தொடர் : 38
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
ராத்தோட்ஸ் ஹவேலியில் காலை நேரத்தில், அமிர்தாவைப் பார்த்த ஜானகி அதிசயம் அடைந்தாள். "கணேஷ், ஏதோ ஐலேண்ட் போட்டோகிராபிகாக வந்தான்டி, கிளம்பிட்டான். இரண்டு நாள் கழிச்சு நம்ம மும்பை வந்ததும் உன்னைப் பார்த்துட்டுச் சென்னை போவதாகச் சொன்னான். அதுதான் அண்ணாக்கும் வேலை முடிஞ்சதா, என்னைக் கூட்டிட்டு வந்துட்டார்." என்றாள் .
ஜானகி கண்களைச் சுழட்டித் தன் நாயகனை தேடினாள். அதைப் பார்த்த அமிர்தா காணாதது போல் பாவனைச் செய்து, "இந்த ஹவேலியைப் பார்த்தியா, செம அழகா இருக்கிறது. இது எல்லாத்தையும் விட்டுவிட்டுத் தான் ராகினி அத்தை மாமாவோடு வந்துருக்காங்க." என அத்தையை சிலாகித்தாள்.
"ஏய் இவர்கள் காசு, பணம் அரண்மனை, ஆள் அம்பு இருந்து என்ன புண்ணியம், அப்பா தானே மாதாஜீயைக் காப்பாற்றினர். எங்க அப்பா தான் கிரேட்." என்ற ஜானகி, "ஆமாம் எங்கடி உன் உடன்பிறவா அண்ணனைக் காணோம்?" என வினவினாள் .
"மயூரி வரான்னு கூப்பிடப் போய் இருக்காங்க." என சாதாரணமாக அமிர்தா சொல்ல, "ஏர்போர்ட்டுக்கா? மாதாஜீயும் அதுலதான்டி வராங்க." என ஜானகி அதிர்ச்சியாக, "வந்தால் என்னடி எப்படினாலும் தெரியத் தானே வேண்டும்." என்றாள் அமிர்தா.
"தெரிந்த பிறகு இருக்கிறது எனக்கு ரிவிட்." என ஜானகி புலம்ப, "யார்கிட்ட இருந்து ரிவிட்?" எனக் கேட்டாள் அமிர்தா.
"எல்லாப் பக்கமும் தான்.முக்கியமா கட்வா கொல்லப் போகுது." எனப் புலம்பினாள்.
"ஆமாம், ரொம்பப் பயந்தவதான் நீ?" என அமிர்தா காலை வாரினாள்.
மயூரியை அழைத்துக் கொண்டு, ரகுவீர் ஹவேலிக்கு வந்துவிட்டான். காலைப் புதுமலரென தலைக் குளித்து, முடியைக் கோதிக் கொண்டு, ஆகாய நீல வன்ன லெஹங்காவில் நின்ற ஜானகியை, தூரத்திலிருந்தே கண்களில் நிறைத்துக் கொண்டான் ரகுவீர்.
'அழகான ராட்சஸி, எத்தனை விசயத்தை மறச்சு வச்சிருக்கா. குட்டி பிசாசு தான் இது சந்தேகமே இல்லை.' என மனதில் ஆயிரம் அர்ச்சனை செய்தவன், அவளைக் கண்டு கொள்ளாமல் சென்று விட்டான்.
மயூரியைக் கண்ட வீட்டுப் பெரியவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "ஜானகியின் அப்பா, அம்மாவை கூட்டிட்டு வந்து இருக்கலாம் இல்ல." எனக் கேட்டார் பூனம்.
"அவர்கள், அங்கிள் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் வந்து இருக்காங்க. அதனால் மதியம் வர்றதா சொல்லிட்டாங்க." என்றாள் மயூரி.
"பூபாஷா கூட அவர்கள் வீட்டுக்கு வந்தேன், பய்யா அங்க இருந்து கூட்டிட்டு வந்தாங்க." எனப் பொய் சொன்னாள் மயூரி, இது அவள் ரகுவீரிடம் உண்மையை மறைத்தற்காகப் பிறப்பித்த அண்ணன் கட்டளை.
