கனவெல்லாம் காதற்ற ஊசி
ஒன்றை தேடித்தேடியே
இரவு கழிகிறது...
விழித்த பின்னும்
இனிக்காத கரும்பை
இனிக்கும் என்று நினைத்தே..
சுமந்து திரிந்தே பகலும் கழிகிறது..
எதையோ தேடி எதையோ சுமந்து..
இது என்னமாதிரி வாழ்க்கை?
விக்கிரமாதித்தன் தோளில் கிடந்த வேதாளம்
எள்ளி நகையாடியது...
மதி நுட்பம் நிறைந்த மன்னா! என அழைத்து
ஒரு கதையை கூறி முடித்து..
ஒரு கேள்வி கேட்டது மன்னா!
இந்த உலகத்தில் மிகவும் நகைப்புக்குறிய விசயம் எது?..
இதற்கு சரியான பதில் தெரிந்தும் நீ மௌனம் சாதித்தால்
உன் தலை சுக்கு நூறாக தெறித்து விடும் என்று எச்சரித்தது..
விக்கிரமாதித்தன் பதில்: இந்த உலகில், வயதானவர், நடுத்தர வாயதுடையோர், இளைஞர், பாலகன், குழந்தை, பிறந்த சிசு என, தினம் தினம் இறப்பதை பார்த்த பின்னரும், தான் மட்டும் இந்த உலகில் காலம், காலமாய் இருக்க போகிறோம் என்பது போல் அகங்காரத்துடன் திரிகிறார்களே, அந்த ஆணவம் தான் மிகப் பெரிய நகைச்சுவை என்கிறான்.
இந்த பதிலை கேட்டதும், மீண்டும் வேதாளம் புளிய மரத்திற்கு தாவியது.
ஒரு கத சொல்ட்டா..?!"
எங்கம்மா, பாட்டி, தொத்தா (சித்தி), நானுனு எல்லோரும், ரெண்டு கிலோமீட்டர் தள்ளியிருக்ற எங்கூரு தியேட்டர்ல, ஈவ்னிங் ஷோ பார்த்துட்டு வெளியே வந்தோம்...
அப்போ, நைட்ஷோவுக்கான 'உத்தமப் புத்திரன்' பட போஸ்டர்ல, ராகிணியை ராவா காமிச்சுட்டு, பத்மினியின் கச்சையை முக்கால்வாசி மூடியிருந்த 'இன்றே கடைசி' ன்ற அரையடி 'பிட்டு' போஸ்டரை கை காட்டி, அதை நான் பார்த்தேயாகணும்'னு அடம்புடிச்சப்போ எனக்கு வயசு ஆறு!
இந்தக் கொழந்தயோட ஆசையை நிறைவேத்த, நைட்ஷோவுக்கும் டிக்கெட் எடுத்துட்டு பால்கனியில உட்கார்ந்து படம் பார்த்துக்கிட்ருந்தோம்...
கொஞ்ச நேரத்துல, "யாரடீ நீ மோகினீ..." னு பாட்டு ஓடிக்கிட்ருந்தப்போ.., எல்லாரும் ஸ்டைலான சிவாஜியை ரசிச்சுக்கிட்டிருந்தாங்க...
நான் மட்டும், அது டாப் ஆங்கிள்' ஷாட்'னு கூடத் தெரியாம.., கிறுகிறுகிறு'னு சுத்திக்கிட்டிருந்த அந்த ரெண்டு நாயகிகளோட முட்டியாச்சும் தெரிஞ்சிடாதா'னு, முட்டிபோட்டு குனிஞ்சு பார்த்துக்கிட்ருந்தேன்... ஆனா.., கால் கட்டைவிரல் கூடத் தெரியாதபடி தரையைப் பெருக்குற அளவுக்குப் பாவாடையைக் கட்டியிருந்தாங்க அவங்க! அடுத்தமுறை தரை டிக்கெட் எடுத்துவந்து பார்த்துடணும்'னு முடிவு செய்தேன்.
இந்த நேரத்துல தான்.., திடீர்னு அந்தப் பாட்டுல வர்ற சாட்டையடி மட்டும் எனக்கு பொளீர்... பொளீர்னு DTS ல கேட்குது...
என்னடா விஷயம்னு திரும்பிப் பார்த்தா.., சிவாஜிக்கு பதிலா, என் அப்பா கையில சாட்டையோட பக்கத்துல நின்னுக்கிட்ருக்காரு...
மாலைக்காட்சிக்குப் போனவங்க, இரவு பதினோரு மணியாகியும் வீடு திரும்பாததால.., எங்களைத் தேடிக்கிட்டு தியேட்டர் பால்கனிக்கே வரிஞ்சுக்கட்டிக்கிட்டு வந்த என் தகப்பர்.., எல்லாத்துக்கும் காரணமான என்னய விட்டுட்டு, அம்மா, சித்தினு என்னோட உட்கார்ந்திருந்த எல்லா பொம்பளைங்களையும் பொள.. பொள'னு பொளந்துக்கிட்ருக்காரு...
தடுக்கப் பார்த்தப் பாட்டியை, பெத்த ஆத்தானு கூடப் பாக்கலையே.., சும்மா.., வுட்ட அடியில, பாட்டிக்கு கடவாப்பல்லு பேந்துடுச்சி!!
இப்ப கூட, அந்தப் பாட்டு டிவியில ஓடும்போதெல்லாம்... சம்பவத்தை நெனச்சு பயத்தோடவே பகிர்ந்துக்குவாங்க, எங்க அம்மா.
ம்ம்.., முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேன்...,
அன்னிக்கி, அனுமதியின்றி "உத்தமப்புத்திர"னைப் பார்த்ததற்காக உதை வாங்கிய எங்க வீட்டுப் பொம்பளைங்களுக்கு.., ஈவ்னிங் ஷோ பார்க்க மட்டும் முழுச் சுதந்திரம் இருந்தது... ஏனெனில், அப்படத்தின் பெயர்... "அடிமைப்பெண்!"
- ப்ரியா வெங்கடேசன் @ 8056584237.
நந்தினி சுகுமாரனின் குலக்கதை - இணைய நூல் விமர்சனம்
குலக்கதை
இரண்டு பாகங்களாக இணையத்தில் எழுதப்பட்ட நூல்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும், பல ஓடைகளும், சிற்றாறுகளும், காட்டாறுகளும் ஒன்று சேர்ந்து வைகையாய் உருப் பெற்று , வேகவதியாய் ஓடி, கண்மாயில் கலந்து நிற்கும்.
அதுபோலத் தான்,நந்தினி சுகுமாரனின் எழுத்தும், இந்த கதையும். தமிழ் மண்ணில் வேரூன்றிக் கிடக்கும் , குலதெய்வம், இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் வீட்டுத் தெய்வம் பற்றிய கதை இந்த குலக்கதை.
முற்பகுதியில், கதை ,காட்டாற்று வெள்ளமாக மஞ்சளாடைகாரி, சித்திரகலா பூங்கோதை, ஆகியனவாக பிரவாகித்து, அங்கங்கே சில சம்பவங்கள் கோர்க்கப்பட்டு, பாலாம்பிகை,கிருஷ்ணம்மாள்,ராஜநாயகி, மரிக்கொழுந்து, செந்தில்நாதன், கரிகாலன், சங்கீதா கதாபாத்திரங்கள் வந்தபின், தெளிந்த நீரோடையாக வேகமெடுத்துப் பாய்கிறது.
குலகதையின் தெய்வங்கள் வாசகர் மனதில் குடிகொண்டு விடுகிறது. இனி மஞ்சள் உருண்டையை பார்க்கும்போதும், காமாட்சி விளக்கின் சுடரிலும் இந்த தெய்வங்கள் நம் நினைவில் வந்து போவார்கள்.
நம்மைப் போல் பிறந்த ஆன்மாக்கள், ஊருக்காக,தனது குலத்துக்காகத் தன்னையே பலி கொடுத்து , நோய்,நொடி , அடக்குமுறை ,இயற்கை பேரழிவுகளிலிருந்து நம்மைக் காத்து மேல்நிலை அடைந்திருக்கும் . அந்த ஆன்மாவை வழிபட ஆரம்பித்து இருப்பர். சில தலைமுறை தாண்டும் போது, மனிதருள் ஏற்படும் குண இயல்பு மாறுபாடுகள், வழிபாட்டிலும் பிரதிபலித்து இருக்கும்.இவை நன்மை தீமை இரண்டையும் கூட்டித் தரும்.
குழந்தையும்,தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பர். இங்குத் தெய்வமே குழந்தைதான்.கன்னிகை,கன்னியம்மாள் என்ற மஞ்சளாடைக்காரி. அவளைத் தெய்வமாய் அடைந்து, அதன் அருமை தெரியாமல் தொலைத்து, கஷ்டங்களை அனுபவித்து, எத்தை தின்றால் பித்தம்தெளியும் என விடை அறியாது நிற்கும் குலம், ஆற்றில் நீரோடு கரைந்த மஞ்சளாடைக்காரியை, அணைத்து , அரவணைத்து வழிபடும் மற்றொரு குலம். தாத்தாவாக எல்லை சாமியை உருவகப்படுத்தி, அவரை பெட்டியிலிருந்து கோவிலில் நிறுவும் குலம்.
