தொடர் : 41
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? என்பார்கள், ஆனால் மயூரா தேவிக்கு மகளிடம் பேச நிறைய இருந்தது. தாயும், தகப்பனும் அவரைத் தாங்கள் ஓய்வெடுக்கும் அறையில் அமர்த்திப் பேசிக் கொண்டிருந்தனர். ராகினி தனது வாழ்வின் முக்கியத் தருணங்களைப் பகிர்ந்து கொண்டார்
ஹேமந்த் சாப்பிட்டவுடன் தன் ஹவேலிக்கு கிளம்பினார். அவருடன் மற்ற நண்பர் கூட்டமும் கிளம்ப, சிவகுருவும் ராகினியின் முகத்தைப் பார்த்தார்.
ராகினி, "இதோ சொல்லிட்டு வர்றேன்.” என்றவர் தன் சகோதரர்களிடம் விடை பெற வந்தார். "அதெல்லாம் முடியாது தீதீஷா, இங்க நம்ம ஹவேலி இருக்கும் போது எப்படி வெளியே தங்குவீர்கள்?" எனக் கோபப்பட்டனர்.
"லக்ஜேஜ் எல்லாம் அங்க இருக்கிறது அம்மு, சாய்ந்திரம் ஃபங்சனுக்கு ரெடியாகனும்." எனச் சமாதானம் செய்தார் ராகினி.
ரகுவீர் அங்கே வந்தவன், "புவாஷா இப்ப அந்த ஹோட்டல் போங்க, ரெடி ஆகிட்டு செகாவத் ஹவேலி வந்துடுங்க. நீங்க கிளம்பும் போதே லக்கேஜ் பேக் பண்ணிடுங்க, எல்லாருக்கும் நம்ம ஹவேலில ரூம் அரேன்ஞ் பண்ணிடுறேன் பூஃபாஷா கிட்ட பேசிட்டேன்." என்றான்.
"சரிங்க வீரூஜீ உங்கள் கட்டளை எங்கள் பாக்கியம்." என்றார் ராகினி. அவர் தன் தாயிடம் விடை பெறச் சென்றார். ஜானகி, அமிர்தா ஒரு பெட்டியுடன் கிளம்பினர். ரகுவீர் அதிர்ந்தவனாக," ஹேய், மிர்ச்சி என் சிஷ்டரைக் கூட்டிக் கிட்டு நீ எங்கப் போற?" என வினவினான்.
"அம்மா அப்பாகூட இருந்து ரொம்ப நாள் ஆச்சு, அதுவும் இல்லாமல், அப்பா இங்க இருக்கும் போது உங்கள் கூடத் தங்குனா நல்லா இருக்காது, அதுதான். நான் வந்த காரணம் முடிந்தது, சோ பேக் டூ சிறுமலை." என்றாள் ஜானகி.
" நான் உனக்குப் போகப் பர்மிஷனே கொடுக்கலையே, அங்க ஹோட்டல் ரூம்ல எப்படி ரெடியாவ? புவாஷாவுக்கு அன்கம்ஃபர்டபிளா இருக்கும். அப்பறம் என்ன சொன்ன வந்த வேலை எங்க முடிஞ்சது, நீ வந்தது ப்ராஜெக்ட் பண்ண ஒரு மாதம்தான் முடிஞ்சிருக்கு, இப்ப எல்லாம் அனுப்ப முடியாது, உள்ளப் போ." என மிரட்டினான் ரகுவீர். இவர்கள் சண்டையைப் பார்த்த அமிர்தா தன் மாமாவை நோக்கிச் சென்றாள்.
"இந்த மிரட்டுற வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம். நீங்க யாரு என்னை தடுக்கிறதுக்கு, நாங்களெல்லாம் எங்கப் பேச்சை நாங்களே கேட்காத ஆளுங்க, உங்கள் பேச்சைக் கேட்டுடுவோமா?" என்றாள் ஜானகி.
