Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு  37-அம்மா-மாஷா!!

வகைகள் : தொடர்கள் / மனதின் வார்த்தைகள் புரியாதோ

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


தொடர்கள்

 37-அம்மா-மாஷா!!

 

அம்மா-மாஷா எத்தனை வயதானாலும் அம்மா என்ற உறவுக்கு ஈடு இணை தான் ஏது? எனது மகள் எங்கே இருக்கிறாள், என்ற ஒரு தாயின் ஏக்கக் குரலுக்குப் பதிலாக அந்த மகளின், "மாஷா!!!" என்ற அழைப்பு உயிர் வரை உலுக்கியது அந்தத் தாயை. கால்வலி, மூட்டு வலி இதெல்லாம் இருந்த இடம் மறந்து போனது மயூரா தேவிக்கு. மகளின் குரலில் இத்தனை வருடம் பிள்ளைகள் அழைத்ததில் எல்லாம் வராத நிறைவு, தன் செல்ல மகளின் மாஷாவில் நிறைந்தது. பெற்ற வயிற்றில் பாலை வார்த்தனர் அங்கிருந்த நல்ல உள்ளங்கள்.

அவர்களின் கண்ணீரில் கால் நூற்றாண்டை தாண்டிய பிரிவின் வலி இருந்தது. ராகினியை ஒரு புறம் அமுதனும், மறுபுறம் ரகுவீரும் பற்றியிருக்க, மகளைக் கண்ட தாதிஷா வேகமாக வரவும், அமரேன் தன அன்னையைத் தாங்கி தன்  தீதியிடம் அழைத்து வந்தார். தாயும், சேயும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர்.

நடைத் தளர்ந்த தன் தாயினைப் பக்கத்திலிருந்த ஷோபாவில் அமர வைத்து, தன் தலையைத் தாயின் மடியில் வைத்து அழுதார் ராகினி. சில நிமிடங்கள் யாரும் அவர்களைத் தொந்தரவு செய்யவில்லை, "நீ நல்லா இருக்கியா?" என உச்சி முதல் பாதம் வரை கண்ணைக் குறுக்கி ஆராய்ந்தது தாயின் பார்வை.

 தாதாஷா, அதிர்ச்சியில் சமைந்து நின்றார். யாரைத் தன் கண் மூடும் முன் பார்க்க வேண்டும் எனத் தவித்தாரோ, அவளைக் கண்ட பின்னே செயல் மறந்து, கண்ணீர் அருவி போல் கொட்ட இருந்தார்.

 கஜேந்திர தன் தீதியைப் பற்றிய உண்மை தெரிய வந்ததிலிருந்தே, தான் செய்த செய்கைக்கு வெட்கி, குற்ற உணர்ச்சியில் இருந்தவர், தனது தீதியின் முகத்தை பார்க்கவும், பக்கத்திலிருந்த தூணைப் பிடித்த வண்ணம் குலுங்கி அழுது கொண்டிருந்தார்.

ராஜேந்தருக்கு கண் முன் தங்கையை பார்த்த அதிர்ச்சியில், தன மாஷாவும் சோட்டியும் கட்டித் தழுவி கண்ணீர் வெள்ளத்தில் இருந்ததைக் கண்டு உணர்வு மிகுதியில் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியதையும் அறியாமல் நின்றார்.

 ஷப்னம், தான் நின்ற இடத்திலிருந்த ராகினியை நோக்கி வந்திருந்தார். தனக்கு முடியாத போது தன் பிள்ளைகளை மடிதாங்கிய மாது அல்லவோ ராகினி.

 ஜானகி தன தாய் அழுததை பொறுக்க மாட்டாமல் அமிர்தாவைக் கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தாள், அவளும் அதே உணர்வில் இருக்க மயூரி இவர்களை தேற்றினாள். “ஜானி நீ செய்த முயற்சிக்கு பலன் கிடைக்கும் நேரம் அழாதடி!“ என கட்டிக் கொண்டாள், பூனத்தின் பார்வை மாமியாரிடம் இருந்ததால் இவர்களை கவனிக்கவில்லை.

