மேய்ந்துகொண்டிருந்த வனத்தின்
ஒற்றை மரத்தில் கட்டியிருந்த
நீள் கயிற்றின் சுற்று வட்டம்
என் பார்வை விட்டு
நீ விழாத தூரமாக
நீண்டகாலம் நீடித்திருக்கிறது.
இளைப்பாறும் வேளையில்
சட்டென மனதின் கண்
உந்தன் இருப்பிடத்தை
வட்டமிட மறந்ததில்லை
நாட்கள் செல்லச் செல்ல
உந்தன் பிரமாண்டம்
சுருங்கிக்கொண்டே போகிறது.
அன்றிருந்த ஆர்வம்
இன்று ஏனோ
என்னிலும் மங்கிவிட்டது.
புழக்கத்தில் இல்லாத
உறவின் சங்கிலி
இத்து விட்டுப் போய்விடும்.
தீபாஸ்
***
கசப்பான நிதர்சனம் (க.எ-04)
மைபூசிய திரியாகிய எளியோன்
தன்னை அழிப்பதால்
உண்டாகும் ஜோதி
வலியோனின் சுடராக
ஜொலிப்பது வாடிக்கையாகிவிட்டது.
ஒளிரும் ஒவ்வொன்றின் உள்ளேயும்
மைபொதிந்து மடியும்
திரியின் மகிமை
போற்றப்படுவதே இல்லை.
பெரும் சம்பவங்களின் வெளிச்சத்திற்கு
ஆதாரமாகும் திரி
விபூதியாக பூசப்படாமல்
வெற்றியெனும் ஜோதியால்
இருட்டடிக்கப்பட்டு இன்மையாகிறது.
விளக்கில் ஒளிரும் ஜோதியாகிய
வலியோன் போற்றப்படுவதும்
ஆதாரமான மைபொதி திரியாகிய
எளியோன் வணங்கப்படாமல்
மடிந்து சாம்பலாவதும்
கசப்பான நிதர்சனமாகிறது.
தீபாஸ்
கானல் கருணை (க.எ-03)
பக்கத்து வீட்டு ஏழைக் குடும்பம்
பண்டிகைச் செலவுக்கு
கடன் கேட்காமலிருக்க
கதவை உள் தாழ்ப்பாளிட்டு
தன்னை சிறை வைத்து
உள்ளங்கை கைப்பேசியில்
அன்பை விதைக்கும்
விசித்திரமான உலகம்.
தீபாஸ்
அன்பின் பிள்ளை (க.எ-02)
சரி.. சரி.. இம்புட்டுத்தான் நீயென
தெரியாமல் இல்லை
இருந்தும் அன்று கழட்டி வைத்த
உன் முகமூடிக்குள்
எனக்காக உதடுபிதுக்கி அழும்
பச்சிளம் முகத்தைப்
பார்த்திருக்கிறேன்....
என்னதான் முரண்டுபிடித்தாலும்
பிள்ளையை பசியாறாமல்
விட்டுவிட முடியுமா?
எனக்குள் இருக்கும் தாய்மையே
உன் வரம்... என் சாபம்....
தீபாஸ்