Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு களஞ்சியம்

வகைகள் : கதம்பம்

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


கதம்பம்
எதையோ தேடி

கனவெல்லாம் காதற்ற ஊசி

ஒன்றை தேடித்தேடியே

இரவு கழிகிறது...

விழித்த பின்னும்

இனிக்காத கரும்பை

இனிக்கும் என்று நினைத்தே..

சுமந்து திரிந்தே பகலும் கழிகிறது..

எதையோ தேடி எதையோ சுமந்து..

இது என்னமாதிரி வாழ்க்கை?

கதம்பம்
நகைப்புக்குறிய விசயம் எது?..

விக்கிரமாதித்தன் தோளில் கிடந்த வேதாளம்

எள்ளி நகையாடியது...
மதி நுட்பம் நிறைந்த மன்னா! என அழைத்து

ஒரு கதையை கூறி முடித்து..
ஒரு கேள்வி கேட்டது மன்னா!

இந்த உலகத்தில் மிகவும் நகைப்புக்குறிய விசயம் எது?..

இதற்கு சரியான பதில் தெரிந்தும் நீ மௌனம் சாதித்தால்

உன் தலை சுக்கு நூறாக தெறித்து விடும் என்று எச்சரித்தது..

விக்கிரமாதித்தன் பதில்:  இந்த உலகில், வயதானவர், நடுத்தர வாயதுடையோர், இளைஞர், பாலகன், குழந்தை, பிறந்த சிசு என, தினம் தினம் இறப்பதை பார்த்த பின்னரும், தான் மட்டும் இந்த உலகில் காலம், காலமாய் இருக்க போகிறோம் என்பது போல் அகங்காரத்துடன் திரிகிறார்களே, அந்த ஆணவம் தான் மிகப் பெரிய நகைச்சுவை என்கிறான்.

இந்த பதிலை கேட்டதும், மீண்டும் வேதாளம் புளிய மரத்திற்கு தாவியது.

கதம்பம்
பாட்டும் நானே... 'பாவமும்' நானே

பாட்டும் நானே... 'பாவமும்' நானே...!!"

சினிமாப் பாடல் வரிகளை சரியா கவனிக்காம, தப்பு தப்பா புரிஞ்சுக்கிட்டு பாடித்திரிந்த அனுபவம் நம்ம எல்லோருக்குமே இருக்கும். உண்மையான வரியை உணர்ந்த பின்பு, அப்பாடல் மீதான நம் பார்வையே மாறிப்போய்,‌ ஒவ்வொரு முறையும் அப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நம் நினைவலைகள் பின்னோக்கிச் செல்லும் தானே?!

அப்படியொரு சுவையான அனுபவம் எனக்கும் ஏற்பட்டதுண்டு..!

 'ஒரு பாதி கனவு நீயடா... மறு பாதி கனவு நானடா..' என்று ஒரு மொக்க(?!) சாங் வரும். ட்ராவல்ல அந்தப் பாட்டு வர்றப்போலாம் ஸ்கிப் பண்ணிடுவேன்.

ரொம்ப நாளைக்கப்புறம் பஸ்ல போறப்போ அந்தப் பாட்டைப் போட்டான் என் ஆஸ்தான டிரைவன்!

முதல் சீட்லயே உட்கார்ந்திருந்த நானு, 'Fwd' பட்டனை அழுத்தணும்ங்குற முடிவோட, என் செருப்பை மாட்டிக்கிட்டு எந்திரிக்கும் போது... பக்கத்துல(?!) உக்கார்ந்திருந்த சுடிதார், அந்தப் பாட்டை ரசிக்கும் தொணியில் 'ஹம்' பண்ண ஆரம்பிச்சா. நமக்குத்தான் வயசுப்புள்ளைங்களப் பார்த்தாலே இரக்க குணம் பீறிட்டு வந்திடுமே... 

