Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு கட்டுரைகள்

வகைகள் : பொது

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


பொது
நூறு சதவீத வாக்கு-அதுவே நமது இலக்கு

நூறு சதவீத வாக்கு-அதுவே நமது இலக்கு

கட்டாய வாக்குப்  பதிவு மீறினால் அபராதம்

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு குடியரசு ஆட்சி முறை என்ற கொள்கையின் அடிப்படையில் தன்னை கட்டமைத்துக் கொண்டது   முதல் தேர்தல் 1951 முதல் இன்று வரை 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் வாக்குரிமை அளித்து வருகிறது. படித்தவர்- படிக்காதவர், ஆண்- பெண், செல்வந்தர்- ஏழை, ஜாதி, மதம், இனம், மொழி என எந்தவித வேறுபாடு இன்றி அனைவருக்கும் வாக்குரிமையை அளித்தது போற்றுதலுக்குரிய விஷயமாகும்

மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மிகப்பெரிய நாடான இந்தியா இன்று வரை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஜனநாயக முறையில் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் மற்றும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை உலகத்தின் அனைத்து நாடுகளும் வியந்தும், பாராட்டியும்,  பின்பற்றியும் வருகிறது

 இந்திய ஜனநாயகத்தின் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்  தேர்தலில் வாக்களிக்கும் உரிமை  முறையாகும். 

பாகிஸ்தான் வங்காளதேசம் சில ஆசிய நாடுகளில் மற்றும் உலகின் பல நாடுகளில் ஆங்காங்கே ராணுவ புரட்சிகளும் சர்வாதிகாரமும் தலை தூக்கினாலும் இன்று வரை மக்களைச் சத்தியத்தின் வழியிலும்,  அறவழியிலும் தொடர்ந்து நடத்தி வருவது இந்திய ஜனநாயகத்தின் வாக்குரிமை  தான் முக்கிய காரணமாக உள்ளது

கொடுங்கோல் ஆட்சியாக இருந்தாலும் , கோமாளி ஆட்சியாக இருந்தாலும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் ஒரு சொட்டு ரத்தம் போடச் சிந்தாமல் மக்கள் நினைத்தால் தூக்கி எறியும்.. வாய்ப்பு தானாகவே  இந்திய மக்களுக்கு வாக்குரிமையினால் கொடுக்கப்பட்டுள்ளது இது ஒரு ஈடு இணையற்ற சக்தியாகும்

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தலில் வாக்களிப்பது மக்களின் உரிமை தான் தவிர அது கடமை அல்ல .  வாக்கு அளிப்பது ஒரு தனி மனித உரிமை எனில் வாக்களிக்க மறுப்பதும் சுய விருப்பத்தைச் சார்ந்ததாக உள்ளது

ஒரு நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் சுமார் 3,800 கோடிக்கு மேல் செலவு செய்கிறது  இது தவிர அரசு ஊழியர்கள், கல்லூரி மற்றும்   பள்ளி ஆசிரியர்கள், காவலர்கள் மற்றும்  துணை இராணுவத்தினர் என்று பலரது உழைப்பும் சேர்ந்துள்ளது 

ஒரு வாக்குச்சாவடிக்குக் குறைந்தபட்சம் நான்கு முதல் பத்து நபர்கள் தேவைப்படுகிறது மேலும் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகவும் ஒரு வாக்குச் சாவடிக்கு  5 முதல் 50 காவலர்கள் தேவைப்படுகின்றனர் பதட்டமான வாக்குச்சாவடி என்றால் துணை ராணுவத்தின் பங்களிப்பும் அதிகம்  இவ்வாறாக ஒரு நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு சுமார் 12 லட்சம் வாக்குச்சாவடிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அமைக்கிறது 

ஒரு பொதுத் தேர்தலைச் சந்திக்கத் தேர்தல் ஆணையம் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் முன்னதாக தயாராகிறது வாக்காளர்களின் பட்டியல் இறுதி செய்வதற்கும்,எவ்வாறு தேர்தலை நடத்த வேண்டும்  மற்றும்   எவ்வாறு வாக்கு இயந்திரத்தைக் கையாள வேண்டும் என மாவட்டம் தோறும்  பலமுறை பயிற்சி வகுப்புகளும் நடக்கிறது . இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு பொதுத் தேர்தல் நடத்தி முடிக்கத் தோராயமாக ஒரு கோடி நபர்களுக்கு மேல் உடல் உழைப்பினாலும்,  சுமார் 4000 கோடி மக்களின்  வரிப்பணமும் வாக்குரிமை நிலை நாட்டச் செலவு செய்யப்படுகிறது.

