Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு 27- நண்பர்கள் கூடினர். 

வகைகள் : தொடர்கள் / மனதின் வார்த்தைகள் புரியாதோ

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


தொடர்கள்

27- நண்பர்கள் கூடினர். 

 

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ, ஆனால் பேசுவதே அலைபேசியில் எனும்போது பேசித்தானே ஆகவேண்டும்.

ஹேமந்த், உண்மையான உணர்வுடன் தன்னை மன்னிக்கச் சொல்லி கேட்டவுடன், சிவகுரு கண்கலங்கினார் அவரால் பேச முடியவில்லை. ரெட்டி அவரைச் சமாதானம் செய்து "தங்கையா, நீ பேசும்மா." என்றார்.

ராகினி தெளிவாக இருந்தார். பாதிக்கப்பட்டவர் அவர் தான் பாதிப்பின் விளைவு தான் இவர்கள் திருமணம். அதில் அந்தத் திருமணத்தில் அவர் திருப்தியுற்றே இருந்தார். அதனால் ஹேமந்த் மேல் என்றும் குறைப் பட்டது இல்லை.

"நமஸ்தே ஜீஜூஷா ஆப் கைசே ஹை?" எனப் பேச்சை ஆரம்பித்தார் ராகினி. குரலை அடையாளம் கண்டவர் பேச முடியாமல் ஆடிப் போனார் ஹேமந்த்.

ராகினி எதுவும் நடக்காதது போல் தொடர்ந்தார்.

"பம்மி நல்லா இருக்காளா ஜீஜூ, நீங்க எங்களை நம்பி மஞ்சரியை அனுப்பியது சந்தோஷம். மஞ்சரி அப்படியே பம்மி தான். எனக்குப் பம்மியவே பார்த்த மாதிரி இருந்தது." என ராகினி சகஜமாகப் பேசிக் கொண்டே சென்றார்.

"ராகினி, நான் தான் உன்னோட கூனேகார் (குற்றவாளி). என் சுயநலத்துக்கு உன்னைப் பலிகடாவா ஆக்கிட்டேன். என்னைய மன்னிச்சுடுமா." எனக் குற்ற உணர்ச்சியோட பேசினார் ஹேமந்த்.

"ஜீஜூஷா, நீங்க இவ்வளவு கவலை படற மாதிரி ஒண்ணும் இல்லை. சிவா மாதிரி ஒரு அருமையான மனிதர் கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கனும். நல்ல அன்பான குடும்பம். அருமையான பிள்ளைகள். எனக்குன்னு தனிப்பட்ட அடையாளம்னு சந்தோஷமா இருக்கேன். மஞ்சரியை கேட்டு பாருங்க." என்றார் ராகினி.

"ரொம்பச் சந்தோஷம்மா எனக்குத் தெரியும் சிவா உன்னை நல்லா வச்சுப்பான்னு. அதனாலதான் நாங்க ப்ளான் பண்ணி அங்க அனுப்புனோம். அது எல்லாம் சரிதான். ராணி மாதிரி ராத்தோட் குடும்பத்தில் இருந்து போக வேண்டியவ, அது என்னால தானே முடியாமப் போச்சு." என்றார் ஹேமந்த்.

 

"யாரு இல்லைனு சொன்னாங்க தாதிஷா வந்து முறைப்படி தாரைவார்த்து கொடுத்தாங்க எனக்கு எந்தக் குறையும் இல்லை." என்ற குண்டை வீசினார் ராகினி. இந்த விசயம் மற்றவர்களுக்குத் தெரியும்.

"இருங்க உங்க தோஸ்த் இப்ப தான் ரெடியாகி இருக்கார். அதென்ன ரெண்டு பேருக்குள்ளயும் எதுவும் ரகசியம் இருக்கா?" எனக் கேட்டார் ராகினி.

