தொடர் : 30
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
அதிகாலைப் பொழுதில் ஐந்தரை மணிக்கெல்லாம் குளிரையும் பொருட்படுத்தாமல் சுறுசுறுப்பாக இயங்கியது சிவமாளிகை. நேற்று இரவு நண்பர்கள் கூடிப் பேசிய பிறகு சிவகுரு காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செல்வதைப் பற்றி, இளையவர்களிடம் கேட்டார். அடுத்த நாள் வேலைகளைப் பற்றிக் கலந்தாலோசித்து, அதிகாலை கிளம்பலாம் என ஒரு மனதாக முடிவானது.
ராகினி, மூன்று புதிய பட்டுச் சேலைகளை, ப்ளவுசுடன் கொண்டு வந்தார். எல்லாம் ஜானகி, அமிர்தாவுக்காக வாங்கப்பட்டது. பச்சையில் மஞ்சள் பார்டர், வைலட் வித் மெரூன். சிவப்பில் பச்சை பார்டர் என அளவான கரையுடன், வெயிட் குறைவான அழகிய உயர்தரப் பட்டுச் சேலைகள். அதற்கேற்ப ஆரி த்ரெட் வொர்க் செய்யப் பட்ட ரிச் டிசைனர் ப்ளவுஸ் என எல்லாம் அழகாக இருந்தது. இது ராகினி, சொந்தத்தறி வைத்திருக்கும், டிசைனரான செட்டிய வீட்டு ஆச்சியிடம் ஸ்பெஸலாக நெய்து வாங்கியது.
அந்தச் சேலைகளைப் பார்க்கவும், மயூரி மஞ்சரி, மற்றும் ஸ்ரீ நிதி மூவருக்கும் மிகவும் பிடித்தது. நாளை காலை கட்டச் சொன்னார் ராகினி. பெண்களும் மறுப்புச் சொல்லாமல் சரி என்றனர்.
மஞ்சரிக்குச் சேலை கட்டி தயார் செய்தாள் மயூரி. "ஒரு போட்டோ எடுத்து ராஜ்க்கு அனுப்பிட்டு வரேன்டி. மாஸியை உனக்கு உதவிக்கு அனுப்புகிறேன்." எனச் சொல்லிச் சென்றாள் மஞ்சரி.
மயூரி அறைக் கதவை ராகினி தட்டிக் கொண்டிருந்தார். "ஆயி புவாஷா!" எனக் குரல் கொடுத்தாள் மயூரி. தனக்கு சேலை கட்டிக் கொள்ள மயூரி சிரமப்பட்டுக் கொண்டு இருந்தாள். ராகினி, நகை மற்றும் பூவுடன் வந்தார். அதற்குள் சிவகுரு அழைப்பு சத்தம் கேட்க, அங்கே வந்த அமுதனிடம். மயூ கதவைத் திறக்கவும் இதைக் கொடுத்து விடு, எனச் சொல்லி அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.
தன் புவாஷா தான் அழைப்பது என அவரைக் காக்க வைக்கக் கூடாது என நினைத்து, இன்ஸ்கர்ட் ப்ளவுசுடன் ஒரு ஷாலை மேலே போட்டுக் கொண்டு, "புவாஷா, இந்தச் சாரி கட்டி விடுங்கள், மஞ்சு அவளுக்கு ட்ரெஸ் பண்ணவும் போய்ட்டா!" என்றபடி கதவைத் திறக்க, அங்கே அமுதன் நின்றான். அவனை எதிர் பாராத மயூரி அதிர்ச்சியில் திரும்பிக் கொண்டாள். அமுதனும் அவளை அப்படி எதிர் பாராததால் சாரி என்றபடி திரும்பினான்.
"அம்மா, இதைக் கொடுக்கச் சொன்னாங்க." என அவன் கையில் வைத்திருந்ததை திரும்பிப் பார்க்காமல் நீட்டினான் பின்னாடி தட்டை மட்டும் நீட்டியவாறு. அவளும் திரும்பிப் பார்க்காமல், கையை நீட்டத் தட்டு எங்கே எனத் தெரியாமல் துழாவினால்.