இதுவரை நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம்

 

Election year - Percentage

1951–52 —-      44.87%

1957—----------  45.44%

1962—---------55.42%

1967—----------61.04%

1971—---------55.27%

1977—----------60.49%

1980—-------56.92%

1984—--------64.01%

1989—--------61.95%

1991—-------56.73%

1996—-------57.94%

1998—------61.97%

1999—-------59.99%

2004—-------58.07%

2009—----------58.21%

2014—--------66.44%

2019—---------67.40%

முதல் தேர்தலில் இருந்தும் இன்று வரை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றை பொருத்தமட்டில் 67.4 சதவீதம் தான் அதிகபட்ச வாக்கு சதவீதமாகும் சராசரியாக 58% மக்கள் மட்டுமே தன்னை யார் ஆள வேண்டும் என்பதை உறுதி செய்கின்றனர் சராசரியாக மூன்றில் ஒரு நபர் எப்போதும் வாக்களிப்பதில்லை.

இந்திய ஜனநாயகத்தை மூன்றில் ஒருவர் புறக்கணிக்கிறார் இதற்கான காரணத்தைத் தேடும்  போது, மக்களுக்கு வேட்பாளர்கள் யார் மீதும் நம்பிக்கை இல்லை என்று காலம் காலமாகக் கூறி வந்தனர் இது குறித்து பல்வேறு விவாதங்கள் நாடாளுமன்றத்திலும், ஊடகங்களின் பேசப்பட்டு இறுதியாக  உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டது உச்சநீதிமன்றம் பல்வேறு காரணிகளை ஆராய்ந்து ஓட்டுப் பதிவு சதவீதத்தை உயர்த்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது  2014 ஆம் ஆண்டு நோட்டா (NOTA- None Of The Above) என்ற புதிய முறையைத் தேர்தலில் அறிமுகப்படுத்தியது அதன் பிறகு நடந்த இரண்டு பொதுத் தேர்தலில் சராசரியா 58 சதவீதம் வாக்கு மீதம் 66% ஆக உயர்ந்தது ஆனால்  நடைபெற்ற அனைத்து  தேர்தல்களிலும்  நோட்டாவிற்கு 2% இரண்டு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவானது

மேற்கூறிய தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுது தேர்தலில் புறக்கணிப்பதற்காகவோ,  வேட்பாளர்கள் விரும்பாத காரணத்தினாலோ மக்கள் ஓட்டளிக்கத் தவறுகின்றனர் என்பது உண்மை இல்லை 

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளைக் கவரும் அவல நிலையும் தொடர்ந்து வருகிறது இவ்வாறு பெரும் வெற்றியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் ஊழல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது 

இதனால் சமுதாய அக்கறையும் நற்சிந்தனையும் தூய எண்ணம் கொண்ட நல்லவர்கள் அரசியலில் தேர்ச்சி பெற முடியவில்லை. மேலும் இந்த அவல நிலை தொடர்வதால் பொதுவாக இளைஞர்களிடம் அரசியல் ஆர்வம் குறைந்து கொண்டே செல்வது வேதனைக்குரியது

இந்த காலத்தில் இளைஞர்கள் குறைந்தபட்சம் தன்னுடைய நாடாளுமன்றத் தொகுதி எது? சட்டமன்றத் தொகுதி எது?  நாம் எந்த தேர்தலில் ஓட்டு  அளிக்கிறோம்,  யார் வேட்பாளர்கள் என்ற அடிப்படையே அறியாமல் இருப்பது  மிகப்பெரும் கவலைக்குரியதாகும் 

அரசியலில் மாற்றத்தை விரும்பும் எல்லோருடைய கனவும் நிறைவேற வேண்டுமென்றால் இந்தியாவில் தேர்தலில் 100% ஓட்டளிக்கும் பங்களிப்பு வேண்டும் அப்போதுதான் இந்தியாவில் இருக்கும் கட்சிகள் தனது வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் கவனமாக இருப்பார்கள். சராசரியாக 67% ஓட்டுப் பதிவு நடக்கும் பொழுது இருமுனை போட்டி என்றால் கூட 34 சதவீதம் ஓட்டு வாங்குவார் வெற்றியாளராக ஆகிறார் பலமுனை  போட்டி இருந்தால் 20% குறைவானவர்கள் தேர்ந்தெடுக்கும் நபர் வெற்றியாளராகக் கருதப்படுகிறார் உண்மை நிலவரம் என்னவெனில் நூற்றுக்கு 80 பேர் புறக்கணிக்கப்படும் நபர் இந்திய நாட்டின் சட்ட இயற்றும் அதிகாரத்தைப் பெறுகிறார் என்பது வேதனைக்குரியது.