"உன் பேச்சை, நீயே கேட்டிருந்தாலும் எல்லாம் புரிஞ்சிருக்கும். அங்க தான் மேல் மாடி காலி ஆச்சே." என்றான் ரகுவீர். ஜானகி முறைத்து நின்றாள்.
அங்கு வந்த ராஜ்வீர், "ஜானி, மயூ உன்னைக் கூப்பிடுறா, தீம் ட்ரெஸ், பார்லர்னு என்னமோ சொன்னாள் போய்க் கேட்டுக்கோ." என்றான். அவள் அப்போதும் அசையாமல் இருந்தாள்.
அமுதன் அவர்களின் அருகில் வந்தவன் "ஜானும்மா, ஸ்வர்ணி உன்னைய வரச் சொல்றா." என அடுத்தத் தூதாக வந்து சேர்ந்தான்.
"நானும் அதைத் தான் சொன்னேன். வந்த வேலை முடிஞ்சதாம், ஒரு ஹெலிகாப்டர் வச்சு, சிறுமலையில் இறக்குங்கள் அவளை!" எனக் கோபமாகச் சொன்னான் ரகுவீர். அவன் கோபம் அவளைத் தாக்கியது.
"அண்ணா எனக்கு இன்றைக்கு நைட் டிக்கெட் போடு, நான் ஊருக்குப் போறேன், தெய்வாம்மாக்கிட்ட இருந்துக்கிறேன். மாதாஜீ, அப்பாஜான், நீ அமித்து எல்லாம் இருந்துட்டு வாங்க." என்றாள் கோபமாக.
"அதெப்படி, ப்ராஜெக்ட் ட்ரைனியா வந்தவ, பாதியில் விட்டுட்டு போவாள், நான் சர்டிவிகேட் எல்லாம் தர மாட்டேன்." ரகுவீர் கோபம் கொண்டான்
"இவர் சர்டிஃபிகேட்டை இவரையே வச்சுக்கச் சொல்லு, எனக்கு ஒன்னும் சர்டிஃபிகேட்டும் வேணாம், எம்பிஏ வும் வேணாம். நான் சிறுமலைக்குப் போறேன்." ஜானகியும் முறுக்க, "ஜானு பொறுமையாகப் பேசு." அண்ணனாக அமுதன் அடக்கினான்.
"அமுதன், அவளை டிக்கெட் போட்டு அனுப்பிச்சு விடுங்க. ஒரு வேலை செய்ய வந்தால், அதை முடிக்கனும்னு கமிட்மெண்ட் இருக்கனும். அது இல்லாதவளை எதுக்கு எம்பிஏ சேர்த்து விட்டு, டைம் அண்ட் மணியை வேஸ்ட் பண்றீங்க." என ரகுவீர் எரிச்சலைக் காட்ட,
"பையா, ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா பேசுங்க, ஜானி புரிஞ்சுப்பா." என ராஜ், அத்தை மகளுக்கு வக்காலத்து வாங்கினான்.
"நீ சொன்னீயேன்னு தான், ட்ரைனீயா சேர்த்தேன் த்ரீ மந்த்ஸ் அக்ரிமெண்ட் முடிய வேணாமா? எவ்வளவு பேர் கேரியர் செட்டில் ஆகனும்னு நம்ம கம்பெனியில் சேர காத்திருக்காங்க. இதுக்குத் தான் பணக்காரப் பொண்ணுங்க செல்லுலாய்ட் பேபீஸ் இதுகளையெல்லாம் வேலைக்கே எடுக்கக் கூடாது. நீயே டீல் பண்ணிக்க." என்ற ரகுவீர், அங்கிருந்து சென்று விட. "பார்த்தியா ராஜ் உன் பையாக்கு எப்படிக் கோபம் வருது. இவர் தான் ராத்தோட்ஸ் க்ரூப்பையே தாங்குகிறதா நினைப்பு, நீ என்னை ரிலீவ் பண்ணு நான் போறேன்." என ஜானகியும் பிடிவாதம் பிடித்தாள் .