பாட்ட மாத்த எழுந்த நானு... அவ ரசிக்குறதைப் பார்த்ததும், 'வால்யூமை உயர்த்தி'.. "அருமையான பாட்டுப்பா.." ன்னுட்டு  அவ பக்கத்துல இன்னும் ரெண்டு இஞ்ச் நெருக்கமா உட்கார்ந்ததை,‌ கண்ணாடி வழியா கவனிச்சுக் கண்ணடிச்ச டிரைவரின் பின்மண்டையில தட்டி, "மச்சீ... பாட்டைக் கேட்டுக்கிட்டே தூங்கிடாதேடா.., முன்னாடிப் பார்த்து கவனமா ஓட்டு" என ஓவராக்டிங்கை அடக்கிவிட்டு அமர்ந்தேன்.

அப்புறமென்ன..., அவ பாட.. நான் வாயசைக்க... அவ தலையசைக்க நான் பாட.... நல்லபடியா போய்க்கிட்டிருந்த இந்த எடத்துல தான் ஒரு ட்விஸ்ட்டு...

எனக்கும் வரிகள் தெரியும்'னு நம்மாளுக்கு காமிக்க நினைச்சு,  எட்டுக்கட்டையில கஜலைப் புடிச்சு, ஹை பிட்ச்ல குரலை உயர்த்தி, "ஒரு பாதி கனவு நானடா.." ன்னு  பாடினேன்(?!).

உடனே, பட்சி புருவத்தை உயர்த்தி மொறைச்சதும் கப்புனு நிப்பாட்டிட்டு... அடுத்த வரியைக் கேட்டேன்.... அது, "..மறு பாதி 'கதவு' நீயடா..." ன்னுச்சு...

அதுக்கப்புறமும் வாயத் தொறந்திருப்பேன்னு நினைக்குறீங்க..?! ம்ஹூம்...

இப்ப என் டிரைவர் மாப்ள ஸ்டெயரிங்குலேர்ந்து ரெண்டு கையையும் எடுத்து காலரைத் தூக்கிவிட்டுக்கிட்டே.., "ஒரு பாதி கதவு நீயடி.., மறு பாதி கதவு நானடி..." ன்னு சத்தமா பாடினான் பாருங்க...,

எனக்கு ரொம்ப அவமானமாப் போச்சு கொமாரூ.... 

அப்படியே.... எழுந்துப்போயி, கடைசி படிக்கட்டுக்கும் அப்பால இருக்குற ஆறு பேரு சீட்ல குப்புறப் படுத்து குலுங்கி குலுங்கி அழுதேன்...  

இதனால் அறிவிக்கப் படுவது யாதெனில்.., நீங்கள் உச்சரிக்க வேண்டிய சொல் "கனவு" அல்ல... "கதவு!!"

என் ஃபேவரிட் லிஸ்ட்டில் தவறாமல் இடம்பிடிக்கும் அருமையான சிலேடை வரிகளை எனக்கு உணர்த்திய அந்தச் சுடிதாருக்கு ஒரு நன்றி கூடச் சொல்லாத ஏக்கம்  இன்னமுமிருக்கு... 
 

கதம்பம்
அப்பவே எழுத்தாளராக வேண்டியது

9th படிக்கும் போதே ராணி முத்து புத்தகத்தில் கதை எழுதியுள்ளேன்...

அந்த கால கட்டத்தில் ராணிமுத்து நல்ல பேமஸ்.. அதில் கதை போட்டி அறிவித்து 200 ரூபாய் பரிசு என்று இருந்தது.
உடனே நானும் அவனும் (அவனும் நம்ம சொந்தக்காரன்தான்)
களத்தில் குதித்தோம், பரிசு 200 ரூபாயில் ஆளுக்கு நூறு ரூபாய் பங்கு..
ரமணி சித்தியிடம் நிறைய ராணி முத்து புத்தகம் இருந்தது அதில் பழைய புத்தகம் ஒன்றை ஆட்டையை போட்டு வந்து..
ஒரு வரி விடாமல் எழுதினோம், மூன்று நாட்கள் இருவரும் சேர்ந்து எழுதி, A4 பேப்பரில்15 பேப்பர்கள்!!.. ஒரு வழியாக எழுதி ராணிமுத்து பத்திரிகைக்கும் அனுப்பிவிட்டோம்.