அமரேன் தன் பாபுஷாவை அசைத்ததில் உணர்வு பெற்றவராய் ராகினியிடம் வந்தார். "ஸ்வரூ பேட்டா, இஸ் ஹாரே பாபுஷா கோ மாஃப் கர்ணா!" (தோற்றுப் போன அப்பாவை மன்னித்துவிடு) என்று கை கூப்பியபடி வந்து நின்றார்.

அவரின் குரலில் தாய் மடியில் இருந்து நிமிர்ந்த ராகினி, "நஹி பாபுஷா, என்கிட்ட தான் குறை இருந்திருக்கும், யாரோ சொன்னதை நீங்க நம்பறதுக்கு என் குறையும் தான் காரணம்." என அவர்  கேவி பலமாக அழுதார். தன் தாய் அழுவதைப் பார்த்து, அமுதன் ஜானகிக்கும் பதறியது அவருக்கு புரை ஏறினாலோ, இது போல் உணர்ச்சி வயப்பட்டால் முடியாமல் போகும். தாயிடம் பாய இருந்த ஜானகியை ரகுவீர் தன் கண் பார்வையில் அடக்கினான்.

சிவகுரு பதட்டமாக வந்தவர் பக்கத்தில் இருந்த பர்க்காவிடமிருந்து தண்ணீரை வாங்கி, ராகினி அருகில் வந்தார். "எந்திரிமா, இப்படி அழுதா உடம்புக்கு என்ன ஆகிறது. போதும் நீ அழுதது எல்லாம்." என மெல்லக் கடிந்தவர், சிறு பிள்ளையைச் சமாதானம் செய்வது போல் அவரைத் தேற்றி தண்ணீர் அருந்த வைத்தார். சுற்றி இருந்த அனைவரும் அவர்களின் அன்யோன்யம் கண்டு வாயடைத்தனர். ராகினியை அவரின் தாய் அருகில் அமர்த்தியவர் ,

"நான் சிவகுரு நாதன், ராகினியின் கணவன். ஹேமந்தின் நண்பன். இவன் கல்யாணத்துக்கு வந்தபோது நடந்த சம்பவம் தான், விதியாக வந்து எங்களைச் சேர்த்தது. நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி ,எங்கள் கல்யாணம், லவ் மேரேஜ் கிடையாது. ஹேமந்துடன் வந்த போது ஓரிரு முறை ராகினியை பார்த்து இருக்கேன் அவ்வளவு தான். ராகினியின் தாதிஷா, அவளை என் கையில் கொடுத்த நொடி முதல் அவளுக்கு எதுவும் வரக் கூடாதுனு  முடிவெடுத்தேன். இங்கிருந்து ராகினியை அழைத்துப் போனது என் தாத்தா சுப்பையா அவர்கள், ராகினியின் தாதிஷாவுக்குக் கொடுத்த வாக்குக்காகத்தான்.” என, தங்கள் உறவை பற்றி பேச ஆரம்பித்தார் 

 “நாங்களும், தாத்தா,அப்பத்தா, அப்பா, அம்மா, அண்ணன் , தம்பினு,  உங்களைப் போல் கூட்டுக் குடும்பமாக வாழறவங்க தான், வீட்டில் நானும் என் தம்பியும் இருக்கும் போது மணமாகாத பெண்ணை அதே வீட்டில் வைக்கக் கூடாதுனு , என் தாத்தா அப்பத்தா ராகினியுடன் தனிக் குடித்தனம் இருந்தாங்க." எனச் சிவகுரு சொன்ன போது ஊர் பெரியவர்கள், தமிழரின் பெருந்தன்மை, ஒழுக்கம் பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொண்டனர்.

