தொடர் : 39
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
ராத்தோட்களின் ஹவேலியின் முன்னே வரிசைக் கட்டி நின்றது, செகாவத் குடும்ப வாகனங்கள். ஹேமந்த் செகாவத் தன் பெரியப்பா பைரவ் சிங் செகாவத்துடன் வந்து இறங்கினார். ஹேமந்த் தன் நண்பர்கள் மூவரையும், தான் சொல்லும் போது வீட்டிற்குள் வருவது போல் பக்கத்தில் ஓரிடத்தில் நிறுத்தியிருந்தார்.
வீர் பிரதர்ஸ் அண்ட் அமரேனுக்கு விசயம் தெரியும், ஒரு சிசி டிவி கேமராவில் பதிந்து, மொபைலில் பார்க்கும் படி, மற்றவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான் ரகுவீர்.
தாதாஷா, தாதிஷா, ராஜேன், மற்றும் கஜேந்தரிடம, “ராகினி தீதீஷா ஷாதி அன்று நடந்த விசயம், கொஞ்சம் நேரத்தில் வெளியே வரும், பைரவ் பூஃபாஷா, வர்றார். அவர் பேசுற விசயத்தை அனுசரித்துப் பேசுங்கள். கொஞ்சம் கெத்தாகக் கோபத்தை மெயிண்டைன் பண்ணுங்கள்.”என அமரேன் ஹிண்ட் கொடுத்து வைத்தார்.
"மாம்ஸ், என்ன நிறைய இன்ஸ்ட்ரக்ஸன் குடுத்துட்டு இருக்கார் என்ன விசயம்." என ஜானகி, மயூரியிடம் கேட்டாள்.
"மஞ்சரி குடும்பத்திலிருந்து வர்றாங்க , நாம அவங்க மேல் கோபமா இருக்க மாதிரி மஞ்சரி ஷாதியில் பிரச்சனை மாதிரி கொளுத்திப் போட்டு இருக்காங்க. அது தான் ஊர்காரங்களோட வர்றாங்க. பாபுஷாகிட்ட, கொஞ்சம் முன்னாடி பூஃபாஷா பேசினார். அப்புறம் அமுதன், ராகினி புவாஷா, பூஃபாஷா, அவர்கள் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும், ரீச்சபில் டிஸ்டன்ஸ்ல இருக்காங்க. சரியான நேரத்தில் ஒவ்வொருத்தரா எண்டரி ஆவாங்க." என விளக்கினாள் மயூரி.
ராஜ்வீரை முன்னால் வராமல் மறைத்து நிற்க வைத்தனர். ரன்வீர் வீட்டின் வாசல் பக்கம் எதற்கும் தயாராக நின்றான்.
"தாதிஷா, மாஷா, சாசிஷா, இங்க செகாவத் குடும்பம், ஊர்காரங்களோட வர்றாங்க . தாதிஷா நீங்க அவர்களைக் கூட்டி, நியாயம் கேட்க சொன்னீங்களே, இப்ப அதுதான், ஹேமந்த் பூஃபாஷா அரேன்ஞ் பண்ணியிருக்கார்." என்றான் ரகுவீர்.
ரகுவீர் ஜானகியிடம் கண்களால் பக்கத்தில் அழைத்து, "கொஞ்ச நேரம் அமைதியாக நடக்கிறதை வேடிக்கைப் பாரு. உணர்ச்சி வசப்படக் கூடாது. யார் கவனமும் உன் மேல் வரக் கூடாது. நான் காரணமாகத்தான் சொல்கிறேன்." என அமர்ந்த குரலில் ரகுவீர் சொல்ல, சரி எனத் தலை ஆட்டினாள் .
ஹேமந்த் கைகளைக் கூப்பிய வண்ணம், "கம்மாகனி மாமாஷா! மாமிஷா." என்றபடி உள்ளே வந்தார். அவர்கள் ஓர் தலையசைப்புடன் திரும்பிக் கொண்டனர். பைரவ் செகாவத், ராம் ராம் சாலேஷா, என்றபடி உள்ளே வந்தார். என்ன இருந்தாலும் அவர் தமது தீதிஷாவின் கணவன் என்ற முறையில் வணக்கம் மட்டும் தெரிவித்தார் வீரேந்திர சிங் ராத்தோட்.