பத்து நாட்கள் கழித்து திரும்பி வந்தது..
அதில் ஆசிரியர் பதில்.. "தூ "என்ற ஒரே எழுத்துதான்

அவன் எங்களை அப்படி துப்பியதற்கு முக்கிய காரணம் நாங்கள் இடை, இடையே வரும் விளம்பரங்களையும் விட வில்லை அதையும் எழுதி விட்டோம்..
அதிலதான் அவன் ரொம்ப கடுப்பாகி விட்டான்..
'உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பது லைபாய் மட்டுமே'

'உங்கள் பற்கள் முத்து போல் பிரகாசிக்க கோபால் பல் பொடி'
போன்ற விளம்பரங்கள்..

எப்படியோ எங்கள் கதை எழுதும் ஆர்வத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டான் அந்த படுபாவி.

கதம்பம்
ஸ்வர்ணலதா எனும் புல்லாங்குரலுக்குப் பிறந்தநாள்...

ஸ்வர்ணலதா எனும் புல்லாங்குரலுக்குப் பிறந்தநாள்...

ஒரு பாடலை அடிக்கடி கேட்க நேரிடுகையில், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இசைக்கருவியைப் பின்பற்றி உற்றுநோக்குவது என் வழக்கம். ஆனால், ஸ்வர்ணலதாவின் குரலில் வந்த பாடல்கள் மட்டும் விதிவிலக்கு! எத்தனை முறை கேட்டாலும், என் அத்தனைப் புலன்களும், அவர் குரலை நோக்கி மட்டுமே கடிவாளமிடப்பட்டிருக்கும். அப்பாடலின் வரிகள்.., இசைக்கருவிகள்.., வாயசைத்த நடிகர்.., காட்சியாக்கம் உள்ளிட்ட எதன்மீதும் என் கவனம் செல்வதேயில்லை..

எவ்வளவு மனக்குழப்பத்திலிருந்தாலும், ஸ்வர்ணலதாவின் ஒற்றைக்குரல் போதும், நான் மிதக்க! 

என் அக உணர்வுக்கு நெருக்கமான குரலாக அது எப்படித்தான் மாறிப்போனதோ தெரியவில்லை. இவரின் குரல் கேட்கும்போதெல்லாம்.., என் காதுகளும் கர்வம் கொள்ளும்!

திரையிசையில் எத்தனையோ குரல்கள் நம்மை உருக வைத்திருந்தாலும், அவற்றிலெல்லாம் கிடைக்காத ஏதோவொன்று ஸ்வர்ணலதாவின் குரலில் இழைந்து, செவிவழியே இதயத்துக்கு நேரடியாகப் பரிமாறப்படும்.. அந்த ஏதோவொன்றைத்தான் என்னவென அறியமுடியாமல், இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்...

மோனலிசாவின் மெல்லிய சோகத்தையும் ஒலிவடிவாக்கத் தெரிந்த ஒரே காந்தக்குரலழகியான இவர், என்ன பாடினாலும் அது எனக்கு வார்த்தையாக அல்லாமல், ஹம்மிங்'காக மட்டுமே பதியும். ஆம்..,

SPBயின் குரலில் வரும் முதல் வரியை, "அடி ராக்கம்மா கையத்தட்டு, புது ராகத்தில் மெட்டுக்கட்டு.." என்று மனனம் செய்யும் என் மனம், ஸ்வர்ணலதா குரலில் வரும் அடுத்த வரியை மட்டும், "தன‌ தானன்னா தன்னன்னன்ன., தன தானன்னா தானேனானா..." என்று தான் என்னுள் பதிய வைக்கும்!

ம்ம்ம்...... என்றோ.., அஅஹஹஆ..... என்றோ.., நீளும் ஆலாபனையின் ஏதோவொரு கணுவில் அந்தக் குரல் உடைந்துவிடாதாயெனும் ஏக்கத்துடன், அவரின் குரலை மட்டும் முருக்குக்கயிறாய்த் தழுவிக்கொண்டே பின்தொடரும் என் மனம்...