"ராகினியின் மனம் எங்கள் ஊரில் ஒட்டவே இல்லை , பிறந்த வீட்டினரை தேடிட்டே இருந்தது, அதனால் என் தாத்தாவே, அவளை மும்பைக்கு உங்கள் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தார். ஆனால் அவர்களுக்கு மிஞ்சியது அவமானம் மட்டுமே." என்றார் சிவா.

"ஆமாம், ஒரு மாதத்துக்குப் பின் ஒரு பெரியவருடன் ராகினி வந்திருப்பதாக வேலையாள் வந்து சொன்னப்போ, நான் பார்க்க முடியாதுனு  மறுத்தேன் ஜீஜூஷா தான், அவர்களைப் பார்த்து பேசி அனுப்பினார்." என தாதாஷா வேதனையானக் குரலில் தன் நெஞ்சை அறுத்துக் கொண்டிருக்கும் உண்மையை அனைவர் முன்னும் சொன்னார்.

பைரவ் செகாவத், "சாலேஷா, நீர் சொன்னதைத் தான் நான் செய்தேன்." என்றார். ராகினிக்கு அந்த நேரம் அழுகையை மீறிய கோபம் வந்தது, "ஆமாம் செகாவத்ஷா, உங்களுக்குத் தானே எல்லாமே தெரியும், அதனால் பாபுஷாவை முந்திக்கிட்டு, வந்த நீங்க என்னை அனுப்புவதில் குறியாக இருந்தீங்க. சிவாவின் தாத்தா எவ்வளவோ, எடுத்துச் சொன்னாங்க , இவர் அவரையும் சேர்த்து அவமரியாதையாகப் பேசினார். எனக்காக உதவ வந்த பெரிய மனிதர், அவமானப் படுறதைத் தாங்க முடியாமல் நான் திரும்பிச் சென்றேன். என் கண் முன்னே, வீரூவை வேலையாள் அழைத்துச் சென்றான். அவனைப் பார்க்க கூட இவர் விடலை." என ராகினி கூறி முடிக்கையில் ரகுவீர் ராகினியை கட்டியணைத்து ஆறுதல் சொன்னான்.

"நீ போன பிறகு ஒரு மாதம் ரகுவி காய்ச்சலில் கிடந்தான் ஸ்வரூ, சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல், நடுநடுவே, புவாஷானு கதறுவான். அவனுக்கு மாற்று இடம் தேவைனு  ஹரிணியோடு சேர்த்துப் போர்டிங் ஸ்கூலில் சேர்த்தோம்." என ராஜேந்தர் தன் தங்கையிடம், அவளைப் பிரிந்து தாங்கள் பட்ட கஷ்டத்தைச் சொன்னார்.

"ராகினி, என்னை விட அவன் உன் மடியில் தானே அதிகம் இருந்தான். என் பிள்ளை இப்படிக் கஷ்டப்படும் போது, இவனை விட்டுப் போக உனக்கு எப்படி மனசு வந்ததுனு, உன்னை மனசில் ரொம்ப நொந்து இருந்தோம்." என்றார் ஷப்னம்.

"விதியின் விளையாட்டை என்ன சொல்றது பாபிஷா, எனக்கும் வீரூவைப் பற்றிய கவலை தான், அதே மனவருத்தில் இருந்த என்னைத் தேற்றிக் கொண்டு வர, சிவாவின் தாத்தா அப்பத்தா பெரும்பாடு பட்டாங்க ." என நிறுத்தினார் ராகினி.

"ராகினி அருகில் இருக்கையில் எனக்கும் அவள் மீது ஈடுபாடு வந்தது, ஒரு முறை வெள்ளி மலைக் கோவிலில், என் கையில் இருந்த குங்குமம் ராகினி நெற்றியை நிறைக்க, அது கடவுள் ஆசி என ராகினியிடம் கல்யாணத்திற்குச் சம்மதம் கேட்டார்கள், எங்கள் குடும்பத்தினர்." என சிவகுரு, தன் மனதையும் மறைக்காமல் சொல்ல, 