ரகுவீர் தனது அறைக்குச் குளித்துத் தயாராகப் போனான். முக்கியமான வேலை இருக்கிறதே, அதனால் வேகமாகப் படி ஏறினான். அவனுக்கு ஜூஸ் எடுத்து வந்த ஷப்னம், அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் நின்று விட, மறுபுறம் நின்ற ஜானகியிடம், "ரகுவிக்குக் குடுத்துடு பேட்டா." என அனுப்பி வைத்தார்.
ரகுவீர், வேகமாகத் தனது அறைக்குச் சென்றவன், சிறிது நேரம் கண்ணை மூடி, அன்றைய நிகழ்வுகளை அசைப் போட்டான். யாரைப் பார்க்கவே முடியாது என இருந்தானோ, அந்தப் புவாஷாவைப் பார்த்தாகி விட்டது. நல்லபடியாக வீட்டுக்கு வந்து சேரனும் என வேண்டினான்.
அடுத்து, அடுத்து நிகழ இருக்கும் நிகழ்வுகளுக்காகச் சில ஏற்பாடுகள் பாதுகாப்பு வேலைகள் செய்ய வேண்டியது இருந்தது. யோசித்து முடித்தவன் தன் சூட்கேஸ் திறந்து ஆடைகளைக் கையில் எடுத்துக் கொண்டிருந்தான். உடுத்தியிருந்த சர்ட் பட்டன்களை அவிழ்த்து விட்டு, டவல் எடுத்துக்கொண்டு குளியலறைக்குச் செல்லப் போக, அவனது அறைக் கதவைத் தட்டிய ஜானகி, "மிஸ்டர். ராத்தோட், உங்களுக்கான ஜூஸ் ஷப்னம் ஆண்டி தந்தார்கள்." என ஜூஸை நீட்டினாள்.
அவள் குரலைக் கேட்டவுடன் துள்ளிக் குதித்த மனதை அடக்கியவன், "மிஸ்டர். ராத்தோட்!" ரொம்ப தான் டிகினிட்டி மெயின்டைன் பண்றா. ஏன் இவளுக்கு என்னை இப்படித் தான் தெரியுமோ, புவாஷா கீ லாட்லீ, இருடி, நான் மார்வாடியாக்கும், எல்லாத்துக்கும், ஹிசாப், கிதாப் (கணக்கு, வழக்கு) வச்சிருக்கேன், தண்டனை எல்லாம் உன் பேசும் வாய்க்குத் தான்.
மறைச்சா வைக்கிற, நமக்கிடையில் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல், ஏன் இடைவெளியும் கூட இல்லாமல் பார்த்துக்கிறேன்.' என மனதில் பேசியவன்.
"நோ, நன்றி மிஸ் ஜானகி நாதன்." என்றான் ரகுவீர் அவளைத் திரும்பியும் பார்க்காமல்.
"ஆண்ட்டி கேட்டால் என்ன சொல்றது?" என்றாள் சிணுங்கலுடன், நான் எடுத்துட்டு வந்தும் குடிக்க மாட்டியா என்ற தோரணை. அவள் பக்கம் திரும்பியவனை, ஜானகி வைத்த கண் எடுக்காமல் பார்த்தாள், சட்டைக்குள்ளே சிக்ஸ் பேக் தெரிந்தது. ஆணழகன் தான் என் வீரூஜீ எனக் கண்களில் பாராட்டைக் காட்டினாள்.
அவள் பார்த்ததில், தன்னவள் தன்னைச் சைட் அடிப்பதில் பெருமை பொங்கியது ரகுவீருக்கு. ஓர் அசட்டையான நகையுடன் சர்ட்டை முழுவதும் கழட்டி ஆர்ம்ஸைக் காட்டினான். "ஆச்சா, நல்லா திடமாகத் தான் இருக்கேன் இந்த ஜூஸ் வேண்டாம். எங்களுக்கு ஊட்டுறதுக்கு வேற அன்பான கை வருது, நீயும் உங்க ஆண்ட்டியும் ரொம்பக் கவலைப் பட வேணாம். போங்க." என்றான்.
