வரும் சம்பாசனைகள் ஹிந்தியில் இருக்கும், ஜானவி,அமிர்தா இருவரும் ராகினியின் வளர்ப்பு ஆதலால் மொழி அவர்களுக்குப் பிரச்சனை இல்லை, எனவே நான் மேஜர் சுந்தரராஜன் போல் மொழி பெயர்பு வேலையைச் செய்யாமல், தமிழ் நாவல் என்பதால் ,என் ஹிந்தி மொழிப் புலமையையும் அடக்கிக் கொண்டு தமிழில் தொடர்வோம்.)
"எப்படி இருக்கு எங்க ஊர்,பிரயாணம் சுகமா?" என ஒரு வார்த்தைக்குக் கேட்டான். "ஊரெல்லாம் இனி தான் பார்க்கனும், டிராவல் நல்லாவே இருந்தது, ஆனால் ஏர்போர்ட்ல ஒருத்தனைப் பார்த்தேன், பார்த்தேன் எங்க இடிச்சுகிட்டேன். இங்கே பார் ராஜ், நாமெல்லாம் யாரையாவது இடிச்சா சாரி சொல்லுவோம் தானே, ஆனால் அந்த வளர்ந்த குரங்கு என்ன செய்தது தெரியுமா?" எனவும்,
"என்ன? யார்?" எனக் கதை கேட்டான் ராஜ், "அதான் என்னை இடிச்சவன், கண் இருக்கா, மூளை இருக்கானு திட்ட ஆரம்பிச்சுட்டான், இவனுக்கு மூளை இருக்கா, ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசணும்னு தெரியாது, கடுவன் பூனை, செங்குரங்கு!" என ஜானகி வசைபாடினாள்.
"ஜானி இப்படி எல்லாம் முன்னைப் பின்ன யாருன்னே தெரியாதவரை திட்டாதடி சொல்லப் போனால் அவர் உன்னைக் கீழே விழாமல் காப்பாத்தினார்." என்றாள் அமிர்தா.
"நீ சும்மா இருடி ,பெரிசா வந்துட்டான், வளர்ந்து கெட்டவன், அவன் இடிச்சதுல எனக்குச் சோல்டரெல்லாம் ஒரே வலி தெரியுமா?" என ஜானகி தோள்பட்டையைத் தேய்த்து கொள்ள, "ரொம்ப வலிக்குத்தாடி!" என உண்மையான வருத்தத்துடன் கேட்டாள் அமிர்தா, "ஹாஸ்பிடல் போகலாமா ஜானி?" என வினவினான் ராஜ்.
"இல்லப்பா, ஒன்னுமில்லை பார்த்துக்கலாம், நீ போ." என்றாள்.
இதற்குள் பார்கிங்லிருந்து சற்றுத் தூரம் வந்திருக்க, மற்றொரு நுழைவாயில் நோக்கி காரை செலுத்தினான் ராஜ். "என்ன யோசனை?" எனக் கேட்டாள் ஜானி, அதற்கு ராஜ்,
"பய்யா வர்ற டெல்லி பிளைட்டும் இதே நேரம் தான், நானே பிக்கப் செய்யறேன்னுச் சொல்லி, இன்னோரு காரை வேண்டாம்னு சொல்லிட்டேன். அதான் அவரைத் தேடுகிறேன்." என்றான்.
"அப்போ போன் போட்டு, எங்க இருக்கார்னு கேளு." என்றாள். "போன் செய்தேன் ஸ்விட்ச் ஆப்னு வருது." என்றான் ராஜ்.
ஜானகி ஏதோ ஞாபகம் வந்தவளாக , நானும் மொபைல் ஆன் செய்யிறேன் மாதாஜி கூப்பிடுவாங்க” என ஆன் செய்ய முயல , ஒரு புது நம்பரிலிருந்து ராஜிற்கு அழைப்பு வந்தது.
"ஹலோ!" என்றது எதிர் முனை. தன் அண்ணன் குரலை புது நம்பரிலிருந்து கேட்கவும் குழப்பமாகப் "பய்யா, என்ன வேற நம்பரிலிருந்து கால் செய்யறீங்க?" என்றான்.
“அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன், நீ எங்க இருக்க?", இவன் சொல்ல, "இடதுப் பக்கம் ஸ்லோவ் பண்ணு. நான் வரேன்." என்றான் அவன் அண்ணன். காரை ஓரமாகப் பார்க் செய்தான் ராஜ்வீர்.
ஜானகி, இவன் உரையாடலைக் கேட்டு, மூத்த மாமன் மகனைப் பார்க்க ஆவலாக காத்திருந்தாள். அவள் கையிலிருந்த மொபைல் நழுவி சீட்டுக்கு அடியில் விழ, அதனை எடுக்க ஜானகி கீழே குனிந்தாள். அவள் சிரமப்படுவதைப் பார்த்து அமிர்தாவும் கீழே குனிந்து தேடினாள். இதற்குள் ராஜின் அண்ணன், அவர்கள் இருந்த இடத்திற்கு வந்து காரில் ஏறினான்.
"பய்யா, இது என்ன பெர்ஃப்யூம் யூஸ் பண்ணறீங்க, வித்தியாசமா இருக்கிறது." என்றான் ராஜ்.
"பட்டர் ஸ்காட்ச் அண்ட ஸ்ட்ராபெரி மிக்ஸ்டு ஃப்ளேவர்." என்றான், ராஜவீரின் அண்ணனான ரகுவீர். ஆம் ,சாட்சாத் நம்ம ஜானகியின் அர்ச்சனைகளுக்கும், ஜஸ்கிரீம் அபிஷேகத்திற்கும் ஆளான அதே வளர்ந்து கெட்டவன் தான் ராஜின் அண்ணன் ரகுவீர் சிங் ராத்தோட் .
"புரியலை?" என்றான் ராஜ். அவளை நினைத்தவுடன் ப்ரெஷர் லெவல் ஜாஸ்தியாகி, "அது ஒரு ஜங்லி பில்லி, பத்மாஷ் கைகி, வாயாடி,பாகல் கைகி அவளால் தான் எல்லாம். என்ன ஒரு திமிறு,ஆட்டிட்யூட். என் மேல் ஜஸ்கிரீம் கொட்டுனதும் இல்லாம, என்னையவே எதிர்த்து நிற்கிறா!" எனப் பொரிந்து தள்ளினான் ரகுவீர்.
இவன் தன் சகோதரன் தானா எனச் சந்தேகம் வந்தது ராஜ்வீருக்கு. சாதாரணமாக அதிகம் பேசாதவன் ரகுவீர், எதுவானாலும் ஆக்சன் தான். இப்படிப்பட்ட தன் அண்ணனை இப்படி புலம்ப வைத்தது யார் என அதிசயித்தான்.
இதற்குள் குனிந்து மொபைலைத் தேடிய தோழிகள், புதிதாக வந்தவனின் குரல் பரிச்சயமாக இருக்க, அதிர்ச்சியுடன் நிமிர்ந்தனர். முன்னால் உட்கார்ந்திருந்த ரகுவீர் கண்ணாடி வழியே, பின்சீட்டில் இந்தத் தோழிகளைப் பார்த்துக் கத்தவே ஆரம்பித்து விட்டான்.
"ராஜ், வண்டியை நிறுத்து. இதுங்க தான் அந்த பொண்ணுங்க, இல்லை இல்லை, ஒன்னு தான் பொண்ணு, இன்னொன்னு பைத்தியம், உனக்கு என்ன தைரியம் இருந்தால் என் வண்டியில் ஏறுவ, இன்னொரு தரம் உன்னைய பார்க்கக் கூடாதுன்னு, சொன்னேனா இல்லையா? வம்பு பண்ணனும்னே இதில் ஏறினியா?” என்றவன் தொடர்ந்து ராஜிடம்,
"ராஜ், வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடு உன்னை ஏமாற்றி ஏறினாங்களா, இல்லை உனக்கே தெரியாமல் குஸ் பைடி ஹோகி!” எனக் கோபமாகத் திட்டினான்.
"ஹலோ, நீ யாரு மேன், எங்களை ஃபாலோ பண்ணி இங்க வந்தியா? என்ன சொன்ன உன் மொகரக்கட்டைய பார்க்க எங்களுக்கு ரொம்ப ஆசை பாரு! போலீஸ் ஸ்டேஷன் போறாராம், நான் தான் இவன் மேல வெர்பல் ஹராஸ்மென்ட் கேஸ் போடணும், ராஜ் வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடு." என அவன் பாணியில் சொன்னாள் ஜானகி.
