தொடர் : 36
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
உதய்பூர், ஏரிகளின் நகரம் என வர்ணிக்கப்படும் ஆடம்பர நகரம். மஹாராணா உதய்சிங்கால் கட்டமைக்கப்பட்டது. ஆரவல்லி மலைத் தொடர்கள் இந்த நகரைத் தார் பாலைவனத்தில் இருந்து பிரிக்கின்றன. இந்த ஏரிக் கரைகளில் மேவாட் ராஜ வம்சத்தினரால் கட்டப்பட்ட அரண்மனைகள் இருக்கின்றன. இதில் கம்பீரமாக நிற்கும், சிட்டி பேலஸ் முதன்மை வாய்ந்தது. சிவ்மந்திர், ஜெக்தீஸ்மந்திர், அம்பாமந்திர் ஆகியவை பழமை வாய்ந்த கோவில்கள் ஆகும். ஆரவல்லி மலைத்தொடர், ஏரிகள், ஏரிக்கரை ராயல் ஹோட்டல்கள், பூங்காக்கள் என உதய்பூர் கண்களுக்கு ராயல் ட்ரீட் தான்.
ராத்தோட்களின் உதய்பூர் ஹவேலி, நீண்ட நாட்களுக்குப் பின் கலைக் கட்டி இருந்தது. சற்றே மலைப்பாங்கான அந்த நிலத்தில், பெரிய இரண்டு நுழைவாயில் தாண்டி, முகப்புப் பகுதியில் மார்பில் கற்களால் ஆன சிற்பங்கள், நீருற்று என கலையம்சத்துடன் இருந்தது.
மிகப் பெரிய, மரக்கதவு இரண்டு ஏழடி உயரத்தில் மிரட்டியது. அதைத் தாண்டிய பின் விஸ்தாரமான முற்றம் இருந்தது. அதன் நான்கு புறங்களிலும், பெரிய ஹால் இருந்தது. வேலைப்பாடுடன் கூடிய மரத்தாலான நாற்காலி ஷோபாக்கள் டீப்பாய்கள் இருந்தன.
பின் கட்டில் சமையல் கூடம், டைனிங் ஹால் இருந்தது. பழமை வாய்ந்த ஹவேலியை, அதன் கம்பீரம் குறையாமல், தற்போதைய காலக்கட்டத்தில் உள்ளது போல் அறைகளை, அட்டாச்டு பாத்ரூம் டாய்லெட், ஏசி என வசதி செய்திருந்தனர். ஏகப்பட்ட அறைகள் இருந்தன. வீட்டின் நடுநாயகமாக வீரேந்தர் சிங் ராத்தோடின் தாய் தந்தையர், ராஜேந்திரசிங் ராத்தோட் ஸ்வர்ண மஹாலக்ஷ்மி ராத்தோடின் வரையப்பட்ட படங்கள் மாட்டியிருந்தன.
ஜானகிக்கு இந்த வீட்டின் தொன்மை, பழமையைக் கண்ட பின்னர் தன் தாயாரின் உயரம் புரிந்தது. என்றுமே ராகினி, தன்னை பெரிய மாளிகை வீட்டு ராணியாகக் காட்டிக் கொண்டது இல்லை. ஆனாலும் இயல்பான அவரின் ஆட்டிடூயூட் அவரை மேல்தட்டு வர்க்கம் எனக் காட்டி விடும்.
இவ்வளவு பெரிய வீட்டின் இளவரசியாக இருந்தவர், தன் தந்தைக்கு பணிவிடை செய்வதும், அவருக்கு தேவையானதை எடுத்துத் தருவதும், அவரிடம் நடந்துக் கொள்ளும் முறையைப் பார்த்து, அவர்கள் காதலின் ஆழத்தை அறிந்து கொண்டாள் ஜானகி.
ராத்தோட்ஸ் ஹவேலிக்குள் வந்தவுடன் அக்கம் பக்கத்தில் இருந்த வேலையாட்கள் வந்து, "கம்மாகனி ராத்தோட்ஷா!" என வணங்கி மரியாதை செய்தனர்.
