தொடர் : 4
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
முருகனின் திருநீறை நெற்றியில் நேசத்துடன் பூசிக்கொள்ளும் போது பாசவினைகள் ஆசைகள் அனைத்தும் நீங்கப்பெற்று முருகனின் திருப்பாதத்தில் நீங்காமல் இருக்க முருகனின் திருவருளே துணைபுரியும். வேலை ஆயுதமாக உடைய முருகப்பெருமானே! என்னை அன்போடு காத்து, எனக்கான உணவையும் பொருளையும் மிக மிக சௌகர்யமாக பெருக்கி தருவாயாக!
சித்தி பெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எதையும் சாதிக்கவல்ல ஆற்றல்களை (சித்திகள்) அடியவர்களாகிய நாம் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும். மயிலோடு இருக்கும் முருகன் வாழ்க. அழகிய வேலொடு இருக்கும் முருகன் வாழ்க எங்களுக்கு ஞானம் அளிப்பதற்காக மலைமீது குருவாக இருக்கும் முருகன் வாழ்க குறமகள் வள்ளியோடு வாழ்க வெற்றிமுழக்கத்தோடு பறந்து முருகன் புகழை பறைசாற்றும் சேவற்கொடி வாழ்க உன் புகழை பாடும் என் வறுமைகள் என்னை விட்டு நீங்க வேண்டும.
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென்று அன்பாய்ப் பிரியம் அளித்து
மைந்தன்என் மீதுன் மனமகிழ்ந்து அருளித்
தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய்
என்னிடம் பல குறைகள் இருந்தாலும், பல தவறுகளை செய்து இருந்தாலும், என்னை பாதுகாக்கும் தாய் - தந்தை முருகப்பெருமான் மட்டுமே குருவாக வந்து வழிநடத்தும் பொறுப்பு உன்னுடையது ஆகும். முருகப்பெருமானின் அன்பை பெற்றவளான குறமகள் வள்ளி பெற்று எடுத்த பிள்ளை போல அடியேனை அன்புகாட்டி பிரியத்துடன் பாதுகாக்க வேண்டும். உன்னுடைய மகனாக ஏற்றுக்கொண்டு மனமகிழிச்சியுடன் உனது அருளை தரவேண்டும். முருகப்பெருமான் மீது நம்பிக்கையுடன் வரும் அடியவர்கள்/ பக்கதர்கள் பாதுகாத்து மென்மேலும் வளம் பெற்று வாழும் படி அருள் செய்ய வேண்டும்.
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகிக்
முருக பக்தர்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்று விரும்பி பால தேவராயன் ஸ்வாமிகள் உருவாக்கி அனைவரும் அறியும் வகையில் எல்லோருக்கும் கொடுத்த கந்த சஷ்டி கவசம் என்னும் இந்த பாடலை நமது உடலை முறைப்படி தூய்மை படுத்தி மனதில் வேறு சிந்திக்காமல் முருகப்பெருமான் சிந்தனையுடன் காலைபொழுதிலும், மலைப்பொழுதிலும் மற்றும் எப்போதும் மனதில் உணரும் படி படிக்கலாம்.
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்
இந்த கந்த சஷ்டி கவசத்தை வேறு சிந்தனைகள் கவனம் சிதறாமல் மனதில் உணர்வோடு சிந்தித்து 'ச ர வ ண ப வ' எனும்அட்சரத்தை தொடர்ந்து மனதில் ஓதிக்கொண்டே (சொல்லிக்கொண்டே) இருக்கும் பொது
ச ர வ ண ப வ
ர வ ண ப வ ச
வ ண ப வ ச ர
ண ப வ ச ரவ
ப வ ச ரவ ண
வ ச ரவ ண ப
36 அட்சரமாக உரு மாறும் விருப்பத்துடன் திருநீறு (விபூதி) பூசி, அவ்வாறு முருகனை வேண்டி வந்தால் நாம் இருக்கும் இடத்தை சுற்றி உள்ள எட்டு திசைகளிலும் ஆளும் மன்னர்கள் நமக்கு அடங்கி நடப்பார்கள். நமக்கு வசப்பட்டு நாம் நினைப்பதை செயல்படுத்துவார்கள்.
