Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு கந்த சஷ்டி கவசம் -விளக்கம் -4

வகைகள் : கட்டுரைகள்/ ஆன்மீகம்

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


கட்டுரைகள்

கந்த சஷ்டி கவசம் -விளக்கம் -4

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தண்ணில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அணையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க

என்னை எந்தக் காலத்திலும் பகைவர்களை எதிர்த்து நின்று போரிடும் வேலானது காக்க வேண்டும்! எனது வார்த்தையானது நாக்கு அசைய வெளிப்படும் போது பொன்னாலான வேலானது விரைந்து வந்து காக்க வேண்டும். இருள் நீங்கிப் பகல் நேரம் வரும் போதெல்லாம் வைர வேலானது காக்க வேண்டும்! பாதி இராத்திரியில் அத்தகைய வைரம் பாய்ந்த வேலானது காக்க வேண்டும். முன்னிரவு நேரத்திலும் நடுராத்திரி நேரத்திலும் பகைவர்களை எதிர்த்து நின்று போரிடும் வேலானது காக்க வேண்டும்! தாமதத்தை அகற்றி அறிவில் சிறந்த வேலானதுகாக்க வேண்டும்!

 

காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட

பொன்னாலான வேலானது காக்க வேண்டும்! தாமதமின்றி ஒரு நொடியில் நோக்கி அருள வேண்டும்.  தடைகள் (இடைஞ்சல்கள்) அடித்து விலக்க வேண்டும். முருகனின் அருள் பார்வையால் நம் செய்த பாவங்கள் அனைத்தும் பொடி பொடி தூளாகி ஒழிய வேண்டும் 

 

பில்லிசூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வாலாட்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும்

எதிரிகள் ஏவுகின்ற பில்லிப் பேயும் சூனியமும், பெரிய பகைவர்களும் என்னை நெருங்கிவராமல் விலக வேண்டும், துன்பப்படுத்துகின்ற மந்திர தந்திரங்கள் எதற்கும் கட்டுப்படாத முனிகளும், வலிமை வாய்ந்த பூதங்களும், வல்லமை உடைய பிசாசுகளும், பிள்ளைகளைப் பிடித்து உணவாகக் கொள்கின்ற புறவாசல் முனியும்

 

கொள்ளிவாப் பேய்களும் குறளைப்பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும்

நெருப்பை வாயிலே கொண்டிருக்கும் கொள்ளிவாய் பேய்களும் குறளை எனும் குட்டி பேய்களும், பெண்களின் பின்னால் தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கும் பிரம்ம ராக்ஷசப் பேய்களும், இரிசி என்ற ஒருவகைப் பெண் பேயும், காட்டேரி என்ற துஷ்ட தேவதையும் மேற்கூறியவாறு துன்பத்தை உண்டாக்கும் பேய்ப்படைகளும்.

 

எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட

பகலிலும் இரவிலும் எதிர்த்து வருகின்ற அண்ணர் என்ற தேவதைகளும், மிகுந்த பூஜைகளைப் பெற்றடையும் காளி தேவதையோடு, காளியைச் சேர்ந்த படைகளாகிய மற்ற தேவர்களும், விட்டாங்காரர் என்னும் ஒருவகைப் பூதங்களும் இன்னும் மிகுந்த பலமுடைய பேய்களும் பல்லக்கில் வரும் பூதங்களும் கீழ்த்தரமான பல செய்கைகளைச் செய்யும் பேய்களும் முருகனின் பக்தரான என் பெயர் கேட்டாலே இடி விழுவதை போல பயந்து ஓடவேண்டும். 

 

ஆனை அடியினில் அரும் பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகள் உடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்

யானையின் பாதத்திற்குக் கீழ் பூமியில் புதைக்கப்பட்ட
வெறும் கண்ணால் காண முடியாத பதுமைகளும், பூனையினுடைய முடி பிள்ளைகள் எலும்பும், நகங்களும், மயிரும் நீண்ட முடியை உடைய தலையும்,  மரத்தினால் செய்த பொம்மைகள், பலவிதமான மண்ணால் செய்யப்பட்ட கலசங்களும், வீட்டில் தீங்கு விளைவிக்கும் பொருட்டு புதைத்து வைத்த மந்திர தந்திர மாயங்களும், மாந்திரீகம் அறிந்த பகைவர்களின் கர்வமும் மந்திரித்துச் செய்த மரத்தினால் செய்த பொம்மைகள்.