தாதாஷா, தாதிஷா மும்பையில் இருந்ததற்கு மாறாக இராஜஸ்தானி மொழியில், தன்னே மன்னே, கித்தே என பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களை வந்து சந்தித்த மனிதர்களும், பெரிய பக்டி,(முண்டாசு) அணிந்து இருந்தனர். பெரிய தேங்காய் நார் போன்ற மீசை வைத்திருந்தனர். பெண்கள் முக்காடு இட்டு நெற்றியில் சூடி அணிந்து இருந்தனர் மூக்கில் இருந்து வளையம் சங்கிலி கோர்த்து, காதுக்கு பின்புறம் ஜடையில் மாட்டியிருந்தனர். விதவிதமாக கனமான தந்த வளையல்கள், அகன்ற கூடாரம் போன்ற பாவாடை, வன்னமயமாக அணிந்து இருந்தனர்.
ஜானகிக்கு நன்றாக பொழுது போனது. இது என்ன? அது என்ன? என கேள்வி கேட்டு கொன்று விட்டாள் பூனம், ஷப்னம் ஏன் சற்றே ஒதுங்கி நிற்கும் ஸர்குனிடமும் கேள்வியை அடுக்கினாள். ராஜ்வீர், ரன்வீரும் இவர்கள் உடன் வந்திருந்ததால், அவர்களும் இவள் கேள்விக்கு பதில் சொல்லி வந்தனர்
ராஜிற்கு மஞ்சரியிடம் இருந்து போன் கால் வந்தது. "அட்டனன்ஸ் போட்டுட்டு வா போ போ." என கேலி பேசி அனுப்பி வைத்தாள் ஜானகி. ரன்வீர் தன் படே பையாவுடன் பேசிக் கொண்டு இருந்தான்.
ரகுவீர், உதய்பூர் ஏற்பாடுகளைப் பற்றி கேட்டு, சில யோசனைகளை சொல்லிக் கொண்டு இருந்தான். குடும்பத்தினருடன் பேசுவதற்காக ஸ்பீக்கரில் போடச் சொல்லி காத்திருந்தான், ரன்வீர் பேசியை கையில் வைத்திருந்த நேரம் இவர்கள் பேச்சைக் கேட்டான்,
"ஜானகி, உனக்கு பேசாமல், இராஜஸ்தானி மாப்பிள்ளையை பார்த்துடலாம், உனக்கு எங்க ஆளுங்க மேலே இவ்வளவு நாட்டம் இருக்கே?" என கேலி செய்தார் பூனம்.
"ஆண்ட்டிஜி நீங்க பெத்ததோ ஒரே பொண்ணு, அப்பறம் எப்படி எனக்கு மாப்பிள்ளை சொல்லுவீங்க? இந்த ஜானகி கையை பிடிக்கிறது அவ்வளவு சுலபமில்லை, காளை மாட்டை அடக்கனும், இளவட்டக்கல் தூக்கனும், ரேக்ளா வண்டி ஓட்டனும்." அவள் அடுக்கிக் கொண்டே போனாள்.
"ஜானி, கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு." என பூனம் கேட்டார். ஜானகி, யுடியுப்பில் இருந்து, ஒவ்வொரு தமிழ் பட காட்சிகளாகக் காட்டினாள் இளவட்டக்கல்லுக்கு முதல் மரியாதை, சிவாஜி தூக்குவதைக் காட்டினாள்.
"எனக்கு தெரிஞ்சு, உன் கண்டிசனுக்கு ஃபிட் ஆகுற ஒரே மாப்பிள்ளை உன் மாம்ஸ் தான்." என பூனம் அமரேனை காட்டினார்.
" ஆண்ட்டிஜி! வார்த்தை மாறக் கூடாது, மாம்ஸ் பந்தயம் வச்சுக்குவோம். நீங்க மட்டும் ஜெயிச்சிடுங்க, பூனம் ஆண்டிக்கு சௌத்தன்னா(சக்காளத்தி ) வந்துடுறேன். மீன்குழம்பு, மட்டன் சுக்கா, செட்டிநாடு சிக்கன் எல்லாம் சூப்பரா செய்வேன். எங்க ஊருக்கு கடத்திட்டு போயிடுவேன்." என்றாள் ஜானகி.