"நீ எதுக்கு இப்போ, இவ்வளவு சீன் கிரியேட் பண்ற?" என ராஜ் கேட்கவும்,
"மெஹந்திக்கு முன்னாடி, சிருஷ்டி வீட்டிலிருந்து, உன் பையாவுக்குச் சம்பந்தம் பேசறதுக்கு வர்றாங்க . அந்த நேரம் என்னால் இங்க இருக்க முடியாது.” என அவனிடம் தனித்துச் சொன்னவளா, “ அமுதா வா போகலாம்." என அண்ணனை அழைத்தாள், ராஜ் அவள் மனநிலை அறிந்து மௌனமானான்.
"ஜானி, சாய்ந்திரம் மெஹந்திக்கு முன்னால் மயூரியை, அமுதன் அத்தானுக்குப் பெண் கேட்கலாமென்று மாமா பேசுறாங்க. இப்ப என்னடி செய்யறது?" என, மாமனை பார்த்து வந்த அமிர்தா, மெதுவாகக் கேட்டாள்.
"அமித்து, நாம ரெடியாகிட்டு நேரே மஞ்சரி வீட்டுக்கு போயிடலாம்டி." என்றாள் ஜானகி. அமுதன் இவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். "ஜானும்மா, இப்ப உனக்கு எனடா பிரச்சினை, என்கிட்ட சொல்லு." என்றான் அமுதன்.
"என்னைய லேக் ஹோட்டல் கூட்டிட்டுப் போ. எனக்கு இந்த ஷாதி அட்டண்ட் பண்றதுல எல்லாம் இஷ்டம் இல்லை." என்றாள் ஜானகி. "சரி வா, அமிர்தா நீ அவளைக் கூட்டிட்டுப் பார்க்கிங் போ, நான் பேசிட்டு வர்றேன்." என்றவன் எல்லாரும் இருக்கும் இடம் வந்தான்.
"அம்மா, ஜானகிக்கு ஏதோ வாங்கனுமாம், நான் முன்னாடி கூட்டிட்டுப் போறேன். நீங்க வாங்க." என மற்றவர் பேசும் முன் வெளியே வர , ஶ்ரீநிதி, நானும் வருகிறேன் எனத் தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு இவர்களுடன் சேர்ந்துக் கொண்டாள்.
ராகினி தன் சகோதரர்களிடம், "நான் செகாவத் வீட்டுக்குப் போகும் முன், உங்ககிட்ட முக்கியமான விசயம் பேசவேண்டும். சாயந்தரம் வர்றேன்." எனப் பூடகமாகச் சொல்லி விட்டுக் கிளம்பினார்.
ரகுவீருக்கு தான் மனசே ஆறவில்லை, தான் இத்தனை சொல்லியும் ஜானகி போய் விட்டாளே எனக் கோபமாக இருந்தான். அமுதன், ஜானகியை அழைத்துக் கொண்டு ஹோட்டல் அறைக்கு வந்தவன், தனது அறையைத் திறந்து ஜானகிக்குக் கொடுத்தான். இதற்குத் தானே அண்ணன் வேண்டும் என்பது.
அமிர்தா அண்ணன், தங்கைக்குத் தனிமை கொடுத்து ஶ்ரீநிதியுடன் அவள் அறைக்குச் சென்றாள். அவளருகில் அமர்ந்தவன் அவளின் தலையை வருடி, "ஜானும்மா, என்னடா, உன்னால் தான் அம்மா, இன்னைக்குப் பிறந்த வீட்டோடு சேர்ந்து இருக்காங்க, நான் நான்கு வருஷமா செய்ய முடியாததை, நீ நான்கு வாரத்தில் சாதிச்சிட்ட. உனக்கு என்னடா பிரச்சனை?" எனக் கேட்டான்.
ஜானகி பதில் பேசவில்லை, அப்படியே உட்கார்ந்து இருந்தாள். "சரி, அடுத்து என்ன செய்யலாம், அதைச் சொல்லு?" என வேறு ரூட்டைப் பிடித்தான்.
