வானம் வசப்பட்டது
வண்ணங்களால்
நிரப்பப்பட்ட
வெறும் தாளில் .
வானம் வசப்பட்டது
தூரிகை நடனத்தில்
நட்டுவனாரான
ஓவியன் ஜதியில்.
வானம் வசப்பட்டது
தூரத்தே விரிந்ததை
கிட்டத்தே தந்த
குவி-ஆடியால் (கண்ணாடியால்.)
வானம் வசப்பட்டது
ஓவியனுக்கு.
வண்ணங்களால்
தூரிகை நடனத்தால்
குவியாடியால் .
ஆடியில்(குவி) கண்ட அற்புதம்
இயற்கையின் ஏழு வண்ணம்
இறைவனே ஓவியன் !
உற்று நோக்கி
உணர்ந்த பின்னே
அற்று விட்டது அத்தனையும்
வானமே வசப்பட்டது.
இறுக்கிப்பிடித்த பிடிவாதத்துடன் இருவிழியால் சுட்டெரித்தாள் அந்த இறுமாப்புகாரி!
அலைகடல் மேல்
அசைந்தாடும் ஓடம் போல்
தத்தளித்தது அவள் மனம்!
பூங்காற்றின் வருடல்
அவள் அகத்தை திறந்து காட்ட
அதனுள்ளும் அவனே!
முகிழ்ந்தவள், மலர் சூடி, இதழ் வருடி
அவன் வருகைக்காக
கரையில் காத்திருந்தாள்!
மன ஓடங்கள் ஜோடியாய் கரை சேருமா
அவர்கள் கதைக்க
நாமும் காத்திருப்போம் !
புத்தக வழியில் - புது வெள்ளி, புது வானம் !
அகர முதல
எழுத்தை அறிந்து
ஆசான் வழி
கல்வி கற்று,
பட்டப் படிப்பும்
பட்டயமும்
பெற்றாலும் …
அது…
கைமண் அளவே!
புத்தனைப் போல்
போதிமரம்
தேட வேண்டாம்.
ஞானமே
நம்மை தேடி
புத்தக வடிவில் வரும்!
அறியாமை இருள்
அகற்றும் - ஒளி.
ஊனக் கண் திறந்து
உண்மை உலகை
உணரவைக்கும்
உபாத்தியாயர்.
அதன் கை பிடித்து
நடந்தால் ...
உலகை காட்டும்
உவகை கூட்டும்.
ஊர்கதை பேசும்
உன்மத்தம் பிடிக்கும்
சித்தம் தெளியும்
புத்தமும் புரியும் .
இருள் விடுத்து
ஞான ஒளி கிட்ட
புத்தக வழியில் -
புது வெள்ளி, புது வானம்
புது உலகை நேசிக்க
புறப்படுவோம்!
தேவரீர் திருவடிகளுக்கு,
....
அன்புடன் .
உம்மவள் .
மாதமிருமுறை,
செய்தி சுமந்து வந்தவை
பசு கன்று ஈன்றது முதல்
நெய் விற்று செய்த செலவு வரை
இம்மி பிசகாமல்
மடலேறிவிடும்.
திரைகடலோடி தேடிய திரவியம்
ஆணிப்பொன்னாக
கழனி ,கட்டிடமாக
கழிந்தது எப்படி
பக்கம் பக்கமாக
கடிதாசி வரும்.
பற்று வரவு பேசும் கடிதாசியில்
அவரை பற்றி நிற்பது
அவள் விளிக்கும் வாக்கியம் தான்.
தேவரீர் திருவடிகளுக்கு...
அணங்கவளின் பெருமூச்சும்
விரகமும் விரல் வழி வழிந்து
எங்கோ ஒரு சொல்லாய்
இழையோடி ஒளிந்திருக்காதோ!
கடுதாசிக்குள்
குடும்பம் நடத்துகையில்
அவளின் அகத்தை தேடுவார்
ம்கூம் ….
மிஞ்சியது அவரின் பெருமூச்சும்
“அன்புடன் உம்மவள்” மட்டுமே!
இரு வருடத்துக் கொருமுறை
வந்து செல்லும் போதும்
முகம் மலர்வாளே தவிர
அகம் திறந்தது இல்லை.
மசக்கையும் பிள்ளைகள் பிறப்பும்
அவரின் சாதனை பட்டியலில் சேரும்.
இளமை தொலைந்து
நரை வந்த பின்னே
கடமை முடிந்தது
திரவியம் போது மென
திரும்பி வந்த போது…
கடைசி மூச்சை கையில் பிடித்து
காத்திருந்தால் அந்த மாது.
அகமும், முகமும் மலர
தேவரீர் திருவடிக்காக…
அவளில்லாமல் எப்படி அவர் அரற்ற
மீண்டும் கடுதாசியில்
குடும்பம் நடத்த
அவருக்காக விட்டு சென்றாள்
மடலாக தன் அகத்தை !