இப்படியான மூன்று குலங்களின் தெய்வங்களையும், மனிதரையும் நிகழ்வுகளையும் ,முற்பிறப்பு, இப்பிறப்பு என அழகாக வடிவமைத்து, இதற்கு இது காரணமென அழகான பூமாலையாக, அதிரல் ,மருதம், கோர்த்துக் கொடுக்கப்பட்ட அருமையான புனைவு.
பலநூற்றாண்டுகள் கடந்து எப்படி மீண்டும் ஒன்றுகூடி வழிபடுகின்றனர், என்பதை சொல்லும் கதை.
மனித இயல்புகளை, படாடோபம் இல்லாமல், இயல்பாக எழுத்தாக்க இந்த ஆசிரியரால் மட்டுமே முடியும். நக்கல்,நய்யாண்டியோடு இயல்பான நடை.
சித்திரகலா, பூங்கோதை என முற்பிறப்பு கதை வருமிடங்களில் நற்றிணை, குறுந்தொகை என சங்க கால பாடல்கள் கதைக்கு பொருத்தமாய் அமைந்து, ஆசிரியரின் விளக்கங்களோடு கதைக்கு மெருகூட்டுகிறது.
முதல் பாகத்தையும்,இரண்டாம் பாகத்தையும் அழகாக வடிவமைத்து, சம்பவங்களில் இடைவெளி விட்டு, எதிர்பார்ப்பை தூண்டி, மீண்டும் சரியாக நிரப்பி, ஆரம்பம்,முடிவு கதையை முடித்த விதமும் அருமை.
அகமும்,புறமும் , பக்தியும்,காதலும் முற்பிறப்பு,இப்பிறப்பும் சேர்ந்த அருமையான புனைவு. கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய கதை.
இப்படி ஒரு கதை எழுதப்படும்போது ,அதில் உள்ள சவால்கள் எத்தனை , எல்லாம் சரியாக கொடுக்கவேண்டும் என்ற தவிப்பு எப்படியிருக்கும், என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. கதையை நிறைவாய் முடித்தமைக்கும் வாழ்த்துக்கள் நந்தினி சுகுமாரன்.
உங்கள் எழுத்து பயணத்தில் மற்றொமொரு மகுடம் சூடும் படைப்பு இந்த குலக்கதை. மேலும் நல்ல பல கதைகள் படைக்க வாழ்த்துக்கள்.
இருவாச்சி தளத்தில், இணையத்தில் வரும் நல்ல கதைகளை அடையாளப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு பகுதியை வைத்துளோம். அதில் முதல் விமர்சனமாக குலக்கதை அமைந்ததில் மகிழ்ச்சி.
தீபா செண்பகம்
பாட்டும் நானே... 'பாவமும்' நானே...!!"
சினிமாப் பாடல் வரிகளை சரியா கவனிக்காம, தப்பு தப்பா புரிஞ்சுக்கிட்டு பாடித்திரிந்த அனுபவம் நம்ம எல்லோருக்குமே இருக்கும். உண்மையான வரியை உணர்ந்த பின்பு, அப்பாடல் மீதான நம் பார்வையே மாறிப்போய், ஒவ்வொரு முறையும் அப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நம் நினைவலைகள் பின்னோக்கிச் செல்லும் தானே?!
அப்படியொரு சுவையான அனுபவம் எனக்கும் ஏற்பட்டதுண்டு..!
'ஒரு பாதி கனவு நீயடா... மறு பாதி கனவு நானடா..' என்று ஒரு மொக்க(?!) சாங் வரும். ட்ராவல்ல அந்தப் பாட்டு வர்றப்போலாம் ஸ்கிப் பண்ணிடுவேன்.
ரொம்ப நாளைக்கப்புறம் பஸ்ல போறப்போ அந்தப் பாட்டைப் போட்டான் என் ஆஸ்தான டிரைவன்!
முதல் சீட்லயே உட்கார்ந்திருந்த நானு, 'Fwd' பட்டனை அழுத்தணும்ங்குற முடிவோட, என் செருப்பை மாட்டிக்கிட்டு எந்திரிக்கும் போது... பக்கத்துல(?!) உக்கார்ந்திருந்த சுடிதார், அந்தப் பாட்டை ரசிக்கும் தொணியில் 'ஹம்' பண்ண ஆரம்பிச்சா. நமக்குத்தான் வயசுப்புள்ளைங்களப் பார்த்தாலே இரக்க குணம் பீறிட்டு வந்திடுமே...
பாட்ட மாத்த எழுந்த நானு... அவ ரசிக்குறதைப் பார்த்ததும், 'வால்யூமை உயர்த்தி'.. "அருமையான பாட்டுப்பா.." ன்னுட்டு அவ பக்கத்துல இன்னும் ரெண்டு இஞ்ச் நெருக்கமா உட்கார்ந்ததை, கண்ணாடி வழியா கவனிச்சுக் கண்ணடிச்ச டிரைவரின் பின்மண்டையில தட்டி, "மச்சீ... பாட்டைக் கேட்டுக்கிட்டே தூங்கிடாதேடா.., முன்னாடிப் பார்த்து கவனமா ஓட்டு" என ஓவராக்டிங்கை அடக்கிவிட்டு அமர்ந்தேன்.
அப்புறமென்ன..., அவ பாட.. நான் வாயசைக்க... அவ தலையசைக்க நான் பாட.... நல்லபடியா போய்க்கிட்டிருந்த இந்த எடத்துல தான் ஒரு ட்விஸ்ட்டு...
எனக்கும் வரிகள் தெரியும்'னு நம்மாளுக்கு காமிக்க நினைச்சு, எட்டுக்கட்டையில கஜலைப் புடிச்சு, ஹை பிட்ச்ல குரலை உயர்த்தி, "ஒரு பாதி கனவு நானடா.." ன்னு பாடினேன்(?!).
உடனே, பட்சி புருவத்தை உயர்த்தி மொறைச்சதும் கப்புனு நிப்பாட்டிட்டு... அடுத்த வரியைக் கேட்டேன்.... அது, "..மறு பாதி 'கதவு' நீயடா..." ன்னுச்சு...
அதுக்கப்புறமும் வாயத் தொறந்திருப்பேன்னு நினைக்குறீங்க..?! ம்ஹூம்...
இப்ப என் டிரைவர் மாப்ள ஸ்டெயரிங்குலேர்ந்து ரெண்டு கையையும் எடுத்து காலரைத் தூக்கிவிட்டுக்கிட்டே.., "ஒரு பாதி கதவு நீயடி.., மறு பாதி கதவு நானடி..." ன்னு சத்தமா பாடினான் பாருங்க...,
எனக்கு ரொம்ப அவமானமாப் போச்சு கொமாரூ....
அப்படியே.... எழுந்துப்போயி, கடைசி படிக்கட்டுக்கும் அப்பால இருக்குற ஆறு பேரு சீட்ல குப்புறப் படுத்து குலுங்கி குலுங்கி அழுதேன்...
இதனால் அறிவிக்கப் படுவது யாதெனில்.., நீங்கள் உச்சரிக்க வேண்டிய சொல் "கனவு" அல்ல... "கதவு!!"
என் ஃபேவரிட் லிஸ்ட்டில் தவறாமல் இடம்பிடிக்கும் அருமையான சிலேடை வரிகளை எனக்கு உணர்த்திய அந்தச் சுடிதாருக்கு ஒரு நன்றி கூடச் சொல்லாத ஏக்கம் இன்னமுமிருக்கு...
9th படிக்கும் போதே ராணி முத்து புத்தகத்தில் கதை எழுதியுள்ளேன்...
அந்த கால கட்டத்தில் ராணிமுத்து நல்ல பேமஸ்.. அதில் கதை போட்டி அறிவித்து 200 ரூபாய் பரிசு என்று இருந்தது.
உடனே நானும் அவனும் (அவனும் நம்ம சொந்தக்காரன்தான்)
களத்தில் குதித்தோம், பரிசு 200 ரூபாயில் ஆளுக்கு நூறு ரூபாய் பங்கு..
ரமணி சித்தியிடம் நிறைய ராணி முத்து புத்தகம் இருந்தது அதில் பழைய புத்தகம் ஒன்றை ஆட்டையை போட்டு வந்து..
ஒரு வரி விடாமல் எழுதினோம், மூன்று நாட்கள் இருவரும் சேர்ந்து எழுதி, A4 பேப்பரில்15 பேப்பர்கள்!!.. ஒரு வழியாக எழுதி ராணிமுத்து பத்திரிகைக்கும் அனுப்பிவிட்டோம்.
பத்து நாட்கள் கழித்து திரும்பி வந்தது..
அதில் ஆசிரியர் பதில்.. "தூ "என்ற ஒரே எழுத்துதான்
அவன் எங்களை அப்படி துப்பியதற்கு முக்கிய காரணம் நாங்கள் இடை, இடையே வரும் விளம்பரங்களையும் விட வில்லை அதையும் எழுதி விட்டோம்..
அதிலதான் அவன் ரொம்ப கடுப்பாகி விட்டான்..
'உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பது லைபாய் மட்டுமே'
'உங்கள் பற்கள் முத்து போல் பிரகாசிக்க கோபால் பல் பொடி'
போன்ற விளம்பரங்கள்..
எப்படியோ எங்கள் கதை எழுதும் ஆர்வத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டான் அந்த படுபாவி.
ஸ்வர்ணலதா எனும் புல்லாங்குரலுக்குப் பிறந்தநாள்...
ஒரு பாடலை அடிக்கடி கேட்க நேரிடுகையில், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இசைக்கருவியைப் பின்பற்றி உற்றுநோக்குவது என் வழக்கம். ஆனால், ஸ்வர்ணலதாவின் குரலில் வந்த பாடல்கள் மட்டும் விதிவிலக்கு! எத்தனை முறை கேட்டாலும், என் அத்தனைப் புலன்களும், அவர் குரலை நோக்கி மட்டுமே கடிவாளமிடப்பட்டிருக்கும். அப்பாடலின் வரிகள்.., இசைக்கருவிகள்.., வாயசைத்த நடிகர்.., காட்சியாக்கம் உள்ளிட்ட எதன்மீதும் என் கவனம் செல்வதேயில்லை..
எவ்வளவு மனக்குழப்பத்திலிருந்தாலும், ஸ்வர்ணலதாவின் ஒற்றைக்குரல் போதும், நான் மிதக்க!
என் அக உணர்வுக்கு நெருக்கமான குரலாக அது எப்படித்தான் மாறிப்போனதோ தெரியவில்லை. இவரின் குரல் கேட்கும்போதெல்லாம்.., என் காதுகளும் கர்வம் கொள்ளும்!
திரையிசையில் எத்தனையோ குரல்கள் நம்மை உருக வைத்திருந்தாலும், அவற்றிலெல்லாம் கிடைக்காத ஏதோவொன்று ஸ்வர்ணலதாவின் குரலில் இழைந்து, செவிவழியே இதயத்துக்கு நேரடியாகப் பரிமாறப்படும்.. அந்த ஏதோவொன்றைத்தான் என்னவென அறியமுடியாமல், இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்...
மோனலிசாவின் மெல்லிய சோகத்தையும் ஒலிவடிவாக்கத் தெரிந்த ஒரே காந்தக்குரலழகியான இவர், என்ன பாடினாலும் அது எனக்கு வார்த்தையாக அல்லாமல், ஹம்மிங்'காக மட்டுமே பதியும். ஆம்..,
SPBயின் குரலில் வரும் முதல் வரியை, "அடி ராக்கம்மா கையத்தட்டு, புது ராகத்தில் மெட்டுக்கட்டு.." என்று மனனம் செய்யும் என் மனம், ஸ்வர்ணலதா குரலில் வரும் அடுத்த வரியை மட்டும், "தன தானன்னா தன்னன்னன்ன., தன தானன்னா தானேனானா..." என்று தான் என்னுள் பதிய வைக்கும்!
ம்ம்ம்...... என்றோ.., அஅஹஹஆ..... என்றோ.., நீளும் ஆலாபனையின் ஏதோவொரு கணுவில் அந்தக் குரல் உடைந்துவிடாதாயெனும் ஏக்கத்துடன், அவரின் குரலை மட்டும் முருக்குக்கயிறாய்த் தழுவிக்கொண்டே பின்தொடரும் என் மனம்...
"மாலையில் யாரோ மனதோடு பேச.." பாடலை மட்டும், இதுவரை பல்லாயிரம் தடவைகள் கேட்டிருப்பேன்! கேசட்டுகள் தேய்ந்து.., பாட்டுப்புத்தகங்கள் கிழிந்து.., சி.டி.கள் உடைந்து.., பல ஜி.பி.கள் தீர்ந்தபோதிலும், ஸ்வர்ணலதாவின் குரலினிமையைத் தாண்டி, பாடல் வரிகளுக்குள் என் கவனம் சென்றதேயில்லை. ஏனெனில், இவருடைய பாடலெனக்கு, கேட்டு உருக மட்டுமே; வரிகளை மனனம் செய்ய அல்ல!!
நிச்சயம் அப்பாடலை, இன்னும் பல ஆயிரம் முறை கேட்கத்தான் போகிறேன்.., ஆனாலும் அவரின் குரலைத் தாண்டி, எந்த வரியும் மனப்பாடமாகப்போவதில்லையென்பது திண்ணம்!
ஒருவேளை, எப்போதாவது அந்தப் பாடல் வரிகள் மனப்பாடமாகிவிட்டால்.., அப்போது, ஸ்வர்ணலதா குரல் மீதான என் ஈர்ப்பு குறைந்திருக்கலாம்.. அல்லது, அவர் இறந்துவிட்டார் என்பதை நான் நம்பிவிட்டிருக்கலாம்...
- ப்ரியா வெங்கடேசன் @ 8056584237.
யாத்திசை திரைப்பட விமர்சனம்
நடிகர்கள், டெக்னீஷியன்கள், டெக்னாலஜிகள் என, எல்லாவற்றிலும் உயர்தரமானவற்றைக் கொண்டிருப்பவர்களால் கூட, இதுவரையிலும் தரமுடியாத, உண்மைக்கு நெருக்கமான ஒரு பீரியட் படத்தை, எந்த வசதிவாய்ப்புகளுமின்றி ஒரு சாமான்ய இயக்குனர் கொடுத்திருப்பது நிச்சயம் பாராட்டத்தக்கது!
தன் திரைப்பட வெற்றிக்கு, பிரபலங்களை நம்பாமல், பிற பலங்களான, கதைக்கரு, திரைக்கதையோட்டம், நம்பகமான அளவில் சி.ஜி.வேலைப்பாடுகள், உணர்வுகளை மெருகேற்றும் தேர்ந்த இசை.. போன்றவற்றில் கவனம் செலுத்தி, தரமான படைப்பைத் தந்துள்ளார், இயக்குனர் தரணி ராசேந்திரன்.
நடிகர்களைத் தவிர்த்துவிட்டு, சக மனிதர்களை நடிக்கவைத்திருப்பது, உண்மைக்கு மிக நெருக்கமான படைப்பாக இத்திரைப்படத்தை மாற்றியுள்ளது.
பெரிய நடிகர்கள் எவருமின்றி இக்கதைக்களத்தைக் கையாண்டது வியப்பையளிக்கிறது. ஆனாலும், அதீத தன்னம்பிக்கையுடன் இப்படைப்பைச் செதுக்கி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், இயக்குநர்!
வடதமிழகத்தில் தற்போதும் புழக்கத்திலிருக்கும் மாவளி சுற்றுவதைத் திரையில் ஆவணப்படுத்தியிருப்பது அழகு.
இதுவரையிலும், திரைப்படங்கள் வழியாக நம் மனக்கண்ணில் பதியவைக்கப்பட்டிருந்த மன்னர்களும் போர்வீரர்களும் தூக்கியெறியப்பட்டு, அக்காலத்தில் உண்மையாக அவர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்களென்பதை ஒவ்வொரு ஃப்ரேமும் நமக்குள், அழுத்தமாகப் பதியவைக்கின்றன.
ஏழாம் நூற்றாண்டில், புழக்கத்தில் இருந்த ஏராளமான சங்க இலக்கிய வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியிருப்பது, தமிழுணர்வாளர்களை நிச்சயம் மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.
தமிழ்த்திரைப்படத்தின் தமிழ் வசனங்களுக்கே திரையில், தமிழில் மொழிபெயர்ப்பு என்பது, வித்தியாசமான அனுபவம்.
சினிமாவில், ஹீரோ; ஹீரோயினுக்கென ஒரு அளவுகோல் வைத்திருப்போமில்லையா.., அவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிட்டு, ஒரு புது உணர்வை நமக்கு ஏற்படுத்திவிடுகிறது, இத்திரைப்படம்.
அந்தக்கால தமிழ் எழுத்துகளையும், திரையில் கொண்டுவந்தது, முத்தாய்ப்பு. அதேபோல், டைட்டில்களில் கூட, தூய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி, திரைக்குத் தமிழ் ரத்தம் பாய்ச்சியுள்ளனர்.
தியேட்டருக்குள் சென்று அமர்ந்ததும், "புகைப்பிடிக்காதீர், மது அருந்தாதீர்.." என இம்சித்து, மறந்திருப்பவர்களுக்கும் நினைவுபடுத்தி உயிரை வாங்குற வேலையை, இத்திரைப்படத் தணிக்கைத்துறை மேற்கொள்ளாதது ஆறுதல். இதனால்தானோ என்னவோ.., இத்திரைப்படத்துக்கு வந்திருந்தவர்கள் யாரும் புகைக்கக்கூடச் செல்லவில்லை.
இடைவேளையில், PS-2 வை விளம்பரப்படுத்த, ட்ரெய்லர் போடும்போது, மக்கள், மணிரத்னத்துக்கு பாடம் எடுக்கும் வகையில் கமெண்ட் களை அள்ளி வீசினர். இது, "யாத்திசை" யின் நம்பகத்தன்மைக்குக் கிடைத்த வெற்றி!