"யூ ஆர் க்ராசிங் யுவர் லிமிட், என்னை யாருன்னு தெரியாமல் மோதாத!" என்றான் ரகுவீர்.
"ஆமாம் இவரு என் முறைப் பையன் பாரு, குலம், கோத்திரம், ஜாதகம் எல்லாம் பார்த்துப் பேச!" என்றாள் ஜானகி. நடுவே இவர்கள் சண்டைக்குள் நுழைந்து பேச முயன்று தோற்றான் ராஜ்.
"ஏ சும்மா இருடி." என்ற அமிர்தாவிடம்."முறைப்பையன் என்ன அர்த்தம்." என வினவினான் ரகுவீர்.
"பியான்ஸி!" என்று இவளைப் பார்த்து முறைத்த ஜானகியைப் பார்த்துக் கொண்டே தயங்கி பதில் சொன்னாள் அமிர்தா.
"என்ன பியான்ஸியா ,உன்னைய மாதிரி ஒருத்தி வந்தால் நான் தற்கொலை பண்ணிக்குவேன், இல்ல சன்னியாசம் போவேன்.உன்னையெல்லாம் ஒரு நிமிஷம் கூடச் சகிக்க முடியாது." என்றான் ரகுவீர்.
ராஜ், "அடுத்த டாக்ஸி ஸ்டாண்டில் இவங்களை இறக்கி விடு!" என்றான்.
"பய்யா, அது முடியாது.” என்றான். "ஏன் அவள் உன்னைய மிரட்டினாளா?" எனக் கண்களில் பொறி பறக்கக் கேட்டான்.
“பய்யா, ப்ளீஸ் அவங்க இரண்டு பேரும் மயூரியின் ஃப்ரெண்ட்ஸ், பெங்களூரில் இருந்து நம்ம கம்பெனியில் ப்ராஜெக்ட் பண்ண வந்திருக்காங்க. ஜானகி தேவி அண்ட அமிர்தவள்ளி” என பெயரைச் சிரமப்பட்டு சொல்லி முடித்தான் ராஜவீர்.
"ஜானி! இவர் என் படேபய்யா, ரகுவீர் சிங் ராத்தோட், ராத்தோட் குரூப் ஆப் கம்பெனிஸ் MD." என்று அறிமுகப்படுத்தினான். ரகுவீர், ஜானகி இருவரும் முறைத்தபடி அமைதியாக இருந்தனர்.
அமிர்தா தான் மௌனத்தைக் களைத்தாள். "ஹலோ சார், மயூரி உங்களைப் பற்றி நிறையச் சொல்லி இருக்கா. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சந்திக்க நேரிடும் நினைக்கலை, நான் அமிர்தா, இவள் ஜானகி!" என அறிமுகம் செய்து கொண்டு வணக்கம் சொன்னாள். ஜானகியையும் கண்களால் ஜாடைக் காட்டினாள்.
அமிர்தா பேசியதைக் கேட்டு தலை அசைத்து ஏற்றவன். "ஆனால் உங்கள் ஃப்ரெண்டு அப்படி நினைக்கலை போல! என்றான் கண்களில் அலட்சியத்துடன்.
"இவர் தான் ரகுவீர்ன்னு நான் எப்படி நம்பறது?" என அசராமல் கேட்டவளை பார்த்து ராஜ், அமிர்தா இருவரும், ‘இவளுக்கு கொஞ்சம் கூட பயம் இல்லையே’ என அதிர்ந்தனர்.
‘எல்லாம் திமிர், வாடி வா அதை அடக்குகிறது தான் என் முதல் வேலை.’ என மனசுக்குள் கருவி, அலட்சிய பார்வைப் பார்த்தான் ரகுவீர். "வாடா மச்சான் வா, இந்த ஜானகி கிட்டையேவா உன்னோட ஆட்டிட்யூட், உன்னை மட்டும் இல்லை உன் டோட்டல் குடும்பத்தையும் மாற்றிக் காட்டலை சிவகாமி பேத்தி ஜானகி தேவி இல்ல நான்.' என மனதிற்குள் சவால் விட்டாள் ஜானகி.