இவள் பேசுவதைக் கேட்ட ரகுவீருக்கு அங்கே கொதித்தது. 'நேற்று முன்தினத்தில் இருந்து, இவள் கூட பேசுறதுக்கு நான் போராடிக்கிட்டு இருக்கேன் என்னை தவிக்க விட்டுட்டு அங்க வாயடிக்கிறதைப் பாரு. என் சாசாஷா, காகாஷா எல்லாம் இவள் கண்ணுக்கு தெரியும். 'எலிஜிபிள் பேச்சுலர்' நான், என்னை மட்டும் தெரியாது. இவள் மேரி ஜானாக (என்னுயிர்) மாறுவதற்குள்ள, என் ஜானை வாங்கிடுவா என மனதில் புலம்பினான்.
"இப்படி ஒரு ஆப்சன் இருபத்தி இரண்டு வருஷம் முன்னாடி இல்லாமப் போச்சே?" என வருத்தப்பட்டார் அமரேன்.
"மாம்ஸ், இப்பவே நான் ஒரு பிரச்சினையும் இல்லைனு சொல்றேன், நீங்க என்ன கடந்த காலத்தைப் பத்தி பேசுறீங்க." என்றாள் .
ரன்வீர் அப்போது பேச்சில் நுழைந்தவன், "ஜானி டியர் முதல்ல பேச்சுலர் பிரதர்ஸ்க்கு ஷாதி நடக்கட்டும், அப்பறமா இந்த ஓல்ட் பிரதர்ஸை பார்க்கலாம்." என்றவன், "ரகுவி பையா லையன்ல இருக்கார்." என்றான். ஜானகி, ரகுவீர் பெயரைக் கேட்டவுடன் அங்கிருந்து நகர்ந்தாள். இரண்டு நாட்களாக தொடருகிறது இந்த கண்ணாமூச்சி ஆட்டம்.
ஜானகி, தனக்கு ஒதுக்கப்பட்ட மாடி அறைக்கு சென்றவள், முந்தைய நாளை நினைத்துக் கொண்டே தன் துணிகளை அலமாரி ஹேங்கரில் மாட்டினாள்.
அன்று மும்பா தேவி கோவிலுக்கு சென்றவளுக்காக ரகுவீர் காத்திருந்தான். அமரேன் டின்னர் முடித்து வருவதாக சொல்லவும், தனது அறைக்குச் சென்றவன், முதல் நாள் தூக்கம் கெட்டதில் அசந்து உறங்கி விட்டான்.
மறுநாள் அதிகாலையில், சித்தி விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என, ராஜ்வீரை துணை பிடித்து அமிர்தாவுடன் கிளம்பி விட்டாள். காலை உணவு முடித்து ரகுவீர் கிளம்பிய பின்னரே இவள் வீடு வந்து சேர்ந்தாள்.
உதய்பூர் செல்ல ஷாப்பிங், பேக்கிங் என்று கஜேனிடம் விடுப்பு பெற்றுக் கொண்டாள். மயூரிக்கும் தேவையான உடைகளை எடுத்துச் செல்வதில் பூனத்திற்கு உதவுவது, என வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு, செய்து முடித்தாள்.
அன்றைய இரவு, ரகுவீர் தாமதமாக வீட்டுக்கு வந்தான். அவனுக்கு உணவு எடுத்து வைப்பதற்காக ஷப்னம் ஹாலில் அமர்ந்து இருந்தவர், இன்னும் பேக்கிங் ஆகவில்லை என புலம்பினார். ஜானகி தான் எடுத்து வைப்பதாக சொல்லி ஷப்னத்தை அவரது அறைக்கு அனுப்பி வைத்தாள்.
ரகுவீர், மிகவும் சோர்ந்து வீட்டுக்கு வந்தான், ஹாலில் அமர்ந்திருந்த ஜானகியைப் பார்த்து ஆர்வமாக அவளுடன்பேசவந்தான்.
" நீங்க ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க, நான் டின்னர் எடுத்து வைக்கிறேன்." என அவனைப் பாராமல் சொன்னாள். அவனும் எதுவும் சொல்லாமல் மேலே சென்று விட்டான். வழக்கமான ட்ராக் டீசர்ட்டில் வந்து டைனிங்கில் அமர்ந்தான் அவள் அவனுக்கு தேவையானதைப் பரிமாறினாள்.