"அவன் இன்னும் அதை உன்கிட்ட சொல்லலையா, நீ நேரா வாம்மா, அப்ப சொல்றேன். இங்க படே பய்யாவோட பொண்ணு மோனல் ஷாதி நடக்குது. நீங்க ரெண்டு பேரும் கட்டாயம் வரனும். நிறைய ஆட்களின் முகத்திரையைக் கிழிக்கனும். இன்னும் எத்தனை நாள் தான் மாமாஷா மாமிஷா உன்னைப் பிரிஞ்சு இருப்பாங்க. மஞ்சரி அங்க நடந்தது சொல்லி இருப்பாளே. வாங்க ஊர்  உலகத்துக்கு முன்னாடி தெரியனும்." என்றார் ஹேமந்த்.

"வரேன்! நிறையச் சீக்ரெட் இருக்கும் போலக் கட்டாயம் வரேன்." என்றார் ராகினி. சிவகுரு போனை வாங்கி மற்றவர்களை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு,  போனை ஸ்பீக்கரில் போட்டார். "ஹேமா, எப்படிடா இருக்க?" என்றார்.

"உன் புண்ணியத்தில் நல்லா இருக்கேன்டா, எல்லாத்தையும் மறந்திட்டு வாடா, உன் கூடச் சேர்ந்து டெல்லியை சைக்கிளில் சுத்தனும்டா." என்றார் ஹேமந்ந்.

"நான் ஓட்டிடுவேன் இன்னும் ஃபிட் தான். நீதான்டா பின்னாடி உட்கார முடியாம தொப்பை வச்சிருக்க." என்றார் சிவகுரு.

"நானும் ஃபிட் தான். நீயா நான் குண்டா இருப்பேன்னு கற்பனை பண்ணாத." என்றார் ஹேமந்த். "போதும் நிறுத்துடா வயசான ஷமிகபூர் மாதிரி இருக்க. அதெல்லாம் மஞ்சரி, உன் போட்டாவை காண்பிச்சுட்டாள்." என வம்பிழுத்தார்.

"மறுபடியும் உதய்பூர் ஹவேலிகளைச் சுத்திப் பார்க்கலாமா?" எனக் கேட்டு ஓர் சிரிப்பு சிரித்தார் ஹேமந்த்.

"ஐயா ராசா உன் கூடப் பேசாம இருந்ததுக்கு இது ஒன்னு தான் லாபம். போட்டு குடுத்துடாத." என்றார் சிவகுரு.

"டேய், உன் ரொமான்ஸ் ஆரம்பிச்ச இடம். திரும்பி பார்க்க வேண்டாமா, மலரும் நினைவுகள்."என்றார் ஹேமந்த்.

"அது ராத்தோட்'ஸ் ஹவேலியில், நமக்கென்னடா அங்க வேலை, கடத்த வேண்டியதை கடத்தியாச்சு." என ராகினியை பார்த்துக் கொண்டே சொன்னார்.

"ஜீஜூ, இதெல்லாம் டூ மச். இதுல பஞ்ச பாண்டவர்களும் கூட்டு சதியா?" என்றார் ராகினி.

"ஆமாம், தங்கையா உனக்கு இன்னும் சொல்லலையா  இந்தப் படவா." என்றார் ரெட்டி.

"அரே சாலா, நீங்களே ஒருத்தன ஒருத்தன் வாரிக்கங்கடா, ஒழுங்கா பக்காவா அரேஞ்ச்மெண்ட் செஞ்சுவை. இவனைக் கூட்டிட்டு வரோம். அவன் பல்லாவையும் வரச் சொல்லிடு." என்றார் பாண்டே..

"சிவா, படே பய்யா பொண்ணு ஷாதி வந்துடுடா, எல்லாம் செட்டில் பண்ணிடலாம். உன்னைய எதிர் பார்த்தே இருப்பேன்டா." என மீண்டும் பல முறை அழைப்பு விடுத்துப் போனை வைத்தார்.

இங்கு நன்பர்கள் கூடிக் குழாவி கொண்டு இருக்கட்டும் நாம், மலபார் ஹில்ஸ்சை எட்டிப் பார்த்துவிட்டு வருவோம்.