"அமுதா, நாம நினைச்ச மாதிரி அம்மாவைச் சேர்த்து வச்சிட்டோம், என்னால் உங்கள் எல்லாத்தையும் விட்டுட்டு இங்க இருக்க முடியலை, ரொம்ப ஏக்கமா இருக்கு. இந்த ப்ராஜெட் ஶ்ரீராம் வீட்டு மில்லில் செஞ்சுக்கிறேன். அங்க மாற்றிக் கொடு." எனத் தனது மனதில் உள்ளதை மறைத்து செண்டிமெண்ட்டில் தாக்கினாள் .
"இதுதான் காரணமா, ஜானும்மா என்கிட்ட வேறெதையோ மறைக்கிறது மாதிரி தோணுது." என்ற அண்ணனிடம்,
"இங்க இவங்க பிஸ்னஸ்ல போட்டி ரொம்ப இருக்கு, ஆபத்தும் தான், அந்த ஒரு டீல்க்கே இடுப்பில் குத்துனாங்க. இரண்டு நாள் முன்னாடி ஒரு ஹேக்கிங் ட்ரை பண்ணாங்க. ஶ்ரீராம் சொன்னதால் தப்பித்தது ராத்தோட் க்ரூப். ஐயோ, ஶ்ரீராம்க்கு கால் பண்ணவே மறந்துட்டேன். அந்த ராக்கேஷ் ஒன்னும் செய்திருக்கக் கூடாது." என்ற வேண்டுதலுடன் அவன் போனுக்கு ட்ரை செய்யா, நாட் ரீச்சபில் என வந்தது.
ஜானகிக்குப் பதட்டமானது. "அண்ணா நீ ட்ரை பண்ணு." என்றாள் ஜானகி. அமுதனுக்கும் அதே பதில் வந்தது. "அவர்கள் வீட்டுக்கு போன் போட்டுக் கேளு!" என ஜானகி பரபரத்தாள்.
"ஏய் திடீரெனக் கேட்டா பயந்துருவாங்கடி நான் விசாரிச்சுச் சொல்கிறேன்." என்றான். பின்னர் இதற்காகத் தன்னையே நொந்து கொள்வோம் எனத் தெரியாமல் அசட்டையாக விட்டான்.
ராகினி சிவகுரு மற்றும் நண்பர்குழு, ஹோட்டல் வந்து சேர்ந்தது. ஜானகிதான் பெற்றோர் ரூமிற்குச் சென்றாள். அவர்கள் ஓய்வெடுக்கக் கட்டிலின் இரண்டு புறமும் படுத்திருக்க, "உங்கள் ரொமான்ஸ் டையத்தில் நான் வரலாமா?" எனக் கேட்டாள்.
"உள்ள வந்துட்டு, என்னடி வரலாமான்னு கேள்வி? வாங்க மகாராணி." என்றார் ராகினி. அவர்களுக்கு நடுவில் சென்று சிறு குழந்தைப் போல் அம்மாவைக் கட்டிக் கொண்டாள் ஜானகி.
அவளை அணைத்து தடவிக் கொடுத்த ராகினி, "மாதாஜீக்காகப் பெரிய வேலையெல்லாம் செய்ற பெரிய மனுசி ஆகிட்டியா நீ?" எனத் தட்டிக் கொடுத்தார்.
"ஆமாம், நீங்க தானே என்னை உங்கள் தாதிஷா மாதிரி தைரியம்னு சொல்லுவீங்க அதுதான் தாதிஷா செய்ற வேலை." எனக் கட்டிக் கொண்டாள்.
சிவகுரு அவள் முதுகையும் தலையையும் வருடிக் கொடுக்க, "அப்பாகிட்ட சொல்லாமல் வரலாமாடா உனக்கு ஏதாவது ஆனால் அப்பா என்ன பண்ணுவேன். என் உயிரே உன் கிட்டத் தானே இருக்கு." என்றார்.