படித்த  இளைஞர்களும் , உயர்மட்ட வகுப்பினரும் வாக்குரிமை  மற்றும் அதன் அவசியம்  குறித்துச் சிந்திக்க மறுக்கின்றனர் தேர்தலில் வாக்கு செலுத்தாமல் இருப்பதற்கு என்று எந்தவித சிறப்புக் காரணங்களோ காரியங்களும் இல்லை “நாம் வாக்களித்து என்ன நடக்கப் போகிறது?” என்ற ஒரு மந்த புத்தியும், சோம்பேறித்தனமும் வாக்களிக்காமல் இருப்பதற்கான காரணம் இந்த நிலை மாற கட்டாய ஓட்டுப் பதிவு முறையை  Compulsory Voting இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் மேலும் வேறு சில வசதிகளையும் செய்து முழுமையான மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் மக்கள் தொகையில் சிறிய எண்ணிக்கையில்  நாடுகளின் இந்த முறை உள்ளது சிங்கப்பூர் ஆஸ்திரேலியா சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் நடைமுறை உள்ளது இந்த நாடுகளில் சிறந்த ஆட்சி முறை இருப்பதும் கவனிக்கத்தக்கது 

தினேஷ் கோஷ்சாமி ஆணையம் 1990 கட்டாய வாக்குப்பதிவு முறையை நிராகரித்தது அதனை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சவால்கள் உள்ளன என்ற காரணத்தினால் மறுத்தது. 1990 காட்டிலும் இப்போது தொழில் நுட்ப வசதிகள் மேம்பட்டு உள்ளனர் 

ஓட்டளிக்க மறுப்பவர்களுக்குத் தண்டனை அளிப்பதைக் குறித்து ஆய்வு செய்ய 2001 ஆம் ஆண்டு மத்தியக் குழு ஒன்றை அமைத்தது  ஓட்டளிக்காதவர்களுக்குத் தண்டனை வழங்குவதிலும் செயல்படுத்துவதிலும் பல நடைமுறை சிக்கலைச் சந்திக்க நேரிடும்   எனக்கூறி  நிராகரித்தது. 

 

100 சதவீதம் வாக்கு பெற சில யோசனைகள்

  1. தேர்தலைப் புறக்கணிக்கும் உரிமையும் / வழிமுறையும்  வழங்க வேண்டும்
  2. கட்டாய வாக்குப் பதிவு முறையை அமல்படுத்தும்போது வாக்களிக்க இயலாதவரின் காரணத்தையும் அறிந்து அதற்கு ஏற்ப வாக்களிப்பதில் விடுப்பு (Leave) என்ற முறையும் அறிமுகப்படுத்த வேண்டும்.
  3. வேலைவாய்ப்பு காரணத்திற்காகத் தொடர்ந்து வெளிநாட்டில் வசிப்பவர்கள் இந்தியத் தூதரகத்தை அணுகி தபால் முறையில் ஓட்டளிக்கும் முறையைக் கையாளலாம் முடிந்தால் இந்த முறையை வெளி மாநிலங்களில் வசிக்கும் தொழிலாளர்களுக்கும் நீட்டிப்பு செய்ய வேண்டும்.
  4. சரியான காரணமின்றி ஒட்டு செலுத்தத் தவறினால்  அந்த நபருக்கு அபராதம் வசூல் செய்ய வேண்டும்

 

தேர்தலைப் புறக்கணிக்கும் எண்ணம் இருந்தால் அது குறித்துத் தேர்தல் ஆணையத்திற்கும் அரசாங்கத்திற்கும் குறிப்பிட்ட காரணத்திற்காகப் புறக்கணிக்கிறேன் என்று தேர்தலுக்கு  முன்னதாகவே ஆன்லைனிலோ தபால் மூலமாகவோ தெரிவித்திருக்க வேண்டும் இதற்கு உரியத் தொழில் நுட்ப வசதிகளைத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும் அதன் பின் சம்பந்தப்பட்ட அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் 

தேர்தல் நாள் முடிந்த பிறகு வாக்களிக்காதவர் அதற்கான சரியான  காரணத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.  அதற்குரிய ஆவணங்களையும் அத்துடன் இணைக்க வேண்டும். காரணங்கள் சரியாக இருப்பின்  அவருக்கு வாக்களிப்பதில் விடுப்பு என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் 

திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் வெளியூரில் இறந்து விட்டால் அதன் காரணமாக ஓட்டளிக்க இயலவில்லை என்றால் ஓட்டளிப்பதில் விடுப்பு என்று ஏற்றுக் கொள்ளலாம்.  