ஜானகி, அமிர்தா கஜேந்தருடன் ஆபீஸ் சென்றவர்கள் அவருடனே ஆறறை மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்தனர். ஜானகிக்கு பொழுது போகவில்லை. ரகுவீரும் இரவு லேட்டாகத் தான் வருவான்.

ஜானகி, வந்த சிறிது நேரத்தில், சிருஷ்டி, சில பொருட்கள் வாங்கவெனப் பக்கத்தில் ஷாப்பிங் சென்றாள். ஜானகி ரன்வீரும் இணைந்து ஷாப்பிங் சென்றனர். சிருஷ்டி ஒரு ப்ராஜெக்ட்காக சில பொருட்களை வாங்கினாள் . ஜானகிக்கு பெயிண்ட், ப்ரஸ் பார்க்கவும் கற்ற கலை ஆவலைத் தூண்ட, பெயிண்டிங் கேன்வாஸ் மற்றும் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டாள்.

ஸ்வர்ண மஹலின் மொட்டை மாடி அவளுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அத்தனையும் அங்கே அடுக்கச் சொன்னாள்.ஸ்வர்ண மஹலின் மொட்டை மாடியும் கூடக் கலைநயம் வாய்ந்ததாக இருந்தது. பணம் இருந்து ரசனையும் இருந்தால் போதும் எதையும் எப்படியும் மாற்றலாம்.

ஒரு பக்கம் சிறிய நீச்சல் குளம், மறுபுறம் ஓர் சூட். நடுவில், புல்வெளி, ஓரங்களில் க்ரோட்டன்ஸ் அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. நடுவில் வந்து அமர்வதற்கு வசதியாக நாற்காலிகள், டீப்பாய். இவள் ஓர் ஓரத்தில் வைத்து, கீழே அமர்ந்து வரைந்துக் கொண்டிருந்தாள்.

ஜானகி, தனது பெயிண்டிங் சாமகிரிகளை இங்கே வைக்கச் சொன்னாள். அவளுக்குப் பாலகோபாலை, சித்திரங்களாகத் தீட்ட வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இப்போது மாலைப் பொழுதில் அவளுக்குக் கிடைத்த நேரத்தில் அதனைப் பயனுள்ளதாக மாற்ற விரும்பினாள். மனதும் அதற்கு ஏற்ப இருந்தது.

மாலை சிருஷ்டியை பார்க்க, ஷப்னம் ரூமிற்குச் சென்ற போது ரகுவீரின் சிறுவயது போட்டோக்களைக் காட்டிக் கொண்டு இருந்தார். அதில் தன் அம்மா ராகினியுடன் இருந்த புகைப் படங்களும் அடங்கும். அவை சரியாக அடுக்கப் படாமல் இருந்தது.

"ஆண்டி, இதையெல்லாம் குடுங்க, நான் அழகா டிஸ்ப்ளே பண்ணி கொண்டு வரேன்" என வாங்கி வந்தாள். இன்று மாலை கடைக்குச் சென்றபோது ஆல்பம் தயாரிக்கத் தேவையானவற்றை வாங்கி வந்தாள்.

ரகுவீரின் சிறுவயது, புகைப்படம் பார்த்து  தன் தாய் சொன்ன "வீரூ" கதைகளைச் சேர்த்துச் சித்திரம் வரைய ஆசைப்பட்டாள். அமிர்தா வேறு வேலை இருப்பதாகக் கீழே தங்கி விட  இவள் தூரிகைப் பெண்ணாய் மாடி ஏறிவிட்டாள்.

முதல் போர்டை எடுத்து அதில் மாயக் கண்ணன் நந்தர் இல்லத்தில் தொட்டில் இட்டதை கண்ணன் முகச் சாயலை, ரகுவீராக வரைந்தாள். அதன் அவுட்லையனை வரைந்துக் கொண்டிருந்தாள் ஜானகி. வண்ணம் தீட்டுகையில், அவள் அன்னையின் வர்ணணை நினைவில் வந்தது.

"தன் பால் முகம் காட்டி பாலகனாய்,

தரணி வந்த என் கனியமுதே,

யதுகுலம் காக்க வந்த கோபனோ,

நீ, ரகுகுலம் தழைக்க வந்த ரகுவீரா!"