இத்தனை செய்தவர்கள், ழகர உச்சரிப்பே வராதவர்களின் குரல்களைப் பயன்படுத்தி, திருஷ்டி கழித்திருக்கிறார்கள்...
நம் கண்முன்னே, முப்பதாண்டுகளுக்கு முன்புவரையிலும் புழக்கத்திலிருந்த பல ழகரச்சொற்கள் ளகரச்சொற்களாக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதிரியான ஏழாம் நூற்றாண்டுக் கதையில் ழகரக் கற்பழிப்பை ஜீரணிக்க முடியவில்லை என்றாலும், மொத்தத்தில் ஒரு திரைப்படமாக.., பிரமிக்கத்தக்க முயற்சி இது; அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல படைப்பு!
- #ப்ரியா_வெங்கடேசன் @ 8056584237.
கார்த்திகை_தீபம்
சிறுவர்களின் கொண்டாட்டங்கள் அனைத்தும் பெரியவர்களைச் சார்ந்தே இயங்கிக் கொண்டிருக்கையில் முழுக்க முழுக்க சிறுவர்களுக்காக, சிறுவர்களால் கொண்டாடப்படும் ஒரு விசித்திரப் பெருவிழா இது!
இந்தத் திருநாள் தான் எங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தின் மீப்பெரு விழா!
கோவில் சம்பிரதாயங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், எங்கள் ஊர்களில் இது மூன்று நாள் கொண்டாட்டம். முதல்நாள் சைவம், அடுத்த இரண்டு நாட்களும் அசைவம் எனச் சிறப்பான விருந்து கிடைத்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மாவலி சுற்றுதலை நோக்கியே எங்களின் கவனமெல்லாம் குவிக்கப்பட்டிருக்கும்...
எங்கள் சிறுவயதுகளில் இந்த மாவலி தயாரித்தல் என்பது ஒருமாத ப்ராஜெக்ட்!
(தேவைப்படும் பிரதானப் பொருட்கள்: அடுப்புக்கரி, பனையின் காய்ந்த பூ மற்றும் பச்சை மட்டை)
தீபாவளியிலிருந்தே வண்ணாம்பூ (பனை பூ) சேகரிக்கும் பணி தொடங்கிவிடும். இடையிடையே அடுப்புக்கரியை வேறு சேகரிக்க வேண்டும்.
மழை-வெயில்-பனி எனக் கதம்பமாய்ச் சுழன்றடிக்கும் இந்த நாட்களில், சேகரித்த வண்ணாம்பூக்களையும் கரியையும் காயவைப்பது பெரும் பணி. நல்ல வெயில் நேரத்தில் கூட, நொடியில் மழை கொட்டி எல்லாவற்றையும் நனைத்துவிடும். மாதம் முழுக்க எத்தனை பாதுகாப்பாகக் காயவைத்திருந்தாலும் இறுதியில் நமுத்துப்போய் தான் கிடக்கும்.
காய்ந்த வண்ணாம்பூக்களைப் பக்குவமாக எரித்துக் கரியாக்குவது தனி ப்ராஸஸ்!
சுமார் ஒன்னரை அடி அகல-ஆழத்துக்குப் பள்ளம் தோண்டி அதில் அரை அடி அளவில் நெருப்பு மூட்டி.., நன்றாக எரிந்த பிறகு அதன் மேல் காய்ந்த வண்ணாம்பூக்களைப் போட்டு, அதன்மீது பூசணி இலைகளை வைத்து, மண்ணைப் போட்டு மூடி நன்றாகக் குமைய விட வேண்டும்.
கார்த்திகை மாதம் முடிந்த பிறகு தான் பூசணி சீசன் தொடங்குமென்பதால், இந்த நாட்களில் பூசணிக் கொடியைப் பார்ப்பதே அரிது. அதைத் தேடிக் கண்டுபிடித்துப் பறிக்கச் சென்றால்.., அதை நட்டு வைத்த பாட்டி குத்தவைத்து உட்கார்ந்து, பகல் முழுக்கக் காவல் காத்துக்கொண்டிருக்கும்.. அதன் கண்ணில் படாமல் பூசணி இலையைத் திருடிக் கொண்டு வரவே தனிப்படை அமைப்போம். அதிலும், 'கல்யாண பூசணி திருடினால் கை வெளங்காமல் போயிடும்' என்பதை நம்பாதவர்களாகப் பார்த்து அனுப்ப வேண்டும்.
அடுத்து, கரி அரைக்கும் பணி!
இதற்கெனத் தனியாக அம்மியும் குழவிக்கல்லும் சில வீடுகளில் இருக்கும். இங்கு கரி அரைக்கச் வருபவர்களிடம், "கொஞ்சூண்டு கரி குடேன்.., ஒரேயொரு மட்டை குடேன்.." என ஓசியிலேயே தனக்கான மாவலியைத் தேற்றி விடுபவர்களுமுண்டு. இதற்கு பயந்தே சிலர், கரியைத் தரையில் வைத்து குண்டுக்கல்லால் அரைத்துக்கொள்வார்கள். சில சாமர்த்தியசாலிகள், அம்மிக்கல் அம்மாவிடம் நைஸாக பேச்சுக்கொடுத்து, அவர்களின் பிள்ளைகளுக்கான மாவலியைத் தயார் செய்து விட்டதை உறுதிபடுத்திக்கொண்ட பின்பே கரி அரைக்கச் செல்வார்கள்.
இவர்கள் தவிர்த்து, சிமெண்ட் தரை வாய்க்கப் பெறாதவர்கள், பொதுக் கிணற்றங்கரையிலும் கருங்கல் படிகளிலும் கூட்டம் கூட்டமாக அரைத்துக்கொண்டிருப்பர்.
வண்ணாம்பூவையும் கரியையும் ஒன்றாகப் போட்டு அரைத்தால் சரிவராது. இரண்டையும் தனித்தனியே அரைத்து, சரியான விகிதத்தில் சேர்த்து மாவலி கட்ட வேண்டும். இல்லையெனில், சரியாக அரைபடாத கரித்தூள் நெருப்பு, மாவலி சுற்றும்போது மேலே விழுந்து சுட்டுவிடும்.
அரைத்த கரித்தூளை, முக்காலடி அகலம், ஒரு முழ நீளம் கொண்ட காட்டன் துணியில் பரப்பி, முனைகளை மடித்துச் சுற்றி உருளையாக்கிய பின், அதனை இறுக்கமாகவுமின்றி, தளர்வாகவுமின்றி மிதமான அளவில் இரண்டு அல்லது மூன்று கட்டு போட வேண்டும்.
அதன் பிறகு, பச்சை மட்டையை எடுத்துக்கொண்டு அதன் அடிப்பகுதியை நெடுக்கு வாக்கில் மூன்று அல்லது நான்கு பகுதிகளாக சுமார் முக்கால் அடி நீளத்துக்குப் பிளந்து, அதன் நடுவில் மாவலி உருளையை வைத்துக் கட்ட வேண்டும்.
பின்னர், மாவலி சுற்ற வசதியான நீளத்தில் கயிறை எடுத்து, மட்டையின் மேற்புறத்தில் முடிச்சிட்டுக் கொண்டால்... மாவலி தயார்!
இருள் சூழ்ந்தவுடன், மாவலி உருளையின் மேற்புறத்தில் நெருப்புக்கட்டியை வைத்து, அதனை நன்றாகக் கனைய வைத்த பின் சுற்றிக்கொண்டேயிருக்கலாம்...
அன்றைய தினம், பெரும்பாலும் பகலில் செய்த உணவையே இரவுக்கும் பயன்படுத்திக்கொள்வதால், யாரும் மாலையில் அடுப்பு பற்ற வைக்க மாட்டார்கள். மாவலியைக் கனைக்க வைக்க நெருப்புக்கட்டியைத் தேடி, திறந்திருக்கும் தேநீர் கடைகளுக்குப் படையெடுப்போம்.
எங்கள் ஊரிலுள்ள சிறுவர்கள் முதல், விடலைகள் வரை அனைவரும் மாவலி சுற்றியபடியே மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பர். ஏரிக்கரை மீதேறி நின்று, திருவண்ணாமலையின் ஜோதி பார்த்து 'ஹாய்' சொல்லிவிட்டு, எங்கள் மாவலியை முழு வேகத்தில் சுற்றி, அந்த அண்ணாமலை ஜோதியே சிறுத்துப்போகும்படி நெருப்புச் சிதறல்களைத் தெறிக்க விடுவோம்...
ஏரிக்கரையில் சிதறிக்கொண்டிருக்கும் இந்த மாவலிப்பொறியின் ஒளியில் பல விடலைகளின் காதல் சந்திப்புகளும் 'வெளிச்சத்துக்கு' வந்துவிடுவது தனிக்கதை!
ஆடைகளைத் தாண்டி உடலிலும் நெருப்புத்தூள் துளைத்ததறியாமல், குதூகலத்துடன் காலி மட்டையைக் கையிலேந்தியபடி பல கதைகள் பேசி, வீடு வந்து சேர்ந்தால், தீபாவளியன்று காணாமல் போயிருந்த கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், பூந்தொட்டிகளெல்லாம் அப்போதுதான் வீட்டுப் பரணிலிருந்து வெளியில் வரும்!