தேர்தல் புறக்கணிப்பு அல்லது தேர்தல் வாக்கு விடுப்பு இல்லாமல் காரணமின்றி வாக்கு அளிக்காமல் இருப்போருக்கு அபராதம் அளிக்க வேண்டும் குறைந்தபட்சம் ரூபாய்  50. முதல் 500  வரை அபராத  தொகையாக  நிர்ணயிக்கலாம்

இவ்வாறு செய்தால் பெரும்பான்மையோர் தனது வாக்கு எங்கு உள்ளது என்பதிலும்  எங்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் முன்னரே சரிபார்த்து வாக்களிப்பதிலும் ஆர்வம் அதிகரிக்கும் அவ்வாறு வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்  அபராத தொகையைச் செலுத்துவதால் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கும் ஒரு பெரும் தொகை கிடைக்கும். அபராதம் என்பதன் நோக்கம் 100  சதவீதம் வாக்கு என்ற இலட்சியத்தை அடைவதற்காக மட்டுமே

தற்போதுள்ள நவீன யுகத்தில் இதனைச் செயல்படுத்துவது என்பது எளிதான காரியம் ஏற்கனவே இந்தியாவில் ஆதார் அட்டையும் வாக்காளர் அடையாள அட்டையும் இணைத்துள்ளனர். அதுபோல ஆதார் அடையாள அட்டை வங்கிக் கணக்குகளும் இணைக்கப்பட்டுள்ளது எனவே அபராத தொகை வசூலிப்பதில் பெரும் சிக்கல் நீடிக்காது. அபராதம் செலுத்தத் தவறினால் வரி வசூல் செய்யும் நடைமுறை போல் வசூல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். 

இளைஞர்கள் அடிப்படை அரசியல் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கக் கட்டாய வாக்குப்பதிவு முறை சிறந்த யுத்தியாக இருக்கும்.

மேற்கூறிய யோசனைகள் நடைமுறைக்கு வந்தால்  இந்தியா வல்லரசாகவும் கனவை மெய்ப்படவைக்கும் முக்கிய சக்தி சக்தியாக விளங்கும் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக  இருக்கும்

பாடுபட்டு வாங்கிய சுதந்திரம் பரிதாப நிலைக்குத் தள்ளப்படக்கூடாது வல்லரசாகும் இந்தியர்களின் கனவு மெய்ப்பட வேண்டும். நூறு சதவீத வாக்கு அதுவே நமது இலக்கு

ஜெய்ஹிந்த்

ராஜேஷ் பாலசுப்ரமணியன், 

 வழக்கறிஞர் சென்னை

பொது
கடவுளைப் புரிந்தவர் வாழ்வது சுலபமா..!?

கடவுள் தன்மையைப் புரிந்து கொண்டால் வாழ்வது சுலபமா !?