அவனும் பேசாமல் சாப்பிட்டு முடித்தான். இந்த மௌன நாடகத்தை கலைப்பது யாரென்று போட்டி இருவருக்கும் நடந்தது. ஜானகியின் போன் அந்த நேரத்தில் அலறியது பயந்து அவள் அதை எடுக்க ரகுவீர் தாமாக நின்றான்.
"ஹலோ, டேய் சின்னவனே நீதானா, பயந்தே போய்ட்டேன்." என்றவள், ரகுவீரைப் பார்த்து, "தம்பி தான்." என்றவள், "என்னது, நாளைக்கு வர்றியா, டேய் நாங்க உதய்பூர் போறோம்." என அவள் பதில் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவன் போனைக் கேட்டு கையை நீட்ட, அவள் தயங்கியபடி அறிமுகம் செய்து அவனிடம் கொடுத்தாள்.
"ஹலோ, சிவகணேஷ், நான் ரகுவீர், ஹாங் நமஸ்தே, நீங்க நாளைக்கு இங்க வாங்க ஒன்னும் பிரச்சினை இல்லை. நான் இங்க தான் இருப்பேன். நான் லொகேசன் சேர் பண்றேன் வந்துடுங்க." என்று அவளிடம் போனை கொடுக்க, "நீங்க எதுக்கு அவனை வரச் சொன்னீங்க, நான் உதய்பூர் போகனும்னு ஆசையா இருந்தேன்." என அவள் அழமாட்டாமல் சொன்னாள்.
"நீ தாராளமா போய்ட்டு வா வீட்டுக்கு வரும் கெஸ்ட்டை எப்படி பார்த்துக்கனும்னு எனக்குத் தெரியும்." என சொன்னவன் கணேஷ் மொபைல் நம்பரை தனக்கு அனுப்பிக் கொண்டான்.
பேச்சுக்குரல் கேட்டு வெளியே வந்த அமிர்தா விசயம் அறிந்து, "ஜானி நீ போய்ட்டு வாடி, இப்ப தான் எனக்கு மெஸேஜ் பண்ணான். இரண்டு நாள் வேலை இருக்குதாம், கணேஸ் வந்தா, நான் பார்த்துக்குறேன்.." என்றாள்.
"நான் உதய்பூர் கட்டாயம் போகனும் அமித்து, அப்பா அம்மா வராங்க. அவங்களைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு." என, தன் நிலையை விளக்க,
"நான், இரண்டு நாளில் முகூர்த்தத்துக்கு போவேன், நீ என்கூட வாம்மா." என அமிர்தாவிடம் பேசினான் ரகுவீர்.
ஜானகியின் பெற்றோரை சந்தித்து பேசவேண்டும் என முடிவெடுத்தவன், அவளுடனான பேச்சைத் தவிர்த்து, அமிரதாவிடம் ஒரு குட்நைட்டுடன் தனது அறைக்குச் சென்றான். ரகுவீர் சரியாக முகம் கொடுத்து பேசாதது ஜானகிக்கு சங்கடமாக இருந்தது. ஆனாலும் இதுவே சரி என மனதை தேற்றிக் கொண்டாள்.
கண்ணெதிரே இருக்கையில் கண்ணா மூச்சி ஆட்டம் ஆடியவர்களை, நிஜமாகவே கண்ணாமூச்சி ஆட்டம் காட்ட விதி தயாரானது. இந்த நாளின் பாராமுகம் காட்டியதை நினைத்து பின்னாளில் இருவரும் வருந்தி நின்றனர்.
ரன்வீரிடம் இருந்து போனை வாங்கிய பூனம் சாசி, "ரகுவி பேட்டா, ஜானியோட பாயீ வந்தாச்சா நீங்க என்ன செய்றீங்க?" எனக் கேட்டார்.
"இங்க எல்லாம் டீக் ஹை சாசிஷா, ஜான்வி பிரதர் இன்னும் வரவில்லை. ஆன் தி வே." என்றான் ரகுவி.
"சாப்பாடு மெனுவெல்லாம், ஜூகுனு, மீனுகிட்ட சொல்லிட்டு வந்துருக்கேன், ரகுவி, நேரத்துக்கு சாப்பிடு." என்ற ஷப்னம்த்திடம், "மாஷா, உங்களுக்கு கவலையே வேண்டாம், ப்யாரி பஹன் அம்ரூ என்னை நல்லா கவனிச்சுக்கிறா." என்றான் ரகுவி.