அவற்றையும் ஒரு ரவுண்டு சுழற்றிவிட்டுப் படுக்கைக்குச்சென்றால்.., அடுத்தநாள் கறிக்குழம்பின் வாசம் தான் எழுப்பி விடும்! நன்றாகத் தின்று முடித்தவுடன் மறுபடியும் அன்றைய மாலைக்கான மாவலியை அலங்கரிக்கத் தொடங்கிவிடுவோம்...
மூன்றாவது நாளில், சுற்றி முடித்த மாவலி மட்டையை, சாணியில் அடித்துத் துவைத்து, முருங்கை மரத்தில் கட்டுவது வழக்கம்.
மூன்று தினங்களாக, பகல் முழுக்கக் கரித்துகளுடனும், இரவில் நெருப்புப் பொறிகளுடனும் கழிக்கப்படும் கார்த்திகை தீபத்துக்கு எடுத்த புதுச்சட்டை, ஒருபோதும் புதுச்சட்டையாகத் தொடர்ந்ததில்லை. நான்காம் நாளே கரித்துணியாகவோ அல்லது கந்தல்துணியாகவோ கிடக்கும். ஆனால்.., இன்றைய தீபத்திருநாளுக்கு எடுத்த துணி, புத்தம் புதிதாக அப்படியே இருக்கிறது; அந்தக் குதூகலமும் கொண்டாட்டமும் தான் பழசாகிக் கிடக்கின்றன எங்களின் நினைவடுக்குகளில்..!!
ஊரே கூடி நின்று மாவலி சுற்றிய தெருவில், இன்று என் மகன் மட்டும் கை வலிக்கச் சுற்றிச் சலித்து என்னிடம் தருகிறான்...
மா வலி!
- ப்ரியா வெங்கடேசன் @ 8056584237.
நூல் விமர்சனம்
"கவுச்சி" (கவிதைகள்) - நயினார், சுவடு பதிப்பகம், டிசம்பர் 2023. விலை ₹150.
(நுகர்ச்சியாளர்: ப்ரியா வெங்கடேசன்).
தனது முந்தைய புத்தகமான #தோற்கும்_நியூட்டன்_விதி 'யில்,
"..தொட்டு
பொட்டு வைத்தாளாம்
தொடாமல்
சேலை கட்டுகிறாளாம்
இப்படியெல்லாமா புலம்பும் இந்தப் பூமி
யார் யாரோ
தூக்கிச் சுமந்தார்களாம்
இறுதியாக
அவளின் இரண்டு விரல்களை
பிடித்துக் கொண்டே
தரை இறங்குகிறது
கோலமாவு.." என்று, இவரெழுதிய கோலத்தைப் படித்தபோதே என் மனம் அலங்கோலமானது! விளைவு.., மென் உணர்வுகளைக் கடத்தும் வல்லமையுள்ள இவருடைய கவிதை வரிகளுக்கு ரசிகனாகிப் போனேன்...
கொரியரில் வந்த புத்தக பார்சலைப் பிரித்துக்கொண்டிருந்த என் அம்மா, "இன்னிக்கு மார்கழி அமாவாசை.. நான்வெஜ் எதையும் தொடக்கூடாது.." என்றபடியே, என்கையில் திணித்த அந்தப்புத்தகத்தின் பெயர்.. 'கவுச்சி'! எதிர்மறை தலைப்புகளாகவே இருந்தாலும் தொடர் வெற்றிகளைப் பெற்று விடுவதால் இவரை, 'கவிதை உலகின் விஜய் ஆண்டனி' எனலாம்!
"..சில்லரைகளைப் பெற்றுக்கொண்டே இருக்கிறது
'பசிக்கிறது' என்ற
அந்தச் சொல்லுக்கு மட்டும்
பசி அடங்கவேயில்லை.." எதையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகும் இவருடைய கவிதைகளைப் படிக்கும் போதே பல இடங்களில் வியந்து பாராட்டத் தோன்றுகிறது.
"..நாய்களையும் மாடுகளையும் போல
சில சொற்களை சாலையில்
அனாவசியமாக மேயவிடுகிறார்கள்
அவற்றின்மீது இடிக்காமல்
வண்டியைச் செலுத்துவது
என்னைப் போன்ற ஓட்டுனர்களுக்கு
சவாலாகவே இருக்கிறது" எனும் கவிஞர், தன் சொற்களை மிகவும் கவனமாகவே கையாளுகிறார்.
ஆம்..! பெரும்பாலானோர், 'நாட்கள்' எனப் பிழையாகவே எழுதிக் கொண்டிருக்கையில் இவர் மட்டும் 'நாள்கள்' எனச் சரியாக எழுதியதை வியந்து ரசித்தேன்.
("..ஆறு நாள்கள் உழைப்பின் அசதியில்
அதிகம் பேசாத
கணவரின் உறக்கத்தோடு
கனவு காண்பாள்..")
பெண்மையின் பல்வேறு பரிணாம பரிமாணங்களில், 'அவள்' எனும் கவிதை இன்னும் புதிது.
"வங்கிக்கணக்கில்
மேகலா மகேஷ் என்று
அவள் அப்பா இணைந்திருந்தார்
வாட்சப்பில்
மேகலா கண்ணனாக
அவள் கணவன் வந்து சேர்ந்தார்..
..இப்போது கண்ணீர் அஞ்சலி போஸ்டரில்
மேகலா மட்டுமே இறந்திருந்தாள்.." படிக்கும்போதே, "அட, ஆமால்ல..?!" என வியக்க வைத்தது.
"..பொய்யோ மெய்யோ
இருக்கிறதோ இல்லையோ
கேள்வியே இல்லை
பிரபலமாக இருந்தால் போதும்
அதுதான் செய்தி.." என நீளும் கவிதையில் ஊடகத்தின் பட்டவர்த்தனங்களை அழகாய்ப் பட்டியலிடுகிறார்.
கடைசிப் பேருந்தைத் தவறவிட்ட இருவரில் ஒருவர் பார்வையற்றவர்...
".. பயப்படாதீர்கள் என்றார்
இருட்டு எனக்குத்தான்
அவருக்கில்லையே!
அவர் கையைப்
பிடித்துக்கொண்டு நடந்தேன்.." இந்தக் கவிதையைப் படிக்கும் போது, கவிஞரைத் தாண்டி, 'மாற்றுத்திறனாளி' என்று மிகப் பொருத்தமாகப் பெயர் வைத்த கலைஞரையும் வியக்கத் தோன்றுகிறதல்லவா..?!
காதலனிடம் தன்னைப் பெண்பார்க்க வரச்சொல்லி ஒத்திகையெல்லாம் பார்க்கப்படுகிறது..,
"..முக்கியமானதைச் சொல்லவில்லையே
அங்கு வரும்போது
நாங்கள் என்ன சாதி" என்று நிறைவடையும் போது, இக் காதல் கவிதை வேறு தளத்தில் போய் நிற்கிறது..!
"..அன்பில் விழுபவர்களை
ஒரு துரோகம் காப்பாற்றிவிடுகிறது
அன்பில் நொருங்கியவர்களை
ஒரு ஏமாற்றம் தேற்றிவிடுகிறது.." இது கடத்தும் உணர்வுகளை எப்படி விவரிப்பது..?!
"வரிகளுக்குள் அடங்க முடியாதென்று
என் கவிதையிலிருந்து வந்தாள்
அங்கேயே இரு
நானும் வருகிறேன் என்று
வரிகளுக்குள் சென்றேன்.." என்ன மாதிரியானப் படிமம் இது?!! அய்யோ நயினார்... நைனாவுக்கெல்லாம் நைனா நீர்!
"..எதிர்ப்பது என்பது
வேறு ஒன்றுமில்லை
உண்மையைச் சொல்வதுதான்..
..பிடிக்காத வார்த்தைகளை நீக்கினால்
யோக்கியனாகத் தெரியலாம்..
..ஒரு அடிமைக்குப் பதவியை
வழங்கினால்
மொத்தச் சுதந்திரத்தையும்
பறித்துவிடலாம் என்பது
ராஜ தந்திரம்.." இதுமட்டுமல்ல.., இப்புத்தகம் முழுக்கவே, லோக்கல் தொடங்கி.., ஸ்டேட், நேஷனல் கடந்து.., இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் வரை பிச்சு உதறியிருக்கிறார்.. இதையெல்லாம் இங்க மென்ஷன் பண்ணி இவரை தேசபக்தாஸ் கிட்ட மாட்டி விட்டாலே எனக்கு கவர்னர் பதவி நிச்சயம்! அப்புறமென்ன.., அடுத்த வாரமே, இவர் ஆளுங்கட்சியில் ஐக்கியமாக வேண்டியிருக்கும்!!
"..ஊசி மேலும் கீழுமாய்க்
குதிக்கும் போதெல்லாம்
அவர் கண்கள்
நிலைகுத்தி நிற்கின்றன..
..பழைய துணிகளே வருகிறதென
தன் இயலாமையைக்
குத்திக்காட்டியே தைக்கிறது.." இப்படி, சமூகத்தின் ஒவ்வொரு நலிந்த பிரிவினரையும் கரிசனத்தோடு அணுகுகிறது இவருடைய கவிதைகள்.