என தன் அன்னை வ்ரஜபாஷை எனும் இராஜஸ்தானி பழம் மொழியில் மகாகவி சூரை உள்வாங்கி அவர் சொன்ன மொழிகளைத் தமிழில் மொழி பெயர்த்தாள் ஜானகி. முதல் கோட்டிங் பெயிண்டிங்கை அவள் முடிக்கும் போது, அதில் சாயல் தெரியாது. ரகுவீர் அவ்விடம் வந்தான்.

இரவு மணி பத்தை தொட்டுக் கொண்டிருக்க ரகுவீர் வீட்டுக்கு வந்தான். அமிர்தா ஜானகியை அழைக்க லிப்ட் நோக்கி வந்தாள், அதைக் கண்ட ரகுவீர்,

"என்னம்மா இந்த நேரம் எங்கப் போற." எனக் கேட்டான். "இல்லைண்ணா, ஜானி மாடியில் உட்கார்ந்து பெயிண்ட் பண்ணிக்கிட்டு இருந்தாள். அது தான் கூப்பிட போறேன் போன் பண்ணா நீ தூங்குடின்னு சொல்றா." என்றாள்.

"சாப்பிட்டாளா?" எனக் கேட்டான்."ஒரு வேலையை ஆரம்பிச்சா சாப்பாடே வேண்டாம் அவளுக்கு." என்றாள்.

"சரி நீ போய்ப் படு. நான் சாப்பிட வச்சு அனுப்புறேன்." என்றவன். ஜூகுனூவை அழைத்தான்."பாய்ஷா கூப்பிட்டிங்களா?" என்றபடி வந்தான் ஜூகுனூ.

"இரண்டு பேர் சாப்பிடற மாதிரி, டின்னர் ஹாட்கேஸ்ல வச்சு டெரஸ்க்குக் கொண்டு வா." எனச் சொல்லி தன் அறைக்குக் குளிக்கச் சென்றான்.

பத்து நிமிடத்தில் அவன் மொட்டை மாடியில் நின்றான். ஒரு முக்கால் பேண்ட் டீசர்ட் சகிதம். ரிலாக்ஸாக வந்தான்.

ஜானகி மும்முரமாகப் பெயிண்டிங்க் செய்து கொண்டிருந்தாள், தலை லேசாகக் களைந்து  காற்றில் ஆட, உதடைக் கடித்துக் கொண்டு சீரியஸாகத் தன் சித்திரத்தில் லயித்து இருந்தாள். கண்களில் என்ன வென்று சொல்ல இயலாத ஒரு ரம்யமான பாவம்.

ரகுவீர் ஜானகியை, இமைக்காது பார்த்திருந்த நேரம் எவ்வளவு எனக் கேட்டாள், அவனுக்கும் தெரியாது. அவளைப் பார்த்தவுடன், நாள் முழுதும் அலைந்து திரிந்த அலுப்புக் காணாமல் போனது. அந்த நாளின் முடிவு அவள் தரிசனம் இன்றி அரைகுறை ஆகியிருக்கும் ரகுவீருக்கு.

"பாய்ஷா காணா!" என ஜூகுனுவின் குரலில் இவ்வுலகம் வந்தவன். அங்கிருந்த டீப்பாயில் வைக்கச் சொன்னான். அரை மணி நேரம் சென்று ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம், எனச் சொல்லி அனுப்பிவிட்டான்.

இவர்கள் பேச்சுக் குரலிலும் அவள் அசையவில்லை. அவளின் மோன நிலை பார்த்து, இவள் அப்படி என்ன செய்கிறாள் என்ற வியப்பு வந்தது அவனுக்கு.

சத்தம் செய்யாமல் அவள் பின்னே போய் நின்றவன். அவள் கண்களை மூடினான் ரகுவீர்.

ஜானகிக்கு, அவன் ஸ்பரிசம் உறைத்தது ஆனால் அவன் கண்களை மறைத்ததை உணர்ந்தாள் இல்லை. அவள் இருந்தது மோன நிலை.

