மூங்கில் இலை மேலே, மூங்கில் இலைமேலே,
தூங்கும் பனிநீரே, தூங்கும் பனிநீரே...
தூங்கும் பனி நீரை
தலாட்டும் வெண்ணிலவே
அடுத்தவன் முகம் பார்க்க பிடிக்காமல்
சுவர் எழுப்பிகொண்டிருக்கும்
நம்மை பார்த்து....
சுவர் இடுக்கில்
வேர்விட்டு, துளிர்த்து...
பூத்து சிரிக்கிறது
இயற்கை./Ram
ஊருக்கு வெளியே....
மைல் கல்லில் வந்தமர்ந்தேன் 'தாகத்துடன் '...
தூரத்தில் தெரிந்த ஓடையை நோக்கி கால்கள் விரைந்தன...
அது.... ஆசைகளை மனதில் புதைத்து, அடக்கமானவர்களின் கல்லறை (சுடுகாடு )..
அதன் மீதுதான் தெளிவான 'கானல் நீர் 'ஓடிக்கொண்டிருந்தது...
வாழ்க்கையின் அர்த்தத்தை சொல்லியபடி..... /by... Ram
'வெற்றுவாசலில் 'ஒரு புள்ளி வைத்து அதிலிருந்து..
வட்டங்களாய், கோடுகளாய்,கொடிகளாய் பூக்களாய் விரிந்து,
பரந்து கோலம் உருவாகியது..
ஏதுமற்ற 'வெற்றுவெளியில் '
ஒரு புள்ளியிலிருந்து சிதறி(BIGBANG) அணுக்களாய், பால்வீதியாய்,
நட்சத்திரங்களாய்(சூரியன்) கோள்களாய் விரிந்து,
பரந்து உருவானது பிரபஞ்சகோலம்!!!
இந்த கோலத்தில் பூமியின் இருப்பு எங்கே? என்றேன்..
அள்ளியிறைத்த கோலமாவின் ஒற்றை துகள்தான் பூமியாம் !!!
என்னுடைய இருப்பு எங்கே என்று நினைத்தேன் 'சிரிப்பு 'வந்தது
கல் புரட்ட இயந்திரங்கள் வந்த பிறகு...
இது என்ன (மனிதர்கள் )கல் புரட்டல்
நகைத்த படி நகர்ந்தேன்.....
அங்கிருந்த செங்கொடி
செந் நாக்காய் பட, படத்து சொன்னது...
கேள் தோழா !கேள்!
அது வெறும் கல் புரட்டல் இல்லை....
அடிமை தனத்தை புரட்டி போடு,
சோம்பலை புரட்டி போடு,
மூட நம்பிக்கையை புரட்டி போடு,
தீண்டாமையை புரட்டி போடு,
ஆதிக்கவெறியை புரட்டி போடு....... என்று
செங்கொடி சொல்ல, சொல்ல..
தூரத்தில் கடல் அலை உண்மை, உண்மை என்று
தரையில் ஓங்கி அடித்து சத்தியம் செய்தது..
சீறி எழுந்த அலை..
மனதில் தோன்றிய வார்த்தைகள்...
வெண்மயில் தோகை விரித்து ஆடுகிறது,
பெண்ணின் முந்தானை காற்றில் பறக்கிறது,
ஐந்து தலை நாகம் படமெடுத்து ஆடுகிறது..
தரையில் துள்ளி விழுந்த அலையின்
ஒரு துளி உதட்டில் பட்டு உப்புக் கரித்தது..
'யாதார்த்தம் 'என்னவோ
உப்புக்கரிக்கத் தானே செய்கிறது.
#5 புன்சிரிப்பூ
தன் பிஞ்சு கையால் முழம்போட்டு
நான்கு முழம் என்றாள்..
என் கையால் அளந்து மூன்றுதான் என்றேன்..
அந்த குட்டி தேவதை பதிலாய் தந்தாள்
ஒரு அழகான புன்சிரிப்பூ
#3.
ஆசைகளை அறுத்தெறி' என்றார் புத்தர்..