ராகினி, "அடைக்கலம் தந்தது பாவமா, சிவாவைக் கட்டாயப்படுத்தாதீக  , நான் இப்படியே இருந்துடுவேன்னுச்  சொன்னேன், ஆனால் சிவாவின் தாத்தா, என் தாதிஷாவிடம் பேசி சம்மதம் வாங்கினவர், நான் அறியாமல் திருமண ஏற்பாடுகளையும் செய்தார். திருமணத்திற்கு இரண்டு நாள், முன்பு தாதிஷா வந்து சேர்ந்தாங்க. என்னை எனக்கே புரிய வைத்து, சிவாவிற்கும் என் மீது பிரியம் இருப்பதைப் புரிய வச்சாங்க ." என அந்த நாள் நினைவில் நிறுத்தினார் ராகினி.

பாண்டே தொடர்ந்தார், "சிவா, ராகினி திருமணம்னு  எங்களுக்கு அழைப்பிதழுடன், விமான டிக்கெட்டும் வந்துச்சு, நாங்க மூன்று பேரும் ,சிறுமலையில் ஆஜரானோம். சகல சீர் வரிசைகளுடன், தன் பரம்பரை ராஜ நகைகளும் பூட்டி, அந்த மலையே வியக்கும் வண்ணம், தாதிஷா ஸ்வர்ண மஹாலக்ஷ்மி தன் பேத்தி ஸ்வர்ண ராகினியை கன்னிகாதானம் செய்து வைத்தார். " எனப் புகைப்படத்தைக் காட்டினார் மங்கள் பாண்டே. அதனை வாங்கிப் பார்த்த தாதாஷா தன் தாயின் தனித்துவம், தைரியம், தூரதிருஷ்டியை எண்ணி வியந்தார். தாதிஷா தனது மாமியாருக்கு மனதார நன்றி சொன்னார்.

ராகினி, சிவகுரு நாதன் திருமணப் புகைப் படத்தைப் பல பிரதிகள் எடுத்துக் கொண்டு வந்திருந்தார் பாண்டே. அந்தப் புகைப்படங்களை அனைவரும் பார்க்கும் வண்ணம், ஊர்க்காரர்கள் கையில் கொடுத்தனர். ராகினி இராஜபுத்திர மணமகளைப் போலவும், சிவகுரு தமிழர் மணமகனாகவும், உடை அணிந்து இரண்டு முறைப்படியும் மந்திரம் ஓதி முறைப்படி நடந்தது அவர்கள் திருமணம்.

இப்போது, உதய்பூர் வாழ் இராஜஸ்தானிகள், சிவகுரு நாதனிடம் , "எங்கள் குலத்துப் பெண்ணை நாங்கள் விரட்டி அடித்தோம், நீங்கள் பெருந்தன்மையுடன் அவளை உங்கள் வீட்டு ராணியாக ஏத்துக்கிட்டு, நாங்கள் சிதைக்கத் தெரிந்த பெண்ணின் மானத்தை நீங்கள் காப்பாற்றி இருக்கீங்க  நன்றி." எனக் கைகூப்பி வணங்கி நன்றி தெரிவித்தனர்.

 "அது மட்டும் இல்லை காகாஷா, நம்ம ராகினி தீதீஷா பெரிய ஸ்கூல் வச்சு  நடத்துறாங்க. இவர்களைப் பெரிய கல்வியாளர், முன்னோடி எனத் தமிழ்நாடே கொண்டாடுகிறது." என அமரேன் பெருமையாகச் சொல்லி, சில செய்தித்தாள்களை  காட்டினார்.

அதைப் பார்த்துப் பெருமை பட்ட இராஜஸ்தானிகள், "பேட்டிஷா, நமது ஊருக்கும் இதுமாதிரி ஸ்கூல் ஆரம்பிக்கவேண்டும். எங்கப் பொண்ணு எவ்வளவு பெரிய ஆளென்று நாங்களும் சொல்லுவோம்." எனக் கூறினர்.