அவள் அசையாமல்,பதில் இல்லாமல் இருக்க, பயந்தது ரகுவீர் தான்.

"ஜான்வி! ஜானூ!!!" என அவன் இருமுறை அழைக்க, அவள் "ம்." என்று மட்டும் சொன்னாள். திரும்ப அவன்,"ஜானூ!" என மெல்ல அழைக்க.

"வந்துட்டிங்களா, எவ்வளவு நேரம் உங்களுக்குக் காத்திருப்பது!" என்றாள் தமிழில்.

"ஜான்வி!" எனச் சத்தமாக அவளை உலுக்கினான். அவள் அப்போது தான் விழித்தது போல், அவனைத் திரும்பி மலங்க மலங்க விழித்துப் பார்த்தாள்.

"எந்த உலகத்தில் இருக்க?" என அவன் கேட்க. "பிருந்தாவனத்தில் ராமன் வருவானா?" எனத் தமிழில் கேட்டாள். ரகுவீருக்கு எப்படி அவளை அணுகுவது எனத் தெரியாமல், பக்கத்தில் இருந்த தண்ணீர் எடுத்து அவள் மேல் தெளித்தான்.

"தண்ணீர் முகத்தில் தெரிக்க, அதிர்ந்தவள், அவன் முன்னே நிற்கவும். "கட்வா கரேலா, இப்படித்தான் யாரையாவது கூப்பிடுவாங்களா, போ மேன்." என அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினாள்.

"ஏய், லால் மிர்ச்சி, கண்ணைத் திறந்துகிட்டே தூங்குவியா? இதில கேள்வி வேற, அரைமணி நேரமா ஒருத்தன் உன்னைக் கூப்பிட்டுகிட்டு இருக்கேன்." என்றான். அவள் வரைந்துக் கொண்டிருந்த  ப்ரஸ்ஸை தின்னரில் போட்டாள். அந்த பொருட்களை ஒதுங்க வைக்க ஆரம்பித்தாள்.

அவள் மணிக்கட்டை பிடித்து அழைத்து வந்தவன். சேரில் அமர்த்தி, ஒரு ப்ளேட்டில் உணவு வைத்துக் கொடுத்தான். அவள் கைகளில் தின்னர் வாடை அடித்தது.

"நீங்க சாப்பிடுங்க நான் கை கழுவிட்டுச் சாப்பிட்டுக்கிறேன்." என்றாள்.

அங்கிருந்த பைப்பில் கழுவியும் வாடை போக வில்லை.

அவளை அழைத்து அருகில் உட்கார வைத்தவன், ரொட்டியை பிய்த்து தால் தொட்டு அவளுக்கு ஊட்டினான். அவள் மறுத்தும் விடவில்லை. அவன் அடுத்த வாய்க் கொண்டு வர நீங்க சாப்பிடுங்க என்றாள். இருவரும் மாற்றி, மாற்றி ஒரே தட்டில் உணவை பகிர்ந்தனர். அவன் ஊட்டியதில் அவளுக்குப் பிடிக்காத ரொட்டியும் அமிர்தமானது.

இவ்வளவு நேரம் என்ன செய்யற, பரிட்சைக்குப் படிக்கிற மாதிரி எனக் கேட்டான் "எனக்குக் கிருஷ்ண லீலா வரையனும்னு ஆசை அதுதான் ஒரு முயற்சி!" என்றாள் ஜானகி.

"உனக்குக் கோபம் தான் சட்டுனு வரும். பெயிண்டிங்கும் வருமா, உனக்கும் அதுக்கும் சம்மந்தம் இருக்க மாதிரியே தெரியலையே?" என்றான் ரகுவீர். ஜானகிக்குக் கோபம் வந்து, அவனை முறைத்தாள்.

"ஷாங், யஹ் சஹி ஹை, இது தான் சரி." என்றான் ரகுவீர். என்ன லுக்கு என்ற படி அடுத்தவாய் இட்ட, அவன் விரலோடு சேர்த்துக் கடித்தாள் "ஏய்!" என அவன் கத்த.