புயல் அடித்து ஓய்ந்த அமைதி இருந்தது. மௌனமாக மும்பை நகர் சாலையில் வண்டி ஓட, இருவர் உள்ளத்திலும் மற்றொரு புயல் உருவாகிக் கொண்டு இருந்தது.
ஜானகி தேவி இந்தக் கொங்கணக் கரையில் வந்திறங்கிய தினத்தின் காலைப் பொழுதில் தான் ஸ்வர்ன மயூரி சிறுமலை சென்றடைந்தாள்.
சிவகாமிப் பாட்டி சாமர்த்தியமாகத் தன் மருமகளின் மருமகளை வீட்டில் தங்க வைக்க, அமுதன் அவளை மேல் தளத்துக்கு அழைத்துச் சென்றான்.
சிறுமலைப் பகுதியிலிருந்த இவர்கள் வீட்டிற்குச் சிவ மாளிகை எனப் பெயர் சூட்டி இருந்தனர்.
ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் விஸ்தாரமாய் அமைந்தது இவர்கள் வீடு. மலைப் பகுதி ஆதலால் இரண்டு அடுக்குடன் நின்றது வீடு.
கிழக்கு நோக்கிய வீட்டில் முகப்பிலிருந்து வீட்டைச் சுற்றி தாழ்வாரம் உண்டு. வீட்டின் நான்கு புறமும் வாயில் கதவு உண்டு. உள்ளே நுழைந்தவுடன் ஒரு பெரிய ஹால், ஹாலின் மூன்றாம் கட்டிலிருந்து மாடிப்படி அகலமாக ஒன்றாக ஆரம்பித்து இரண்டாகப் பிரியும். ஹாலின் இடப்புறம் அடுப்படி அக்னி மூலையிலும், ஸ்டோர் ரூம், யுடிலிட்டி ஏரியா எனப் பிரிக்கப்பட்டு இருக்கும். இடதுபுறம் நீண்ட மேஜைகளைக் கொண்ட டைனிங் ஹாலும் உண்டு. அதிலிருந்து தாழ்வார வாசல் இருக்கும்.
இந்த டைனிங் நேர் எதிரே பூஜை அறையும், அதை ஒட்டி தாத்தா பாட்டி அறை இருக்கும். ஹாலின் வலது புறம் மூன்று சூட்டுகள் உண்டு. அவை அண்ணன் தம்பி இருவருக்கும் மீதம் ஒன்று விருந்தினருக்கு.
ஒவ்வொரு சூட்டும் ஒரு சிறிய ஹால், அதிலிருந்து உள்ளே படுக்கையறை, அதற்குள் ஒரு கதவைத் திறந்தால் ஒரு புறம் ட்ரெஸிங் ரூம், மறுபுறம் மாடர்ன் குளியலறை எனச் சகல வசதியுடன் இருக்கும். இது அல்லாமல், கீழ் தளத்தில் வீட்டிலிருந்து சில வேலைகளைப் பார்க்கும் வசதியுடன் ஒரு அலுவலகம் அறையும் இருக்கும். இந்தப் பக்க வாசல் கார் பார்கிங்கிற்குச் செல்லும்.
மாடிப்படிக்கு அடியில் உள்ள பகுதியில் ஷோபா போடப்பட்டு இருக்கும். அதன் நேரே வெளியேறும் பின்புற வாசல், வீட்டின் பின்புறத்தில், அவுட் ஹவுஸ், ஜிம், டென்னிஸ் கோர்ட் எல்லாம் உண்டு. இங்கும் கலைநயம் மிக்க ஸ்டோன் பென்ச் ஓரங்களில் போடப்பட்டிருக்கும்.
மேல் தளத்தில் 6 சூட்டுகள், கீழே இருப்பதைவிடப் பெரியதாக இருக்கும். பின் புறத் தாழ்வாரத்திலிருந்து மாடிக்கும், அதற்கு மேல் மாடிக்கும் படி உண்டு.
இரண்டாம் தளத்தில் இரண்டு விருந்தினர் சூட்டுகளும் ஒரு ஹால், மீதி பாதி ரூஃப் கார்டன் ஆக மாற்றியிருந்தார்கள்.
