Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு கந்த சஷ்டி கவசம் -விளக்கம் -3

வகைகள் : கட்டுரைகள்/ ஆன்மீகம்

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


கட்டுரைகள்

கந்த சஷ்டி கவசம் -விளக்கம் -3

ஆறு முகமும் அணிமுடி ஆறும்

நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்

ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்

ஆறு திருமுகங்களும், அழகிய மகுடங்கள் ஆறும், திருநீறு அணிந்த ஆறு திருநெற்றிகளும், நீண்டு நெளிந்திருக்கும் புருவங்களும், பன்னிரண்டு திருக்கண்களும், பவளம் போல் சிவந்த ஆறு திருவாய்களும், சீரான ஆறு திருநெற்றிகளிலும் ஒன்பது வகை இரத்தினங்கள் பதித்த சுட்டி என்னும் ஆபரணமும், பன்னிரண்டு செவிகளிலும் விளங்குகின்ற குண்டலம் என்னும் காதணியும், வலிமை வாய்ந்த பன்னிரண்டு தோள்களிலும் அழகுபொருந்திய திருமார்பில்

 

பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து

நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்

செப்பழ குடைய திருவயி றுந்தியும்

துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்

நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

பலவகையான ஆபரணங்களும் மார்புப் பதக்கமும் நல்ல மணிகளைக் கொண்ட நவ ரத்தின மாலையும் அணிந்து மூன்று புரிகளைக் கொண்ட பூணூலையும், முத்து மாலையையும் அணிந்த திருமார்பும், புகழத்தக்க அழகுடைய மேன்மையான வயிறும், கொப்பூழும் அசைந்த இடுப்பிலே சுடர்விட்டு ஒளிபரப்புகின்ற பட்டாடையும்
நவ ரத்தினங்கள் பதித்த பார்ப்பதற்கு வரிசையாக அழகுற அமர்ந்துள்ளது

 

இருதொடை யழகும் இணைமுழந் தாளும்

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க

இரண்டு தொடைகளின் அழகும் இரண்டு முழங்கால்களும் ஓசை எழுப்ப அழகிய திருவடிகளில் சிலம்பு ஒலி முழங்

 

செககண செககண செககண செகண

மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

அகரமுதலென தொடங்கும் திருப்புகழில் இதே ஓசைகளை அமைத்திருப்பார் அருணகிரிநாதர் ஸ்வாமிகள். பிரபஞ்சம் உருவான பிரணவ மந்திரத்தின் ஓசை வடிவம் என அருணகிரிநாதர் ஸ்வாமிகள் கூறியுள்ளார். உதாரணமாக தடதட வென ரயில் வந்தது, சடசட என மழை பொழிந்தது என்ற ஒலிகளை விவரிக்கும் (இரட்டைக்கிளவி) சொற்கள் ஆகும். அது போல செககண’ என்பதில் தொடங்கி ‘டிங்குகு’ என்பதுவரை முருகனின் சிலம்பொலி ஓசை போல மறைபொருளாக பிரணவ மந்திரத்தின் ஓசை வடிவம் இங்கே இடம்பெற்றுள்ளது. இவை தாள ஜதிகளுடன் முருகனை அழைக்கும் மந்திர வார்த்தைகள் ஆகும். இந்த அரிய மந்திரங்களை முருகனின் சிலம்பொலியாக உருவகப்படுத்தி எழுதியுள்ளனர்.

விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்

லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா வினோ தனென்று

எல்லாப் பொருள்களுக்கும் முதலான மூலப் பரம்பொருளே! உயிர் சக்தியை உள்ளடக்கிய மூலாதார பரம்பொருளே, மயில் வாகனத்தைக் கொண்டுள்ள மூலப் பரம்பொருளே! மயில் என்பது ஓம்கார வடிவாகும், என்னைத் தீய சக்திகளிலிருந்து காக்கும் பொருட்டு, அச்சக்திகள் என்னை அழிக்க வருவதற்கு முன், முன்னதாகப் புறப்பட்டு முந்தி வரும் முருகனின் வேல். உனது அடியவனாகிய என்னை ஆண்டு அருளும் திருவேரகத்தில் எழுந்தருளியிருக்கும் செல்வனே! உன் மகனாகிய அடியேன் விரும்பிக் கேட்கின்ற வரங்களை மகிழ்ச்சியுடன் கொடுக்கின்ற லாலா லாலா லாலா என்னும் துதி ஒலிகளின் பக்திப் பரவச ஓசைகள் ஒலிக்க லீலா லீலா லீலா என்னும் பல்வகைத் திருவிளையாடல்களும் பொருந்திய விநோதத்தை உடையவனே! என்று கூறித் துதித்து