அம்மாவிடம் இருந்து, அப்பாவின் மார்பில் சாய்ந்தவள், "நீங்க சொன்னா விட மாட்டிங்களே, அதுதான் மாமாக்களுக்குச் சொல்லிட்டு வந்தேன். அப்படியும் பல்லா மாமா மும்பைக்கே வந்துட்டாரே!" எனச் சொன்னவள், இங்கும் ஓர் பிட்டைப் போட்டு வைத்தாள்.
ஜானகிக்கு, ரகுவீரின் திருமணத்தைப் பார்க்கும் மனவுறுதி இல்லை. இப்போது தான் சேர்ந்திருக்கும் குடும்பம் தன்னால் பிரிய வேண்டாம் என முடிவு செய்தவள், "அப்பா ஜான், நானும் உங்கள் கூடவே வந்துடுறேன். என்னையும் சிறுமலைக்குக் கூட்டிட்டுப் போங்க. ஐ மிஸ் யூ, மாதாஜீக்காகத் தான் இவ்வளவு தூரம் வந்தேன்." எனக் கொஞ்சினாள்.
ராகினி, மீனாட்சி அம்மன் கோவில் குறி சொன்ன பெண்மணி ஞாபகம் வந்து, "ஸுனியேஜீ, இன்றைக்குத் தான் உருப்படியா பேசி இருக்கா, இவளுக்கும் அமிர்தாவுக்கும் சேர்த்து டிக்கெட் போடுங்க." என்றார்.
"மாதாஜீ, உங்க வீரூ கிட்ட சொல்லுங்க. பாதியில் விட்டுட்டு போறேன்னு திட்றார்." என்றாள் ஜானகி. கொஞ்சம் நேரம் ஓய்வுக்குப் பின், பெரியவர்கள் சீக்கிரம் கிளம்பினர்.
ஜானகி, அமிர்தா, ஶ்ரீநிதி மூவரும், யாருக்கு வந்த விருந்தோ எனக் கிளம்பினர். "ஒரே மாதிரி, ட்ரெஸ் அனுப்பி இருக்கா மயூரி பார்த்தியா, இதற்குத் தான் கூப்பிட்டாளோ?" எனக் கேட்டாள் அமிர்தா.
"போடி அவளுக்குச் சைட் அடிக்க, அவளைச் சைட் அடிக்கவும் ஆள் இருக்கு, அலங்காரம் பண்ணிக்குவா, நமக்கென்ன வேண்டி கிடக்கு, இல்லடி ஶ்ரீ?" எனக் கேட்டாள் ஜானகி.
"ஆமாம்டி அமித்து, சும்மா ஒரு டச்அப் போதும், என்ன ஜானி, கரெக்ட் தானே!" எனக் கேட்டாள் ஶ்ரீ. அந்த நேரம் , ரூம்காலிங் பெல் அடித்தது ஜெய் வந்து நின்றான், "என்ன மச்சான்." என்றாள் ஜானகி.
"சத்தம் கம்மியா பேசுடி, பக்கத்தில் என் பொண்டாட்டி இருக்கா.” என்றவன் “அமித்து, கொஞ்சம் வாடா பாபி கூப்பிடுறா!" என்றான்.போகும் போது, "ஏய் அமித் வரான்டி நைட் வந்து சேருவான்." என நல்ல செய்தி சொல்லிவிட்டுச் சென்றான்.
ஶ்ரீ வேகமாக, குளியலறை சென்று, பளிச்சென்று வந்தாள். இது போடவா, அது ஃபிட் ஆகுமா? என ஜானியுடன் எந்த ட்ரெஸ் போடுவது என டிஸ்கஸனில் ஈடுபட்டாள். ஜானகி, ஶ்ரீயைப் பார்த்துக் கொண்டே இருந்தவள், "ஏண்டி, இதுதான் பைலட் மேஜிக்கா?" எனக் கிண்டல் செய்தாள்.