அவனும் அதை உணர்ந்து "இருமா" என்னவன், அவள் பக்கம் திரும்பி, டிரஸ்ஸிங் டேபிள் மேல் அவைகளை வைத்தான். கண்ணாடியில் அவள் உருவம் தெரிந்தது. அவள் அழகில் தன்னை மறந்தவன், இங்கிதம் மறந்து அவளையே அவள் தன்னவள் என்ற உரிமையில் ரசனையாகப் பார்த்திருந்தான். நேற்று இந்நேரம் கூட அவனுக்கு அந்த உரிமை இல்லை. பெண்ணாவாள் தன் மனம் திறந்ததில் தலைகீழ் மாற்றம்.
அவளும் அதே நேரம் கண்ணாடியில் அவனைப் பார்த்து விட்டாள். "ஐயோ!" என அவள் கண்ணை மூடினாள். அவளை நெருங்கி, காதோரம், "ஸ்வர்ணி, சேலைக் கட்ட உதவிப் பண்ணவா?" என அவளிடம் ஹஸ்கி வாய்சில் கேட்டான் அமுதன். மயூரிக்கு மூச்சு அடைத்தது. சமாளித்து, "ஆசையைப் பாரு, இங்கிருந்து இப்ப கிளம்புறீங்களா, இல்லை புவாஷாவைக் கூப்பிடவா?" என திணறிக் கொண்டுக் கேட்டாள்.
"கூப்பிடு அவங்களையே கேட்போம்." என அவள் இடையில் இரு கைகளையும் கோர்த்துக் கொண்டு, அவளை அவன் பக்கம் திருப்பிக் கொண்டு தன் வாயால் காற்றை ஊதி அவள் முடியை ஒதுக்கிக் கூசச் செய்தான். கண்களோடு உறவாடி அவளை மயக்கிக் கொண்டிருந்தான். நெற்றியில் முட்டி, "என்னை மயக்குறியே, என்னையவே பொறுக்கிப் பயலா மாத்திட்ட " என அவளோடு இழைந்து கொண்டிருந்தான். அவள் அவனைப் பிரித்து நெஞ்சில் கை வைத்துத் தள்ளிக் கொண்டு கதவு வரை வந்தாள்.
"ஜாவ், ஒழுங்கா போங்க, இந்த வேலையே இங்க ஆகாது." என்றாள் மயூரி. "ம்,அப்படியா!" என்ற அமுதன், அவளை இழுத்து அணைத்து, இதழோடு இதழ் ஒற்றி, அவள் சுதாரிக்கும் முன் விடுவித்து,
"சீக்கிரம் வாடி என் பொண்டாட்டி!" எனத் தமிழில் சொல்லி விட்டு, சிரித்துக் கொண்டே சென்றான்.
அவன் சென்ற பின்னும் அவளுக்குப் படபடப்பு குறையவில்லை. அவன் இதழொற்றலை நினைத்துக் கன்னம் சிவந்து நின்றாள். "பர்த்தமிஸ் கைக்கா, ஹிம்மத் தோ தேக்கோ. சப் மேரி கல்தீ ஹை. (பொறுக்கி பையன்,தைரியத்தைப் பாரு, எல்லாம் என் தப்பு)" என அவனை உதட்டளவில் வைது. உள்ளத்தில் மகிழ்ந்து கொண்டிருந்தாள் மயூரி.
"மயூம்மா ரெடியாகிட்டியா? கதவை திறடா!" என்ற ராகினியின் குரலில் தலையை வெளியே விட்டுப் பார்த்து, உறுதிப் படுத்திக் கொண்டு திறந்தாள்.
ராகினி உள்ளே வந்து ஐந்து நிமிடத்தில் அவளைத் தேவதையாக மாற்றினார். சிவப்பு சேலை, பச்சை ரவிக்கை, அதற்கேற்ப கற்கள் பதித்த நகை செட், ஜடையில் அடர்த்தியாகத் தொங்க விடப் பட்ட குண்டு மல்லிப்பூ, லேசான ஒப்பனை, விழிகளில் மை எழுதி, தன் தம்பி மகளைத் தேவதை ஆக்கினார்.
ஹாலில் பெரியவர்கள் கூடியிருக்க, மஞ்சரி தன் போட்டோ சூட் பாலனைக் கொண்டு முடித்து வந்தாள். மயூரி அலங்காரம் முடித்து, சிறு க்ளட்ச் கையில் பிடித்து நடந்து வந்தாள். அவள் வருகைக்காகக் காத்திருந்த அமுதன், விழி எடுக்காமல் கண்ணால் அவளைப் பருகினான். அவளுடன் சேர்ந்து படிகளில் இறங்கினான். பொற்சிலை ஒன்று, தரையிறங்கி வருவது போல் இருந்தது.
