உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
யாத்திசை திரைப்பட விமர்சனம்
நடிகர்கள், டெக்னீஷியன்கள், டெக்னாலஜிகள் என, எல்லாவற்றிலும் உயர்தரமானவற்றைக் கொண்டிருப்பவர்களால் கூட, இதுவரையிலும் தரமுடியாத, உண்மைக்கு நெருக்கமான ஒரு பீரியட் படத்தை, எந்த வசதிவாய்ப்புகளுமின்றி ஒரு சாமான்ய இயக்குனர் கொடுத்திருப்பது நிச்சயம் பாராட்டத்தக்கது!
தன் திரைப்பட வெற்றிக்கு, பிரபலங்களை நம்பாமல், பிற பலங்களான, கதைக்கரு, திரைக்கதையோட்டம், நம்பகமான அளவில் சி.ஜி.வேலைப்பாடுகள், உணர்வுகளை மெருகேற்றும் தேர்ந்த இசை.. போன்றவற்றில் கவனம் செலுத்தி, தரமான படைப்பைத் தந்துள்ளார், இயக்குனர் தரணி ராசேந்திரன்.
நடிகர்களைத் தவிர்த்துவிட்டு, சக மனிதர்களை நடிக்கவைத்திருப்பது, உண்மைக்கு மிக நெருக்கமான படைப்பாக இத்திரைப்படத்தை மாற்றியுள்ளது.
பெரிய நடிகர்கள் எவருமின்றி இக்கதைக்களத்தைக் கையாண்டது வியப்பையளிக்கிறது. ஆனாலும், அதீத தன்னம்பிக்கையுடன் இப்படைப்பைச் செதுக்கி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், இயக்குநர்!
வடதமிழகத்தில் தற்போதும் புழக்கத்திலிருக்கும் மாவளி சுற்றுவதைத் திரையில் ஆவணப்படுத்தியிருப்பது அழகு.
இதுவரையிலும், திரைப்படங்கள் வழியாக நம் மனக்கண்ணில் பதியவைக்கப்பட்டிருந்த மன்னர்களும் போர்வீரர்களும் தூக்கியெறியப்பட்டு, அக்காலத்தில் உண்மையாக அவர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்களென்பதை ஒவ்வொரு ஃப்ரேமும் நமக்குள், அழுத்தமாகப் பதியவைக்கின்றன.
ஏழாம் நூற்றாண்டில், புழக்கத்தில் இருந்த ஏராளமான சங்க இலக்கிய வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியிருப்பது, தமிழுணர்வாளர்களை நிச்சயம் மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.
தமிழ்த்திரைப்படத்தின் தமிழ் வசனங்களுக்கே திரையில், தமிழில் மொழிபெயர்ப்பு என்பது, வித்தியாசமான அனுபவம்.
சினிமாவில், ஹீரோ; ஹீரோயினுக்கென ஒரு அளவுகோல் வைத்திருப்போமில்லையா.., அவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிட்டு, ஒரு புது உணர்வை நமக்கு ஏற்படுத்திவிடுகிறது, இத்திரைப்படம்.
அந்தக்கால தமிழ் எழுத்துகளையும், திரையில் கொண்டுவந்தது, முத்தாய்ப்பு. அதேபோல், டைட்டில்களில் கூட, தூய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி, திரைக்குத் தமிழ் ரத்தம் பாய்ச்சியுள்ளனர்.
தியேட்டருக்குள் சென்று அமர்ந்ததும், "புகைப்பிடிக்காதீர், மது அருந்தாதீர்.." என இம்சித்து, மறந்திருப்பவர்களுக்கும் நினைவுபடுத்தி உயிரை வாங்குற வேலையை, இத்திரைப்படத் தணிக்கைத்துறை மேற்கொள்ளாதது ஆறுதல். இதனால்தானோ என்னவோ.., இத்திரைப்படத்துக்கு வந்திருந்தவர்கள் யாரும் புகைக்கக்கூடச் செல்லவில்லை.
இடைவேளையில், PS-2 வை விளம்பரப்படுத்த, ட்ரெய்லர் போடும்போது, மக்கள், மணிரத்னத்துக்கு பாடம் எடுக்கும் வகையில் கமெண்ட் களை அள்ளி வீசினர். இது, "யாத்திசை" யின் நம்பகத்தன்மைக்குக் கிடைத்த வெற்றி!
இத்தனை செய்தவர்கள், ழகர உச்சரிப்பே வராதவர்களின் குரல்களைப் பயன்படுத்தி, திருஷ்டி கழித்திருக்கிறார்கள்...
நம் கண்முன்னே, முப்பதாண்டுகளுக்கு முன்புவரையிலும் புழக்கத்திலிருந்த பல ழகரச்சொற்கள் ளகரச்சொற்களாக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதிரியான ஏழாம் நூற்றாண்டுக் கதையில் ழகரக் கற்பழிப்பை ஜீரணிக்க முடியவில்லை என்றாலும், மொத்தத்தில் ஒரு திரைப்படமாக.., பிரமிக்கத்தக்க முயற்சி இது; அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல படைப்பு!
- #ப்ரியா_வெங்கடேசன் @ 8056584237.