பின்னர் அவளுக்கு ஏற்ற உடையைத் தேர்ந்தெடுத்து, அவளைத் தேவதைப் போல் அலங்கரித்தாள். தன் தோற்றத்தைக் கண்ணாடியில் பார்த்தவள், தானே வியந்து நின்றாள் ஶ்ரீநிதி. பின்னர், நேரத்தைக் கடத்தி ஒரு மணிநேரத்தில் கிளம்பினாள் ஜானகி.
ராத்தோட் ஹவேலிக்கு, கையில் பரிசுகளுடன் மயூரிக்கு வைர நகை எடுத்துக் கொண்டு, சிவகுரு-ராகினி தம்பதி, அமுதனை அழைத்துக் கொண்டு, பல்லாஜீ, பாண்டே சாப், ரெட்டிகாரு தம்பதியுடன் சென்றனர்.
ராத்தோட்களும் கிளம்பி தயாராக இருந்தனர். வந்தவர்களை வரவேற்று உபசரித்தனர். ஆண்கள் செர்வானியில் தயாராக நிற்க பெண்கள் இராஜஸ்தானி ஸ்டைலில் நின்றனர். வீர் ப்ரதர்ஸ் இவர்களை வரவேற்று அமர வைத்தனர்.
சந்திரசேகர ரெட்டி தான் ஆரம்பித்தார், "எல்லாருக்கும் நமஸ்காரம், நான் சிவா சார்பாக உங்கள் கிட்ட பேசுகிறேன். பல வருஷம் கழித்து ராகினி தங்கையா, அவர்கள் பிறந்த வீட்டோடு சேர்ந்து இருக்காங்க. அதில் நமக்கு ரொம்பச் சந்தோஷம். இதை இன்னும் தொடரனும்னு ஆசை. உங்கள் எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும், அமரேந்தர் மகள் மயூரி, சிவகுரு வீட்டில் தான் தங்கி இருந்தது. நாங்கள் சிவகுரு-ராகினி மகன் சிவகுக அமுதனுக்கு, உங்கள் மகள் ஸ்வர்ண மயூரியைப் பெண் கேட்டு வந்திருக்கிறோம்." என்றார்.
தாதாஷா, தாதிஷாவுக்கு ஆனந்த அதிர்ச்சி அமரேந்தர், பூனம் இதை எதிர்பார்த்தது போல் இருந்தனர். கஜேந்தர், ஸர்குனுக்கு இப்படியும் செய்யலாமோ? என இருந்தது. ரகுவீருக்கு, அமுதனைப் பார்த்தவுடன் பிடித்தது. தனது பிரதியாக இருப்பான் எனத் தோன்றியது.
ராஜேந்தர், "எங்க ராகினி, நடந்தது எல்லாம் மறந்து எங்கள் குடும்பத்தில் ரிஸ்தா வைக்கச் சம்மதித்தது சந்தோஷம். எங்கள் முடிவுக்கு முன்னாடி ஸ்வரூவின் சம்மதம் முக்கியம்." என்றார்.
பாண்டே, "நல்லா கூப்பிட்டுக் கேளுங்க, லட்கீ, லட்கியின் மாதா, பிதா, பாயீ பஹன், தாதா,தாதி எல்லாருடைய சம்மதமும் முக்கியம்." என்றார்.
பல்லாஜீ, "எங்கப் பையனை நாங்களே பெருமையாகச் சொல்லக் கூடாது, சிவில் இன்ஜினியர், எம்பிஏ. அப்பா தொழிலைப் பார்க்கிறான். வீடு, எஸ்டேட், தோட்டம், ரிசார்ட், ஸ்கூல்னு எல்லாம் இருக்கு. எல்லாத்தூக்கும் மேல அவங்க அப்பாவை மாதிரி தங்கமானவன்." என்றார் .
"அது எங்கள் தீதீஷா முகத்தை வைத்தே தெரிஞ்சுக்கிட்டோம்." என்றார் கஜேன். "அம்மு உன் மகளை, என் வீட்டு மருமகளா கொடு. என் மகளா பார்த்துக்குவேன். நான் அனுபவிக்க விட்டுப் போனதும் அவளுக்குக் கிடைக்கட்டும். " எனக் கேட்டார் ராகினி.