 

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்

என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க

உன்னுடைய அழகிய பாதங்கள் என்னை நிச்சயம் காக்கும் என்று நம்பிக்கையுடன் நினைக்கின்ற பக்தனாகிய என்னுடைய தலைமேல் உன்னுடைய இரண்டு திருவடிகளையும் வைத்து என்னைக் காத்து அருள் செய்வாயாக! என்னுடைய உயிருக்கு உயிராக இருக்கின்ற முருகக்கடவுளே! என்னைக் காத்து அருள் செய்க! பன்னிரண்டு திருக்கண்களாலும் உமது குழந்தையாகிய என்னை காத்து அருள் செய்ய வேண்டுகிறேன். அடியவனாகிய என்னுடைய முகத்தை உனது அழகிய வேலானது காத்தருள வேண்டும். திருநீற்றை அணிகின்ற நெற்றியை புனித வேல் காக்க வேண்டும். ஒளி வீசுகின்ற வேலாயுதமானது எனது இரு கண்களை காத்தருள வேண்டும்.
 

விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத் திருபல் முனைவேல் காக்க

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க

 

பிரமனால் படைக்கப்பட்ட இரு செவிகளையும் வேலாயுதபாணியே! காக்க வேண்டும்! இரண்டு மூக்குத் துவாரங்களையும் நன்மையைச் செய்யும் வேலானது காக்கவேண்டும். உனது புகழைப் பாடிய எனது வாயை பெருமை வாய்ந்த வேலானது காக்க வேண்டும்! என்னுடைய முப்பத்திரண்டு பற்களையும் கூர்மை பொருந்தியவேல் காக்க வேண்டும். உனது தோத்திரங்களைச் சொல்லி நாக்கை செம்மை கொண்ட வேலானது காக்க வேண்டும். கன்னங்கள் இரண்டையும் ஒளிவீசும் வேலானது காக்க வேண்டும். எனது இளமையான கழுத்தை இனிமையான வேல் காக்க வேண்டும். மார்போடு சேர்ந்துள்ள இளமுலைகளை அழகியவேலானது காத்தருள வேண்டும்.

 

வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வடித்தெடுக்கப்பட்ட வேலானது இரண்டு தோள்களையும் சிறப்படையும் படி காக்க வேண்டும். இரண்டு பிடரிகளையும் பெருமை வாய்ந்த வேலாயுதமானது காக்க வேண்டும். முதுகுப் புறத்தினை அழகுடன் முதுகை சிறப்பாக கருணை பொருந்திய வேலானது காக்க விலா எலும்புகள் பதினாறினையும் பெரிய வேல் காக்க வேண்டும்.

 

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண்ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க

வெற்றியையுடைய வேலாயுதமானது சிறப்புற விளங்குமாறு வயிற்றை காக்க வேண்டும்! சிறிய இடையை அழகு சேர செம்மை கொண்ட வேல் காக்க வேண்டும்! நரம்பாகிய கயிற்றை நன்மையை அருளும் வேலானது காக்க வேண்டும்! ஆண்குறி இரண்டும் கூர்மையாகிய வேலானது காக்க வேண்டும்! இரண்டு ஆசன பக்கங்களையும் பெருமை வாய்ந்த வேலானது காக்க வேண்டும்!

 

வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிர லடியினை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க

வட்ட வடிவத்துடன் கூடிய ஆசன துவாரத்தை வலிமை பொருந்திய வேலானது காக்க வேண்டும்! திரண்ட இரண்டு தொடைகளையும் வலிமை வாய்ந்த வேல் காக்க வேண்டும்! இரண்டு கணைக்கால்களையும் இரண்டு முழந்தாள்களையும் ஒளி பொருந்திய வேல் காக்க வேண்டும்! ஐந்து விரல்களைக் கொண்ட இரண்டு பாதங்களையும் கருணை உடைய வேல் காக்க வேண்டும்! இரண்டு கைகளையும் அருள் மிக்க வேலாயுதமானது காக்க வேண்டும்!

 

முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இரக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

இரண்டு முன்னங்கைகளையும் வலிமை பொருந்திய வேலானது காக்க வேண்டும்! இரண்டு பின்னங்கைகளிலும் திருமகள் வாசம் செய்யுமாறு அருள வேண்டும்! நாக்கில் சரஸ்வதி நல்ல துணை ஆக இருக்க வேண்டும்! (நாபி) உந்தித் தாமரையை நன்மை அருளும் வேலானது காக்க வேண்டும்! மூன்று பிரிவான நாடிகளை கூர்மை பொருந்திய வேலானது காக்க வேண்டும்!

 

 

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!