கீழே பாண்டே அவர் மனைவி ரெட்டிக் குடும்பம் தயாராக நின்றது. தாத்தா, அப்பத்தா தங்களுக்கு நடக்க இயலாது என வீட்டிலிருந்து விட, தெய்வா சண்முகமும் வீட்டில் தங்கினர்.
ஸ்ரீ நிதி தியாவிற்கு அழகிய பட்டுப்பாவாடை அணிவித்து இருந்தாள். ஏசி டெம்போ ட்ராவலர் ஏற்பாடு செய்து இருந்தார் சிவகுரு. பெரியவர்கள் முன் இருக்கையில் அமர, சிறியவர்கள் பின் இருக்கைக்கு வந்தனர். பயணம் மிகவும் சுவாரஸ்யமாகச் சென்றது. ஸ்ரீநிதி, இவர்களிடம் தோழமையுடன் பழகினாள்.
ஜானகி, அமிர்தா பற்றி மயூரியும், மஞ்சரி, ராஜ் பற்றியும் பேசிக் கொண்டே வந்தனர். தியா குட்டி, ஒவ்வொரு மடியாகத் தாவி அவர்களை அன்புத் தொல்லை செய்து வந்தது. ஶ்ரீயின் பேச்சில், பாண்டேவின், இளையமகளின் ,ஏர்ஃபோர்ஸ் பைலட், அமித்பாண்டே அடிக்கடி வந்தான். மஞ்சரி தான் கேட்டாள், "அமித் உங்களை ரொம்பப் பாதிச்சு இருக்கிறாரே ஸ்ரீ." என்றாள்.
ஸ்ரீயின் கன்னங்கள் செம்மையுற, "சத்தமா சொல்லாத பெரிசுங்க காதில் விழுந்திடும். கேரியர் செட்டில், ஆகாமல் சொல்லக் கூடாது. இதுங்க உடனே திருமணம் ப்ரபோசல் ஆரம்பிச்சுடும்." என ரகசியம் சொன்னாள்.
"இங்கே எல்லாம் அப்படி இல்லை, நம்ம அமுதன் ப்ரோ மயூரியின் லவ் ஒன் அவர்ல டெவலப் ஆகி பாஸ்ட் பிரிண்ட் லவ். நான், பாலன்லாம் பாரு சின்னதில் இருந்து வேற ஆப்ஸனே இல்லாமல் உட்கார்ந்து இருக்கோம்." என மஞ்சரி குறைபட்டாள்.
"மஞ்சி ஆல் ரெகார்டட், இருடி ராஜ் பய்யாவுக்கு அனுப்புறேன்." என்றாள் மயூரி. "அனுப்பு, அனுப்பு, அப்படியாவது சீக்கிரம் ஷாதி பண்றானான்னு பார்ப்போம்." என அலுத்துக் கொண்டாள்.
"மஞ்சரி, உனக்குக் கேரியர் பத்தி யோசனை இல்லையா?" என்றாள் ஶ்ரீ.
"ஆமாம் என்ன படிச்சாலும் கடைசியில் வீட்டில் உட்காரப் போறோம். நான் படிக்கிறதே, மயூக்காகத் தான்." என்றாள் மஞ்சரி.
"ஆகா, இதுவல்லவோ இலட்சிய நட்பு." என்று கலாய்த்தான் பாலன்.
ஒரு மணிநேரத்தில் மதுரையை அடைந்து, மீனாட்சி அம்மன் கோவில், தெற்கு பக்க கோபுர வாசலுக்குச் செல்ல ஆவணி மூல வீதியில் இறங்கினர். செல்போன் உள்ளே அனுமதி இல்லை, எனவே அனைவரது போனையும் ஒரு பையில் போட்டு ட்ரைவரிடம் கொடுத்தனர். இவர்களை அழைத்துச் செல்ல கோவில் சேவகர் வந்திருந்தார்.
பூ, மலை வாழைப் பழம், மாலை எல்லாம் திண்டுக்கல்லில் ஏற்பாடு செய்து இருந்தார் சிவகுரு. பெரிய மாலை மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. அம்மனுக்குப் பட்டு, சுவாமிக்குப் பட்டு எனத் தாம்பூலம் நிறைந்து இருந்தது. அமுதன், பாலன் தட்டை தூக்கிக் கொண்டனர்.