முதல் தளத்தில் உள்ள வலது பக்க முதல் அறை அமுதனுடையது, இரண்டாவது ஜானகியுடையது. மூன்றாவது அறையைத் தான் மயூரியும், மஞ்சரியும் தங்குவதற்கு ஒதுக்கி உள்ளனர். இடது புறம் உள்ள அறைகள் சிவ பாலன் , மற்றும் சிவ கணேஷ் உடையது. பெயருக்குத் தான் தனித்தனி அறை ,ஆனால் அவர்கள் இருவரும் தங்குவது ,தூங்குவது எல்லாம் அமுதன் அறையில் தான்.
தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்த மயூரிக்கு தான் என்ன செய்வது என்றே புரியவில்லை. ஜானகி மேல் மிகுந்த கோபத்திலிருந்தாள். அதனால் அவள் அழைப்பை ஏற்கவில்லை, அமிர்தா நம்பரிலிருந்தும் கூப்பிடுவாள் என அவள் அழைப்பையும் தவிர்த்தாள்.
தன் அத்தை வீடு, இது என்பதில் அதிர்ச்சி. ஜானகியின் தாத்தாவின் வார்த்தைகள், அவள் மனதில் ஆழமாய்ப் பதிந்திருந்தது. மயூரி ரகுவீரை ஃபாலோ செய்பவள், எனவே தன் அத்தை பற்றிய விசயத்தை மயூரியிடம், மறைத்து அனுப்பி வைத்தான் ராஜ்வீர்.
இங்கு வந்து, நேரில் புவாஷாவைப் பார்த்த பிறகு மனம் மாறுவாள், என நம்பிக்கை வைத்து மற்றவர்களுக்கும் (மிஷன் RR) நம்பிக்கை தந்தான். அதே போல், பெரியவர்களின் வார்த்தையில் சமாதானம் ஆனாள். குளித்துத் தயாராகி நின்றவளுக்கு ரகுவீரிடமிருந்து அழைப்பைக் கொண்டு வந்தது பேசி.
"ஹேய் மேரி சோட்டி, மேரி லாடு கைசி ஹோ. அங்கே நல்லபடியா போய் சேர்ந்திட்டியா, நஹி தோ லௌட் ஆவ் மேரி லாடு!" என்றான் ரகுவீர். (சின்னவளே எப்படி இருக்க என் செல்லம்.ஏதாவது பிரச்சனைனா திரும்பி விடு)
தன் அண்ணன் குரல் கேட்டு மகிழ்ந்தவள், அவன் சாதாரணமாய்க் கேட்டதில் அதிர்ந்து, பின் சிணுங்கலுடன் சமாளித்தாள். "பய்யா, நீங்க எப்பவுமே இப்படித்தான் நான் எங்க வந்தாலும், இப்படியே சொல்லுவீங்க, தி க்ரேட் ராதோட் ஃபேமிலி வீரமங்கை, வந்த காரியத்தை முடிக்காமல் வந்தால் நம்ம குல பெருமைக்கு என்ன ஆகிறது, இங்கே எல்லாமே பைன். ஜானி ஃபேமிலி ரொம்ப நல்லா பார்த்துகிறாங்க, நீங்க கவலைப் படாதீங்க." என்றாள்.
இன்னும் சில பேச்சுக்கள், விசாரிப்புகள் என மொத்த குடும்பத்தையும் கான்ஃப்ரன்ஸ் காலில் ஸ்பீக்கரில் பேச வைத்து போனைக் கட் செய்தான்.
மயூரியை அழைக்க வந்த அமுதனுக்குக் கதவைத் திறந்த நேரம் ரகுவீர் அழைப்பு வந்தது .தன் பய்யாவின் குரலைக் கேட்டதும் அமுதனை மறந்து, அவள் திரும்பி நின்று பேசிக் கொண்டிருந்தாள்.
அமுதன், வாசலில் தன் கையைக் கட்டிக் கொண்டு அவள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவள் மேல் ஒரு நல்ல மதிப்பு தோன்றியது.
அலைபேசியில் பேசி முடித்த மயூரி, யாரோ தன்னைக் கூர்ந்து நோக்குவதை உணர்ந்து திரும்பினாள். தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்த அமுதனைப் பார்த்து அதிர்ந்தவள்,
"உங்களுக்கு மேனர்ஸே கிடையாதா? ஒரு பெண்ணின் அறைக்கு வரும்போது கதவைத் தட்டணும்னு தெரியாதா?" என்றாள்
"பாசமலர்கள் பேசினா, சுத்தி நடக்கிற எதுவுமே தெரியாதோ?