ராகினி அருகில் வந்து அவர் கையைப் பிடித்துக் கொண்ட அமரேன், "தீதீஷா, என்னையவே அப்படிப் பார்த்துகுவீங்க, என் மகள், உங்கள் வீட்டில் சந்தோஷமாக இருப்பாள். எனக்குச் சந்தேகமே இல்லை, நான் அவள் வார்த்தையில் சம்மதம் கேட்டு வருகிறேன், தப்பா எடுத்துக்காதீங்க." என்றார்.
சிவகுரு, "தாராளமாகப் போய்க் கேளுங்கள் மச்சான். எங்கள் ஜானகியை யாராவது கேட்டாலும் நானும் இதே தான் சொல்லுவேன்." என அனுப்பி வைத்தார்.
ரகுவீரும், அமரேனும் அம்மாக்கள் மூவரும் மயூரியை கேட்கச் சென்றனர். ஹரிணியின், கை வண்ணத்தில் மயூராதேவி, அழகிய ரோஜாவாகப் பிங்க, கீரின் கலந்த வண்ணத்தில் ஜொலித்தாள்.
"ஸ்வரூ பேட்டா புவாஷா கீழே உனக்கு அமுதனின் ரிஸ்தா கேட்டு வந்திருக்கிறார்கள் என்ன பதில் சொல்லட்டும்?" என அமரேன் கேட்டு முடிக்கும் முன்னே, "சரின்னு சொல்லுங்கள் பாபு, நான் அமுதனைக் காதலிக்கிறேன்." என வேகமாகச் சொன்னாள் மயூரி. சூழலை அப்போது தான் உணர்ந்து, அமரேனையே கட்டிக் கொண்டு தன் வெட்கிய முகத்தை மறைத்தாள்.
அவள் முன் நெற்றியில் முத்தமிட்டவர், கண்கள் கலங்க, "சரிடா." என்றார். பூனத்திடம் திரும்பி, "நீ என்னம்மா சொல்ற?" என்றார். "ஒரே பொண்ணு, அவள் சந்தோஷம் தான் என்னுடையது. அவள் முகத்தைப் பாருங்கள். இப்பவே புவாஷாவோட போகவும் ரெடி தான் இந்த லட்கீ!" என்றவர். கண் மை எடுத்து அவளுக்குத் திருஷ்டி பொட்டு வைத்தார்.
ரகுவீர், "சோட்டிக்கு வெட்கம் எல்லாம் வருதே!" என அணைத்துக் கொண்டான். மயூரியை அழைத்துக் கொண்டு அனைவரும் கீழிறங்கி வந்தனர். தாதாஷா தாதிஷாவுக்கு ராகினியை பார்த்தது போல் இருந்தது. அமுதனின் கண்கள் சுற்றம் மறந்து தன் இனியவளைக் கண்களால் பருகிக் கொண்டு இருந்தன.
"ஜீஜூ, வாய்க்குள்ள கொசு போகுது." என்றான் ரன்வீர். அமுதன் சூழல் அறிந்து சிரித்துக் கொண்டான்.
மயூரி, குனிந்து வந்தவள் அனைவருக்கும் வணக்கம் சொன்னாள். ராகினி தான், "மயூ,நீ என் வீட்டுப் பொண்ணு நோ மோர் ஃபார்மாலிடீஸ்." எனத் தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார்.
இருவரையும் சம்மதம் கேட்டனர் பெரியவர்கள், இருவரும் ஒருவரை ஒருவர் ஒரே நேரம் பார்த்து, கண்கள் கலந்து கவிதை பேசிய பின்னே சம்மதம் என ஒரே நேரம் சொன்னார்கள்.