அந்தப் பிரம்மாண்ட கோபுர நுழைவாயில் மனிதா நீ எவ்வளவு அற்பமானவன், என்பதை உணர்த்துவதாக இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் ஓர் அற்புதமான ஆன்மீக உணர்வைத் தந்தது மீனாட்சி, அரசாட்சி செய்யும் அந்த ஆலயம்.
மதுரை, தாமரைப்பூ போல் அடுக்காக வீதிகளைத் தமிழ் மாதங்களின் பெயர்களில் கொண்டது. கோவிலுக்கு உள்ளே சுற்றி வரும், வீதியை ஆடிவீதி என்பர். சித்திரை ஆவணி மாசி வெளி என நான்கு புறமும், திசைகளுடன், மாதங்களை இணைத்து வீதிகளுக்குப் பெயர் சூட்டி இருப்பர். இங்கு இருக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் திருவிளையாடற் புராண கதை உண்டு.
தெற்கு கோபுரம் வழியாக ஆடி வீதி கடந்தால் பொற்றாமரைக் குளம் இருக்கும். அந்தக் கரையில் இருக்கும் பிள்ளையார், விபூதி அபிஷேகத்துடன் எப்போதும் இருப்பார். கூன்பாண்டியன், வெப்பு நோயை ஞானசம்பந்தர், திருநீறு பூசிக் குணமாக்கியதின் அடையாளம், மந்திரமாவது நீறு.
சிவகுரு குடும்பத்தினரை அந்தக் கோவில் சேவகர், மீனாட்சி அம்மன் சன்னதிக்கு அருகில் அழைத்துச் சென்று நடையில் அமர வைத்தார். அம்மன் அன்று வைரகிரீடம் தரித்து பச்சை பட்டுடுத்தி, தெய்வீக கலை அழகுடன் இருந்தாள். மூக்குத்தியுடன் சுடர் தரும் அமுதாக இருந்தாள் கடம்பவன சுந்தரி.
மதுரை வாழ் மக்களுக்கு இந்த மீனாட்சி அம்மையும், சுந்தரேஸ்வரர் பெம்மானும் தான் அம்மையப்பன். அவர்கள், திருக் கல்யாணம் தான் மதுரையின் சீர்மிகு வைபவம். தீபம் காட்டி அம்மையின் அருளை அனைவருக்கும் வேண்டிப் பட்டர் குங்குமப் பிரசாதம் வழங்கினார்.
அனைவரும் மெய்யுருகி நின்றனர். இவர்கள் கையால் தந்த மாலைக்குப் பதில் அவள் மணமாலைத் தருவாள் என்பது உறுதி. சுவாமி சன்னதிக்குச் செல்லும் முன் முக்குறுணி பிள்ளையார் கம்பீரமாகக் காட்சி தந்தார்.
அமுதன், மயூரி, மஞ்சரி, ஸ்ரீநிதிக்கு கோவிலின் சிறப்புகளை விளக்கிக் கொண்டே வந்தான். சுந்தரேஸ்வரர், வெள்ளியம்பலத்தில் பாண்டியனுக்காக, கால் மாற்றி நடனமாடும் நடராஜராக நின்றிருந்தார். நேரே எம்பெருமானை அருகிலிருந்து தரிசிக்கும் பேறு பெற்றனர் இந்தச் சிவ குடும்பத்தினர். சுற்றுப் பிரகார மண்டபத்தில் திருவிளையாடற்புராண 64, கதைகள் சிற்பங்களாக இருந்தது, அதனை விளக்கிச் சொல்லி வந்தார் சிவகுரு நாதன்.
ராகினி, தம்மைச் சார்ந்தவருக்காய் நெக்குருகி பிரார்த்தனை செய்தார். ஒவ்வொரு இடமாகத் தரிசித்து, திருக் கல்யாண மண்டபத்திற்குள் வந்து அமர்ந்தனர். இங்குக் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருக்கும். அவரவர் தனியாக அமர்ந்து அவ்விடத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
மயூரிக்கு அமுதனுடன் இங்கு வந்ததில் பரம சந்தோஷம். இவர்கள் ஜோடியாக வந்து கொண்டிருக்க, சிலர் ஜோடிப் பொருத்தத்தை மெச்சிப் பேசிக் கொள்ள, அமுதன் அவளுக்கு மொழிப் பெயர்த்தான். அவளுக்கு அதில் பூரிப்பு வந்தது.
