உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
கந்த சஷ்டி கவசம் -விளக்கம்
கந்த சஷ்டி கவசம் என்றல் என்ன?
கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.
சஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌணர்னமிக்கும் அடுத்து வரக்கூடிய ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். செவ்வாய் அதிபதி முருகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி,
சஷ்டி என்பது சூரனோடு முருகன் போர் புரிந்த காலம் ஆகும். போரிலே மாமரமாக நின்ற சூரனை இரு கூறுகளாகப் பிளந்து மயிலாகவும் சேவற் கொடியாகவும் தன்னோடு வைத்துக் கொண்டார். இதனை சங்கரன் மகன் சட்டியில் மாவரத்தான் என்று வட்டார மொழிச் சொற்களில் கூறுவது உண்டு. இந்த நாட்களில் விரதம் இருந்து முருகனை நோக்கி தொழுவது சஷ்டி விரதம் ஆகும்.
சஷ்டி பொழுதில் கணவன் மனைவி இருவரும் இணைந்து விரதம் இருந்தால் மக்கட் பேரு கிடைக்கும். இதனை “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்று கூறுவது உண்டு. “சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை” என்றும் கூறுவார்கள்
சஷ்டி என்றால் ஆறு, ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர். மனக்கவலை நீங்க ஆறுதல் அளிக்கும் ஆறுமுகன். முருகனை வணங்க எல்லா தீய வினைகளும் ஒழியும் வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.
இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள். இவர் பெரிய முருக பக்தர். பழனியில் கிரிவலப் பாதையில் பலரும் நோயினால் அவதிப்படுவதை பார்த்து மனம் வருந்தி அதனை தீர்க்க முருகனை வேண்டி இயற்றப்பட்ட பாடல் ஆகும்.
கந்த சஷ்டி கவசம் என்ன பயன்?
இந்த கவசத்தை படிப்பதால் அல்லது பாடுவதால் நமது மனதில் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். இதில் உள்ள 240 வரிகளை தொடர்ந்து வாய் திறந்து படுவதால் நாளமில்லா சுரப்பிகள் சீராக வேலை செய்யும், ரத்த ஓட்டம் சீராகும், உடல் குணமடையும், மனஅமைதி கிடைக்கும், புத்துணர்ச்சி ஏற்படும். இதனால் கந்தர் சஷ்டி கவசம் என்னும் இந்நூலை வாயால் படிப்பதோடு மட்டுமல்லாமல், நெஞ்சில் பதிக்கவும் செய்யவேண்டும். உணர்ந்து முழுமனதோடு பாட வேண்டும். அப்போது தான் முழுப்பலனும் கிட்டும். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் மனதார நினைத்து சரி படுத்துவது யோகக் கலையில் ஒருவித முறையாகும். இதனை மறைப்பொருளாக சஷ்டியில் கொண்டுள்ளது.
கொடிய விஷமும் கண்களுக்கு, தெரியாத பில்லி சூனியங்களும், சஷ்டியை படிக்க படிக்க நம்மை விட்டு விலகும். இதனை எந்த நேரத்திலும் படிக்கலாம். தீராத பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் படித்து வந்தால் எப்பேர்ப்பட்ட பிரச்சனையும் முருகன் தீர்த்து வைப்பார் அல்லது தீர்க்க வழி காட்டுவர்.