கஜேந்தர் எல்லாரையும் உட்காரச் சொல்லி இருக்கைகளைக் காட்டினார். அந்த ஊரில் உள்ள, முக்கிய இராஜஸ்தானி பெரிய குடும்பத்தினரை அழைத்து வந்திருந்தார் ஹேமந்த். ராகினியின் களங்கம் துடைத்து, அவள் வீட்டினருடன் சேர்த்து வைத்து, தனது நன்றி கடனை அடைப்பது அவரது தலையாயக் கடமை என இருந்தார்.
எல்லோரும் வாங்க உட்காருகங்க என்று குளிர்பானம் பரிமாறினர். பெண்களில் தாதிஷா, ஹாலின் உட்புறத்தில் அமர்ந்திருக்க, ராத்தோட் பஹூராணிகள், முக்காடு போட்டு பக்கத்து ஷோபாக்களில் என்ன பிரச்சனை வருமோ எனக் கலக்கத்துடன் அமர்ந்து இருந்தனர். மயூரி, ஜானகி, அமிர்தா பின்னால் நின்றனர்.
சரியாக அதே நேரம், ஹரிணி குடும்பத்தினரான டாக்கூர் பரிவாரும் வந்து சேர்ந்தனர். ரகுவீர் அவர்களை வரவேற்றான். ராத்தோட்கள் சம்பந்தியை முறைப்படி வரவேற்று அமர வைத்தனர். பெண்கள் உட்கட்டுக்குச் சென்று தாதிஷாவுடன் அமர்ந்தனர். அமர்சிங், அவரது தந்தையும் இந்தக் கூட்டத்தில் அமர்ந்தனர்.
"ஊர் பெரியவர்கள் எல்லாரும் ஒன்றா வந்திருக்கிங்க , எதுவும் முக்கியமான விசயமா?" எனக் கேட்டார் அமர்சிங் டாக்கூரின் தகப்பனார். இவர்கள் குடும்பத்துக்கு எனத் தனி மதிப்பு அந்தப் பகுதியில் உண்டு.
"நாங்களும் அதைத்தான் கேட்டுக் கொண்டிருந்தோம் சம்பந்ஷா." என்றார் ராஜேந்தர்.
ஹேமந்த்தான் பேச்சை ஆரம்பித்தார் "எங்களை மன்னிக்கவும் மாமாஷா! எனக்கும், ராகினிக்கும் நடக்க இருந்த ஷாதி அன்று நடந்த அத்தனையும் என்னுடைய தவறு தான். இதற்காக என் மகள் மஞ்சரி வாழ்கையில் பிரச்சினை வருவதை நாங்கள் விரும்பவில்லை." என்றார்.
கஜேந்தர், "இப்போது இதைப் பேச என்ன அவசியம் வந்தது ஜீஜூஷா?" எனக் கேட்க, குட்டு உடைந்து விடுமோ எனப் பயந்த அமரேன்.
"ஏன் அவசியம் இல்லை பாயிஷா, நாமும் நம்ம தீதீஷாவை இத்தனை வருடமாகப் பிரிஞ்சு இருக்கோம். அதற்கான தண்டனை நமக்கு மட்டும் தான். ஹேமந்த் ஜீஜூஷா, பங்குரி தீதீஷாவோட சந்தோஷமாகத் தான் இருக்காங்க, நான் அதைத் தவறென்று சொல்லலை. ஆனால் நம்ம ராகினி தீதீஷாவை பிரிஞ்சு எவ்வளவு மனக்கஷ்டம் அனுபவிக்கிறோம்." என அப்புறம் பார்க்கலாம் என ராத்தோட்ஸ் தள்ளிப் போட்ட விசயத்தை ஊதி விட்டார்.