ராகினியும், சிவகுருவும் தாங்கள் முதல் முறை இந்தக் கோவிலுக்கு வந்த நிகழ்வை நினைத்துக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு மணம் ஆகவில்லை. ஒரு பெண்மணி இவர்கள் முகம் பார்த்து, சீக்கிரம் திருமணம் ஆகும் எனக் குறி சொல்லிச் சென்றது. அதை நினைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு கம்பளத்துக்காரப் பெண்மணி வந்து இவர்கள் முன் நின்று....
"சித்தர் மலையில் குடியிருக்க.
சீதா தேவி போல் மகள் உனக்கு.
சூதானமா வச்சுக்கத் தாயீ.
ராவணன் வாரான் சிறையெடுக்க.
ராமன் பக்கத்திலிருந்தாலும் பயனில்லை.
கடலோரம் வசிக்கும் மகள்,
தீவில் சிறை இருக்கும் சாபம் உண்டு.
மீனாட்சியைக் கும்பிட்டு,
மூன்று மகராசிகளுக்கு,
கன்னிப் பெண்ணுக்கு,
சிற்றாடை கட்டினவளுக்கு,
சந்தனம் குங்குமம் சூட்டி
நிறைக்க வளையல் போடு.
அந்தச் சத்தம் அவள் காதில்
ஒரு தாயின் கோரிக்கையாய் ஒலிக்கட்டும்,
உம் மகளைக் களங்கமில்லாமல்
காத்துத் தருவாள் என் தாயீ!" எனச் சொல்லிய பெண்மணி, காசுக்கும் கை ஏந்தாமல் மறைந்து விட்டாள்.
ராகினிக்கு அந்தப் பெண்மணிப் பேசியதில் பாதிப் புரியவில்லை.
"சிவூ, அவங்க என்ன சொல்லீட்டுப் போறாங்க?" எனப் பதறினார் ராகினி.
"இருமா,ஒண்ணும் பயப்படாத.எல்லாம் சரியாகிடும்." எனத் தேற்றியவர்.
அந்தப் பெண்மணி பேசியதை நினைவில் கொண்டு வந்தவருக்கு,
வளையல் வாங்கிப் போட சொன்னது மனதில் நிற்க சிவகுரு கோவில் கடைக்கு, (கோவில் உள்ளேயே இருக்கும்) ராகினியை அழைத்துச் சென்று. டஜன் டஜனாக வளையல் எல்லாச் சைசிலும் வாங்கினார். சந்தனம், குங்குமம் பிரசாதமும் வாங்கிக் கொண்டனர்.
திருக்கல்யாண மண்டபத்தில் வந்து, தியா பாப்பாவை அமரவைத்து, சந்தனம், குங்குமம் பூசி வளையல் மாட்டினார் ராகினி. பின்னர் மஞ்சரி, மயூரி, ஸ்ரீநிதியை அமரவைத்து வளையல் மாட்டி, சீக்கிரம் திருமணம் ஆக வேண்டி பிராத்தித்தார்.
பர்க்கா, பார்வதி மற்றும் அங்கு வந்த மற்றொரு பெண்மணியையும் அழைத்து அமரச் செய்து வளையல் பூட்டினார் ராகினி. பார்வதி, ராகினியையும் அமர வைத்து இதே போல் செய்தார். சிவகாமி தெய்வா ஜானகி, அமிர்தாவுக்கு எடுத்துக் கொண்டனர். மீதி இருந்ததை, குளக் கரையில் அமர்ந்து வருவோர், போவோர், அணைத்துப் பெண்களுக்கும் கொடுத்தனர். இதற்கிடையில், பாண்டே, ரெட்டி பிரசாதம் வாங்கி வர,அதனைச் சாப்பிட்டுப் பசி ஆறினர்.
கோவிலை விட்டு வெளியே வந்து, புது மண்டபம் போன்ற இடங்களைக் காட்டி, காலை உணவுக்குக் காளைவாசல் பைபாஸ் சாலையில் உள்ள நட்சத்திர உணவகத்துக்கு அழைத்துச் சென்றார் சிவகுரு. திருப்பரங்குன்றம் முருகப் பெருமானை உச்சி காலப் பூஜையில் தரிசித்து, இரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தனர். தெய்வா சூடான உணவு தயாரித்துப் பரிமாறினார்.