"மாலையில் யாரோ மனதோடு பேச.." பாடலை மட்டும், இதுவரை பல்லாயிரம் தடவைகள் கேட்டிருப்பேன்! கேசட்டுகள் தேய்ந்து.., பாட்டுப்புத்தகங்கள் கிழிந்து.., சி.டி.கள் உடைந்து.., பல ஜி.பி.கள் தீர்ந்தபோதிலும்,  ஸ்வர்ணலதாவின் குரலினிமையைத் தாண்டி, பாடல் வரிகளுக்குள் என் கவனம் சென்றதேயில்லை. ஏனெனில், இவருடைய பாடலெனக்கு, கேட்டு உருக மட்டுமே; வரிகளை மனனம் செய்ய அல்ல!!

நிச்சயம் அப்பாடலை, இன்னும் பல ஆயிரம் முறை கேட்கத்தான் போகிறேன்.., ஆனாலும் அவரின் குரலைத் தாண்டி, எந்த வரியும் மனப்பாடமாகப்போவதில்லையென்பது திண்ணம்!

ஒருவேளை,  எப்போதாவது அந்தப் பாடல் வரிகள் மனப்பாடமாகிவிட்டால்.., அப்போது, ஸ்வர்ணலதா குரல் மீதான என் ஈர்ப்பு குறைந்திருக்கலாம்.. அல்லது, அவர் இறந்துவிட்டார் என்பதை நான் நம்பிவிட்டிருக்கலாம்...

- ப்ரியா வெங்கடேசன் @ 8056584237.

கதம்பம்
கார்த்திகை தீபம்

கார்த்திகை_தீபம்

சிறுவர்களின் கொண்டாட்டங்கள் அனைத்தும் பெரியவர்களைச் சார்ந்தே இயங்கிக் கொண்டிருக்கையில் முழுக்க முழுக்க சிறுவர்களுக்காக, சிறுவர்களால் கொண்டாடப்படும் ஒரு விசித்திரப் பெருவிழா இது!

இந்தத் திருநாள் தான் எங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தின் மீப்பெரு விழா!

கோவில் சம்பிரதாயங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், எங்கள் ஊர்களில் இது மூன்று நாள் கொண்டாட்டம். முதல்நாள் சைவம், அடுத்த இரண்டு நாட்களும் அசைவம் எனச் சிறப்பான விருந்து கிடைத்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மாவலி சுற்றுதலை நோக்கியே எங்களின் கவனமெல்லாம் குவிக்கப்பட்டிருக்கும்...

எங்கள் சிறுவயதுகளில் இந்த மாவலி தயாரித்தல் என்பது ஒருமாத ப்ராஜெக்ட்!
(தேவைப்படும் பிரதானப் பொருட்கள்: அடுப்புக்கரி, பனையின் காய்ந்த பூ மற்றும்  பச்சை மட்டை)

தீபாவளியிலிருந்தே வண்ணாம்பூ (பனை பூ) சேகரிக்கும் பணி தொடங்கிவிடும். இடையிடையே அடுப்புக்கரியை வேறு சேகரிக்க வேண்டும்.

மழை-வெயில்-பனி எனக் கதம்பமாய்ச் சுழன்றடிக்கும் இந்த நாட்களில், சேகரித்த வண்ணாம்பூக்களையும் கரியையும் காயவைப்பது பெரும் பணி. நல்ல வெயில் நேரத்தில் கூட, நொடியில் மழை கொட்டி எல்லாவற்றையும் நனைத்துவிடும். மாதம் முழுக்க எத்தனை பாதுகாப்பாகக் காயவைத்திருந்தாலும் இறுதியில் நமுத்துப்போய் தான் கிடக்கும்.

காய்ந்த வண்ணாம்பூக்களைப் பக்குவமாக எரித்துக் கரியாக்குவது தனி ப்ராஸஸ்!