‘அவள் அவனை அப்படிப் பார்த்தாள் தான், அதற்காக அவனுக்குக் கொஞ்சமாவது விவஸ்தை வேண்டாம். “பட்டனைக் கழட்டி உடம்பைக் காட்டி நிற்கிறான். இவனுக்கு நான் இவன் பொண்டாட்டின்னு நினைப்பு. விவஸ்தை கெட்டவன், எப்படிப் பேசுறான் பாரு, இவர் சிக்ஸ் பேக்கைப் பார்க்கத் தான் நாங்க தவம் இருந்தமாக்கும். கட்வா கைக்கா. இருடி உன்னையெல்லாம் பட்டினி போட்டாத் தான் சரியா வழிக்கு வருவ. மாதாஜீ பிரச்சினை முடியட்டும் உன்னை வச்சுக்கிறேன்." என ஜானகி தன்னைப் போலப் பேசிக் கொண்டே வந்தாள்.
"ஜானிமா யாருமேல இவ்வளவு கோபம் யாரை வச்சுக்கப் போற?" எனக் கேட்டார் அமரேன்.
"எல்லாம் உங்கள் ஜேஸ்ட புத்திரன் தான், பெரிய மன்மதன்னு நினைப்பு. சட்டையைக் கழட்டிகிட்டு நிற்குது விவஸ்தை கெட்டது." என யாரிடம் என்ன சொல்கிறோம் என்பதை மறந்து சொன்னாள் ஜானகி.
அவளைப் பிடித்து நிறுத்தியவர், "ரகுவி அவன் ரூம்ல தானே சட்டையைக் கழட்டி நிற்கிறான், அப்புறம் என்ன? குளிக்கப் போவானா இருக்கும். சட்டையோடு குளிக்கிற பழக்கம் அவனுக்கு இருக்காது இல்லை." என்றார் அமரேன்.
"ஆமாம் மாம்ஸ், எனக்கும் தெரியும், டவலோட வந்து நிற்கும். (அமரேன் அதிர்ந்தார், ஜானகி வித்தியாசத்தை உணர்ந்தாள் இல்லை) ஜூஸ் குடுத்துட்டு வரச் சொன்னாங்க ஷப்னம் ஆண்ட்டி அவர்கள் ஏறி இறங்கக் கஷ்டப் படுவாங்களேன்னு. அதைக் கொடுக்கத்தான் போனேன். ஜூஸ் வேண்டாமாம். நானும் வேண்டாமாம், ஷப்னம் ஆண்ட்டியும் வேண்டாமாம், இவருக்கு ஊட்ட அன்பான கை வருதாம், யாரு மாம்ஸ் அது உங்களுக்குத் தெரியுமா?" எனக் கேட்டாள் ஜானகி.
"ஹரிணியை சொல்லி இருப்பானோ?" என யூகித்தார் அமரேன்.
"அதெல்லாம் இல்ல மாம்ஸ், வேற யாரு சிருஷ்டியாக இருக்கும். அவளைக் கண்டால் தான் சிரிப்பெல்லாம் வரும். விடுங்க, எப்படியோ உங்கள் வீட்டுக்கு மருமகள் வருகிறது உறுதி." என்றாள் ஜானகி.
‘ஹே ராம், என் தீதீஷா மகளா இது, இவ்வளவு பெரிய வாயாடியா இருக்கே.’ என மனதில் நினைத்தவர் அவளிடம்,
"ஜானி மா நான் ஒன்னு சொல்லட்டா, காளை மாடு, இளவட்டக்கல், ரேக்ளா வண்டி எதுவுமே வேண்டாம், நல்ல வேளை இருபத்தி மூன்று வருஷம் முன்னாடியே ஷாதி முடிந்தது எனக்கு. பாவம் என் ஜேஸ்ட புத்திரன்." என்றவர், "பார்த்துப் போ கன்பார்ம்டு, இது அதுதான்!" என்றார்.