நான் கதவைத் தட்டாமல் தான் நீங்க திறந்திங்களோ?" என்ற அமுதனின் கேள்வியில், ஒரு நொடி யோசித்தவள்,
"அதென்ன பாசமலர் அதுக்கு என்ன அர்த்தம், நீங்க என்னை கிண்டல் பண்றீங்களா?" அடுத்த கேள்வி, "ஒன்றுமில்லை அப்பத்தா, ஐ மீன் என் தாதிமா, சாப்பிட கூட்டிட்டு, வர சொன்னாங்க." என்றான்.
"நான் கேட்டதுக்கு நீங்க பதிலே சொல்லலை?" என சண்டைக்கு வந்தவளிடம், "ம்ம்ம் சொல்லுவோம்." என்றபடி முன்னே நடந்தான்.
"ஹலோ, எனக்கு பதில் வேணும்." என்றாள். அவன் காதில் வாங்காமல் கீழிறங்கிச் செல்ல, அவனோடு சண்டையிட்டவாறே டைனிங் வரை வந்திருந்தனர். டைனிங் மேசையில் ஏற்கனவே மொத்த குடும்பமும் இவர்களுக்காகக் காத்திருந்தனர். மயூரி தயங்கி நிற்க,
"வா ஆத்தா, மயூரி கண்ணு, உன் அத்தைமார் உனக்காகத் தான்சமைச்சிருக்காங்க, வந்து சாப்பிடு வா!" எனத் தமிழில் பேசினார் சிவகாமி அப்பத்தா.
மயூரிக்கு, பாட்டி பாசமாக அழைக்கிறார் என்பது வரை புரிந்தது.
அனைவரின் கவனமும் மயூரி மீதே இருக்க எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தவளின் பார்வை, தன் அத்தை ராகினியிடம் வந்து நின்றது. அவர் முகம் வாடியிருப்பதைக் கண்டு மயூரிக்கும் சங்கடமாக இருந்தது.
டைனிங் டேபிளில் அனைவருடனும் சேர்ந்து சாப்பிட்டாள். அதில் சில நார்த் இன்டியன் டிஸ்சஸும் இருக்க, அதன் சுவை தங்கள் வீட்டின் சுவை போல் ருசித்ததில் அது தன் புவாஷாவின் கைபக்குவம் எனப் புரிந்து கொண்டாள்.
சாப்பிட்ட பின், அவள் தன் ப்ராஜெட் மற்றும் அலுவலகம் செல்வது பற்றிக் கேட்க, "இன்னைக்கு ஒரு நாள், ரெஸ்ட் எடுமா, நாளக்கு உன் ஃப்ரண்டும் வந்த பிறகு வேலையை ஆரம்பிக்கலாம்." என்றார் சிவ குரு நாதன்.
"ஓகே அங்கிள்.” என்றாள் மயூரி. அன்றைய தினம் மயூரிக்கு, புது இடம், மொழி அறியாத ஊர், சில சங்கடங்கள் இருந்தாலும், தனக்கும், இக்குடும்பத்திற்குமான ஓர் பிணைப்பு இருப்பதையும் உணர்ந்தாள்.
மயூரிக்காக, அன்றைய தினம் தன் வேலைகளை ஒதுக்கி அவளோடே கழித்தான் சிவபாலன். கொஞ்ச நேரம் பேசியதில் இருவருக்கும் ஓர் தோழமை ஏற்பட்டு இருந்தது.
"எங்க உன் பிக்பாஸ் காணோம்?" எனக் கண்களைச் சுழற்றி தேடினாள்.
"தாத்தாவையா, பெரியப்பாவையா யாரை கேட்கிறீங்க?" என்றவனிடம்,
" உன் ப்ரோ, வச்ச கண் வாங்காம பார்த்துட்டே இருப்பாரே! கேமரா ஐ!" என்றாள்.
அதே நேரம், அமுதன் மாடிப் படியில் இறங்கியவன், டக்கின் சர்ட், ஃபார்மல் பேண்ட், ஷூ சகிதம் இறங்கி வர, எளிமையாகவும்,அதே சமயம், ஓர் ஆளுமையுடன் வந்தவனைக் கேள்வியோடு பார்த்தாள். பாலன் அவள் சொன்ன பிக்பாஸ், டைடிலில் சிரிக்க.