"கட்டாயம் காகாஷா, நான் பிறந்த மண்ணுக்குக் கட்டாயம் செய்வேன்." என ராகினி அவர்களுக்கு வாக்குத் தந்தார். ஊர் பெரியவர்கள், தாங்கள் முன்னர்ச் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து ராகினியை ஆசீர்வதித்து விடைப் பெற்றனர். அவர்களுடன் பைரவ் செகாவத்தையும் அனுப்பி வைத்தார் ஹேமந்த்.

“கம்மகானி பாபிஷா, உங்கள் ஷாதி அன்று நடந்ததை நாங்களும் தப்பாக நினைத்திருந்தோம், இப்போ புரியுது உங்களது அருமை. உங்களை காப்பாற்றிய பாயிஷாவுக்கும் நன்றி.” என அமர்சிங்கின் அப்பா ரத்தன் சிங் டாக்கூர் ஊர் பெரியவராகப் பேசினார். அவரை ராஜேன், ஹரிணியின் மாமனார் டாக்கூர் குடும்பம் என தங்கைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பல்லாஜீ, பாண்டே சாப், ரெட்டிகாரு குடும்பத்தினரை வரவேற்று, உள்ளே ஹால் பகுதியில் உட்கார வைத்து, அவர்களைத் தன் அம்மா பெரியம்மாவுடன் அறிமுகம் செய்து வைத்துப் பேசிக் கொண்டிருந்தாள் மயூரி. ஹரிணியும் உடன் இருந்ததால் ஒரே மகிளா மண்டலாக இருந்தது.

ஜானகி, அமிர்தாவும், ராகினி, சிவகுரு அறியாமல் அவர்களுடன் அன்பை பரிமாறிக் கொண்டிருந்தாள். ப்ரீத்தோ, பர்க்காவை அணைத்துக் கொண்டு, ஜானகி "தாங்க்யூ மாமிஜீ!" என நெகிழ்ந்து நின்றாள். பம்மியும், மஞ்சரியும் அப்போது அங்கு வந்து இணைந்தனர்.

எல்லாம் சுமூகமாக முடிந்த மகிழ்வில் இருக்கும் போது, "மண்ணே மாஃப் கர்ணா தீதிஷா!" எனக் கஜேந்தர் ராகினியின் கால்களில் விழுந்தார்.

"கஜேன், இதெல்லாம் என்ன? சும்மா இருடா. ஏதோ கெட்டக் காலம் அதை மறந்துடுவோம்." என்றார் ராகினி

"தீதீஷா, எல்லாருக்கும் நான் செஞ்ச தவறு தெரியனும் . பூஃபாஷா, குல கௌரவம் உன்னால் கெட்டதுனுச் சொல்லி, சொல்லிக் கேட்டு நானும் அப்படியே கோபத்தில் இருந்தேன். உன்னைக் கர்ப்பமாகப் பார்த்த போது, இவள் சந்தோஷமா இருக்கா, நாம தான் அவமானப் பட்டு இருக்கோம்கிற  கோபம் வந்தது. உன்னையும், ஜீஜூஷாவையும் அப்படிப் பேசி அனுப்பிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க, ஜீஜூஷா!" எனச் சிவகுருவிடமும் மன்னிப்பு கேட்டார்.

"இரண்டு வாரம் முன்பு  மயூரி கேட்ட கேள்வியில் நீ வந்து போனதை மாஷாகிட்ட பல வருடம் கழிச்சுச் சொன்னேன். மாஷா, என்னைப் பார்த்த பார்வையில் பேசிய பேச்சிலும் அன்னைக்கே மடிந்து போனேன். மாஷா, உனக்கும் ஒரு பொண்ணு இருந்தால் தெரியுமென்று சொன்னாங்க. அப்புறம் தான், ஹரிணி, மயூரிகிட்ட கூட நான் அப்பா மகள் அன்பை உணரவில்லைங்கிறதும் புரிஞ்சது.” என நீளமாகப் பேசி மன்னிப்பு வேண்டினார்.