"மாம்ஸ், நீங்க பேசறதே புரியலை. எது கன்பார்ம்டு, எது எது தான்?" எனக் கேள்வி கேட்டு கொண்டிருக்கும் போதே மங்கள பாண்டேயிடம் இருந்து போன் வந்தது. ஜானகி, "மாம்ஸ்,போன் பேசிட்டு வருகிறேன்." என, அவசரமாக அங்கிருந்து நகர்ந்தாள்.
அமரேன் ரகுவீர் அறைக்குச் சென்றார் அவன் அப்போது தான் குளித்து முடித்து, ஸ்கீரினுக்குப் பின் நின்றான். இங்குத் தனி ட்ரெஸ்ஸிங் ரூமெல்லாம் கிடையாது. அமரேன் பார்த்தவுடன் சிரித்து விட்டார்.
"என்ன சாசாஷா, புதுசா பார்க்கிற மாதிரி சிரிக்கிறீங்க." என்றான் ரகுவீர்.
"இல்லை, இத்தனை வருஷம் தப்பிச்ச என் பாஞ்சா, இப்ப நல்லா வசமா மாட்டிக் கிட்டானேன்னு தான்." என அமரேன் சொல்லும் போதே, ரகுவீருக்குக் கண்கள் குழிந்து ஓர் அசட்டுச் சிரிப்பு வந்தது. ஆண்களும் வெட்கப்படுவார்கள், அதுவும் ரகுவீர் போன்ற கட்வா கைகாவுக்கும் வெட்கம் வரும் என்று இப்போது நம்பலாம்.
அமரேன் ரகுவியின் முகமாற்றம் தடுமாற்றத்தைப் பார்த்து நன்றாகச் சிரித்தார். "உன்னை இப்படிப் பார்க்கவே சந்தோஷமா இருக்குடா பேட்டா. ஏம்பா காளை மாடு, இளவட்டக் கல், ரேக்ளா போட்டி இதற்கெல்லாம் தயாரா?" எனக் கேட்டார்.
"சாசாஷா, உங்களுக்கு." என ரகுவீர் தடுமாறினான். அவ்வளவு வெளிப்படையாக இருந்ததா என் ஃபீலிங்க்ஸ் என்ற அதிர்ச்சி.
"எனக்கு என் பாஞ்சியை பஹூராணியா ஆக்கிக்கனும்னு ஆசை. சரிதானே உனக்குச் சம்மதம் தானே?" எனக் கேட்டார் அமரேன்.
தலை சீவக் கையை உயர்த்தியவன் அவர் கேட்டதில், "சாச்சு!!!" என திரும்பிப் பார்த்தான். .
"தெரியும்டா, மயூ சொல்லிட்டா. புவாஷாவைப் பார்த்தியா? தீதி எப்படி இருக்காங்க?" என ஆவலாகக் கேட்டார்.
கண்களில் கண்ணீர் மல்க, "பார்த்தேன் சாச்சு, புவாஷா ராணி மாதிரி இருக்காங்க. பூஃபாஷா நல்லா வச்சுருக்காங்க. அவர்கள் முகத்தில் திருப்தியான வாழ்க்கை வாழும் நிறைவு." என்றவன் உணர்ச்சி வயப்பட்டு அவரைக் கட்டிக் கொண்டான்.
"இன்னும் ஒரு ஒருமணி நேரத்தில் வருவாங்க சாச்சு, எதுவும் விபரீதம் ஆகாமல் பார்த்துக்குங்க ப்ளீஸ்." என்றான் ரகுவீர்.
"இதை நீ சொல்லனுமா ரகுவீ, கஜேன் பாயீக்கும் கூடத் தீதீஷா மேல் பாசம் தான். அன்னைக்கு மாஷா பேசியதிலிருந்து ரொம்பவே மாற்றம்." என்றார் அமரேன்.
இங்குச் சித்தப்பா மகன் பேச்சு ஓடிக் கொண்டிருக்க, ஜானகி, பாண்டே மாமாஜீயுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவரும் ரகுவீர், ராகினியை சந்தித்ததைச் சொல்லவில்லை. பொதுவான அவர்களது ப்ளானைப் பற்றி மட்டும் சொன்னார். ஜானகிக்கும் பதட்டம் பற்றியது.