"ஓ,சாரி,சாரி!" எனப் பொய்யாக நடித்தாள். சாப்பாடு காலியானது. இவர்கள் வயிறு நிறைந்தது. ஜூகுனூ வந்து, ஃப்ரூட் சாலட் கொடுத்து விட்டு, பாத்திரங்களை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.

அவள் பெயிண்டிங் பொருட்களை ரூம் செல்பில் எடுத்து அடுக்கினர்.

ஃப்ரூட் சாலட்டில் ஐஸ்கிரீம் கலந்து, ஸ்பூன் போட்டு அவளிடம் நீட்டினான்.

ஆளுக்கொன்று கையில் வைத்துக் கொண்டு  பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.

அன்றைய நாள் நடந்ததைப் பற்றி இருவரும் பகிர்ந்துக் கொண்டனர். ஜானகி, இருங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் என்று அன்று மாலையில் ஷப்னத்திடம் எடுத்து வந்த போட்டோக்களைக் கொண்டு வந்தாள்.

உங்கது தான், ஆண்டி குவிச்சு வச்சிருந்தாங்க. எந்த ஆர்டர்ல அடுக்கடும். டிஸ்ப்லே கார்ட் வாங்கிட்டேன். பேஸ்ட் பண்ணா லேமினேட் பண்ணித் தருவாங்க. டிஜிட்டலைஸ்டும் பண்ணிடலாம். இதெல்லாம் பொக்கிஷம் தானே.

என அவளே பேசிக் கொண்டு போக, ரகுவீர் பார்வை ஒரு போட்டோவில் நிலைக் குத்தி நின்றது. அவன் பார்வை திசையில் அவளும் பார்க்க, ராகினியுடன் ரகுவீர் இருந்த புகைப் படம். இன்று அவனைப் பேச வைக்க வேண்டும் என முடிவெடுத்தாள்.

இந்தப் போட்டோஸ் அங்கிள் ஆண்டியோட இருக்கறது, 5-6 பேஜ் ஒட்டிடலாம். இது ஹரிணி தீதீ யுடன் என ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டே சென்றவள்.

"இது யாரு mr.ராத்தோட், இந்த லேடி நிறையப் போட்டோஸ்ல இருக்காங்க. அந்தப் போட்டோஸ்ல தான் நீங்க நல்லா சிரிக்கிறீங்க. மத்தது எல்லாம் பார்த்தால் உங்களைச் சிடு மூச்சின்னு சொல்லிடுவாங்க." என ஜானகி கேள்விக்கும் பதில் இல்லை.

"நான் ஒன்னு செய்யவா, இதில் உங்க போட்டோவை மட்டும் கட் பண்ணி கொலாஜ் பிச்சரா ஃப்ரேம் பண்ணவா?" எனக் கேட்டவள் அவன் பதில் சொல்லாமல் இருக்கவும் கத்தரிக்கோல் எடுத்து வந்தாள்.

ஒரு போட்டோவை வெட்டுவது போல் பாவனைச் செய்ய, ரகுவீர் "நோ" எனக் கத்தினான்.

"நோ ஜானூ நோ, இதைக் கட் பண்ணாத என் புவாஷா இதிலையாவது என் கூட இருக்கட்டும்." எனும் போதே, அவன் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது 

அவன் சேரில் அமர்ந்து தலை கவிழ்ந்து இருக்க, தன் தாய் மேல் அவன் பாசம் இத்தனை ஆண்டுகள் கழித்தும் பசுமையாக இருப்பதை எண்ணி வியந்தாள்.

"அது யாரு, நான் வந்ததில் இருந்து பார்க்கவே இல்லையே, ஜாடை மயூரி மாதிரி இருக்கு." என்றாள் அவனைப் பேச வைப்பதற்காக.

"அவங்க என் புவாஷா. ஸ்வர்ண ராகினி ராத்தோட். இப்ப என்ன சர்நேம்னு கூட எனக்குத் தெரியாது." என்றான் ரகுவீர் வருத்தத்துடன்.