 

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓது மஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட

தீய சக்திகளுக்குத் கொடுக்கும் காசும் பணமும், ஆடு கோழி காவு கொடுத்து அதன் ரத்தத்தில் புரட்டிய சோறும், மாந்திரீகம் சொல்லுகின்ற அஞ்சன வித்தையும், சிந்தை கவர்ந்து பித்துப்பிடித்து போகச் செய்யும் மாய மந்திரமும், இந்த மேற்குறிய துஷ்ட செயலை செய்வோர்கள் முருகன் பக்தரான அடியேனை பார்த்தவுடனே நேராக பார்க்கமுடியாமல் இங்கும் அங்கும் அலைந்து எதிர்த்து பேச தைரியம் இல்லாமல் பயந்து குலைந்து பேசவேண்டும்.  பகைவர்களும் வஞ்சகர்களும் வந்து என்னிடம் அடிபணியவும் எமனுடைய தூதர்கள் என்னைக் கண்டால் பயந்து நடுங்க வேண்டும்.

 

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறியக்

பயந்து நடுநடுங்கவும் அந்தப் பயத்தின் காரணமாக வெருண்டு கீழே விழுந்து புரளவும், வாயைத் திறந்து கதறி புத்தி கெட்டு ஓடவும், படியினில் முட்டிக்கொள்ளவும், பாசக்கயிற்றினாலே கட்டி உடனே உடல் பகுதிகள் அனைத்தும் கதறும்படிக்கு கட்டி அருள்வாயாக! காலும் கையும் ஒடியவும் படி அவர்கள் கதறும் படியாகவும் பாசக்கயிற்றால் கட்டியருள்வாய்!


முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்

கண்விழிகள் வெளியே பிதுங்கி வருபடியாக மோதுவாய்! தேகங்கள் பட்டை பட்டையாய் உதிரும்படி அழிப்பாய்! அனைவரையும் கவரும் அழகனே சூரர் பகை அழித்த அழகனே! கூரிய வேலால் குத்தி அழிப்பாய்! 

 

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணல் அதுஆக

முருகனை நன்றாக பிடித்து கொண்டவர்களுக்கு பிரகாசமாக எரியும் சூரியன் வெப்பம் கூட தணிந்து குறைந்து இதமாக இருக்கும்.

 

விடு விடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந்து ஓட

புலியும், நரியும், சிறு நரியும், நாய்களும், எலிகளும், கரடியும் இனிமேல் பயத்தால் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து பயந்து ஓடும் படி வேலை விடுவாயாக!

 

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க

தேள்களும் பாம்பும் செய்யான் பூரான்களும் கடித்த இடத்தில் தங்கிய விஷங்களும் கடித்துத் தலைவரை ஏறிய விஷங்களும் எளிதாக சீக்கிரத்தில் இறங்கி விடவும்.

 

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்

சூலைசயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்

ஒளிப்பும், நரம்பு சுளுக்குதலும்,ஒரு பக்கத்தலைவலியும், வாதம்(வாயு சம்பந்தமான வியாதி) வலிப்பு, குளிர்நோயும் இழுப்பு நோயும், பித்தநோயும், சூலைநோயும், சயம், குன்மநோயும் சோர்வை உண்டாக்கும் சிரங்குரோகமும், கைகால் குடைச்சலும், சிலந்திக்கட்டியும், குடலில் உண்டாகும் சிலந்திக்கட்டியும், விலாப்புறங்களில் தோன்றும் பிளவையும்,பரவுகின்ற தொடைவாழை என்று சொல்லப்படும் கட்டியும்,கடுவன், படுவன் என்னும் சிலந்தியும்  கைகால் சிலந்தியும், பல் குத்து வலியும், பல் அரணையும், பருக்கட்டிகளும், அரையாப்புக் கட்டியும், மேற்கூறிய எல்லா வியாதிகளும் என்னைக் பார்த்தவுடன் என்னிடத்தில் தங்கி இருக்காமல் நீங்கி ஓட அருள் புரிவீராக!


