Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு ஐ லவ் யூ வும் முத்தங்களும்

வகைகள் : சிறுகதைகள்/ வாழ்வியல்

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


சிறுகதைகள்

ஐ லவ் யூ வும் முத்தங்களும்

காலை 6.40 மணிக்கு விக்ரமின் செல்போன் துடித்தது. அரை தூக்கத்தில் கண்களை தேய்த்துக் கொண்டே எழுந்தவன் அலைப்பேசி திரையில் சுகுமார் மாமா என்று வந்திட சட்டென்று எடுத்தான். 

"ஹலோ மாமா! சொல்லுங்க மாமா... இவ்ளோ சீக்கிரம் கூப்பிட்டு இருக்கீங்க. ஏதாவது முக்கியமான விஷயமா?" என்று கேட்டுக் கொண்டே எழுந்து அமர்ந்தான். 


"தம்பி எப்பவும் அப்பா வந்து 5.30க்கு எழுப்பி வாக்கிங் கூட்டிட்டு போவாரு. இன்னைக்கு இன்னும் வர காணோம்னு வீட்டுக்கு வந்து பார்த்தேன்" என சுகுமார் சொல்லி முடிக்கும் முன்பே விக்ரம் முகம் வெளிரியது.

சுகுமார், "கதவ தட்டி பார்த்தேன். சத்தம் ஏதுமில்ல. காலிங் பெல் அடிச்சேன். எந்திரிக்கல. போன் பண்ணியும் பார்த்தேன். எந்த பலனும் இல்ல. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. கதவ உடைச்சு பார்த்தரலாமா?"  என கேட்க,


"ஐயோ மாமா. இத கேக்கணுமா? சீக்கிரம் கதவ உடைச்சு என்னன்னு பாருங்க மாமா" கட்சி கொண்டு கட்டிலை  விட்டு இறங்க அவன் குரல் கேட்டு எழுந்தாள் சத்யா.

சுகுமார் அருகில் இருந்தவர்களை அழைத்து விஷயத்தை சொல்லி கதவின் தாழ்பாளை உடைத்தார்கள்.  அவர்கள் வேகமாக உள்ளே சென்றபோது பெட்ரூம் அறை அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அது உள்பக்கமாக தாழிடப்படவில்லை.

கதவைத் திறந்து உள்ளே பார்த்தபோது பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்து கொண்டு தனது மனைவியின் பட்டுப்புடவை தனது நெஞ்சோடு அணைத்தவாறு கட்டிலில் எந்த அசைவும் இன்றி அமைதியாக படுத்திருந்தார் செல்வகுமார்.


குளிர்ந்து போன அவரது உடலும் மூச்சற்ற நாசியும் அசைவற்ற உடலும் இறந்து விட்டார் என்பதை உணர்த்தியது.  அருகில் காலியாகிப்போன தூக்க மாத்திரை அட்டை சிலருக்கு என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிந்திருந்தது.

சரியாக ஏழு மணிக்கு மீண்டும் விக்ரமிற்கு போன் அழைப்பு சென்றது. அதற்கு முன் ஆறு முறை முயற்சி செய்த போதும் சுகுமார் அழைப்பை எடுக்கவில்லை. பதட்டத்தில் இருந்த அவனோ சட்டென்று அழைப்பை எடுக்க "மாப்ள அப்பா நம்ம எல்லாரையும் விட்டு போயிட்டாருடா" என அழுது கொண்டே சொல்ல அப்படியே சரிந்து அமர்ந்தான். 

அவன் உடல் மொழியை பார்த்த சத்யாவிற்கு என்ன நடந்திருக்க வேண்டும் என்பது புரிந்தது. 

"மாமா..." துவண்டுபோன குரலில் திக்கி திக்கி பேசினான். 

"சீக்கிரம் கிளம்பி வாடா. இங்க நாங்க மத்த வேலையை ஆரம்பிக்கிறோம். ஆனா அப்பா தானா சாகலடா. தூக்க மாத்திரை சாப்பிட்டு இருக்கார்னு நினைக்கிறேன். என்ன நடந்துச்சுன்னு ஒன்னும் புரியலடா. நம்ம எஸ்ஐ சக்திவேல் கிட்ட சொல்லி இருக்கேன்" என்று சொல்லிவிட்டு போனை துண்டித்தார்.


"அப்பா.... அப்பா.... "  என்று அவன் அழுது கொண்டே கத்தியதில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை எழுந்தான். சத்யாவும் அழுது கொண்டே சீக்கிரம் கிளம்புங்க போலாம் என்றாள்.


செல்வகுமாரின் உடல் பெட்ரூமில் இருந்து எடுத்து வந்து ஹாலில் தரையில் வைத்தார்கள். தலைமாட்டு அருகில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு அவருக்கு செய்ய வேண்டிய முறை செய்தார்கள். சிறிது நேரத்தில் ஊர் முழுக்க அந்த செய்தி பரவியது. 

சிறிது நேரத்தில் அங்கு வந்து இறங்கிய ஐஸ்பெட்டிக்குள் உடல் புகுந்தது. உயிரோடு இருந்தவரை செல்வகுமார் என்ற பெயரோடு வாழ்ந்தவர் சில நிமிடங்கள் முன்னால் இருந்து சவம் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். 


"ஏம்பா அவர் பையனுக்கு விஷயத்தை சொல்லிட்டீங்களா? முக்கியமான சொந்த பந்தம் எல்லாத்துக்கும் சொல்லிருங்கப்பா" கூட்டத்திலிருந்து குரல் வந்தது. 