உயிரைக் காப்பாற்றுகிற மருத்துவரே தன்னால் முடிந்தவரை முயற்சி செய்த பிறகு நம் கையில் ஆவது ஒன்றுமில்லை இனி எல்லாம் அவன் செயல் என்று மேலே கையுயர்த்தி காண்பித்து விட்டு செல்லும் சூழலை நம்மில் பலர் சந்தித்திருக்கிறோம். அதன் பின்னர் நல்லது நடந்து விடுகையில் அது மனித செயல்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு விசயமாக பார்ப்பதையும் ஓரிரு நிகழ்வுகள் நினைவுறுத்துகின்றன. இதனைப் பொதுமைப்படுத்தி நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்றும் அதனைத் தொழுதால் முடியாத விசயங்களும் முடித்துக் காட்டப்படும் என்றும் ஒரு செய்தி ஆழமாக மக்கள் மனதில் வேரூன்றச் செய்யப்பட்டு விட்டது. நிகழ்தகவில் அரிதான விசயங்களை இவ்வாறு பொதுமைப்படுத்தி விடுவதால் உண்டாகும் நம்பிக்கை பெரும்பாலான சமையங்களில் பொய்த்துப் போகும்போது மக்களுக்கு தங்களது புரிதலில் மாற்றம் தேவை என்பதை விட தம் மீதே காழ்ப்பும் வாழ்வின் மேல் அவநம்பிக்கையும் தோன்றி விடுகிறது. இதற்கு காரணம், நடைமுறை வாழ்வு குறித்தான புரிதலை மக்கள் அடையாமல் அல்லது அது மக்களை அடைய விடாமல் வெறும் நம்பிக்கையின் பேரில் வாழ்க்கையை நகர்த்த வைப்பதின் விளைவாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அப்படியானால் நம்பிக்கையே கூடாது என்கிறீர்களா என்ற கேள்வி உடனே எழுகிறது. நாம் வாழும் இந்த வாழ்வு அறிவியல் முறைப்படி சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது நடைபெறுகிற எந்தவொரு மனித செயல்பாடும் அறிவியலுக்கு புறம்பானதாகவோ அல்லது அறிவியலுக்கு சம்பந்தமில்லாததாகவோ இருப்பதில்லை. மேலும் சமீப கால மனித வளர்ச்சி யாவும் அறிவியல் தந்த கொடையே (தீமைகளும் உண்டென்று மறுக்க முடியாத போதும்). இதில் புதிதாக ஏற்படுகிற அதீத நம்பிக்கை என்று எது வந்து சேர்ந்து கொண்டாலும் அதையும் ஆராய்ச்சி செய்து அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து முயற்சிகளும் இங்கே முன்பை விடத் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதெல்லாம் புரிகிறது சரி ஆனால் மிகச் சரியாக எங்கிருந்து பிரச்சினை தொடங்குகிறது என்பதுதான் புரியவில்லை என்கிறீர்களா. அப்படியானால் மீண்டும் வாழ்க்கை குறித்து கொஞ்சம் விளக்கம் சொல்லிவிட்டு ஆரம்பிக்க வேண்டியதுதான்.

தர்க்கம் தத்துவத்தின் படி இந்த மனித வாழ்வென்பது பதில்களைத் தேடிக் கொண்டிருக்கிற கேள்விகளால் ஆனது. ஆன்மீக விளக்கங்களின் படி வாழ்க்கை என்பது ஒரு மாயை. அறிவியலின் படி இந்த வாழ்வென்பது உடலில் உயிர் உள்ளவரை என்பதாக புரிய வைக்கப்பட்டிருக்கிறது. இவைகளைத் தாண்டிய விளக்கங்களும் சாத்தியமானது தான் என்றாலும் இப்போதைக்கு பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொண்டவை என்ற வகையில் இந்த விளக்கங்கள் உண்மைக்கு அருகில் இருப்பதாக கொள்ளலாம். ஆனால் இங்கு முக்கியமாக நமது நாட்டில் ஆன்மீகப் புரிதல் என்பது மதநம்பிக்கை அல்லது கடவுள் நம்பிக்கை என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. அதனால் தான் கடவுள் இருக்கிறார் இல்லை என்ற தர்க்கம் தொடர்ந்து நீடிக்கிறது. அந்த நம்பிக்கை வழியாக செய்யப்படுகிற அனைத்து வித மோசடிகளையும் அறிவுடையோர் புரிந்து வைத்துள்ளார்கள் என்பதே சற்றே ஆறுதலான விசயம். சரி நாம் நம் விசயத்திற்கு வருவோம். ஆக தன்னை உணர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கை ஒரு மாயை என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்பதான ஆன்மீகப் புரிதல் தான் தர்க்க அறிவு சார்ந்த உயர்ந்த சிந்தனையாக இங்கே பார்க்கப்படுகிறது. ஏன் அப்படி என்றால், ஆன்மீக விளக்கங்களின் படி எதுவுமில்லாததிலிருந்தே இங்கு அனைத்தும் தோன்றுவதாலும் தன்னை உணரும் அந்த நிலை அப்படியான எதுவுமற்ற நிலையே என்பதாலும் அந்த நிலையில் இருந்து செய்யப்படும் எந்த ஒரு செயலும் இந்த உலகம் முழுமை பெற்று உண்டானதைப் போல முழுமையானதாகவே இருக்கும் என்று சர்வ நிச்சயமாக நம்பப்படுகிறது. அதனால் தான் உலகம் முழுக்க மேன்மையான அறிவு பெற்றவர்கள் என்று சொல்லப்படுகிற அனைவரும் இந்த நிலையை அடைவதையே வாழ்வின் இலக்காக கொண்டு செயல்படுகிறார்கள். இதை சிந்தனையை மேம்படுத்த அறிவியல் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன என்பது கூடுதல் தகவல். சரி சரி இன்னும் விசயத்திற்கு வரவில்லை என்று தானே சொல்கிறீர்கள். இதோ அதையும் சொல்லி விடுவோம். 