என்னதான் கலைத்தாலும்
மீண்டும், மீண்டும் வலை பின்னுகிறது மனசு -
ஒரு சிலந்தி பூச்சியை ப் போல
#2 காலைப்பொழுது
குளத்தில் நீர் தளும்பும் ஓசையும்,
படியேறும் கால் கொலுசின் சிணுங்கலும்,
காற்றிலாடும் அரச இலைகளின் சல சலப்பும்..
ஒரு சேர இசைக்க…
காலைப்பொழுது அழகானது.
#1 முத்தாய்ப்பு
எட்டு கால் கொண்டு
எட்டி, எட்டி வலை பின்னி
இரைக்கு காத்திருந்தால்...
'முத்தாய்ப்பாய்'
முத்து, முத்து பனித்துளிகள்.
வானம் வசப்பட்டது
வண்ணங்களால்
நிரப்பப்பட்ட
வெறும் தாளில் .
வானம் வசப்பட்டது
தூரிகை நடனத்தில்
நட்டுவனாரான
ஓவியன் ஜதியில்.
வானம் வசப்பட்டது
தூரத்தே விரிந்ததை
கிட்டத்தே தந்த
குவி-ஆடியால் (கண்ணாடியால்.)
வானம் வசப்பட்டது
ஓவியனுக்கு.
வண்ணங்களால்
தூரிகை நடனத்தால்
குவியாடியால் .
ஆடியில்(குவி) கண்ட அற்புதம்
இயற்கையின் ஏழு வண்ணம்
இறைவனே ஓவியன் !
உற்று நோக்கி
உணர்ந்த பின்னே
அற்று விட்டது அத்தனையும்
வானமே வசப்பட்டது.
இறுக்கிப்பிடித்த பிடிவாதத்துடன் இருவிழியால் சுட்டெரித்தாள் அந்த இறுமாப்புகாரி!
அலைகடல் மேல்
அசைந்தாடும் ஓடம் போல்
தத்தளித்தது அவள் மனம்!
பூங்காற்றின் வருடல்
அவள் அகத்தை திறந்து காட்ட
அதனுள்ளும் அவனே!
முகிழ்ந்தவள், மலர் சூடி, இதழ் வருடி
அவன் வருகைக்காக
கரையில் காத்திருந்தாள்!
மன ஓடங்கள் ஜோடியாய் கரை சேருமா
அவர்கள் கதைக்க
நாமும் காத்திருப்போம் !
புத்தக வழியில் - புது வெள்ளி, புது வானம் !
அகர முதல
எழுத்தை அறிந்து
ஆசான் வழி
கல்வி கற்று,
பட்டப் படிப்பும்
பட்டயமும்
பெற்றாலும் …
அது…
கைமண் அளவே!
புத்தனைப் போல்
போதிமரம்
தேட வேண்டாம்.
ஞானமே
நம்மை தேடி
புத்தக வடிவில் வரும்!
அறியாமை இருள்
அகற்றும் - ஒளி.
ஊனக் கண் திறந்து
உண்மை உலகை
உணரவைக்கும்
உபாத்தியாயர்.
அதன் கை பிடித்து
நடந்தால் ...
உலகை காட்டும்
உவகை கூட்டும்.
ஊர்கதை பேசும்
உன்மத்தம் பிடிக்கும்
சித்தம் தெளியும்
புத்தமும் புரியும் .
இருள் விடுத்து
ஞான ஒளி கிட்ட
புத்தக வழியில் -
புது வெள்ளி, புது வானம்
புது உலகை நேசிக்க
புறப்படுவோம்!