"அதெல்லாம் சொல்லியாச்சுப்பா. இந்நேரம் பையன் கிளம்பி இருப்பான். எப்படியும் வர்றதுக்கு ரெண்டு மூணு மணி ஆகும்னு நினைக்கிறேன்"


"எத்தனை மணிக்கு சவத்த எடுக்கிறதுன்னு சொன்னா தானப்பா காட்டுல எல்லாத்தையும் ரெடி பண்ணி வைக்க முடியும். நம்ம வீரனும் எல்லாத்தையும் முடிச்சிட்டு வீட்டுக்கு போகணும்ல"


"அட என்னப்பா சொல்றீங்க! அவ்வளவு தூரத்திலிருந்து பையன் வரான். ஒரே பையன். அவனுக்கு அவங்க அம்மா மூஞ்சி ஞாபகம் இருக்கோ இல்லையோ? அவங்க அப்பன் தான் அப்படி வளத்தான். அவனுக்கு கொஞ்சம் அழறதுக்காவது நேரம் தர வேண்டாமா?" முதியவர் ஒருவர் சொல்ல, 

"பெருசு நீ சொல்லிட்டு போயிருவ. எழவ முடிச்சுட்டு மத்தவங்க எல்லாம் வீட்டுக்கு போக வேண்டாமா? இங்கேயே டோரா போட்டுக்கலாமா? கொஞ்சம் சும்மா இருங்க" 


"ஏன்டா உங்கப்பன் செத்தா இப்படித்தான் எடுப்பேன்னு துள்ளுவியா? வந்தோமா எழவு கண்டோமா? விருப்பம் இருந்தா எடுக்கிற வரைக்கும் இரு. இல்லையா நீ பாட்டுக்கு கிளம்பி போய்கிட்டே இரு. அவன் பெத்த பையன் வந்துட்டு இருக்கான்ல. அவன் வந்து எப்ப எடுக்கிறதுனு சொல்லுவான்" என்று அந்த முதியவர் சொன்னவுடன் அவருக்கு சுருக்கென்று இருந்தது.


"விடுங்கப்பா. ஆளாளுக்கு பேசிக்கிட்டு. விக்ரமுக்கு போன் பண்ணி என்ன பண்றதுன்னு கேட்டா சொல்ல போறான். அத விட்டுட்டு நாமளே ஒன்னு பேசிட்டு இருந்தா என்ன பிரயோஜனம்?" என ஒருவர் சொன்னவுடன்,


சுகுமார், "அவனுக்கு யாரும் போன் பண்ண வேண்டாம். அவன் இப்போ என்ன மனநிலையில் இருப்பான்னு நமக்கு தெரியாது. இங்கே என்ன நடந்திருக்குன்னு அவனுக்கு தெரியாது. அவன் வந்த அப்புறம் நாம பேசிக்கலாம். இப்போதைக்கு ஒருத்தர் போய் ஜோசியர் கிட்ட எடுக்குறதுக்கு எது நல்ல நேரம்னு குறிச்சிட்டு வாங்க. இன்னைக்கு சாயந்திரம் இல்லைனாலும் நாளைக்கும் சேர்த்து எழுதி வாங்கிட்டு வாங்க" என்றார்.


செல்வகுமார் இறந்த செய்தி கேட்டு பல உறவினர்கள் விக்ரமிற்கு ஃபோன் செய்து கொண்டிருந்தார்கள் அவர் இறந்த செய்தி உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள. 


கண்ணீர் நிறைந்த முகத்துடன் வார்த்தைகள் தொண்டைக்குள்ளியில் சிக்கிக் கொண்டு வெளியே வராமல் தவித்துக் கொண்டிருக்கிற பதில் சொல்லி கொண்டிருந்தான். ஹலோ விக்ரம். அப்பா இறந்துட்டாரா?" என்ற கேள்விக்கு, "ஆமா. அப்பா எங்களை விட்டுட்டு போயிட்டாரு" என்று சொன்னான். 


அப்பா இறந்துவிட்டார் என்ற வார்த்தையை கூட அவனால் சொல்ல முடியவில்லை. அவன் மனதில் இருந்த வலியிலும் துக்கத்திலும் அவனிடத்தில் ஓடிக்கொண்டிருந்த கேள்வி அப்பா என் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது தான். 

"ஏங்க.. உங்க வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல மாமா தவறிட்டாருனு வச்சிருங்க. நிறைய பேரு உங்களுக்கு போன் பண்றாங்க. யார் யாருக்கு சொன்னாங்கன்னு தெரியல. சொந்தக்காரங்க எல்லோருக்கும் தெரியனுமில்ல" என்றாள் சத்யா. 

அதில் அவனுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் இது கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்றுதான் என்று நினைத்துக் கொண்டு தனது செல்போனின் இன்டர்நெட் வசதியை ஆன் செய்தான்.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் குழுவில், " எனது அப்பா எங்களை விட்டுவிட்டு அம்மாவிடம் சென்றுவிட்டார். ஊரில் உள்ள அவரது வீட்டில் அவர் உடல் இருக்கிறது" என பதிவு செய்தான். 

