வரவாகும் மழை
வருவதாகச் சொன்ன மழை
வரவில்லை
தொகுப்பூதியத் தொந்தரவால்
அல்லலுறும் தொழிலாளி போல
தூவானமும் மண்ணைத் தொட்டுக்
கூடப் பார்க்கவில்லை
மாதக் கணக்காகிவிட்ட
அழுக்குடை வாகனங்கள்
கழுவித் தீர்த்துக்கொள்ள
வானத்தினைப் பிளந்து ஒரு
வழி பிறக்குமென
பார்த்துப் பார்த்து
விழி வீங்கியது தான் மிச்சம்
பள்ளிக்கூடம் போகும் வழக்கம்
பழக்கமாகிக் கொண்டிருந்தாலும்
மழைநாள் லீவுக்குப்
பிள்ளைகள் ஏங்குவது
முன்னெப்போதைப் போன்றே
இப்போதும் இருக்கிறது
எத்தனை முறை மூழ்கித் திளைத்தாலும் மீண்டும்
வாராத போது வருத்தம்
மேலிடத்தான் செய்கிறது
வந்தால் வேண்டாமென்பதும்
வராவிட்டால் வேண்டுவதும்
அரிதிற் காதல்
செயல்களாக இல்லாமல்
தவறாத முழுநேரப்
பணியென்றே ஆகிவிட்டது
மழை வரலாம் தான்
ஏற்கனவே நின்ற வழிகளை
நேர்செய்யாமல் மண்மூடி
மறைக்கிற வகையில்
தப்பிக்கப் பார்க்கிறக்
கற்பிதங்கள் மாந்தருள்
குறையாமல் இருப்பதினால்
பொழிவது பிழையாகினும்
அதன் நிலை ஒன்றுதானே
இத்தனை அங்கிங்கெனாத
இடையூறுகளைக் கண்டும்
சளித்துக் கொள்ளாமல்
பெய்யும் மழையினைப்
பேரன்பு என்றல்லாமல்
வேறெப்படிப் போற்றுவது
நடராஜன் பெருமாள்
புரியாத விலகல்
ஈரம் காயாத முடிந்த
கூந்தலில் மல்லிகைப் பூச்சரத்துடன் எனக்குப் பிடித்தப்
புடவையில் வலம் வருவதோடு
சொட்டும் நீரில் நனைந்தப்
புறமுதுகிட்டுப்
போக்குக் காட்டுதல் வேறு
சிலிர்ப்பைக் கூட்டுகிறது
பிணக்குகள் அவளுக்குப்
பிடிக்காதென்று தெரியும்
ஆனாலும்
காலையிலிருந்து
அவள் இன்னும்
என்னிடம் பேசவில்லை
கண் விழித்துப்
புன்னகைத்தேன் கண்டுகொள்ளவேயில்லை
தட்டுப்பட சிக்குவாளென
ஒதுங்காமல் நின்றேன்
விலகி நடக்கிறாள்
எட்டி எடுப்பது போல
அவள்மீது மோத வந்தேன்
லாவகமாக நழுவுகிறாள்
நாக்கு ருசி காபி விரல்பட
கிடைக்குமென எதிர்பார்த்தேன்
தூர வைத்துத் தொடுதல்
தவிர்க்கப்பட்டு விட்டது
சிந்தனை நரம்பு செல்கள்
சூடாகிக் காரணம் தேடியது
எளிதில் பிடிபடவில்லை
கையலம்பும் சாக்கில்
கையோடு கை
பட்டுவிடாதா பரபரத்தால்
அவளது கை சட்டென வாய்துடைத்துப் பின்
கைத்துடைக்கிற சாக்கில்
முந்தானைக்குள்
முழுகிவிட்டது
குளித்து முடித்தும்
தொடுதல் குறையெனும்
தோசம் நீங்கவில்லை
ஏனிப்படி இவள் மனமின்று
கல்லாய் சமைந்து விட்டது
யாதொன்றும் புரியாமல்
ஏக்கப் பெருமூச்சுடன்
திரும்புகையில்
கன்னத்தில் முழுதாக
முத்தமிட்டு வாயில்
இனிப்பூட்டி நெற்றியில்
முத்தமிட்டுச் சொல்கிறாள்
" இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ".
