Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு கந்த சஷ்டி கவசம் -விளக்கம்-2

வகைகள் : கட்டுரைகள்/ ஆன்மீகம்

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


கட்டுரைகள்

கந்த சஷ்டி கவசம் -விளக்கம்-2

கந்த சஷ்டி கவசம்

“துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்

பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்

நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்

கந்தர் சஷ்டி கவசம் தனை”.

கந்தர் சஷ்டி கவசம் என்னும் இந்த நூலை (துதிப்போர்க்கு) படிபவர்களுக்குக் வலிமை வாய்ந்த கொடிய வினை (வல்வினை போகும்) இடர்ப்பாடுகள் துயரங்கள் போகும் (துன்பம் போகும்) நெஞ்சில் பதியும் படி. உணர்ந்து முழுமனதோடு ஓதுபவர்களுக்குக் (பதிப்போர்க்கு) செல்வம் சேரும் மேலும் வந்த செல்வம் குறையாமல் பெருகும் (கதித்து ஓங்கும்) ஆணவம் கன்மம் மாயை எனும் மூன்று மலங்கள் இல்லாத தூயவன் (நிமலன்) அருளால் ஆழ்ந்து தியானம் மூலம் இறைவனை உணரும் நிலை (நிஷ்டை) கைகூடும். 

 

அமரரிடர் தீர அமரம் புரிந்த

குமரனடி நெஞ்சே குறி.

அமர்களாகிய தேவர்களின் துயரை போக்க போர் புரிந்த குமரன் காலடி நோக்கியே நம் மனம் வணங்கி நிற்கட்டும்.

 

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்

சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்

சூரசம்காரம் எனும் சஷ்டி பொழுதில் சரவணபவ என்ற ஆறு எழுத்து மந்திரத்தை மனதிற்குள்ளே கூறிக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கு உதவும் செங்கதிர் (சிவப்பு நிறம் கொண்ட) வேலோன்.

 

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்

தன்னுடைய திருப்பாதங்கள் இரண்டிலும் பல மணிகளால் ஆன சதங்கை என்னும் அணிகலனானது ராகத்தைப் பாட கிண்கிணி என்னும் மணிகள் அசைந்து ஆட
எல்லார் மனத்தையும் கவர்ந்து ஈர்க்கக்கூடிய திருநடனம் புரியும் மயிலை வாகனமாகக் கொண்ட குமரக் கடவுள் என் கண்முன்னே எழுந்தருளி

 

கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்து

வரவர வேலா யுதனார் வருக

வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற

மந்திர வடிவேல் வருக வருக!

என்னைக் காத்து அருள் செய்யும் பொருட்டு  கையில் வேல் ஆயுதத்தை உடைய குமரக்கடவுள் வந்தருள்வாராக! வேல் ஆயுதம் கொண்டவரே வருக!!மயிலை வாகனமாகக் கொண்ட முருகக் கடவுள்வந்து அருளுக! 

 

இந்திரன் முதலாக  இந்திரன் (கிழக்கு) – தேவர்களின் அரசன்.,அக்னி (தென் கிழக்கு) – நெருப்பு கடவுள்,எமன் (தெற்கு) – இறப்பு கடவுள், நிருத்தி (தென் மேற்கு) – அழிவு மற்றும் அழியாத தன்மையுடைய தெய்வம்,வருணன் (மேற்கு) – கடல் மற்றும் நீரின் கடவுள், வாயு (வட மேற்கு) – காற்று மற்றும் வாயுக்களின் கடவுள், குபேரன் (வடக்கு) –செல்வத்தின்  கடவுள்,ஈசானன் (வட கிழக்கு) – ஈசனின் (இறைவனின்) ஒரு வடிவம்.எட்டுத் திசைகளில் உள்ளவர்கள் எல்லாம் வணங்கும் பெருமையும் மந்திர வலிமையும் உடைய கூர்மையான வேலாயுதமானது என்னைக் காத்து வந்து அருளுக! 

 

வாசவன் மருகா வருக வருக

நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக

நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!