தாதிஷா, மயூராதேவி பெண் சிங்கம் போல் முன்னே வந்தார், "சப்கோ கம்மாகனி, பெண்கள் நடுவில் பேச அனுமதிக்க மாட்டீர்கள். ஆனாலும், பாதிக்கப்பட்டது என் குடும்பம். நான் பெற்ற மகள் அவளை யாரோடு ஓடிப்போனதாக!" என்று சொல்லும் போது உடைந்தவரை ரகுவீர், தோளோடு தாங்கினான் பேரன் ஆதரவில் தொடர்ந்து, "ஓடிப் போனதாக இந்த ஊர்க் கதை கட்டியது, அது தவறு, என் மகள் ஒரு தவறும் செய்யவில்லனு என், சாசுமா மாஷா ஸ்வர்ண மஹாலக்ஷ்மி மரணிக்கும் தறுவாயில் சொன்னார்கள். அது சரியென்றால் எனக்கும் என் மகளுக்கும் நியாயம் வேண்டும்." என்றார்.
கூட்டத்தில் அமைதி நிலவியது. தாதாஷா, வீரேத்தர் ராத்தோட், "நானும் என் மகளைத் தவறாகத் தான் நினைச்சேன், பைரவ் ஜீஜூஷா சொன்னதை நம்பி, குல கௌரவம், இன மானம் எனச் சொல்லி என் பேட்டியைத் தள்ளி வைத்தேன். ஒரு மாதத்தில் திரும்ப வந்த என் மகளை ஜீஜூஷா தான் , திரும்ப அனுப்பி வச்சார். எனக்கு நான் கண்ணை மூடும் முன் என் மகளிடம் மன்னிப்பு வேண்டும். நான் என் மகளைக் காக்கத் தவறிய, ஒரு தோற்றுப் போன தந்தை. எனக்குப் பதில் சொல்லுங்கள்." எனக் கோபத்தோடு ஆரம்பித்துக் கதறலில் முடித்தார்.
ஜானகி, மயூரி, அமிர்தா அனைவரும் ராகினியை நினைத்துக் கலங்கி இருந்தனர். இதை மொபைலில் பக்கத்துக் கட்டிடத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ராகினி கண்ணீர் மல்க அமர்ந்திருந்தார். பக்கத்தில் அமர்ந்து அவரை அணைத்துத் தேற்றினார் சிவகுரு.
ஊர் பெரியவர் ஒருத்தர், "ராத்தோட்ஷா, நீங்க பெத்தவரு அதனால் அப்படிப் பேசுகிறீங்க, ஆனால் நமது இனத்துப் பொண்ணு படி தாண்டுனா அது தவறான முன்னுதாரணம் தானே, நீங்க அப்ப எடுத்த முடிவு சரிதான்." என்றார்
ஜானகிக்குத் தன் தாயைச் சொல்லவும் சுள்ளென ஏறியது, இதை எதிர்பார்த்த ரகுவீர், அவளைக் கண்களால் அடக்கினான்.
பெரியவர் பேச்சில் குறுக்கிட்ட ரகுவீர், "என் புவாஷா ஷாதியின் போது, எனக்கு நான்கு வயது. அந்த ஷாதி ஏற்பாட்டில் புவாஷாவின் சம்மதம் இருந்தது. ஷாதி அன்னைக்கு இரவு எங்கள் பர்தாதிஷா, புவாஷாவின் கையை ஒரு ஆடவர் கையில் கொடுத்து அனுப்பினார், புவாஷா அழுதுட்டே போனாங்க, இதற்கு நானும் என் தீதீஷா ஹரிணியும் சாட்சி." என்றான்.
"ஆமாம், நானும் பார்த்தேன். பூஃபாஷா தலையில் ஓர் காயம் பட்ட கட்டு இருந்தது." என ஹரிணி டாக்கூர் நினைவு கூர்ந்தாள்.
"ஓடிப் போனதாகச் சொல்லப்படும் பெண் இரண்டு முறை திரும்ப வந்து குடும்பத்தினரைச் சமாதானம் செய்ய மாட்டா. பூஃபாஷா தான் இதற்குப் பதில் சொல்லனும் ஏன்னா முதலில் என் தங்கை மீது பழி போட்டதே அவர் தான்." என ராஜேந்தரும் வாயைத் திறந்து பேசினார்.