"சரிப்பா, வேலையை முடிச்சு முகூர்த்தத்துக்காவது வந்து சேர்." என்ற ஷப்னம், ரன்வீரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு போனை துண்டித்தான்.
"அம்ரூ, நல்ல பொறுப்பான பொண்ணு, அவளுக்கும் ரிஸ்தா பக்கா ஆகிடுச்சாம். அவங்க ஊர்ல பாயீ, பஹன் சம்பந்தி ஆகி அவங்க பசங்களுக்கு ஷாதி செய்வாங்க. அம்ரூவுக்கும் ஒரு பையன் வந்ததே, ஹாங் பாலன் அவனும் இதுமாதிரி க்ளோஸ் ரிலேடிவ்ஸ் தான் ஷாதி பண்ணப் போறாங்க." என ஷப்னம் சொல்லவும், "ஜானகியின், புவாஷா மகள் தான் அம்ரூ. சாசாஷா மகன் பாலன், நான் சொன்னது கரெக்டா." என ரன்வீர் கேட்டான்.
"ரனவீக்கு கூட இதெல்லாம் புரிய ஆரம்பிச்சுடுச்சு." என ஸர்குன் சிலோகித்தார். "எனக்கு புவாஷா மகள் இருந்தால் ஷாதி பண்ணிடுவிங்க. அப்படித்தானே." என ரன்வீர் , தனது கண்டுபிடிப்பை சொல்ல, "பொறுடா, உனக்கு முன்னாடி இன்னும் இரண்டு படே பாயீ இருக்காங்க." என்றார் பூனம்.
"இந்த ஜானகி, ராஜஸ்தானியா இருந்திருந்தா நம்ம ரகுவிக்கு கூட பெண் கேட்டிருக்கலாம், இன்னும் பாபிஷா ரகுவிகிட்ட சிருஷ்டி பத்தி பேசின மாதிரி தெரியலையே?" என்றார் ஸர்குன்.
"இந்த ஷாதிக்கு வந்தான்னா இங்க வச்சு பேசி முடிக்கலாம்னு இருக்கேன்." என்றார் ஷப்னம். இவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டே ராஜேனும், கஜேந்தரும் வந்து சேர்ந்தனர்.
"ரகுவிக்கு பொண்ணு பிடிக்கனும் அது தான் முக்கியம் ஷபூ, அந்தப் பொண்ணு யாராக இருந்தாலும் பரவாயில்லை." என்றார் ராஜேன்.
"பையா, நாம ஏன் ஜானகிய ஒரு ஆப்சனாக ரகுவி கிட்ட கேட்க கூடாது. எனக்கு என்னமோ, ரகுவி ஜானகியை விரும்புற மாதிரி தோனுது. அது என்னுடைய பிரம்மையாக் கூட இருக்கலாம். ஆனால் ஒரு வார்த்தை கேட்கலாம்." என அமரேன் கருத்துக் சொல்ல,
"ஜானகி, நல்லப் பொண்ணு தான் ஆனால் இரஜஸ்தானி இல்லையே?" என்றார் ஷப்னம்.
"ஜானகி பாதி இராஜஸ்தானி தான்." என்றார் அமரேன். "அது எப்படிஜீ, சௌத்ல பிறந்த லட்கீ எப்போ இராஜஸ்தானி ஆனாள்?" என சந்தேகம் கேட்டார் ஷப்னம்.
"ஏன் இராஜஸ்தானியா இருந்தால், உங்க பஹூவா ஏத்துக்குவீங்களா?" என அமரேன் கேள்வி எழுப்ப, அதற்கு ஸர்குன், "ஜானகி நம்ம வீட்டுக்கு பஹூவா வர்றதுக்கு நாம கொடுத்து வச்சுருக்கனும் பாபிஷா. ராஜ்விக்கு ஏற்கனவே பால்ய விவாஹ் முடிச்சு மஞ்சரி காத்துகிட்டு இருக்கா, ரன்வீர் இவளை விடச் சின்னவன். இல்லைனா, இவங்க மாஷாகிட்ட, சகுன்(சீர் தட்டு) தட்டை தூக்கிட்டு போய் இருப்பேன்." என அபிப்பிராயம் சொன்னார்.