சரவண பவனார் சடுதியில் வருக

தேவேந்திரனின் மருமகனே! வந்து அருள்க அன்பு மிகுந்த குறவர்களிடையே வளர்ந்த வள்ளியம்மையாரின் எண்ணத்தில் என்றும் நிலைத்திருக்கும் கந்தக்கடவுள் வந்து அருள்க! ஆறு திருமுகங்களைக் கொண்ட தலைவனே வந்து அருள்க! திருநீற்றை திருமேனியில் அணிகின்ற வேலாயுதபாணியே! நாள் தோறும் வந்தருளுக! சிரகிரியில் (சென்னிமலையில்) எழுந்தருளியுள்ள வேலவனே! விரைவாக வருக சரவணப் பொய்கையில் உதித்த ஆறுமுகக் கடவுளே சீக்கிரமாக வந்து அருள்க!

 

ரவண பவச ர ர ர ர ர ர ர

ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி

விநபவ சரவண வீரா நமோநம

நிபவ சரவண நிறநிற நிறென

வசுர வணப வருக வருக

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

ரவண, பவச, ரரா. ரிவண பவச ரி ரி  "சரவணபவ' என்பது ஆறு எழுத்து மந்திரமாகும். அதில் உள்ள எழுத்துக்களை முன் பின்னாக மாற்றியமைத்து உச்சரிப்பதும், ''போன்ற எழுத்துக்களை அடுக்கடுக்காக உச்சரிப்பதும், முருகப் பெருமானை மனதில் நிலைபெறச் செய்யும் மந்திர முறையாகும். 

 

விணபவ சரவண வீரா நமோ நம-சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திர மூர்த்தியாக விளங்கும் வீரரே உம்மை நான் வணங்குகிறேன். நிபவ சரஹண நிற, நிற நிறென-ஆறெழுத்து மந்திரத்தின் ஒளிவடிவமாய் பிரகாசிக்கின்ற. சரவணப் பொய்கையின் வீராதி வீரன் இறைவன், தனது வாகனமான மயிலின் மீது வந்தடையும் அவனை வணங்குகிறோம். அசுரர்களுக்கு எதிரான போரில் தேவர்களின் வீரத் தலைவனாக இருப்பவரை வணங்குகிறோம். 

 

என்னை ஆளும் இளையோன் கையில்

பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க

விரைந்தெனைக் காக்க வேலோன் வருக

என்னை ஆட்கொண்டு அருளும் சிவபெருமானின் இளைய குமாரரும் வேலாயுதத்தை ஏந்தியவருமாகிய முருகக் கடவுள் கையில் பன்னிரண்டு ஆயுதங்களும் பாசமும் அங்குசமும் பரந்து விரிந்த பன்னிரண்டு திருக்கண்களும் விளங்க என்னைக் காக்க வேகமாக வந்தருள்க!

 

ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்

உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்

நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்

குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

ஐயும் கிலியும் செளவும் றீயும் ஒவ்வும் என்பன மந்திர வார்த்தைகள் இது 'ஈம்,' 'கிள்ம்,' 'சௌம்' என்ற பீஜ மந்திரங்கள் குறிக்கிறது. 'பீஜ' அல்லது 'விதை' என பொருள் சொற்களின் தொடராக இருந்து, அதற்கு ஒரு தனிப்பட்ட 'சக்தி'யையும் அளிக்கிறது.
பீஜ மந்திரங்களில் நுண்மையான மற்றும் மர்மமான உள் அர்த்தம் உள்ளது.

 ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்: விழிகளும், கரங்களும் தெய்வீக அடையாளங்களுடன் இணைந்து, படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தெய்வீக பண்புகளை குறிப்பிடுகின்றன. உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்: உய்யும் ஒளியாகவும் (தெய்வீக பிரகாசம்-அருட்பெரும் ஜோதி), உயிரின் ஆதியாகவும், செழிப்பும் காத்திடும் ஆற்றலாகும். கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்: கரங்களிலும் ஒளி, இந்த ஒளி தெய்வீக காந்தம் மற்றும் சண்முகனின் பிரகாசமான உருவம் மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது. நிலைத்து நிற்குமாறு எனக்கு முன் நாள் தோறும் ஒளிவீசுகின்ற ஆறுமுகனாகவும் நீயும் உன்னதமான, தனித்துவமான ஒரு ஒளி “அருட்பெரும் ஜோதி” அல்லது சிறப்பு ஆறுமுகனின் மகிமையுடன் பொருந்தி, மிக உயர்ந்ததாக இருக்கும், நமது உடலில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி சிவ அருளை பெற்று ஒவ்வொரு நாளும் மேலோங்க நம் மனத்தில் குடியிருக்கும் முருகன் (குகன்) வந்து அருள்க

 

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!