இரவில் இன்டர்நெட்டை ஆப் செய்து வைக்கும் பழக்கம் உள்ளதால் காலையில் குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருந்தது. அதில் தனது தந்தை எப்பொழுதும் காலை அனுப்பும் காலை வணக்கம் குறுஞ்செய்தி இன்று அவனுக்கு வரவில்லை. ஆனால் அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி நள்ளிரவில் வந்திருந்தது. 


அதை படித்தவனுக்கு உடல் குப்பென்று வியர்த்தது. கண்ணீர் வேகமாக கன்னங்களில் விழுந்து ஓடியது. அவன் படித்த அந்த செய்தியை தன் மனைவியிடம் கூட கூறவில்லை.


அவனுக்கு எப்போது வீட்டுக்கு சென்று அப்பாவை பார்ப்போம் என்ற ஒரே எண்ணம் மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்தது. அவனால் இப்போது யாரிடமும் பேசக்கூட முடியவில்லை.

தனது செல்போனை தன் மனைவி சத்யாவிடம் கொடுத்துவிட்டு அமைதியாக கண்களை மூடி சாய்ந்து கொண்டான். அவன் கண்களில் வழிந்து ஓடிய கண்ணீர் அவன் வலிகளை சொல்லிக் கொண்டே இருந்தது.


அதே நேரத்தில், 


"அவருக்கு என்னதான் பிரச்சனை? இத்தனை நாள் சந்தோசமா தான் இருந்தாரு. காடு தோட்டம் வீடு போய் வருவதற்கு காரு அதை ஓட்டுறதுக்கு டிரைவர்னு காசு பணத்துக்கு குறை இல்லாம நல்லா தானே இருந்தாரு. அப்புறம் ஏப்பா இப்படி மாத்திரை சாப்டாரு?" கூட்டத்தில் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். 

"யாருக்குப்பா தெரியும்? பையன் கூட ஏதாவது சொல்லி இருக்கலாம்?" மற்றொருவர் கூறினார்.

"இத்தனை சொத்தும் அவர் பெயரில தான் இருக்கு. எழுதி வைக்க சொல்லி பையன் கேட்டிருக்கலாம் இல்ல"


''அட சும்மா இருங்கப்பா. இத்தனை சொத்துக்கும் அவன் ஒருத்தன் தானே வாரிசு. என்னைக்கு இருந்தாலும் அவனுக்கு தானே எல்லாம். அது காரணமா இருந்திருக்காது"


"அப்ப பையன் ஏதாவது பிசினஸ் பண்ணனும்னு காட்ட வித்து காசு குடுக்க சொல்லி இருக்கலாம்... இல்ல"


"அட ஆமாப்பா... பையன் போன தடவை வந்தப்பவே தொழில்ல நட்டமாயிருச்சு. அங்கிருந்தா பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு. அதான் இங்கு வந்து ஒரு நாலு நாள் இருக்கலாம்னு அன்னைக்கே சொன்னான். அப்ப கூட அப்பாவை ஊருக்கு வாங்கன்னு கூப்பிட்டான். ஒருவேளை அந்த வீட்டை விக்கிறதுக்கு தான் சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன். பெருசு எப்படியும் முடியாதுன்னு சொல்லி இருக்கும். நேத்து போன் பேசும்போது ஏதாவது சொல்லி இருப்பான். அவசரப்பட்டு மாத்திரை சாப்பிட்டுருச்சு" என்றார் உறவினர் ஒருவர்.

"இல்லன்னா பெரியவர் ஏதாவது அவனை சொல்ல.... அவர ஏன் இன்னும் இருந்து தொல்லை பண்றீங்கன்னு கேட்டு இருக்கலாமில்ல" என ஒருவர் மாற்றி ஒருவர் செல்வகுமார் தற்கொலை செய்து கொள்ள விக்ரம் தான் காரணம் என்று முடிவு செய்து விட்டார்கள். அந்தப் பேச்சுக்களும் துக்க அழுகைக்கு நடுவே காற்றில் கரைந்து கொண்டிருந்தது.

மதியம் சரியாக 2.30க்கு விக்ரம் வந்த கார் வீட்டிற்கு வந்தது. ஏற்கனவே பல கார்கள் நின்றதால் ஆனால் வாசல் வரை வர முடியவில்லை. காரை விட்டு இறங்க அவனுக்கு பயம் பற்றியது. கார் கதவை திறக்க கைகள் நடுங்கியது. அவனைப் பற்றி சத்யா அறிவாள். சற்றென்று கார் கதவைத் திறக்க இருவரும் இறங்கினார்கள். 


மொத்த கூட்டமும் இவர்களை தான் பார்த்தது. அருகில் நின்ற சிலர் அவனது தோளை தட்டி முன்னை நகரச் சொல்ல வீட்டில் இருந்து சிலர் வேகமாக ஓடி வந்து அணைத்து அழுதார்கள்.


சத்யாவின் அப்பா குழந்தையை வந்து வாங்கிக் கொள்ள, அவளின் அம்மா அழுது கொண்டு அவளை வேகமாக உள்ளே அழைத்துச் சென்றார். 


அழுது தேங்கி நின்ற விக்ரமை சுகுமார் கைபிடித்து இழுக்க வரமாட்டேன் என தலையாட்டிபடி அங்கேயே அமர்ந்தான்.


"வாடா..."

"எதுக்கு மாமா வரச்சொல்றீங்க. நான் வரமாட்ட" 

"எந்திரிடா மாப்ள. வந்து அப்பாவ பாரு"


"இனிமேல் பார்க்க முடியாதுன்னு இப்ப வந்து பாத்துக்க சொல்றீங்களா மாமா. என்ன இப்படி விட்டுட்டு ஏன் மாமா போனாரு" என கண்ணீர் விட்டு கதறினான்.