நடராஜன் பெருமாள்
வாடா தம்பி வீட்டுக்குப் போலாம்
என்ன குழம்பாம்
சிக்கனாம்
நாட்டுக்கோழி
இல்லையே
பிரச்சனை
என்னன்னு
தெரியலை
ஊரைவிட்டு
கிளம்பணுமாம்
பாத்துக்
காலை வை
முள்ளு
இருக்கப்
போகுது
ஒன்னுக்கு
வந்தா சொல்லு
சட்டையை
ஈரமாக்காதே
பொடிப்பயல்ன்னு
சொல்றாங்களே
அப்டின்னா என்ன
காலைலேர்ந்து
பசி ஒருத்தனும்
ஒருவாய்ச்சோறு
தரமாட்றான்
என்ன
அப்பனுக்கும்
ஆத்தாளுக்கும்
மறுபடியும்
சண்டையா
ஒழுகாதக்
கூரை
நமக்கு
எப்போ
வாய்க்கும்
வழுக்கி
விழுந்தான்
சிரிச்சேன்
கன்னத்துல
அடிக்கிறான்
பக்கத்துல
பாப்பாவுக்கு
துணியேயில்ல
சோறு கொடுத்தேன்
என்னமோ
காசுன்றாங்க
வாழ்க்கைன்றாங்க
மிருகமாட்டம்
நடந்துக்குறாங்க
குறும்பில
குறும்பாப்
போட்டி
நீயும் வா
துண்டைக்
காணோம்
துணியக்
காணோம்
நாமளா
உலகம்
உருண்டையாமே
நாம எப்படி
நடக்கிறதாம்
பள்ளிக்கூடத்திற்குக்
கூப்பிடாத படிச்சு
காந்தியே
செத்துட்டாராமே
ஒரே ஏக்கமா
இருக்குப்பா
அம்மாவ
எப்போ
பார்ப்போம்
மீன்குழம்பு
வாசனை
நம்மள்தா
பக்கத்து வீடா
தோடா
பெரிய மனுஷி
வந்துட்டா
சோதரான்னுட்டு
பகல்ல
நட்சத்திரம்
எல்லாம்
எங்கே
தங்கும்
பூவும்
பொன்னும்
ஒன்னு
கேட்காம
பறிக்கக்கூடாது
காலையில
குடிச்ச காடி
பைப்புத்தண்ணி
கிடைக்குமா
பசிக்குத்
தின்னா
அதுக்குப் பேர்
திருட்டாக்கா
இளமையில்
வறுமை கொடிது
பிஞ்சு வயதில்
நாமெல்லாம்
தேவையில்லைன்னா
இந்தப் பூமியேன்
பொறந்துச்சு
ஆடுமாடு
ஒன்னாயிருக்கு
மனுசன் மட்டும்
ஏனிவ்வாறு
பயப்படாதக்கா
நண்பன்
அரை பிஸ்கோத்து
கொடுத்தான்
ரொம்ப
தூரமாம்
கையப்
பிடிச்சுக்கோ
போய்டலாம்
-
நடராஜன் பெருமாள்
பேசும் நாடு நகரங்கள்
நாடு நகரங்கள் பேசுமா
கேள்வியை விடுத்து
அவை மனம்விட்டுப்
பேசுவதற்கு ஒரு
வாய்ப்பளிக்க வேண்டும்
நட்டாற்றில் விட்டு விட்டீரேயென
அவற்றைப் புலம்ப விடுதல்
அத்தனை உத்தமம் ஆகாது
அவற்றின் விசும்பல்களைக்
கேட்பதற்கு சமையத்தில்
சிறப்பு காதுகள் தேவைப்படுகிறது
என்னதான் ஆச்சு இந்த
மக்களுக்கு ஏன் இத்தனைக்
கத்தியும் இவர்கள் செவியில்
ஏறவேயில்லை என்று
அவை பொருமுகின்றன
அதன் விளைவாகவே
அவ்வப்போது
மண்ணில்
சூடுபறக்கிறது
இவற்றினை வெற்றுப் பூலோக
மாற்றங்களாக மட்டும்
எடுத்துக்கொண்டு
அனைத்திற்கும் காரணம்
உலகமயமாக்கல் தானென
மக்கள் பொத்தாம் பொதுவாகப்
பேசி தம் உண்டுறைதல்
கடமையாற்றிப்
போய்க்கொண்டேயிருக்கின்றனர்
நாடு பேசுகிறதென்றால்
மக்கள் பேசுகின்றனர்
என்றதோர் அர்த்தம்
இப்போது எடுபடுவதில்லை
மக்கள் மக்களாக இருப்பது
அரிதாகிவிட்டபடியால்
வேறு வழியின்றி நாடே
வித விதமாகப் பேசிப் பார்க்கிறது
சூறாவளியை சுழற்றிவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறது
கொதிக்கும் சூரியனைக்
கொஞ்சி அனுப்பிப் பார்க்கிறது
வயல் வரப்புகளைக்
காயப்போட்டுப் பார்க்கிறது
அதற்கும் மசியவில்லையென்றால்
வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தி
தள்ளாட்டம் கொள்ளச் செய்கிறது
நாலே நாலு நாட்கள் அமைதியாக
இருந்துவிட்டு எனக்கென்ன
வந்ததென்று மக்கள் எங்கோ
வேக வேகமாகப்
போய்க்கொண்டிருக்கிறார்கள்
காற்றை மாசாக்கும் கடுஞ்செயல்
ஒன்றினையும் ஏவிப் பார்த்தது
மிக மிகத் தாமதமாகத்தான்
நாடு நகரங்களுக்கு
ஒன்று புரிந்தது
மக்களின் மனப்போக்கினைக்
கண்டுகொண்ட பின்பு
நாடும் நகரங்களும் ஒரு
உறுதிமொழியை
எடுத்துக் கொண்டன
எது நடந்தாலும் அது
தனக்கானதில்லை என்ற
உறுதிமொழியே அது
பின்னர் நடந்தவை நடப்பவை
எவற்றிற்கும் புலம்புவது
பேசுவது விடுத்து
நாடும் நகரங்களும்
தற்காலங்களில் மிகுந்த அமைதியில் திளைக்கின்றன.
-
நடராஜன் பெருமாள்