"..வெளிச்சத்தில் உறங்காத இரவை
மழை தட்டி எழுப்பிப்
புணரும் போது
என்ன சொல்லுமோ இந்தக் காற்று..
..சிறுபிள்ளைத்தனமாக
திரை விலக்கிப் பார்க்கும்
மின்னலின் கண் சிமிட்டலில்
கலவி காட்சிக்கு வருகிறது.." இதையெல்லாம் "தற்குறிப்பேற்ற அணி" க்கு எடுத்துக்காட்டாக கல்லூரி பாடத்திட்டத்திலேயே வைக்கலாம் தலைவா!
"..வருவேன் என்று
நீ போயிருக்கக் கூடாது
வரமாட்டாய் என்றே
நான் காத்திருக்கக் கூடாது..
..அந்த நான்குமுனைச் சாலையில்
உன்னையும் என்னையும் கேட்டு
யார் யாரிடமோ
கையேந்தலாம் நம் காதல்.." இதுபோன்று, வாசிப்பவரின் காதல்களைக் கிளறும் பல வரிகள் இப்புத்தகம் முழுக்கவே விரவியுள்ளன.
"கை நீட்டித் தன் பசியை
வாங்கிக்கொள்ளக் கேட்டார்
அந்த முதியவர்
எவரும் வாங்காமலே
முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்..
..கண்டுகொள்ளாத அன்பிற்கு
உயிரைப் பிச்சை தந்தவர்.." என்று எத்தனை அழகாக உணர்வுகளையும் வார்த்தைகளையும் இணைத்துக் கயிறு திரிக்கிறார் பாருங்கள்..!!
பறவையைப்பற்றிய கவிதையொன்றில் இப்படி எழுதியிருக்கிறார்...
".. வெயிலுக்கு விசிறிவிட்டு
மேகத்திடம் குளிர் காயும்..
..தன்னோடு வரும் வானத்திற்கு
ஓய்வு கொடுக்கவே
மண்ணில் காலூன்றுமிது..
..இதன் எச்சத்தின் நிழலில்
வாழும் மனிதனைப்
பொருட்டாகவே மதிப்பதில்லை.."
பின்வரும் இந்த அவலத்தை எப்போதுதான் தீர்க்கப் போகிறோமோ தெரியவில்லை...
"மலக்குழிக்குள் இறங்குகிறான்
மனிதன்
மூச்சடக்கி அவன்
வெளியே வருவதற்குள்
சந்திராயன்
நிலவுக்குச் சென்றுவிட்டது.."
"..இரவைப் பொட்டலம் கட்டி
பகலைப் பிரிப்பவர்கள்.." என்பதைப் போன்ற, தனது அசாத்திய கற்பனைகளை எல்லா இடங்களிலும் சிதற விடுகிறார்.
இவர் கவியெழுதும் பாணியே தனி! ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு சிறுகதையை ஒளித்து வைத்துள்ளார். அத்தனை ரசனையான வார்த்தைகள்!
எப்போதும் போல் இப்போதும், ஈர்க்கும்படி எழுதியிருக்கும் தோழர் நயினாரின் வித்தியாசமான சிந்தனைகள் தொடர்ந்துகொண்டே இருப்பது வியப்புக்கும் பாராட்டுக்கும் உரியது. சில இடங்களில் எட்டிப்பார்க்கும் எழுத்துப்பிழைகள் மட்டும் கன்னத்துப் பொட்டு! வளர்ந்த பிறகும் தொடர்வது அழகல்ல!.
மொத்தத்தில், அலங்கார அரிதாரங்களால் முடைநாற்றமேறிக் கிடக்கும் சமூகத்தை, 'கவுச்சி'யால் கழுவிச் சுத்தமாக்க முயல்கிறது இந்நூல்!
எள்ளல், நையாண்டி, பழிவாங்கல், இயலாமை, ஏக்கம், ஆத்திரம், ஆளுமை திமிர், அடிமைத்தனம், அதிகாரம், காமம், திருப்பியடித்த திருப்தி, வன்கொடுமை.. என அத்தனை உணர்வுகளையும் ரசிக்கும்படி குவிக்கப்பட்ட ஒற்றைக் கவிதைதான் "சாதி மசுறு". இதை இப்புத்தகத்தின் உச்சம் எனலாம்..! கண்டிப்பாக அனைவரும் இக்கவிதையை முனைந்து வாசிக்க வேண்டும். அதற்காகவே, அக்கவிதையை மேற்கோளிட்டெழுதாமல் கடந்து செல்கிறேன்..
பேரன்புடன்,
- ப்ரியா வெங்கடேசன் @ 8056584237.
‘கலைகள்’ எனும் சொல்லை ஒரு வரையறையில் கொண்டு வருதல் என்பது இயலாதது.’ முறையானப் பயிற்சியால் கற்கப் படுவது கலை‘ என்றும், ‘உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடு கலை‘ என்றும் “ஆயக் கலைகள் அறுபத்து நான்கு’ எனவும் கலைகளின் வரையறை ,வெளிப்பாடு வகையைப் பொதுவாகச் சொல்லலாம்.
கலையை இரண்டு வகையாக கவின் கலை மற்றும் நுட்பக் கலை என இரண்டாகப் பகுக்கலாம். மனிதனின் அத்யாவசியத் தேவையை நிறைவேற்றுவது கவின் கலைகள். இவை மனிதனின் அடிப்படைத் தேவையான உணவு உடை உறைவிடத்தைப் பூர்த்திசெய்யும் வகையில், கற்பிக்கப்பட்டு முறையாகச் செய்தல் உபயோகக்கலை ,பயண்பாட்டுக் கலை அல்லது கவின்கலையாகும். .
அடிப்படை கலையானது உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் நுட்பத்தோடு வெளிப் படும்போது, அது நுட்பக்கலை எனும் வடிவம் பெறுகிறது.
இதையும் புலன்களால் உணர படுவதை வைத்து வகைப் பிரிக்கலாம். கண்ணுக்கு விருந்தாக அமைவதை அல்லது கண்களின் வழியாக உணர்வதை காட்சிக் கலை எனவும் ,வாயால் பேசி காதால் கேட்பதை, ரசிப்பதை கேள்விக் கலை எனவும் பகுக்கலாம்
கலை என்பது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் தொடங்கி, வளர்ச்சி அடைந்து , உள்ளத்து உணர்வுகளை பிரதிபலித்து, நாகரீகம் எனும் போர்வையில் பல மாற்றங்களைக் கண்டு , இன்று வியாபாரமாக உருவெடுத்து நிற்கிறது.
உதாரணமாக நான்கு சுவர்களாக இருக்கும் உறைவிடம் கவின்கலை எனப் பெயர் பெரும்,அதேக் கலை நுட்ப வடிவம் பெரும் போது கட்டிடக் கலை எனும் வரையறைக்குள் வருகிறது. அதுகாட்சிக்கு விருந்தாகும்.
ஆயக் கலைகள் அறுபத்து நான்கு.
கவின் நுட்பம்,காட்சி கேள்வி என்ற வகைகளில் அடங்கும் இந்தக் கலைகளை ஆயக் கலைகள் அறுபத்துநான்கு என உரைப்பர். இந்தக் கலை பட்டியலை விதவிதமாகத் தருகின்றனர். உண்மையில் தொழில் நுட்ப வளர்ச்சியில் இது பல்லாயிரமாகப் பெருகி உள்ளது என்றே நாம்உணர வேண்டும்.
இயல், இசை நாடகம், ஓவியம் , நடனம் ,சமையல், எழுத்து, அழகு, என செய்தொழிகள் அத்தனையிலும் கலை ,உடலில் உயிர் போல் கலந்து உள்ளது.
துகில் .
நூல் நூற்று நெசவில் நெய்யப்படும் ஆடை என்பதும் கவின் கலைக்குள் அடங்கினால், அதன் நுட்பம் அதன் மேல் சவாரி செய்து நூற்றலில் பல்வேறு முறைகள் வகைகளை தனதாக்கி வரும் போது நெசவுத் தொழில் நுட்பக்கலை பிரிவில் இணைகின்றன. இதையும் காட்சியில் உனர்வை வெளிப்படுத்தும் வகையில் அழகுக் கலையோடு இணைத்துக் கொள்ளலாம்.
பூந்துகில் ஆடைகள்
இங்கே நாம் கலைகளின ஒரு பகுதியான பயண்பாட்டுக் கலையின் அத்யாவசியமான உடைகளை, காட்சிக்கு விருந்தாக்கும் நுட்பக் கலையின் சிறப்பை தனதாக்கி சிறக்கும் அலங்காரத் தையல்களைப் பற்றியும் அதன் வகைகளையும் காண்போம்.
நாம் உடுத்தும் உடையை மேலும் அழாகாக மாற்றும் இந்தச் சித்திரப் பூத் தையல் . ஊசி நூல் கொண்டு ஆடைகளில் விதவிதமாக தைக்கப்படும் நுட்பக் கலை. இதன் வரலாறு என்பது 5000 ஆண்டுகள் பழமையானது. இவை முற்றிலும் பெண்களால் வளர்ச்சி அடைந்தது என்றால் அது மிகை இல்லை.