ராகினி சிவகுருவைப் பாக்கவும், “போனதெல்லாம் போகட்டும் விடுங்க கஜேன், இனியாவது உங்க தீதி உங்களையெல்லாம் நினைச்சு கண்ணீர் விடாமல் இருந்தால் சரி. உங்க தீதி விட்டக் கண்ணீரில் தான், சிறுமலைத் தண்ணீர் பஞ்சமே தீர்ந்தது.” என வேடிக்கையாகப் பேசி சூழ்நிலையை சகஜமாக்கப் பார்த்தார்.

“ஜிஜுஷா உங்க பழ வியாபாரம் வெற்றிகரமா நடக்க எங்க தீதிதான் காரணமுன்னு ஒத்துக்குறீங்க.“ என அமரேன் கேலி பேச்சிலேயே அவரோடு அறிமுகம் ஆனார்.

“உங்க தீதி கண்ணீர் மட்டுமில்லை, ராகினி அழுகுதுன்னு,போன் போட்டு உங்க ஜிஜு எங்கள் கிட்ட அழுவான், அந்தத் தண்ணீரும் சேர்ந்து பாய்ந்தது.” என்றார் பாண்டே. அவர்கள் அன்பில் நெகிழ்ந்த அனைவரும் சிரித்தனர்.

“பொண்டாட்டி அழுதால், புருஷன் எப்படி நிம்மதியா இருக்க முடியும்.” என்றார் தாதாஷா . “மாமாஷா, இது நூற்றில் ஒரு வார்த்தை.” என்றார் சிவகுரு. ஆமோதிக்க பெண்கள் முறைத்தனர்.

ரகுவீர் ஜானகியைப் பார்க்க அவளும் முறைத்தாள், உனக்கு இருக்கு , இருடி என நினைத்தவன் கஜேனைத் தூண்டிவிட்டான்.

“சசாஷா, உங்க மனசு எப்படி மாறுச்சுன்னு சொல்லவே இல்லையே?“ என ரகுவீர் எடுத்துக் கொடுக்க, 

“ஆமாம், தீதி ,எனக்கு இரண்டும் பையன்தான், மகள் இல்லைனு ஒரு போதும் நினைக்கலை ஆனால் எங்கிருந்தோ வந்த அந்தத் தேவதை, எனக்கு மகளின் பாசத்தை உணர்த்தினா, இவளைப் போல மகளை எனக்கு ஏன் கடவுள் தரலைனு  ஏங்கினேன்." என்றவர், "ஜானகி பேட்டா இங்க வாடா!" என அழைத்தார் கஜேந்தர்.

ஜானகி, தயங்கி தயங்கி மெல்ல அடி எடுத்து வைத்து வந்தால். முகத்தை மறைத்து முக்காடு வேறு. உண்மை தெரிந்த அனைவரும் சிரித்தனர்.

ரகுவீர் தான் முன்னே வந்து, "சாசாஷா, உங்களை மாற்றின தேவதை முகத்தைப் புவாஷா, பூஃபாஷா பார்க்க வேண்டாம். முக்காட்டை எடுக்கச் சொல்லுங்கள். முஹ் திகாயீ நடக்கட்டும்." எனத் தூண்டி விட்டான்.

ஜானகி  முக்காட்டுக்குள் இருந்து ரகுவீரை முறைத்தாள், அவன் காலை யாரும் அறியாத வண்ணம் மிதிக்கப் பார்த்தாள், ரகுவீர் சுதாரித்து நகர்ந்தான்.

கஜேனையே மாற்றிய பெண் யாராக இருக்கும் என ராகினி ஆவலாகப் பார்க்க அவள் மாட்டேன் எனத் தலை ஆட்டினாள். ”அப்படி எல்லாம் விட முடியாது.” என்றவன், ”புவாஷா உங்களுக்கு ஒரு மகள் இருக்கிறதே, அவள் பேரென்ன?” எனக் கேட்டான். "அவள் ஜானகி தேவி!" என்றார் ராகினி.