உன்மை மெல்ல வெளி வருவதைக் கண்ட பைரவ் செகாவத், சமாளிக்கும் விதமாக, "ஹேமந்தின் நண்பன் தான், ராகினியை கூட்டிச் சென்றான். ராகினிக்கும் அவனுக்கும் சம்பந்தம் இருக்கனும், இல்லைனா ஏன் பங்குரியை மாற்றி உட்கார வைத்து அவள் போகவேண்டும்?" என்றார் விடாப்பிடியாக.
"பாய்ஷா, உங்கள் வீட்டுப் பொண்ணு இங்க வாழ்ந்துட்டு இருக்கு , அடுத்தத் தலைமுறையும் இங்க வரக் காத்துக்கிட்டு இருக்கு. வார்த்தையை விட்டுறாதீங்க. நாங்கள் ராத்தோட், எங்கப் பொண்ணை முறை தவறி வளர்க்கவில்லை." எனக் கடுமையாகச் சொன்னார் மயூரா தேவி.
"பாபுஷா நானும் பங்குரியை விரும்பினேன், அதனால் ராகினி விட்டுக் கொடுத்து தன், ஒன்று விட்ட தங்கையை மனை ஏத்துச்சு." என்றார் ஹேமந்த்.
"சரி அப்படியே வச்சிக்கோ, ராகினி தைரியமாச் சொல்ல வேண்டியது தானே ஏன் ஓடிப் போகவேண்டும்?" என்றார் கிழட்டு நரி.
"அதுக்கான காரணத்தை நாங்கள் சொல்கிறோம்." என்ற கோரஸ் சத்தத்தில் எல்லாரும் வாசலைப் பார்த்தனர்.
அங்கே, ஹேமந்தின் திட்டப்படி பல்லா, பாண்டே, ரெட்டி நின்றனர். மூவரும் வயதுக்கேற்ற தோற்றம், பிஸ்னஸ் அனுபவம் தந்த கம்பீரத்துடன் அவர்கள் நின்றனர். ஹேமந்த் இவர்கள் என் நண்பர்கள் என் ஷாதி அன்று ராகினிக்கு உதவியவர்கள் எனக் கூறினார்.
பைரவ் செகாவத் ஒரு நொடி அதிர்ந்து பின் பலி ஏற்றுக் கொள்ள இவர்களே வந்துட்டாங்க என மனதில் சந்தோஷம் அடைந்தார். "இவர்கள் தான் நம்ம வீட்டுப் பெண்ணைக் கூட்டிட்டுப் போனது." எனப் பழி போட்டார்.
"ஹலோஜீ நடந்த உண்மையை நாங்களும் சொல்றோம் எங்கப் பக்கமும் கேளுங்கள். " என்றார் ஓம்பிரகாஷ் பல்லா.
"நீங்க என்ன சொல்லப் போறீங்க , எங்க ராகினி எங்க இருக்கா?" என பதட்டமாக வினவினார் ராஜேந்தர்.
"முதல்ல, அன்னைக்கு நடந்ததைக் கேளுங்க, முகூர்த்த நேரத்துக்கு முன்னால் நாங்கள் எங்கள் அறையிலிருந்து உங்கள் வீட்டுக்கு வரும் சமயம் ஒரு பொண்ணு ஏரியில் விழுந்து தற்கொலை முயற்சி செய்தது. நாங்கள் தான் காப்பாற்றினோம். அப்புறம் தான் அந்தப் பெண்ணை உங்கள் வீட்டில் பார்த்த ஞாபகம்.நாங்க தகவல் கொடுக்க, சற்று நேரத்தில் ஹேமந்த், ராகினி இருவரும் அங்கே வந்து சேர்ந்தாங்க." என நிறுத்தினார் பாண்டே.
"ராகினி தான் பங்குரியை விசாரித்தது, அப்போது தான் பங்குரியும் ஹேமந்த்தும் விரும்பும் விசயமே தெரிந்தது. ராகினி இந்த ஷாதியை நிறுத்தலாம்னுச் சொல்லும் போது, ஹேமந்தும் ஒத்துகிட்டான். ஆனால் பங்குரி இதற்குச் சம்மதிக்கல, தான் சாகிறது தான் ஒரே முடிவு எனப் பிடிவாதம் பிடித்தது." என நிறுத்தினார் ரெட்டி.