"அன்னைக்கு மயூரியும், இது போல் ஏதோ சொன்னாளே, என்ன ஆச்சு அவங்களுக்கு?" என்றாள் ஜானகி ஒன்றும் அறியாதது போல்.

"நான் பிறந்த போது மாஷாவுக்கு, உடம்புக்கு முடியலை. அதனால் என்னைப் பார்த்துக்கிட்டதே என் புவாஷா தான். அப்ப காலேஜ் படிச்சாங்க, ஆனால் அப்பவே எனக்கு ஒரு அம்மாவா எல்லாம் செய்வாங்க. லோரி (தாலாட்டு) பாடி தூங்க வைக்கிறது, சாப்பாடு ஊட்டுறது, குளிக்க வைக்க எல்லாம் புவாஷா தான். ஒரு நாள், நான் நாலு வயசு இருக்கும் போது, புவாஷாவுக்கு ஷாதின்னு சொன்னாங்க. புவாஷா, உதய்பூர்ல தான் இருப்பாங்கன்னு சொல்லவும், எனக்கு, ஒரே ஷாக், அழுது ஆர்ப்பாட்டம் பண்ணேன்.

அப்பதான், நான் உன்னையும் என் கூடக் கூட்டிட்டு போயிடுவேன் "வீரூ!" ன்னு சொன்னாங்க. அதனால் சந்தோஷமா ஷாதிக்கு போனேன்." என்றவன்,அந்த சிறுவன் வீரூவாக, அதே நினைவில் மௌனமானான்.

"அதுக்கப்புறம் என்ன ஆனது?" எனக் கேட்டாள் ஜானகி.

"புவாஷாவின் ஷாதி அன்னைக்கு, என்ன என்னமோ நடந்தது. எனக்குச் சரியாக ஞாபகம் இல்லை. நைட்ல நான் தூங்கிட்டேன் நடுக் கூடத்தில் ஷாதி நடந்தது. நான் சத்தம் கேட்டு எழுந்து வந்தேன், அப்போது புவாஷாவை படி தாதிஷா, கையைப் பிடிச்சு, மறைச்சு கூட்டிட்டு போனாங்க. ஒரு நாலு பேர் பூபாஷா வயசுல இருந்தாங்க. அவங்கள்ல ஒருத்தர் கிட்ட புவாஷா கையைக் கொடுத்து, தூரமா கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க. புவாஷா அழுதாங்க.படி தாதிஷா தான் கட்டாயமா அனுப்பி வச்சாங்க. அந்தக் கூட்டிட்டு போனவர் தான்  பூபாஷாவாக இருக்கனும்." என வேதனையாகச் சொல்லி முடித்தான் ரகுவீர்.

"அவர் தான் பூபாஷான்னு எப்படி உறுதியா சொல்றீங்க?" எனக் கேட்டாள் ஜானகி.

"ஏன்னா புவாஷாவுக்கு அவரைப் பிடிச்சது. அது தான். அதுனால தான் எனக்குப் புவாஷா மேல கோபம். என்னை விட்டுட்டுப் போய்ட்டாங்கன்னு." என்றான் ரகுவீர்.

"ஆனால், தாதிஷா அன்னைக்குப் படி தாதிஷா சொன்னதா சொன்னது கஜேன் சாசா சொன்னது, எல்லாம் வச்சு பார்க்கும் போது, அவர் தான் பூபாஷாவாக இருக்கனும்னு வேண்டிகிட்டேன்." என்றான் ரகுவீர்.

ஜானகிக்கு அவன் தன் அம்மா மீது வைத்த பாசத்தைப் பார்த்து கண்கள் கலங்கியது. "நீங்க வளர்ந்த பிறகு, அவங்களை தேடனும்னு தோணலையா?" எனக் கேட்டாள் ஜானகி.