"டேய் மரியாதையா எந்திருச்சு வாடா. எல்லாரும் உனக்காக தான் காத்திருக்காங்க" என அண்ணன் குமரேசன் சொல்ல, 


விக்ரம், "நாங்க இருக்கும். சித்தப்பாவை பாத்துக்குறோம். நீ தைரியமா போயிட்டு வான்னு சொன்னீங்களேடா. அடுத்த தடவை ஊருக்கு வரும்போது அவர் இருக்க மாட்டார்டா" என சொல்லிவிட்டு எழுந்து ரோட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். 

அனைவரும் அவனை பிடித்து இழுக்க, "விடுங்க என்ன. எனக்கு அவரை பார்க்க புடிக்கல. நாம இல்லாம நம்ம பையன் என்ன பண்ணுவான்னு யோசிச்சு இருந்தா இப்படி பண்ணி இருப்பாரா? என்ன பத்தி யோசிக்காதவர நான் எதுக்கு பாக்கணும்? விடுங்க... விடுங்க..." என்று கத்த அவனை இழுத்து வந்து வீட்டின் கதவு அருகில் நிறுத்தினார்கள்.


அவனின் கதறல் கேட்டு எந்த அசைவும் இன்றி அமைதியாக  கண்ணாடி பெட்டிக்குள் படுத்திருந்தார் செல்வக்குமார். அவரின் உடலை பார்த்தவுடன் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக அங்கே நின்றான் விக்ரம். 


உள்ளே இருந்து ஓடி வந்த அவனது அத்தை, "விக்ரமு எங்க அண்ணனை இந்த கோலத்துல பார்க்கவா நீ வந்த. இனி எங்க அண்ண கூட  எப்படிடா நான் பேசுவேன்" என கதறி அழுதாள். அவனது அக்கா அவனை கைபிடித்து இழுத்து செல்ல குழந்தையை போல் உள்ளே சென்றான்.

செல்வகுமார் தலை அருகில் அவன் நிற்க, சத்யாவை மற்ற பெண்கள் அணைத்து அழுதுகொண்டு இருந்தனர். 


ஐஸ் பாக்ஸ் கண்ணாடி பெட்டியை குமரேசன் எடுத்து கீழே வைக்க சிரித்த முகத்தோடு இறந்து கிடக்கும் தன் தந்தையை பார்த்தவன் சட்டென்று அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தான்.


"எப்பவும் அப்பா இருக்கேன்... அப்பா இருக்கேன்னு சொல்லுவீங்களேப்பா.  இப்ப மட்டும் எப்ப விட்டு போனீங்க. நான் என்னப்பா தப்பா செஞ்சேன். சொல்லுங்கப்பா.... சொல்லுங்கப்பா... " 


"நீ என்ன வேணா பண்ணு. உனக்கு பின்னாடி தான் இருக்கேன். சரி எது தப்பு எதுன்னு சொல்றேன். திருத்திக்கோன்னு சொல்வீங்களே. இனி எனக்கு யாருப்பா அதெல்லாம் சொல்லுவா?" 

"அப்பா உயிரோடு இருக்கிறதே உனக்காகத்தானே சொல்லுவீங்களே. இப்ப என்னாச்சுனு தற்கொலை பண்ணிட்டீங்க. பையன் கடைசி காலத்துல பார்க்க மாட்டானு நினைச்சிட்டீங்களா?"


"அம்மா செத்தப்போ எனக்கு இந்த அளவுக்கு வலிக்கல. எனக்கு அப்போ அந்த அளவுக்கு வயசு இல்ல. ஆனா இனி எப்படி இருக்க போறேன்னு தெரியல. ரொம்ப பயமா இருக்குப்பா. எந்திரிங்கபா... சும்மா தூங்கிட்டு தான் இருக்கேன் எந்திரிச்சு சொல்லுங்கப்பா" என கதறினான்.

"போன தடவை ஊருக்கு வந்தப்போ எங்களோடு வாங்க வாங்கன்னு கூப்பிட்டேனே. வர முடியாதுன்னு பிடிவாதமா சொன்னீங்களே. இதுக்குத்தானா? வந்திருந்தா இப்படி ஆகி இருக்காது இல்ல. என் மேல என்னப்பா கோபம். சொல்லுங்கப்பா...." அவன் சத்தம் ரோடு வரை கேட்டது. 


அவன் அழுகையும் கேள்வியும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்டு கொண்டிருந்தது. அவரின் இறப்பில் அவனுக்குத் தான் வலி அதிகம் என்பதால் யாரும் அவனை தேற்ற கூட தயாராக இல்லை. இன்னும் சற்று நேரம் அவன் அழட்டும் அமைதியாக இருந்தார்கள். 

சற்றென்று ஒருவர், "தம்பி விக்ரமு அப்பாவை எப்ப எடுக்குறதுன்னு சொல்லுப்பா. காட்டுக்கு சொல்லி அனுப்பணும்" என்றதும் அவர் மேலே படுத்துக்கொண்டான். 