"அந்த ஜானகியும்,இந்த ஜானகியும் ஒன்று தானா பாருங்கள்!" என ரகுவீர் அவள் முக்காட்டை விலக்கினான். உள்ளே ஜானகி தலை கவிழ்ந்து நின்றாள். முகத்தை நிமிர்த்திக் காட்டினான் ரகுவீர். ஜானகி, ராகினி மகளா என எல்லாருக்கும் அதிர்ச்சி.

 "ஜானும்மா, நீ எப்படி இங்க. இங்க என்னடி பண்ற மும்பையில் ட்ரைனிங், ப்ராஜெக்ட்னு சொன்ன அமிர்தா எங்க?” என ராகினி அதிர்ச்சியாகி கேள்விகளை அடுக்கினார். "அத்தை இங்க இருக்கிறேன்." என அவளும் ஆஜரானாள்.

 "ஸுனியேஜி, எல்லாம் நீங்க கொடுக்கிற இடம், நமக்குத் தெரியாமல் எங்க வந்து உட்கார்ந்து இருக்காப் பாருங்கள்." என டீச்சர்- அம்மாவாகக் காதை திருகினார்.

"மாதாஜீ விடுங்க வலிக்குது, வலிக்குது அப்பா ஜான், மாதாஜீயை விடச் சொல்லுங்கள் வலிக்குது." என நாடகமாடினாள்.

"ஜானும்மா இந்த அப்பா ஜானையும் சீட் பண்ணியிருக்க நான் இப்போ சப்போர்ட் பண்ண மாட்டேன்." என்றார் சிவகுரு. ரகுவீர் தன்குட்டிப் பிசாசின் நாடகத்தை ரசித்துக் கொண்டிருந்தான்.

"ராகினி விடுமா என் நாதியை." எனத் தாதாஷா சொல்ல. தாதிஷா, தன் அருகில் ஜானகியை அழைத்துக் கொண்டு, ராகினி அவளைப் பிடிக்க விடாமல் தடுத்து நின்றார்.

"தீதீ அவள் தன் மாமா வீட்டுக்குத் தானே வந்தாள் விடுங்கள்." எனக் கஜேந்தரும். "எங்க முன்னாடி எங்கள் பாஞ்சியை எதுவும் சொல்லக்கூடாது." என ராஜேந்தரும் சப்போர்ட் செய்தனர். "சும்மாவே ஆடுவாள் இப்போ நீங்களும் சப்போர்டா?" என ராகினி நொந்து கொண்டார்.

"ஸ்வரூ, இவள் உன் மகள்னா, அந்தப் பையன் மும்பை வந்ததே அவன் தான் உன் மகனா?அப்போ ஸ்வரூ உன் வீட்டில் தான் இருந்தாளா " எனக் கேட்டார் தாதாஷா. 

ஜெய்பல்லா, "அம்மு பாயீ, அடுத்து உங்கள் காதை திருகுவார்கள் புவாஜீ!" என்றான். "அமுதன் பாயீ வாங்க." என ரன்வீர் அழைத்து வந்தான்.

"வணக்கம் நானாஷா, நானிஷா!" என அவர்களது காலைத் தொட்டு வணங்கினான். அவனைக் கட்டியணைத்த தாதிஷா, அமுதன் நெற்றியில் முத்தமிட்டு நூறுவருஷம் வாழவேண்டும் என வாழ்த்தினார்.

 

"பாயீஷா என் மூத்த மகன், அமுதன்." என ராஜேன், கஜேன், அமரேனுக்கு அறிமுகம் செய்து வைத்தார், அவர்களையும் வணங்கினான்.

“ஜானகியின் அண்ணன் எனத் தெரியும், இப்போது உன் மகனாக அறிமுகம்." என்றனர். ராகினியும், சிவகுருவும், "தம்பி நீயும் எங்ககிட்ட மறைச்சிட்டியே?" என அங்கலாய்த்தனர்.