ஆதி மனிதன் தாவரங்கள், விலங்கின் தோல்கள் ஆகியவற்றை ஆடையாகப் பயன் படுத்த ஆரம்பித்தக் காலம் முதல் அதனை அழகுப் படுத்தும் கலையையும் ஆரம்பித்து இருப்பான்.
சித்திரப்பூத் தையல் சித்திர பூத்தையல் என்பது பட்டு சணல்கம்பளி பருத்தி, பொன் ,வெள்ளிசரிகைபோன்ற நூல் வகைகளையும் செயற்கை நூல்கள்பலவற்றையும் கொண்டுஊசியால் தைத்து பலவகைத் துணிகளை அழகுப் படுத்துவது ஆகும் .
உலகநாடுகளில் பூவேலை
சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எகிப்தில் தையர்களையோடு ,பூத்தையல்களும் இருந்ததற்கான சான்றுகள்உள்ளன.
இல்லை பூ காய, கனிஎனமுதலில்முயன்றவர்கள் பின்னர் தங்களதுசின்னங்கள் எழுத்துக்கள் எனபலவற்றையும் இதில்முயன்றார்கள்.
பழமையான கிரேக்கநூல்கள் பழையஏற்பாடு, ஆகியவற்றிலும்பூவேலைப்பாடுசெய்யப்பட்டதுதோணிகளைப்பற்றியவர்ணனை இருந்துள்ளது. தமிழ் பண்டைய இலக்கியங்களிலும் , பூந்துகில் பூங்கலிங்கம் எனும்சொல் கையாளபட்டு இருக்கிறது.
பத்தாம்நூற்றாண்டுகளில் மேற்கத்திய நாடுகளிலும் இந்தக்கலை செழித்து வளர்ந்தது.
19 நூற்றாண்டில் பூவவேலைப்பாடு செய்வதற்காக இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டன.
இந்தியாவில் சித்திரபூத் தையல்
இந்தியாவில் ஆதிவாசிகளால் செய்யப்பட்டஇந்தக் கலையானது, மெல்லப்பரவியது மொகலாயர்காலத்தில் சிறப்புபெற்றுவிளங்கியது. இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரத்யேகமான எம்பிராய்டரி எனச்சொல்லப் படும் பூவேலைகள் , ஆடைவடிவமைப்பு துறையில்பெரும் புரட்சியை உருவாக்கிஇருக்கின்றன.
தமிழ்நாட்டின் தோடா எம்பிராய்டரி., கர்நாடகா , ஆந்திராவில் கசூத்தி, வங்காளத்தின் காந்தா, காஸ்மீரத்தின் காஸ்மீரி, பஞ்சாபின் புல்காரி,உத்தர பிரதேசத்தின் சிக்கணக்காரி, ஆறி ,ஜெர்டோஸி, குஜராத்தின் கட்ச், ராஜஸ்தானின் கண்ணாடி வெலப் பாடுகள் என இந்தியாவில் மாநிலம் வாரியாக, இந்தச் சித்திரப்பூ தையல் எனும் எம்பிராய்டரி காலை சிறந்து விளங்குகிறது. வரும் பதிவுகளில் இந்த எம்பிராய்டரி வகைகளை , அதன் சிறப்புகளை, நமது நாகரீக ஆடை வடிவமைப்பில் அவை எவ்வாறு மிளிர்கின்றன என்பதைக் காண்போம்.
கலைகளும் அதன் வகைகளும் என்ற இந்தப் பகுதியில் கலைகளின் பகுப்பைக் கவின் கலைகள், நுண் கலைகள் எனப் பகுத்துப் பார்த்தோம். ஆயக் கலைகள் என்பது எண்ணிலடங்காதது. இதில் இங்கு நாம் உடுத்தும் ஆடைகளில் பயன்படுத்தப் படும் பல வகையான எம்பிராய்டரியைப் பற்றி இந்த அத்தியாயத்தில் காண இருக்கிறோம்.
நுட்பக் கலைகளின் கீழ் ஆடைகளைக் கொண்டு வரும் போது அது மிகச் சிறப்பான ஒரு பரிமாணத்தில் பரிமளிக்கிறது.நூல் நூற்புகளிலும் , நெசவு நெய்தலிலும்,பின்னலாடைகளிலும் நாளும் புதுமையும், வளர்ச்சியும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.தொழில் நுட்பப் புரட்சியில் இன்று கிடைக்கும் துணி வகைகள், நமக்குக் கற்பனைக்கும் எட்டாத வகையில் விரிந்து உள்ளது. மெலிதான ஆர்கண்டி, நெட் துணிகள் முதல் கனமான கார்பெட் வகைகள் வரை துணிகளும், அதில் சிறப்பாகச் செய்யப் படும் வேலைப் பாடுகளும் மனதைக் கொள்ளை கொள்வதாக உள்ளது. அது போல் செய்யப்படும் எம்பிராய்டரிகளைப் பற்றிக் காண்போம்.
நெசவு செய்த ஆடைகளிலோ அல்லது பின்னலாடைகளிலோ அதனை அடித்தளமாக வைத்துப் போடப்படும் அலங்காரத் தையல்களைச் சித்திரப்பூத் தையல் அல்லது, எம்பிராய்டரி எனச் சொல்லுகிறோம். இந்தக் கலை உலகம் முழுதும் வியாபித்து உள்ளது, அந்த அந்தப் பகுதிகளுக்கான பிரத்தியேக வேலைப்பாடாகப் பல வகைகளில் உள்ளது. இந்தியாவில் உள்ள எம்பிராய்டரி வகைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
பெண்களும் எம்பிராய்டரியும்.
ஆதிகாலம் தொட்டு ஆடைகளில் செய்யப்படும் கலை என்பதால் இயற்கையாகவே பெண்களின் கலையாக இது இருந்து வந்துள்ளது. பெண்கள் தங்கள் தேவை, கற்பனை, எண்ணத்திற்கு ஏற்ப தங்கள் கைத் திறமையையும் கற்பனை வளத்தையும் இதில் காட்டினர்.
ஒரு பெண் சிறப்பாகச் சித்திரப் பூவேலை செய்கிறாள் எனில் அவளைச் சகலகலாவள்ளியாகவே சமுதாயம் நோக்கியது. பெண்களின் இந்தக் கலையை ஊக்குவிக்கும் வண்ணம், திருமணச் சீர் வரிசைப் பொருட்களில் எம்பிராய்டரி செய்யப்பட்ட ருமால், சுவர் அலங்காரம், சேலைப் பைகள், தலையணை உறைகள், மற்றும் அவர்களது ஆடைகள் என அத்தனையும் வைக்கப்படும்.
எம்பிராய்டரியில் அடிப்படைத் தையல்கள்.
கைகளினால் போடப்படும் எம்பிராய்டரி என்பது சாதாரணக் கை ஊசி பல வகையான நூல் கொண்டு போட படுவது.இதில் சிறு வயதில் நாம் ஏதாவது ஒரு தையல் வகுப்பில் ஆசிரியை சொல்லிக் கொடுத்த ஓட்டுத் தையல், காம்புத் தையல்,சங்கிலித் தையல், அடைப்புத் தையல், முடிச்சு வகைகள் ஆகியவையே பெரும்பாலும் உபயோகப் படுத்த பட்டு இருக்கும். ஆனால் அதனை அவர்கள் பிரயோகிக்கும் முறையில் பிரத்தியேகமான எம்பிராய்டரியாக உருவெடுக்கிறது.
இந்திய எம்பிராய்டரி வகைகள்;
இமயம் முதல் குமாரி வரையிலான இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரத்தியேக எம்பிராய்டரி வகை உள்ளது. இதனை ஐந்து வகைகளாக வகைப் படுத்தி எளிமையாகப் புரியும் வண்ணம் இங்குத் தருகிறேன்.
காஷ்மீர்-பஞ்சாப் - ஹமாசல் எம்பிராய்டரி வகைகள்.
காஷ்மீரி அல்லது கஷிதா எம்பிராய்டரி
இமயமலையின் அடி தொட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடமாகக் காஷ்மீர் இருப்பதால், இங்குப் போடப்படும் எம்ராய்டரியிலும், பூக்கள், இலை, காய் கனிகள் இவையே பிரதானமாக இடம் பிடிக்கின்றன. சல்வார் கமீஸ், சேலைகள், செர்வானி, ஓவர் கோட்கள் முதல் சுவர் அலங்காரங்கள், மெத்தை விரிப்புகள் மற்றும் மிதியடிகள் வரை அனைத்திலும் இவ்வகையான கஷிதா வேலைப் பாடுகள் செய்யப்படுகின்றன.
காஷ்மீரி வேலைப்பாடுகள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருக்கும், மேற்புறம் மற்றும் அடிப்புறம் பிரித்து வகைக் காண இயலாதவாறு, ஒரே போல் சீராக வேலைப்பாடு செய்து இருப்பார்கள்.