"ஸரூ நீயா இப்படி சொல்ற, செகாவத் பரிவார் ரொம்ப கவுரவம் பார்பீங்களே?" என்ற ஷப்னத்திடம், "நீங்க சரியாக சொன்னீங்க பாபிஷா, இருந்தாலும் சில பொண்ணுங்க அதையும் தாண்டி விலை மதிப்பற்றவர்கள். ஜானகி தன்னை சுற்றி இருக்க எல்லாரையும் சந்தோஷமா வச்சுக்க தெரிஞ்சவள்." என்றார் ஸர்குன்
"ஆமாம் ஆமாம், நமக்கும் ப்யாரி குடியா கிடைக்கும்." என ஆமோதித்தார் கஜேந்தர். தாதாஷா, தாதிஷா அங்கு வந்து சேர்ந்தனர். எல்லாரும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கையில் பங்குரியுடன், ஹேமந்த் செகாவத். "கம்மா கனி மாமாஷா, மாமிஷா" என வணங்கி, இவர்களை ஷாதிக்கு வரவேற்றார்.
இன்று மாலை கணபதி ஸ்தாபனா இருப்பதாக அழைத்தார். நாளை மாலை நேரம் மெஹந்தி, அதற்கடுத்த நாள் காலை ஹல்தி, இரவு சங்கீத் நள்ளிரவில் முகூர்த்தம் என அத்தனைக்கும் அழைப்பு விடுத்தார்.
தாதிஷா, கொஞ்சம் தோரனையாகவே அமர்ந்திருந்தார். ராஜ்வீர் தன் சாஸ் சஸூரை வணங்கினான். இவர்கள் பேசிக் கொண்டு இருக்கையில், ஜானகி வந்து சேர, அவளைப் பார்த்த பங்குரி, அவளை ஆசையாக கட்டியணைத்து உச்சி முகர்ந்தாள்.
"ஜானகியை ஏற்கனவே பாத்திருக்கியா பம்மி?" என ஸர்குன் கேட்க, "போட்டோல பார்த்திருக்கேன், போன்ல பேசி இருக்கேன், இப்போ தான் நேர்ல பார்க்கிறேன் பாபிஷா!" என்றார் பம்மி.
ஹேமந்துக்கும் வணக்கம் சொன்ன ஜானகியை, தலையில் கைவைத்து ஆசி வழங்கி நெகிழ்ந்தார் ஹேமந்த். "உன் அப்பா, அம்மாகிட்ட பேசிட்டேன் பேட்டா, மஞ்சரி மயூரியுடன் நாளைக்கு வராங்க!" என்றார் ஹேமந்த்.
"ஆமாம் அங்கிள் அப்பா சொன்னாங்க, நானும் பெங்களூர்ல இருந்து இப்படியே வந்துட்டேன், அவங்களைப் பார்த்து இரண்டு மாசம் ஆகிடுச்சு." என்றாள் ஜானகி.
"ஜானகி, அப்பா, அம்மாவை உனக்கு தெரியுமா ஹேமந்த்?" என ராஜேந்தர் வினவ, "தெரியும் சாலேஷா." என முடித்துக் கொண்டார்.
"இவ்வளவு அருமையான பொண்ணை பெத்தவங்களை கட்டாயம் பார்க்கனும்." என தாதிஷா சொல்லவும், "அவங்களும், உங்களைப் பார்க்கத் தான் வர்றாங்க மாமிஷா!" என்றார் ஹேமந்த்.
"அவங்கப் பொண்ணு, நம்ம வீட்டில் இருக்கா, நம்ம பொண்ணு அவங்க வீட்டில் இருக்கா, ஒருத்தரை ஒருத்தர் அறிமுகப் படுத்திக்கிறது நல்லது தான்." என்றார் தாதாஷா.
"மயூரியை, இங்க அனுப்பிடுங்க பாய்ஷா!" என பூனம் கேட்டுக் கொள்ள, "சரிம்மா என்றபடி, இவர்கள் வருகை தெரிவித்து, தயங்கி நின்றவர், பின்னர் தாதாஷாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு, மாமாஷா உங்களுக்கு நான் மிகவும் கடன் பட்டிருக்கேன். உண்மையில் இந்த முறை அதை சரி செய்வேன். இது என்னுடைய வாதா(சத்தியம்) உங்களிடம்." என கண் கலங்கினார் ஹேமந்த்.
