Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு நூல் வாசிப்பனுபவம் - கவுச்சி (கவிதைகள்)

வகைகள் : களஞ்சியம்/ விமர்சனங்கள்

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


களஞ்சியம்

நூல் வாசிப்பனுபவம் - கவுச்சி (கவிதைகள்)

நூல் விமர்சனம் 

"கவுச்சி" (கவிதைகள்) - நயினார், சுவடு பதிப்பகம், டிசம்பர் 2023. விலை ₹150.

(நுகர்ச்சியாளர்: ப்ரியா வெங்கடேசன்).

தனது முந்தைய புத்தகமான #தோற்கும்_நியூட்டன்_விதி 'யில், 

"..தொட்டு
பொட்டு வைத்தாளாம்
தொடாமல்
சேலை கட்டுகிறாளாம்
இப்படியெல்லாமா புலம்பும் இந்தப் பூமி
யார் யாரோ
தூக்கிச் சுமந்தார்களாம்
இறுதியாக
அவளின் இரண்டு விரல்களை
பிடித்துக் கொண்டே
தரை இறங்குகிறது
கோலமாவு.." என்று, இவரெழுதிய கோலத்தைப் படித்தபோதே என் மனம் அலங்கோலமானது! விளைவு.., மென் உணர்வுகளைக் கடத்தும் வல்லமையுள்ள இவருடைய கவிதை வரிகளுக்கு ரசிகனாகிப் போனேன்...

கொரியரில் வந்த புத்தக பார்சலைப் பிரித்துக்கொண்டிருந்த என் அம்மா, "இன்னிக்கு மார்கழி அமாவாசை.. நான்வெஜ் எதையும் தொடக்கூடாது.." என்றபடியே, என்கையில் திணித்த அந்தப்புத்தகத்தின் பெயர்.. 'கவுச்சி'! எதிர்மறை தலைப்புகளாகவே இருந்தாலும் தொடர் வெற்றிகளைப் பெற்று விடுவதால் இவரை, 'கவிதை உலகின் விஜய் ஆண்டனி' எனலாம்!

"..சில்லரைகளைப் பெற்றுக்கொண்டே இருக்கிறது
'பசிக்கிறது' என்ற 
அந்தச் சொல்லுக்கு மட்டும்
பசி அடங்கவேயில்லை.." எதையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகும் இவருடைய கவிதைகளைப் படிக்கும் போதே பல இடங்களில் வியந்து பாராட்டத் தோன்றுகிறது.

"..நாய்களையும் மாடுகளையும் போல
சில சொற்களை சாலையில்
அனாவசியமாக மேயவிடுகிறார்கள்
அவற்றின்மீது இடிக்காமல்
வண்டியைச் செலுத்துவது
என்னைப் போன்ற ஓட்டுனர்களுக்கு
சவாலாகவே இருக்கிறது" எனும் கவிஞர், தன் சொற்களை மிகவும் கவனமாகவே கையாளுகிறார்.

ஆம்..! பெரும்பாலானோர், 'நாட்கள்' எனப் பிழையாகவே எழுதிக் கொண்டிருக்கையில் இவர் மட்டும் 'நாள்கள்' எனச் சரியாக எழுதியதை வியந்து ரசித்தேன். 
("..ஆறு நாள்கள் உழைப்பின் அசதியில்
அதிகம் பேசாத
கணவரின் உறக்கத்தோடு
கனவு காண்பாள்..")

பெண்மையின் பல்வேறு பரிணாம பரிமாணங்களில், 'அவள்' எனும் கவிதை இன்னும் புதிது.
"வங்கிக்கணக்கில்
மேகலா மகேஷ் என்று
அவள் அப்பா இணைந்திருந்தார்
வாட்சப்பில்
மேகலா கண்ணனாக
அவள் கணவன் வந்து சேர்ந்தார்..
..இப்போது கண்ணீர் அஞ்சலி போஸ்டரில்
மேகலா மட்டுமே இறந்திருந்தாள்.." படிக்கும்போதே, "அட, ஆமால்ல..?!" என வியக்க வைத்தது.