"அதன் பிறகான யோசனை ராகினியுடையது. பங்குரியும் எங்கள் குடும்பத்து பொண்ணு தான் அதனால் ஷாதி முடியவும் ,தெரியும் போது ஏத்துக்குவாங்க எனச் சொன்னது.” என்றார் ஹேமந்த்.
"பங்குரி வாழ்க்கை சரி, ராகினியின் வாழ்க்கை என்ன ஆகுமென்று நீ யோசிக்கவில்லையா ஹேமந்த்?" என்றார் தாதாஷா.
"நானும், இதைச் சொல்லி மறுத்தேன் மாமாஷா, ஆனால் ராகினி, என் பாபுஷாவுக்கு என் மேல் நிறையப் பாசம், நம்பிக்கை எல்லாம் உண்டு, நான் எது செய்தாலும் சரியாக இருக்குமென்று சொல்லுவார்கள், அதனால் நான் அவரைச் சமாளிச்சுக்குவேன். தாதிஷாவும் புரிஞ்சுபாபாங்க எங்கள் குடும்பம் எனக்கு ஆதரவுத் தரும் எனச் சமாதானம் சொல்லி தன் இடத்தைப் பங்குக்குத் தந்தது ராகினி." எனக் கண்கலங்கினார் ஹேமந்த்.
இதைக் கேட்டவுடன் தாதாஷா மிகவும் காயப்பட்டுப் போனார். "ஸ்வரூ, நான் தான் உன்னுடைய குற்றவாளி. என் மேல் நீ எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த, நீ என்னை ஏமாற்றல, நான் தான் உன்னை ஏமாற்றிட்டேன்." எனப் புலம்பிய படி அழ, ராத்தோட்கள் அனைவரின் கண்ணிலும் கண்ணீர். தன் குடும்பத்தினர், தன் மீது வைத்திருக்கும் பாசம், இன்னும் குறைந்து விடவில்லை என மனம் தேறினார் ராகினி.
அவர்களுக்கான அவகாசம் தந்த ரெட்டி, மீண்டும் பேச்சை எடுத்தார். "பொண்ணு மாற்றித் திருமணம் நடப்பது, எங்கள் ஐந்து பேர் மற்றும் பங்குரி, ராகினிக்கு தான் தெரியும். ஷாதி முடிந்து பிற்பாடு சடங்குகள், ஒருமணி நேரம் நடந்தது. அதுக்குப் பின்னர், "மூஹ் திகாயீ ரஸம்" (முகம் காட்டுதல் சடங்கு) போது தான் எல்லாருக்கும் தெரியும், அதுக்கு முன்னாடியே ராகினியை கடத்த திட்டம் போட்டாங்க." எனக் குண்டைத் தூக்கிப் போட்டார் ரெட்டி.
இது ஹேமந்துக்குமே அதிர்ச்சி தந்தது, "என்ன சொல்ற ராஜூ?" என்றார் .ராத்தோட்களின் அதிர்வுக்கு எல்லையில்லை. ரகுவீர் அன்றொரு நாள் கேட்டது, நினைவில் வந்தது ராகினியின் சகோதரர்களுக்கு.
"பைரவ் சாப், நீங்க சொல்கிறீர்களா இல்ல நாங்கள் சொல்லவா?" எனக் கேட்டார் பல்லாஜீ.
"நானே சொல்றேன்." என்ற கிழட்டு நரி பேச ஆரம்பித்தது. "எங்களுக்கும், ரெனாவத்களுக்கும் ராகினியை ஷாதி செய்து கூட்டி வந்து, ராஜ பரம்பரை நகைகளை யார் வைத்துக் கொள்வது என்பதில் போட்டி, இந்த நகை மேவாட் ராஜவம்சத்தில் பெண் வழியில், வழிவழியாகத் தொடர்வது.