ராஜ்வீர், ரன்வீரை அழைத்து ராகினி, சிவகுருவிடம் அறிமுகப் படுத்தி வைத்தார் கஜேந்தர். ஹரிணி வந்து ராகினியை அணைத்துக் கொண்டு, தனது குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தாள்.

ரகுவீர் அங்கிருந்த பெரியவர்களிடம், "இது தெரியாதவங்க  நாம தான்.” எனவும், ராஜ்வீரும் அமுதனும் ஒன்றாக லண்டனில் எம்பிஏ படித்தது,  அங்கே அவர்களுக்குச் சொந்தம் எனத் தெரிந்தது. அமுதன், தன் அம்மா, பிறந்த வீட்டோடு சேர்க்க நினைத்தார் , மயூரி, ஜான்வியை ஒரே காலேஜில் சேர்த்து, ப்ராஜெக்ட்க்கு வந்தது, அதன் ஒரு பகுதி, மயூரிக்கு புவாஷா வீட்டுக்கு போனபின்பு தான் தெரியும்." என அவன் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல எல்லாருக்கும் வியப்பு மேலிட்டது.

இதற்கிடையில் பல்லாஜீ குறுக்கிட்டு, "புத்தர்ஜீ, இதில் மூலகர்த்தா ஒரு ஆள் இருக்கான்,.உங்களுக்கு அது தெரியாது." என்றார். அனைவரும் யார் என்பது போல் பார்த்தனர்.

"ஹேமந்த்தான் இதன் மூலக் கர்த்தா. அமுதனையும், ராஜ்வீரையும் லண்டனில் சேர்க்க வைத்தது அவன் தான். தன் மகள் ஷாதிக்கு முன்னாடி எல்லாரையும் ஒன்றாகச் சேர்க்க ப்ளான் போட்டது." என்றார் பல்லாஜீ.

சிவகுரு நெகிழ்ந்து போனார், "ஹேமா எங்களுக்காக இவ்வளவு யோசிச்சியாடா?" என அவர் கையைப் பிடித்துக் கொண்டார்.

"நான் என்னடா செஞ்சேன், நீயும் ராகினியும் எங்களால் பட்ட கஷ்டத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமே இல்லை." என நண்பனை தழுவிக் கொண்டார்  ஹேமந்த். 

வந்த வேலை, சுமூகமாக முடிந்த திருப்தியில், "சரி வாங்கப்பா, சாயந்திரம் மெஹந்தி இருக்கு,  இப்ப வாங்க மதிய சாப்பாடு சாப்பிடலாம்." என தன் ஹவேலிக்கு  ஹேமந்த் அழைக்க, 

"பூஃபாஷா, இங்கேயே எல்லாருக்கும் லன்ச் அரேன்ஞ் பண்ணிட்டேன். எல்லாமே ரெடி, நீங்க இங்கே உங்கள் நன்பர்களோட சேர்ந்து சாப்பிடுங்கள் அப்புறம் தெம்பா மெஹந்தி செர்மனியை வச்சுக்கலாம்." என்றான் ரகுவீர்.

ராஜேந்த், "சந்தோஷமான இந்த நேரத்தில், மதியம் சாப்பாடு தயார் வாங்கச் சாப்பிடலாம்." எனக் கூப்பிட்டார். ராத்தோட் ஹவேலி மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தது. ராகினியை அழைத்துச் சென்ற பாபிஷாக்கள், அவரை அன்பு மழையில் நனைத்தனர். ஸர்குனை ராகினிக்குத் தெரியும், பூனமும் சிறுவயதில், ஷப்னம் ஷாதியில் பார்த்ததை நினைவு கூர்ந்தார்.

மதிய உணவுக்குப் பின் பெரியவர்கள் இளைப்பாறினர். சிறியவர்கள் மேல் மாடியில், ஒன்றாக அமர்ந்து கேலி கிண்டல் செய்து கொண்டு இருந்தனர்.

 

 

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!