"நான் அப்பாவை எடுக்க விட மாட்டேன். எல்லாரும் இங்கிருந்து கிளம்புங்க முதல்ல. யாரும் எங்கப்பா தொடக்கூடாது" என்றதும், 

"ஏங்க எல்லாருக்கும் அப்பா இருந்தா இப்படித்தான் இருக்கும். அவன யாராவது முதல்ல வெளிய கொண்டு வாங்க. எல்லாரும் துக்கம் கேட்கணும் இல்ல. எத்தனை மணிக்கு இறந்தாருன்னு தெரியல. சீக்கிரம் எடுத்தரலாம்" என்றார்.

அவர் சொன்னது சரி என்று பட அவனை உள்ளே இருந்து எடுத்து வந்து வெளியே நிற்க வைத்தார்கள். 

எஸ்ஐ சக்திவேல் அப்போது அங்கு வந்து சேர்ந்தார். "தம்பி உங்க அப்பா இறந்துட்டாரு. அது தற்கொலையா இல்ல கொலையான்னு பாக்கனும். அதே மாதிரி ஒரு வேளை அவர் தற்கொலை பண்ணி இருந்தாருன்னா என்ன காரணம்னு தெரியனும். போஸ்ட்மார்ட்டம் பண்ணலாமா?" என்று சாதாரணமாக கேட்டார்.


அழுது கொண்டிருந்த விக்ரம், "இது கொலை இல்ல சார். அப்பா சூசைட் தான் பண்ணிட்டாரு" 

"ஏன்னு தெரியுமா? இல்ல போஸ்ட்மார்ட்டம் பண்ண கூடாதுன்னு சொல்றீங்களா?" சக்திவேல் கேட்க 


தனது செல்போனை எடுத்து நேற்று இரவு சரியாக 12.43 க்கு "அப்பா சந்தோஷமா போய்டு வரேன். நீ பத்திரமா இரு. உனக்காக பீரோல சில பேப்பர்ஸ் வெச்சிருக்கேன். என்ன எடுக்கிறதுக்கு முன்னாடி அதை எடுத்து எல்லோரும் முன்னாடியும் படிச்சுரு. அப்பா சொன்னா ஆயிரம் காரணம் இருக்கும். துக்கத்துல மறந்துடாத" என்று செல்வகுமார் அனுப்பி இருந்த குறுஞ்செய்தியை காண்பித்தான்.


"இதை எத்தனை மணிக்கு பார்த்தீங்க?"

"காலையில ஒரு 8.30க்கு பார்த்தேன்"

"ஏன் அவ்வளவு நேரம்? உங்களுக்கு மிட்நைட்ல அனுப்பிட்டாரு"


"நைட்டு தூங்குறதுக்கு முன்னாடி எப்பவும் நெட் ஆப் பண்ணி வச்சுருவேன். காலையில சுகுமார் மாமா கூப்பிட்டு விசயத்த சொன்னார். அப்பா எங்கள விட்டுட்டு போன தகவல ஸ்டேட்டஸ் வைக்கும் போது தான் பார்த்தேன்" என்றான்.


"போய் அந்த பேப்பர்ஸ் எடுத்துட்டு வாங்க"


"வேண்டாம் சார். எதுவா இருந்தாலும் அப்புறம் பாத்துக்கலாம். நீங்க போயிட்டு வாங்க. எல்லாம் முடிஞ்சா அப்புறம் நானே ஸ்டேஷன் வரேன்" விக்ரம் சொல்ல, 

"அப்பா சொன்னா ஆயிரம் காரணம் இருக்கும் மாப்ள. போய் எடுத்துட்டு வா. அவர் பத்தி எனக்கு நல்லா தெரியும். போ" சுகுமார் சொன்னவுடன் வீட்டிற்குள் நுழைந்தான். சக்திவேல் வந்த பிறகு அந்த வீட்டில் ஒரு துளியும் அழுகை சத்தம் இல்லை. 


பீரோவை திருந்தவுடன் தனது மனைவியின் சேலைக்குள் ஒரு பை ஒன்றை வைத்திருந்தார் செல்வகுமார். அதை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் திறக்க பல சின்ன சின்ன கவர்கள் இருந்தது. 

அதில் தனது சொத்துக்கள் ஒவ்வொன்றையும் தன் இறப்பிற்குப் பிறகு மகனுக்கு சேர வேண்டும் என்று எழுதி பதிவு செய்து வைத்திருந்தார்.

ஒவ்வொரு கவராக எடுக்க ஒரு கவரில் ஒரு கடிதம் இருந்தது. அதை எடுத்து பிரித்தான்.


" அன்புள்ள மகன் விக்ரமுக்கு அப்பாவின் ஐ லவ் யூவும் அன்பு முத்தங்களும்..." என்ற வரியை படித்தவுடன் அந்த கடிதத்தை அப்படியே போட்டுவிட்டு கைகளால் முகத்தை மூடி "அப்பா..." என்று கத்திக்கொண்டே அமர்ந்தான். அந்த அழுகை அங்கு நிலவிய அமைதியை குலைத்தது.


சக்திவேல் அந்த கடிதத்தை எடுத்து பார்த்தார். "விக்ரம் இந்த கடிதத்தை எல்லோரும் கேட்கும்படி சத்தமா படிக்கனும். அப்பா சொல்றேன். காரணம் கடைசில உனக்கே புரியும்" என அடுத்ததாக எழுதி இருந்தது.


"எல்லாரும் இங்க வாங்க. இந்த லெட்டர எல்லாரும் கேக்குற மாதிரி சத்தமா படிக்க சொல்லி எழுதி வச்சிருக்காரு. நான் இந்த லெட்டரை படிக்கிறேன். கேளுங்க " என்றார் எஸ்ஐ  சக்திவேல்.