ஸ்வர்ண மஹாலக்ஷ்மி மாஷாவுக்குப் பின், எனது மனைவிக்கு ஒரு சிறிய பகுதியைத் தான் தந்தார் அவளுக்குக் குழந்தை இல்லாததால் ராகினிக்கு ஒரு பகுதியைத் தருவதாகப் பேச்சு. நான் ஹேமந்த்தை இதற்காகவே பெரிய அளவில் படிக்க வைத்தேன்.
என் மனைவி மூலம் பிறந்த வீட்டில் பேசி பால்ய விவாகமும் செய்ய வைத்தேன். ஆனால் முகூர்த்தத்தின் போது பொண்ணு மாறிய செய்தியை முதலில் அறிந்தது என் மனைவி தான்."
"என் மனைவி வந்து விசயம் சொல்லும் போதே கேட்டு விட்ட ரெனாவத் குடும்பம் ராகினியை கடத்த திட்டமிட்டனர். அதே நேரம் என் சாசுமாவுக்கும் விசயம் தெரிந்து விட்டது. ரெனாவத் ஆட்களைக் கூட்டி பொண்ணைக் கடத்த ஏற்பாடு செய்தான். நானும் ஹேமந்த் பங்குரி காதல் விசயம் வெளியே வந்தால் எங்கள் தொடர்பு ராத்தோட்களோடு விட்டுப் போகும் என நினைச்சு , ராகினி மேல் பழிப் போட்டேன்." என நிறுத்தினார்.
தாதாஷாவுக்குக் கட்டுக்கடங்காத கோபம் வந்தது, "ஏய் பைரவ் செகாவத், நீ மட்டும் என் தீதீஷாவின் புருஷனா இல்லாவிட்டால் இந்நேரம் உன்னைக் கொன்றிருப்பேன்." எனக் கிழட்டுச் சிங்கமாகக் கர்ஜித்து, பைரவின் சட்டையைக் கொத்தாகப் பிடித்தார்.
தாதிஷா தான் அவரை அடக்கி, "சோடியே, இவரைக் கொன்று போட்டா நமது மகள் திரும்பி வந்துடுவாளா? நமக்கு மகளாகப் பிறந்த பாவத்துக்கு, அவளுக்கு இந்தக் கதி, நம்ம பாவத்துக்கு அவளைப் பார்க்காமலே கண்ணை மூடுவது தான் நமக்குத் தண்டனை." என அழுதார். அவர்கள் இருவரையும், மகன் மருமகள்கள் தேற்றினர்.
ரகுவீர் அமுதனுக்குத் தன் புவாஷாவை அழைத்து வரச் சொன்னான். வாசலுக்கு வந்தபின் தான் வந்து அழைத்து வருவதாகச் செய்தி அனுப்பினான்.
"ரெனாவத் ஆட்கள் சமயம் பார்த்து, ராகினியை தாக்க வந்தனர், அந்தச் சமயம் பாதுகாப்புக்கு நின்ற சிவா தன் தலையில் ராகினியின் அடியைத் வாங்கினான். நாங்கள் மூவரும் அவர்களை விரட்டி அடித்தோம்." என்றார் பல்லாஜீ.
மேலே நடந்ததைப் பாண்டே சொன்னார். "உங்கள் தாதிஷா இது எல்லாவற்றையும் பார்த்தவங்க, எங்கள் அனைவரையும் ஓர் ரகசிய அறைக்கு கூட்டிட்டு போனாங்க . அங்கு ராகினியிடம் ஒரு முதலுதவிப் பெட்டியைக் கொடுத்து, சிவாவிற்குக் கட்டுப் போட சொன்னார். ராகினி தயங்க, உன்மேல் விழுந்த அடியைத் தாங்க, அந்தப் பையன் இவ்வளவு யோசித்ததா?" எனக் கேட்டார்.
சிவாவிடம், "பேட்டாஷா, ராகினியின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம், இங்கு உள்ள கும்பல் இவளை மனுசியாக மதிக்காமல், ஒரு சொத்தாகத் தான் பார்ப்பாங்க. அதனால் யோசிச்சு தான் சொல்கிறேன். உங்களால் என் பேத்திக்குப் பாதுகாப்பு தர முடியுமா?" எனக் கேட்டார்.