"..பொய்யோ மெய்யோ
இருக்கிறதோ இல்லையோ
கேள்வியே இல்லை
பிரபலமாக இருந்தால் போதும்
அதுதான் செய்தி.." என நீளும் கவிதையில் ஊடகத்தின் பட்டவர்த்தனங்களை அழகாய்ப் பட்டியலிடுகிறார்.

கடைசிப் பேருந்தைத் தவறவிட்ட இருவரில் ஒருவர் பார்வையற்றவர்...
".. பயப்படாதீர்கள் என்றார்
இருட்டு எனக்குத்தான்
அவருக்கில்லையே!
அவர் கையைப்
பிடித்துக்கொண்டு நடந்தேன்.." இந்தக் கவிதையைப் படிக்கும் போது,  கவிஞரைத் தாண்டி, 'மாற்றுத்திறனாளி' என்று மிகப் பொருத்தமாகப் பெயர் வைத்த கலைஞரையும் வியக்கத் தோன்றுகிறதல்லவா..?! 

காதலனிடம் தன்னைப் பெண்பார்க்க வரச்சொல்லி ஒத்திகையெல்லாம் பார்க்கப்படுகிறது..,
"..முக்கியமானதைச் சொல்லவில்லையே
அங்கு வரும்போது
நாங்கள் என்ன சாதி" என்று நிறைவடையும் போது, இக் காதல் கவிதை வேறு தளத்தில் போய் நிற்கிறது..!

"..அன்பில் விழுபவர்களை
ஒரு துரோகம் காப்பாற்றிவிடுகிறது
அன்பில் நொருங்கியவர்களை
ஒரு ஏமாற்றம் தேற்றிவிடுகிறது.." இது கடத்தும் உணர்வுகளை எப்படி விவரிப்பது..?!

"வரிகளுக்குள் அடங்க முடியாதென்று
என் கவிதையிலிருந்து வந்தாள்
அங்கேயே இரு
நானும் வருகிறேன் என்று
வரிகளுக்குள் சென்றேன்.." என்ன மாதிரியானப் படிமம் இது?!! அய்யோ நயினார்... நைனாவுக்கெல்லாம் நைனா நீர்!

"..எதிர்ப்பது என்பது
வேறு ஒன்றுமில்லை
உண்மையைச் சொல்வதுதான்..
..பிடிக்காத வார்த்தைகளை நீக்கினால்
யோக்கியனாகத் தெரியலாம்..
..ஒரு அடிமைக்குப் பதவியை
வழங்கினால்
மொத்தச் சுதந்திரத்தையும்
பறித்துவிடலாம் என்பது
ராஜ தந்திரம்.." இதுமட்டுமல்ல.., இப்புத்தகம் முழுக்கவே, லோக்கல் தொடங்கி.., ஸ்டேட், நேஷனல் கடந்து.., இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் வரை பிச்சு உதறியிருக்கிறார்.. இதையெல்லாம் இங்க மென்ஷன் பண்ணி இவரை தேசபக்தாஸ் கிட்ட மாட்டி விட்டாலே எனக்கு கவர்னர் பதவி நிச்சயம்! அப்புறமென்ன.., அடுத்த வாரமே, இவர் ஆளுங்கட்சியில் ஐக்கியமாக வேண்டியிருக்கும்!!

"..ஊசி மேலும் கீழுமாய்க்
குதிக்கும் போதெல்லாம்
அவர் கண்கள் 
நிலைகுத்தி நிற்கின்றன..
..பழைய துணிகளே வருகிறதென
தன் இயலாமையைக்
குத்திக்காட்டியே தைக்கிறது.." இப்படி, சமூகத்தின் ஒவ்வொரு நலிந்த பிரிவினரையும் கரிசனத்தோடு அணுகுகிறது இவருடைய கவிதைகள்.

"..வெளிச்சத்தில் உறங்காத இரவை
மழை தட்டி எழுப்பிப்
புணரும் போது
என்ன சொல்லுமோ இந்தக் காற்று..
..சிறுபிள்ளைத்தனமாக
திரை விலக்கிப் பார்க்கும்
மின்னலின் கண் சிமிட்டலில்
கலவி காட்சிக்கு வருகிறது.." இதையெல்லாம் "தற்குறிப்பேற்ற அணி" க்கு எடுத்துக்காட்டாக கல்லூரி பாடத்திட்டத்திலேயே வைக்கலாம் தலைவா!