ரகுவீர், ராஜ்வீர், ரன்வீருடன் சேர்ந்து தனி அறையில் பேசிக் கொண்டிருந்தான். ராஜ் தலைக் குனிந்து,"சாரி பையா, உங்கள் கிட்ட மறைச்சு இருக்கக் கூடாது. நீங்க புவாஷாவைப் பற்றிப் பேசினாலே கோபப் படுவீங்க, அதுதான்..." என இழுத்தான்.
"அதுவும் பாசம் தான் ராஜ்வி, புவாஷா பிரிவைத் தாங்காமல் வந்த கோபம். சரி விடு நடக்கிறது தானே நடக்கும்." என்றான் ஆற்றாமையோடு.
"புவாஷா ஷாதியின் போது வேற சில பிரச்சினைகளும், இன உணர்வையும் தூண்டி விட்டுருக்காங்க. அதே ஆளுங்கள் இப்ப இல்லை இருந்தாலும், அவ்வளவு சுலபமா கௌரவத்தை விடவும் மாட்டாங்க. புவாஷா பாதுகாப்பு ரொம்ப முக்கியம். இதில் ரெனாவத் குடும்பமும் சம்பந்தப்பட்டு இருக்கு. கேர்ஃபுல்லா இருக்கனும்." என்றவன்.
தங்கள் ஆட்கள் வேலியைச் சுற்றி பான், வளையல், விற்பவர்கள் போல் மாறுவேடத்தில் இருப்பதையும், தேவைப் பட்டால் அவர்களை அழைத்துக் கொள்ளலாம் எனச் சொன்னான்.
செகாவத் ஹவேலி ஹேமந்த், மஞ்சரியுடன் சேர்ந்து, தன் பெரியப்பா பைரவச் சிங் செகாவத்திடம், ஒரு நாடகம் நடத்திக் கொண்டு இருந்தார்.
"படேபாபுஷா நான் அப்பவே சொன்னேன், ராத்தோட் குடும்பத்து ரிஸ்தா நம்மோடு முடியட்டும்னு நீங்க தான் கேட்கவே இல்லை. மஞ்சரியைப் பால்ய விவாகம் செய்து வச்சீங்க. இப்ப அதன் விளைவை நான் சந்திக்கிறேன்." என்று நிறுத்தினார்.
கிழட்டு நரி போன்று இருந்தார் பைரவ் சிங் செகாவத், கண்களில் ஓர் கள்ளத்தனமும், தோரணையில் கர்வமும் எப்போதும் குடியிருக்கும். முரட்டு மீசை, பைஜாமா குர்தாவுடன், தங்கச் சங்கிலி ருத்ராட்சம் அணிந்து மிரட்டலாக இருந்தார்.
"என்ன பேசுறேன்னு தெரிஞ்சு பேசுறியா? அப்படி என்ன ஆகிடுச்சு, நான் பேசி வச்ச ரிஸ்தா, கஜேந்தர் என் பேச்சை மீற மாட்டான். ஸர்குன் நம்ம குடும்பத்து பொண்ணு." என்றார்.
அப்போது பேசிய மஞ்சரி, "தாதாஷா, உங்களுக்குத் தெரியாது, போன தடவை நான் மும்பை போன போது, மயூரி அவர்கள் புவாஷாவைப் பற்றிக் கேள்வி கேட்டாள். அவர்கள் தாதிஷா அவர்கள் பொண்ணு மேல தப்பு இல்லை, பர்தாதிஷா அதான் உங்கள் சாசுமா டெத்பெட்டில் சொன்னதாகச் சொன்னார்கள்." என உன்மையைப் போட்டு உடைத்தாள். அவர் விழி மேலே குத்தி நின்றது. அவர் பார்வையில் கலவரம் தெரிந்தது.