எல்லாருடைய நகை ஒலியும் சேர்ந்து மங்களமாய் ஹவேலியை நிறைத்தது. ராகினி, தான் கொண்டு வந்த வைர நகையை மயூரிக்கு போட்டு திருஷ்டி கழித்தார். தாதாஷா, தாதிஷா தங்கள் பேத்தியை உச்சி முகந்தனர். அமுதன் அருகில் மயூரியை உட்கார வைத்தனர்.
ஷப்னம், ரகுவீரிடமிருந்து, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்கி, அவர்கள் இருவருக்கும் தலையைச் சுற்றி திருஷ்டி சுற்றி, வேலையாளைக் கூப்பிட்டுப் பணத்தைப் பிரித்துக் கொள்ளச் சொன்னார்.
அமுதன் நடுவில் குறுக்கிட்டு, "எனக்கு ஸ்வர்ணியை மணப்பதில் சம்மதம். ரொம்பச் சந்தோஷமும் கூட. ஆனால் ஒரு விசயம், என் தங்கை ஜானகிக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம். அவள் கல்யாணம் ஆகாமல் இருக்கும் போது எனக்கு நடந்தால் எங்கள் ஊரில் ஒரு மாதிரி பேசுவார்கள். அதனால் அவள் திருமணம் முடியவும் எண்கள் திருமணத்தை வச்சுக்கலாம்.” என்றான்.
ராத்தோட்களுக்கு அமுதன் பொறுப்பான அண்ணனாகப் பேசுவது, மிகவும் பிடித்தது. ரகுவீர் மனதில், "அந்த மிர்ச்சியை வழிக்குக் கொண்டு வருகிறது அவ்வளவு சுலபம் இல்லை." என நினைத்தான்.
அமரேன், "ஜமாயிஷா என் பாஞ்சி அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க மாட்டாள். அவளுக்கு வருகிற மாப்பிள்ளை, காளை மாட்டை அடக்கவேண்டும், இளவட்டக் கல் தூக்கவேண்டும், ரேக்ளா வண்டி ஓட்டி ஜெயிக்கனும்." என வரிசையாகச் சொன்னார். "இதெல்லாம் அவளே சொன்னாளா மாமாஷா?" எனக் கேட்டான் அமுதன
"ஆமாம்." என ராத்தோட் குடும்பமே கோரஸ் பாடியது. ராகினி, சிவகுருவிடம், “உங்கள் மகள், எப்படி எங்க வீட்டு ஆளுகளை ட்ரைன் பண்ணி இருக்கா பாருங்கள்." எனச் சொன்னார். சிவகுரு சிரித்துக் கொண்டார், ஆனாலும் மகள் மனதில் என்ன ஓடுகிறதோ, என்ற கலக்கம் வந்தது.
பல்லாஜீ, "சிவா பயந்திடாத, அவள் கண்டிசனை விடப் பெட்டர் மாப்பிள்ளை கிடைப்பார்." என ரகுவீரைப் பார்த்தார். ராத்தோட்கள் சிவகுருவிடம் மகிழ்ச்சி தெரிவித்து, கட்டியணைத்து வாழ்த்திக் கொண்டனர்.
ராகினியிடம், பூனம் தன் மகிழ்ச்சியைக் கண்ணீராக வெளிப்படுத்தினார். ஷப்னம் ராகினியிடம், "அப்படியே உன் வீரூவின் ஷாதியை முடிவு பண்ணிட்டு போ ராகினி, எத்தனை ரிஸ்தா வந்தது, ஷாதினாலே ஓடுகிறான்." என மனக்குறையை வாசித்தார்.
தாதிஷாவும், "இவன் வயது லட்கா எல்லாம் இரண்டு பிள்ளைகள் பெற்றுத் திரிகிறது, இவன் மட்டும் மாட்டேன் என்கிறான்." எனப் பேரனைக் குறை சொன்னார். செகாவத் ஹவேலி கிளம்பலாம், நேரமாகிறது எனும் நேரம். அமர்சிங் டாக்கூர், சிருஷ்டியின் தந்தை ரத்தன்சிங் டாக்கூர், மேத்தாவுடன் ஹவேலிக்குள் உள்ளே வந்தார்.