சுமார் ஒன்னரை அடி அகல-ஆழத்துக்குப் பள்ளம் தோண்டி அதில் அரை அடி அளவில் நெருப்பு மூட்டி.., நன்றாக எரிந்த பிறகு அதன் மேல் காய்ந்த வண்ணாம்பூக்களைப் போட்டு, அதன்மீது பூசணி இலைகளை வைத்து, மண்ணைப் போட்டு மூடி நன்றாகக் குமைய விட வேண்டும். 

கார்த்திகை மாதம் முடிந்த பிறகு தான் பூசணி சீசன் தொடங்குமென்பதால், இந்த நாட்களில் பூசணிக் கொடியைப் பார்ப்பதே அரிது. அதைத் தேடிக் கண்டுபிடித்துப் பறிக்கச் சென்றால்.., அதை நட்டு வைத்த பாட்டி குத்தவைத்து உட்கார்ந்து, பகல் முழுக்கக் காவல் காத்துக்கொண்டிருக்கும்.. அதன் கண்ணில் படாமல் பூசணி இலையைத் திருடிக் கொண்டு வரவே தனிப்படை அமைப்போம். அதிலும், 'கல்யாண பூசணி திருடினால் கை வெளங்காமல் போயிடும்' என்பதை நம்பாதவர்களாகப் பார்த்து அனுப்ப வேண்டும்.

அடுத்து, கரி அரைக்கும் பணி!

இதற்கெனத் தனியாக அம்மியும் குழவிக்கல்லும் சில வீடுகளில் இருக்கும். இங்கு கரி அரைக்கச் வருபவர்களிடம், "கொஞ்சூண்டு கரி குடேன்.., ஒரேயொரு மட்டை குடேன்.." என ஓசியிலேயே தனக்கான மாவலியைத் தேற்றி விடுபவர்களுமுண்டு. இதற்கு பயந்தே சிலர், கரியைத் தரையில் வைத்து குண்டுக்கல்லால் அரைத்துக்கொள்வார்கள். சில சாமர்த்தியசாலிகள், அம்மிக்கல் அம்மாவிடம் நைஸாக பேச்சுக்கொடுத்து, அவர்களின் பிள்ளைகளுக்கான மாவலியைத் தயார் செய்து விட்டதை உறுதிபடுத்திக்கொண்ட பின்பே கரி அரைக்கச் செல்வார்கள்.

இவர்கள் தவிர்த்து, சிமெண்ட் தரை வாய்க்கப் பெறாதவர்கள், பொதுக் கிணற்றங்கரையிலும் கருங்கல் படிகளிலும் கூட்டம் கூட்டமாக அரைத்துக்கொண்டிருப்பர்.

வண்ணாம்பூவையும் கரியையும் ஒன்றாகப் போட்டு அரைத்தால் சரிவராது. இரண்டையும் தனித்தனியே அரைத்து, சரியான விகிதத்தில் சேர்த்து மாவலி கட்ட வேண்டும். இல்லையெனில், சரியாக அரைபடாத கரித்தூள் நெருப்பு, மாவலி சுற்றும்போது மேலே விழுந்து சுட்டுவிடும்.

அரைத்த கரித்தூளை,  முக்காலடி அகலம், ஒரு முழ நீளம் கொண்ட காட்டன் துணியில் பரப்பி, முனைகளை மடித்துச் சுற்றி உருளையாக்கிய பின், அதனை இறுக்கமாகவுமின்றி, தளர்வாகவுமின்றி மிதமான அளவில் இரண்டு அல்லது மூன்று கட்டு போட வேண்டும். 

அதன் பிறகு, பச்சை மட்டையை எடுத்துக்கொண்டு அதன் அடிப்பகுதியை நெடுக்கு வாக்கில் மூன்று அல்லது நான்கு பகுதிகளாக சுமார் முக்கால் அடி நீளத்துக்குப் பிளந்து, அதன் நடுவில் மாவலி உருளையை வைத்துக் கட்ட வேண்டும்.

பின்னர், மாவலி சுற்ற வசதியான நீளத்தில் கயிறை எடுத்து, மட்டையின் மேற்புறத்தில் முடிச்சிட்டுக் கொண்டால்... மாவலி தயார்! 