"அன்புள்ள மகன் விக்ரமுக்கு அப்பாவின் ஐ லவ் யூவும் அன்பு முத்தங்களும்...


விக்ரம் இந்த கடிதத்தை எல்லோரும் கேட்கும்படி சத்தமா படிக்கனும். அப்பா சொல்றேன். காரணம் கடைசில உனக்கே புரியும். 

உன்னால படிக்க முடிஞ்சா படி. இல்லன்னா வேற யாராவது படிக்கச் சொல்லிடு. ஆனா இந்த லெட்டர் படிக்காம என்னோட உடம்ப எடுத்துவிடாதே.

முதல்ல நீ அப்பாவ மன்னிக்கணும். ஏன்னா நான் உனக்கு பண்ண துரோகம் இது. நம்ம அப்பா நம்மள விட்டுட்டு இப்படி செத்துப் போவார்னு நீ கனவுல கூட நினைச்சு இருக்கமாட்ட. உன்ன இப்படி தனியா விட்டுட்டு போறதுக்கு கஷ்டமா தான் இருக்கு. ஆனா எப்படியும் ஒரு நாள் நான் சாக தானே போறேன். அதான் இப்ப கிளம்பிட்டேன். 


விக்ரம் நான் தற்கொலை பண்ணிக்கனும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டேன். எப்ப இருந்துனா உன்னோட 13 வயசுல இருந்து. என்னைக்கு உங்க அம்மா என்னை விட்டு போனாலோ அன்னைக்கு சாகணும்னு நினைச்சேன். ஆனா நானும் போய்ட்டா நீ என்ன செய்வ. உங்க அம்மா இறந்தது விதி. அன்னைக்கு நான் தற்கொலை பண்ணி இருந்தா நீயும் என்னை வெறுத்திருப்ப. ரொம்ப கஷ்டப்பட்டு போயிருப்ப. அதனால தான் அப்பா சொல்லுவேன் உனக்காக தான் உசுரு வாழ்றேன்னு. 

நான் உன்கிட்ட உன் அம்மாவ பத்தி பேசினதே கிடையாது. நீயும் அம்மாவ கேட்டது கிடையாது. எங்கே அம்மாவ பத்தி பேசி உனக்கு ஏக்கம் வந்திருவோம்னு பயந்தே பேச மறுத்துட்டேன். 

ஆனா அவளை பத்தி நினைக்காத நாள் கிடையாது. அவள நினைச்சு கண்ணீர் சிந்திக்காத நாள் கிடையாது. இன்னைக்கு நீ எப்படி என்னை இழந்துட்டு அழுகிறயோ அதே மாதிரி தான் தினமும் அழுதுகிட்டு வாழ்ந்தேன்.


என்னோட உசுரு உங்க அம்மா தமிழ்செல்வி. உங்க அம்மாவ நான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வரும்போது எங்களுக்கு காதல்னா என்னன்னு தெரியாது. கல்யாணம்னா நம்ம உடல் சுகத்திற்கும் புள்ள பெத்துக்கறதுக்கும் வீட்டு வேலை செய்யறதுக்கும் தான்னு நினைச்சுட்டு இருந்த காலம். 

கல்யாணமான கொஞ்ச நாள் கழிச்சு ஒரு நாள் நைட் எனக்கும் உங்க அம்மாவுக்கும் சரியான சண்டை. அன்னைக்கு உங்க அம்மாவை ஓங்கி அடிச்சிட்டேன். ஆம்பள திமிரு. உன் அப்பன் வீட்டுக்கு கிளம்பு அப்படின்னு சொன்னேன். 


"என் அப்பா வீட்டிலிருந்து நான் எப்படி வந்தனோ அதே மாதிரி கன்னிப்பொண்ணா என்னை திருப்பி அனுப்புங்க நான் போறேன்" அப்படின்னு சொன்னா. நான் ஆடிப் போயிட்டேன். அவ்வளவு போல்டு என் தமிழ்செல்வி.

அதுக்கு அப்புறம் ரெண்டு நாள் நான் பேசவே இல்லை. சமைச்சு வச்சா திங்க மாட்டேன். அவ மூஞ்சிய பாத்தாலே திரும்பி போயிடுவேன். அன்னைக்கு காலையில எழுப்பினா. கண்ணு முழிக்கும்போது உன் அம்மா பக்கத்துல நின்னுட்டு இருந்தா. அவ்வளவு அழகா இருந்த அன்னைக்கு. நான் அவள பாத்துட்டு இருக்குறத பாத்து என் காது பக்கத்துல வந்து ஐ லவ் யூ அப்படின்னு சொல்லிட்டு நெத்தில ஒரு முத்தம் கொடுத்தா. அதுக்கு அப்புறம் அவ மேல இருந்த மொத்த கோபமும் போயிருச்சு.

அவ என் மேல வச்சு அன்பு அவள எப்பவும் மிஸ் பண்ணிடவே கூடாதுன்னு நினைக்க வச்சுது. அதுக்கப்புறம் உன் அம்மா இல்லாம எங்கேயும் நான் போகவே மாட்டேன். வாழ்க்கையில கஷ்டம் வரத்தான் செய்யும். மேல இருக்கிறவங்க கீழ போவாங்க. அப்படி நான் போனப்ப எல்லாம்  செல்வி தான் என்னோட ஒரே ஆறுதல்.


எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவ மடியில் படுத்துட்டு அவகிட்ட சொல்லுவேன். சில தடவை சொல்லவும் முடியாது. ஆனா அவ புரிஞ்சுக்குவா. அவ தந்த அந்த முத்தமும் ஐ லவ் யூவும் என்ன ஓட வெச்சது. அதுக்கப்புறம் நீ பொறந்த. உன் அம்மா எனக்கு மட்டும் தந்த அந்த முத்தத்துல நீயும் பங்கு கேட்ட" என்று சொல்லிவிட்டு சக்திவேல் விக்ரமை பார்த்தார். அவன் எதுவும் பேச முடியாமல் கண்ணீர் மட்டும் பதிலாக கொடுத்துக் கொண்டிருந்தான்.

சக்திவேல் மேலும் படிக்க ஆரம்பித்தார்.

"நாங்க ரெண்டு பேரும் சிரிச்சுகிட்டே உனக்கு முத்தம் கொடுப்போம். நல்லா போயிட்டு இருந்த வாழ்க்கையில புயல் அடிச்ச மாதிரி அந்த நாள் என்னுடைய வாழ்க்கையை மாத்திடுச்சு.

தினமும் உங்க அம்மா எனக்கும் நான் அவளுக்கும் ஐ லவ் யூ சொல்லிட்டு நெத்தில முத்தம் கொடுத்துட்டு தூங்குறது வழக்கம். அன்னைக்கு முதல் நாள் நைட்டும் அப்படித்தான் போச்சு. அந்த நாள் தான் நான் கடைசியா சந்தோஷமா இருந்த நாள்.


என்னோட வாழ்க்கையில நான் அந்த மாதிரி என்னைக்கும் அழுததே இல்ல. எவ்வளவு கஷ்டம் வந்தப்ப கூட நான் சாக நினைக்கல. ஆனா அன்னைக்கு அவ கூடவே செத்துப் போயிடனுமுனு தோணுச்சு. ஆனா நான் சாகாம இருக்க ஒரே காரணம் நீ மட்டும் தான்" 


"அப்பா....." விக்ரம் சத்தம் சக்திவேலை ஒரு நிமிடம் அமைதி ஆக்கியது. 


"விக்ரம் நீ அப்போ அம்மா அம்மான்னு அழுத. உனக்கு ஆறுதல் சொல்றதா இல்ல நான் அழற தானே தெரியல. என்னோட செல்விய கட்ட மேல அப்படியே படுக்க வச்சிருந்தாங்க. என் ஈரக் குலையே நடுங்கிருச்சு. ஆனா அந்த நிமிஷம் மாறாது. அவளை கட்டி புடிச்சிட்டு அழுதேன். அந்த இடத்துல நான் அவளுக்கு கடைசியா ஒரு ஐ லவ் யூவும் முத்தமும் கொடுத்தேன். அதுக்கப்புறம் என்னால கொடுக்க முடியாம போயிடுச்சு. 


அப்பதான் புரிஞ்சுகிட்டேன். ஒரு ஐ லவ் யூ ஒரு மனிதனை எந்த அளவுக்கு சந்தோஷமா வாழ வைக்கிறது அதே அளவுக்கு அழ வைக்கவும் செய்யும்.

அதனால் தான் உன் மனசு கஷ்டத்தில் இருக்கும் போது மட்டும் நான் உன்னை அணைத்து ஆறுதல் சொல்லி முத்தம் கொடுத்து ஐ லவ் யூ சொல்வேன். ரொம்ப தேங்க்ஸ்னு சொல்லுவ. இப்ப ஆறுதல் சொல்ல நான் இருக்க மாட்டேன் என்பது கஷ்டமாக தான் இருக்கிறது.

என்னோட உலகம் நீ மட்டும் தான். உன்ன நல்லா படிக்க வச்சு, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுத்துட்டேன். 


ஆனா நான் நரகத்தில் தான் வாழ்ந்தேன் விக்ரம். உன் அம்மா இல்லாத இரவுகளை என்னால கடக்கவே முடியல. நான் அழுதா நீ உடைஞ்சு போய்டுவ. அதுக்காக நீ தூங்குன  அப்புறம் சத்தம் வராமல் வாயை பொத்திகிட்டு அழுகிற வாழ்க்கை ரொம்ப கொடுமைடா.  ஒரு ஆம்பள அழக்கூடாதுன்னு சொல்லுவாங்க. அவனும் மனுஷன் தானே. வலிக்கும்ல. 

எனக்கு தனிமை தேவைப்பட்டுச்சு. அதனாலதான் உன்னை சென்னைக்கு அனுப்பி வெச்சேன். நீ அடிக்கடி கேட்பயே, "ஏன்பா இன்னமும் அம்மாவோட புடவை எல்லாம் வீட்ல வச்சு இருக்கீங்க. தூக்கி போட்டுடலாம்லனு". எப்பவும் நான் உன் அம்மாவோட சேலையை கட்டிப்பிடிச்சிட்டு போத்திகிட்டு தான் தூங்குவேன். அதுல அப்படி ஒரு ஆறுதல் கிடைக்கும். அவ என் கூடவே இருக்க மாதிரி இருக்கும்.

அதனாலதான் நீ மருமகளுக்கு அவ சேலை எடுத்து தரும்போது சண்டை போட்டேன். அவ மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு தான் அவகிட்ட உண்மையை சொல்லிட்டேன். உனக்கு தெரிய கூடாதுன்னு சொல்லி இருந்தேன்.