துணி-நூல்-தையல்கள்;
காஷ்மீரி எம்பிராய்டரியில் ஒற்றைத் தையல்கள் அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றன, சங்கிலித் தையல், காம்புத் தையல், சாய்வுத் தையல், பொத்தான் துளைத் தையல் ,ஹெரிங்போன் தையல் மற்றும் முடிச்சுத் தையல்கள் மிக நேர்த்தியாகப் பயன் படுத்தப் படுகிறது. இந்தத் தையல்களைக் கொண்டு போடப்படும் கைவேலை மிகவும் அடர்வானதாகவும் , கெட்டியாகவும், உறுதித் தன்மையுடனும் இருக்கும். ஒரு சிறிய மோடிஃப் எனப்படும் உருவத்தைக் கொண்டு வரவே சிறு சிறு தையல்களைக் கொண்டு வடிவமைக்கப் படுகிறது. இந்த வேலைப்பாடு செய்வதற்கான காலமும் அதிகம் தேவைப்படுகிறது.
பருத்தி நூல் மற்றும் பட்டு நூல்கள் கொண்டு அதன் தேவைக்கு ஏற்ப காஷ்மீரி எம்பிராய்டரி செய்யப்படுகிறது.
காஷ்மீர் குளிர் பிரதேசமானதால் சால்வைகள், மேலாடைகள், ஓவர் கோர்ட் போன்ற கனமான துணிகளில் இதனைச் செய்கின்றனர். தற்போது ஆடை வடிவமைப்பு தொழிலும், இணையதள வசதிகளும் பெருகி இருப்பதால், அவரவர் வசதிக்கேற்ற துணிகளில் இந்த வேலைப்பாடை செய்து கொள்கின்றனர்.
அடர் வண்ணத் துணிகளில், வெளிர் நிற நூல்கள் கொண்டு இந்த வேலைப்பாடு செய்யப்படுகிறது.
டிசைன்;
காஷ்மீரி எம்பிராய்டரியில் பூக்கள் அதிகம் காணப்படும், கொடிகள் இலைகள், தாமரை, ரோஜா,டூலிப் ,செர்ரி , அல்மோன்ட் ஆகிய வடிவங்களும், சிறப்பு உபயோகமாகப் பிஸ்டலே எனப்படும் மாங்காய் டிசைன் அதிகம் காணப்படும், பறவைகள் விலங்குகள் குறைவாகவே பயன்படுத்தப் படுகின்றன.
காஷ்மீரத்து எம்பிராய்டரி என்றவுடன் நினைவில் வருவது பாரம்பரியமிக்கப் பாஷ்மினா சால்வைகள் தான். இவை பட்டு நூல் கொண்டு உயர் தரமாகத் தயாரிக்கப் படுகின்றன. காஸ்மீரி , கக்ஷிதா எம்பிராயடரி செய்யப் பட்ட ஆடைகளை அணிதல் என்பதே பெருமைக்குரிய விஷயமாகும். அதன் நேர்த்திக் கை தேர்ந்த ஓவியனின் ஓவியம் போல் கண்ணனைக் கொள்ளைக் கொள்ளும்.
பஞ்சாபின் புல்காரி எம்பிராய்டரி
புல்காரி எம்பிராய்டரி பஞ்சாபிகளின் இதயத்தில் இடத்தைப் பிடித்த ஓர் வேலைப் பாடு. இது மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த கலை ஆகும். அதன் வரலாறு வட இந்தியாவில் சீக்கிய மற்றும் இந்து வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளது.இது பல நூற்றாண்டுகளாகப் பஞ்சாப் (இந்தியாவிலும் பாகிஸ்தானிலும்) பெண்களால் நடைமுறையிலிருந்தது, இந்தியாவின் பிரிவினை வரை செழித்து வளர்ந்தது. பொருளாதார ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்த இந்தக் கலையானது, ஆடை வடிவமைப்பாளர்கள் கை வண்ணத்தில் புத்துயிர் பெற்று உள்ளது.
பயன்பாடு;
அனைத்து வகையான ஆடைகளையும், வீட்டு அலங்கார துணிகளையும் அலங்கரிக்க மற்றும் அழகுபடுத்த ஃபுல்காரி வேலை பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் பாரம்பரிய இந்திய உடைகளான குர்திகள், துப்பட்டாக்கள் ஆகியவற்றை அலங்கரிக்கப் பயன்படுத்துகின்றனர்.
துணி- நூல்-தையல்
முதலில் பருத்தி ஆடைகளில் செய்யப்பட்ட இந்தவேலைப் பாடானது, இப்போது ஜார்ஜெட், பட்டு போன்ற துணிகளிலும் செய்யப் படுகிறது.
பருத்தி நூல்களில் விதவிதமான கண்ணைக் கவரும் முதன்மை வண்ணங்களான, சிவப்பு, மஞ்சள், நீலம் பச்சை நிறங்களில் இந்த வேலைப்பாடு செய்யப்படுகிறது.
இதில் பயன்படுத்தப்படும் தையலை டார்னிங் வகை எனச் சொல்லுவோம். அடைப்புத் தையல்களாக , அடுத்தடுத்து ஜியாமென்டிரிக் வடிவங்களால் நிரப்பப் படுகிறது. இந்த வேலைப்பாடு செய்ய ஆகும் காலத் தாமதத்தைக் குறைப்பதற்கும், விலையைக் குறைத்துத் தருவதற்காகவும், தற்போது இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன.
ஹிமாசல் பிரதேஷ்- சம்பா ருமால்.
இமாச்சல் பிரதேஷின் ராவி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சிறிய ஊர் சம்பா . அங்குள்ள மக்களின் நுட்பமான கலை வடிவமே இந்த வகை எம்பிராய்டரி. இதில் இதிகாச புராணச் சித்திரங்கள், தினச்சரிய வாழ்க்கை ஆகியவற்றை ஒரு சித்திரம் போல் பூத்தையல் கொண்டு வடிவமைக்கிறார்கள். ருமால் என்ற பெர்சிய வார்த்தைக்குக் கைக்குட்டை என்பது பொருள்.
சம்பா பகுதியில் அதன் ராஜா, அவரது காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை மினியேச்சர் ஓவியமாக வரையச் செய்ததாகவும், அதனைக் கண்ட பெண்கள், சித்திரப் பூத்தையல்களைக் கொண்டு அதே ஓவியத்தைத் திறம்படத் தையல்களில் கொண்டு வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இதில் புராண , இதிகாசக் கதைகளும் முக்கியமானதாக இடம் பெற்றன.
துணி- நூல்- தையல்
பருத்தி அல்லது ப்ளீச் செய்யப்படாத மஸ்லீன் (மல்மல்)துணிகளில் இந்த வகை எம்பிராய்டரி போடப்படுகிறது. முதலில் ' 'பஹாரி ஓவியர்களோ' அல்லது பூத்தையல் செய்பவர்களே கூட அவுட்லைன் எனச் சொல்லப்படும் வரிவடிவங்களை வெளிர் நிறங்களைக் கொண்டு வரைந்து விடுகின்றனர். இலகுவான பட்டு நூல்களை இந்த வகையான எம்பிராய்டரி செய்யப் பயன்படுத்துகின்றனர்.
வடிவங்களுக்கு ஏற்றார் போல் டபுள் டார்னிங் எனச் சொல்லப்படும் அடைப்புத் தையல்களைக் கொண்டு நிரப்புகின்றனர். அதில் விசேசமாக வடிவங்களைப் பகுத்துக் காண்பிக்கவும், சிறப்பாகக் காண்பிக்கவும் இரட்டை ஓட்டுத் தையலைப் பயன்படுத்துகின்றனர்.
அடர் வண்ண நீலம், சிவப்பு, மஞ்சள் பர்சியன் நீலம், இளஞ்சிவப்பு, பழுப்பு எலுமிச்சை நிறம், கறுப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்கள் எம்பிராய்டரி செய்யப் பயன்படுத்தப் படுகின்றன.
டிசைன்;
புராணங்களில் சொல்லப்படும் சம்பவங்களைச் சித்திரவேலைப்பாடக செய்கின்றனர். சிவன், பார்வதி, விநாயகர், கிருஷ்ணன், ராதை ஆகிய கடவுளர் வடிவங்களும், பறவைகள், விலங்குகள் மற்றும் போர் ஆயுதங்கள், இயற்கைக் காட்சிகள் ஆகியவற்றைப் பயன்படுத்திச் சிறிய காட்சி ஓவியம் போல் எம்பிராய்டரி செய்கின்றனர். இந்த வகை எம்பிராய்டரியில் ராதா கிருஷ்ணாவின் கோபிகைகளுடன் ஆடிய நடனங்களின் பல்வேறு சித்திரப்பூத் தையலாகக் காட்சி தருகின்றன.
இந்திய எம்பிராய்டரி வகைகள் பற்றிய இந்தக் கட்டுரையில் இமயமலைச் சாரலில் உள்ள மாநிலங்களில் போடப்படும் சித்திரப் பூத் தையல்களைப் பற்றிப் பார்த்தோம். இனி வரும் அடுத்தப் பதிவுகளில் இந்தியாவின் இன்ன பிற மாநிலங்களில் செய்யப்படும் வேலைப்பாடுகளைப் பற்றி அறிவோம்.