ஈரேழ் உலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்

பதினான்கு உலகமும் என்னுடன் நட்புடன் இருக்க வேண்டும், ஆண்களும், பெண்களும், எல்லோரும், ஆள்கின்ற மன்னர்களும் என்னோடு மகிழ்ச்சியுடன் நல்ல நட்போடு உறவாக இருக்க அருள் புரிய வேண்டும். 

 

உன்னைத் துதித்த உன்திரு நாமம்
சரவண பவனே! சைலொளிபவனே!
திரிபுர பவனே! திகழ்ஒளி பவனே!
பரிபுர பவனே! பவமொழி பவனே!

உன்னை போற்றி வணங்க கூடிய "சரவணபவ" எனும் திருநாமம் உடைய சரவணப் பொய்கையில் உதித்தவனே! மலைகளில் வீற்றிருக்கும் ஒளிமயமான கடவுளே! திரிபுரத்தை அழித்த சிவபெருமானை ஒத்தவனே! எல்லா திசையிலும் புகழ்பெற்று ஒளிரும்  ஒளியினை உடையவனே!, பாதச் சிலம்பை அணிந்த மேன்மை உடையவனே! பிறவி துயரான பாவத்தை போக்கும் சக்தியை உடையவனே!

 

அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே! கதிர்வேலவனே!
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே! சங்கரன் புதல்வா!

திருமாலுக்கும், மகாலட்சுமிக்கும் மருமகனே! தேவலோகத்தை காத்து! தேவர்களுடைய கடுமையான சிறையிலிருந்து விடுதலை செய்தவனே! கந்தக் கடவுளே! மனித மனம் எனும் குகையில் குடியிருக்கும் குகனே! கதிர் ஒளிபொருந்திய வேல் ஏந்தியவனே! கார்த்திகை பெண்களின் மகனாக வளர்த்தவனே! கடப்பமலர் மாலையைத் தாங்கியவனே! கடம்பனையும் இடும்பனையும் போரில் வென்று அருள் புரிந்தவனே! இன்பம் தருகின்ற வேலை ஏந்திய முருகப்பெருமானே! திருத்தணிகை மலையில் எழுந்தருளி இருப்பவனே! சிவபெருமானின் மகனே!


கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா!
பழநிப் பதிவாழ் பால குமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா!
செந்தின்மாமலையுறும் செங்கல்வராயா!
சமரா புரிவாழ் சண்முகத்து அரசே

கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற கதிர் ஒளி வீசும் வேலை ஏந்திய முருகப்பெருமானே! குழந்தை வடிவில் பழனி எனும் தலத்தில் தலைவனாக வாழ்கின்ற பால குமாரா!  திருவாவினன்குடி என்னும் திருத்தலத்தில் வாழ்க்கின்ற அழகிய வேலாயுதத்தை ஏந்தியவனே! திருச்செந்தூர் என்னும் திருத்தலத்தில் உள்ள சிறப்புடைய மா மலையில் எழுந்தருளி இருக்கும் செங்கல்வராயனே! சமராபுரி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற சண்முகன் என்னும் திருநாமத்தைக் கொண்டு ஆள்பவனே!

 

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப்பாட
எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை

கரிய மேகங்களை போல கூந்தலை உடைய கலைமகளான சரஸ்வதி தேவி  ஞானம் சிறக்குமாறு எனது நாவில் இருந்து, அடியேன் உன் புகழைப் பாட வேண்டும். என்னோடு எப்போதும் இருந்து வரும் என் தந்தை போல வழிநடத்தும் முருகனை நினைத்து நெஞ்சம் நெகிழ பாடினேன் ஆடினேன். எல்லையற்ற அனந்த நிலை ஆடிக்கொண்டே திருஆவினன் குடியை (பழனி) அடைவேன்.

 

 

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!