அது உனக்கு சொன்னா புரியாது. அத புரிஞ்சுக்க கூடிய வயசும் அனுபவமும் உனக்கு வரல. இந்த வீட்லதான் நானும் அவளும் வாழ்ந்தோம். இந்த செவரு கூட நான் பேசுவேன். அந்த மரத்தோட நான் பேசுவேன். இங்க இருக்கிற ஒவ்வொரு பொருளும் எனக்கு அவளை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கும். அவ கூட வாழ்ந்துட்டே இருக்குற மாதிரி தோணும். 

ஆனா பகல்ல இருக்கிற அந்த காதல் அந்த சுகம் நைட் இருக்காது. அப்ப வலி மட்டும் தான் இருக்கும். கண்ணீர் இத்தனை வருஷம் ஆகியும் குறையல. எனக்கு சாகலாம்னு தோணும்போதெல்லாம் நீ என்ன பண்ணுவ அப்படிங்கிற பயம் மட்டும் தான் இருந்துச்சு.

ஆனா இப்ப நான் சந்தோஷமா சாகப் போறேன். உன்ன நீ தனியா பாத்துக்குற அளவுக்கு வந்துட்ட. அப்பா இல்லாமல் பிரச்சனைகளை தனியா முயற்சி பண்ணி முடிக்கணும்னு முடிவுக்கு வந்துட்ட. இனி அப்பா உனக்கு பாசத்துக்கு தவிர வேற எதுவும் தேவைப்பட மாட்டேன். அந்த தைரியம் தான் என்ன தற்கொலை பண்ணிக்க சொல்லுச்சு. 

அப்பா மேல கோவப்படாதே. இது பல வருச ஏக்கம். அதுவும் இல்லாம அப்பாவுக்கு வயசு ஆகுது இல்ல. பேரனை நல்லா பாத்துக்க.


எப்பவும் பொண்டாட்டி கூட சண்டை போடாத. போட்டாலும் சமாதானமாக உனக்கு அப்பா பலமுறை வழி சொல்லி இருக்கேன். அது எப்பவும் பிடிச்சுக்க. 

அப்பாவுக்காக ஒரே ஒரு விசயம் பண்ணுடா. அப்பாவை இந்த தோட்டத்துல புதைச்சுடு. அப்போ அம்மாவோட சேலையும் சேர்த்து புதைச்சிடுங்க. மக்கி போக போற இந்த உடம்போட கொஞ்ச நாள் அது கூட வாழ்ந்துட்டு போகட்டும். 


அப்பா எப்பவும் உன் கூடத்தான் இருப்பேன். ஐ லவ் யூ இப்படிக்கு உன் அப்பா" என்று சக்திவேல் வாசித்து முடித்தவுடன் வேகமாக உள்ளே சென்று அவரை அணைத்துக் கொண்டு "அப்பா..." என்று கதறி அழுதான்.


"என்ன மன்னிச்சிடுங்கப்பா. நீங்க அம்மா மேல வச்சிருக்கிற காதல தெரிஞ்சுக்காம போயிட்டேன்பா... ஆனா என்ன இப்படி விட்டுட்டு போயிட்டீங்களே. எனக்கு கெட்ட பேரு வந்துர கூடாதுன்னு இப்படி லெட்டர் எழுதுன உங்கள புரிஞ்சுக்காம போயிட்டேன் பா..." அடுத்த ஒரு மணி நேரம் அவன் அழுகை சத்தம் தவிர வேறு எதுவும் எதுவும் அங்கு கேட்கவில்லை. 


சக்திவேல் அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். 
சில நிமிடங்களில் செல்வகுமார் உடலை புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் ஆசைப்படி அனைத்தும் நிறைவேறியது. 
உறவினர்களும் சுற்றத்தார்களும் செல்வகுமாரின் இருப்பின் ரகசியம் தெரிந்து கொண்ட பின்னர் விக்ரமின் யாரும் குறை சொல்லவில்லை. அதைத்தான் அவரும் எதிர்பார்த்தார். பதினாறாம் நாள் காரியத்திற்கு அவரின் புகைப்படம் ஒன்றை பிரேம் போடச் சொல்லி கொடுத்தான் விக்ரம். 


அதை பிரேம் போட்டுக் கொண்டு வந்த பின்னர் பார்த்த விக்ரமின் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடியது. 

காரணம் புரியாமல் சத்யா அதை கையில் வாங்கி பார்க்க, "ஐ லவ் யூ வும் அன்பு முத்தங்களும்" என்று எழுதி இருந்தது. 


அந்த வார்த்தை அவன் வாழ்வோடு இணைந்து விட்டது. 

              - சேதுபதி விசுவநாதன் 


(உங்கள் பின்னூட்டங்களை yaazhistories@gmail.com என்பதிலும் 

4 கருத்துகள்
  • தீபாஸ் 06-Dec-2024

    கதை நல்லா இருக்குது சேது சார்.

  • manikandan.k.p.ias@gmail.com 06-Dec-2024

    தலைவா வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை..நிஜத்தை அப்படியே படம் பிடித்து உள்ளீர்கள்

  • manikandan.k.p.ias@gmail.com 06-Dec-2024

    தலைவா வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை..நிஜத்தை அப்படியே படம் பிடித்து உள்ளீர்கள்

  • வெற்றி வேந்தன் 06-Dec-2024

    மிக அருமையான கதை. 

ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!