சிவா ஒரு நொடி கூடத் தயங்காமல்," நீங்க அனுமதி கொடுங்கள், என் உயிரைக் கொடுத்தாவது, உங்கள் பேத்தியைக் காப்பாற்றுவேன்." என வாக்குத் தந்தான்.
அவர் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி, "உங்கள் வீட்டு பெரியவர்களுக்குப் போன் போட்டுக் கொடுங்கள்." எனத் தொலைப்பேசியைக் காட்டினார். "அவர்களுக்கு மொழி புரியுமா?" எனக் கேட்டார்
"என் தாத்தா பழவியாபாரம் நாடு முழுவதும் செய்பவர், அவருக்கு ஆறு மொழித் தெரியும்" என்றவன் அவரைப் போனில் காண்டாக்ட் செய்து, பேசிவிட்டு, ராகினியின் தாதிஷாவிடம் கொடுத்தான். அவரும் ராம் ராம் சொல்லி பேச்சை ஆரம்பித்தார்.
"உங்களை அண்ணனாக நினைத்துக் கேட்கிறேன், என் பேத்தியை அனுப்பி வைக்கிறேன் உங்கள் பேத்தியா நினைத்துப் பாதுகாப்புக் கொடுங்கள்." எனக் கேட்டார்.
"நீங்க அனுப்பி வையுங்கள் தங்கச்சிமா, நான் பார்த்திக்கிறேன்." என வாக்குத் தந்தார் சிவாவின் தாத்தா.
அதன்பின் ஒரு மரப் பெட்டியைத் தந்து தன் கை கழுத்திலிருந்ததை இருந்ததை ராகினிக்கு மாட்டி விட்டு, பணத்தை ஒரு கத்தை அள்ளி எங்கள் கைகளில் திணித்து, சிவாவின் வீடுவரை சேர்ப்பது எங்கள் கடமை என அறிவுறுத்தினார்,
சிவா, "இந்தப் பணம் நகை இல்லை என்றாலும் நாங்கள் பாதுகாப்பு தருவோம். அது வேண்டாம்." என மறுத்தான்.
"என் பேத்தியை நான் இப்படி அனுப்புவது காலத்தின் கட்டாயம், அவள் மேவாட்டின் பெண்வழி வாரிசு. அவளுக்கு என ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுங்கள்." எனச் சொல்லி ராகினியின் கையைச் சிவாவின் கைகளில் தந்து, உன் பொறுப்பு என்றார். வேறு ஓர் ரகசிய பாதை வழியாக எங்களை வெளியேற்றி, டிரைவருடன் இருந்த காரில ஜெய்பூர் அனுப்பி வைத்தார்.” எனப் பாண்டே அந்த நாளின் ரகசியத்தைச் சொல்லி முடித்தார்.
ஊர் பெரியவர்கள் முதல் அனைவருக்கும், ஸ்வர்ண மஹாலக்ஷ்மியைப் பற்றிய மலைப்பு இருந்தது. எல்லாக் காலங்களிலும், ராணிகள் இருக்கத்தான் செய்கின்றனர். அவரின் ராஜபரம்பரை தைரியத்தைப் பற்றிப் பேசியவர்கள்.
"படி ராணிஷாவே செய்திருந்தால் ஒரு காரணம் இருக்கும்." எனக் கட்டளை போல் ஏற்றனர்.
"இப்போதாவது சொல்லுங்கள், என் மகள் எங்கே?" என மயூராதேவி, ஹேமந்தின் நண்பர்களைக் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சிக் கேட்டார்.
"மாஷா!" என்ற அழைப்பில் வயதான மயூரா தேவி, தன் வயதையும் பொருட் படுத்தாமல், திரும்பி ராகினியை நோக்கி ஓடினார். ராகினியும், அவிழ்த்து விட்ட கன்றினைப் போல் தன் தாயின் மடித் தேடி ஓடினார். இந்தத் தாய், சேய் சந்திப்பில் அங்கிருந்த அனைவர் மனமும் நெகிழ்ந்து கண்ணீர் வழிந்ததைத் துடைக்கவும் மறந்து நின்றனர்.