வரவாகும் மழை
வருவதாகச் சொன்ன மழை
வரவில்லை
தொகுப்பூதியத் தொந்தரவால்
அல்லலுறும் தொழிலாளி போல
தூவானமும் மண்ணைத் தொட்டுக்
கூடப் பார்க்கவில்லை
மாதக் கணக்காகிவிட்ட
அழுக்குடை வாகனங்கள்
கழுவித் தீர்த்துக்கொள்ள
வானத்தினைப் பிளந்து ஒரு
வழி பிறக்குமென
பார்த்துப் பார்த்து
விழி வீங்கியது தான் மிச்சம்
பள்ளிக்கூடம் போகும் வழக்கம்
பழக்கமாகிக் கொண்டிருந்தாலும்
மழைநாள் லீவுக்குப்
பிள்ளைகள் ஏங்குவது
முன்னெப்போதைப் போன்றே
இப்போதும் இருக்கிறது
எத்தனை முறை மூழ்கித் திளைத்தாலும் மீண்டும்
வாராத போது வருத்தம்
மேலிடத்தான் செய்கிறது
வந்தால் வேண்டாமென்பதும்
வராவிட்டால் வேண்டுவதும்
அரிதிற் காதல்
செயல்களாக இல்லாமல்
தவறாத முழுநேரப்
பணியென்றே ஆகிவிட்டது
மழை வரலாம் தான்
ஏற்கனவே நின்ற வழிகளை
நேர்செய்யாமல் மண்மூடி
மறைக்கிற வகையில்
தப்பிக்கப் பார்க்கிறக்
கற்பிதங்கள் மாந்தருள்
குறையாமல் இருப்பதினால்
பொழிவது பிழையாகினும்
அதன் நிலை ஒன்றுதானே
இத்தனை அங்கிங்கெனாத
இடையூறுகளைக் கண்டும்
சளித்துக் கொள்ளாமல்
பெய்யும் மழையினைப்
பேரன்பு என்றல்லாமல்
வேறெப்படிப் போற்றுவது
நடராஜன் பெருமாள்
புரியாத விலகல்
ஈரம் காயாத முடிந்த
கூந்தலில் மல்லிகைப் பூச்சரத்துடன் எனக்குப் பிடித்தப்
புடவையில் வலம் வருவதோடு
சொட்டும் நீரில் நனைந்தப்
புறமுதுகிட்டுப்
போக்குக் காட்டுதல் வேறு
சிலிர்ப்பைக் கூட்டுகிறது
பிணக்குகள் அவளுக்குப்
பிடிக்காதென்று தெரியும்
ஆனாலும்
காலையிலிருந்து
அவள் இன்னும்
என்னிடம் பேசவில்லை
கண் விழித்துப்
புன்னகைத்தேன் கண்டுகொள்ளவேயில்லை
தட்டுப்பட சிக்குவாளென
ஒதுங்காமல் நின்றேன்
விலகி நடக்கிறாள்
எட்டி எடுப்பது போல
அவள்மீது மோத வந்தேன்
லாவகமாக நழுவுகிறாள்
நாக்கு ருசி காபி விரல்பட
கிடைக்குமென எதிர்பார்த்தேன்
தூர வைத்துத் தொடுதல்
தவிர்க்கப்பட்டு விட்டது
சிந்தனை நரம்பு செல்கள்
சூடாகிக் காரணம் தேடியது
எளிதில் பிடிபடவில்லை
கையலம்பும் சாக்கில்
கையோடு கை
பட்டுவிடாதா பரபரத்தால்
அவளது கை சட்டென வாய்துடைத்துப் பின்
கைத்துடைக்கிற சாக்கில்
முந்தானைக்குள்
முழுகிவிட்டது
குளித்து முடித்தும்
தொடுதல் குறையெனும்
தோசம் நீங்கவில்லை
ஏனிப்படி இவள் மனமின்று
கல்லாய் சமைந்து விட்டது
யாதொன்றும் புரியாமல்
ஏக்கப் பெருமூச்சுடன்
திரும்புகையில்
கன்னத்தில் முழுதாக
முத்தமிட்டு வாயில்
இனிப்பூட்டி நெற்றியில்
முத்தமிட்டுச் சொல்கிறாள்
" இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ".
நடராஜன் பெருமாள்
மேய்ந்துகொண்டிருந்த வனத்தின்
ஒற்றை மரத்தில் கட்டியிருந்த
நீள் கயிற்றின் சுற்று வட்டம்
என் பார்வை விட்டு
நீ விழாத தூரமாக
நீண்டகாலம் நீடித்திருக்கிறது.