மேலும் பேசிய மஞ்சரி, "மயூவின் தாதாஷா ராகினி புவாஷாவை நீங்க தான் திருப்பி அனுப்பி வச்சீங்கன்னும், கஜேன் மாமாஷா, உங்கள் பேச்சைக் கேட்டு அவங்களை இன்னொரு முறை அவமதித்ததையும் சொல்லிட்டார்." என நிறுத்தினாள்.
"பாபுஷா, எனக்குக் கிடைத்த தகவல்படி, ராத்தோட்ஸ், ராகினி ஷாதிக்கு பழிவாங்கத் தான் வந்திருக்கிறாங்க. வீரேன் மாமாஷா கடும் கோபத்தில் இருக்கார். சண்டையோ சமாதானமோ ஒரு கை பார்க்கலாம். என் மகளைப் பிரிந்து இருக்கிறதுக்குப் பதில் வேண்டும் என உறுமுறார்." என்றார் ஹேமந்த்
இப்போது பங்குரி குறிக்கிட்டு , "ஸுனியேஜீ என் மகள்கள் ஷாதிதான் முக்கியம், இப்ப பிரச்சினை வந்தா, மஞ்சரி மட்டும் இல்லை மோனல் ஷாதியும் பாதிக்கப்படும். என்னைக் கூட்டிட்டு போங்க. படேபாபுஷா கால்ல நான் விழறேன்." என்றார் .
"பம்மி இது மன்னிப்போட முடியாது, அவர்கள் மானம் மரியாதை போனது மாதிரி நாமும் அசிங்கப் படனும்னு நினைக்கிறாங்க. கஜேன் சாலேஷாவே, அவர்கள் மாஷாவோட அழுகைல மாறிட்டார். ஸர்குன் பேச்சு எடுபடவே இல்லை. ஸர்குன் போன் போட்டுத்தான் இதை எல்லாம் சொன்னது." என்றார் ஹேமந்த்.
"இப்போ என்ன செய்யறது ஹேமந்த். ஷாதி நிற்கக் கூடாது. அது நம்ம கௌரவம் சம்பந்தப்பட்டது. ஆளுங்கூடப் போய் ராஜ் வீரை தூக்கிட்டு வந்திடுவோம்." என்றார் கிழட்டு நரி. ஹேமந்த் ராத்தோட்ஸ் வீட்டைச் சுற்றி நிற்கும் மாறுவேட காவலை வீடியோவாகக் காட்டினார். இது ரகுவீர் அனுப்பியது.
"பாபுஷா இதற்கு ஒரு முடிவு எடுங்க .உங்கள் பேச்சைக் கேட்டு, ராகினி ஷாதியில் நான் எவ்வளவு கலவரம் செஞ்சேன். இப்ப என் மகள் ஷாதியில் எல்லாம் விடியுது." எனப் பதட்டமானார் மோனலின் தகப்பன்.
பைரவ் செக்காவதைப் பேச விடாமல், யோசிக்க விடாமல் குழப்பி விட்டு, ராத்தோட்ஸ் வேலிக்கு நடந்தவற்றைச் சொல்லி மன்னிப்பு கேட்க மூளைச் சலவை செய்தார். அது செயல்முறைக்கு வந்தது. மிஷன் வெற்றி, நெக்ஸ்ட் மூவ். என நண்பர்களுக்கும் ரகுவீருக்கும் செய்தி அனுப்பினார்.
ரகுவீர், ஜானகியிடம் விளையாட நினைத்தான். ஜானகி தங்களது திட்டத்தின் அடுத்த நிகழ்வுக்காகக் காத்திருந்தாள். ரகுவீரின் குரல் கேட்டதும் அங்கே பார்த்தாள். ரகுவீர் ராஜிடம் பேசிக் கொண்டிருந்தான்.
"ராஜ்வி, இங்க வந்தாலே புவாஷா ஞாபகம் வந்துடும். புவாஷா ஷாதி நடந்த போது எனக்கு நாலு வயசு. என்னைத் தான் போகும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போவதாகச் சொல்லி இருந்தாங்க. ஆனால் என்னைச் சீட் பண்ணி வேற ஒருத்தர் கூடப் போய்ட்டாங்க." என ரகுவீர் சொல்லவோ, தன் அம்மாவை, அவன் குறை கூறுவதை கேட்க முடியாமல் சண்டைக்கு வந்தாள் ஜானகி.
