Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு பேசும் நகரம்

வகைகள் : கவிதைகள்/ பிற கவிதைகள்

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


கவிதைகள்

பேசும் நகரம்

பேசும் நாடு நகரங்கள்


நாடு நகரங்கள் பேசுமா
கேள்வியை விடுத்து
அவை மனம்விட்டுப்
பேசுவதற்கு ஒரு
வாய்ப்பளிக்க வேண்டும்
நட்டாற்றில் விட்டு விட்டீரேயென
அவற்றைப் புலம்ப விடுதல் 
அத்தனை உத்தமம் ஆகாது
அவற்றின் விசும்பல்களைக்
கேட்பதற்கு சமையத்தில்
சிறப்பு காதுகள் தேவைப்படுகிறது
என்னதான் ஆச்சு இந்த 
மக்களுக்கு ஏன் இத்தனைக்
கத்தியும் இவர்கள் செவியில்
ஏறவேயில்லை என்று 
அவை பொருமுகின்றன
அதன் விளைவாகவே
அவ்வப்போது
மண்ணில்
சூடுபறக்கிறது
இவற்றினை வெற்றுப் பூலோக
மாற்றங்களாக மட்டும்
எடுத்துக்கொண்டு
அனைத்திற்கும் காரணம்
உலகமயமாக்கல் தானென
மக்கள் பொத்தாம் பொதுவாகப்
பேசி தம் உண்டுறைதல்
கடமையாற்றிப்
போய்க்கொண்டேயிருக்கின்றனர்
நாடு பேசுகிறதென்றால்
மக்கள் பேசுகின்றனர்
என்றதோர் அர்த்தம்
இப்போது எடுபடுவதில்லை
மக்கள் மக்களாக இருப்பது
அரிதாகிவிட்டபடியால்
வேறு வழியின்றி நாடே
வித விதமாகப் பேசிப் பார்க்கிறது
சூறாவளியை சுழற்றிவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறது
கொதிக்கும் சூரியனைக்
கொஞ்சி அனுப்பிப் பார்க்கிறது
வயல் வரப்புகளைக்
காயப்போட்டுப் பார்க்கிறது
அதற்கும் மசியவில்லையென்றால்
வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தி
தள்ளாட்டம் கொள்ளச் செய்கிறது
நாலே நாலு நாட்கள் அமைதியாக 
இருந்துவிட்டு எனக்கென்ன 
வந்ததென்று மக்கள் எங்கோ
வேக வேகமாகப்
போய்க்கொண்டிருக்கிறார்கள்
காற்றை மாசாக்கும் கடுஞ்செயல்
ஒன்றினையும் ஏவிப் பார்த்தது
மிக மிகத் தாமதமாகத்தான்
நாடு நகரங்களுக்கு 
ஒன்று புரிந்தது
மக்களின் மனப்போக்கினைக்
கண்டுகொண்ட பின்பு
நாடும் நகரங்களும் ஒரு
உறுதிமொழியை 
எடுத்துக் கொண்டன
எது நடந்தாலும் அது
தனக்கானதில்லை என்ற 
உறுதிமொழியே அது
பின்னர் நடந்தவை நடப்பவை
எவற்றிற்கும் புலம்புவது
பேசுவது விடுத்து
நாடும் நகரங்களும்
தற்காலங்களில் மிகுந்த அமைதியில் திளைக்கின்றன.

-

நடராஜன் பெருமாள்

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!