"வீட்டில் ஷாதி நடக்குது, விருந்தினர் வருவாங்க அதை முதலில் கவனி." என பெரிய மனிதராக அனுப்பி வைத்தார்.
சிவகுருநாதன் ராகினி தம்பதியினர், மஞ்சரி, மயூரி சகிதம் டில்லி வந்து சேர்ந்தனர். பாண்டே வீட்டில் ரெட்டி குடும்பமும் வந்திருந்தது. மறுநாள் காலையில் உதய்பூருக்கு விமானத்தில் பயணம் மேற்கொள்ள இருந்தனர்
ராகினி தனது சொந்த ஊர், குடும்பம் இதனை இத்தனை வருடங்கள் சென்று சந்திக்கப் போகிறோம் என்பதில் கொஞ்சம் பதட்டமாக இருந்தார்.
பாண்டேவின் வீட்டில் இவர்களுக்கென ஒதுக்கிய அறையில், சிவகுருநாதன் மடியில் தலை வைத்து அந்த ஷோபாவில் படுத்திருந்தார் ராகினி.
"சிவூ, நாளைக்கு உதய்பூர் போறதை நினைச்சா பதட்டமா இருக்கு. உங்களை யாரும், எதுவும் சொன்னால் என்னால் தாங்க முடியாது. அப்ப நான் என்ன பேசினாலும் என்னை அடக்காதீங்க ப்ளீஸ்." என்றார்.
ராகினியின், தலையை வருடிக்கொண்டு இருந்த சிவகுரு,"ஸ்வர்ணி, உனக்கு அவங்க மேல கோபம் இருக்கும். இருந்தாலும் நிதானமா பேசனும். நம்ம பிரச்சினை மட்டும் இல்லை அமுதன் மயூரியும் சம்மந்தப்பட்டது. அதை மனசுல வச்சுக்கமா." என்றார்.
"நான் செஞ்ச புண்ணியம், நீங்க எனக்கு கிடைச்சது, உங்களை நம்பி மொழி தெரியாத ஊருக்கு வந்தேனே, அது தான் என் வாழ்க்கையின் திருப்புமுனை. இங்க இருந்திருந்தா என்னை ,உயிரோடு கொளுத்தி இருக்கும் இந்த முரட்டுக் கூட்டம்." என அந்த நாளை நினைவு கூர்ந்தார் ராகினி.
"நான் அந்த நாள், என் கூட நீ வந்த நாளுக்காக கடவுளுக்கு நன்றி சொல்வேன் இல்லைனா, இப்படி ஒரு அற்புதமான பெண்மணி என் வாழ்க்கையில் வந்திருப்பாளா? எனக்கான அன்பானக் குடும்பம், மகன், மகள் எல்லாத்துக்கும் ஆதாரம் நீ தானே ஸ்வர்ணி. " என நெகிழ்ந்தார் சிவகுரு.
"போதும் நீங்க ரொம்ப ஒண்ணும் சொல்ல வேண்டாம். எனக்கு ஏதாவது ஆகுமோன்னு பயமா இருக்கு. ஜானுவை நம்மோட கூட்டிட்டு போயிடுவோம் சிவூ. நம்ம பக்கத்தில் எங்கையாவது ப்ராஜெட் செய்யட்டும் ப்ளீஸ், நீங்க சொன்னா தான் கேட்பாள்." என்றார் ராகினி.
"சரிம்மா,நான் பேசுறேன். நம்ம கணேஷ் மும்பை போயிருக்கான். அவனை பார்த்துக்க சொல்லுவோம். உதய்பூரில் இருந்து மும்பை டிக்கெட் புக் பண்றேன். " என ஆறுதல் செய்தார்.
மும்பையில் சிவகணேஷ் ராத்தோட்ஸ் ஸ்வர்ண மஹலை, கூகுள் உதவியுடன் கண்டு பிடித்து வந்து நின்றான். கீழிருந்த செக்யூரிட்டி மூன்றாவது தளம் வரை வந்து விட்டுச் சென்றார்.