"ஹலோ, மிஸ்டர். ராத்தோட் உங்கள் புவாஷாவை உங்களுக்குப் பார்த்துக்க முடியலை. ஒரு நல்ல மனுஷன் பாதுகாப்பா கூட்டிட்டுப் போனால், அதுக்குப் பேர் ஓடிப்போறதா?" என அவன் முன் சண்டைக் கோழியாக நின்றாள். ராஜ் வீருக்குக் கண்ணைக் காட்ட அவன் அங்கிருந்து நகர்ந்தான்.
"என் புவாஷாவை பற்றி நான் பேசுறேன், இதற்கும் உனக்கும் சம்பந்தமே இல்லை. உன் வேலையைப் பாரு. வந்தமா உதய்பூரைச் சுற்றி பார்த்தமானு போய்கிட்டே இருக்கனும். அனாவசியமா எங்க ஃபேமலி விஷயத்தில் தலையிடாதே. மயூவோட ஃப்ரண்டு அதனால் சும்மா விடுறேன்." என்றான் ரகுவீர்.
ஜானகியின் பொறுமை நிதானம் எல்லாம் காற்றில் பறந்தது. அவன் முன்னே முகத்துக்கு நேராக அருகில் எதிர்த்து நின்று "நான் அப்படித் தான் பேசுவேன். என்ன பண்ணுவீங்க. பெரிசா புவாஷா மேல் பாசம் இருக்கிற மாதிரி நடிக்காதீங்க. நாலு வயசு பையனா இருக்கும் போது தேடத் தெரியாது, சரி பரவாயில்லை. இப்ப தான் நாலு கழுதை வயசாச்சில்ல, தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது தானே. பெரிசா வந்துட்டாரு புவாஷா விட்டுட்டு போய்ட்டாங்கன்னு சொல்றதுக்கு." என்றாள் ஜானகி.
"நாலு கழுதை வயசா? ஆமாம் யாரை கழுதைனு சொன்ன? மைண்ட் யுவர் டங்க்." என அவன் அவளை நோக்கி முன்னேறினான்.
"ஹலோ வழியை விடுங்க பெரிய ஹீரோன்னு நினைப்பு. இதற்கெல்லாம் பயந்தவ நான் இல்ல ஆமாம்." என அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளி, தன் வழியை ஏற்படுத்த முனைந்தாள் .
அவன் நெஞ்சில் பதிந்த அவளின் கையைப் பற்றி சுழற்றி மடக்கி இரு கைகளையும் பின்னால் கட்டி ஒரு கையால் பற்றி அவள் முதுகை தன் மார்பில் பதித்து, தன் மற்றொரு கையை முன் பக்கம் கொண்டு வந்து, அவள் இடையோடு இறுக்கி அவளை அணைத்தவன் குனிந்து அவளது காதில்.
"போனால் போகுதுன்னு விட்டா ரொம்பத் தான் போற, என் புவாஷாவை பற்றிப் பேசுனா உனக்கென்னடி, பெரிய இவ மாதிரி லெக்ச்சர் குடுக்குற. எப்பப் பார்த்தாலும் உரிமையைப் பற்றிப் பேசுவ இல்லை, இப்பச் சொல்லு, என்னைப் பேசறதுக்கு என்ன உரிமை இருக்கு ?" ரகுவீர் வம்பிழுக்க,
ஜானகிக்கும் ரோஷம் அதிகமானது. "எனக்கு என்ன உரிமையா எந்தப் புவாஷாவைப் பத்தி குறையாப் பேசுனீங்களோ அவங்க மகள் நான். ஸ்வர்ண ராகினி என் அம்மா." என வேகமாக மொழிந்து விட்டு, அவன் கைகளிலிருந்து விடுபட்டு அவன் முன்னால் நின்றாள்.
