உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
-திருவாசகம்
அருவும், உருவும், அருவுருவம் தாங்கி நிற்கும் இறைவனை துதிக்க பற்பல வாக்குகள் உண்டு. அதில் மணிவாசகர் திருநா உதித்த இந்த திருவாசகம் பல நாளாய் என்னுள் உழன்று ,உணர்வில் கலந்து பலவாறு நிறைந்துள்ளது என் சிந்தையில்.
"அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே" , இதனினும் அழகாய் இறைவனின் இருப்பை உணர்த்தும் வாக்கு ஏதேனும் உண்டோ !
இறைவன் அறிவே வடிவானவன், ஞானானந்த மூர்த்தி, அஞ்ஞானம் என்பது எதுவென்று அவன் அறியான் ஏனெனில் அவன் அறிவே வடிவானவன். பதியை பற்றி நிற்கும் பசுவாகிய நாம் தான் அறிவித்தால் அறியும் அறிவு பெற்றவர்கள். அறிவித்தால் அறியப்படும் எனும் போதே அங்கே அஞ்ஞானம் நிறைந்து உள்ளது என்பதே பொருளாகும்.
ஆகவே அஞ்ஞானம் நம்மை சார்ந்தது, அதனை அகற்றி மெய் ஞானம் புகட்டுபவனே இறைவன்.
அஞ்ஞானம்- என்பதின் பொருளில் நம்மிடையே எவை எல்லாம் உண்டு என்ற கேள்விக்கு பதில் என்பதன் பட்டியல் நீண்டு நிறைந்திருக்கிறது. நம் மனம், செயல், வாக்கு ஆகியவற்றால் எண்ணற்ற வினைகளை செய்கிறோம், இதில் அத்தனையிலும் அந்த நொடியில் சரியெனப் பட்டத்தை அறிவுள்ள செயல் என்றே செய்கின்றோம், அதன் பின் விளைவில் அல்லது ஆராய்ந்த பின்னே, சமய சந்தர்ப்பம் கிடைத்து நாம் உணர்ந்தப் பின்னே அதில் உள்ள பல பிழைகள், அஞ்ஞானம் நமக்கு தெரியவருகிறது.
நம்மால் உணரப்பட்ட அஞ்ஞானம், உணரப்படாத அஞ்ஞானம் , என்றுமே உணர்த்தப்படாத அஞ்ஞானம் என இதுவும் வகைகள் அதிகம். சமய சந்தர்ப்பங்கள் பிழைகளை உணர்த்தலாம், என்றேனும் ஆத்ம தரிசனம் பெற்றால் அங்கே நிறைந்திருக்கும் அஞ்ஞானம் அகற்றப்படலாம், அதனினும் உற்று நோக்கினால் அவனும், அவனியும் புலப்படலாம் , அதுவரை நிலவிய அஞ்ஞானம் அகற்றப்படலாம். மறைந்து நிற்கும் ரகசியங்கள், புலப்படாத ஞானம், உணரப்படாத உணர்வுகள், உணர்த்தப்படாத வினை பிழைகள் யாவும் அஞ்ஞானம்.
அஞ்ஞானம் என்னும் இவற்றை எல்லாம் அகற்றும் ஆற்றலை நாம் இறைவன், பரமம் ,பிரம்மம், சிவம் என்கிறோம். ஞானமார்க்கிகள் யோக வழியில் ஞானம் என்கின்றனர், பக்தி வழியில் அதை சிவம் என்கிறோம், பகுத்தறிவாளர் என பெயரிட்டுக்கொள்ளும் மனிதர் மட்டும், நல்லறிவு தான் இறைவன் என்பதை பகுத்தறிய மறுத்து, இறை என்பதையும் மறுத்து அஞ்ஞானம் என்னும் கட்டில் பிணைந்துள்ளனர்.
அஞ்ஞானம் எனும் இருள் மறைந்து, நல்லறிவாகிய இறைவனின் ஒளி நிறைந்தால் உலகில் குற்றங்களும்,துன்பங்களும், துக்கங்களும் அகலும். அஞ்ஞானம் அகல என்றும் அவன் அருளை பெற பிரார்த்திப்போமாக!
Test