"..வருவேன் என்று
நீ போயிருக்கக் கூடாது
வரமாட்டாய் என்றே
நான் காத்திருக்கக் கூடாது..
..அந்த நான்குமுனைச் சாலையில்
உன்னையும் என்னையும் கேட்டு
யார் யாரிடமோ
கையேந்தலாம் நம் காதல்.." இதுபோன்று, வாசிப்பவரின் காதல்களைக் கிளறும் பல வரிகள் இப்புத்தகம் முழுக்கவே விரவியுள்ளன.

"கை நீட்டித் தன் பசியை
வாங்கிக்கொள்ளக் கேட்டார்
அந்த முதியவர்
எவரும் வாங்காமலே
முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்..
..கண்டுகொள்ளாத அன்பிற்கு
உயிரைப் பிச்சை தந்தவர்.." என்று எத்தனை அழகாக உணர்வுகளையும் வார்த்தைகளையும் இணைத்துக் கயிறு திரிக்கிறார் பாருங்கள்..!!

பறவையைப்பற்றிய கவிதையொன்றில் இப்படி எழுதியிருக்கிறார்...
".. வெயிலுக்கு விசிறிவிட்டு
மேகத்திடம் குளிர் காயும்..
..தன்னோடு வரும் வானத்திற்கு
ஓய்வு கொடுக்கவே
மண்ணில் காலூன்றுமிது..
..இதன் எச்சத்தின் நிழலில்
வாழும் மனிதனைப்
பொருட்டாகவே மதிப்பதில்லை.."

பின்வரும் இந்த அவலத்தை எப்போதுதான் தீர்க்கப் போகிறோமோ தெரியவில்லை...
"மலக்குழிக்குள் இறங்குகிறான்
மனிதன்
மூச்சடக்கி அவன்
வெளியே வருவதற்குள்
சந்திராயன்
நிலவுக்குச் சென்றுவிட்டது.."

"..இரவைப் பொட்டலம் கட்டி
பகலைப் பிரிப்பவர்கள்.." என்பதைப் போன்ற, தனது அசாத்திய கற்பனைகளை எல்லா இடங்களிலும் சிதற விடுகிறார்.

இவர் கவியெழுதும் பாணியே தனி! ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு சிறுகதையை ஒளித்து வைத்துள்ளார். அத்தனை ரசனையான வார்த்தைகள்!

எப்போதும் போல் இப்போதும், ஈர்க்கும்படி எழுதியிருக்கும் தோழர் நயினாரின் வித்தியாசமான சிந்தனைகள் தொடர்ந்துகொண்டே இருப்பது வியப்புக்கும் பாராட்டுக்கும் உரியது. சில இடங்களில் எட்டிப்பார்க்கும் எழுத்துப்பிழைகள் மட்டும் கன்னத்துப் பொட்டு!  வளர்ந்த பிறகும் தொடர்வது அழகல்ல!.

மொத்தத்தில், அலங்கார அரிதாரங்களால் முடைநாற்றமேறிக் கிடக்கும் சமூகத்தை, 'கவுச்சி'யால் கழுவிச் சுத்தமாக்க முயல்கிறது இந்நூல்!

எள்ளல், நையாண்டி, பழிவாங்கல், இயலாமை, ஏக்கம், ஆத்திரம், ஆளுமை திமிர், அடிமைத்தனம், அதிகாரம், காமம், திருப்பியடித்த திருப்தி, வன்கொடுமை.. என அத்தனை உணர்வுகளையும் ரசிக்கும்படி குவிக்கப்பட்ட ஒற்றைக் கவிதைதான் "சாதி மசுறு". இதை இப்புத்தகத்தின் உச்சம் எனலாம்..!  கண்டிப்பாக அனைவரும் இக்கவிதையை முனைந்து வாசிக்க வேண்டும். அதற்காகவே, அக்கவிதையை மேற்கோளிட்டெழுதாமல் கடந்து செல்கிறேன்..

பேரன்புடன்,

 - ப்ரியா வெங்கடேசன் @ 8056584237.

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!