அவன் அதிர்ந்துப் போவான் என நினைத்துச் சொல்ல , ரகுவீர் அமைதியாக, கையைக் கட்டி நின்று கொண்டு, அவளையே உறுத்துப் பார்த்தவன். "பொய், இது வடிகட்டின பொய். என் புவாஷா ரொம்ப மென்மையானவங்க, உன்னை மாதிரி மிர்ச்சி, குட்டி பிசாசு எல்லாம் அவங்க மகளாய் இருக்கச் சான்ஸே இல்லை." என்றான்.
"என்ன சான்ஸே இல்லை, இப்பவே போன் போட்டு கேளுங்க." எனத் தன் மொபைலில் மாதாஜீ நம்பரைத் தட்டப் போனாள். அதைப் பிடுங்கியவன்.
"சரி நீதான் என் புவாஷா மகள்னா, என்னைப் பத்திச் சொல்லாமல் இருந்திருக்க மாட்டாங்க. சொல்லு, என்னை எப்படிக் கூப்புடுவாங்க என் புவாஷா?" என வம்பிழுத்தான் ரகுவீர்.
"இதுகூடத் தெரியாமலா இருப்பேன் அதான் அடிக்கடி மாதாஜீ சொல்லுவாங்களே, வீரூ,வீரூன்னு. நான் வீரூன்னு சொன்னா, உன்னை விடப் பெரியவன். வீரூஜீ, சொல்லுடான்னு சொல்லுவாங்க." என அவள் தன்னை நிரூபிக்கும் வேகத்துடன் ஜானகி சொல்ல,
சட்டென அவளை நெருங்கியவன் அவளைச் சுவரோரம் நடத்திச் சென்று, அவள் முகவாயை ஓர் கையால் உயர்த்தி, தன்னை நோக்கிப் பார்க்க வைத்து, அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலக்க விட்டு, தன் மனதின் காதல் வார்த்தைகளை விழி மூலம் கடத்தி, "அதனால்தான், இந்த வீரூஜீயை மனசிலேயே சிறை வச்சுருக்கியா ஜானூம்மா?" என்றான்.
ஒற்றை விரலால் அவள் முகத்தில் கோலமிட, அதன் உணர்வுக் குவியலைத் தாங்க முடியாத ஜானகி, அவன் மார்பில் சாய்ந்தாள். அதன் அர்த்தம் உணர்ந்த அவன், அவளை இறுக்கி காற்று புகும் இடைவெளியும் இன்றி அணைத்தவன், அப்படியே மனது நிறைந்து நின்றான்.
இவர்களின் இந்த மோன நிலை எவ்வளவு நீடித்ததோ, ரகுவீர், "ஜானும்மா, ஜானூ!!!" என அழைத்து, அவள், "ம்." எனவும். ரகுவீர் தன் மனதின் வார்த்தைகளைச் சொல்ல வரும் நேரம், "பையா, செகாவத் குடும்பம் வந்திருக்கங்கா." என்ற ராஜ்வியின் வார்த்தையில், மோன நிலை விட்டு இயல்புக்கு வந்தவன், ஜானகியை, மோன நிலையிலேயே வைத்து, இதழோடு, இதழ் பொருத்தி, அமிர்தம் பருகி அமரன் ஆனான்.
"ஜானும்மா, எல்லாரும் வந்துட்டாங்க, வாடா கீழேப் போகலாம். புவாஷாவை அரண்மனைக்குள், அழைக்கும் நேரம் வந்துடுச்சு." என்றவன்.
அவள் தடுமாற்றத்தை ரசித்து, சிரித்து மீண்டும் ஓர் முறை அணைத்து சிவந்த கன்னத்தில் முத்திரைப் பதித்து, "நான் முன்னாடிப் போறேன், நீயும் கீழே வா." என நெற்றியில் முத்தமிட்டுச் சென்றான்.
ராத்தோட்ஸ் ஹவேலிக்கு, முன்னால் நான்கு கார் வந்து நின்றது. அதிலிருந்து, ஹேமந்த், அவர் படேபாபுஷா பைரவ்சிங் செகாவத் ஊர் பெரியவர்களுடன் வந்து சேர்ந்தார்.