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரொட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
நாம் அறியாத நபர்கள் அனைவரும் நம்மை மதித்து வணங்குவார்கள். ஒன்பது கோள்களும் மகிழ்ச்சியோடு நன்மை அளிக்கும். புதிய பொலிவுடன் மன்மதன் போல அழகான பிரகாசமான ஒளி பெற்ற உடம்பு பெறுவார்கள். வாழ்நாள் முழுவதும் பதினாறு செல்வங்கள் அதாவது
1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2. குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)
பெற்று வாழ்வார்கள் முருக பெருமான் கையில் எப்போதும் உள்ள வேல் போல எப்போதும் பதினாறு செல்வங்கள் நம்கைவசமாகும்.
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
இந்த கந்த சஷ்டி கவச வரிகளை வீடுபேறு அடைய வழி என நினைத்து துதித்தால் மெய்ப்பொருளாக விளங்கும். முருகப்பெருமானின் அருள் பொங்கும் விழிகளால் நம்மை பார்க்கும் பொது நம்மிடம் இருக்கும் அகப்பேய்கள் அவையாவன
1) காமம் – தீவிர ஆசை
2) குரோதம் – கோபம்
3) லோபம் – பேராசை
4) மோகம் – மருட்சி
5) அகங்காரம் – இறுமாப்பு
6) மதஸர்யம் – பொறாமை
போன்ற துர்குணங்கள் பயந்து வெருண்டு ஓடும், பொல்லாதவற்றை பொடி பொடியாக்கும், நல்லவர்களாக நம்மை மாற்றி நம் உணர்வில் மெய் எழுச்சி பெற்று நடனம் புரியும்.
சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென உள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
அனைத்து எதிரிகளையும் வென்று தீய எண்ணங்களை அழித்து நல்லவர்களாக மாற்றும் முருகப்பெருமானை அறிந்தகொண்டது நம் உள்ளம் , சூரபதுமனை வதைத்து அஷ்ட லட்சுமிகளில் (ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி , தனலட்சுமி) ஒருவரான வீரலட்சமி விருந்து படைத்தது முருகப்பெருமானின் திருக்கரம் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பதவிகளை மீட்டு அளித்தார். லட்சுமி மற்றும் தேவர்களுக்கு குருவாக திருஆவினன்குடி அருள்பாலிக்கிறார் பழனி மலையில் குழந்தையாக சிவந்த காலடி போற்றி வணங்குவோம்.
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
நாம் தவறான பாதைக்கு செல்லாதபடி தடுத்து நம் மனதில் குடிகொண்டு நம்மில் முழுவதும் பரவி அழகிய வேலனை வணங்கி புகழுவோம்.
தேவர்கள் சேனாபதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சிப் புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனகசபைக்கோ ரரச
தேவர்களின் சேனை தலைவராக போர்புரிந்து சேனாதிபதியை போற்றுவோம், குறத்தி மகளான வள்ளி மனம் மகிழ்ந்து அரசனைப் போற்றுவோம், வல்லமை பொருத்திய அழகான உடம்பை பெற்றவரைப் போற்றுவோம், துன்பத்தை தீர்க்கும் இடும்பா உனைப் போற்றுவோம், கடம்ப மலர்களை சூடும் கடம்பா போற்றுவோம், போரில் வெற்றி பெற்று வெட்சி பூவை சூடும் (தமிழர் மரபு) வேல் ஏந்தியவரை போற்றுவோம்.
உயர்கிரி கனகசபைக்கோ ரரச
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
உயர்த்த மலையான கந்தகிரி பொன்னால் ஆன சபாமண்டபத்துக்கு மாமன்னராக மயில் போல மனதை கவரும் நடனம் ஆடும், உன் மலர் போன்ற மென்மையான பாதங்களை கதி என சரணம்/ தஞ்சம் அடைகின்றோம். முருகப்பெருமானின் அட்சரமான சரவணபவ சரணம் அடைகின்றோம். ஆறு திரு முகம் ஒளி வீசும் முருகப்பெருமானின் சரணம் அடைகின்றோம்.