"என்னன்னு சொன்னா ,நானும் சிரிப்பேன் தம்பி!" என்றான் அமுதன்.
"நத்திங் ஆபிஸ்க்கு, கோட், சூட் போட வேண்டாமா? பார்மல் ட்ரெஸ்ஸில் இல்லையே." எனப் பேச்சை மாற்றினாள் மயூரி.
"இங்க இதே ஃபார்மல் தான், இங்க இருக்கும் வெயிலுக்கு நாங்க சூட் போடறதில்லை. பட், சிரிச்சதுக்கு என்ன காரணம்?" என விடாப் பிடியாக கேட்கவும், "அண்ணன், அது வந்து..." எனப் பாலன் ஆரம்பிக்க.
"பாலா அது நமக்குள்ள ஃப்ரண்ட்ஸ் பர்சனல்,வெளிய சொல்லாதே!" என்றாள் மயூரி .கூர்மையான பார்வையுடன் என்கிட்டையேவா என நினைத்து,
"நீங்க என்னை கிண்டல் பண்றீங்களா?" என அவள் பாணியில் கேட்டான் அமுதன்.
அவன் பார்வையைப் பார்த்து, மயூரி கண்களால் சைகை காட்ட பாலன் விழுந்து விழுந்து சிரித்தான். அதே நேரம் சிவகுரு நாதன், "போகலாமா அமுதா?" என்றபடி கிளம்பி வந்தார்.
"சரிப்பா, இதோ!" என அவளை உறுத்துப் பார்த்தான். அதற்குள், ராகினி தஹி சீனி- தயிரில் சீனி கலந்தது, எடுத்து வந்தார். இன்று ஒரு முக்கியமான டீல், முடிக்கப் போகிறார்கள். அப்பாவும்,மகனும் அதற்காக சென்டிமென்ட்.
இதுவும் அவர்கள் குடும்பத்தில் பின்பற்றுவது, அவள் தாதிஷா, முக்கியமான டீல் முடிக்கும் போது,இதைக் கட்டாயம் கொடுத்து அனுப்புவார். தன் புவாஷா இங்கும் இதைப் பின்பற்றுவதில் அவளுக்கு மகிழ்ச்சி.
அப்பத்தா பூஜை முடித்துத் திருநீறு அணிவித்தார். தெய்வா தண்ணீர் கொடுக்க, அதை வாங்கி ஒரு மடக்கு குடித்தனர். பிறகு எல்லாரும் வாழ்த்துக் கூற, இவளும். "குட் லக் அங்கிள்!" என்றவள் அமுதனிடம் கட்டைவிரல் உயர்த்தி "ஆல் தே பெஸ்ட்!“ என்றாள்.
சிவகுரு நாதன், "சந்தோஷம்மா, ஒரு பொண்ணு இருந்தால் வீடே அழகு தான், ஜானகி இல்லாத குறையைத் தீர்த்துட்ட." என அவள் தலை மீது கை வைத்து வாஞ்ஞையாகப் பார்க்க,அதி ல் சொல்ல இயலாத ஒரு பாசத்தை அனுபவித்தாள் மயூரி.
சண்முகநாதன், வெளியே கிளம்பிக் கொண்டிருக்க, "அங்கிள் உங்கள் ரிசார்ட் ,இங்க பக்கம் தானே போய்ப் பார்க்கலாமா?" என மயூரி கேட்க,
"வாமா, கட்டாயம் போகலாம். நீ ரெஸ்ட் எடுக்க வேண்டாமா?" என்றார்.
"இல்ல அங்கிள், ஐயம் ஓகே நான் மதியம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்." எனவும்,
"சரிமா, பாலா நீயும் கூட வா, மருமகள் பார்த்து முடிக்கவும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திரு." என்றார். தன் அத்தையுடன் பேசுவதைத் தவிர்த்து எல்லாரிடமும் ஓர் தலை அசைவுடன் கிளம்பினாள் மயூரி.
மயூரி, ராகினி உறவு எப்படிச் சீராகும். நம் நாயகி ஜானகி எப்படி ராத்தோட் குடும்பத்தை எதிர் கொள்வாள்..