"எந்தக் கூட்டத்துக்குப் போனாலும் எங்கையாவது என் புவாஷாவை பார்க்க மாட்டமான்னு ஏங்குவேன். எந்தப் பேஸிஸ்ல தேடருதுன்னு தெரியலை. முதலில் அவங்களைப் பிரிந்த சமயம், காய்ச்சல் வந்து ரொம்ப நாள் கஷ்டப்பட்டுத் தான் என்னைத் தேற்றினாங்க. இங்க இருந்தா அவங்க ஞாபகம் வரும்னு டேஹராடூன் அனுப்பிட்டாங்க. அதுக்கப்புறம் படிப்பு, MBA ,பாரின் போனேன். வந்து பிஸ்னஸ். என நாள் ஓடிடுச்சு." என்றவன் ஒரு பெருமூச்சு விட்டான்.

"சரி,இதெல்லாம் எடுத்து வச்சுட்டு வா, படுக்கலாம்." என்றான் ரகுவீர்.

"என்ன சொன்னீங்க?" என அவள் அதிர்ச்சியாகி கேட்கவும்,

"ஆமாம் இதுக்கு ஓன்னும் குறைச்சல் இல்லை. என் மேல நம்பிக்கை இல்லாமலா இந்த நடுராத்திரியில் என் கூடப் பேசிகிட்டு இருப்ப?" எனக் கேட்டான்.

"ம், செல்ப் காண்பிடென்ஸ், எனக்குக் கராத்தே எல்லாம் தெரியுமாக்கும்." என்றாள் ஜானகி.

ஒரே இழுப்பில், அவளை இழுத்து கைகளைப் பின்னால் இருக்கக் கட்டி, மற்றொரு கையால் அவள் வாயைப் பொத்தி தூக்கினான். அவள் திமிறியும் ஒன்றும் முடியவில்லை. அவளை இழுத்துச் சுவரோரம் திருப்பி நிறுத்தி வாயைப் பொத்தினான்.

"இப்போ சொல்லு என்ன பண்ணுவ?" என்றான் ரகுவீர். அவன் கையைக் கடித்து, தன் வாயை விடுவித்துக் கொண்டவள் " பாகல் ஹை க்யா ஆப். (நீங்க என்ன லூசா), பேசிக் கிட்ட இருக்கையில் யாராவது இப்படிச் செய்வாங்களா?" எனக் கோபமாகக் கேட்டாள் ஜானகி.

"ப்ராக்டிகல் க்ளாஸ், ஜானூ பேபி. நாளைக்கு ஏதாவதுன்னா சமாளிக்கனும்." என்றான்.

"யாராவது இப்படிப் பிடிச்சா கையைக் கடிக்கனும், இது கரெக்ட். காலை வச்சு, பின்னாடி ஒரு எத்து எத்தனும். அவன் அசரும் போது, திரும்பிடு. கையை இப்படி மடக்கு, என அவள் கைகளில் செய்து காண்பித்தான்(முஷ்டியை இறுக்கி). அதை வைத்து மூக்கு மேல நெற்றி கிட்ட ஒரு குத்து விடு, அவன் பொரி கலங்கி நிக்கும் போது எஸ்கேப்!" என்றான்.

அவள் "ஒரு டெமோ பார்ப்போமா?" என்றாள் ஜானகி.

"உனக்குச் சொல்லி தரும் போது அதுக்குக் கவுண்டர் கொடுக்க எனக்குத் தெரியாதா." என்றவன்.

அவளை நெருங்கி, அவள் கூந்தல் ஒதுக்கி மண்டையைத் தட்டி, "இதையும் கொஞ்சம் யூஸ் பண்ணு ஜானூ பேபி!" என்றவன். அவள் கண்களோடு உறவாட மெய் மறந்து நின்றனர். அவள் முகத்தை விரலால் அளக்கத் தொடங்கினான். அவளும் மயங்கி நிற்க, பின் சுதாரித்தவன்.

"இது ரொம்ப ஆபத்து கீழே இறங்கு, போ!" என விரட்டி. லைட் ஆப் செய்து அவளோடு லிப்டில் வந்து, அவள் ரூமில் விட்டுவிட்டு, "குட் நைட் டியர்!" என அணைத்து விடுத்துச் சென்றான்.

 

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!