இளைப்பாறும் வேளையில்
சட்டென மனதின் கண்
உந்தன் இருப்பிடத்தை
வட்டமிட மறந்ததில்லை
நாட்கள் செல்லச் செல்ல
உந்தன் பிரமாண்டம்
சுருங்கிக்கொண்டே போகிறது.
அன்றிருந்த ஆர்வம்
இன்று ஏனோ
என்னிலும் மங்கிவிட்டது.
புழக்கத்தில் இல்லாத
உறவின் சங்கிலி
இத்து விட்டுப் போய்விடும்.
தீபாஸ்
***
வாடா தம்பி வீட்டுக்குப் போலாம்
என்ன குழம்பாம்
சிக்கனாம்
நாட்டுக்கோழி
இல்லையே
பிரச்சனை
என்னன்னு
தெரியலை
ஊரைவிட்டு
கிளம்பணுமாம்
பாத்துக்
காலை வை
முள்ளு
இருக்கப்
போகுது
ஒன்னுக்கு
வந்தா சொல்லு
சட்டையை
ஈரமாக்காதே
பொடிப்பயல்ன்னு
சொல்றாங்களே
அப்டின்னா என்ன
காலைலேர்ந்து
பசி ஒருத்தனும்
ஒருவாய்ச்சோறு
தரமாட்றான்
என்ன
அப்பனுக்கும்
ஆத்தாளுக்கும்
மறுபடியும்
சண்டையா
ஒழுகாதக்
கூரை
நமக்கு
எப்போ
வாய்க்கும்
வழுக்கி
விழுந்தான்
சிரிச்சேன்
கன்னத்துல
அடிக்கிறான்
பக்கத்துல
பாப்பாவுக்கு
துணியேயில்ல
சோறு கொடுத்தேன்
என்னமோ
காசுன்றாங்க
வாழ்க்கைன்றாங்க
மிருகமாட்டம்
நடந்துக்குறாங்க
குறும்பில
குறும்பாப்
போட்டி
நீயும் வா
துண்டைக்
காணோம்
துணியக்
காணோம்
நாமளா
உலகம்
உருண்டையாமே
நாம எப்படி
நடக்கிறதாம்
பள்ளிக்கூடத்திற்குக்
கூப்பிடாத படிச்சு
காந்தியே
செத்துட்டாராமே
ஒரே ஏக்கமா
இருக்குப்பா
அம்மாவ
எப்போ
பார்ப்போம்
மீன்குழம்பு
வாசனை
நம்மள்தா
பக்கத்து வீடா
தோடா
பெரிய மனுஷி
வந்துட்டா
சோதரான்னுட்டு
பகல்ல
நட்சத்திரம்
எல்லாம்
எங்கே
தங்கும்
பூவும்
பொன்னும்
ஒன்னு
கேட்காம
பறிக்கக்கூடாது
காலையில
குடிச்ச காடி
பைப்புத்தண்ணி
கிடைக்குமா
பசிக்குத்
தின்னா
அதுக்குப் பேர்
திருட்டாக்கா
இளமையில்
வறுமை கொடிது
பிஞ்சு வயதில்
நாமெல்லாம்
தேவையில்லைன்னா
இந்தப் பூமியேன்
பொறந்துச்சு
ஆடுமாடு
ஒன்னாயிருக்கு
மனுசன் மட்டும்
ஏனிவ்வாறு
பயப்படாதக்கா
நண்பன்
அரை பிஸ்கோத்து
கொடுத்தான்
ரொம்ப
தூரமாம்
கையப்
பிடிச்சுக்கோ
போய்டலாம்
-
நடராஜன் பெருமாள்
பேசும் நாடு நகரங்கள்
நாடு நகரங்கள் பேசுமா
கேள்வியை விடுத்து
அவை மனம்விட்டுப்
பேசுவதற்கு ஒரு
வாய்ப்பளிக்க வேண்டும்
நட்டாற்றில் விட்டு விட்டீரேயென
அவற்றைப் புலம்ப விடுதல்
அத்தனை உத்தமம் ஆகாது
அவற்றின் விசும்பல்களைக்
கேட்பதற்கு சமையத்தில்
சிறப்பு காதுகள் தேவைப்படுகிறது
என்னதான் ஆச்சு இந்த
மக்களுக்கு ஏன் இத்தனைக்
கத்தியும் இவர்கள் செவியில்
ஏறவேயில்லை என்று