இருள் சூழ்ந்தவுடன், மாவலி உருளையின் மேற்புறத்தில் நெருப்புக்கட்டியை வைத்து, அதனை நன்றாகக் கனைய வைத்த பின் சுற்றிக்கொண்டேயிருக்கலாம்...

அன்றைய தினம், பெரும்பாலும் பகலில் செய்த உணவையே இரவுக்கும் பயன்படுத்திக்கொள்வதால், யாரும் மாலையில் அடுப்பு பற்ற வைக்க மாட்டார்கள். மாவலியைக் கனைக்க வைக்க நெருப்புக்கட்டியைத் தேடி, திறந்திருக்கும் தேநீர் கடைகளுக்குப் படையெடுப்போம்.

எங்கள் ஊரிலுள்ள சிறுவர்கள் முதல், விடலைகள் வரை அனைவரும் மாவலி சுற்றியபடியே மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பர். ஏரிக்கரை மீதேறி நின்று, திருவண்ணாமலையின் ஜோதி பார்த்து 'ஹாய்' சொல்லிவிட்டு, எங்கள் மாவலியை முழு வேகத்தில் சுற்றி, அந்த அண்ணாமலை ஜோதியே சிறுத்துப்போகும்படி நெருப்புச் சிதறல்களைத் தெறிக்க விடுவோம்...

ஏரிக்கரையில் சிதறிக்கொண்டிருக்கும் இந்த மாவலிப்பொறியின் ஒளியில் பல விடலைகளின் காதல் சந்திப்புகளும் 'வெளிச்சத்துக்கு' வந்துவிடுவது தனிக்கதை!

ஆடைகளைத் தாண்டி உடலிலும் நெருப்புத்தூள் துளைத்ததறியாமல், குதூகலத்துடன் காலி மட்டையைக் கையிலேந்தியபடி பல கதைகள் பேசி, வீடு வந்து சேர்ந்தால், தீபாவளியன்று காணாமல் போயிருந்த கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், பூந்தொட்டிகளெல்லாம் அப்போதுதான் வீட்டுப் பரணிலிருந்து வெளியில் வரும்!

அவற்றையும் ஒரு ரவுண்டு சுழற்றிவிட்டுப் படுக்கைக்குச்சென்றால்.., அடுத்தநாள் கறிக்குழம்பின் வாசம் தான் எழுப்பி விடும்! நன்றாகத் தின்று முடித்தவுடன் மறுபடியும் அன்றைய மாலைக்கான  மாவலியை அலங்கரிக்கத் தொடங்கிவிடுவோம்...

மூன்றாவது நாளில், சுற்றி முடித்த மாவலி மட்டையை, சாணியில் அடித்துத் துவைத்து, முருங்கை மரத்தில் கட்டுவது வழக்கம்.

மூன்று தினங்களாக, பகல் முழுக்கக் கரித்துகளுடனும், இரவில் நெருப்புப் பொறிகளுடனும் கழிக்கப்படும் கார்த்திகை தீபத்துக்கு எடுத்த புதுச்சட்டை, ஒருபோதும் புதுச்சட்டையாகத் தொடர்ந்ததில்லை. நான்காம் நாளே கரித்துணியாகவோ அல்லது கந்தல்துணியாகவோ கிடக்கும். ஆனால்.., இன்றைய தீபத்திருநாளுக்கு எடுத்த துணி, புத்தம் புதிதாக அப்படியே இருக்கிறது; அந்தக் குதூகலமும் கொண்டாட்டமும் தான் பழசாகிக் கிடக்கின்றன எங்களின் நினைவடுக்குகளில்..!!

ஊரே கூடி நின்று மாவலி சுற்றிய தெருவில், இன்று என் மகன் மட்டும் கை வலிக்கச் சுற்றிச் சலித்து என்னிடம் தருகிறான்... 

மா வலி!

- ப்ரியா வெங்கடேசன் @ 8056584237.

WhatsApp

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!