ஆக தன்னை உணர்ந்து கொண்ட நிலையாக சொல்லப்படுகிற அந்த கடவுள் தன்மையைப் புரிந்து கொண்டால் என்ன நன்மை ஏற்பட்டு விடும் !?. ஏன் அதனை இத்தனை சிலாகிக்கிறார்கள் !?. உண்மையில் அதை அடைவது தான் வாழ்வின் சிறந்த செயலா அப்படியான அந்த நிலையை சுலபமாக அடைந்து விட முடியுமா எல்லோருக்கும் அது சாத்தியமா போன்ற கேள்விகள் பல இருக்கின்றன. இவைகளையெல்லாம் கடந்து தான் நமது கேள்விக்கு நாம் விடை காண வேண்டும். காலங்காலமாக தொடர்ந்து கடுமையான முயற்சி செய்து தியானம் செய்து அடையக் கூடிய ஒரு விசயமாகவே இதைப் பார்ப்பதும் அது இந்த மானுடத்திற்கு ஒரு எட்டாக்கனி என்பது போல் தொடர்ந்து காட்டப்பட்டு வந்தது உண்மையே. காரணம், பொதுவாக பெரும்பாலான மக்களுக்கு அறிவு சென்று சேர்ந்திராத நிலையில் அப்போது வளர்ச்சியடைந்திருந்த அந்த அறிவுக்கு எட்டியதைச் சொன்னவர்கள் சொன்னதையே, அவர்களை விட பலமடங்கு பொதுவெளியில் பெரும்பாலான மக்கள் தமது அறிவில் வளர்ந்தவர்களாக இருக்கிற இந்த காலத்திலும் சொல்வதால், அது ஏதோ பெரும் முயற்சி செய்து அடைய வேண்டிய நிலை என்ற தேவையில்லாத கருத்தாக்கம் ஏற்பட்டு நிலைபெற்று விட்டது. உண்மையில் அன்று பேசப்பட்ட அந்த நிலையை விட இன்றைய மனிதர்களின் புரிதல் வெகுவாக உயர்ந்திருக்கிறது. அவர்கள் சொன்ன அந்த அறிவு தான் மிகச் சிறந்த அறிவு என்று புரிந்து கொண்டிருக்கிற இன்றைய மக்களுக்கு, அவர்களை விட பல மடங்கு உயரத்தில் இருக்கிற தமது இந்த அறிவு தான் அன்று அவர்கள் சொன்ன தன்னை அறிந்து கொள்ளும் ஆன்மீக நிலை அல்லது கடவுள் தன்மை என்பது புரியவில்லை அல்லது புரிந்து கொள்வதிலிருந்து ஏதோ ஒரு வகையில் தடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உறுதியாக சொல்லலாம். அறிவியலின் கூற்றுப்படி ஆழ்ந்த நுண்ணிய அறிவுதான் ஞானம் கைவரப்பெற்ற கவனம் நிறைந்த அந்த நிலை. ஆகவே இன்றைய கால மனிதன் ஏற்கனவே அந்த கவனம் குவிந்த ஞான நிலையில் தான் இருக்கிறான். அது ஏதோ அடைய முடியாத நிலை என்று சொல்லப்பட்டதால் அது இது தான் என்று அறிந்து கொள்ள முடியாத குழப்ப நிலையில் இருந்தான். இப்போது அது என்னவென்றத் தெளிவு கிடைத்து விட்டபடியால் நுண்ணிய அறிவாக இருக்கிற அந்த ஞான நிலை அல்லது கடவுள் தன்மையைப் புரிந்து கொண்டால் வாழ்க்கை இன்னும் சுலபமாகும் தானே நண்பர்களே.

நன்றியுடன் 

உங்கள் நண்பன் 
நடராஜன் பெருமாள்

WhatsApp

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!