ரகுவீர் வொர்க் ப்ரம் ஹோம் என அமிர்தாவுக்கு துணையாக வேலையை வீட்டில் இருந்து செய்தான். கதவு திறந்து உள்ளே வந்தவன், கல்லூரி மாணவனாக சின்னப் பையனாக இருந்தான்.
"ஹாய், அத்தாச்சி நல்லா இருக்கியா?" என்றான். "வா,கணேஸ்!" என வரவேற்று, "அண்ணா இது கணேஷ், பாலாவோட ப்ரதர் இவங்க ரகுவீர்." என அவள் பரஸ்பர அறிமுகம் முடிக்கும் முன்னே.
"வணக்கம் அத்தான். என்ன அத்தாச்சி எனக்கு இவங்களைத் தெரியாதா? ஜானியோட மொபைல்ல பார்த்திருக்கேன்." என்றவன்.
"அத்தான் உங்களுக்கு தெரியுமா நீங்க தான் எங்க ஹீரோ. ஆதர்ஷ கதாநாயகன் ரோல் மாடல் எல்லாம்." என ஆர்வ மிகுதியில் படபடக்க ஆரம்பித்தான் சிவகணேஷ்.
"வெயிட், முதலில் நீ என்னை என்னனு கூப்பிட்ட?" எனக் கேட்டான் ரகுவீர். அமிர்தா கணேஷை பேச விடாமல், அவனை அங்கிருந்து கடத்த முயன்றாள் கணேஷுக்கு அவள் சைகை, பேச்சு எதுவும் புரிந்த பாடு இல்லை.
"ஏன் அத்தான். எங்க ஊரில் மாமா மகனை அப்படித்தான் கூப்பிடுவோம். அப்கோர்ஸ் நீங்க நேரடி மாமா மகன் இல்லை, இருந்தாலும்." என கணேஷ் இழுக்கவும், அமிர்தா முகத்தில் இருந்த தவிப்பை பார்த்து,
"அம்ரூ, அவன் பேசட்டும், நீதான் உன் ப்ரண்டை பற்றி பேசமாட்ட, அவனாவது பேசட்டும்." என்ற ரகுவீர்.
"லுக் கணேஷ் நீ என்னை எப்படி வேணும்னாலும் கூப்பிடு. ஏன்னா நீ என் ஜான்வியின் தம்பி. எங்கப் பக்கம் அக்கா கணவனை 'ஜீஜாஷா' ன்னு சொல்லுவோம் நீ என்னை அப்படி சொன்னாலும் ரொம்ப சந்தோஷம். சொல்லு இப்ப கூப்பிட்டதுக்கு என்ன அர்த்தம்?" என்றான் ரகுவீர்.
இப்போது வாயைப் பிளப்பது சிவகணேஷ் முறையானது. "அது வந்து, அத்தை மகன், மாமா மகனை அத்தான்னு சொல்லுவோம். நீங்க ராகினிம்மாவின் அண்ணன் மகன் அதனால் அத்தான்னு சொன்னேன் என்றான்." சிவகணேஷ்.
ரகுவீருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இத்தனை நாள் கழித்து தன் புவாஷாவின் பெயரைக் கேட்டதில். "என் ராகினி புவாஷா, உனக்கு என்ன வேண்டும்." என அவசரமாக கேட்டான் ரகுவீர்.
"எனக்கு அம்மா, பெரியம்மா, பெரியப்பாவின் மனைவி." என்ற கணேஷை , கவனமாக பார்த்து, "அதாவது." என ரகுவீர் நிறுத்தினான். அவன் மனம் வேகமாக அடித்தது. கணேசின் அடுத்த வார்த்தையில் அதனை உறுதிப் படுத்திக் கொள்ள துடித்தது அவன் மனம்.
"ஜானகி அக்கா அமுதன் அண்ணாவின் அம்மா. என் பெரியப்பா சிவகுருநாதனின் மனைவி, ஸ்வர்ணராகினி. உங்க அத்தை, ஐ மீன் புவாஷா." என விலாவாரியான விளக்கம் தந்தான் கணேஷ். ரகுவீர் அதை நம்ப இயலாதவனாக ஸ்தம்பித்து நின்றான். கண்ணில் நீர் வழிந்தது.