அவை பொருமுகின்றன
அதன் விளைவாகவே
அவ்வப்போது
மண்ணில்
சூடுபறக்கிறது
இவற்றினை வெற்றுப் பூலோக
மாற்றங்களாக மட்டும்
எடுத்துக்கொண்டு
அனைத்திற்கும் காரணம்
உலகமயமாக்கல் தானென
மக்கள் பொத்தாம் பொதுவாகப்
பேசி தம் உண்டுறைதல்
கடமையாற்றிப்
போய்க்கொண்டேயிருக்கின்றனர்
நாடு பேசுகிறதென்றால்
மக்கள் பேசுகின்றனர்
என்றதோர் அர்த்தம்
இப்போது எடுபடுவதில்லை
மக்கள் மக்களாக இருப்பது
அரிதாகிவிட்டபடியால்
வேறு வழியின்றி நாடே
வித விதமாகப் பேசிப் பார்க்கிறது
சூறாவளியை சுழற்றிவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறது
கொதிக்கும் சூரியனைக்
கொஞ்சி அனுப்பிப் பார்க்கிறது
வயல் வரப்புகளைக்
காயப்போட்டுப் பார்க்கிறது
அதற்கும் மசியவில்லையென்றால்
வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தி
தள்ளாட்டம் கொள்ளச் செய்கிறது
நாலே நாலு நாட்கள் அமைதியாக
இருந்துவிட்டு எனக்கென்ன
வந்ததென்று மக்கள் எங்கோ
வேக வேகமாகப்
போய்க்கொண்டிருக்கிறார்கள்
காற்றை மாசாக்கும் கடுஞ்செயல்
ஒன்றினையும் ஏவிப் பார்த்தது
மிக மிகத் தாமதமாகத்தான்
நாடு நகரங்களுக்கு
ஒன்று புரிந்தது
மக்களின் மனப்போக்கினைக்
கண்டுகொண்ட பின்பு
நாடும் நகரங்களும் ஒரு
உறுதிமொழியை
எடுத்துக் கொண்டன
எது நடந்தாலும் அது
தனக்கானதில்லை என்ற
உறுதிமொழியே அது
பின்னர் நடந்தவை நடப்பவை
எவற்றிற்கும் புலம்புவது
பேசுவது விடுத்து
நாடும் நகரங்களும்
தற்காலங்களில் மிகுந்த அமைதியில் திளைக்கின்றன.
-
நடராஜன் பெருமாள்
கசப்பான நிதர்சனம் (க.எ-04)
மைபூசிய திரியாகிய எளியோன்
தன்னை அழிப்பதால்
உண்டாகும் ஜோதி
வலியோனின் சுடராக
ஜொலிப்பது வாடிக்கையாகிவிட்டது.
ஒளிரும் ஒவ்வொன்றின் உள்ளேயும்
மைபொதிந்து மடியும்
திரியின் மகிமை
போற்றப்படுவதே இல்லை.
பெரும் சம்பவங்களின் வெளிச்சத்திற்கு
ஆதாரமாகும் திரி
விபூதியாக பூசப்படாமல்
வெற்றியெனும் ஜோதியால்
இருட்டடிக்கப்பட்டு இன்மையாகிறது.
விளக்கில் ஒளிரும் ஜோதியாகிய
வலியோன் போற்றப்படுவதும்
ஆதாரமான மைபொதி திரியாகிய
எளியோன் வணங்கப்படாமல்
மடிந்து சாம்பலாவதும்
கசப்பான நிதர்சனமாகிறது.
தீபாஸ்
கானல் கருணை (க.எ-03)
பக்கத்து வீட்டு ஏழைக் குடும்பம்
பண்டிகைச் செலவுக்கு
கடன் கேட்காமலிருக்க
கதவை உள் தாழ்ப்பாளிட்டு
தன்னை சிறை வைத்து
உள்ளங்கை கைப்பேசியில்
அன்பை விதைக்கும்
விசித்திரமான உலகம்.
தீபாஸ்
அன்பின் பிள்ளை (க.எ-02)
சரி.. சரி.. இம்புட்டுத்தான் நீயென
தெரியாமல் இல்லை
இருந்தும் அன்று கழட்டி வைத்த
உன் முகமூடிக்குள்
எனக்காக உதடுபிதுக்கி அழும்
பச்சிளம் முகத்தைப்
பார்த்திருக்கிறேன்....
என்னதான் முரண்டுபிடித்தாலும்
பிள்ளையை பசியாறாமல்
விட்டுவிட முடியுமா?
எனக்குள் இருக்கும் தாய்மையே
உன் வரம்... என் சாபம்....
தீபாஸ்
தொடரும் நேசக்கயிறு (க-எ 01)
நேசத்தை சாந்துக் குழைத்துப் பூசி
கட்டும் அன்பின் கூடு...
கட்டி முடிக்கப்படாமல் நிற்கிறது.
தொடங்கியவை எல்லாம் முடிவுக்கு
வந்தாகவேண்டும் என்பதில்லை.
முடிவுற்றால் எழும் பெருமூச்சுக்குப்பின்
மெனக்கெடல்கள் நின்றுபோய்விட
வாய்ப்புகள் இருப்பதாய் நம்பும் மனது
முழுமையடையவிடாது முரண்டுகிறது.
வானத்தின் பரப்பளவில் அன்பின்
கூரைவேய ஆசைகொண்டு..
ஒரு முனையை எட்டிப்பிடித்து
முடைந்த ஓலை அவிழாது முடிச்சிட
வானின்மறுமுனையை பிடிக்க
போய்கொண்டே இருக்கிறேன்.
முயற்சியின் நீட்சி ஆயுளுக்குள்
முடியப்போவதில்லை.
அன்பின் கூடுக்கு
முழுமை கிடைப்பதுமில்லை.
தீபாஸ்
தேவரீர் திருவடிகளுக்கு,
....
அன்புடன் .
உம்மவள் .
மாதமிருமுறை,
செய்தி சுமந்து வந்தவை
பசு கன்று ஈன்றது முதல்
நெய் விற்று செய்த செலவு வரை
இம்மி பிசகாமல்
மடலேறிவிடும்.
திரைகடலோடி தேடிய திரவியம்
ஆணிப்பொன்னாக
கழனி ,கட்டிடமாக
கழிந்தது எப்படி
பக்கம் பக்கமாக
கடிதாசி வரும்.
பற்று வரவு பேசும் கடிதாசியில்
அவரை பற்றி நிற்பது
அவள் விளிக்கும் வாக்கியம் தான்.
தேவரீர் திருவடிகளுக்கு...
அணங்கவளின் பெருமூச்சும்
விரகமும் விரல் வழி வழிந்து
எங்கோ ஒரு சொல்லாய்
இழையோடி ஒளிந்திருக்காதோ!
கடுதாசிக்குள்
குடும்பம் நடத்துகையில்
அவளின் அகத்தை தேடுவார்
ம்கூம் ….
மிஞ்சியது அவரின் பெருமூச்சும்
“அன்புடன் உம்மவள்” மட்டுமே!
இரு வருடத்துக் கொருமுறை
வந்து செல்லும் போதும்
முகம் மலர்வாளே தவிர
அகம் திறந்தது இல்லை.
மசக்கையும் பிள்ளைகள் பிறப்பும்
அவரின் சாதனை பட்டியலில் சேரும்.
இளமை தொலைந்து
நரை வந்த பின்னே
கடமை முடிந்தது
திரவியம் போது மென
திரும்பி வந்த போது…
கடைசி மூச்சை கையில் பிடித்து
காத்திருந்தால் அந்த மாது.
அகமும், முகமும் மலர
தேவரீர் திருவடிக்காக…
அவளில்லாமல் எப்படி அவர் அரற்ற
மீண்டும் கடுதாசியில்
குடும்பம் நடத்த
அவருக்காக விட்டு சென்றாள்
மடலாக தன் அகத்தை !